என்னுயிர் கருவாச்சி-9
அத்தியாயம்-9
இதுவரை அவனை யாரும் எதிர்த்து கேட்டதில்லை.
அவன் மனதுக்கு எது நியாயமாக படுகிறதோ அதை செய்வான். நாலு பேரை
அடிக்கவாட்டும்... இல்லை... பத்து பேருக்கு உதவுவதாகட்டும். அவனுக்கு தோன்றியதை செய்து
விடுவான்.
இதுவரை யாரும் அவனை தடுத்து நிறுத்த இருந்ததில்லை. அப்படி தடுத்து
நிறுத்தி இருந்தாலும் யாருக்கும் அடங்கியும் போயிருக்க மாட்டான்.
“அப்படிப்பட்டவனை இந்த ஒல்லி குச்சி எதிர்த்து நிக்கிறாளே.. நீ
செய்வது தப்பு என்று தட்டி கேட்கிறாளே... எவ்வளவு தைரியம்? நான் இறுக்கி
பிடித்தால் அவள் இடுப்பெலும்பு கூட மிச்சம் இருக்காது. என்னிடமே விரல் நீட்டி
பேசுகிறாள். ரொம்ப துணிச்சல்க்காரிதான்...” என்று ஒரு நொடி
ஆச்சரியம் கலந்த பார்வை அவன் விழிகளில்.
அடுத்த நொடி அந்த அடி வாங்கியவன் முகம் கண் முன்னே வர, மீண்டும் சுறுசுறுவென்று அவன் கோபம் தலைக்கு ஏறியது.
“வாங்க கலெக்டர் அம்மா... முதல்ல இந்த பொறுக்கி என்ன செஞ்சான்
னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா நாட்டாமை
பண்ணுங்க...” என்று பூங்கொடியை பார்த்து முறைக்க
“ஆமா... அவன் பொறுக்கி னா நீ யார்? “ என்று அவனுக்கு
மட்டும் கேட்கும்படி பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினாள் பூங்கொடி.
அதைக்கேட்டவள் கை முஷ்டி இறுகியது. இதுவரை யாரும் அவனை பொறுக்கி என்று அழைத்ததில்லை.
முதன்முதலாக அதுவும் ஒரு பொட்டப்புள்ளை அவனை பொறுக்கி என்று அழைக்க, அதைக்கேட்டவன் கோபத்துடன்
“ஏய்...” என்று
கர்ஜித்தவாறு கையை ஓங்கி இருந்தான் அவள் கன்னத்தை நோக்கி.
ஓங்கியிருந்த அந்த கை மட்டும் அவள் கன்னத்தில் பட்டிருந்தால், அவள் கன்னங்கள் இரண்டும் வீங்கி போயிருக்கும். தனியாக பிய்த்துக்கொண்டு
வந்திருந்தால் கூட சொல்வதற்கில்லை. அந்த அளவுக்கு வேகமும், ஆத்திரமும் கலந்து இருந்தது அவன் கை முஷ்டியில்.
அவளோ கொஞ்சமும் அசராமல், உருத்து விழித்து
அவனை நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டு ஏசுநாதர் சொன்னதைப் போல ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும்
காட்டு என்றதாய் சட்டமாய் நின்றிருந்தாள்.
அருகில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கோ இன்னும் பயம் தொற்றிக் கொண்டது. ராசய்யா
எங்கே பூங்கொடியை அடித்து விடுவானோ என்று.
எல்லாரும் அவளை விலகி வந்துவிடச்சொல்லி வற்புறுத்த, அவளோ கொஞ்சமும் அசராமல் அடித்தால் அடிச்சுக்கோ என்று
நிமிர்ந்து நிக்க, அவள் முகத்தை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ...ஓங்கிய
கையை உடனே இறக்கி கொண்டு அவளை எரிக்கும் பார்த்து முறைத்து வைக்க, .
அதே நேரம் அடிவாங்கியவனும் தன்னை விட்டு விடச் சொல்லி கெஞ்சி
கொண்டிருந்தான்.
பூங்கொடியும் ராசய்யாவின் முறைச்ச பார்வையை கண்டுகொள்ளாமல், அடி வாங்கியவனை பார்த்தவள்,
“டேய்... அப்படி என்னதான் பண்ணி தொலைச்ச? எதுக்கு இப்படி
அடிக்கிறான்?” என்று கோபமாக முறைக்க, அவனோ மிரட்சியுடன்
ராசய்யாவை பார்த்தான். பதில் எதுவும் சொல்லவில்லை.
உடனே சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்தவள்,
“இம்புட்டு பேரும் ஏன்
இப்படி சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறீங்க? எதுக்காக இவனை அடிக்கிறான் ? “ என்று பூங்கொடி
கோபத்துடன் கேட்க
“அதுதான் யாருக்குமே தெரியலையே தாயி. மோட்டார் பைக்கில் வந்த இந்த
அசலூர்க்காரன் நம்ம பஸ் ஸ்டாப்பிங்ல நின்னுகிட்டிருந்தான். யாரையோ எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருப்பதை போலத்தான் நின்னுகிட்டிருந்தான்.
