என்னுயிர் கருவாச்சி-4

 


அத்தியாயம்-4

ய்... கருவாச்சி... எதுக்கு இம்புட்டு தூரம் தள்ளி உட்கார்ந்து இருக்க? பாத்து நான் போற ஸ்பீடுக்கு பறந்து போய்டாத...! “  என்று நக்கலாக சிரித்தான் ராசய்யா.

மீண்டும் அவளை  கருவாச்சி என்று அழைக்கவும், அதில் கடுப்பானவள்,

“டேய்  கருவாயா....” என்று கோபத்துடன் கத்தி முறைக்க,

“என்னது டேயா? “ என்றான் ராசய்யா அதிர்ச்சியோடு.

இதுவரை அவள் அவனை அப்படியெல்லாம் அழைத்ததில்லை.

அவனை பார்க்கும்பொழுதெல்லாம் முறைத்துவிட்டு செல்வாள். எதையாவது சொல்லி திட்டி முனுமுனுத்தவாறு சென்று விடுவாள். ஆனால் அவனை மரியாதை இல்லாமல் அழைப்பது இதுதான் முதல் முறை என்பதால் அதிர்ச்சியோடு பெண்ணவளை பார்க்க,

“ஆமான் டா...உனக்கெல்லாம்  எதுக்கு மரியாதை...எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் என்னை கருவாச்சினு கூப்பிட்டா இனிமேல் இப்படித்தான்...

ஆமாம்என்னை கருவாச்சினு வாய்க்கு  வாய் கூப்பிடறியேநீ மட்டும் என்ன அப்படியே தகதகனு பெங்களூர் தக்காளி மாதிரி சிவப்பாவ மின்னற?

அதான..உன் மூஞ்ச ஒரு தரமாவது கண்ணாடியில பார்த்திருந்தா தான தெரியும்... நாம எம்புட்டு கலரா இருக்கோம்னு

அப்படியே கருகருனு நவாப்பழ கலர்ல இருந்துகிட்டு என்னை பார்த்து கருவாச்சிங்கறான்...கருவாப்பய...!

டேய்...திரும்பவும் சொல்றேன்... தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கருவாச்சி யாக்கும்.  இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிட்ட, அம்புட்டுதான்... சொல்லிபுட்டேன்... ” என்று விரல் நீட்டி மிரட்டியவாறு பொரிந்து தள்ளினாள் பூங்கொடி.

அவள் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது...

அதைக்கண்டு ஏனோ அவனுக்கு கோபம் எள்ளவும் வரவில்லை...!  

இதுவே வேற யாராவது அவனிடம் விரல் நீட்டி பேசியிருந்தால், அடுத்த நொடி நீட்டுவதற்கு விரல் இருந்திருக்காது.

ஒரு வார்த்தை அதிகமாக பேசியிருந்தால், அவனை டேய் என்று அதிகாரமாக அழைத்து இருந்தால், அடுத்த வார்த்தை பேச நாக்கு இருந்திருக்காது..

ஆனால் இந்த சில்வண்டு, அவன் முகத்துக்கு நேராக விரல் நீட்டி பேசியதும், பேசியதோடு இல்லாமல் அவனை டா போட்டு மரியாதை இல்லாமல் அழைத்ததும் கண்டு பொங்கி எழுந்திருப்பான்

ஏனோ அவளிடம் கடுகளவும் கோபம் வரவில்லை. மாறாக அவளை இன்னுமாய் வெறுப்பேத்தி பார்க்கவே அவன் மனம் விளைந்தது.

அதனால் வாய்விட்டு சிரித்தவன்,

“என் கலருக்கு என்னவாம் ?  நானும் நம்ம தலைவர் ரஜினிகாந்த மாதிரிதான் இருக்கேனாக்கும்...” என்று புல்லட்டில் பிடித்திருந்த ஒரு கையை எடுத்து தன் முன்  பக்க நெற்றியில்  விழுந்திருந்த எண்ணை காணாத  பரட்டை முடியை ரஜினி ஸ்டைலில் கோதி விட்டவன், தன்  மீசையையும்  கம்பீரமாக நீவி  விட்டுக் கொண்டான் ராசய்யா.

