என்னுயிர் கருவாச்சி-11
அத்தியாயம்-11
அதே நேரம் அந்த வழியாக கடந்து சென்ற விடலை பசங்க எல்லாம் நின்று ஒரு கணம் அவளை ரசித்து பார்த்துவிட்டு சென்றனர்.
அப்படிப்பட்டவள், இன்று அலங்கரித்துக்கொண்டு நிக்க, அழகு பதுமையாய், வனப்புடன் மிளிரும் தேவதையாய் நின்றிருந்தவளை கண்ட அவளின் முறைப்பையன்கள் கும்பல் ஒன்று ஒரு கணம் நின்று அவளை பார்த்து ரசித்தவர்கள், பின் சற்று தள்ளி நின்று கொண்டு அவளிடம் வம்பு இழுக்க ஆரம்பித்தார்கள்.
“என்ன பூவு...இன்னைக்கு செமயா இருக்க… தேர பாக்கவா நிக்கிற? “ என்று ஒருத்தன் அசடு வழிய
“இல்ல...கபடி மேட்ச் பாக்க நின்னுகிட்டிருக்கிறேன்...” என்று நக்கலாக மொழிந்து அவனை முறைத்தாள் பூங்கொடி
“அடடா... இன்னைக்கு நம்ம ஊர்ல கபடி மேட்ச் இல்லையே மா...” என்று சோகமாக அவளை பார்க்க
“தெரியுது இல்ல. அப்புறம் தேர் பாக்கவா நிக்கிற னு கேள்வி எதுக்கு? மூடிகிட்டு போங்கடா...” என்று முறைக்க,
“ஆஹான்...பூவு ரொம்ப சூடா இருக்கே... ஆனாலும் சும்மா சொல்லகூடாது பூவு... இந்த ட்ரெஸ் ல சும்மா நச்சுனு இருக்க. அப்படியே அசஞ்சு ஆடி வரும் நம்ம ஊர் தேர் போல
இல்ல இல்ல.. தேர் கூட இந்த அளவுக்கு அழகில்லடா....
பேசாம உனக்கு பூங்கொடி னு பெயர் வச்சதுக்கு பதிலா தேர்க்கொடினு வச்சிருக்கலாம்...” என்று ஒருவன் கலாய்க்க, மற்றொருவனோ
“கரெக்ட்டா சொன்னடா மச்சான்... ஒரு தேரே இன்னொரு தேரை பாக்க நிக்குது...ஆச்சர்யக்குறி....! எப்பூடி ? “ என்று தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு அவளை கலாய்த்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தாள் பூங்கொடி.
அவள் வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது தேருக்கு உடைக்க என்று வைத்திருந்த தேங்காயை எடுத்து சரியாக குறிபார்த்து எறிய, அதுவும் தவறாமல் அங்கிருந்த ஒருவன் தலையில் பட்டு சுக்கு நூறாக உடைந்து தெறித்தது.
அதைக்கண்டு மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பூங்கொடியை பார்க்க, அவளோ
“ஹா ஹா ஹா என்ன மாமோய்....இதுக்கே இப்படி பயந்துபுட்டீக...இது வெறும் சேம்பில் தான்...இனிமேல் என்னை எவனாச்சும் கலாய்ச்சிங்க, கம்பெனி பொறுப்பாகாது. சேதாரம் உங்களுக்குத்தான்.. சொல்லிபுட்டேன்...” என்று சிரித்தபடி விரல் நீட்டி எச்சரிக்க, அடுத்த நொடி அந்த இடமே வெறிச்சோடி போயிருந்தது.
நின்றிருந்த காளையர்கள் எல்லாம் துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று சற்றுமுன் அவர்கள் நின்று கொண்டிருந்தே சுவடே தெரியாமல் பறந்திருந்தார்கள்.
“சூப்பர்க்கா... நல்லா செமயா திருப்பி கொடுத்த... “ என்று அவளை சுற்றி இருந்த வாண்டுகள் எல்லாம் அவளுக்கு ஹை-பை கொடுக்க, பூங்கொடியும் ஹை-பை கொடுத்து வெற்றிப் புன்னகை, வீரப்புன்னகை புரிந்தாள்.
