என்னுயிர் கருவாச்சி-15


 அத்தியாயம்-15

வீட்டிற்குச் சென்ற பூங்கொடி, ஆதவனின் பால் பாட்டிலை கலுவி பாலை லேசாக சூடு பண்ணி,  பாட்டிலில் ஊற்றியவள்,  அதை மூடி எடுத்துக் கொண்டு வாயில் பக்கம் திரும்ப,  அப்படியே திடுக்கிட்டு அதிர்ந்து போய்  நின்றாள்.  

அந்த சமையல் அறையையே சிறியதாக்கி கொண்டு,  வாயிலை அடைத்தபடி நின்று இருந்தான் ராசய்யா.  

அவனிடமிருந்து வந்த மதுவின்  நெடி  அவள் நாசியை தாக்கியது. அவன்  குடித்திருக்கிறான் என்பதை அது காட்டி கொடுக்க, சுள்ளென்று கோபம் தலைக்கேறியது.

“இது ஒன்னுதான் உன்கிட்ட இல்லாம இருந்தது.  இப்ப அதையும் ஆரம்பிச்சுட்டியா? ரொம்ப சந்தோஷம்...” என்று அவனை கோபமாக பார்த்து முறைத்தாள் பூங்கொடி.

அவளின் முறைப்பை அசட்டை செய்தவன்,  

“எல்லாம் உன்னால தான் டி...” என்று பதிலுக்கு முறைத்தான் ராசய்யா.  

அதைக்கேட்டு திடுக்கிட்டவள்,  

“என்னாலயா? நானா உன்னைப்போய் குடிச்சிட்டு வான்னேன்? இந்த ஆம்பளைகளே  இப்படித்தான்...அவனுங்க சுகத்துக்காக போய் ஊத்திக்கிறது. கேட்டா யார் மேலயாவது பழியை தூக்கி போட்டுட்டு தப்பிச்சுக்கிறது...” என்றாள் முழு மொத்த எரிச்சலுடன்.  

“ஆமான் டி... நீ போக வேண்டாம் னு தடுக்கறதுக்காக, லேசா உன் கையை புடிச்ச என்னை மட்டும் கை நீட்டி அடிச்ச.  அந்த பட்டணத்துக்காரன் மைதாமாவுக்கிட்ட மட்டும் அப்படி பல்லை இளிச்சுகிட்டு பேசுற..” சிடுசிடுத்தான் ராசய்யா...

“ஹ்ம்ம்ம் அது என் இஷ்டம். நான் யார்  கிட்ட வேணாலும் பேசுவேன். பல்லை இளிப்பேன். அதைக் கேட்க நீ யாரு? “  என்று கோபத்துடன் தலையை சிலுப்பினாள் பூங்கொடி.  

“வேணா கருவாச்சி. என்கிட்ட இப்படி தலையை சிலுப்பாத..” அவள் செய்கையில் கோபமானவன் அவளை அதட்டினான்.

ஏற்கனவே அவன் மீது கடுப்பில் இருந்தவள், அவனின் கருவாச்சி என்ற அழைப்பில் இன்னுமாய் கொதித்தாள்.

“ஓஹோ நீ பெரிய மகாராஜா.  உன்கிட்ட தலையை சிலுப்பினா, தலையை சீவிடுவியாக்கும்? என் தலை...நான் சிலுப்புவேன்.  உனக்கென்ன?

யாரும் இல்லாத நேரத்துல இப்ப எதுக்கு இங்க வந்து வம்பு பண்ணிகிட்டு இருக்க? முதல்ல   வெளியில போ...” கையை வாயில்புறமாக காட்டி அவனை வெளியில் விரட்ட முயன்றாள் பூங்கொடி.    

அவனோ அவள் அதட்டலுக்கு கொஞ்சமும் அசராமல் இன்னுமே சட்டமாய் நின்று கொண்டவன்

“ஏன் டி?  என்னை பார்த்தா மட்டும் உனக்கு எரியுது? இதுவே  அந்த மைதாமாவு   பட்டணத்துக்காரனை பார்த்தால் மட்டும் தேனொழுக பேசி வழிஞ்சுகிட்டு சிரிக்கிற...”   என்று எரிந்து விழுந்தான்.