“ஆமாமா...இந்த கெட்டப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” கழுத்தை நொடித்தாள் பூங்கொடி

“ஓஹோ..அப்ப வேற எதுல குறைச்சல்ங்கிற...சொல்லு...  எல்லாம் நிறைச்சிடலாம்...” என்று கல்மிஷமாக சிரிக்க,

“யோவ்... இப்ப எதுக்கு இந்த வெட்டி பேச்சு... ஒழுங்கா  உன் ஓட்ட புல்லட் ஐ ரோட்டை பார்த்து வேகமா ஓட்டு. கட்ட வண்டி கூட பாஸ்ட் ஆ போகுமாக்கும்...” மீண்டும் எரிச்சலோடு சிடுசிடுத்தாள் அந்த சில்வண்டு.  

“ஓட்ட புல்லட்டா...?  அடிப்பாவி... சொளையா ஒரு லட்சம் கொடுத்து வாங்கினது டி. போன மாசம்தான் டெலிவரி எடுத்தேன்...இதை பார்த்து ஓட்டப் புல்லட் ன்ற? “ எரிச்சலோடு முறைத்தான் ராசய்யா...

அவனை அவ்வளவு தூரம் முறைத்தும், கேவலமாக திட்டியும் பெரிதாக கண்டு கொள்ளாதவன்,  அவனுடையை புல்லட்டை பற்றி மட்டம் தட்டி பேசியதும் அவனுக்கு கோபம் வருவதை கண்டு கொண்டாள் பூங்கொடி.

பொதுவாக ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொன்றின் மீது பற்று அதிகமாக இருக்கும். அதன் மீது தங்கள் உயிரையே வைத்து இருப்பார்கள்.

அந்த காலத்தில் ரிஷிகள் எல்லாம் தங்கள் உயிரை  கிளி, குயில் போன்ற ஏதாவது ஒரு பறவையிடமோ, அல்லது ஏதாவது ஒரு விலங்கிடமோ விட்டு வைத்திருப்பார்களாம்.

அதற்கு ஏதாவது ஆகிவிட்டால் இவர்கள் உயிர் பிரிந்துவிடுமாம்.

பூங்கொடி கூட தன் வீட்டு ஆட்டுக்குட்டி சிவப்பி மேல உயிராக இருப்பாள். அவள் தங்கையோ, தம்பியோ அதை அடித்து விட்டாலோ, இல்லை விரட்டி விட்டாலோ அவ்வளவுதான். அவர்களை செமயாக கவனித்து விடுவாள்.

அதே மாதிரிதான் ராசய்யாவுக்கு இந்த புல்லட்டின் மீது உயிர் என்று கண்டு கொண்டவளின் முகம் பளிச்சிட்டது.

“வாடா வா... உன் புல்லட் ஐ சொன்னா உனக்கு கோபம் வருதா..இதுதான் உனக்கு உயிரா? இனிமேல் இதை வச்சே உன்னை ஆட்டி வைக்கிறேன்..பார்... ” என்று  உள்ளுக்குள் சிலிர்த்துக் கொண்டவள்

“பின்ன? எங்க வீட்ல இருந்து கிளம்பி அஞ்சு நிமிசம் ஆச்சு... இன்னும் அந்த பஸ்சை பிடிக்க முடியலை. பிடிக்கிறது என்ன? கண்ணுல கூட பார்க்க முடியலை. அப்படீனா உன் புல்லட் எவ்வளவு வேகம் போகுதுனு தெரியாதாக்கும்... “ என்று அவனை மட்டம் தட்டியவள், அதோடு விடாமல் 

“இந்த ஓட்ட புல்லட்டை வாங்கினதுக்கு, நல்லதா நாலு எருமை மாட்டை  வாங்கி மேச்சிருக்கலாம். இல்லையா ஒரு ட்ராக்டரையாவது வாங்கி ஓட்டியிருக்கலாம். லாபமாவது கிடைச்சிருக்கும்...”   மீண்டும் தன் உதட்டை  வளைத்து நக்கலாக, ஏளனமாக சிரித்தாள் பூங்கொடி.

