என்னுயிர் கருவாச்சி-6
அத்தியாயம்-6
“அடி செருப்பால... நெனப்புதான் பொழப்ப
கெடுத்துச்சாம்..! உன் அக்கா புருஷன் மாதிரி
வேலைக்கார மாப்பிள்ளை வேணும்னா, அதுக்கு நீயும் அவள
மாதிரி சிவப்பா பொறந்திருக்கணும் டி.
அவ அழக பார்த்து மயங்கித்தான நம்ம
மாப்பிள்ள தேடி வந்து கட்டிக்கிட்டு போனாரு. ஆனா நீ அப்படி இல்லையே... உன்
கலருக்கு எந்த ஆபிசர் மாப்பிள்ளை தேடி வரப் போறான்.
எல்லாம் நம்ம ஊரை சுத்தி இருக்கிற எதாவது
ஒடு பட்டி தொட்டியில இருந்து குப்பனையோ , சுப்பனையோ புடிச்சாதான்
உண்டு... “ என்று சிலம்பாயி நக்கலாக சொல்ல, அதைக்கேட்ட பூங்கொடியின் முகத்தில் வேதனை படர்ந்தது.
அதுவரை மறந்திருந்த அவள் நிறத்தை
பற்றிய தாழ்வு மனப்பான்மை மீண்டும் தலை தூக்கியது.
“எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகணும்? ஒரே தாயின் வயித்திலதான பிறந்தேன். அந்த வெள்ளச்சி பொற்கொடி மாதிரியோ, இந்த குட்டச்சி மலரு மாதிரியோ பொறந்து
தொலச்சிருக்க கூடாதா? “ என்று உள்ளுக்குள் பொறும, சிலம்பாவும் அதையே சொல்லி ஆதங்கப் பட்டார்.
“பொறந்ததும் பொறந்த உன் அக்கா
மாதிரி என்னைப் போல பிறந்திருக்க கூடாதா? உன் அப்பன் கலர்ல கருகருனு பொறந்து வச்சிருக்க.
ஹ்ம்ம்ம்ம் உன்னை கரையேத்தங்கேட்டி என்ன பாடு படப் போறமோ...”
என்று பெருமூச்சு விட்டு, நீட்டி
முழக்க, அதுவரை இருந்த வேதனை மறந்து புசுபுசுவென்று கோபம் பொங்கி வந்தது பூங்கொடிக்கு.
“ஆமா... நானா எனக்கு இந்த கலர்தான் வேணும்னு கேட்டு வாங்கி
பொறந்தேன்?. நீதானே என்ன பெத்து போட்ட. அவளுங்க ரெண்டு பேரையும் மட்டும் செவப்பா
பெத்து போட்டுட்டு என்ன மட்டும் எதுக்கு கருப்பா பெத்து போட்ட? “ என்று
சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு வந்தாள் பூங்கொடி.
இதுவரை அமைதியாக நடந்து கொண்டிருந்த
உள்நாட்டு பூசல் இப்பொழுது பெரிய சண்டையாக மையம் கொள்வதைக் கண்ட தணிகாசலம் உடனே பஞ்சாயத்துக்கு
வந்தார்.
“விடுடா பாப்பா. எல்லாருமே உன் ஆத்தா கலர்ல இருந்துட்டா என்ன மாதிரி யாரு இருக்கறதாம்?. அதனாலதான் உன் அம்மா, புருஷன் மேல இருக்குற பாசத்துல
என்ன மாதிரியே புள்ள வேணும்னு வேண்டிக்கிட்டாளாம்.
அதுதான் நீ என்ன மாதிரி பொறந்திருக்க... “ என்று சற்று தள்ளி
வேலை செய்து கொண்டிருந்த தணிகாசலம் சிரித்தபடி, தலையில்
கட்டியிருந்த முண்டாசை கழற்றியபடி அங்கு வந்தார்.
