என்னுயிர் கருவாச்சி-7

 


அத்தியாயம்-7

வாழைக்காட்டை ஒட்டி இருந்த காலி நிலத்தில், ட்ராக்டரை நிறுத்தியவன், எஞ்சினை அணைத்துவிட்டு, ட்ராக்டரில் இருந்து எட்டிக் குதித்து நின்றான் ராசய்யா.

நின்றவன் பார்வை அவசரமாக சுழல, பருவப்பெண்ணின் வனப்புடன் செழித்து வளர்ந்து இருந்த வாழைமரங்களுக்கு நடுவில், இன்னொரு குமரியாய்  நின்றிருந்த பூங்கொடியை   கண்டு கொண்டான்.

அங்கே அவளை  கண்டதும் ஒரு நொடி அவன் புருவங்கள் ஆச்சர்யத்தில் சுருங்கி விரிந்தன. அன்று பேருந்தை பிடிக்க அழைத்து சென்ற பொழுது பார்த்ததுதான். அதற்கு பிறகு இன்றுதான் பார்க்கிறான்.

அவளைக்கண்டதும் அதுவரை இறுகிக்கிடந்த அவனின் அழுத்தமான இதழ்களில் குறுநகை தானாக வந்து ஒட்டிக்கொண்டது.

அன்றைக்கு என்று பாவாடை சட்டை அணிந்திருந்தாள் பூங்கொடி. அதுவும் பாவாடை மட்டும்தான் அவளுடையது. அவள் மேலே அணிந்திருந்த சட்டை அவள் தந்தை உடையது.

அவரே எப்பயாவது டவுனுக்கு போகும்போதும், இல்லையென்றால் உள்ளூரில் ஏதாவது விஷேசம் என்றால் மட்டும் தான் மேல் சட்டை போட்டுக்கொள்வார். இல்லையென்றால் வெற்று உடல்தான்.

அதனால் ரொம்ப நாளாக மடித்து வச்சு, இத்துப் போன தன் தந்தையின் சட்டையை எடுத்து போட்டுக்கொள்வாள் பூங்கொடி

அவளிடமும் சட்டைகள் சில இருந்தாலும் ஏனோ அவள் தந்தையின் சட்டையை அணியும்பொழுது அப்படி ஒரு இதம் பரவும் அவள் உள்ளே. அவள் தந்தையின் உழைத்த வியர்வை,  துவைத்து மடித்து வைத்திருக்கும்  சட்டையிலும் நிறைந்து இருக்கும்

இன்றும் அந்த பாவாடை சட்டையில் தான் நின்றிருந்தாள் பூங்கொடி.

கருநாகம் போன்று நீண்டு தொங்கிய  ஜடையை சுருட்டி கொண்டையாக போட்டிருந்தவள், தலையில் வெய்யில் படாமலிக்க துண்டால் மண்டக்காடு கட்டிக்கொண்டு கையில் கொத்துடன் நின்றிருந்தவள், ட்ராக்டரில் இருந்து இறங்கி நின்றிருந்தவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள் பூங்கொடி.

வேலை செய்யும்பொழுது கால் தடுக்காமல் இருப்பதற்காக,  பாவாடையை மேல கொஞ்சம் தூக்கி சொருகி இருந்தாள்.  

அணிந்திருந்த சட்டையும் கொஞ்சமாக மேல ஏறி இருக்க, வெள்ளிக்கொலுசு போட்டிருந்த கெண்டைக்காலும்,  அவளின்  இடுப்பு பகுதியும் அவன் பார்வைக்கு காட்சியளித்தது.  

இறங்கி நின்றிருந்தவன், தன்னை முறைத்தபடி நின்றிருந்தவளையும், அவளின் தோற்றத்தையும் ஆர்வமாக பார்த்து வைத்தவன், பார்வை  இப்பொழுது நேராக அவளின் இடுப்புக்கு செல்ல, மாநிறமாக இருந்தாலும் கொஞ்சமும் சதை பிடிப்பில்லாமல் சிக் என்று இருந்த அவளின் மெல்லிய இடையில் குத்திட்டு நின்றது அவன் விழிகள்.

அனிச்சையாய் நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வை சென்று நின்ற இடத்தை கண்டதும் திடுக்கிட்டவள், அவசரமாக தன் சட்டையை கீழ இழுத்து விட்டுக் கொண்டு, மேல ஏறி இருந்த பாவாடையையும் கீழ இறக்கி விட்டுக் கொண்டாள்.

