என்னுயிர் கருவாச்சி-2


 


அத்தியாயம்-2

 

ஹோய் கருவாச்சி..!  என்ன இன்னிக்கி காலேஜ் மட்டம்  போட்டுட்டியா?  பஸ்ஸுக்கு போகாமல் இங்க நின்னுகிட்டு இருக்க? “ என்று தன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி ஈ என்று இளித்தான் அந்த புல்லட்டில் அமர்ந்திருந்தவன்.  

ஏற்கனவே பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டதே என்ற கடுப்பில் இருந்தவள்,  அவனைக் கண்டதும்,  பார்க்கக் கூடாததை பார்த்து விட்டதை போல முகத்தை சுளித்தவள், இப்பொழுது அவன் அவளை கருவாச்சி என்று அழைக்கவும் கோபம் பொங்கி வந்தது.

“நான் ஒன்னும் கருவாச்சி இல்லை...“ என்று அவனை முறைத்து பார்த்து தன்  கழுத்தை வெட்டினாள் பூங்கொடி.

“ஓஹோ... நீ கருவாச்சி இல்லைனா வேற என்னவாம்? ஒருவேளை சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பழகியோ? “    என்று நக்கலாக சிரிக்க

“ஆமா...எனக்கு  நான் சிவப்புதான். உனக்கென்ன..?  என்னை கருவாச்சினு சொல்றதுக்கு முன்னாடி, உன் வீணாப்போன புல்லட்டில்  முன்னால் வச்சிருக்கியே... அந்த ரசம் போன கண்ணாடி..  

அதுல  உன் மூஞ்சை  நல்லா உத்துப் பாரு.  அப்ப தெரியும் யார் கருப்பு  என்று..! “  என்று பொரிந்து தள்ளினாள் பூங்கொடி.

“அதெல்லாம் ஏற்கனவே பார்த்ததுதான்...ஐயாவோட இந்த கலருக்கே எத்தனை ஃபிகருங்க என் பின்னால சுத்தறாளுங்க தெரியுமா? “ என்று சாயம்போன தன் சட்டையின் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் அந்த புல்லட்காரன்.

அதைக்கேட்டு வாயில் கையை வைத்து பக் என்று ஏளனமாக சிரித்தாள் பூங்கொடி.

“நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்....! இந்த கதை எல்லாம் என்கிட்ட வேண்டாம்...உன்னை பார்த்தாலே நம்ம ஊர் புள்ளைங்க எல்லாம் ஓடி ஒளிச்சிக்கிறாளுக...

அவளுங்க உன் பின்னால வாராளுங்களாக்கும்... போய் வேற யார் கிட்டயாச்சும் அள்ளி ஊத்து உன் கதையை...”  என்று கழுத்தை நொடித்தாள் பூங்கொடி.

அதே நேரம் வாசலில் இருவரின் வாக்குவாத சத்தம் வீட்டிற்கு உள்ளே இருந்த சிலம்பாயிக்கு கேட்டு இருக்க, கையில் இருந்த துடப்பத்தோடு வாயிலுக்கு விரைந்தார்.

“அடியே...எரும... பஸ்க்கு நேரமாச்சுனு அப்படி ஓடி வந்த. பஸ்க்கு போகாம இங்க என்ன நின்னுகிட்டு வாயடிச்சுகிட்டு இருக்க? “ என்று தன் மகளை கடிந்து கொண்டவாறு வாயிலை பார்க்க, அங்கு புல்லட்டின் மீது அமர்ந்தவாறு ஒற்றைக் காலை மட்டும் தரையில் ஊன்றியவாறு, புல்லட்டை விட்டு இறங்காமல் அமர்ந்து இருந்தவனை கண்டதும் வழக்கத்தில் புன்னகைத்து விட்டு,  மீண்டும் தன் மகளின் பக்கம் திரும்பினார் சிலம்பாயி.

முகத்தில்  கோபம் பொங்க, கண்கள் ஜொலி ஜொலிக்க நின்றிருந்த தன் மகளை  பார்த்தவர், மீண்டும்  கடுப்பாகி,

“ஏன் டி... பஸ்க்கு நேரமாகல...  இப்ப எதுக்கு ராசய்யாகிட்ட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்க? “  என்று முறைத்தார் சிலம்பாயி.  