அப்பொழுது திடீரென்று அவள் முதுகில் யாரோ ஓங்கி அடிக்க,
“எவ அவ... “ என்று திடுக்கிட்டு முறைத்தபடி திரும்பிப் பார்க்க, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி அங்கே நின்றிருந்தாள் அவளின் தோழி கோமதி.
“ஏன்டி? கோதி எரும? எதுக்கு இப்படி அடிக்கிறவ? “ என்று முறைத்தாள் பூங்கொடி
“இதோடா...ஒரு காளையர் கூட்டத்தையே ஒத்த தேங்காய வச்சு துரத்தி அடிச்சவ... நான் தொட்டு கொடுத்த இந்த அடிதான் உனக்கு வலிச்சதாக்கும்... இதெல்லாம் ஒரு ஆடியா? இதைக்கூட உன்னால தாங்க முடியலையா டி? “ என்று சிரித்தாள் கோமதி.
“ஹீ ஹீ ஹீ.. நீயும் பாத்திட்டியா? அவனுங்க ஒன்னும் காளையர் கூட்டம் இல்ல. பன்னிக்கூட்டம்...” என்று திருத்தியவள்,
“பின்ன என்னடி? திருவிழா பார்க்க வந்தமா? நாலு புள்ளைய சைட் அடிச்சமா? பேசாம தெருவோட போனமானு இல்லாம, இங்கன கும்பலா நின்னுகிட்டு எங்கப்பா ஆசையா வச்ச பெயரை கிண்டல் அடிச்சுக் கிட்டிருக்கானுங்க...வெட்டிபயலுக...
இனிமேல் என் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டானுக பாரேன்...” என்று கிளுக்கி சிரித்தாள் பூங்கொடி.
“ஹ்ம்ம்ம் கரெக்ட் டி... புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத்தமிழச்சி மாதிரி, இந்த காலிபயலுக கூட்டத்தை ஒத்த தேங்காயாலயே விரட்டிட்டியே...
நீதான் அடுத்த வீரத்தமிழச்சி டி....பன்னிக்கூட்டத்தை தேங்காயால் விரட்டிய வீரத்தமிழச்சி னு உன்னை வரலாறு போற்றப்போகுது பார்... “ என்று கோமதி சிரிக்க,
“அடியே... நீ கொடுக்கற பில்டப்பை பார்த்தா, நீ என்னை பாராட்டற மாதிரி தெரியலயே. என்னை கலாய்க்கிற மாதிரியல்லவா தெரியுது...” என்று முறைத்தாள் பூங்கொடி.
“ஹீ ஹீ ஹீ இல்ல செல்லம்.. மெய்யாலுமே உன்னை பாராட்டினேன்... உன்னை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்குடி... எனக்கெல்லாம் இந்த தைர்யம் வருமா?
எவனாச்சும் என்னை கிண்டல் அடிச்சா, கண்ணை கசக்கிகிட்டு ஊ ஊனு அழுதுகிட்டுத்தான் வந்திருப்பேன். ஆனால் நீ கொடுத்த அடிதான் சரியான அடி... “ என்று தன் தோழியை சிலாகித்தாள் கோமதி.
பூங்கொடியும் தன் இல்லாத காலரை பெருமையாக தூக்கி விட்டுக் கொண்டவள், அப்பொழுதுதான் நினைவு வந்தவளாய், கோமதியை பார்த்து,
“அது சரிடி... உன் வீட்டுக்கு தேர் வந்துடுச்சா? பூஜை முடிஞ்சிடுச்சா? “ என்றாள் விசாரிக்க.
“ஹ்ம்ம் இப்பத்தான் எங்க தெருவுக்கு வந்தது... பூஜை முடிச்சிட்டு இப்ப உங்க தெருவுக்குத்தான் வந்துகிட்டிருக்கு... அதுதான் உனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு ஓடிவந்தேன்...” என்று புன்னகைத்தாள் கோமதி.