நான் கூட கேட்டேன். எந்த ஊரு தம்பி..யாரை பார்க்கோணும்னு. ஆனால்
வாய தொறக்கல...
அப்பத்தான் அந்த வழியாக வந்த ராசய்யா, உடனே தன் புல்லட்டை
திருப்பிக்கொண்டு வந்தவன், புல்லட்டை நிறுத்திவிட்டு, கீழ இறங்கி
இவன் சட்டையை பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
இனிமே இப்படி செய்வியாடா? என்று மொட்டையாக கேட்டு அடிக்க ஆரம்பித்து
விட்டான்.
அப்பொழுதே பக்கத்தில் இருந்தவர், எதுக்கு ராசு
அடிக்கிற என்று விசாரிக்க, ராசய்யாவும் முறைத்துக் கொண்டு நிற்க, அடிவாங்கறவன் பேசவே இடம் கொடுக்காமல் சரமாரியாக அடிக்க
ஆரம்பித்துவிட்டான் ராசு...” என்று அருகில் இருந்தவர் நடந்ததை சுருக்கமாக சொல்ல, அதே நேரம் எட்டரை மணி பஸ் வந்திருந்தது.
“இவன் பண்ணின காரியத்தை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது
அவனுக்கே தெரியும் நான் எதுக்கு அடிக்கறேனு . நீ இதுல தலையிடாத. பஸ் வந்துடுச்சு...நீ
ஏறிப் போ பூங்கொடி...” என்று மீண்டும் அவளை அதட்டினான்
“ஹலோ... இவனை விடாமல் நான்
போகமாட்டேன்...” மீண்டும் பூங்கொடி சிலிர்த்துக் கொண்டு
நிற்க, ராசய்யா
பல்லைக் கடித்தான்.
பேருந்து ஓட்டுநரும் சண்டையை வேடிக்கை பார்த்தவாறு பூங்கொடிக்காக
காத்துக் கொண்டிருந்தார். ராசய்யாவும் பதில் எதுவும் சொல்லாமல் அவளை முறைக்க, அவளும் அவன் பார்வையை
நேருக்கு நேராக எதிர்கொண்டு அவனை முறைத்தபடி நின்றாள்.
இருவரும் சண்டைக்கோழிகளாக விடைத்துக்கொண்டு நின்றிருக்க, அதே நேரம் பேருந்தில் இருந்த பெண் ஒருத்தி வேகமாக இறங்கி வந்து
பூங்கொடியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு பேருந்துக்கு சென்றாள்.
அவள் இழுத்த இழுப்பில் பூங்கொடியும் தவிர்க்க முடியாமல்
சென்றுவிட, பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த அந்த பெண், பூங்கொடியின் கையையும்
பிடித்து இழுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டவள்,
“உனக்கு அந்த பொறுக்கியை ராசு அண்ணா ஏன் அடிக்கிறார்னு காரணம்
தானே வேணும். நான் சொல்றேன் கேளு பூவு...”
என்றவள் நடந்த கதையை சுருக்கமாக சொன்னாள்.
அந்தப் பெண்ணின் பெயர் மணிமேகலை. பூங்கொடி படிக்கும் அதே முசிறி அரசு கலைக் கல்லூரியில்
மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
சமீபகாலமாக, இங்கு அடிவாங்கி கொண்டிருந்தவன் அவளை ஃபாலோ
பண்ணி கொண்டு இருந்தான். அவள் முன்னால் வந்து லவ் லெட்டரை கொடுப்பதும், அவளை காதலிப்பதாக சொல்லி, அவன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று லவ் டார்ச்சர் பண்ண, மணிமேகலையும் பயந்து போய்,
“எனக்கு இதெல்லாம் பிடிக்காது.
எனக்கு அப்படி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை. என்னை விட்டுடுங்க...” என்று நல்லமுறையில் சொல்லியிருக்க, அவனோ அதை காதிலயே போட்டுக் கொள்ளவில்லை.
அடுத்த்தாய் அவளை மிரட்ட ஆரம்பித்திருக்கிறான். அவனை காதலிக்க
வில்லை என்றால் அவளை கொன்று விடுவேன் என்று மிரட்ட, மணிமேகலை அரண்டு போய் விட்டாள்.
நேற்று கல்லூரியில் கொஞ்சம் வேலையாக தங்கிவிட்டவள், தனியாக தாமதமாக பேருந்திற்காக வர, வரும் வழியில் அவள் கையை பிடித்து இழுத்து வம்பு செய்திருக்கிறான்
அந்த பொறுக்கி.
நல்ல வேளையாக யாரோ அந்த பக்கமாக வரும் அரவம் கேட்கவும் விட்டுவிட்டு
ஓடிவிட்டான்.
கல்லூரியை விட்டு வீட்டிற்கு வந்த மணிமேகலை. பேருந்தை விட்டு இறங்கி
அழுது கொண்டே வீட்டிற்கு செல்ல, அதைக் கண்ட ராசய்யா
அவளை நிறுத்தி விசாரித்திருக்கிறான்.
