நிலவே என்னிடம் நெருங்காதே!!-25

 


அத்தியாயம்-25

திருமண நாளும் வந்தது..

திருமணத்திற்கு அவர் குடும்பம் முழுவதும் வரவேண்டும் என்று சொல்லி இருந்தார்.. இது அவரே நடத்தும் திருமணம் மற்றும் மணப்பெண் சார்பாக யாரும் இல்லை என்பதால் அவர் குடும்பம் எல்லாரும் வரவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி இருந்தார்..

திருமணத்தன்று அதிகாலை அதிரதனும் ஜமீனுக்கு வந்து சேர்ந்திருந்தான்.. அவன் சாந்தினியுடன் ஜமீனுக்கு வந்து சென்றதற்கு பிறகு மாதம் ஒரு முறை இங்கு வந்து செல்வதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தான்..

அதன் படி அன்று  அதிகலையில் வந்திருந்தவனையும் கிளம்பி திருமணத்திற்கு வரச்சொல்ல, அவனோ வரவில்லை என்று மறுத்தான்..

“இது நம்ம வீட்டு திருமணம்.. அதாவது  நான் நடத்தும் திருமணம்.. நம் குடும்பம்  எல்லாரும் வந்து சிறப்பிப்பதுதான் முறை..அவனும் இந்த குடும்பத்தில் ஒருத்தன் என்றால் நம்ம கூட வரட்டும்  “ என்று தேவநாதன் அதிகாரமாக கூற அதற்கு மேல் அவரை மறுக்க முடியாமல் சிறிது நேரம் உறங்கிவிட்டு கிளம்பி விட்டான்..

ஆனால் அவனை அன்று ஜமீனுக்கு வரவழைத்தது தேவநாதன் சாணக்கியர் என்று பின்னால் தான் தெரிந்தது அவனுக்கு..

குடும்பமாக கிளம்பி மண்டபத்துக்கு சென்றிருந்தார் தேவநாதன்.. ஏற்கனவே அவர் அழைத்து இருந்த மக்கள் வந்து அமர்ந்து இருக்க, அவர் வந்ததும் திருமண சடங்குகள் ஆரம்பிக்க முதலில்  மணப்பெண்ணிற்கான சடங்குகள் ஆரம்பித்தன..

காஞ்சி பட்டு சரசரக்க கோஞ்சமே கொஞ்சமான அலங்காரத்திலும் எழிலோவியமாக ஜொலித்தவளை திருப்தியுடன் பார்த்து கொண்டார் தேவநாதன்..

முன் வரிசையில் அமர்ந்து இருந்தவர் மேடையில் நடக்கும் சடங்குகளை பார்த்து கொண்டிருக்க, ஓரப் பார்வையில் தனக்கு அடுத்து அமர்ந்து இருந்த தன் பேரனை  பார்க்க அவனோ அதிகாலையில் தூங்க விடாமல் அழைத்து வந்துவிட்ட கடுப்பில் முகம் கடுகடுக்க, குனிந்தபடி தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்..

நிமிர்ந்தும் மணப்பெண்ணை பார்க்கவில்லை...

மணப்பெண்ணிற்கான சடங்குகள் முடிய அடுத்து மாப்பிள்ளை யை அழைத்து வாருங்கள் என்று அழைக்க எல்லாரும் மணமகன் அறையை பார்க்க அது கதவு திறக்கபடாமலயே இருந்தது...

தேவநாதன் வேகமாக எழுந்து மணமகன் அறைக்கு சென்று பார்க்க அங்கு மணமகன் இருந்ததற்கான அறிகுறியே இல்லை..

அப்பொழுது ஒரு சிறுமி ஒரு கடிதத்தை கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி படித்தவர் முகம் இருண்டு போனது..

இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை.. தான் வேற ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் ஜமீன்தாருக்கு பயந்து கொண்டு அவன் பெற்றோர்கள் அவனை கட்டாய படுத்தியதாகவும் எழுதி இருந்தான்...

அதனால் இந்த  திருமணத்தை நிறுத்தி விடுமாறு எழுதி இருந்தது.. 

அதை கண்ட தேவநாதன் இடிந்து போய்விட, அதற்குள் மற்றவர்கள் மேடை ஏறி வந்து என்னவென்று  விசாரிக்க, அனைவரிடமும் அந்த கடிதத்தை காட்டினார்..