பூங்கொடியிடம் பேசிக் கொண்டே இருந்தாலும், கோமதியின் பார்வை என்னவோ அந்த தேர் வரும் வழியை எதிர்பார்த்து ஆவலுடன் சென்றது
“என்னாது? நீ எனக்கு ஒத்தாசை செய்யறியா? ஏன் டி..! நல்ல நாள்ல நீ இப்படி கிடக்கிற துரும்பை கூட அப்படி எடுத்து போட மாட்ட... நீ இன்னைக்கு எனக்கு ஒத்தாசை செய்யறேனு வந்திருக்கியே ?
என்னடி அதிசயமா இருக்கு?” என்று தாடையில் கை வைத்து அதிசயமாக கோமதியை பார்த்தாள் பூங்கொடி.
“அதிசயமும் இல்ல...அதிரசமும் இல்ல. சும்மா உதவ வந்தா பெருசா ஆராய்ச்சி பண்றியே..! போடி..” பொய்யாக கோபித்துக் கொண்டாள் கோமதி.
“ஹ்ம்ம்ம் சோலியன் குடுமி சும்மா ஆடாதே டி.. எங்கயோ இடிக்குதே..” என்று யோசனையுடன் மீண்டும் தன் தாடையை தடவ,
“இடிக்கவும் இல்ல... புடைக்கவும் இல்ல. சரி சரி பூஜைக்கான சாமான் எல்லா எடுத்து வச்சிட்டியா? “ என்றவள் பூஜைக்காக வைத்திருந்த தாம்பாளத்தை சரி பார்ப்பதை போல பார்த்து டாபிக்கை மாற்றினாள் கோமதி.
அதில் வாழைப்பழ சீப்பு, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி என பூஜைக்கான எல்லா சாமான்களும் இருக்க, தேங்காய் மட்டும் இல்லாமல் இருந்தது.
“என்னடி? தேங்காய காணோம்? “ என்றாள் கோமதி பதற்றத்துடன்.
அப்பொழுதுதான் அந்த தேங்காயை எடுத்து அந்த வெட்டிப்பயலுகளிடம் விட்டெறிந்தது பூங்கொடிக்கு நினைவு வர, உடனே கலவரமானாள் பூங்கொடி.
“ஹே கோதி...வீட்டுக்கு உள்ள போய் என் அம்மாவுக்கு தெரியாமல் இன்னொரு தேங்காயை எடுத்துகிட்டு வர்ரியா? நான் போய் எடுத்தால் அந்த சிலம்பா கண்டுகிட்டு இந்த தேங்கா எதுக்கு? முன்ன கொண்டு போனது என்னாச்சுனு கேட்டு குறுக்கு விசாரணை செய்யும்...” என்று தன் தோழியிடம் கெஞ்சினாள் பூங்கொடி.
அதைக்கேட்டு லேசாக அதிர்ந்த கோமதியின் பார்வை மீண்டும் அந்த தெரு முனைக்கு சென்றது. அதோடு தேர் அங்கு வரப்போகும் அரவம் கேட்க, உடனே அவளின் கண்கள் மின்னின.
“போடி... நீதான தேங்காய விட்டெறிஞ்ச...நீயே போய் எடுத்துகிட்டு வா. நான் இங்கயே நின்னுகிட்டிருக்கேன்..” என்று மறுத்தாள் கோமதி.
“ப்ளீஸ் டி...நான்தான் சொன்னேனே... நான் போனா இந்த சிலம்பா ஆயிரம் கேள்வி கேட்கும்னு. நான் மட்டும் சாமிக்கு உடைக்க வச்சிருந்த தேங்காயை எடுத்து இந்த காலிபயலுகளை விரட்ட உடைச்சேனு தெரிஞ்சுது, அம்புட்டுதான்.
சொந்தக்காரங்க முன்னாலயே என்ன நிக்க வச்சு சும்மா வாயாலயே விலாசி தள்ளிடும்.. என் செல்லம் ல.... நீ ஓடிப்போய் எடுத்துக்கிட்டு வாடி...” என்று கெஞ்ச, கோமதிக்கோ அவ்விடத்தை விட்டு நகரவே மனமில்லை.
அவள் பார்வை எல்லாம் அந்த தெருவில் நுழைய இருக்கும் தேரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தது.
