நிலவே என்னிடம் நெருங்காதே!!-28

 


அத்தியாயம்-28

ன்று மாலை ஐந்து மணி அளவில் சமையலறையை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தாள் நிலா..

காலையில் தாத்தாவிடம் பேசிவிட்டு அன்று மதியம் கோயம்புத்தூர் கிளம்பி சென்றாள் அவளுக்கு வேண்டிய சில பொருட்களை வாங்கி வர.. அதில் ஒன்றாக மைக்ரோவேவ் அவன் இருந்தது..

தன் அலைபேசியில் யூட்யூபில் ஏதோ குக்கிங் வீடியோவை திறந்து வைத்துக்கொண்டு அந்த மைக்ரோவேவ் அவனில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்..

கடந்த ஒரு மணி நேரமாக அவள் சமையலறையில் இருந்து ஏதோ நோண்டி கொண்டிருப்பதை கேள்வியுடன் அவளையே மறைமுகமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் அமுதினியும் யாழினியும்..

அதுவும் யாழினி அவள் அண்ணி கடையிலிருந்து வாங்கி வந்த மைக்ரோவேவ் அவனை கண்டதும் கண்கள் விரிந்தன..

இது மாதிரி இதுவரை டிவியில்தான் பார்த்து இருக்கிறாள்.. ஆனால் இதுவரை ஜமீனில்  இந்த மாதிரி மாடர்ன் பொருட்கள் இல்லை.  எல்லாமே அந்த  காலத்து பொருட்கள் மட்டுமே..

உணவு வகைகளும் இன்னும் ஜமீன் முறைப்படி ட்ரெடிசனல் உணவு வகைகள் தான்.. எப்பொழுதாவது ரொம்ப போரடித்தால் அமுதினி நூடுல்ஸ், பாஸ்தா என்று செய்து யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்..

பெரிய அளவில் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டுமென்றால் தேவநாதன் இல்லை என்றால் நெடுமாறன் குடும்பத்தை பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வருவர்...

அதனால் அந்த அவனை பார்த்ததும் அவள் அண்ணி ஏதோ வித்தியாசமாக செய்யப் போகிறாள் என்று மூக்கு வேர்த்து விட நிலவினியையே  கண்காணித்துக் கொண்டிருந்தாள் சின்னவள்..

அதற்கு  தகுந்த மாதிரி நிலவினியும் சமையலறைக்குள் புகுந்து கொண்டவள் ஏதேதோ உருட்டிக் கொண்டிருக்க சின்னவளுக்கு இன்னும் ஆர்வம் தொற்றிக் கொண்டது..

அண்ணி என்ன செய்கிறாள்  என்று பார்க்க வேண்டும் போல ஆவலாக இருந்தது..  அதனால் யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள்  ஏதோ எடுப்பதை போல வந்தவள் தன்  அண்ணியின் பின்னால் சற்று தள்ளி நின்று நுனிக்காலில் நின்று எட்டி பார்த்தாள்..

நிலவினி  அந்த அவனை வைத்து ஏதோ செய்துகொண்டிருக்க இன்னும் பரபரப்பானாள் யாழினி. 

தன்னை  யாரோ  உற்று பார்ப்பதை போல இருக்க, நிலவினி பின்னால் திரும்பி பார்க்க, அங்கு நுனிக்காலில் நின்று கொண்டு தன்னை ஆர்வமாக எட்டி பார்த்துக் கொண்டு இருப்பவளை கண்டதும் நிலா நட்புடன் புன்னகைக்க, யாழியோ உடனே நேராக நின்று கொண்டு தன் அண்ணியை முறைத்து விட்டு  முகத்தை திருப்பிக் கொண்டாள்

சிறுபிள்ளைத்தனமான அவள் செயலை கண்டு நிலவினி  புன்னகைத்தவாறு

“யாழி குட்டி... நான் கேக் பண்ணிக்கிட்டிருக்கேன்..நீயும் வந்து பாரு.. சூப்பரா வருது.. “ என்றழைக்க அதைக் கேட்டதும் யாழினியின் கண்கள் பெரிதாக விரிந்தன..

