என்னுயிர் கருவாச்சி-12
அத்தியாயம்-12
1999
ராசய்யாவை பார்ப்பதற்காகவே, அவனை சைட் அடிப்பதற்காகவே தன் வீட்டில் தேருக்கு பூஜையை
முடித்துவிட்டு, இரண்டு தெரு
தள்ளி இருக்கும் பூங்கொடி வீட்டுக்கு ஓடி
வந்து இருந்தாள் கோமதி.
அவள் எதிர்பார்த்ததை போலவே, இப்பொழுது அவளின் கனவு நாயகன் அவளுக்கு தரிசணம்
கொடுக்க, அவனையே இமைக்க
மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கோமதி.
அடுத்த கணம் நங் என்று அவள் தலையில் விழுந்தது குட்டு ஒன்று..!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ என்று தன் உச்சந்தலையை தேய்த்துக் கொண்டவள், திரும்பி பார்த்து
பூங்கொடியை முறைத்து வைத்தாள்.
“இப்ப எதுக்குடி என்னை இப்படி கொட்டின? “ என்று வலியில் கோபமாக
முறைக்க
“ஏன் டி? நீ எனக்கு ஒத்தாசை
பண்ண வந்தியா? இல்ல
அந்த கருவாயன சைட் அடிக்க வந்தியா? “ பூங்கொடி இடுப்பில் கையை மடித்து ஊன்றிக் கொண்டு
கோமதியை கிண்டலாக பார்க்க,
தன்னை கண்டு கொண்ட தோழியிடம் அதற்குமேல் மறைக்க முடியாமல்,
“ஹீ ஹீ ஹீ ரெண்டுக்கும் தான்...” என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள் கோமதி.
“எனக்கு என்னவோ நான் இரண்டாவதா
சொன்னதுக்குத்தான் நீ ஓடி வந்திருக்க...திருடி...” என்று பூங்கொடி முறைத்தபடி சிரிக்க, வெட்கத்தோடு சிரித்தாள் கோமதி.
ஏனோ அதைக்கண்டு எரிச்சலாக வந்தது பூங்கொடிக்கு.
“ஏன்டி...அறிவு கெட்டவளே... இந்த கருவாயன் அப்படி என்ன மன்மதனா? இவனைப் போய்
தெருவுக்குத் தெரு ஓடிவந்து நின்னு சைட் அடிக்கிற? “ என்று எரிச்சலுடன் முறைக்க
“ஹீ ஹீ ஹீ நீ சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு அவர் தான் டி மன்மதன்...”
என்று நாணத்துடன் கன்னம் சிவக்க,
“யாரு? இந்த ரௌடியா உனக்கு மன்மதன்? எனக்கு அடுத்த நெஞ்சுவலி வருதுடி...” என்று பூங்கொடி நெஞ்சில்
கைவைத்து வலிப்பதை போல நடிக்க, அவளை முறைத்த கோமதி
“அவர் ஒன்னும் ரௌடி
இல்லை...யாராவது தப்பு பண்ணினால் தட்டி கேட்பார்..” என்று மிடுக்குடன் ராசய்யாவுக்கு வக்காலத்து வாங்கினாள் கோமதி.
“தட்டி கேட்பதுனா எப்படி? அடுத்தவன் சட்டையை கிழிக்கும் வரைக்குமா? “ என்றாள் எரிச்சலுடன்.
“தப்பு செய்தவன் சட்டை கிழிந்தால் தான் என்ன தப்பு? தப்பு தப்பு தானே...ராசு மாமா மாதிரி யாராவது
தப்பு செய்யறவங்களை எதிர்த்து கேட்கிறார்களா? அப்படி அவர்
கேட்கறதனாலதான் கொஞ்சமாச்சும் ஊருக்குள்ள அடக்கி வாசிக்கிறானுங்க...
அப்படி பார்த்தால் ராசு மாமா செய்யறது கரெக்ட் தான்.. போனவாரம்
என்ன நடந்ததுனு தான் உனக்கே தெரியுமே? அதை தெரிஞ்சுகிட்ட
பொறவும் அவரை ரௌடின்ற? “ என்று முறைத்தாள்
கோமதி.