அப்பொழுதுதான் தன் தந்தையை
உற்றுப்பார்த்தாள் பூங்கொடி.
அவளைப் போலவே கருப்பாக இருந்தார். ஆனாலும்
அந்த கருப்புதான் அவருக்கு அழகாக இருந்தது. சட்டையில்லாமல், உழைத்து உழைத்து உரமேறிய தேகம். அவரை கண்டதும் அவளுக்கு வியப்பாக இருந்தது.
இந்த வயதிலும் எவ்வளவு திடகாத்திரமாக
இருக்கிறார்..! ஒத்தை ஆளாக வயலில் இறங்கி எல்லா வேலையும் செய்வார். இன்றைய
இளைஞர்கள் ஒரு நெல்லு மூட்டையை தூக்க முடியாமல் தினறுவார்கள்.
ஆனால் தணிகாசலம் அசால்ட்டாக தூக்கி தன்
முதுகில் சுமந்து கொண்டு செல்வார்.
ஒரு நொடி தன் தந்தையை ரசித்து பார்த்தவள், மீண்டும் சற்றுமுன் தன் அன்னையிடம் போட்ட சண்டை
நினைவு வர, உடனே தலையை சிலுப்பிக் கொண்டவள்,
“பா... நீ சொல்றதனாலதான் உன்
பொண்டாட்டியை போனா போகுதுன்னு விட்டு வைக்கிறேன். இல்லைனா நான் கருப்பா
இருக்கேன் னு சொன்னதுக்கு மண்டையை பொழந்திருப்பேன்...” என்று முறைத்தாள் தன் அன்னையைப்
பார்த்து.
“வாடி...அத ஒன்னுதான் செய்யலை.
அதையும் செஞ்சுப்புடு...ஒரு நாள் வேலை செய்ய கூப்பிட்டா அப்படி வலிக்குது...
தினைக்கும் இந்த வயல்லயே வெந்து சாகற
எங்களை எல்லாம் உன் கண்ணுக்கே தெரியாது. இனிமேல் வா...வாரம் ஒருநாள் செய்யற இட்லி
தோசையும் கட்டு பண்ணிட்டு தினைக்கும் கம்மங்கூலா ஊத்தறேன்...”
என்று பொரிந்து தள்ள, தன்
அக்கா பாட்டு வாங்குவதை கண்டு தன்னை மறந்து களுக் என்று கிளுக்கி சிரித்து
வைத்தாள் மலர்க்கொடி.
அவளுமே கையில் ஒரு கொத்தை
வைத்துக்கொண்டு அடுத்த வரிசையில் பாத்தியை தோண்டிக் கொண்டிருந்தாள்.
மூன்றாவது மகளின் சிரிப்பை கேட்ட
சிலம்பாயி, திரும்பி பார்த்து விட்டு, மீண்டும் தன்
அர்ச்சனையை தொடர்ந்தாள்.
“அடியே... அங்க பார்... உன் எச்ச பாலை
குடிச்சு வளர்ந்தவ...உன்னை விட ஏழு வயசு
சின்னவ. அவ எவ்வளவு பொறுப்பா வேலை செய்யறா? அவளை பாத்தாவது கத்துக்க..”
என்று முறைக்க, பூங்கொடியும்
தன் தங்கையை வெட்டவா குத்தவா என்ற லுக்கில்
முறைத்து வைத்தாள்.
“அடியே... குள்ள வாத்து... எல்லாம் உன்னால தான் டி. நீ எதுக்கு இந்த
வேலைக்கு வந்த. என்னமோ நீ வந்துதான் இந்த
ஏக்கருக்கே பாத்தி தோண்டி கிழிக்கிற மாதிரி பில்டப்...” என்று பொரிந்து தள்ளினாள்
பூங்கொடி.
தன் அன்னை மீது இருந்த கோபத்தை
எல்லாம் இப்பொழுது தங்கை மீது திருப்பி இருந்தாள் பூங்கொடி.
