என்னுயிர் கருவாச்சி-3
அத்தியாயம்-3
ராசய்யா - காமாட்சிப்பட்டியை சேர்ந்தவன்..!
வயது இருபத்தி ஆறு..! இன்னும்
ஒரு மாதத்தில் இருபத்தி ஏழு, நடக்க ஆரம்பித்துவிடும்.
ஒரு காலத்தில் அவனின் பெற்றோர்களும் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தவர்கள்தான்.
சொந்தமாக நிலம் இல்லை என்றபொழுதும், நிலத்தை குத்தகைக்கு
எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
அவனின் தந்தை வீரய்யா..தாய் காமாட்சி.. இருவரும் மனம் ஒத்த ஆதர்ஷ
தம்பதிகளாய் வாழ்ந்தவர்கள். அவர்களின் அன்பிற்கும், காதலுக்கும் அடையாளமாக
பிறந்தவன் ராசய்யா...!
நீண்ட நாட்கள் பிள்ளை இல்லாமல் தவம் இருந்து பெற்ற மகனை கண்டதும் இருவருக்குமே பேரானந்தம்.
தங்களைப் போல தங்கள் மகன் வருங்காலத்தில் கஷ்டப்படக்கூடாது. அவன் நல்லா படித்து
ராஜா மாதிரி வாழ வேண்டும் என்ற ஆசையில், காமாட்சி தேடிப்பிடித்து ராசா என்று பெயர் வைத்தார்.
கூடவே அவனை எல்லாரும் மரியாதை உடன் அழைக்க வேண்டும் என்று எண்ணி, ஐய்யாவையும் உடன் சேர்த்து ராசய்யா என்று பெயர்
வைத்து விட்டார் காமாட்சி.
தன் ஒரே மகனின் மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்து
வந்தனர் இருவரும்.
யார் கண் பட்டதோ..! ராசய்யா ஐந்து வயது சிறுவனாக இருக்கும் பொழுது, வயல் காட்டுக்கு தண்ணி வைக்க போன அவன் தந்தை வீரய்யா
வை பாம்பு கடித்துவிட, எப்படியோ சமாளித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
ஆனால் வீட்டு வாயிலை அடைந்ததும், அவர் வாயில் நுரை தள்ள, அப்படியே மயங்கி தரையில் சரிந்தார் வீரய்யா.
அதைக்கண்டு அதிர்ந்து போய் அலறினார் காமாட்சி.
அவரின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்துவிட, அதில் ஒரு மூதாட்டி
, வீரய்யாவை பரிசோதித்துவிட்டு, விஷம் உடலெல்லாம் பரவி
விட்டது. உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவேண்டும்
என்று சொல்ல, அப்பொழுது அதற்கான வசதிகள்
இல்லை அந்த ஊரில்.
அவசரமாக மாட்டு வண்டியை கட்டுவதற்குள்ளேயே அவரின் உயிர் பிரிந்து
விட்டது. அதைக்கண்ட காமாட்சி, தன் கணவனின் இழப்பை
தாங்க முடியாமல், அடுத்த கணம்
நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டார்.
இப்பொழுது எல்லோரும் காமாட்சியை பார்க்க வேண்டியதாயிற்று.
நெஞ்சை பிடித்துக்கொண்டு சாயவும், நெஞ்சுவலியாக இருக்க வேண்டும் என்று அவசர அவசரமாக, வீரய்யாவுக்கு பூட்டிய மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு முசிறி அரசு
மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த பொது மருத்துவர்கள் யாரும் இல்லை.
எப்படியோ இங்கே அங்கே அலைந்து திரிந்து, கெஞ்சி கூத்தாடி, விருமுரைக்கு சென்று
இருந்த மருத்துவர் ஒருவரை வரவழைத்து விட, அவர் வந்து பார்ப்பதற்குள், காமாட்சியின் உயிரும் பிரிந்து விட்டது.
*****
ஐந்த வயது பாலகனாய் நடந்ததை எல்லாம் பார்த்துக்
கொண்டிருந்த ராசய்யா இடிந்து போனான்.
தன் கண் முன்னாலேயே
தன்னை பெற்றவர்கள், தன்னை உயிருக்கு உயிராய் நேசித்தவர்கள், இறந்து போன காட்சிகள் அவன் மனதில் ஆழ பதிந்துவிட்டது.
வீட்டிற்கு முன்னால் போடப்பட்டிருந்த தன் பெற்றோர்களின் சடலங்கள்
மீது படுத்துக் கொண்டு கதறி அழுதான் ராசய்யா...
அவனின் அழுகையை கண்டு அந்த கிராமமே கண்ணிர் உகுத்தது அன்று...