அப்பொழுதுதான் சென்ற வாரம் நடந்தது நினைவு வந்தது பூங்கொடிக்கு.
*****
பக்கத்து தெருவை சேர்ந்த சுப்பையா தினமும்
குடித்துவிட்டு வந்து அவன் பொண்டாட்டி செல்வியிடம் சண்டைக்கு நின்றான்.
இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுகே வழி இல்லாமல் அவன்
மனைவி செல்வி கஷ்டப்பட, அதைக் கண்டு
கொள்ளாமல் குடிப்பதற்கு காசு வேண்டும் என்று அவன் மனைவியை தெருவில் இழுத்துப் போட்டு அடித்தான்
அந்தத் தெருவே சுற்றி
நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் சுப்பையாவை தடுக்க முன் வரவில்லை
அதற்கு முதல் நாள் இதே மாதிரிதான் சுப்பையா நடந்து கொள்ள, அதை தட்டி கேட்ட பாலுவுக்கு நடந்தது கண் முன்னே வர, எல்லாரும் ஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டார்கள்.
தன் கணவனின் அடியை பொறுக்க முடியாமல் செல்வி கண்ணீர் விட்டு
அழுவ, பார்ப்பவர்களுக்கு மனம் பதைத்தாலும் யாரும்
தட்டி கேட்க முன் வரவில்லை.
அப்பொழுது அந்த வழியாக சென்ற ராசய்யா, அங்கே நடந்து
கொண்டிருந்த சண்டையையும், அதை வேடிக்கை பார்த்தவாறு நின்று கொண்டிருந்த
மக்களையும் கண்டதும் கோபம் பொங்கி வந்தது.
உடனே தன் புல்லட்டை
நிறுத்திவிட்டு கீழ இறங்கியவன், நேராக
சென்று சுப்பையாவின் சட்டையை பிடித்து ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
இடியை போல இறங்கிய அந்த அறையில் தலை கிர்ரென்று சுழன்றது
சுப்பையாவுக்கு... காது ஙொய் என்று ரீங்காரமிட்டது. நின்ற இடத்திலயே ஒரு சுத்து
சுத்தி வட்டம் அடித்தவன், மெல்ல சுதாரித்து தள்ளாடியபடி நின்று நிமிர்ந்து
ராசய்யாவை பார்த்து முறைத்தவன்
“டேய் ராசு...எது என் குடும்ப விஷயம். இதுல நீ தலையிடாத...” என்று முறைக்க,
“எதுடா குடும்ப விஷயம்? “ என்று ராசய்யாவும்
பதிலுக்கு முறைக்க,
“என்னாது? டாவா? டேய் ராசு... உன்னைய விட நான் வயசுல மூத்தவன்...ரெண்டு
புள்ளைக்கு தகப்பன். என்னைப் போய் டா போட்டு பேசுற...” என்று மீண்டும் கோபமாக
பார்க்க,
“ஆமா... கட்டின பொண்டாட்டிய இப்படி நடுத்தெருவுல இழுத்து போட்டு
அடிக்கிற உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை..” மீண்டும் பிடித்திருந்த பிடியை
இறுக்கினான் ராசய்யா...
“அதான் சொன்னேனே... இது என் குடும்ப விஷயம்... இவ நான் தொட்டு
தாலி கட்டினவ? இவள நான் அடிப்பேன்...தூக்கிப்போட்டு கூட மிதிப்பேன்.. எங்க குடும்ப
விஷயத்தில் நீ தலையிடாத....”
“உன் குடும்ப விஷயம் னா, அதை உன் வூட்டுக்குள்ள, நாலு சுவற்றுக்குள்ள வச்சுக்கணும். இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, ஊரே
வேடிக்கை பாக்கிற மாதிரி வச்சுக்க கூடாது.
உன் குடும்ப விஷயம் வீட்டு வாசலை தாண்டி தெருவுக்கு வந்துட்டாலே, அது பொது விஷயம் ஆய்டுச்சு. அதை யார் வேணாலும் தட்டிக்
கேட்கலாம்...” சுப்பையாவை பார்த்து முறைத்து பல்லை கடித்தான் ராசய்யா.