நல்ல வேளையாக சிலம்பாயி அங்கே
இருந்ததால் தப்பித்தாள் மலர்க்கொடி.
இல்லையென்றால் பேச்சோடு நங் கென்று ஒடு குட்டும் விழுந்திருக்கும் மலர்க்கொடிக்கு...
“அம்மா பாவம் இல்லக்கா...அதுதான்
ஒத்தாசைக்கு நானும் வேலை செய்யறேன்...” தயக்கத்துடன் பாவமாக சொன்னாள் சிறியவள்.
“ஆமாமா... நீ ஒத்தாசைக்கு
வந்துதான் இந்த ஒரு ஏக்கர் மரத்துக்கும் உரம் வைக்க முடியும் பாரு...” முறைத்தாள்
பூங்கொடி
“ஏன் முடியாதா? ராமர்
இலங்கைக்கு பாலம் கட்ட, அணிப்பிள்ளையும் தன்னால முடிஞ்ச உதவிய செஞ்சதுதானே...
அதனாலதான் ராமர் அதைபாராட்டி, முதுகில் தடவிக் கொடுக்கவும் அது முதுகுல மூனு
கோடு வந்துச்சுனு நீதானே எனக்கு கதை சொன்ன...
அந்த அணிப்பிள்ளை ராமருக்கு உதவின
மாதிரி இந்த மலர்பிள்ளை இந்த சிலம்பாவுக்கு உதவறேன்... எனக்கு முடிஞ்ச வேலையை
செய்யறேன்...” என்று சிரித்தபடி பெரிய மனுஷியாக சொல்ல,
“அப்படி சொல்லுடி என் ராசாத்தி...
நீதான்டி என் தங்கம்...உன் அக்காவுக்கு பதிலா நீ முதல்ல பொறந்திருக்க கூடாதா...என்
பாதி சும கொறஞ்சு போயிருக்கும். இவளோட
என்னால மல்லு கட்ட முடியல...”
என்று முன்னால் வந்து தன் சிறிய மகளை
தூக்கிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்லம் கொஞ்சினார் சிலம்பாயி.
“அம்மா நானு... “ என்று எங்கிருந்தோ
ஓடி வந்தான் கடைக்குட்டி அன்பரசன்.
அதுவரை இங்கு நடந்து கொண்டிருக்கும்
சண்டையை கண்டு கொள்ளாதவன், ஏதோ ஒரு
பட்டாம்பூச்சியை பிடிக்க, அதன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தவன், தன் அன்னை தன் அக்காவை
தூக்கி கொஞ்சுவதை கண்டவன், துரத்தி சென்ற பட்டாம்பூச்சியை
மறந்துவிட்டு இவர்களை நோக்கி ஓடி வந்தான்.
காலில் செருப்பு இல்லாமல், ஆங்காங்கே இருக்கும் மண் கட்டிகளின் நடுவில்
ஓடி வர, ஒரு பெரிய கட்டி தட்டிவிட்டு அக்கா... என்று அலறியவாறு தடுக்கி கீழ விழுந்தான்.
அதைக்கண்டதும் தன் அன்னையை விட
முதலில் பதறிய பூங்கொடி ,
“டேய் அன்பு...பாத்துடா...” என்று கத்தியவாறு கையில் இருந்த
கொத்தை கீழ போட்டு விட்டு ஓடிச்சென்று அவனை வாரி எடுத்து தன்னோடு சேர்த்து
அணைத்துக் கொண்டாள் பூங்கொடி.
அவள் கண்களில் நீர் திரண்டிருக்க, அதைக்கண்ட சிறியவன் நெகிழ்ந்து போய்,
“எனக்கு ஒன்னும் இல்லக்கா... நான்
பிக் பாய்... ஒன்னுமே ஆகல…எங்கயும் வலிக்கல...நீ அழுவாத...” என்று தன் வலியை
மறைத்துக்கொண்டு புன்னகைத்தவன், பூங்கொடியின்
கன்னத்தில் வழிந்த கண்ணீரை பிஞ்சு
கரத்தால் துடைத்து விட்டான்.