சை...எப்படி பார்த்து வைக்கிறான்... முழியப்பாரு...அப்படியே திருடன் முழி...இவன் முகத்துலயே முழிக்க கூடாதுனு பார்த்தா,  தானா  தேடி வந்து நிக்கிறான்...ரௌவுடிப்பய...” என்று உள்ளுக்குள் அவனை திட்டி வறுத்தெடுத்தவள், வெடுக்கென்று தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளும் அன்று அவளை தன் புல்லட்டில் ஏற்றிக்கொண்டு பேருந்தில் விட்ட நாளுக்கு பிறகு இன்றுதான் பார்க்கிறாள்.

ஏனோ அவனை பார்க்கும்பொழுதெல்லாம் அவளுக்கு பற்றிக்கொண்டு வரும். அது ஏன் என்ற காரணம்தான் தெரியவில்லை.

ஒரு சிலரை பார்க்கும் பொழுதே நமக்கு பிடிக்காது. காரணம் இல்லாமல் எரிச்சல் வரும். அந்த கேட்டகரிதான் ராசய்யா அவளுக்கு.

கூடவே அவளை பார்க்கும் பொழுதெல்லாம் கருவாச்சி என்று அழைத்து கிண்டல் செய்வது வேறு எரியற நெருப்பில் எண்ணையை ஊத்தின மாதிரி அவன் மீதான அவளின் வெறுப்பை இன்னுமாய் அதிகமாக்கி வைத்திருந்தது.

மொத்தத்தில் இந்த உலகத்திலயே அவளுக்கு பிடிக்காத முதலும் கடைசியுமான ஒரே ஆள் ராசய்யா...!

ன் கள்ளப்பார்வையை பூங்கொடி கண்டு கொண்டதை கண்டு கொண்ட ராசய்யாவும் லேசாக வெட்கப்பட்டு,  அசட்டு சிரிப்பை சிரித்தவன், தன் பின்னந்தலையை விரல்களால் கோதி விட்டுக்கொண்டு ட்ராக்டரில் இருந்த உர மூட்டைகளை கீழ இறக்க ஆரம்பித்தான்.

அவனை முறைத்து மறுபக்கம் திரும்பிய பூங்கொடி,  அடுத்த நொடி அதிர்ந்து போனாள்.  

பூங்கொடிக்கு பக்கவாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோமதி, வேலையை விட்டுவிட்டு ராசய்யாவையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

கோமதி - பூங்கொடியின்  ப்ரிய தோழி..!  

சிறு வயதில் இருந்து இருவரும் ஒன்றாகத்தான் படித்தார்கள்.  பத்தாம் வகுப்பு வரை படித்தவள், அதற்கு மேல் படிக்க,  படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய்விட,  படிப்பை தொடராமல் வீட்டில் இருக்கிறாள்.

அவ்வப்பொழுது வயல் வேலைகளுக்கு சென்று வருகிறாள். பெரும்பாலும் தணிகாசலத்தின்  வயலிலயே தினமும் வேலை இருக்க, அவளும் இங்கு வந்து விடுவாள்.

தன் மகளைப் போல விதண்டாவாதம் பண்ணாமல், அமைதியாய், சொல்லும் வேலையை கொஞ்சமும் முகம் சுளிக்காமல் செய்யும் கோமதியை சிலம்பாயிக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அதனால் எப்பொழுதும் அவளை தன் கை வேலைக்கு அழைத்துக் கொள்வார்.

*****  

கோமதி,  ராசய்யாவையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க, அதைக்கண்டு அதிர்ந்த பூங்கொடி அவள் தலையில் நங் என்று கொட்டினாள்.

அதில் திடுக்கிட்டு விழித்துக் கொண்ட கோமதியும், தன் தோழியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க,  

“ஏன் டி...எரும...உனக்கு சைட் அடிக்க வேற ஆளே கிடைக்கலையா? போயும் போயும் இந்த கருவாயன சைட் அடிக்கற? இவ்வளவு மட்டமா உன் டேஸ்ட்...” என்று  கிண்டலாக சிரித்தாள் பூங்கொடி.

“அவர் ஒன்னும் கருவாயன் இல்லடி... மாநிறம்தான்...” முறைத்தாள் கோமதி.