அவனை மீண்டும் முறைத்த சுப்பையா, சுற்றிலும்
நோட்டமிட்டவன்,
“இத்தனை பேர் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறப்ப உனக்கு என்னடா
இவ மேல இம்புட்டு அக்கறை? இவ அடி வாங்கிறத உன்னால பார்க்க முடியலையா? அப்படியே கொதிக்குதோ? “ என்றான் சுப்பையா நக்கலாக.
“ஆமான் டா... கொதிக்குது தான்..” பதிலுக்கு முறைத்தான்
ராசய்யா.
“அதுதான் ஏன் டா? அப்ப என் பொண்டாட்டியை நீ வச்சிருக்கியா? “ என்று ஏளனமாக ராசய்யாவை பார்த்து சொல்ல, அதைக்கேட்டு ஐயோ என்று அலறி செல்வி தன் காதுகளை மூடிக்கொண்டாள்...
சுற்றி நின்றவர்கள் எல்லாருமே அருவருப்புடன் முகத்தை சுளித்தனர்
இதுதான் முன்தினமும் நடந்தது..!
செல்வி அடி வாங்குவதை காண
சகிக்காமல் , தடுக்கச் சென்ற எதுத்த வீட்டு
பாலுவை பார்த்து சுப்பையா இதே மாதிரி கேட்டு வைக்க, பாலுவின்
பொண்டாட்டியோ பாலுவின் கையைப் பிடித்து
தரதரவென்று வீட்டுக்குள் இழுத்துச் சென்று லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டாள்.
“யோவ்... எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறப்ப, நீ மட்டும் எதுக்குய்யா அந்த புள்ளைக்கு வக்காளத்து வாங்கிட்டு
போற? அப்ப அவ புருஷன் கேட்கறதுல என்ன தப்பு இருக்கு…” என்று போடு போட்டாளே.. பாலு முகத்தில் ஈயாடவில்லை.
இதுக்கும் அவர் மனைவி செல்வியுடன் சகஜமாக சிரித்து பேசுபவள்...!
வீட்டில் அவசரத்துக்கு எதுவும் இல்லை என்றால் செல்வியிடம்தான்
சென்று நிப்பாள். அப்படிப்பட்டவள் செல்விக்காக தான் பரிந்து பேசப்போய் இப்படி
கேட்டுபுட்டாளே என்று அதிர்ந்து போனான் பாலு.
ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுக்கு எதிரி என்பது இதுதான் போலும்.
தன்னைப் போலவே எல்லா வீட்டிலும் பொம்பளைங்களுக்கு பயந்துகிட்டுத்தான் இந்த
ஆம்பளைந்க்க இப்படி நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்காம இருக்காங்களோ என்று
மனதுக்குள் எண்ணிக்கொண்டான் பாலு.
அவர் மனைவியோ அதோடு விட்டு விடாமல் இப்பொழுதெல்லாம் எதேச்சையாக
பாலு எதிர்த்த விட்டை பார்த்தால் கூட, பாலுவை சந்தேகமாக பார்த்து
வைக்கிறாள்.
அங்க என்ன பார்வை என்று அவன் மோவாயில் இடித்து முறைத்து வைத்தாள்.
இதுதான் வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுகிட்ட
கதை போல என்று பெருமூச்சு விட்ட பாலு, அதன் பிறகு மறந்தும் செல்வி வீட்டு பக்கம்
திரும்பவே இல்லை.
பாலுவின் நிலையை பார்த்து, அடுத்த வீட்டு ஆறுமுகமும் வாயை திறப்பதில்லை.
பாலு பொண்டாட்டியாவது வாயால வறுத்தெடுத்தாள்... தன் பொண்டாட்டி
செயலிலயே காட்டிவிடுவாள் என்று அஞ்சி வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நமக்கு எதுக்கு வம்பு... வேலியில் போற ஓணானை எதுக்கு எடுத்து நம்ம வேட்டிக்குள் விட்டுகிடணும் என்று எல்லாருமே
ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆனால் ராசய்யா அப்படி ஒதுங்கி செல்லாமல், வீரய்யாவை தட்டிக்கேட்க, அந்த கோபத்தில் இப்பொழுது அவனையும் பார்த்து என்
பொண்டாட்டியை வச்சிருக்கியா என்று நா கூசாமல் கேட்டு வைத்தான் சுப்பையா.