கேக் எல்லாம் வெளியில் சாப்பிடுவதுண்டு.. அது இல்லாமல் யாருடைய பிறந்தநாள்  என்றால் மட்டும் வீட்டில் கேக் வாங்கிக் கொண்டு வந்து தருவார் தாத்தா..  அதையும் தன் பங்குக்கு நிறைய எடுத்து ஒளித்து வைத்து சாப்பிடுவாள் யாழினி..

அப்படி வெளியில் வாங்காமல் அவர்கள் வீட்டிலேயே அதை தயாரிப்பதாக சொல்லவும் உடனே ஆர்வம் அதிகமானது.. ஓர் அடி முன்னால் எடுத்து வைத்து நிலா பக்கம் வர அதேநேரம்

"ஏய் யாழி.... இங்க வா... "  என்று உறுமினாள் அவள் அக்கா அமுதினி..

மாடியில் இருந்து இறங்கி வந்தவள் தன் தங்கை யாழினி எதிரியின் கோட்டைக்குள் சென்று விட்டதை போல நிலவினியின் அருகில் நெருங்கி நின்று  கொண்டிருப்பதை கொண்டவள் அதிர்ந்து போய் தன் தங்கையை அழைத்தாள்..

தன் அக்கா அதட்டவும் திடுக்கிட்டவள் முன் வைத்த காலை இழுத்துக் கொண்டு உடனே வெளியில் ஓடி விட்டாள்.. நிலவினியும் இடம் வலமாக தன் தலையை அசைத்து சிரித்துக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்..

அடுத்த அரை மணி நேரத்தில் கேக் தயாராகி இருந்தது.. அதை கட் பண்ணி கூடவே அவள் செய்திருந்த முந்திரி கொத்தையும் எடுத்து வைத்து எல்லோருக்கும் மாலை சிற்றுண்டியை கொடுக்க வந்தாள்..

தேவநாதன் தாத்தாவுக்கு கொடுத்தவள் அவரும் சாப்பிட்டு பார்த்து சத்தமாக அதன் ருசியை பாராட்ட, வரவேற்பறையில் அமர்ந்து இருந்த யாழினிக்கு எச்சில் ஊறியது...

அதன் பின் நெடுமாறனும் மனோகரியும் தோட்டத்தில் அமர்ந்து இருக்க, அவர்களுக்கும் கொண்டு சென்று  கொடுத்து விட்டு வந்தவள் கடைசியாக பாரிஜாதத்திற்கும் கொடுக்க சென்றாள்..

அவரோ அவளை முறைத்தாலும் சூடான கேக்கின் வாசமும் கூடவே முந்திரி கொத்தின் வாசம் அவரை சுண்டி இழுக்க உடனே அந்த ட்ரேயில் இருந்ததை வெடுக்கென்று எடுத்து கொண்டார்...

நிலாவும் சிரித்த படி அவர் அறையில் இருந்து வெளிவந்தவள் ஓரக்கண்ணால் வரவேற்பறையில் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களையும் நோட்டமிட இருவரும் ஏதோ குசுகுசுவென்று  பேசி கொண்டிருந்தாலும் இருவர் பார்வையும் நிலவினி மீதே இருந்தது...

அதிலும் யாழினி அவள் அண்ணி கையில் மீதி இருந்த ப்ளேட்டின் மீதே இருந்தது.. அவர்களுக்கும் கொடுப்பாள் என்று ஆவளுடன் எதிர்பார்க்க, நிலவினி அவர்களுக்கு தராமல் அவர்களை கடந்து சென்றாள்...

இதுவரை தூரத்தில் இருந்த பொழுதே சுண்டி இழுந்த சிற்றுண்டியின் மணம் இப்பொழுது வெகு அருகில் இருந்து வர, யாழினியின் வாயில் இருந்து அருவியாக கொட்ட ஆரம்பித்தது...