“நான் ஒன்னும் வாக்குவாதம் பண்ணல மா.  இந்த கருவாயன் தான் என்ன பார்த்து கருவாச்சின்றான். அதுதான் நியாயம் கேட்டுகிட்டு இருக்கேன்...” என்று  தன் அன்னையிடம் எகிறினாள் பூங்கொடி.

அவள் தலையில் நங்கென்று கொட்டினார் சிலம்பாயி...

“இது என்னடி  புது பழக்கம்?  ராசய்யா வயசுல உன்னை விட பெரியவன். கொஞ்சஞ்கூட மரியாதை இல்லாம, அவனைப் போய் வாடா போடான்னு சொல்லலாமா?  இதுதான் நான் உன்னை வளர்த்த லட்சணமா? “  என்று படபடவென்று பொரிந்து தள்ள,

“ஆமாமாம்...  பெரிய இவன். இவனுக்கு நான் மரியாதை கொடுக்கணும்...”  என்று உள்ளுக்குள்  தன் கழுத்தை நொடித்து அவனை திட்டியவள்,

“அம்மா...  நீயே சொல்லு..இவன் கலர் என்ன? என் கலர் என்ன? என்னைப்போய் எப்படி கருவாச்சினு  சொல்லலாம்? இன்னொரு தரம் இந்த கரு... “ கருவாயன் என்று சொல்ல வந்தவள், சற்று முன்னர் தன் அன்னையிடம் கொட்டு வாங்கியது நினைவு வர, பாதியில் முழுங்கிக் கொண்டு,  

“இந்த ராராராசய்யாயாயாயா மகாராஜா என்னை பார்த்து கருவாச்சி னு சொன்னான்... என் வாய் பேசாது... கை தான் பேசும்... சொல்லிபுட்டேன்...அப்படியே அந்த ராசய்யா மகாராஜா கிட்டயும்  சொல்லி வை... “ என்று முறைத்தாள் பூங்கொடி

“ஆமான் டி... காலங்காத்தால எழுந்தவ,  வீட்ல ஒரு வேலையும் செய்யாம காலேஜ் போறேன் பேர்வழினு சீவி சிங்காரிச்சுகிட்டு கிளம்பறவ... நேரா நேரத்துக்கு பஸ்ஸை பிடிச்சு காலேஜ் போகாம,  இங்க நின்னுகிட்டு வியாக்கியானம் பேசிகிட்டு இருக்க.    

நீ முதல்ல காலேஜ் போகற வழியைப் பாரு.  இல்லன்னா பேசாம களையெடுக்க என் கூட வா...” என்று சிடுசிடுத்தார் சிலம்பாயி.  

அதே நேரம் அவர்கள் பேச்சை  ஆர்வமாக பார்த்துக்கொண்டு புல்லட்டில் அமர்ந்து இருந்தவனை பார்த்தவர்

“நீ எங்க இந்த பக்கம் ராசய்யா? உள்ளார வா... ஒரு வாய் காபி தண்ணி குடிக்கலாம்? “ என்று அவனை அழைக்க,

“ஆமாம்...இந்த கருவாயன் பொண்ணு பார்க்க வந்திருக்கான். அவனை வீட்டுக்கு உள்ளார உட்கார வச்சு காபி தண்ணி கொடுத்து உபசரி...” என்று உள்ளுக்குள் மீண்டும் பொரிந்தாள் பூங்கொடி.

“இருக்கட்டும் அத்தை... நான் மாமன பார்க்க வந்தேன். அவர் இல்லையா? “ என்று விசாரித்தான் ராசய்யா.

அவர் கருக்கலிலயே  வயலுக்கு தண்ணி வைக்கனும்னு போயிட்டாரே... நீ வேணா அங்கன போய் பாருய்யா...” என்று சொல்லிக்கொண்டிருக்க,

அப்பொழுது சைக்கிளில் அந்த வழியாக சென்ற பெண் ஒருத்தி, பூங்கொடி கையில் நோட்டு புத்தகத்துடன் கல்லூரிக்கு செல்ல தயாராகி நிற்பதை கண்டவள்,  

“என்ன பூவு? காலேஜ் போகலையா? மார்கழி குளிருக்கு நல்லா இழுத்து போர்த்தி தூங்கிட்டியாக்கும்?  எட்டறை மணி பஸ்,  பஸ் ஸ்டாப்பிங்ல நின்னுச்சே...இந்நேரம் போயிருக்கும்....அப்ப நீ இன்னைக்கு காலேஜ்க்கு மட்டம்தான்...”   என்று சொல்லி சிரித்தவாறு சைக்கிளை மிதித்தபடி வேகமாக சென்றாள்.