அதைக்கேட்டு தன் பற்களை நறநறவென்று கடித்து, கை முஷ்டியை இறுக்கியவன், அவனை எரிக்கும்
பார்வை பார்த்து
“ஆமான் டா வச்சிருக்கேன் தான்...” என்று அவன் முகத்தில் ஒரு குத்து விட, அதைக் கேட்டு சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள் என்றால் சுப்பையாவுக்கோ
தூக்கிவாரிப் போட்டது.
அடித்திருந்த சரக்கு அந்தக் கணமே போதை இறங்கி போனது.
தன் பொண்டாட்டி ஏகபத்தினன் விரதி என்று தெரிந்தவனுக்கு ராசய்யாவின்
பதிலைக் கேட்டு அதிர்ச்சியோடு ஆடிப் போனான்
செல்வியோ பேரதிர்ச்சிக்குள்ளாகி, மீண்டும் தன்
காதுகளை பொத்திக்கொண்டு ராசய்யாவை எரிக்கும்
பார்வை பார்த்தாள்.
கொஞ்சம் சமாளித்த சுப்பையா, ராசய்யாவை
ஆராய்ச்சியுடன் பார்த்தவன்
“என்ன ராசு சொல்ற? “ என்று தடுமாற்றத்துடன் கேட்க
“ஏன் டா...நீ கெட்ட கேட்டுக்கு
இந்த புள்ளைய கண்ணாலம் கட்டி, இத்தனை நாள் குடும்பம் நடத்தி,
கூட ரெண்டு புள்ளையும் கொடுத்துட்டு அந்த புள்ள மேல சந்தேகப்படற... அதுமேல உனக்கு நம்பிக்கை
இல்லை.
பாக்கிறவனயெல்லாம் உன் பொண்டாட்டியா வச்சிருக்கியானு கேட்கறயே உனக்கு வெக்கமா இல்ல.
நீ நல்லபடியா இந்த புள்ளைய வச்சிருந்தா, இப்படி ஒரு கேள்வியை கேட்பியா? நீ வர்றவன்
போறவனை எல்லாம் பார்த்து அப்படி கேட்கறதால உன் பொண்டாட்டியை நீ சரியா வச்சுக்கலனு நீயே ஊருக்கு தண்டோர
போட்டு சொல்ற மாதிரிதான் ராஸ்கல்...
இன்னொரு தரம் பல்லு மேல நாக்கப்போட்டு அந்த புள்ளய ஏதாவது தப்பா பேசின, பேசறதுக்கு உனக்கு நாக்கு இருக்காது...ஜாக்கிரதை...” என்று பல்லைக் கடித்து வார்த்தையை கடித்து
துப்பினான் ராசய்யா.
ஆனாலும் சுப்பையாவின் சந்தேகம் அவன் மனதில் கேள்வியாய் தொங்கிக் கொண்டிருக்க
“அப்ப நீ ஆமானு சொன்னது? “ என்று தயக்கத்துடன் இழுக்க,
“ஆமான் டா... இந்த
புள்ளைய, என் கூட
பொறக்காத சகோதரியா, என்
தங்கச்சியா என் மனசுல வச்சிருக்கேன்.. இந்த புள்ளைக்கு… என் தங்கச்சிக்கு
ஏதாவதுனா உன்னை சும்மா விடமாட்டேன்.
இப்ப அடிச்சது சாம்பிள்தான். ஞாபகம் வச்சுக்கோ...இனிமேல் குடிக்கறத விட்டுபுட்டு ஒழுங்கா வேலை வெட்டிக்கு போய் நாலு
காசு சம்பாரி. புள்ள குட்டிகளை காப்பாத்தற வழியைப் பாரு...” என்று கர்ஜித்தவன் மீண்டும் ஒரு அறை
கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றான் ராசய்யா.
