நிலவே என்னிடம் நெருங்காதே!!-26

 


அத்தியாயம்-26

ந்து நிமிடங்கள் கழித்து உள்ளே சென்ற தேவநாதன் அங்கு மனோகரியும் நெடுமாறனும் அதிரதன் காலில் விழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தனர்... அவனோ அப்பவும் முடியாது மறுத்து கொண்டிருந்தான்..

உள்ளே சென்றவர்

“ரதன்.. என்ன இன்னும் ரெடியாகலையா? முகூர்த்த நேரம் போய்கிட்டிருக்கு.. “ என்றார் கர்ஜித்தவாறு..

“என்னால் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது.. எனக்கு என் நிலா பொண்ணுதான் முக்கியம்.. அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. “ என்று அவனும் சீறினான்..

“மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி... இந்த தேவநாதன் ஜமீன்தார் இதுவரைக்கும் யாரிடமும் தலை குனிந்து நின்றதில்லை. இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் எல்லாரும் என்னைத்தான் காறி துப்புவார்கள்.

ஒரு கல்யாணத்தை நடத்த துப்பில்லை.. இவன் எல்லாம் என்ன பெரிய மனுசன் என்று கேவலமாக பார்ப்பார்கள்.. அதுதான் உனக்கு வேண்டும் என்றால் நீ சொன்ன படி செய்..” 

என்று இன்னும் ஏதேதோ சொல்லி வாதிட அவனோ எல்லாத்தையும் மறுத்து கொண்டிருந்தான்..சிறிது நேரம் தன் பேரனிடம் வாய் சண்டை இட்டவர் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து 

“கடைசியா சொல்றேன்... உன் உடம்புல ஓடறது இந்த ஜமீன் ரத்தம் னா நம்ம கண் முன்னாடி யாரும் கஷ்டபட விடக் கூடாது.. இப்ப மணமேடையில் அழுது கிட்டிருக்கிற அந்த பொண்ணுக்கு ஒரு நியாயம் நல்லது செய்யணும்னு துடிக்கணும்.. அப்படி துடிக்கல, நல்லது செய்ய தோணலைனா அது ஜமீன் ரத்தம் இல்ல..

உனக்கு இந்த ஜமீன் உடைய கௌரவம் மானம் மரியாதை எதுவும்  தேவை இல்லை அந்த பட்டணத்துக்காரிதான் முக்கியம்னா  இப்பவே விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு நடையை கட்டு..

இனிமேல் உனக்கு பெத்தவங்க கிடையாது கூட பொறந்த ரெண்டு தங்கச்சிகளும் கிடையாது.. யாரையும் இனி பார்க்கவும் கூடாது.. பேசவும் கூடாது.. என் மவனுக்கு பிறந்தது இரண்டு பொண்ணுங்கனு முடிச்சிடறேன்.. “ என்று எங்கோ பார்த்து வெறித்தவாறு சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியில் வந்து விட்டார்..

அடுத்த ஐந்து  நிமிடத்தில் அறை கதவு திறக்க, மாப்பிள்ளை கோலத்தில் நின்றிருந்தான் அதிரதன்...

ஏற்கனவே தயாராக வாங்கி அறையில் வைத்திருந்த பட்டு வேஷ்டி சட்டையும் மணக்கும் மலர் மாலையும் அணிந்தவாறு கம்பீரமாக வந்து நின்ற தன் பேரனை கண்டதும் சிலையாக நின்றார் தேவநாதன்..

தன்னையும் மறந்து தன் பேரனை மணக்கோலத்தில் ரசித்து பார்க்க அவனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவரை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன் விடுவிடுவென்று  நடந்து மணமேடையில் சென்று அமர்ந்தான்..

அடுத்து ஐயர் மந்திரங்களை வேகமாக சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிலாவின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி இருந்தான் அதிரதன்.. கைகள் ஐயர் சொன்னதை செய்தாலும் பார்வை மட்டும் அவன் தாத்தாவிடமே இருந்தது.. மறந்தும் தன் அருகில் இருப்பவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

அதற்கு அடுத்து ஐயர் மற்ற சடங்குகளையும் செய்ய சொல்ல, இயந்திரதனமாக அவளுக்கு நெற்றியில் பொட்டு வைத்ததும் அம்மி மிதித்த அவள் கால் விரலுக்கு மெட்டி இட்டதும் எல்லாம் விறைத்தவாறே செய்து கொண்டிருந்தான்..