“என்னாது ? அவரா..? இவனுக்கெல்லாம்  அவர்னு மரியாதை ஒரு கேடா? எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சுடி...” என்று தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலிப்பதைப் போல நடிக்க, அவளை முறைத்து பார்த்தாள் கோமதி.  

“போடி...கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்... அவர் எப்படிபட்டவர் தெரியுமா? அவருக்கு இருக்கிற துணிச்சல் ஊர்ல எவனுக்காவது இருக்கா?  இவர் ஊருக்குள்ள வர்றார்னா, நம்ம ஊரு காலி பயலுவ எல்லாரும் எப்படி அடக்கி  வாசிப்பானுங்க தெரியுமா?” என்றாள் பெருமையாக.  

“ஆமாமா...இவனே ஒரு ரௌடி...  அப்புறம் ரௌடிய பாத்து மத்த ரௌடிங்க அடக்கி வாசிக்காம என்ன செய்வாங்களாம்? “  தன் உதட்டை ஏளனமாக வளைத்து  நக்கலுடன் சிரித்தாள் பூங்கொடி.  

“என்னாது ரௌடியா? அவர நீ இன்னும் நல்லா பார்க்கல டி. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு நாலு பேர் அடிப்பார் தெரியுமா? கம்பு எடுத்து சுத்தினார்னா, இந்த ஊரே அவருக்கு பக்கத்துல கூட வரமுடியாது.  

சினிமாவில் வர்ற ஹீரோ எல்லாம் எம்மாத்திரம்...அவங்க எல்லாம் நடிக்கறதுக்காக சும்மா மலைய புரட்டற மாதிரி ஆக்ட் கொடுத்து ஹீரோ னு காமிச்சுக்குவாங்க...

ஆனால் இவரு உண்மையிலயே ஹீரோ டி...” என்று முகம் எல்லாம் விகாசிக்க, ராசய்யாவின் அருமை பெருமைகளை எல்லாம் பட்டியலிட்டாள் கோமதி.

பூங்கொடியோ  தன் காதுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு, கோமதி சொன்னதை எல்லாம் காதிலயே வாங்காதவளைப் போல காட்டிக்கொண்டு அசட்டையுடன் பார்த்தவள்

“அடியே...விட்டா நீயே அந்த ரௌடிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவ போல இருக்கு...” என்று நக்கலாக சிரிக்க,

“ஆரம்பிச்சாதான் என்ன தப்பு? அங்க பாரு... அந்த உர மூட்டைய  எவ்வளவு அழகா, சுலபமா தூக்கிகிட்டு வர்றார்... நம்ம ஊர்ல எந்த பயலுக்காவது இவ்வளவு தெம்பு இருக்கா? ” என்று புன்னகைக்க,  அனிச்சையாக அங்கே திரும்பிப் பார்த்தாள் பூங்கொடி.

ட்ராக்டரில் இருந்து இறக்கி போட்டிருந்த உர மூட்டைகளை தூக்கி வந்து,  வரப்பின் ஓரமாக போட்டுக் கொண்டிருந்தான் ராசய்யா..!

கோமதி சொன்னதைப் போலவே முறுக்கேறிய கட்டுமஷ்தான  உடலும்,  பரந்து விரிந்த மார்பும், மூட்டையை தூக்கி வரும்பொழுது,  காங்கேயம் காளையின் திமிலைப் போல புடைத்துக்கொண்டு நின்றிருந்த புஜங்களும் என  ஆண்மையின் இலக்கணமாய் இருந்தான் ராசய்யா...

“போடி லூசு.. ஒரு மூட்டைய அசால்ட்டா தூக்கிட்டா ஹீரோ ஆயிட முடியுமா? அப்படியே திரும்பி என் அப்பாவைப் பாரு. இந்த வயசிலயும் அவனை விட எவ்வளவு  வேகமாக தூக்கிட்டு வர்றார். இவன் வயசுல எல்லாம் ரெண்டு மூட்டைய ஒரே நேரத்துல தூக்குவாராம்...

அவரோட ஒப்பிட்டு பார்த்தால் உன் ஹீரோ வெறும் ஜீரோதான்... “ கழுத்தை நொடித்தாள் பூங்கொடி.

அவளுக்கு எப்பொழுதுமே அவள் அப்பாதான் ஹீரோ...!