அதற்குள் நிலவினியும் விஷயம் கேள்வி பட்டு மணமேடையில் இருந்து எழ முயல, அதே நேரம்

“அம்மாடி நிலா.. நீ மணவறையில் இருந்து எழாத.. ஒரு பொண்ணு மணவறைக்கு வந்து கல்யாணம் நின்னு போனா அவளை பற்றி தப்பாக பேசுவார்கள்..அதற்கு பிறகு திருமணம் கூடி வருவது ரொம்ப கஷ்டம்.. அதனால் நீ அப்படியே உட்கார்.. “  என்று அவசரமாக தடுத்தார்..

அப்பொழுது அவர் அருகில் நின்று கொண்டு இருந்த ஒரு பெரியவர் கொஞ்சம் கோபத்துடன்

“என்ன ஜமீன்தார் ஐயா..! நீங்கதான இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்திங்க.. நல்லா  விசாரிக்க வேண்டாமா? இப்ப இந்த பொண்ணு நிலைமை இப்படி ஆய்டுச்சே..இனிமேல் இவ வாழ்க்கைக்கு யார் பதில் சொல்வா?  நீங்க எல்லாம் என்ன பெரிய மனுசரோ? “ என்று முகத்தை திருப்ப கீழ அமர்ந்து இருந்தாலும் மணமேடைக்கு அருகில் நின்று  கொண்டு அவர்கள் பேசுவது அதிரதன் காதிலும் விழுந்தது..

இவ்வளவு நேரம் எதையும் கண்டு கொள்ளாமல் அலைபேசியை  நோண்டி கொண்டிருந்தவன் யாரோ ஒருவர் தன் தாத்தாவை குறை சொல்லுவதை கண்டு அதற்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை..

என்னதான் அவன் தாத்தாவை வெறுத்தாலும் அவரை தப்பாக ஒருத்தர் சொல்வது அவனுக்கு பிடிக்கவில்லை..

உடனே வேகமாக எழுந்தவன் நாலே எட்டில் மேல ஏறி அவரிடம் சென்றவன்

“இங்க பாருங்க பெரியவரே...!  யாரும் இல்லாத இந்த பொண்ணு அனாதையா நின்னுவிட போகிறதே என்றுதான் இவர்  திருமணத்தை ஏற்பாடு செய்தது..

அதுக்காக அந்த மாப்பிள்ளை ஓடிப்போனதுக்கு இவர் எப்படி பொறுப்பாக முடியும்? “என்று சீறினான்.. அவரும் சளைக்காமல்

“அப்படி பொறுப்பேத்துக்க முடியாதவர் எதுக்கு தம்பி இந்த பொண்ணுக்கு கல்யாணத்தை ஏற்பாடு செய்யணும்..?  அது தாத்தன்  செத்து ரெண்டு வாரம் கூட முடியல.. அதுக்குள்ள் இப்படி ஒரு சம்பவம்னா அத எப்படி தம்பி அந்த பொண்ணு தாங்கிக்கும்? நீங்களே சொல்லுங்க.. “ என்றார் மரியாதையுடன்..

அவர் சொல்லுவதிலும் நியாயம் இருப்பதாக தோன்ற,

“இதெல்லாம் இந்த தாத்தாவுக்கு தேவையா? யாரோ எப்படியோ போய்விட்டு போகட்டும் என்று  விட்டுவிடாமல் ஊரில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தூக்கி தலையில போட்டுக்கறது.. மனுஷனை நிம்மதியா தூங்க கூட விடாம புடிச்சு இழுத்துகிட்டு வந்தாரே.. இந்த கூத்தை பார்க்கத்தானா.. “ என்று உள்ளுக்குள் பல்லை கடித்தவன் தன் ஆத்திரத்தை கட்டு படுத்தி கொண்டு

“இப்ப என்னதான் சொல்றிங்க ? “ என்றான் எரிச்சலுடன்.. 

“இந்த பொண்ணுக்கு இப்பவே கல்யாணம் நடக்கணும்.. அதுக்கு ஏற்பாடு பண்ணினா இவர் பெரிய மனுசன் னு ஒத்துக்கறேன்.. அது இல்லாமல் இப்படியே விட்டுபோட்டு போய்ட்டா பாவம் அந்த பொண்ணு.. “ என்று இன்னும் கொஞ்சம் தேவநாதன் மீது குற்றம் சுமத்தினார்..

“ஏங்க..!  இப்பவே கல்யாணம் நடக்கணும்னா மாப்பிள்ளைக்கு எங்க போறது?  அதுக்குள்ள எப்படி மாப்பிள்ளைய தேடி கண்டு பிடிக்க முடியும்? “  என்று எகிறினான் அவன் தாத்தா தனக்கு வைத்திருக்கும் ஆப்பை அறியாமல்...

