என்னுயிர் கருவாச்சி-14
அத்தியாயம்-14
“இங்க பாரு மச்சான்..! அந்த புள்ளைய நீ சும்மா விடக்கூடாது. எவ்வளவு திமிர் இருந்தா, ஊரே பார்த்து நடுங்குகிற உன்னைப்போய் கை நீட்டி அடிச்சிருப்பா? நீட்டின அவ கையை நீ உடைக்கிறது இல்லையா?
அன்னைக்கும் அப்படித்தான்...
பஸ்ஸ்டாப்பிங் ல, நீ அந்த அசலூர்க்காரனை அடிக்கிறப்ப, எல்லாரும் கைய கட்டிகிட்டு வேடிக்கை பார்க்க, இவ மட்டும் சிலுத்துக்கிட்டு உன்கிட்ட சண்டைக்கு வந்தா...
எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான் மச்சான்...” என்று புலம்பி தள்ளினான் குமரேசன்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சாராயக் கடையில் அமர்ந்திருந்தான் ராசய்யா.
திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று கெடாவெட்டு கறி விருந்து.
சொந்தக்காரர்கள், நட்பு வட்டங்கள், தெரிந்தவர், தெரியாதவர் என எல்லாரும் இன்றுதான் முக்கியமாக திருவிழாவிற்கு வந்திருந்தனர்.
அதோடு ஊரிலுள்ள எல்லா குடிமகன்களும், தங்கள் வீட்டுக்கு விருந்து உண்ண வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் அங்கே ஒன்றாக சங்கமித்து இருந்தனர்.
அது இல்லாமல், நிறைய பேர் கடைக்கு வருவதற்கு சங்கடபட்டுக் கொண்டு, முன்னாடியே சரக்கை வாங்கி வீட்டின் பின்புறம் இருக்கும் வைக்கோல் போரிலோ இல்லை விறகு போரிலோ மறைத்து வைத்துக் கொண்டு, வீட்டிற்கு வருகிற விருந்தாளிகளை, பின்புறமாக அழைத்துச் சென்று ஊத்தி கொடுப்பதும் வாடிக்கை.
பூங்கொடி சற்று முன்னர் கைநீட்டி ராசய்யாவை அறைந்து இருக்க, அவன் உள்ளே ஜிவ்வென்று கோபம் பொங்கியது.
இதுவரை அவனை யாரும் கை நீட்டி அடித்ததில்லை.
அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவனின் பெற்றோர்கள் ஒருநாளும் அவனை அடித்ததில்லை. கடிந்து கொண்டதும் இல்லை.
அவனை வளர்த்த தாத்தாவும் ராசா, ஐயா என்று பாசத்தோடுதான் அழைப்பார். விடலைப் பருவத்தில் யாராவது அவனை அதட்டினால் அவ்வளவுதான்... அவர்களை முறைத்துவிட்டு ஒதுங்கி சென்று விடுவான்.
இல்லையென்றால் தரையில் கிடக்கும் கல்லை எடுத்து தன்னை அதட்டியதற்கு அவர்களின் மண்டையை பிளந்துவிட்டு சென்றிருக்கிறான்.
அப்படிப்பட்டவனை ஒருத்தி கைநீட்டி அடித்துவிட்டாள்... அவமானமாக இருந்தது ராசய்யாவுக்கு.
அவனை அறைந்துவிட்டு பூங்கொடி குடத்தை எடுத்துக்கொண்டு ஓடிப் போனதும், அதிர்ச்சியோடு கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்த ராசய்யாவின் தோள்மீது விழுந்தது கரம் ஒன்று.
திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அவன் பின்னால் நின்றிருந்தான் குமரேசன்.
அங்கு நடந்ததை அவனும் பார்த்து இருந்தான்.
குமரேசன், அந்த ஊரில் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டு இருப்பவன்.