அவளும் சிரித்தபடி அவன் கன்னத்தில்
முத்தமிட்டு, சற்றாய் குனிந்து பார்க்க, அவன் முட்டிக்காலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
கீழ விழுந்ததில் முட்டி , அங்கிருந்த மண் கட்டியில் இடித்திருக்க, ரத்தம் வந்து கொண்டிருந்தது.
அதைக்கண்ட பூங்கொடி பதறி, அவனை கீழ இறக்கி விட்டவள், கன்னாறில் கிடந்த தண்ணியை கையில்
அள்ளி, அவன் முழங்காலை கழுவி, அவசரமாக தேடி பச்சிலையை பறித்து அதை
உள்ளங்கையில் வைத்து தேய்த்து அதில் இருந்து வந்த சாறை காயம் பட்ட இடத்தில்
விட்டாள்.
அதன் எரிச்சலில் ஆஆஆ வென்று அலறினான்
இளையவன்.
அவனை தன் இடையோடு கட்டிக்கொண்டு
“ஒன்னும் இல்லடா செல்லம்...சீக்கிரம் காயம் சரியாகத்தான் இந்த
மருந்து...” என்று அவன் தலையை
வாஞ்சையுடன் தடவிக் கொடுக்க, தன் அக்காவின்
பாசத்தில் வலியை மறந்து சிரித்தான் அன்பரசன்.
அவர்களின் பாசப்பிணைப்பை கண்டு
பூரித்து போயினர் பெரியவர்கள் இருவரும்.
அவன் அடிபட்டதும், தாயான சிலம்பாயிக்கு கூட பதறவில்லை. பிள்ளைகள்
கீழ விழுந்து அடிபடுவது எல்லாம் சகஜம் என்பதைப்போல நின்றிருக்க, அவருக்கு பதிலாக பூங்கொடிதான் பதறிப்போனாள்.
அதோடு அவனும் கீழ விழுந்ததும் அம்மா
என்று அலறாமல் அக்கா என்று அலறியதைக்கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.
அவனை அப்படி பாத்து பாத்து வளர்த்த
தன் இரண்டாவது மகளை கனிவுடன் பார்த்தார் சிலம்பாயி.
ஆனாலும் அவளிடம் கொஞ்சம் இறங்கி
வந்தாலும் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவாள் என்பதால், உடனே தன் பார்வையை மாற்றிக்கொண்டு தன்னை
கடுமையாக்கிக்கொண்டவர்,
இப்பொழுது மலர்க்கொடியை கீழ இறக்கிவிட்டு, கீழ
விழுந்த தன் மகனை அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.
“ஏன்டா அவசரத்துக்கு பொறந்தவனே...பாத்து
ஓடி வரமாட்ட? இது என்ன நம்ம வீதியா? வழியில கட்டி கெடக்கும்னு தெரியாது...” என்று பாட்டை ஆரம்பிக்க,
“அப்பா...உன் பொண்டாட்டி வாயை கொஞ்சம்
மூடச்சொல்லுங்க...அவனே அடிபட்ட வலியில்
இருக்கிறான். இவங்க வேற இப்பத்தான் திட்டுவாங்க...” என்று தன் அன்னையை பார்த்து
முறைத்தவள்,
“நீ வாடா கண்ணா...அக்கா கூட ஹெல்ப்
பண்ணு...” என்று அவனையும் தன்னோடு வைத்துக்கொண்டாள் பூங்கொடி.
அதற்கு பின் முக்கலும், முனகலும், முறைப்பும், கடுப்பும், பேச்சும் சிரிப்புமாக வேலையை தொடர்ந்தனர்.
