என்னுயிர் கருவாச்சி-10

 


அத்தியாயம்-10

கோடைத் திருவிழாவால் காமாட்சிப்பட்டியே களை கட்டியிருந்தது.  

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சித்திரை மாதத்தில் அந்த ஊர் மாரியம்மனுக்கு கொண்டாடப்படும் சித்திரை திருவிழா அது.

திடுவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே காப்பு கட்டி கம்பம் நட்டு விடுவார்கள். அன்றிலிருந்து தினமும் காலையில் ஐந்தரை மணிக்கே ரேடியோ செட் பாட ஆரம்பித்துவிடும்.

தாயே கருமாறி பாடலில் ஆரம்பித்து

செல்லாத்தா செல்ல மாரியாத்தா என உருகி பாடி அனைவரையும் தூக்கத்தில் இருந்து ட்ஹட்டி எழுப்பி சுறுசுறுப்பாக்கி விடும்.

கன்னிப்பெண்கள், திருமாணபெண்கள் என எலலரும் காலையிலய் தலைக்கு க்உளித்து குடத்தில் நீரை எடுத்து அதில் வேப்பிலையை போட்டு கோவிலுக்கு தூக்கி ச்என்று கம்பத்துக்கு ஊற்றிவிட்டு அந்த அம்மனை வணங்கி வருவார்கள்.

அந்த குளிரில் பச்சதண்ணியில் குளிப்பது கடுப்பாக இருந்தாலும் மற்றவர்களுடன் ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டே செல்ல்வது அவ்வளவு பிடிக்கும் எல்லாருக்கும்.

அதோடு பக்தி பாடல்கள் முடிந்ததும் 80ஸ் மற்றும் 90ஸ் ல் பிரபலமான திரைப்பட பாடல்கள் காலை, மாலை என இரு வேளையும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

திருவிழா  என்றாலே   தேர்க்கடைகளும் வந்து குவிந்து இருக்கும்...

ஆங்காங்கே விற்கும் விதவிதமான பலூன்களும், சீட்டிகளும் , விதவிதமான கார் பொம்மைகள், கிரிக்கெட் பேட்,  கண்னை பறித்து,  கட்டி இழுக்கும் கலர்புல்லான பஞ்சுமிட்டாய் என சிறுவர்களை அந்த பக்க கடைகளையே சுற்றி சுற்றி வருவார்கள்.

யாராவது தேர்க்காசு கொடுக்க மாட்டார்களா என்று வீட்டுற்கு வரும் சொந்தக்காரர்களை எல்லாம் ஆவலுடன் பார்த்து வைப்பார்கள்.

பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்...

அந்த கிராமத்தின் எல்லையை  விட்டு தாண்டியிராதவர்களுக்கு இந்த திருவிழாதான் வரப்பிரசாதம்.

தங்களுக்கு தேவையான மேக்கப் ஐட்டங்கள், ஸ்டிக்கர்  பொட்டு, பான்ட்ஸ் பவுடர்,  ஜடைக்கு வைக்கும் குஞ்சம், கிளிப்புகள், ரிப்பன், கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் இந்த திருவிழா கடைகளில் வாங்கிக் கொள்வார்கள்.

அதோடு அதை அடுத்த வருடம் திருவிழா வரும் வரைக்கும் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் எல்லா சொந்தக்காரர்களும். அங்காளி, பங்காளி , தெரிந்தவர், தெரியாதவர்கள் என எல்லாரும்  ஒன்றாக  சந்தித்துக் கொள்வது இந்த திருவிழா அன்று தான்.

*****

பூங்கொடிக்கு இந்த திருவிழா என்றால் ரொம்ப இஷ்டம்..!

அதுவும் இந்த வருடம் ஸ்பெஷலாக அவளின் அக்கா மகன் ஆதவனின் வருகை அவளுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது.

ஒரு வயது முடிந்து இருந்தது. இப்பொழுது தத்தி தத்தி நடை பயில்வதும், கொஞ்சம் கொஞ்சமாக பேசவும்  ஆரம்பித்து இருந்தான் ஆதவன்.  