முசிறி அரசினர் கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாற்றை படித்து, சில பல அரியர்ஸ் வச்சு, படிப்பு முடிந்தும் மூனு வருசம் கழிச்சு எல்லாவற்றையும் கிளியர் பண்ணி பட்டம் வாங்கிய பட்டதாரி.
இந்த சேற்றில் எல்லாம் கால் வைக்க மாட்டேன். என் படிப்புக்கு, எனக்கு தெரிய கவர்மெண்ட் வேலை கிடைக்கும் என்று வாய் சவடால் விட்டுக்கொண்டு அவன் பெற்றோர்கள் வியர்வை சிந்த உழைக்கும் காசில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவன்.
அதோடு நின்று விடாமல், அந்த ஊரில் இருக்கும் தாவணி போட்ட பிள்ளைகளை எல்லாம் ஒன்னு விடாமல் சைட் அடிப்பவன்... அதுவும் அவனுக்கு பூங்கொடி மீது ஒரு கண்.
கருப்பாக இருந்தாலும், கலையாக இருப்பவள்...இயற்கையிலயே அமைந்திருந்த வனப்பான உடல் வாகும், எடுப்பான அங்கங்களும் காண அவனுக்கு ஜிவ்வென்று போதை ஏறும்.
எட்ட நின்று அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன், ஒரு முறை நேராக சென்று வம்பு பண்ணி வாலாட்டி வைக்க, சற்றுமுன் ராசய்யாவை அடித்ததைப் போல பளாரென்று ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டாள் பூங்கொடி.
ஏற்கனவே அவன் அந்த ஊர் பெண்களிடம் விரசமாக பேசுவதும், விரச்சு விரச்சு பார்ப்பதும் அறிந்திருந்தாள். அந்த கோபத்தை எல்லாம் இப்பொழுது கூட்டி அவன் கன்னத்தில் அறைந்தவள் அடுத்து வார்த்தையால் விலாசினாள்.
“ஏன்டா பொறுக்கி நாயே...உன் அப்பா அம்மா சம்பாரிக்கிற காசுல உட்கார்ந்து சாப்பிடறவனுக்கு பொம்பள சுகம் கேக்குதா?
வேலை வெட்டிக்கு போகாம குட்டி சுவத்துல உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொம்பள புள்ளைய எல்லாம் சைட் அடிக்கிறத விட்டுப்போட்டு உருப்படியா ஒரு வேலைக்கு போ...
இன்னொரு தரம் யார் கிட்டயாவது நீ வாலாட்டறதை பார்த்தேன், தொலச்சுபுடுவேன் தொலச்சு..... ஜாக்கிரதை...ராஸ்கல்..” என்று பெண் புலியாய் உறுமியவள் ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து விட்டு விறுவிறுவென்று சென்று விட்டாள்.
அந்த வன்மம் இன்னுமாய் அவனுள் புகைந்து கொண்டிருந்தது.
அவள் ராசய்யாவை அடித்ததை பார்த்தவன், அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள எண்ணியவன், ராசய்யாவை அங்கிருந்த மதுக்கடைக்கு அழைத்து வந்தான்.
அதோடு அவசரமாக அவன் வீட்டுக்கு ஓடி, அவன் நண்பன் ஒருவன் வாங்கி கொடுத்ததாக பாரின் சரக்கு பாட்டில் ஒன்றை கொண்டு வந்து, ராசய்யாவுக்கு ஊத்தி கொடுத்து குடிக்க வைத்து பூங்கொடியை பற்றி மோசமாக சொல்லிக் கொண்டிருந்தான் குமரேசன்.
ஒரு குவார்ட்டர் பாட்டிலை ஏற்கனவே உள்ளே தள்ளியிருந்த ராசய்யாவுக்கு இப்பொழுது குமரேசன் போதித்த பாடம் அப்படியே மனதில் பதிந்தது.
பூங்கொடி அவனை அடித்ததே திரும்ப திரும்ப கண் முன்னே வர, தாடை விடைக்க, முகம் இறுக, தன் கை முஷ்டியை இறுக்கினான் ராசய்யா
அதைக் கண்டு வெற்றி சிரிப்பை சிரித்துக்கொண்டான் குமரேசன்.