உடனே அதை எடுத்துக்கொள்ள  வேகமாக எழுந்துவிட அமுதினி அவள் கையை பிடித்து இழுத்து தன்னுடன் அமர்த்திக் கொண்டாள்.. தன் அக்காவை முறைத்தவள்

“அண்ணி எனக்கும்... “  என்று கேட்க வாயை திறக்க,  அவள் கேட்க போவதை முன்கூட்டியே கணித்து இருந்தவள்  தன் கையால் தன் தங்கையின் வாயை பொத்திக் கொண்டாள் அமுதினி..

சற்று முன்னால் நடந்திருந்த நிலவினியும் தன்னை யாரோ அழைப்பது போல இருக்க நின்று திரும்பிப் பார்த்தவள் அமுதினி யாழி வாயை பொத்தி கொண்டு இருப்பதை கண்டவள் அவர்கள் அருகில் வந்தாள்..

“யாழிக்குட்டி.. உனக்கும் கேக் வேணுமா? நான் செய்தால் உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காது என்றுதான் உங்களுக்கு எடுத்து வரவில்லை..இந்தா எடுத்துக்கொள்..” என்று  ஒரு தட்டை நீட்ட அடுத்த நொடி கையை நீட்டி சிற்றுண்டியை எடுத்துக் கொண்டாள் யாழினி..

அமுதினி எதையும் தொடாமல் நிலாவை முறைத்தவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.. நிலாவும் தன் தோள்களை குலுக்கியவாறு

“எப்படியோ ஒரு ஹார்ஸ் அவுட்.. அடுத்த ஹார்ஸ் ஐயும் சீக்கிரம் என் பக்கம் கொண்டு வந்து விடவேண்டும்.. " என்று  உள்ளுக்குள் சிரித்தவாறு சமையல் அறைக்குள் சென்றாள்...

அவளுக்கு உதவி செய்த பொன்னிக்கும்  ஒரு தட்டை எடுத்துக் கொடுக்க அதை கண்ட பொன்னியின்  மனம் உருகிவிட்டது..

தன்னையும் அழைத்து இந்த ஜமீன் மருமகள் தட்டை கொடுக்க, அதை கண்டு கண்கலங்கி  வேண்டாம் என்று மறுத்தாள்..

ஆனால் நிலா கட்டாயப்படுத்தி அவளை உண்ணவைக்க  பொன்னிக்கோ பெருமையாக இருந்தது.. ஜமீன்தார் சரியான மருமகளைத்தான்  தேடிக் கொண்டு வந்திருக்கிறார் என்று பூரித்துக் கொண்டே உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள் பொன்னி..

அடுத்த ஐந்தாவது நிமிடம் யாழினி மீண்டும் சமையலறைக்குள் வந்தாள் 

தன் அண்ணியை எப்படி அழைப்பது என்று குழம்பியவள் தொண்டையைச் செருமி “எனக்கு இன்னொரு ப்ளேட் கேக் வேணும்.. “என்று எங்கேயோ பார்த்து சொன்னாள்..

யாழினி உள்ளே வந்தது நிலாவுக்கும் தெரிந்தது என்றாலும் அவள் கேட்டதற்கு வேண்டுமென்றே திரும்பாமல் முன்னால் பார்த்து நின்று கொண்டிருக்க, இந்த முறை தன் ஈகோவை விட்டவள்

“அண்ணி..... எனக்கு இன்னொரு பிளேட் கேக் வேணும்.. “ என்று சத்தமாக கேட்டாள்.  உடனே நிலாவும் சடக்கென்று திரும்பியவள்

“ரொம்ப தேங்க்ஸ் யாழி குட்டி...என்னை  அண்ணி என்று அழைத்ததுக்கு...இதோ அதுக்குனே உனக்கு பெரிய பீஸ் கேக்.. நல்லா சாப்பிடு...  " என்று  சிரித்தவாறு பெரிய கேக் துண்டை கொடுக்க, அதை கண்டதும் சின்னவளுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட,கண்கள் பளபளக்க  அதை வாங்கி கொண்டு சிட்டாக பறந்திருந்தாள்..