அதனால் கோமதியும் ஏதேதோ சொல்லி உள்ளே செல்ல மறுத்துவிட, அவர்கள் வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த சின்ன வாண்டு அன்பரசன் அவன் அக்காவின் தாவணியை இழுத்து
“அக்கோ...நான் போய் எடுத்துகிட்டு வரவா? அம்மாக்கு தெரியாம ஒளிஞ்சு மறஞ்சு எடுத்துகிட்டு ஓடியாந்திடறேன்..” என்று சிரிக்க, பூங்கொடியின் முகத்தில் பிரகாசம் ஒளிர்ந்தது.
“வாடா... என் தங்கம்... நீதான் என் செல்லம்... சீக்கிரம் போய் எடுத்துகிட்டு வா கண்ணு...” என்று சொல்லி முடிக்கும் முன்னே சிட்டாக வீட்டிற்குள் ஓடி இருந்தான் அன்பரசன்.
பின் கோமதியை பார்த்தவள் ,
“ஏன்டி...இதுதான் நீ எனக்கு உதவி செய்யற லட்சணமா? என்னமோ ஒத்தாசை செய்ய வந்திருக்கனு பில்டப் கொடுத்த.. இதுதான் உன் ஒத்தாசையா? “ என்று முறைக்க, அதே நேரம் தேர் அந்த தெருவில் நுழைந்தது.
அதைக்கண்டதும் கோமதியின் கண்கள் மின்னின...
கன்னங்களில் ஒரு இளம்வெட்கம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது. முகம் / பௌர்ணமி நிலவாய்…தவுசண்ட் வாட்ஸ் பல்பை போல பிரகாசித்தது
தன் தோழியின் முகத்தில் வந்திருந்த அந்த திடீர் பிரகாசத்தை கண்டு அதிசயித்தவள், கோமதியை தொடர்ந்து பூங்கொடியின் பார்வையும், கோமதியின் பார்வை சென்ற திசையை பார்க்க, அப்பொழுதுதான் அரக்கப்பரக்க கோமதி அவளுக்கு ஒத்தாசை செய்ய ஓடி வந்ததற்கான காரணம் புரிந்தது
அந்த தெருவில் நுழைந்து கொண்டிருந்தது தேர்..!
அதன் ஒரு பக்கம் இருந்த வடத்தை பிடித்தபடி முதலாவதாக நின்றிருந்தான் ராசய்யா.
அவன் நின்று இருந்த பக்கம் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். மற்றொரு பக்கத்தில் இருந்த வடத்தை இழுப்பதற்கு பலபேர் நின்றிருந்தனர்.
அவன் பக்கம் அவன் மட்டுமே வடத்தை பிடித்து இழுத்துக் கொண்டிருக்க மற்றவர்கள் பேருக்காக வடத்தை பிடித்துக்கொண்டு நின்றது தெளிவாக தெரிந்தது.
தன் பலத்தையெல்லாம் காட்டி அந்த தேரை இழுத்துக் கொண்டிருந்தவன் புஜங்கள் மேடிட்டு உயர்ந்து இருந்தன்.
சட்டையை கழட்டிவிட்டு, வெறும் முண்டாசு பனியனும், தொடைவரை ஏற்றி மடித்துக் கட்டிய லுங்கியுடன் தேரை இழுத்துக் கொண்டிருந்தான் ராசய்யா.
ஏற்கனவே பரந்து விரிந்து இருந்த அவனின் மார்பு, அவன் இழுக்கும் வேகத்திற்கு இப்பொழுது இன்னுமாய் அகன்று விரிந்திருந்தது.
அவனின் ஆறடிக்கும் மேலான உயரத்திற்கும், அசால்ட்டாக அந்த தேரை இழுத்துக் கொண்டிருக்கும் அவனின் திடகாத்திரத்தையும், வலிமையும் கண்டு ஏங்காதே பெண்களே இல்லை.
ஆண்மையின் இலக்கணமே வலிமையும் வீரமும்… அது அத்தனையும் ராசய்யாவிடம் நிறையவே கொட்டிகிடக்க, நிறத்தில் கருப்பாக இருந்தாலும் அவனை பிடிக்காத கன்னிப்பெண்கள் இல்லை.