மேலும் இன்னொரு குவாட்டரை அவனுக்கு ஊத்திக்கொடுத்தவன், இன்னுமாய் ராசய்யாவுக்கு ஸ்க்ரு ஏத்தினான்.
“டேய் மச்சான்...அந்த ராங்கி காரிய நீ சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்யனும். என்னமோ அவதான் பெரிய உலக அழகி னு நெனப்பு. யாரப் பாத்தாலும் கை ஓங்கறா… இனிமேல் எந்த ஆம்பளையும் அவள் கை நீட்டி அடிக்கக் கூடாது
அந்த மாதிரி ஒரு தண்டனையை நீ அவளுக்கு கொடுக்கணும். உன்னால் மட்டும்தான் அவளை அடக்க முடியும். ஏதாவது செய் மச்சான்...” என்று இன்னுமாய் ராசய்யாவை தூண்டி விட்டான் குமரேசன்.
தன் தலையின் இரு பக்கமும் பிடித்துக்கொண்டு தலையை குனிந்தவாறு ராசய்யா ஏதோ யோசிக்க, பூங்கொடியின் “கையை விடுடா பொறுக்கி ராஸ்கல்....என்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவன் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் கையால் அடித்ததை விட, அவளின் வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி போல. அவள் சொன்ன பொறுக்கி ராஸ்கல் என்பதே திரும்பத் திரும்ப ஒலிக்க, அவன் உடல் விறைத்து போனது.
“என்னைய போய் பொறுக்கினுட்டாளே அந்த கருவாச்சி...அதற்கு அவள் அனுபவிக்கவேண்டும். அனுபவிக்க வைப்பான் இந்த ராசய்யா...”
என்று சூளுரைத்தவன் தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன், தன் கைலியை மடித்து தொடைக்கு மேல கட்டிக்கொண்டு, லேசான தடுமாற்றத்துடன் அந்த கடையில் இருந்து வேகமாக கோபத்துடன் வெளியேறினான் ராசய்யா.
அதை கண்ட குமரேசனும் குரூரமாக சிரித்துக் கொண்டான்.
******
ஊருக்கு நடுவில் இருந்த அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால் பூக்குழி இறங்குவதும், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அந்த கிராமம் முழுவதுமே கோவிலின் முன்னால் திரண்டிருந்தது.
பூங்கொடியும் அவள் குடும்பத்தாருடன் , அவள் அன்னை சிலம்பாயி அக்னி சட்டி எடுப்பதற்காக நின்றிருந்தனர்.
அவர்களுடன் சந்தோஷ் ம் நின்றிருந்தான். பூங்கொடியின் அருகில் ஒட்டி நின்று கொண்டு, அவளிடம் ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.
பூங்கொடியை தேடி வந்த ராசய்யா அதைப்பார்த்து உள்ளுக்குள் பல்லைக் கடித்தான். மேலும் அந்த சந்தோஷ் ஐ முதன்முறையாக உற்று பார்த்தான்.
அவனைப் போல கருப்பாக இல்லாமல் வெள்ளை வெளேரென்று மைதா மாவைப் போல இருந்தான். நிறம் மட்டும் அல்ல. உடலும் கூட அப்படித்தான்.
சற்றாய் பூசிய உடல். கன்னங்கள் இரண்டும் கொழுகொழுவென்று உப்பி இருக்க, பார்ப்பதற்கு புரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மைதாவைப் போலவே இருந்தான்.
அடர் நீல நிற ஜீன்ஸ்...சந்தனநிறத்திலான புல் ஸ்லீவ் போலோ டி-சர்ட். கண்களில் கூலர் என படு ஸ்டைலாக நின்றிருந்தான்.