சிறிது நேரத்தில் நிலவினி சமையல் அறையில் இருந்து வெளியில் வர அங்கே யாழி தனியாக சோகமாக அமர்ந்திருந்ததை கண்ட நிலா அவள் அருகில் சென்று அமர்ந்துகொள்ள உடனே யாழினி முகத்தைத் திருப்பிக் கொண்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்..  

அதைக்கண்டு நிலாவுக்கு சிரிப்பு வந்தாலும் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள்

“என்னாச்சு யாழி குட்டி.. என்மேல் என்ன கோபம்?  என் கூட பிரெண்டா இருந்தா நாளைக்கு ஐஸ்க்ரீம் செய்து தருவேன்.. “ என்று நைசாக அவளுக்கு ஐஸ் வைக்க, ஐஸ்கிரீம் என்று கேட்டதும்  சற்று தள்ளி அமர்ந்திருந்தவள்  உடனே தன் அண்ணியின் அருகில் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டவள் நிலாவின் முகம் பார்த்தாள்..

“நிஜமாகவே  உங்களுக்கு ஐஸ்க்ரீம் பண்ண தெரியுமா? " என்றாள் கண்கள் பளபளக்க.

“யெஸ் யெஸ்.. நல்லாவே பண்ணுவேன்.. " என்று  நிலா சிரிக்க,

“அப்ப எனக்கும் வேணும்.. " என்றாள் செல்ல சிணுங்களுடன்...

:ஹ்ம்ம் அதுக்கு நீ எனக்கு ப்ரெண்ட் ஆகணுமே..!  என்ன எனக்கு ப்ரெண்ட் ஆகிக்கறயா? " என்றாள் நிலா கண் சிமிட்டி..

"ம்ஹூம்.. அது மட்டும் முடியாது.. உங்ககிட்ட கேக் வாங்கி சாப்பிட்டதுக்கே அம்மு என் கிட்ட கோவிச்சுகிட்டு என்னை தனியா விட்டுட்டு போய்ட்டா.. நான் உங்க கூட பிரெண்ட் ஆனா  என்னை அவ கட்சியில் இருந்து தூக்கிடுவா...

என் கூட பேசமாட்டா.. “ என்றாள் கவலையுடன்..

“அவ்வளவுதான.. உன் அக்கா அம்முவை உன் கூட பேச வைக்க எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. ட்ரை பண்றியா? என்றாள் தலை சரித்து குறும்பாக சிரித்தவாறு..

“ஓ சூப்பர்...  என்ன ஐடியா அண்ணி? என்றாள் ஆர்வமாக..

“ப்ரெண்ட்ஸ்? " என்று அவள் முன்னே கை நீட்டி இருக்க, சற்று யோசித்தவள் சற்றுமுன் சாப்பிட்ட கேக் நினைவுவர கூடவே நாளைக்கு கிடைக்க போகும் ஐஸ்க்ரீம் வந்து அவளை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க,  உடனே அவசர திட்டம் உதயமானது..

“இந்த அண்ணி நல்லாதான் சமைக்கிறா.. இவ கூட ப்ரெண்ட் ஆகிட்டு இவளை வைத்து இங்க விதவிதமாக சமைக்கச் சொல்லி நல்லா சாப்பிட்டுக்கலாம்..”என்று யோசித்தவள் உடனே தன் கையை நிலா கை மீது வைத்து “ப்ரெண்ட்ஸ்.. “  என்று சிரித்தாள் கொஞ்சலாய்...  

நிலாவும் சிரித்தவாறு அவளை அவள் அறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது அமரவைத்து அவளை கண்ணை மூட சொல்லி அவளுக்கு மேக்கப் பண்ண ஆரம்பித்தாள்.

யாழினிக்கும்  நீண்ட தலைமுடி.. அதை முன்னால் கொஞ்சமாக சுருட்டி குவியலாக பன் போல செய்தவள் பின்னால் கொஞ்சம் வித்தியாசமாக முடி அலங்காரம் செய்தாள்..அவளுக்கு அழகான ஒரு பட்டுபாவாடை அணிய வைத்தாள்..   