டி.வி.எஸ் 50 பைக் எல்லாம் வருவதற்கு முன்னரே,  மூன்று பிள்ளைகளையும் சைக்கிளில் வைத்து 10 மைல் தூரம் மிதித்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

அவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவள் அக்காவையும் அவளையும் அசால்ட்டாக தூக்கி தன் இரு தோள்களிலும் வைத்துக் கொண்டு பக்கத்து ஊர் திருவிழாவுக்கு சென்றிருக்கிறார்.

அந்த பூரிப்பில் தன் தந்தையை பெருமையாக கூற,  கோமதி அவள் சொன்னதை எல்லாம் ஒத்துக் கொள்ளவில்லை.  

“நீ என்னதான் சொல்லு...எனக்கு அவர்தான் ஹீரோ...”  என்றவள்,  அந்த வாழைமரத்தின் பின்னால் நின்று கொண்டு ராசய்யாவை ஆர்வமாய் பார்த்து வைக்க, அதைக்கண்ட பூங்கொடி தலையிலடித்துக் கொண்டு,  அடுத்த மரத்திற்கு சென்றாள்.  

ஏற்றி வந்திருந்த மூட்டைகளை எல்லாம் இறக்கி ஓரமாக கொண்டு வந்து வைத்தவன், தணிகாசலத்தை பார்த்து  

“அப்புறம் நான் கிளம்பறேன் மாமா...”  என்று தணிகாசலத்திடம் விடை பெற்று  செல்வது பூங்கொடிக்கு கேட்டது. அதைக்கேட்டதும்  

“அப்பாடா...போய்த்தொலைந்தான்... நல்லவேளை அவன் மூஞ்சியில முழிக்க தேவையில்லை... என்கிட்ட வம்பு எதுவும் இழுக்கலை...” என்று நிம்மதி மூச்சு விட,  அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தணிகாசலம்

“அதுக்குள்ள என்ன மாப்பிள்ளை அவசரம்..? உங்க அத்தை கொண்டு வந்திருக்கிற கம்மங்கூழை  கொஞ்சம் குடிச்சிட்டு போலாம் வா. இந்த வேகாத வெய்யிலுக்கு குளுகுளுனு இருக்கும். வாய்யா...”  என்று சிரித்தவாறு அவனை அழைக்க

“இருக்கட்டும் மாமா...”  என்று தயங்கினான் ராசய்யா.

அவனை விடாமல் கட்டாயபடுத்தி அழைத்து வந்தார் தணிகாசலம்.

“சை..இந்த அப்பாவுக்கு கொஞ்சம் கூட விவஷ்தையே இல்ல. வெளியில் போற ஓணானை என் வீட்டுக்கு வானு வெத்தலை பாக்கு வச்சு அழைச்சுகிட்டு வர்றாரே...என்னத்த சொல்ல? ” என்று மானசீகமாக தன் தந்தையை திட்டிக்கொண்டு இருந்தாள் பூங்கொடி.

இந்த வெய்யிலுக்கு நன்றாக இருக்குமென்று சிலம்பாயி கொண்டுவந்திருந்த  கம்மங்கூழை,  கலயத்தில் எடுத்து லோட்டாவில் ஊத்திக் கொடுக்க, அதை வாங்கியவன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தான்

அதைக்கண்டு பூங்கொடி அருவருப்பாக முகத்தை சுளிக்க,  ஆவென்று ஆச்சர்யத்துடன் பார்த்து வைத்தாள் கோமதி.

திறந்திருந்த அவள் வாயை  பட்டென்று தட்டி,  அவள் வாயை மூடினாள் பூங்கொடி.

“அடியே...கொறஞ்சது ஒரு பத்து ஈயாவது உள்ள போயிருக்கும்..!  இப்படியா வாய பொழந்து பாத்து வப்ப?”  என்று முறைக்க,

“ஹீ ஹீ ஹீ  பாத்தியா டி... ஒரு லோட்ட கூழையும் நொடியில் குடிச்சு காலி பண்ணிட்டார்... ஹீரோ டி...”  என்று மீண்டும் பெருமையாக சொல்ல,  பூங்கொடியோ வெளிப்படையாகவே  தலையில் அடித்துக் கொண்டாள்.  

“என்ன கோதி?  என்ன சொல்றா  உன் கூட்டாளி...? ” என்றபடி ஈ என்று இளித்தபடி அங்கு வந்து நின்றான் ராசய்யா...