அதைக்கேட்டு இன்னுமாய் கடுப்பானான் ராசய்யா.

“இங்க பாரு பூங்கொடி... என்னை எதுவேன சொல்லு.. ஆனா என் புல்லட்டை பத்தி மட்டும்  எதுவும் சொல்லாத....” என்று முறைக்க,

“ஹ்ம்ம்ம் நான் அப்படி சொல்லக்கூடாதுனா எங்க வேகமா ஓட்டு பார்க்கலாம்...”    உசுப்பேத்தினாள் அவனை.

அவள் கவலை அவளுக்கு.

ஏனோ அவன் பின்னால் உட்கார்ந்து செல்வதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

எவ்வளவுதான் முயன்று ரொம்பவும் தள்ளி அமர்ந்து இருந்தபொழுதும் ஏனோ இன்னுமாய் எரிச்சலாக இருந்தது.

“சீக்கிரம் பஸ்சை பிடித்துவிட்டால் அதன் பிறகு இவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு,  இப்படி ஊர்வலம் செல்லத் தேவையில்லை..” என்று எண்ணியவள் ராசய்யாவை வேகமாக ஓட்ட சொல்லி மறைமுகமாக தூண்டினாள்.

அவள் சீண்டியதற்கு அவனும் முறுக்கி கொண்டு தன் புல்லட்டின் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்க, பாய்ந்து சென்றது அவன் புல்லட்...!

திடீரென்று அவன் வேகமாக செல்லவும், அதோடு தார் போட்டிராத மண் ரோடு அது.

அவன் செல்லும் வேகத்திற்கு, வழியில் இருந்த பெரிய குழியில் புல்லட் இறங்கி ஏற, அதில் தடுமாறியவள் எவ்வளவுதான் அந்த புல்லட்டின் பக்கவாட்டு கைப்பிடியை கெட்டியாக இறுக்கி பிடித்து இருந்தாலும்,  அவள் பிடிமானம் நழுவி,  சறுக்கி  கொண்டு முன்னே சென்று அவன் முதுகில் மோதினாள்.

அவனின் பரந்து விரிந்த மார்பில் இடித்துக் கொண்டவளுக்கு பெரிய கருங்கல் பாறை மீது மோதிக் கொண்டதை போல இருந்தது.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆ...” என்று வலியில் முனகியவள், முன்பக்க நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க,  

“இப்ப எப்பூடி? இந்த வேகம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? “ என்று பின்பக்க கண்ணாடி வழியாக அவளை பார்த்து ராசய்யா நக்கலாக சிரித்தான்.

வலியில் இன்னுமாய் கோபம், வெறுப்பு, கசப்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து போட்டு காய்ச்சி எடுத்த கசாயத்தை குடித்தவளைப் போல முகத்தை சுளித்தவள் அவனை எரிக்கும் பார்த்து முறைத்தாள் பூங்கொடி.

அவனோ அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவன்

“என்ன கருவாச்சி... என்னமோ என் பக்கத்துல வந்தா என் கருப்பு உனக்கும் ஒட்டிக்கும்ங்கிற மாதிரி எட்டு மைல்லு தள்ளி உட்கார்ந்திருந்த...

இப்ப என்னடான்னா இப்படி வந்து என் மேல அட்டை மாதிரி ஒட்டிகிட்டு இருக்க? இதுதான் நீ வேகமா போக சொன்ன காரணமா? “ என்று கல்மிஷமாய்,  கோணலாக சிரிக்க, அப்பொழுதுதான் பெண்ணவளுக்கு மண்டையில் உறைத்தது.