“சி....சி..... சிதி.... “ என்று மழலையில் அழைக்கும் பொழுது அவள் உள்ளே சில்லிட்டுப் போகும்

திருவிழாவுக்கு என்று ஒருநாள் முன்னதாகவே வந்து விட்டாள் பொற்கொடி.

அவள் வந்ததுமே பூங்கொடியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் ஆதவன்.

பூங்கொடியும்  அவனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று தன் அக்கா மகனை காட்டி, அவனின் சாகஸங்களை எல்லாம் வாய் நிறைய சொல்லி சிலாகித்து கதை பேசி கொண்டு வந்தாள்.

அந்த குட்டி ராஜாவின் மழலை கேட்க, ரொம்பவும் ஆனந்தமாக இருந்தது பூங்கொடிக்கு. அவள் மட்டும் அல்லாமல், மலர்க்கொடியும் அவ்வப்பொழுது தூக்கிக் கொண்டாள்.

அன்பரசனுக்கு சொல்லவே வேண்டாம். அந்த சிறு வயதிலயே தாய்மாமன் ஆகிவிட்ட பெருமை அவனுக்கு.

அந்த குட்டி பையனை இவனை பார்த்து மாமா என்று சொல்லச்சொல்லி பூங்கொடி சொல்லி கொடுக்க, அதைக்கேட்டு பெருமையாக இருந்தது அன்பரசனுக்கு.

அவனுமே அடிக்கடி அவனை தூக்கி கொண்டு டேய் மாமா சொல்லு... என்று கொஞ்சினான்.  

*****

பூங்கொடி வீட்டினர்க்கு மட்டுமல்லாது, அந்த ஊர் இளைஞர்களுக்கும் இந்த திருவிழா என்றால்   கொண்டாட்டம் தான்.

தினமும் ஏதாவது ஒரு பழைய பாவாடையும் சாயம் போன, ஆங்காங்கே கிழிந்திருந்தாலும் அதை ஒட்டுபோட்டு தைத்து உடுத்திக்கொண்டு, தலையைக்கூட சரியாக வாராமல், அள்ளி முடிஞ்சி கொண்டையை போட்டுக்கொண்டு  சுற்றி வரும் கன்னிப் பெண்களை பார்த்து பார்த்து  காய்ந்து போயிருந்த அந்த ஊர் காளையர்களுக்கு இந்த திருவிழா நடைபெறும் இரண்டு நாட்கள்தான் வரப் பிரசாதம்.

அதுவரை பெட்டியில் மடித்து பூட்டி வைத்திருந்த பட்டு பாவாடை சட்டையும், தாவணி பாவாடை, கொலுசு, டாலர் செயின் என எல்லாமும் இப்பொழுது தான் வெளியில் வரும்.

வண்ண வண்ண பாவாடை தாவணியில்,  கும்பல்  கும்பலாக பருவப் பெண்கள் அந்த கிராமத்தில் வலம் வருவார்கள். அவர்களின் பேச்சும் கலகலவென்ற சிரிப்பும் அந்த கிராமம் முழுவதுமே ஒலிக்கும்.

அவர்களை சைட் அடிக்க  என்றே  இளைஞர் பட்டாளம் அந்த தெருவில் ஆங்காங்கே சுற்றி கொண்டிருக்கும்.

இல்லையென்றால் ஏதாவது ஒரு குட்டி சுவரில் ஏறி அமர்ந்து கொண்டு, தெருவில் வரும் எல்லா பெண்களையும் கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்த கன்னிப்பெண்களும் தோழிகளுடன் பேசிக்கொண்டே சென்றாலும் ஓரக்கண்ணால் இந்த காளையர்களை பார்த்து மந்தகாச புன்னகையை செலுத்தி விட்டு செல்ல, இவர்களுக்கோ தலை சுற்றி போய்விடும்.