நிலவினிக்கும் அவள் திருமணத்தை பற்றி பெரிதாக கனவு இல்லை. கூடவே இது ஒரு திட்டமிட்ட நாடக கல்யாணம் என்பதால் அவன் விறைத்து கொண்டெ சடங்கை செய்வதற்கு  வருத்தபடாமல் சிரிப்புதான் வந்தது..

உள்ளுக்குள் சிரித்தவாறே அவளும் அவனுடன் சேர்ந்து அந்த திருமண சடங்கில் கலந்து கொண்டாள்..

ஒரளவுக்கு எல்லா  சடங்குகளும் முடிந்திருக்க, மணமக்கள் அங்கு இருந்த பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அதிரதன் அவன்  தாத்தாவின் காலில் விழ மறுத்துவிட நிலா மட்டும் தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினாள்..

அவளை தூக்கியவர் கண் கலங்க அவளுக்கு ஆசிர்வாதம் வழங்கி தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்து கொண்டார்.. அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வர, அங்கிருந்த பக்கவாட்டு கதவின் வழியாக வெளியில் சென்று பேசி கொண்டிருந்தான்..

சிறிது நேரம் கழித்து உள்ளே வர, அவன் அறையை அடையவும் உள்ளே இருந்து ஒரு பெண் சிரிப்பது கேட்டது..

"எப்படி என் நடிப்பு அம்மணி? " என்று  தேவநாதனும் அந்த பெண்ணுடன் இணைந்து சிரித்தார்..

"சூப்பர் தாத்தா.. கலக்கிட்டிங்க.. பேசாம நீங்க சினிமாவுக்கு நடிக்க போயிருந்திருக்கலாம்.. நீங்களும் அடுத்த  சிவாஜியா வந்திருப்பிங்க.. " என்று கிளுக்கி சிரிக்க, உள்ளே செல்லாமலயே உள்ளே இருப்பது யார் என்று தெரிந்தது அதிரனுக்கு.. 

அவன் தாத்தாவும் சற்றுமுன் அவன் தாலி கட்டியவளும்தான் சிரித்து பேசி கொண்டிருந்தனர்..

உடனே அவன் அறிவு விழித்து கொண்டது.. மாப்பிள்ளை ஓடிவிட்டால்  மணப்பெண் சோகத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இவள் என்னவென்றால் இப்படி கெக்க பெக்க என்று  சிரிக்கிறாளே.. அப்படி என்றால்...........................?

இது எல்லாம் நாடகமா? எல்லாம் இந்த சாணக்கியரின் குள்ள நரித்தனமா?”  என்று யோசிக்க எல்லாம் விளங்கிவிட்டது அவனுக்கு..

திட்டமிட்டு சதி  செய்து தன்னை இந்த திருமண வலையில் சிக்க வைத்திருக்கிறார் என புரிய அடுத்த நொடி கழுத்தில் கிடந்த மாலையை கழற்றி தூக்கி விசிறி விட்டு புயலென வெளியேறி சென்றான்..

அவன் வந்திருந்த கார் மண்டபத்தின் அருகில் நின்றிருக்க அதை எடுத்து கொண்டு விரட்டினான்..

"சே.. எப்படி என்னை ஏமாற்றி விட்டார்..? .என்னமா நடித்திருக்கிறார்....!  நான் அவர் நடிப்பை புரிந்து கொள்ளாமல் முட்டாளாக இருந்து விட்டேனே.. ஆமாம் எப்படி இவ்வளவு கரெக்ட் ஆக ப்ளான் பண்ணி நடத்தி இருக்கிறார்?