அவன் சுப்பையாவின் சட்டையை பிடித்து அடித்து கொண்டிருக்கும் பொழுதுதான், பூங்கொடி அவ்வழியாக
சென்று கொண்டிருந்தாள்.
அங்கு ராசய்யாவை கண்டதும் கூடவே அவன் அடிப்பதை சுற்றி நின்று எல்லாரும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதையும் கண்டு கோபம் பொங்கி வந்தது.
“சை... ரௌடி... ரௌடிப்பய... பாரு சுப்பையா அண்ணனை எப்படி போட்டு அடிக்கிறான்...இவன் அராஜகத்தை
தட்டி கேட்க ஆளே இல்லையா? “ என்று ராசய்யா வை மனதுக்குள் திட்டிக்கொண்டே நகர்ந்து சென்று விட்டாள்.
ஆனால் பிறகு, செல்வியின் மூலமாக
விஷயத்தை கேள்வி பட்ட கோமதி, அதை பூங்கொடியிடமும் சொல்லி இருந்தாள்.
இப்பொழுது கோமதி அதை பூங்கொடிக்கு நியாபக படுத்த, கோமதி சொன்னதில் இருந்த நியாயம் உறைத்தாலும் உடனே அவனை நல்லவன்
என்று ஒத்துக் கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை.
“ஆமாமா…பெரிய ஹீரோ தான்...அடுத்த சினிமா படத்துக்கு ஹீரோவா போடறதுக்கு மணிரத்னம்
சார் இந்த கருவாயனத்தான் தேடிகிட்டிருக்காராம்...” என்று தன்
கழுத்தை நொடித்துக் கொண்டாள் பூங்கொடி. ,
அதே நேரம் தேர் அவள் வீட்டு வாசலுக்கு வந்து இருக்க, அடுத்த கணம் அந்த இடமே பரபரப்பானது.
*****
ஏற்கனவே தயாராக வைத்திருந்த செம்பு குடத்தை தூக்கி
கொண்டு சென்று, தேர்
இழுத்து வருபவர்களின் கால்களுக்கு ஊற்றி அவர்களின் பாதத்தை தொட்டு வணங்கினாள்
பூங்கொடி.
அடுத்து ராசய்யாவுக்கும் அதேபோல செய்ய வேண்டும்.
ஏனோ அவன் காலை தொட்டு கும்பிட மனம் வரவில்லை அவளுக்கு.
அதனால் ராசய்யாவின் பாதத்திற்கு தண்ணியை ஊற்றியவள், குனிந்து பாதத்தை
தொட்டு கும்பிடாமல், குனிவதை போல போக்கு காட்டி நின்று கொண்டாள் அவனை
முறைத்தபடி.
அதை கண்டு கொண்டவன்,
“ஹோய் கருவாச்சி...என்னையெல்லாம் பார்த்தா சாமி மாதிரி தெரியலையா? என் காலுல விழுந்து கும்பிடல...” என்று அவளை சீண்டினான்
ராசய்யா...
“ஐய... இந்தத் தேரை இழுத்துட்டா நீ சாமியாய்டுவியா..?. ரௌடியான உன் கால் ல எல்லாம் விழ மாட்டாள் இந்த பூங்கொடி... “
என்று கழுத்தை வெட்டி அவனை முறைக்க,
“ஓஹோ... கதை அப்படி போகுதா? இப்ப பாரு... உன்னை
எப்படி என் கால் ல விழ வைக்கிறேன்...” என்று அவளுக்கு மட்டுமாய் கேட்கும்படி
கிசுகிசுக்க, அதே நேரம் தன் வீட்டு வாசலுக்கு தேர் வந்திருக்கும் சத்தம்
கேட்க, அடுப்படியில் வேலையாக இருந்த சிலம்பாயி, வேலையை நிறுத்திவிட்டு வேகமாக வாசலுக்கு விரைந்து வந்தார்.
அவருமே அங்கு நின்றிருந்தவர்களின் பாதத்தை தொட்டு கும்பிட்டு, பூசாரி நீட்டிய தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து பயபக்தியுடன் நெற்றியில்
பூசிக் கொண்டார்.