தேன் குடித்த நரியைப்போல அந்த பெண்கள் பின்னாலயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

அந்த ஊர் மட்டும் அல்லாது இதுதான் சமயம் என்று பக்கத்து ஊரிலிருந்தும் இந்த ஊர் பெண்களை சைட் அடிக்க என்று வருத்தப்படாத வாலிபர் கேங் வந்து நிக்கும்.

இந்த திருவிழா நாட்களில் நிறைய பேர் அந்த ஊரில் நடமாடுவதால் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியாது. அசலூர்க்காரர்களை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.

மற்ற நாட்களாக இருந்தால் அந்த ஊருக்கு புதிதாக வரும் யாரையும் நிக்க வைத்து நீ யார்? உன் ஊர் எது?  உன் அப்பா அம்மா பெயர் என்ன? இங்க யாரை பார்த்த வந்திருக்க?  என்று புதியவனிடம் பல கேள்விகளை கேட்டு அவர்களின் முழு ஜாதகத்தையும் தெரிந்து கொண்ட பிறகுதான் விடுவார்கள்.

அப்பாடா...இதோடு முடிந்தது இந்த ஊர்க்காரரின் குறுக்கு விசாரணை என்று நிம்மதி மூச்சு விட்டு நகர்ந்தால், அடுத்த தெருவில் இன்னொரு பெருசு நின்றிருக்கும்.

முதலாம் நபர் கேட்டிருந்த அதே கேள்விகளை இந்த பெருசும் கேட்டு வைக்க, முதலில் சொன்ன அதே பதிலை மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு நகர்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.

இதற்கு பிறகு இந்த ஊர் புள்ளையை சைட் அடிக்கும் ஆசையே போய்விடும்.

விடுங்கடா சாமி என்று பைக்கை திருப்பிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையாகிப் போகும்.

ஆனால் இப்பொழுது அப்படியில்லை. யாரும் நிக்க வச்சு கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டாலும் நாலாவது தெரு முனுசாமி வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று உளறி வைப்பார்கள்.

அப்படி ஒரு முனுசாமி இருக்கிறானா என்று கூட தெரியாது. ஆனாலும் கண்டிப்பா ஊருக்கு ஒரு முனுசாமி, கோவிந்தசாமி, ஆறுமுகம் இருப்பானுங்க என்று தெரிந்ததால், வாய்க்கு வந்த பெயரை சொல்லிவிட்டு எஸ் ஆகிவிடுவார்கள்.

*****

திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தேரை ஜோடித்து,  அம்மனை அலங்கரித்து  வைப்பர். இரவு கரகம் பாலித்து பூஜை செய்து திருவிழாவை ஆரம்பித்து வைப்பர்.  

இரவு மேல தாளத்துடன் ஆற்றிற்கு சென்று கரகம் பாலித்து, அதை பூசாரியின் தலையில் வைத்து கோவிலுக்கு எடுத்து வருவார்கள்.

பறையை அடிக்கிற அடியில்,  ஆடத்தெரியாதவர்கள் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

அதோடு கேட்கும் உடுக்கை மட்டும் உறுமி சத்தத்தில் பெண்களுக்கு சாமி வந்து ஆட, அதை சமாளிக்க கூடவே வந்திருக்கும் சொந்தக்காரர்கள்...

கரகத்தின் முன்னால் குத்து டான்ஸ் ஆடிக்கோண்டே செல்லும் இளைஞர்களும், நண்டு சிண்டுகள் என அந்த ஊரே அங்கு திரண்டிருக்க, அமர்க்களத்துடன் ஆரம்பிக்கும் திருவிழா.

அடுத்த  நாள் தேர் இழுத்தல்..!  

முதல் நாளே ஜோடித்து வைத்திருக்கும் தேரை  அந்த ஊரின் முக்கிய தெருவுக்கு   இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். சில ஊர்களில் தேரை தூக்கி தோளில் வைத்துகொண்டு செல்வார்கள்.