நான் சரியாக இன்று இங்கு வந்து சேருவது எப்படி தெரிந்தது அவருக்கு? இந்த திருமணத்தை இரண்டு வாரம் முன்னதாகவே திட்டமிட்டு விட்டாரே..ஆக்சுவல்லி நான் இந்த வாரம் இங்கு வருவதாக இருந்த ப்ளான் ஐ கூட சேன்ஜ் பண்ணிட்டனே.. ஆனால் அப்புறம் எப்படி இங்க வர நேர்ந்தது...?    என்று  அவசரமாக யோசிக்க ஏதோ புரியாத புதிருக்கு விடை கிடைத்த மாதிரி இருந்தது..

உடனே தன் அலைபேசியை எடுத்தவன் அவன் நண்பன் அபியை அழைத்து

"டேய் அபி....என் தாத்தா உன் கிட்ட என்ன சொல்லி என்னை ஊருக்கு அனுப்பி வைக்க சொன்னார்? " என்றான் நேரடியாக..

அதை கேட்டு அதிர்ந்த அபி

"அதி.... அது வந்து..................." என்று இழுக்க

"டேய்.. உண்மையை சொல்.. என்ன நடந்தது? " என்று உறுமினான் அதிரதன்..

“அது வந்து... தாத்தா நேற்று போன் பண்ணி இருந்தார் டா.. அவருடைய டெக்ஸ்டைல் பிசினஸ் ல் உடனே உன் உதவி வேணுமாம்... அவர் நேரா கூப்பிட்டால் நீ அங்க வரமாட்ட.. அதனால் எப்படியாவது எங்களை உன்னிடம் பேசி உன்னை அங்கு அனுப்பி வைக்க சொன்னார்..

அவர் பேச்சை தட்ட முடியலை... அதுதான் நீ நேற்று ஊர்க்கு போகவில்லை என்று  சொன்னதும் நாங்கள் கட்டாயபடுத்தி  உன்னை அனுப்பி வைத்தோம்.. ஏன்டா? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? " என்றான் அபினவ் பதட்டத்துடன்...

“பிரச்சனையா? என் வாழ்க்கையையே திசை மாற்றி விட்டார் இந்த ஜமீன்தார்.. “ என்று உள்ளுக்குள் சீறியவன் தன் சீற்றத்தை நண்பனிடம் காட்டாமல்

"ப்ச்... ஒன்னுமில்லை.. வேற எதாவது காரணம் சொன்னாரா? "

"இல்லடா... பிசினஸ் ல் உன் உதவி வேண்டும் என்று  மட்டும்தான் சொன்னார்..சாரி டா... உன்கிட்ட நாங்க பொய் சொல்லி இருக்க கூடாது.. ஆனால் அவர் அவ்வளவு தூரம் கேட்கவும் மறுக்க முடியலை.. சாரி டா.. தாத்தா நல்லவர் டா ... அவரை புரிஞ்சுக்கோ.. " என்று பேசி கொண்டிருக்கும் பொழுதே இணைப்பை துண்டித்து விட்டான்.. "

"சே...எல்லாம் நடிப்பு.. ட்ராமா.. எவ்வளவு நடித்து என்னை இங்க வரவழைத்து திருமணத்திற்கு செல்வது போல் காட்டி கடைசியில் அந்த பிசாசு கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டாரே.. இதுக்கு அவளும் உடந்தை..

முன்ன பின்ன தெரியாதவனுக்கு  கழுத்தை நீட்ட மாட்டேன் என்று மறுத்து  சொல்லாமல் யார் கட்டினாலும் தாலி ஏறுவது மட்டும் போதும்னு தாலியை  வாங்கி கிட்டாளே..ஒருவேளை இவளும் அவர் திட்டத்துக்கு உடந்தையா?

ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும்.. இல்லை என்றால் அந்த கிழவரிடம் இவள் ஏன் சிரித்து சிரித்து பேசுகிறாள்..? சே.. எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க...நான் ஏமாந்து விட்டேன்.." என்று உள்ளுக்குள் கொதித்தவன் தன் காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான்....

( அதற்கு பிறகு நடந்தவைகளை தெரிந்து கொள்ள மீண்டும் ஒன்றாம்  அத்தியாயத்தை படியுங்கள்.. :) )


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!