அவனை கண்டதும் கோமதியின் உள்ளம்  படபடவென்று அடித்துக் கொண்டது.

இதுவரை எத்தனையோ முறை கோமதியை பார்த்து இருக்கிறான் ராசய்யா.  

அவளை வழியில் பார்க்கும் பொழுதெல்லாம், எதுவும் பேசாமல் ஒதுங்கி விட்டு சென்று விடுவான்.  இவள்தான் தன்னிடம் பேச மாட்டானா என்று ஏக்கத்தோடு பார்த்து வைப்பாள்.

அப்படிப்பட்டவன் இன்று அவளை பெயர் சொல்லி அழைக்க, கன்னிப்பெண்ணின் உள்ளம்   படபடவென்று அடித்துக்கொண்டது.  

நாக்கு மேல எழும்பாமல் பசை போட்டதை போல ஒட்டிக் கொள்ள, உதடுகளும் ஊசி வைத்து தைத்தை போல பிரிக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன.

“என்ன கோதி? பேச்சையே காணோம்? “ என்று அவளிடம் கேட்டாலும்,  அவன் பார்வை சென்று நின்றது என்னவோ பூங்கொடி இடம்தான்.

அவன் பார்வையை ஓரக்கண்ணால் கொண்டு கொண்டவள்,  

“சை... எப்படி பார்க்கிறான் பாரு. பேச்சை அங்க பேசிகிட்டு பார்க்கறது மட்டும் இங்க? அதுவும் ஆளை விழுங்கிற மாதிரி.... இவனை எல்லாம் நிக்க வச்சு சுடணும்...”  என்று உள்ளுக்குள் அவனை அர்ச்சித்தாள் பூங்கொடி.  

மெல்ல சுதாரித்துக் கொண்ட கோமதி,

“என் பேரு ஒண்ணும்  கோதி இல்லிங்க மாமா... கோமதியாக்கும்...”  என்று சிணுங்கினாள் கோமதி.

அவள் ஒன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது அவள் பெயரை கோமதி என்று எழுதிக் கொடுத்து பழக்கி இருந்தார் வகுப்பாசிரியர்.

ஒருநாள் அனைவரையும் சிலேட்டில் அவர்களுடைய பெயரை எழுதி கொண்டு வந்து காட்டச் சொல்ல, எல்லாரும்  சரியாக எழுதி இருக்க, கோமதி மட்டும் தன் பெயரை கோதி என்று எழுதி இருந்தாள். நடுவில் இருந்த ம னாவை மறந்து போனாள்.

அவள் எழுதிய பெயரை பார்த்து அவள் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் கொள்ளென்று சிரித்து விட்டனர். அதோடு அவள் பெயரை மாற்றி எழுதிய விஷயம் ஊரெல்லாம் பரவி விட, அப்பொழுதிலிருந்து எல்லாரும் அவளை கலாய்க்க, கிண்டல் அடிக்க என்று கோதி என்றுதான் அழைப்பார்கள்.

அந்த பழக்கத்தில் ராசய்யாவும் அவளை கோதி என்று அழைத்திருக்க, அதைக்கேட்டு செல்லமாக சிணுங்கினாள் கோமதி.

அவளின் சிணுங்களையும், அவனை மாமா வென்று அழைத்ததையும் கேட்ட பூங்கொடி அதிர்ந்து போய்,   

“என்னாது  மாமா வா? இந்த கருவாயன் எப்படி டி உனக்கு மாமன் ஆனான்? மறுபடியும் எனக்கு நெஞ்சுவலி வருதுடி...”   என்று தன் தோழியின் காதருகில் வந்து   கிசுகிசுத்தாள் பூங்கொடி.

அவளை முறைத்த கோமதி,

“ஆமான்டி...ஒன்னு  விட்ட சொந்தத்துல ராசு மாமா, எனக்கு  மாமா முறையாம். என் அப்பத்தா கிட்ட  கேட்டு தெரிஞ்சுகிட்டேன்...”  என்று வெட்கப் பட்டு சிரித்தாள் கோமதி.  

அதைக்கண்டு  இன்னுமாய் கடுப்பானாள் பூங்கொடி. அவள் வாயை திறந்து மீண்டும் ஏதோ சொல்ல வர,  

“என்ன சொல்றா இந்த கருவாச்சி? ரெண்டு பேரும் என்ன குசுகுசுனு பேசிக்கிறீங்க? “  என்று ராசய்யா இப்பொழுது பூங்கொடியை நேரடியாக பார்த்து கேட்க,  அவ்வளவுதான்...