இந்த சிறுவயதில் இப்படி அவனை அநாதையாக தவிக்க விட்டு சென்று விட்டார்களே என்று ஊரே
ஆதங்கப்பட்டது.
என்னதான் அழுது புரண்டாலும்
மாண்டவர்கள் மீண்டு வந்துவிட முடியுமா?
அவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
அடுத்து ராசய்யா என்ன செய்வான்
என்ற கேள்வி எழ, அவனுடைய அம்மா வழி தாத்தா அவனை வளர்க்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டார்.
அவரும் வயது
முதிர்ந்தவர். ஒரே மகளான காமாட்சியை, அதே ஊரில் இருந்த வீரய்யாவுக்கு கட்டிகொடுத்துவிட்டு , அந்த ஊரிலயே ஒற்றை
கறவை மாட்டை வைத்துக்கொண்டு, அதில் வரும் வருவாயில் தான் தன் ஜீவனத்தை நடத்தி
வந்தார்.
இப்பொழுது பேரனின் பொறுப்பும் சேர்ந்து கொள்ள, எப்படியோ கஷ்டப்பட்டு அவனையும் வளர்த்தார்.
அங்கிருந்த ஆரம்ப பள்ளிக்கு ராசய்யாவை படிக்க அனுப்பி வைத்தார் அவன் தாத்தா.
ஆனாலும் ஒன்றாம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்றவன், தன் தாத்தா கஷ்டப்படுவதை
கண்டு அதற்குமேல் பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான்.
ராசய்யா , ஏழு வயதிலேயே வயலுக்கு
வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டான். அவன் தாத்தாவுடன் சேர்ந்து, செம்மறி ஆட்டை வாங்கி மேய்த்து வந்தான். அதோடு அப்பொழுதிலிருந்தே வயலில் சிறுசிறு வேலையை செய்ய ஆரம்பித்தான்.
ஊர் மக்களும் தாய் தகப்பன் இல்லாத பிள்ளை என்று அவன் மீது அக்கறை
காட்டினர்.
அவர்களுக்கு எடுத்துவரும் கஞ்சியை அவனுக்கும் கொடுப்பார்கள்.
ஆரம்பத்தில் மறுத்தாலும் அவர்கள் பாசமாக கொடுப்பதைக் காண, அவன் அன்னையே அவர்கள் ரூபத்தில் வந்து தனக்கு ஊட்டுவதாக தோன்ற மறுக்காமல்
வாங்கி கொண்டான்.
*****
எப்படியோ நாட்கள் வேகமாக உருண்டோடி செல்ல, ராசய்யாவும் மெல்ல வளர்ந்து விடலைப் பருவத்தை அடைந்து விட்டான்.
இனிமேல் தன் பேரன் சமாளித்துக் கொள்வான் என்ற
நிம்மதியில் அவன் தாத்தாவும் கண்ணை மூடி
விட்டார்.
அதில் இன்னும் அதிர்ந்து போனான் தான் ராசய்யா... ஆனாலும் ஏற்கனவே
தன் பெற்றோர்களின் இழப்பையே பார்த்து, பழகி, தாங்கி கொண்டவனுக்கு, தன் தாத்தாவின் இழப்பு பெரிதாக பாதிக்கவில்லை.
ஆரம்பத்தில் அதிர்ந்து போனாலும், ஓரிரு நாட்களிலேயே அதை
ஏற்றுக் கொண்டான்.
*****
அதன் பிறகு கேட்பார் யாருமின்றி, தனக்கு பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்தான் ராசய்யா...
பதினாறு வயதிலேயே ட்ராக்டர்
ஓட்டக் கற்றுக்கொள்ள, அந்த ஊரில் இருந்த பண்ணையாருக்கு ட்ராக்டர் ஓட்டும் வேலைக்கு சென்றான்.
ட்ராக்டர் ஓட்டும் வேலை இல்லாதபொழுது, வயலில் இறங்கி பெண்கள்
செய்யும் வேலைகளான நாத்து நடுவதில் இருந்து, களை எடுப்பதில் இருந்து, வாழை மரங்களுக்கு உரம் வைப்பது, கரும்பு தோட்டத்தில்
தோகை இனுங்குவது, வயலுக்கு
தண்ணீர் பாய்ச்சி, மடை கட்டுவது
என எந்த வேலையும் கூச்சம் இல்லாமல் செய்தான்.
நாட்கள் இன்னுமாய் வேகமாக நகர, அவனின் வாழ்க்கையில்
பெரிதாக எந்த முன்னேற்றமும்
வந்துவிடவில்லை.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல , எங்கே வேலை இருக்கிறதோ அங்கே வேலை செய்துவிட்டு, அவர்கள் தரும் உணவை சாப்பிட்டுவிட்டு வந்து விடுவான்.