“என்ன அயித்த? வயசில பெரியவங்க... நீங்கள்லாம் என் கால்ல
விழறிங்க... ஆனா உங்க மவ மட்டும் விழாம சட்டமா சிலிர்த்துகிட்டு நிக்கறா? சாமி குத்தம் எதுவும்
ஆய்டப் போகுது...” என்று பூங்கொடியை
பார்த்து கண் சிமிட்டி விஷமத்துடன் சிரித்தான் ராசய்யா...
அதைக்கேட்டு திடுக்கிட்டு போனாள் பூங்கொடி.
“ஆஹா...பத்த வச்சுட்டானே இந்த பரட்ட... மாட்டி விட்டு விட்டானே மடையன்... இப்போ இந்த சிலம்பா
சாமி வராமலயே ஆடப்போகுது. அதனுடைய அர்ச்சனையை
ஆரம்பிக்க போகுது. ஸ்டார்ட் மியூசிக்...”
என்று தனக்குள்ளே கலாய்த்துக் கொள்ள, அவள் எதிர்பார்த்தமாதிரியே
சிலம்பாயி தன் மகளை முறைத்தவர்
“என்னடி இது? இதுதான் நான் உன்னை வளர்த்த லட்சணமா? எல்லாரும் பெரியவங்க
சின்னவங்கனு பார்க்காம, தேர் இழுத்துகிட்டு
வர்றவங்க கால்ல விழுந்து கும்பிடறப்போ
உனக்கு மட்டும் என்ன வந்ததாம்... அதுதான் முறை. போய் விழுந்து கும்பிடு.
அப்படியாவது உனக்கு நல்ல புத்தி வருதான்னு
பார்க்கலாம்...”
என்று கடிந்து கொள்ள, அதற்கு மேல் நின்றால் பேசியே கொன்று விடுவார் என்பதால் வேறு வழியின்றி
அவன் காலை பட்டும் படாமலும் தொட்டு விட்டு எழுந்து கொண்டாள் பூங்கொடி...
எப்படி? உன்னை என் கால் ல
விழ வச்சேன்...” என்று ராசய்யா
தன் புருவத்தை உயர்த்தி பெருமையுடன்
பார்க்க, அவளோ தன் வாயை இரு கோட்டுக்கும் இழுத்து பழிப்பு
காட்டி முறைத்தாள்.
அதே நேரம்
“என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா...” என்று ராசய்யாவின்
காலில் விழுந்து இருந்தாள் கோமதி.
அதைக்கண்டவன் பதறு தன்
காலை வேகமாக பின்னால் இழுத்துக் கொண்டான்
ராசய்யா.
“ஏ... புள்ள கோதி... இப்பத்தான உன் வீட்டு முன்னாடி தண்ணி ஊத்தி தொட்டு கும்பிட்ட.
மறுபடியும் எதுக்கு என் கால் ல விழற? “ என்று கண்டித்தான் ராசய்யா.
“வந்து... அது வந்து...
“ என்ன சொல்வது என்று தெரியாமல் கோமதி தடுமாற்றத்துடன் இழுக்க,
“அது ஒண்ணுமில்ல சாமி சார்... உங்க கால் ல இப்படி அடிக்கடி விழுந்து
தொட்டுக் கும்பிட்டா, அவளுக்கு சீக்கிரம் கல்யாணமாகும்னு யாரோ
சாமியார் சொன்னாங்களாம். அதனாலதான்
தெருவுக்கு தெரு ஓடி வந்து உங்களை தொட்டு தொட்டு கும்பிடறா...
இல்ல கோதி...” என்று நக்கலாக கோமதியை பார்த்து கண் சிமிட்டி
சிரிக்க, கோமதியின்
கன்னம் சிவந்து போனது.
“சும்மா இருடி...” என்று கிசுகிசுத்தவள், அவளின் இடுப்பில் கிள்ளி
முறைத்தாள் கோமதி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ வீட்டுக்கு போய் உன் ஆத்தாவுக்கு உதவி செய்.