அவன் சொன்ன மாதிரி இன்னுமே அவன் முதுகோடு ஒட்டிக்கொண்டுதான் இருந்தாள் பூங்கொடி. அவளின் கரமோ பிடிமானத்துக்காக அவன் சட்டை காலரை பற்றி இருந்தது.

அதைக்கண்டு உடனே அவசரமாக பதறியவள்,  வெடுக்கென்று அவன் சட்டையில் இருந்து தன் கையை உதறிக்கொண்டவள் உடனே வேகமாக நகர்ந்து பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அவளின் செய்கையை கண்டு மலர்ந்து சிரித்தான் ராசய்யா...

அதைக்கண்டவள் இன்னும் கடுப்பாகி,

“யோவ்... இப்ப எதுக்கு இந்த இளிப்பு இளிக்கிற? பொம்பள புள்ள,  மேல வந்து விழட்டும்னே நீ வேகமா ஓட்டி தொலச்சிருப்ப...” சிடுசிடுத்தாள் பூங்கொடி

“ஹா ஹா ஹா இந்த மாதிரி குறுக்கு வழியெல்லாம் எனக்கு தெரியாது மா...உன்னை என் பக்கத்துல கொண்டு வரணும்னா அதுக்கு நேரடியாவே செஞ்சிருவேன்...  என் வழி எப்பவும் தனி வழிதான்...” என்று ராசய்யா தன் மீசையை கம்பீரமாக நீவி விட்டுக்கொண்டு சிரிக்க,

“ஐய... ரொம்பத்தான்... “ என்று கழுத்தை நொடித்து நாக்கை துருத்தி ஒலுங்கு காட்டி முறைத்தவள்,

அப்பொழுதுதான் அவன் அணிந்திருந்த சட்டையை கவனித்தாள்.

அதுவும் அவள் பற்றி இருந்த இடம், அவள் இறுக்க பற்றியதால், லேசாக நூல் விட்டுபோய் கிழிந்து போகும் நிலையில் இருந்தது.

புல்லட்டுக்கும் அவன் போட்டிருக்கும் சட்டைக்கும் பொருத்தமே இல்லாமல் இருந்தது.

புல்லட்டை பார்க்க, பெரிய மைனர்  மாதிரி தோன்றினாலும் அவன் அணிந்திருக்கும் ஆடை எப்பொழுதுமே அலுக்கேறி, சாயம் வெளுத்து  கந்தலாகி போய்த்தான் இருக்கும்.

அவன் புல்லட்டை கவனிப்பதில் ஒரு பங்கு கூட தன்னை கவனிப்பதில் செலுத்த மாட்டான். அதை கவனித்த பூங்கொடி,

 

“ஆமா.. நல்லதா உன்கிட்ட ஒரு சட்டை கூட  இல்லையா? இம்புட்டு காசு செலவு பண்ணி இந்த ஓட்ட...” ஓட்ட புல்லட் என்று சொல்ல வந்தவள், அவன் கோபமாக முறைக்கவும் உடனே பாதியில் நிறுத்திக்கொண்டு

“இந்த புல்லட்டை எடுக்கும்பொழுது  கொஞ்சம் சட்டையும்  வாங்கி இருக்கலாம் இல்ல...” என்றாள் கண்டிக்கும் விதமாய்.  

“ஏன்?  இந்த சட்டைக்கு என்னவாம்? இந்த சட்டைக்கே நம்ம ஊர்  புள்ளைக எல்லாம்  என் பின்னால வருதுக. இன்னும் நல்லதா போட்டேனா,  ஹீரோ கணக்கா இருக்கேனு  இப்பவே கல்யாணம் கட்டிக்கலாம்னு   என் வீட்டு வாசல்ல வந்து வரிசையில  நிப்பாளுக..அதேன்..இந்த சட்டை...”  என்று தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் ராசய்யா...