கூலி என்று பெரிதாக கேட்டு
வாங்கிக் கொள்வதில்லை.
இப்படி இருக்காதே என்று யாராவது அட்வைஸ் பண்ணினால்,
“அடபோங்கப்பா... என் அம்மாவும் அப்பாவும் என்னத்த தூக்கிட்டு போனாங்க...
எல்லாம் இந்த அரை சாண் வயித்துக்காகத்தானே..!
அது கிடைத்தால் போதும்...” என்று வியாக்கியானம் பேசி, கேட்டவர்கள் வாயை அடைத்து விடுவான்.
ஆனால் அடுத்து கொஞ்ச நாட்களில் அவன் வயது பையன்கள் பைக் ஓட்டுவதை
பார்த்தவனுக்கு தானும் அந்த மாதிரி பைக் ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை முதன்முதலாக வந்தது.
அப்பொழுதுதான் வாழ்க்கையை வாழ காசு பணம் வேண்டும் என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டான் ராசய்யா.
அதோடு சொந்தமாக பைக் வாங்க எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டு, அந்த காசை சேர்க்க தீவிரமாக
உழைத்தான்.
இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்வதற்கான கூலியை கறாராக கேட்டு வாங்கிக்கொள்வான்.
அவன் கையில் காசு இருக்கவும், அந்த ஊரில் வெட்டியாக
சுற்றிக்கொண்டிருக்கும் அவன் வயது பையன்கள் ராசய்யாவை நெருங்கி வந்தனர்.
அவனுடன் நட்பு பாராட்டி , அவன் காசில் ஊரை சுத்தினர்.
ஒரு நாள் ராசய்யாவை மதுக் கடைக்கு அழைத்துச்சென்று மதுவை ருசிக்க
வைத்தனர்.
ஆர்வக்கோளாறில் அதை குடித்த ராசய்யாவுக்கும் முதலில் குமட்டிக்கொண்டு
வந்தாலும் இரண்டு மூன்று முறை என குடித்து
பார்க்கவும் பழகி விட்டது.
ஆனாலும் ஒரு எல்லைக்கு மேல் தாண்ட மாட்டான். எப்பொழுதெல்லாம் மனம்
வலிக்கிறதோ அப்பொழுது அந்த மதுவின் துணையை நாடிச்செல்லும் பழக்கத்திற்கு சென்றுவிட்டான்.
*****
ஒருமுறை கொஞ்சம் ஓவராக குடித்துவிட்டு ரோட்டோரமாக விழுந்து
கிடக்க, அந்த பக்கமாக வந்த பூங்கொடி அருவருப்பில் முகத்தை
சுளித்தாள்.
அந்த வழியாக கடந்து சென்ற யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை.
“இவன் ஒருத்தனாவது இந்த
ஊரில் யோக்கியமா இருந்தான். இவனும் இப்படி ஆய்ட்டானே... குடிகாரப்பயல்...” என்று வெள்ப்படையாக திட்டிக்கொண்டே சென்றனர்.
ஆடை கலைந்து ரோட்டோரமாக அலங்கோலமாக கிடந்தவனை பூங்கொடிதான் முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பி, அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து, அவனுக்கு போதையை தெளிய வைத்து அவன் வீட்டில் கொண்டு
போய் விட்டாள்.
கூடவே அவன் சாப்பிடாமல் இருக்கிறான் என கண்டு கொண்டு, பக்கத்து வீட்டில் இருந்து கம்மங்கூலை வாங்கி அவனை கட்டாயபடுத்தி
குடிக்க வைத்தாள்.
அரை மயக்க நிலையாக இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டிய
பூங்கொடியை அடையாளம் கண்டு கொண்டான் ராசய்யா...
ஏனோ அந்த நொடி அவன் அன்னையே நேரில் வந்து அவனை திட்டுவதை போலவும், அவன் சாப்பிடாமல் இருக்க, அவன் வாயில் சோற்றை
ஊட்டிவிடுவதை போலவும் கண்ணுக்கு மங்களாக தெரிய, அந்த கணம் கண்கலங்கி
போனான் ராசய்யா...
அன்றிலிருந்து பூங்கொடி மீது ஏனோ ஒரு தனிக்கரிசனம் அவனுக்கு.
எல்லாரிடமும் ஜாலியாக வம்பு இழுந்து சீண்டி பேசினாலும் பூங்கொடியிடம்
கொஞ்சம் எல்லை தாண்டி சீண்டுவான்.