இப்படிப்பட்டவன் தனக்கு கணவனாக வரமாட்டானா என்று அந்த ஊர் கன்னிப் பெண்கள் எல்லாரும் ஏக்க பெருமூச்சு விட்டனர்... பூங்கொடி ஒருத்தியைத் தவிர.
கோமதியும் அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தியாய் இடம்பெற்றிருந்தாள்.
*****
கோமதிக்கு ராசய்யா மீது கொள்ளை ஆசை, பிரியம், ப்யார், காதல் கூட.
ஆனால் அப்பொழுதெல்லாம், இந்த காலத்து பெண்களைப்போல தன் மனதில் இருப்பதை தைர்யமாக சொல்லி விட முடியாதே..!
அவள் பெற்றோர்களிடம் ஜாடை மாடையாக சொல்லி பார்த்து விட்டாள்.
இப்பொழுது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க, ராசு மாமாவை போல மாப்பிளளை வேண்டும் என்று தாவணியின் முந்தானையை திருகியபடி தன் அன்னையிடம் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ந்து போனாள் அவள் தாய்.
“என்னாது? சொத்து பத்து எதுவும் இல்லாத அந்த வெட்டிபய மாதிரியா? அப்படி எல்லாம் உன்னை வெறும்பயலுக்கு கட்டி கொடுத்துட மாட்டோம் கண்ணு...
கொறஞ்சது ஒரு ஏக்கர் நிலமாச்சும் இருக்கோணும். சொந்தமா வீடு இருக்கோணும். உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்கோணும்... நீ கவலைப்படாத...
உன் மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளையைத்தான் கொண்டாந்து நிறுத்துவாரு உன் அப்பாரு....” என்று அவளின் கன்னம் வருடி சிரிக்க, கோமதிக்கோ எரிச்சலாக இருந்தது.
“யாருக்கு வேணும் ஒரு ஏக்கர் நிலமும், சொந்த வீடும்... அத்தனையும் இருந்தாலும் ராசு மாமா மாதிரி வருமா/? சொத்து பத்து இல்லைனாலும் அவர் மனசு தங்கம்...வைரம்...வைடூரியம்.
அவரை கட்டிகிட்டா என்னை ராணிய விட மேலா கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிடுவார்.
என்ன இப்ப கொஞ்சம் பொறுப்பில்லாம சுத்தறார். எல்லாம் தனக்குனு ஒருத்தி வந்தா மாறிடுவார். எனக்கு அவரையே கட்டி வைங்களேன்,,” உள்ளுக்குள் மட்டும்தான் புலம்ப முடிந்தது கோமதியால்...
வெளியில் வாய் விட்டு தன் ஆசையை சொல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது.
சரி.. தன் வீட்டில்தான் சொல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் தன் மனதை ராசு மாமாவிடமாவது சொல்லிவிடலாம் என்றால், அவரை பார்த்தாலே நாக்கு ஒட்டிக்கிது அவளுக்கு.
எதுவுமே பேச வர மாட்டேங்குது. சரி பார்வையாலயே தன் ஆசையை, காதலை சொல்லிடலாம்னு ஆசையா பார்த்து வைத்தால், அதை புரிந்து கொள்ள தெரியாதவனாய்
“என்ன கோதி? ஒரு மாதிரி பாக்கற? “ என்று அவளிடமே அவள் பார்வைக்கான விளக்கத்தையும் கேட்டு வைத்தால், பாவம் அந்த பெண்ணவள்தான் என்ன செய்வாள்.
ஏமாற்றத்துடன் ஒன்னுமில்லை என்று தலையாட்டிவிட்டு ஓடிவிடுவாள்.
நேருக்கு நேராக நின்று பார்க்கவும் தைர்யமில்லை... மனம் விட்டு தன் மனதில் இருப்பதை சொல்லவும் முடியாமல் இப்படி மறைந்து நின்று அவனை சைட் அடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு அவளால் முடிந்தது.
ஆனாலும் அந்த ஊர் மட்டும் அல்லாது பக்கத்து ஊர் கோவில்களில் இருக்கும் அத்தனை தெய்வங்களிடம் ராசுமாமா தான் தன் கணவனாக வரவேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.
அவள் வேண்டுதல் நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்...!
Comments
Post a Comment