“அப்பா முருகா... இந்த கருவாயன் அலப்பறை தாங்கலடா சாமி...” என்று மேல பார்த்து சொல்லி நக்கலாக சிரித்தவள், மீண்டும் அவனை பார்த்து

“ஆனாலும் இம்புட்டு தற்பெருமை ஆகாது யா..” என்று தன் உதட்டை இருகோட்டுக்கும் இழுத்து பரிகசித்தாள் பூங்கொடி

அதே நேரம் எட்டரை மணி பஸ் சற்று தொலைவில் செல்வதை கண்டு கொண்டவள்,

“ஐயோ பஸ்... பஸ்...  பஸ்...  அதோ போய்கிட்டிருக்கு... சீக்கிரம் போயா... பஸ்சை பிடிச்சிடலாம்..” என பரபரத்தாள் பூங்கொடி.

அதைக்கேட்டதும் அதுவரை வேகமாக சென்று கொண்டிருந்தவன்  இப்பொழுது வேகத்தை குறைத்தான் ராசய்யா.

அதைக்கண்டு அதிர்ந்தவள்

“ஹே... எதுக்கு வேகத்தை குறைக்கிற? “ பதட்டமானாள் பூங்கொடி

“ஹ்ம்ம்ம் பஸ்சை பிடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீல் பேசிக்கிடலாமா? “ அடக்கப்பட்ட சிரிப்புடன் புன்னகைத்தான் ராசய்யா

“என்ன டீல்? “ இன்னுமாய் பதட்டமானாள் பெண்ணவள்.

“ஹ்ம்ம்ம்ம் நீ என்னை மாமானு சொல்லு... அப்பதான் நான் வேகமா போவேன்..”  என்று செல்லமாக மிரட்டினான் ராசய்யா. அதைக்கேட்டு அதிர்ந்து போனாள் பூங்கொடி..

“என்னானானாது மாமா வா? டேய் கருவாயா... நீ என்ன?  என் அம்மா கூட பொறந்த தாய் மாமனா? இல்லை அத்தை மவன், மாமன் மவன் இப்படித்தான் ஏதாவது ஒன்னா?   உன்னை எதுக்கு நான் மாமானு கூப்பிடனும்? “  கழுத்தை நொடித்தாள் காரமாக முறைத்தவாறு.

“ஓய் கருவாச்சி...  ஒன்னுவிட்ட சொந்தத்துல நீ எனக்கு அத்த மவ  டி. ஏன் உன் ஆத்தா சொல்லலை? “  

“ஆமா...என் ஆத்தாவுக்கு வேலை பொழப்பு இல்ல பாரு...இந்த ஊர்ல இருக்கற ஒவ்வொரு வெட்டிப்பயலும் எனக்கு என்ன சொந்தம்னு விளக்கிகிட்டு  இருக்க?   

அதெல்லாம் ஒரு மண்ணும் சொல்லல.. நீயே சொல்லு... எப்படி ஒன்னுவிட்ட சொந்தமாம்?”  நக்கலாக முறைத்தாள் பூங்கொடி.

“ஹ்ம்ம்ம் என் தாத்தா இருந்தாரே... “

“ஆமாம் ஒரு காலத்துல இருந்தார். நீ பண்ற அட்டூழியத்தை எல்லாம் பார்க்க முடியாமதான மனுஷன் சீக்கிரம் மேல போக டிக்கெட் வாங்கிட்டாரு.... மேல சொல்லு...” என்று நக்கலாக சிரிக்க,  அவனும் அவளை முறைத்தபடி

“என் தாத்தாவோட பங்காளியோட ஒண்ணுவிட்ட தாத்தாவோட தங்கச்சி தான் உன்னோட ஒண்ணுவிட்ட அப்பத்தாவோட  அப்பத்தாவாம்... அப்ப நீ எனக்கு அத்த மவதான ? எப்புடி? “  இன்று சிரிக்க

“ஆங்....இது இன்னும் ஒண்ணுவிட்ட சொந்தம் இல்லை. ஒரு மூனு நாலு  விட்ட சொந்தம்.  இதெல்லாம் செல்லாது. நீ ஒருக்காலும் எனக்கு மாமா ஆக முடியாது.   சீக்கிரம் முறுக்குய்யா உன் வண்டிய ... பஸ்  போய்கிட்டு இருக்கு...” மீண்டும் அவசரபடுத்தினாள் பூங்கொடி.