அதைக்கேட்டு அதிர்ந்தவள் தன் தலையில் கையை வைத்துக் கொண்டாள் பூங்கொடி...

“ஐயயோ...ஏற்கனவே லேட்டாகிடுச்சுனு வந்தால் இந்த கருவாயன் வேற இப்படி வம்பு இழுத்து பஸ்ஸை விடடுபுட்டேனே? இப்ப என்ன செய்ய? “ கலவரத்துடன் முழித்தாள் பூங்கொடி.

தன் மகளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும், கண்களில் தெரிந்த சிறு பதற்றத்தையும் கண்ட சிலம்பாயி கொஞ்சம் மனம் இறங்கியவர் தன் மகளுக்கு வாலண்டியராக உதவ முன் வந்தார்.

“ராசய்யா... பஸ் இன்னும் க்இளம்பியிருக்காது. அப்படியே கிளம்பி இருந்தாலும் ரொம்ப தூரம் போயிருக்காது...நீ நம்ம வயலுக்கு  போற வழிதான.. அப்படியே அந்த பஸ்ஸை புடுச்சு பூவையும் ஏத்திவிட்டுட்டு போய்டுயா...”  என்க, அதைக்கேட்டு தூக்கிவாரிப்போட நிமிர்ந்து  பார்த்தாள் பூங்கொடி.

பொதுவாகவே ராசய்யா என்று அழைக்கப்பட்டவனை  பூங்கொடிக்கு பிடிக்காது.

இந்த உலகத்திலயே அவளுக்கு முதல் எதிரி யாருனா ராசய்யா என்றுதான் சொல்வாள்.  

இன்று வேறு அவன் வந்தும் வராததுமாய்  அவளை  கருவாச்சி என்று அழைத்தான் என்று அவன் மீது  உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறாள்.  

அப்படி இருக்க, இந்த அம்மா வேறு அவனுடனேயே போகச்  சொல்லுகிறாளே... அதெப்படி இவனுடன் நான் போவது? “ என்று  தலையை சிலுப்பிக் கொண்டவள், தன் அன்னையை பார்த்து முறைத்து விட்டு,  

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... பஸ் இன்னும் போயிருக்காது. நான் நடந்தே போய்க்கிறேன்...”  என்றாள் கழுத்தை நொடித்தவாறு.

“ஹா ஹா ஹா நீ பொடி நடையா நடந்தா,  நாளைக்கு வரப்போற  எட்டறை மணி பஸ்ஸைத்தான் பிடிக்க முடியும். எப்படி வசதி? “  என்று ராசய்யா நக்கலாக சிரிக்க, அவனை மீண்டும் ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவள் அடுத்து என்ன செய்ய என்று தன் அன்னையைப் பார்க்க, சிலம்பாயி ம்  தன் மகளை முறைத்தபடி

“இங்க பாரு பூவு... காலேஜ் போறதுன்னா ராசய்யா வண்டில போயிரு. பஸ் கொஞ்சதூரம் போயிருந்தாலும் பின்னாடியே போய் பிடித்து விடலாம்

இல்லையா... இன்னைக்கு லீவு போட்டுட்டு என்கூட ஒத்தாசைக்கு களை எடுக்க வா. ரெண்டுல ஒன்னு நீயே முடிவு பண்ணிக்க...”  என்று முடித்து விட்டார் சிலம்பாயி.

பூங்கொடிக்கோ என்ன செய்வது    என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தாள்.

காலேஜ் போகணும்னா அந்த  வீணாப்போன பஸ்ஸை புடிச்சாதான் உண்டு.  அதுக்கு இந்த கருவாயன் கூட வண்டியில போகணும். இல்லைன்னா இந்த அம்மா கண்டிப்பா என்னை இன்னைக்கும் சேத்துல இறக்கி விட்டுடும்.