உடனே அந்த மண்டபத்தை சுற்றி பார்த்த அந்த பெரியவர் பின் அதிரதனை ஏற இறங்க பார்த்துவிட்டு

“ஏன் தம்பி... நீங்களும் கல்யாணம் ஆகாத  ஆம்பளைதான...ஒரு மாப்பிள்ளைக்கான எல்லா தகுதியும் உங்ககிட்டயும் இருக்கில்ல. அப்புறம் ஏன் நீங்களே இந்த பொண்ண கட்டிக்க கூடாது..

எங்க பாப்பா ரொம்ப தங்கமான குணம்.. உங்க ஜமீனுக்கு இப்படி ஒரு பொண்ணு மருமகளா வர்றது நீங்க கொடுத்து வச்சிருக்கணும்.. பேசாம நீங்களே எங்க பாப்பாவை கட்டிக்கங்க.. “ என்று சொல்ல தேவநாதன் அதிரதன் இருவருமே அதிர்ச்சியில் நிமிர்ந்து அவரை பார்த்தனர்..

“ஆமாங்க ஜமீன்தார் ஐயா.. நீங்க ஏழை பணக்காரன் னு வித்தியாசம் பார்க்காமல் பழகறவரா இருந்தா இந்த ஏழை பெண்ணை உங்க வீட்டு மருமகளாக்கிங்க... மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டானு தெரிஞ்ச உடனேயே இது நீங்களா யோசிச்சு இருக்கோணும்..

என்னதான் ஊருக்கு நல்லது செய்யற மாதிரி காட்டிகிட்டாலும் தனக்குனு வரும்பொழுது வசதி வாய்ப்பு கௌரவம் எல்லாம் பார்க்கத்தானே செய்யும்.. “ என்று நக்கலாக இழுத்தார்..  

அதை கேட்டு பொங்கி எழுந்த தேவநாதன் கீழ அமர்ந்து இருந்த தன் மகனையும் மருமகளையும் மேல வர சொல்லி கண்ணால் ஜாடை காட்டியவர் அவரிடம் திரும்பி

“இப்ப.. என்ன ? இந்த பொண்ணு கழுத்துல தாலி ஏறனும்.. அவ்வளவுதான? என் பேரன் கட்டுவான் தாலியை.. “ என்றார் மிடுக்குடன்..

அதை கேட்டு அதிர்ந்த போன அதிரதன் அவசரமாக மறுத்து ஏதோ சொல்ல வர,

“ரதன்..ரூம்க்கு உள்ள வா.. எல்லாம் பேசிக்கலாம்.. “ என்றவர் வேகமாக மணமகன் அறைக்குள் சென்று விட்டார்..

அதற்குள் ஓரளவுக்கு நடந்து கொண்டிருந்ததை ஊகித்திருந்த நெடுமாறனும் மனோகரியும் அதிரதனுக்கு மேல் அதிர்ந்து போய் மேடை ஏறி வந்தவர்கள் தேவநாதனை பின் தொடர, விறைத்து கொண்டு நின்றிருந்த அதிரதனை மனோகரி கையை பிடித்து இழுத்து கொண்டு அறைக்கு உள்ளே சென்றார்..

எல்லாரையும் பொதுவாக பார்த்து

“நான் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன்.. அந்த பொண்ணோட தாத்தாவுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் நல்ல முறையில் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதாக.. இப்ப அந்த வாக்கை நான் காப்பாற்றியாக வேண்டும்.. அதுக்கு இந்த கல்யாணம் நடக்கணும்..

மாறா.... மனோ. நான் எது செஞ்சாலும் அது நம்ம குடும்பத்து நன்மைக்கு தானு உங்களுக்கு தெரியும் இல்ல.. அந்த நம்பிக்கை இருந்தால் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கங்க.. அஞ்சு நிமிசம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள உங்க மவனுக்கு எடுத்து சொல்லி மணமேடையில் வந்து உட்கார சொல்லுங்க.. 

என்று மிடுக்குடன் சொல்லியவாறு மீசையை தடவி கொண்டே வெளியேறி சென்றார் தேவநாதன்..

அதற்குள் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு மாப்பிள்ளை ஓடிவிட்ட  விஷயம் பரவ, அவர்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசிகொள்ள, ஒரு சிலர் திருமணம் நின்று விட்டதாக எழுந்து வெளியில் செல்ல, அங்கு வந்து நின்றார் தேவநாதன்..

தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவர் தன் கம்பீரமான குரலில் அங்கிருந்தவர்களை பார்த்து

“யாரும் கலைந்து செல்ல வேண்டாம்.. இந்த திருமணம் நடக்கும்... என்னால் ஏற்பாடு செய்த கல்யாணம் நின்னு போகாது.. என்  பேரன் மணப்பெண் கழுத்தில் தாலிய கட்டுவான்.. எல்லாரும் அமைதியாக இருங்க.. மணமக்களை வாழ்த்திவிட்டு வயிறு நிறைய சாப்பிவிட்டு செல்லுங்க.. “ என்று முழங்க, அந்த வார்த்தைக்கு கட்டு பட்டவர்களாய் எழுந்தவர்கள் அப்படியே அமர்ந்து கொண்டனர்..

எல்லார் பார்வையும் மணமேடையில் அமர்ந்து இருந்த நிலவினியை தீண்டியது.. அவளோ தலையை குனிந்து கொண்டிருந்தாள்.. தேவநாதன் அவளை எழக் கூடாது என்று சொல்லிவிட, வேற வழி இல்லாமல் அமர்ந்து இருந்தாள் தலையை குனிந்தவாறு..

எல்லாரும் அவள் மேல் ஒரு பாவமான பார்வை செலுத்த , தலையை குனிந்து கொண்டிருந்தவளோ பொங்கி வந்த சிரிப்பை அடக்க படாத பாடு பட்டு கொண்டிருந்தாள்..

தன் சிரிப்பை அடக்குவதற்காகவே அதை மற்றவர்கள் அறியாமல் மறைத்து கொள்ளவே தலையை குனிந்து கொண்டாள் நிலவினி..

இதெல்லாம் தேவநாதன் தாத்தாவின் நாடகம் என்று முன்பே தெரியும் அவளுக்கு.. அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி இருந்தார்.. கூடவே சற்றுமுன் அவள் மணமேடையில் வந்து அமர்ந்ததும் நிமிர்ந்து முன்னால் இருந்த தாத்தாவை பார்க்க, அவரோ அவர் அருகில் அமர்ந்து இருந்த அதிரதனை கண் ஜாடை காட்டி

“எப்படி இருக்கான் என் பேரன்? “ என்று  பார்வையால் கேட்க அவளோ லேசாக வெட்கபட்டு அருகில் இருந்தவனை பார்க்காமலயே தலையை குனிந்து கொண்டாள்..

அதிரதன் தலையை குனிந்து கொண்டிருந்ததால் அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டிருக்கவில்லை.. ஏற்கனவே அவர் திட்டம் தெரிந்ததாலயே மாப்பிள்ளை ஓடிவிட்டான் என்ற செய்தி வந்ததும் வருத்தத்திற்கு பதிலாக அவளுக்கு சிரிப்புதான் வந்தது..

“இல்லாத மாப்பிள்ளையையே ஓட வச்சுட்டாரே இந்த தாத்தா... பெரிய ஆள்தான்.. “ என்று  உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் அங்கு நடக்கும் நாடகத்தை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அவரே ஒருத்தரை வரவழைத்து அவருக்கு எதிராக பேச வைத்ததும் அதை கண்டு அவர் பேரன் பொங்கி எழுந்ததும் பின் அவனையே அதில் மாட்டவைத்ததும் கண்டு திகைத்து போனாள்..

“இந்த ஜமின்தார் தாத்தா பெரிய கேடிதான்.. இப்படி ப்ராட் வேலை எல்லாம் பண்றாரே.. “ என்று அதிசயித்தவாறு தலையை குனிந்த படியே இருந்தாள்..

ஆனால் ஒரு மூலையில் தான் செய்வது தவறோ என்று உறுத்தியது..

இப்படி விருப்பம் இல்லாத ஒருத்தனை கட்டாயபடுத்தி தாலி கட்ட வைப்பது முறையா என்ற அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது..

ஆனால் வேற வழி இல்லையே.. தேவநாதன் தாத்தா எப்படியும் எல்லாருக்கும் நல்லது தான் செய்வார். அப்படி இருக்க அவர் பேரனுக்கே கெடுதல் செய்து விடுவாரா என்றது மறுமனம்.. கூடவே அவள் தாத்தாவுக்கு செய்து  கொடுத்த சத்தியம் நினைவு வந்தது..

தேவநாதன் என்ன கேட்டாலும் செய்ய சொல்லி வாக்கு வாங்கி கொண்டாரே.. அவர் வாக்கை எப்படி மீறுவது என்று  மனம் எடுத்து கூற நடக்கறது நடக்கட்டும் “என்று தலையை குனிந்து கொண்டாலும் ஓரக்கண்ணால் மணமகன் அறையில் நடப்பதை பார்த்து கொண்டிருந்தாள் நிலவினி..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!