பின் முகத்துக்கான அலங்காரம் செய்து கண்ணுக்கு காஜல் இட்டு உதட்டுக்கு மெலிதாக லிப்ஸ்டிக் போட்டவள் அடுத்த அரை மணி நேரத்தில் மேக்கப் முடிந்திருக்க, அவளை கண்ணை திறக்க சொல்ல, தன் உருவத்தை கண்ணாடியில்  பார்த்ததும் யாழினியின் கண்கள் பெரிதாக விரிந்தன..

அவ்வளவு அம்சமாக இருந்தாள் அந்த மேக்கப்பில்..

“வாவ்... செமயா இருக்கு அண்ணி... நானே எனக்கு அடையாளம் தெரியலை.. எப்படி அண்ணி..?  " என்று ஆர்பரித்தாள்..

“ஹீ ஹீ ஹீ இந்த மாதிரி எனக்கு நிறைய விதவிதமா மேக்கப் போட தெரியும் யாழி குட்டி.. உனக்கு ஓகேனா தினமும் ஒவ்வொன்னா நான் போட்டு விடறேன்.. என்ன ஓகே வா? " என்று கண் சிமிட்டி சிரித்தாள் நிலா...

"ஓ யெஸ் டபுள் ஒ.கே அண்ணி..

சே.. இப்ப மட்டும் இந்த காமும் யாமுவும் இல்ல.. அவளுங்க என்னை இப்படி பாத்தா மயக்கம் போட்டு இருப்பாளுங்க.. இருங்க அண்ணி.. இப்பவே போட்டோ எடுத்து அவளுங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..

அம்முவும் என் மேக்கப் ஐ பார்த்தால் வயிறு எரிவா.. என்கிட்ட தானா வந்துடுவா... தேங்க்ஸ் அண்ணி... " என்று எக்கி நிலா எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் அக்காவை பார்க்க ஓடி விட்டாள்..

அவளின் இந்த திடீர் செயலில் நிலாவுக்கு வெட்கமாக இருந்தது.. இதுவரை அவளை யாரும் இப்படி முத்தமிட்டது இல்லை..

சிறு வயதிலயே அவள் பெற்றோர்கள் இறந்து விட, அவள் தாத்தாவும் அவளை வளர்ப்பதிலயே கவனமாக இருந்தார்.. அவளை கட்டி அணைத்து கொள்வார் சில நேரம் .ஆனால் இப்படி கன்னத்தில் முத்தமிட்டது எல்லாம் இல்லை..

முதன் முதலாக ஒரு சிறு பெண் முத்தமிட்டிருக்க, அந்த முத்தம் தித்தித்தது அவளுக்கு... உடனே அவளுக்கு வேறொன்றும் ஆசை வந்தது..

இவளின் முத்தமே இப்படி தித்திக்குதே..! இதே இவள் அண்ணன் முத்தமிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க, அவனின் சிடுமூஞ்சியில் இருக்கும்  அழுத்தமான இதழ்களால் இவளின் பட்டு கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க, அப்படியே சிலிர்த்து போனாள் நிலா...

அவனின் அழுத்தமான உதடுகள் அவள் கன்னத்தில் ஊர்வலம் செல்ல அவளுக்கு உள்ளே பல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் குபீர் என்று ஒன்றாக பறப்பதை போல ஒரு பரவசம்...

சில நொடிகள் கண் மூடி அந்த பரவசத்தை ரசித்து இருந்தவள் வெளியில் யாரோ வரும் அரவம் கேட்க திடுக்கிட்டு தன்னை சுதாரித்து கொண்டவள்

“சீ... என்ன இப்படி ஒரு நினைப்பு..! எனக்கு புத்தி ரெண்டே நாளில் ரொம்பவும் கெட்டு போச்சு... “ என்று தலையில் தட்டி கொண்டே உள்ளுக்குள் சிரித்தவாறு துள்ளலுடன் தேவநாதன் தாத்தாவை தேடி சென்றாள் தன் முதல் வெற்றியை கொண்டாட....! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!