நேத்து ரெண்டு நாளு சேத்துல நின்னதே பெண்டு  கழண்டு போச்சு. அம்மாடியோவ்... இன்னைக்கும் அந்த சேத்துல நம்மளால இறங்கி நீக்க முடியாது மா...

இந்த சிலம்பா கிட்ட இருந்து தப்பிக்கணும்னா, ஒரே வழி எப்படியாவது காலேஜ்க்கு எஸ்ஸாகிடனும்... “ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான்  இன்னொன்றும் நினைவு வந்தது.

இன்று கல்லூரியில் அவள் கேங்கில்  இருக்கும் தோழி  ஒருத்தியின் பிறந்தநாள்.  கேண்டின்க்கு கூட்டிகிட்டு போய் எல்லாருக்கும் ட்ரீட் தருவதாக சொல்லி  இருந்தாள்.

அதோடு இன்று முழுவதுமே தோழிகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கலாம். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஜாலியாக இருக்கும்.  

எப்பொழுதாவது தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதை விடவும் மனம் வரவில்லை.

அதோடு இன்று கல்லூரியில் அவளுக்கு விளையாட்டு போட்டி  வேறு ஒன்று இருந்தது.  

அவளுக்கு பிடித்த கோ-கோ  டீம்க்கு ஆள் எடுக்க போகிறார்கள். இன்று செல்லவில்லை என்றால்,  அவள் பெயர் காலேஜ் டீமில் இருக்காது. அப்புறம் அவள் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் கோ-கோ போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று பலதையும் யோசித்தவளுக்கு

கல்லூரிக்கு போவதுதான் சரி என்று தோன்றியது.

ஆனால் அப்படி போக வேண்டும் என்றால் இந்த கருவாயன் உடைய வண்டியில் தான் போக வேண்டும். சை... இப்பன்னு பார்த்து இந்த அப்பா வேற வீட்ல இல்ல.  என்ன செய்யலாம்? “  என்று மனதிற்குள்ளேயே ஒத்தையா, இரட்டையா போட்டு பார்த்தாள்.

அதற்கான விடை, ராசய்யா பக்கமே வந்துவிட,  தன்னை மறந்து அருவருப்புடன் முகத்தை சுளித்தாள்.

ஆனாலும்  

ஹ்ம்ம்ம் ஆபத்துக்கு பாவம் இல்லை. இன்னைக்கு  ஒரு நாள் தானே...போய்த்தொலையலாம்...”    என்று தன்னைத்தானே சமாதானம் படுத்திக் கொண்டவள்  

“சரி மா... எனக்கு காலேஜ்ல முக்கியமான வேலை இருக்கு. போயே ஆகணும்... அதனால இந்த கரு... “ கருவாயன் என்று சொல்ல வந்தவள், சிலம்பாயின் முறைப்பை கண்டு கொண்டு, தன்  நாக்கை கடித்து பாதியில் நிறுத்திக் கொண்டு,  

“இந்த ராசய்யா மகாராஜா கூடவே போறேன்...பை....”  என்றவள் விடுவிடுவென்று நடந்து புல்லட்டின் அருகில் வந்தாள்.  

அவளின் கோபத்தை தன்னை மறந்து ரசித்தவன், ஒரு வெற்றி புன்னகையை செலுத்தியவன், தரையில் ஊன்றியிருந்த காலை எடுத்து,  தன் புல்லட்டின் கிக்கரில் வைத்து உதைக்க, ஒரே மிதியில் அது அலறியபடி  ஸ்டார்ட் ஆனது.

பூங்கொடியும் வேண்டா வெறுப்பாக எக்கி, பின்னால் ஏறி ரொம்பவும் இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டாள்.  

முன்பக்கம் இருந்த கண்ணாடியின் வழியாக அவளைப் பார்த்தவன்,  தன் சாயம்போன சட்டையின் காலரை ஸ்டைலாக தூக்கி விட்டுக் கொண்டு,  அவளை பார்த்து வெற்றியும், ஏளனமும் கலந்த புன்னகை ஒன்றை வீசியவன், தன் கையில் இருந்த புல்லட்டின் ஆக்சிலேட்டரை முறுக்கி வேகமாக பறந்தான் ராசய்யா...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!