முதலில் சொல்ல தயங்கினாலும், ராசய்யா அவளை அதட்டி கேட்க, உடனே கடகடவென்று எல்லாவற்றையும்
சொல்லிவிட்டாள்.
அதைக்கேட்ட ராசய்யா,
“நான் இருக்கிறேன்...நான் பாத்துக்குறேன் மா. இதுக்காகவா இப்படி பயந்து போய் இருக்க? தைரியமா இருக்க வேண்டாமா ? “ என்று ஆறுதல்
சொல்லி அவளை தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
இன்று காலையில் எழுந்தவள், கொஞ்சம் பயத்துடனேதான் கல்லூரிக்கு கிளம்பி வந்திருந்தாள். அவன் இன்று வந்து என்ன கலாட்டா
பண்ணுவானோ என்ற அச்சத்துடனே வந்தவள், பேருந்து
நிறுத்தத்தை அடையும் முன்னே தொலைவில் இருந்தபடியே பேருந்து நிறுத்தத்தில்
நின்றிருந்தவனை கண்டு கொண்டாள்.
நேற்று முசிறியில் அவள் கையை பிடித்து இழுத்து வம்பு செய்தவன்… இன்று அவளை தேடிக்கொண்டு அவள் ஊருக்கே வந்து விட்டானே என்று
அரண்டு போனவள், உடனே
தயங்கி பாதியிலயே நின்று விட, அப்பொழுது அங்கே வந்த ராசய்யா அவளை விசாரிக்கவும் அவன்
தான் என்று ஒத்துக் கொண்டாள்.
அவ்வளவு தான். நேராக
பேருந்து நிறுத்தத்திற்கு சென்றவன் தன் புல்லட்டை ஸ்டான்ட் கூட போடாமல் அப்படியே
விட்டுவிட்டு அங்கு நின்றிருந்தவன் சட்டையை பிடித்து சரமாரியாக அடிக்க
ஆரம்பித்துவிட்டான்.
*****
“இதுதான் பூவு
நடந்தது. நீயே சொல்லு. உனக்கே தெரியும்... நம்மள மாதிரி பொண்ணுங்க வீட்டு படி தாண்டி மேல் படிப்புக்காக காலேஜ் போறதே பெருசு.
இந்த இதுல இவனுங்க மாதிரி பொறுக்கிங்க, இப்படி வந்து தகராறு
பண்ணுனா, அதை நம்ம பெத்தவங்க கேட்டா, அடுத்த நாள் காலேஜ்க்கு அனுப்புவார்களா?
படிச்சு கிழிச்சது போதும்னு புத்தகப்பையை வாங்கி வச்சுக்கிட்டு
வூட்டோட நிறுத்திடுவாங்க...
எப்படியோ ராசண்ணா அந்த பொறுக்கிய நல்லா மொத்திட்டார். இனிமேல்
அவன் என் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான்...”
என்று நிம்மதியுடன் சொல்ல, அதைக் கேட்டு
அதிர்ந்து போனாள் பூங்கொடி.
“ஒரு பெண்ணை லவ் டார்ச்சர் பண்ணி இருக்கிறான்...அதுவும் கையை
பிடித்து இழுக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய பொறுக்கியாக இருக்க வேண்டும். இதெல்லாம்
காதலே இல்லை...அழகான புள்ளையை பார்த்ததும் அனுபவிக்க தோணும் காமவெறி.
அதுக்கு காதல்னு பேர் வச்சுகிட்டு திரியறானுங்க காலி பசங்க. அவனை
எல்லாம் உயிரோடவே விட்டு வைக்க கூடாது மணி...” என்று பல்லைக் கடித்தாள் பூங்கொடி.
“ஹ்ம்ம்ம் இதே கோபம்தான் ராசண்ணாவுக்கு வந்தது. அதோடு அவன் என்
பெயரை எதுவும் இழுத்துவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக அவனை எதுவும் பேசி விடாமல்
நல்லா தட்டி வச்சிருக்கு...
இது புரியாமல் நீ போய் ராசண்ணா மேல கோவிச்சுக்கிற? “ என்று அவளை
முறைத்தாள் மணிமேகலை.
மணிமேகலை சொல்லியதை கேட்டதும், பூங்கொடிக்கு
முதன்முறையாக அவசரப்பட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வு எழுந்தது.
“அவன் மணிமேகலையின்
நல்லதுக்குத்தான் செய்திருக்கிறான். நான்தான் முந்திரிக்கொட்டை மாதிரி
முந்திகிட்டு போய் அவன் கிட்ட மல்லுகட்டி நின்னிருக்கேன்.
ஐயோ...போச்சு..நல்லா மாட்டிகிட்டேன்.. எத்தனை தரம் நீ
தலையிடாதனு சொன்னான். நான்தான் கேட்காம போய்ட்டேன். இப்ப நான் தனியா அவன்கிட்ட மாட்டினால் அவ்வளவுதான்...”
என்று உள்ளுக்குள் அஞ்சியவளுக்கு அவனின் ரௌத்திரமான முகமே கண் முன்னால் வந்து நின்று அவளை பயமுறுத்தியது...!
Comments
Post a Comment