“சை... இப்படி எல்லாம் இவனை கெஞ்சி கஷ்டப்படணும் னு தெரிந்திருந்தால், காலேஜ்க்கு நேரத்தோட கிளம்பி இருக்கலாம்.. எல்லாம் என் நேரம்... “ என்று  மனதுக்குள் நொந்து கொள்ள, அவளின் மனதை படித்தவனைப் போல ராசய்யாவும் அதையே சொன்னான்...

“ஏம்மா... இம்புட்டு பாடு... பேசாம நேரத்தோட காலேஜ்க்கு கிளம்பி இருக்கலாம் இல்ல... “ என்று கோணலாக சிரிக்க  

“ஹ்ம்ம்ம் உன்கூட இப்படி ஜோடி போட்டுகிட்டு, உன் ஓட்ட புல்லட்டில் ஊர்வலம் போகணும்னு ஆசை...அதான் வேணும்னே லேட்டாக்கினேன்...” மீண்டும் கூடை கூடையாய் நக்கல் கொட்டிக்கிடந்தது அவள் குரலில்.

ஆனால் அவள் சொல்லியதை கேட்டவன் கண்களோ பளிச்சிட்டு மின்னின... அவனின் இறுக்கமான, அழுத்தமான இதழ்களில் குறுநகை தவழ,

“அடி கள்ளி... இப்படி ஒரு ஆசையை மனசுல வச்சுகிட்டுத்தான் என்னை பார்த்து முறைச்சியா? சரி சரி..சீக்கிரம் வந்து உன் அப்பன் ஆத்தா கிட்ட பொண்ணு கேட்டு பரிசம் போட்டுடறேன்.

நீ தினைக்குமே இப்படி என்னோட ஜோடி போட்டுகிட்டு வரலாம்.....சந்தோஷமா செல்லம்...? “ என்று கோணலாக இளித்து வைக்க, அதைக் கண்டவளுக்கோ உடல் எல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.

“டேய் கருவாயா சும்மா என்னை கடுப்பேத்தாத... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு .... “ என்று பல்லை கடித்தாள் பூங்கொடி

“ஆத்திரத்துக்கு ? “  மீண்டும் அவளை சீண்டினாள் இதழ்க்கடையோரம் அடக்கப்பட்ட சிரிப்புடன் ராசய்யா.

“ஹ்ம்ம்ம் என் ஆத்தா நெல்லு குத்த வச்சிருக்கிற உலக்கையை எடுத்து உன் நடு மண்டையில நச்சுனு போட்டுடுவேன்...” முகம் சிவக்க, காது விடைக்க பொரிந்து தள்ளினாள் பூங்கொடி.

“ஹா ஹா ஹா அந்த உலக்கையை தூக்கி ஏன் செல்லம் கஷ்டப்படற? உன் ஆத்திரத்துக்கு இந்த மாமனை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்துடு. எல்லாம் சரியாப்போய்டும்...” கல்மிஷமாக சிரித்தான் ராசய்யா...

அதற்குமேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல், தன் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை பின்னால் தள்ளியவள், பின் தன் கை முஷ்டியை இறுக்கி, அவன் தலையில் நங் என்று ஓங்கி கொட்டினாள் பூங்கொடி.

அச்சோ  பாவம்...அவள் கைதான் பயங்கரமாக வலித்தது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆ என்று மீண்டும் கையை உதறிக்கொண்டாள். அவனோ இன்னுமே உல்லாசமாய் சிரித்துக்கொண்டு அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டியவன்

என்ன கருவாச்சி...பெரிய பொம்பள ரௌடி மாதிரி பில்டப் கொடுத்த...நீ உன் கையை முறுக்குனத பார்த்தா நாலு பேரை அடிச்சு துவைக்கிற பில்டப் வந்தது.