இங்கு இழுக்கும் தேர் என்பதால், இரண்டு பக்கமும் இரண்டு பெரிய வடம் தேரில் மாட்டி இருக்கும்.  அதை பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும். பொதுவாக ஆண்கள்தான் இழுத்துச் செல்வது வழக்கம்.

அந்த ஊர் மட்டும் அல்லாது  திருவிழாவிற்கு என்று வந்திருக்கும் அங்காளி பங்காளி என எல்லோருமே அந்த தேரை இழுப்பதில் கலந்து  கொள்வார்கள்.

அதே போல பக்கத்து ஊரில் திருவிழா என்றால் இந்த ஊரில் இருந்து சென்று உதவுவார்கள்.  

*****

ன்றும் அப்படித்தான்...!  

முதல் நாள் கரகம் பாலித்து திருவிழா ஆரம்பித்து இருக்க, அடுத்த நாள் தேர் இழுக்கும் நாள்.

ஒவ்வொரு தெருவாக தேரை இழுத்துக்கொண்டு வந்து வீட்டின் முன்னர்  நிற்க வைத்து தேருக்கு பூஜை செய்வார்கள்.

அதிகாலையிலயே எழுந்து, வந்திருக்கும் சொந்தக்கார்களுக்கு காபியை போட்டு கொடுத்துவிட்டு, அவசரமாக காலை டிபனையும் தயார் செய்துவிட்டு தேரை பார்க்க என்று கிளம்புவார்கள் பெண்கள்.

பூங்கொடியும் அன்று அதிகாலையிலயே எழுந்து, தன் அன்னைக்கு உதவி செய்துவிட்டு, தலைக்கு குளித்து. ஈர மான நீண்ட கூந்தலை   அப்படியே லூசாக விரித்து விட்டு உலர்த்தியவாறு தயாராகி கொண்டு இருந்தாள்.

பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஆங்காங்கே பூப்போட்ட, தங்க சரிகை பார்டர் வைத்த பட்டுப் பாவாடையும்,  அதற்கு பொருத்தமாக, அதே பாவாடை துணியில் வெட்டித் தைத்த , கையில் தங்கநிற பார்டர்  வைத்த ரவிக்கையும் அணிந்து , முன்னழகை மறைக்க, மயில் கழுத்து கலரில்  தாவணியும் அணிந்திருந்தாள்.

காதில் ஜிமிக்கி... கழுத்தில் டாலர் வைத்த தங்கச்சங்கிலி... கைகளில் அதே பஞ்சுமிட்டாய் கலரில் கண்ணாடி வளையல்கள்.  அவள் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வைத்திருந்த கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டையும்  வைத்துக் கொண்டாள்.  

அதற்குள் கொஞ்சமாக உலர்ந்திருந்த தன் நீண்ட கூந்தலை தளர பின்னி, நேற்று இரவே அவளின் தோட்டத்தில்,  மலரும் முன்னே பறித்து நெருக்கமாக கட்டி வைத்திருந்த மல்லிகை மொட்டுக்களின் சரத்தை தோள் வழியாக  சரிந்து முன்னால் வந்து அவள் முகத்தை ஆவலுடன் எட்டி பார்க்கும் விதமாய் தொங்க விட்டிருந்தாள்.

அவள் தங்கை மலர்க்கொடியும்  பட்டுப்பாவாடை, சட்டை  அணிந்திருக்க, அவள்  தம்பி அன்பரசனும் புதிதாக வாங்கிக் கொடுத்த ட்ராயரில் மிளிர்ந்தான்.  

தன் அக்கா மகன் ஆதவனையும் கிளப்பி தயார் படுத்தியவள், அவனையும் தூக்கிக்கொண்டு வந்து வீட்டு வாசலில் தேருக்காக நின்றிருந்தாள்.

கூடவே திருவிழாவுக்காக  வந்திருந்த இன்னும் சில உறவினர்களின் நண்டு சிண்டுகளையும் பிடித்து வைத்துக்கொண்டு தேர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி...!  



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!