பூங்கொடிக்கோ ராசய்யாவை கண்டாலே சுத்தமாக பிடிக்காது.
அதுவும் அன்று குடித்துவிட்டு ரோட்டோரம் கிடந்ததும், வாரம் ஒரு முறையாவது எவனிடமாவது சண்டைப் போட்டுக் கொண்டு சட்டையை கிழித்துக் கொள்வதும் என ரௌடி மாதிரி சுற்றிக் கொண்டிருப்பவனை கண்டாலே
அருவருப்பில் முகத்தை சுளிப்பாள்.
அவள் அருவருப்பாக பார்க்க பார்க்க, ராசய்யாவுக்கு அவளை இன்னும் சீண்டி பார்க்க வேண்டும் போல இருக்கும்.
அதுவும் தூரத்து சொந்தத்தில் அவள் ஒன்னுவிட்ட மாமன் மகளாகிப்போக, அந்த உரிமையில் அவளை கிண்டலும் கேலியும் செய்து வைப்பான்.
*****
இப்படியே அவன் வாழ்க்கை, எந்த ஒரு கவலையும், குறிக்கோளும் இல்லாமல் அது பாட்டுக்கு நகர்ந்து சென்றது.
இப்பொழுது இருபத்தி ஆறு வயதும் ஆகி, ஒரு இளைஞனாய், கட்டுக்கோப்பான உடற்கட்டுடன், யாருக்கும் அடங்காத கிராமத்து காளையாய், பார்க்கும் கன்னி பெண்களை எல்லாம் அவன் பக்கம் கவர்ந்து இழுக்கும்
கட்டழகனாய் வளர்ந்து நின்றான் ராசய்யா.
அவன் வாழ்க்கையின் முதல் லட்சியமான பைக் வாங்கவேண்டும் என்றது சென்ற மாதம்தான்
நிறைவேறி இருந்தது.
இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த காசை கொண்டு,
சொந்தமாக புல்லட் வாங்கினான்.
ஊரில் அவனின் நலம் விரும்பி எல்லாரும் அட்வைஸ் மழையை பொழிந்தனர்.
இந்த காசை வைத்து, ஒரு நிலத்தை குத்தகைக்கு பிடித்து சொந்தமாக விவசாயம் பார்க்க
சொல்லினர். ஒரு சிலரோ இன்னும் கொஞ்சம் காசை கடன் வாங்கி போட்டு சொந்தமா ஒரு ட்ராக்டரை
வாங்கு
எத்தனை நாளைக்குத்தான் கூலிக்கு ஓட்டுவ? சொந்தமா ட்ராக்டர் வாங்கினால் நிறைய சம்பாதிக்கலாம் என்று எடுத்துச் சொல்ல,
அவனோ யார் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
நேராக ஷோ ரூம் க்கு போனவன், அங்கு நின்றிருந்த புல்லட்டை பார்த்ததும் அதன் மீது ஆசை
வந்துவிட, பைக்க்கு பதிலாக இன்னும் காசை சேர்த்து போட்டு புல்லட்டை
வாங்கி வந்துவிட்டான்.
அவன் கம்பீரமாக ஊருக்குள் புல்லட்டில் வருவதை கண்டு எல்லாரும் வாயை பிளக்க,
அதைக்கண்ட ராசய்யாவுக்கு பெருமையாக இருந்தது.
பெரிய ராஜகுமாரன்... குதிரையின் மீது
பவனி வருவதை போல அப்படி ஒரு பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.
அதிலிருந்து பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் தன் புல்லட்டில்தான்
செல்வான் ராசய்யா.
*****
இன்றும் அப்படித்தான்..!
பூங்கொடியின் தந்தையை வேலை விஷயமாக பார்க்க, தன் புல்லட்டில் வந்திருந்தான்
ராசய்யா.
அப்பொழுதுதான் பூங்கொடி கல்லூரிக்கு கிளம்பி
வர, அவளைக் கண்டவன் அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
அந்த ஊரில் எல்லாரிடமும் சீண்டி பேசுபவன், பூங்கொடியிடம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வம்பு இழுப்பான்.
அதுவும் அவளை யாராவது கருவாச்சி என்றால் பிடிக்காது
என்று கண்டவன் அவளை அப்படி அழைத்து, அவள் முகம் கோபத்தில் சிவப்பதை பார்த்து ரசிப்பான்.
இன்றும் அவளிடம் வம்பு இழுத்தவன், சிலம்பாயி கேட்டுக்கொண்டதற்காக, அவளை தன் புல்லட்டில் ஏற்றிக்கொண்டு, எட்டறை மணி பஸ்சை பிடிக்க பறந்து கொண்டிருதான் ராசய்யா..!
Comments
Post a Comment