ஹா ஹா ஹா  என்னை கொட்டவே உனக்கு தெரியல. நீயெல்லாம்... பெரிய வீராங்கனைனு பீத்திக்காத...எப்படித்தான் உன்னைய வச்சு அத்தையும் மாமனும் சமாளிக்கிறாய்ங்களோ?” மீண்டும் நக்கலாக சிரித்தான் ராசய்யா.  

“ஹலோ... அது என் பாடு. அவங்க பாடு... அந்த பாட்டை  நான் பட்டுக்கிறேன். நீ முதலில் அந்த பஸ்சை புடி...”  என்று மீண்டும் முறைக்க,  அவனோ  மீண்டும் வளவளத்தவாறு மெதுவாக,  மிக மெதுவாக ஓட்டினான்.

அதைக்கண்டு எரிச்சலின்  உச்சகட்டத்திற்கு சென்றாள் பூங்கொடி.    

“இல்ல. இவன் சரிபட்டு வரமாட்டான்...என்னை அவன் புல்லட்டில் உட்கார வச்சுகிட்டு முசிறி வரைக்குமே போவதா திட்டம் போட்டு வச்சிருப்பான்... திருட்டுப்பய...இதை தொடரக்கூடாது..” என்று தலையை சுலுப்பிக் கொண்டவள்,

“டேய் கருவாயா.. இப்ப மட்டும் நீ உன்  ஓட்ட புல்லட்டை வேகமாக  ஓட்டல.  நான் இப்படியே  எட்டி குதுச்சிருவேன். அப்புறம் எனக்கு ஏதாவது சேதாரம் ஆச்சுனா அதுக்கு நீதான் பொறுப்பு.

என் ஆத்தா சிலம்பா பத்தி தெரியுமில்ல...புள்ளைய பத்திரமா கூட்டிகிட்டு போகலைனு உன்னை நார் நாரா கிழிச்சு தொங்க விட்டுடும்... இப்பவே சொல்லிட்டேன்... ஒழுங்கா வேகமா போ...” என்று மீண்டும் விரல் நீட்டி எச்சரிக்க,

“ஹா ஹா ஹா  இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம் கருவாச்சி...” என்று ராசய்யாவும் நக்கலாக சிரிக்க,

“பூச்சாண்டி எல்லாம் இல்ல.. நிஜமாகவே எட்டி குதிச்சிடுவேன்.. ஏன்னா இந்த பூங்கொடி எப்பவும்    செய்யறதைத் தான் சொல்வா..சொல்றதைத்தான் செய்வா...இப்ப பார்க்கறியா ? ”  என்று மிரட்டியவள், புல்லட்டில் இருந்து எழ முயற்சிக்க,    அதில் கலவரமானவன்

“இந்த வாய்ச்சவடால்க்கு ஒன்னும் குறைச்சல்  இல்லடி...  என்று முறைத்தவன்,  புல்லட்டின்  ஆக்சிலரேட்டரை  வேகமாக முறுக்க, அடுத்த கணம் அவன் புல்லட் சீறிப்பாய, அடுத்த சில நிமிடத்தில் பேருந்தை   ஓவர்டேக் பண்ணி இருந்தான் ராசய்யா.  

பேருந்துக்கு முன்னால் சென்றவன்,  நடுரோட்டில் தன் புல்லட்டை நிறுத்திவிட்டு கை காட்ட,  அந்த பேருந்தின் ஓட்டுநரும் உடனே பிரேக் இட்டு பேருந்தை  நிறுத்தினார்.  

அவ்வளவுதான் விட்டால் போதும் என்று புல்லட்டில் இருந்து எட்டி குதித்தவள்  பேருந்துக்குள் உள்ளே ஏறிக்கொண்டாள் பூங்கொடி.