பாத்தியை பறித்துக்கொண்டே சற்று தூரம்
சென்ற பிறகு , அன்பரசன் உடன் இல்லை என்பதை
உணர்ந்த பூங்கொடி, திரும்பி பார்க்க, அவள்
விட்டு சென்ற இடத்தில் இருந்த ஒரு சிறிய வாழைக்கன்னை , சுற்றிலும்
பாத்தியை நோண்டிக் கொண்டிருந்தான்
அன்பரசன்.
அதைக்கண்டு தன்னை மறந்து பக்கென்று
சிரித்துவிட்டாள் பூங்கொடி.
வேகமாக தன் தம்பியிடம் வந்தவள் .
“டேய் அன்பு... நீ குழி தோன்ற வேகத்தை பாத்தால், இந்த வாழைக் கன்னுக்கு உரம் வைக்க தோன்ற மாதிரி இல்ல. ஏனோ வயக்காட்டு நடுவுல கிணறு வெட்ட தோண்டற மாதிரி
இருக்கு. பாத்துடா...தண்ணி எதுவும் பொத்துக்கிட்டு வந்திடப்போகுது...” என்று சிரித்தாள் பூங்கொடி
அப்பொழுதுதான் அருகில் தன் அக்கா
தோண்டியிருந்த பாத்தியை பார்த்தவன்
“ஹீ
ஹீ ஹீ ஆமாம் இல்ல. இம்புட்டு ஆழம் தோண்டக் கூடாதா...” என்று அசடு வழிய,
அவன் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தாள் பூங்கொடி.
அதே நேரம் அங்கே ட்ராக்டர் வரும் ஓசை கேட்க, அனைவரும் நிமிர்ந்து பார்த்தனர்.
அந்த ட்ராக்டரை ஓட்டிக்கொண்டு வந்து இருந்தான்
ராசய்யா..!
வயக்காட்டுக்கு உரம் வைக்க, இன்னும்
கொஞ்சம் உரமூட்டை தேவையாக இருக்க, தணிகாசலம், ராசய்யா விடம் உரத்தை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி கேட்டிருந்தார்.
ட்ராக்டரை செர்விஸ் செய்ய, முசிறிக்கு சென்றவன்,
அப்படியே தணிகாசலம் சொன்ன மாதிரி உர மூட்டையை வாங்கி வந்திருந்தான்.
அவனைக் கண்டதும் உர மூட்டையை இறக்குவதற்காக தணிகாசலம் அங்கு விரைந்தார்.
ட்ராக்டரை கண்டதும் அன்பரசனும் தன் கையில் பிடித்திருந்த கொத்தை அப்படியே போட்டுவிட்டு, தன்
தந்தையின் பின்னால் ஓடினான்.
அவன் ட்ராக்டரில் ஏறத்தான் ஓடுகிறான்
என்று கண்டு கொண்ட பூங்கொடியின் தங்கை மலர்க்கொடியும், தானும்
ட்ராக்டரில் ஏறி விடவேண்டும். இல்லையென்றால் இந்த வாண்டு வந்து ட்ராக்டரில்
போனது அப்படி இருந்தது..இப்படி இருந்தது என்று தன்னிடம் பீத்திக்கொண்டு, பெருமை அடித்துக் கொள்வான்.
அதைக் கேட்கும் பொழுது அவளுக்கு
ஏக்கமாக இருக்கும். அதனாலயே இந்த முறை அவளும் அந்த ட்ராக்டரில் ஏறி பாத்துவிட
வேண்டும் என்ற ஆசையில்
“டேய்.. நில்லுடா... ஓடாத…முன்ன மாதிரி கீழ விழுந்திடுவ...” என்று கத்தியவாறு தன் தம்பியை பிடிப்பதாக போக்கு காட்டி ட்ராக்டரை நோக்கி ஓடினாள் மலர்க்கொடி..!
Comments
Post a Comment