ஹீரோ மாதிரி ஒரு ஆணை அந்த கிராமத்தில் முதன்முதலாக பார்க்க, அவனை சுற்றி நின்ற பெண்கள் எல்லாம் ஓரக்கண்ணால் அந்த சந்தோஷ் ஐயே சைட் அடித்துக்கொண்டிருந்தனர்.
அதைக்கண்டு அவனுக்கு முகத்தில் பூரிப்பு. அவனும் அவர்களை ஆர்வமாக பார்த்து வைத்தாலும் அவன் பார்வை அடிக்கடி நிலை கொண்டது பூங்கொடியிடம்தான்.
வெள்ளையாக இல்லையென்றாலும், நாட்டு கட்டை போல நச்சென்று இருந்த அவளின் கிராமத்து அழகு அவனை வசீகரித்தது.
அதனால் கண்ணில் அணிந்திருந்த கூலரை அவ்வபொழுது ஸ்டைலாக ஒற்றை விரலால் தூக்கி விட்டுக் கொண்டான். கண்ணாடியின் மறைவில் பூங்கொடியை விழுங்கி விடுவதை போல பார்த்து வைத்தான்.
சற்று தள்ளி நின்று அவர்களை பார்த்துக் கொண்டு இருந்த ராசய்யாவுக்கு சந்தோஷ் ன் பார்வையில் இருந்த விரசம் தெளிவாக தெரிந்தது. பல்லை நறநறவென்று கடித்து தன் கை முஷ்டியை இறுக்கினான் ராசய்யா.
அப்பொழுதுதான் பூங்கொடியின் அக்கா மகன் ஆதவன் பாலுக்காக அழுவ, பால் பாட்டிலை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.
பொற்கொடி தன் தங்கை பூங்கொடியை போய் எடுத்துக் கொண்டு வரச் சொல்ல, அவளும் வீட்டை நோக்கி சென்றாள்.
அதுவரை பூங்கொடியிடம் கடலை போட்டுக் கொண்டு இருந்த சந்தோஷ், இப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த கோமதியிடம் திரும்பியவன், அவளிடம் வளவளக்க ஆரம்பித்தான்.
அதைக் கண்ட ராசய்யாவுக்கோ அவனை அடித்து துவைக்கும் ஆவேசம் வந்தது. அந்த மைதா மாவு தன்னுடைய ஊர் பிள்ளைகளிடம் இப்படி வழிந்து கொண்டு நிற்பது அவனுக்கு பிடிக்கவில்லை
பொதுவாகவே சந்தோஷ் மட்டுமன்றி யாராவது அந்த ஊர் பெண்களிடம் வம்பு இழுத்தாலோ, வழிந்து கொண்டு நின்றாலோ, ஏதாவது அவர்களை சீண்டி பேசினாலோ அடுத்த அடி ராசய்யாவிடம் இருந்து வந்திருக்கும்.
அதனாலேயே காமாட்சிப்பட்டி பெண்கள் என்றால் எல்லாருமே கொஞ்சம் பார்த்து நடந்து கொள்வார்கள்.
“அந்த கருவாச்சி இந்த மைதா மாவு பயலை பெரிய பட்டணத்திலிருந்து வந்தவன் என்று பெருமை அடித்துக் கொள்கிறாள். இவன் என்னடாவென்றால், இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறான்...
செவினியில ஓங்கி ஒரு அறை விட்டா பார்வை ஒலுங்கா இருக்கும். என்ன பண்றது? அந்த கருவாச்சிக்கு சொந்தக்காரனா போய்ட்டான்...” என்று உள்ளுக்குள் பல்லை கடித்தான் ராசய்யா.
அவன் சொன்ன மாதிரி பூங்கொடிக்கு சொந்தக்காரன் என்பதால் மட்டுமே அவனை விட்டு வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்நேரம் ரெண்டு தட்டு தட்டி, துண்டக் காணோம் துணியக் காணோம் என்று சந்தோஷ் ஐ ஓட வைத்திருப்பான் ராசய்யா.
******
Comments
Post a Comment