அவளைத் தொடர்ந்து பேருந்தின் உள்ளே ஏறிய ராசய்யா,  ஓட்டுநரிடம் சென்றவன்

“என்னண்ணே...  நம்ம ஊரு புள்ளைக எவ்வளவு கஷ்டபட்டு டவுனுக்கு படிக்க போகுதுக.  அதுங்க  வர்ரதுக்கு முன்ன பின்ன ஆச்சுன்னா ரெண்டு நிமிஷம் காத்து இருக்கலாம் இல்ல. அதுக்குள்ள ஏன் பஸ்சை  கிளப்பிக்கிட்டு ஓடுறீங்க? “  ஓட்டுநரை பார்த்து முறைத்தான்  ராசய்யா...  

“இல்ல ராசு... ஏற்கனவே ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணி தான் பார்த்தேன்...பூங்கொடி வரலையா... ஒருவேளை இன்னைக்கு காலேஜுக்கு லீவு போட்டுச்சு போலன்னு கிளம்பிட்டேன்... “ என்றான் தாழ்ந்த,  தன்மையான குரலில்.

பின்ன?  ஒரு வாரம் முன்பு,  வயதான மூதாட்டி ஒருவர்,  பேருந்து நிறுத்தத்தில் இல்லாமல் பாதி வழியில் கையை நீட்டி பேருந்தை நிறுத்த சொல்ல, இந்த ஓட்டுநரும்  வழியில் எல்லாம் பஸ்சை நிறுத்த முடியாது என்று தலையை ஆட்டி மறுத்து விட்டு சென்றுவிட்டார்

அதை தெரிந்து கொண்ட ராசய்யா அடுத்த நாள் ஊருக்குள் வந்த   அந்த ஓட்டுநரை நன்றாக கவனித்து விட்டான்.  

அவன் கொடுத்த ஒரு  அறைக்கு இன்னுமே அவரின் கடவாய் பற்கள் பயந்து நடுங்கி கொண்டிருந்தன.

ராசய்யா மிரட்டிய மிரட்டலும், இன்னுமே காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருக்க,  அதனாலேயே இப்பொழுது ராசய்யாவை பார்த்தவுடனேயே பேருந்தை நிறுத்தி விட்டார்.

ராசய்யா கேட்டதுக்கும் பயபக்தியுடன் பதில் அளித்தார்.  

“சரி சரி... இனிமேல்  இன்னும் ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ணி கூட்டிட்டு போங்க... அப்புறம்  எல்லாரையும் பொறுப்பா  கூட்டிட்டு போங்க...வரட்டா....” என்று அவர் முதுகில் செல்லமாக தட்டியவன், திரும்பி பூங்கொடியை  ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழ இறங்கி விட்டான் ராசய்யா.  

பூங்கொடிக்கு  அப்பொழுதுதான் பெரும் நிம்மதியாக இருந்தது.

“எப்படியோ அந்த ரௌடிகிட்ட இருந்து தப்பிச்சாச்சு....இனி ஜென்மத்துக்கும் அவன் புல்லட்டில் ஏறக்கூடாது... அவன் சங்காத்தமே எனக்கு வேண்டாம்... அவன் பக்கமே போகக்கூடாது...அவன் முகத்திலயே முழிக்கக்கூடாது...”  என்று உறுதி செய்து கொண்டாள் பூங்கொடி...

யாருடைய அருகாமை அவளுக்கு  அருவருப்பு மூட்டியதோ? யாருடைய சங்காத்தமே வேண்டாம் என்று வெறுத்தாளோ அவனுடனேயே அவளின் வாழ்க்கை பிணைக்கப்பட போவதும், அவன் முகத்திலயே தினம் தினம் முழிக்கப் போவதையும் அறியவில்லை அந்த பேதைப்பெண்..!

தான் போட்டு வைத்த ஆட்டம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது என வில்லன் சிரிப்பை சிரித்துக் கொண்டார் மதிப்பிற்குரிய விதியார்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!