அவளை வெறுப்பேத்த என்றே அவன் வழக்கம்போல கருவாச்சி என்று அழைத்து வைத்திருக்க,  அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் பொங்கி வந்தது பெண்ணவளுக்கு.  

மூக்கு விடைக்க, காது மடல் விறைத்துக்கொண்டு சிலிர்த்து நிக்க, முகத்தில் செந்தனல் ஜ்வாலை வீச, அவனை பார்த்து முறைத்தவள்,

“டேய் கருவாயா..! யாரை பார்த்து கருவாச்சிங்கிற? “   என்று சிலுப்பிக் கொண்டு சண்டைக்கு வர,  அதற்குள் அங்கு வந்து நின்றனர் தணிகாசலமும் சிலம்பாயும்.

தன் அன்னையை கண்டதும் பொங்கி வந்த  கோபம் தண்ணீர் பட்ட பால் போல உள்ளுக்குள் அடங்கிப் போனது பூங்கொடிக்கு...

தன் அன்னை முன்னால் அவனை மரியாதை இல்லாமல் பேசினாலே அவளை  திட்டுவார் சிலம்பாயி. இப்பொழுதோ ஏக வசனத்தில் திட்டினால் அவ்வளவுதான். அவளுக்குத்தான் கொட்டு விழும்.  

ஆனாலும் அவனை நல்லா திட்ட முடியலையே என்று தன்  பல்லை நறநறவென்று கடித்தாள் பூங்கொடி.

அவனும் அவளை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு,  விடைபெற்று  அகன்று செல்ல, அங்கிருந்த அன்பரசன் அவன் பின்னாலேயே ஓடினான்.  

“மாமா... என்னைய  ஒரு தரம் ட்ராக்டர்ல உட்கார வை...”  என்று கத்தியபடி ஓட, அழுத்தமான காலடியுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தவன் நின்று திரும்பி பார்த்தவன்,

“வாடா... மச்சான்...  உனக்கில்லாததா...” என்று அன்பரசனை அலாக்காக தூக்கி தலைக்கு மேல சுற்றி,  அவன் வயிற்றில் முட்டியபடி ட்ராக்டரை நோக்கி செல்ல, அன்பரசனும் கிளுக்கி சிரித்தான்.

அவன் தன் தம்பியை மச்சான் என்று அழைத்ததில்,  கொஞ்சமாக அணைந்திருந்த நெருப்பு மீண்டும் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது.

“இவனுக்கு போய் என் தம்பி மச்சானா? நெவர்...” என்று தலையை சிலுப்பிக் கொண்டாள் பூங்கொடி.

ட்ராக்டரை அடைந்ததும், அந்த பொடியனை தூக்கி அதில் உட்கார வைக்க, அருகில் மலர்க்கொடியும், ஆசையாக ராசய்யாவையே  பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவளுக்கும் ட்ராக்டரில் செல்ல ஆசை. ஆனால் அவள் அன்னை திட்டுவாளே என்று அஞ்சியபடி நிக்க, அவளின் ஏக்கத்தை கண்டு கொண்ட ராசய்யா

“ஹோய் மச்சினிச்சி... நீயும் வாடி...  ட்ராக்டர்  ஓட்டலாம்...”  என்றவன்,  இறங்கி அவளையும் தூக்கி ட்ராக்டரில் அமர  வைத்துக்கொண்டு, அங்கிருந்த தரிசு நிலத்தில் ஒரு வட்டம் அடித்தான்.  

பூங்கொடியின் தம்பிக்கும், தங்கைக்கும் ட்ராக்டரில் போவதில்  கொள்ளை மகிழ்ச்சி.  கைதட்டி ஆரவரித்தவாறு பொங்கி சிரித்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து தானும் சிரித்த ராசய்யா, அவர்களை உற்சாக படுத்த இன்னுமாய் வட்டம் அடித்தான்...!  

இப்பொழுது மீண்டும் ராசய்யாவின் அந்த மலர்ந்த சிரிப்பை ஆ வென்று வாயைப் பிளந்து கோமதி பார்க்க,  தன் பல்லைக் கடித்தவாறு உள்ளுக்குள் பொங்கி கொண்டிருந்தாள் பூங்கொடி..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!