அத்தன சொந்தக்காரங்களை வச்சுகிட்டு பாவம்
அது தடுமாறிக்கிட்டிருக்கும்...” என்று அவள் அன்னைக்காக அக்கறையுடன் சொல்ல
“பாத்தியா? “ என்று பார்வையால் பெருமையாக ஜாடை சொல்லிக் காட்டினாள் கோமதி.
“ஆமாமா.... நீதான் மெச்சிக்கணும்...” என்று கழுத்தை வெட்டினாள் பூங்கொடி.
அடுத்த நாள் கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீர்
விளையாட்டு திருவிழா.
கன்னிப் பெண்களுக்கு அன்று தான் நல்ல சந்தர்ப்பம்.
மனசுக்கு பிடித்த அத்தை மகன், மாமன் மகன்.
ஒன்னுவிட்ட அத்தை மகன் என்று பெரிய லிஸ்ட் தயார் பண்ணி வைத்துக்கொண்டு அவர்கள்
மீது மஞ்ச தண்ணியை ஊத்தி அவர்களை மஞ்சள் குளிக்க வைத்து வேடிக்கை செய்வார்கள்.
அதுவும் ராசய்யா மீது குடம் குடமாக மஞ்சதண்ணியை கொண்டு வந்து
கொட்டுவார்கள். அதற்கு பயந்து கொண்டே அன்று யார் கண்ணிலும்
படாமல் மறைந்து கொண்டான் ராசய்யா.
மதியம் பண்ணையார் வீட்டுக்கு கறிவிருந்து சாப்பிட சென்றுவிட்டு
அங்கயே வேலை செய்வதாக பாவ்லா காட்டி நின்று கொண்டான்.
மாலை வரை யார் கண்ணிலும் அகப்படாமல் ஒளிந்து கொண்டவன், மாலை ஆனதும் மஞ்சள் நீர் ஆடி முடித்து களைத்தவர்கள், இப்பொழுது கோவிலின் முன்னால் நின்றிருந்தனர்.
அனைவரும் கோவிலில் பூமிதியை பார்க்க நின்று கொண்டு இருக்க, மெதுவாக ஊருக்குள் வந்தான் ராசய்யா.
பண்ணையார் வீட்டில் இருந்து, ஊரை சுற்றியிருந்த
கடைசி தெரு வழியாக ஊருக்கு உள்ளே வந்து கொண்டிருந்தான்
அதே நேரம் தன் ஒன்னு விட்ட அத்தை மகனான சந்தோஷை விரட்டிக்
கொண்டிருந்தாள் பூங்கொடி.
ஒரு குடம் நிறைய மஞ்சள் நீரை எடுத்துக்கொண்டு அவன் மீது ஊத்துவதற்காக
விரட்டிக்கொண்டு வர, அவனும் அவள் கைக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடிக்
கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவனை துரத்தியவள், இறுதியாக அவன் எங்கேயோ
சென்று ஒளிந்து கொள்ள, அந்த தெருவின் கடைசியில் இருந்த ஒரு குட்டிச்சுவரின்
மறைவில் ஒளிந்துக் கொண்டு அவன் வருவதற்காக காத்து இருந்தாள்.
அப்பொழுது அழுத்தமான காலடி ஓசை அருகில் கேட்கவும், சந்தோஷ் தான் வந்து விட்டான் என்று எண்ணியவள், மறைவிலிருந்து
வெளிவந்து கண நேரத்தில் அங்கு வந்தவன் மீது குடத்தில் இருந்த தண்ணியை முழுவதும் கொட்டி
இருந்தாள்
“எப்படி ? என்கிட்ட மாட்டிக்கிட்டயா மாமா...!” என்று
வெற்றிக் களிப்புடன் நிமிர்ந்து பார்த்தவள், அடுத்த கணம் அதிர்ச்சியில் உறைந்து போனாள்
பெண்ணவள்.
அவள் எதிரில் சொட்ட
சொட்ட மஞ்சள் நீரில் நனைந்தவாறு நின்றிருந்தான்
ராசய்யா..!
Comments
Post a Comment