“ஆமா...நான் அப்படித்தான் தேனொழுக பேசுவேன்...வழிஞ்சுகிட்டு சிரிப்பேன். அது என் இஷ்டம். உன்னைக் கண்டாலே எனக்கு பத்திக்கிட்டு வருது...பொறுக்கி... முதல்ல வெளியில் போ...” என்று இன்னுமாய் எரிந்து விழுந்து முறைத்தாள் பூங்கொடி.  

அவள் பொறுக்கி என்றதும் கொஞ்சமாய் மட்டு பட்டிருந்த அவன் கோபம், படமெடுத்து ஆடும் சர்பமாய் விசுக்கென்று எழுந்து பொங்கியது.

கூடவே குமரேசன் பூங்கொடியை பற்றி சொல்லி ஏத்திவிட்டது வேற நினைவுக்கு வர, அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன்

“ஏய்...யார பார்த்து பொறுக்கின்ற? நீ என்னைப் போய் பொறுக்கினு சொல்றியே...உண்மையிலயே நீ சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்கியே அந்த மைதா மாவு... அவன் தான் டி சரியான பொறுக்கி.

நானும் அவன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன். எல்லா புள்ளைங்க கிட்டயும் வழிஞ்சு வழிஞ்சு கடலை போடறான். விரசமா பார்த்து வைக்கிறான். பத்தாதற்கு உன்னை பார்வையாலேயே முழுங்கிடற மாதிரி பார்த்து வைக்கிறான்.

அது புரியாத நீ அவன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்க...” என்று ராசய்யா சந்தோஷ் ஐ பற்றி அடுக்கி கொண்டே போக, அதற்குமேல் பொறுக்க முடியாதவளாய்

“போதும் நிறுத்து... அவரைப் பற்றி இனி நீ ஒரு வார்த்தை பேசாத...” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தாள்.

அந்த சந்தோஷ் ஐ பற்றி இவன் உண்மையை சொல்லும் பொழுதெல்லாம் பூங்கொடிக்கு வரும் கோபத்தை கண்டு ராசய்யாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அவனுக்கு இவ ஏன் வக்காலத்து வாங்கறா  என்று இன்னுமாய் கோபம் தலைக்கேற,  

“பேசுனா என்னடி செய்வ? ஏன் நீ அவனைத்தான் கட்டிக்க போறியா? “  என்றான் நக்கலாக.

பூங்கொடியும் தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நேராக அவனை  பார்த்தவள்

“ஆமா...அப்படித்தான் வச்சிக்க... அவனைத்தான் கட்டிக்க போறேன் உனக்கு என்ன?” என்று முறைத்தாள்.  

“இங்க பாரு கருவாச்சி... அவன்கிட்ட பணம் வேணா இருக்கலாம். அவன் குணம் சரியில்லை. அவன் பார்வையே தப்பு தப்பா இருக்கு.  அவனைக் கட்டிக்கிட்டா நீ  நல்லா இருக்க மாட்ட...” என்று அந்த நிலையிலும் ராசய்யா தன் பொறுமையை இழுத்து பிடித்து பொறுமையாக எடுத்துச் சொல்ல,  

“நான் நல்லா இருக்கேன். இல்ல நாசமா போறேன். அதை பத்தி உனக்கு என்ன வந்ததாம்.?  மொதல்ல நீ வெளியே போ...”  என்று அவனை சமையல் அறையில் இருந்து வெளியில் தள்ளுவதிலயே  குறியாக இருந்தாள் பூங்கொடி.

வீட்டில் யாருமில்லாத நேரம் அவளும் அவனுமாய்...  அதுவும் அந்த மாலை நேரத்தில் வீட்டில் தனியாக இருப்பது யாராவது ஒருத்தர்  கண்ணில் பட்டால் போதும்.

இதை பெரிய விஷயமாக ஊதி பெருசாக்கி விடுவார்கள். அதைப்பற்றி அவளுக்கு ஒன்றும் கவலையில்லை தான்.  ஆனால் ஊர் வாய்க்கு தேவையில்லாமல் அவல் ஆக வேண்டுமே என்றுதான்  அவனை வெளியேற்ற முயன்றாள்.

அதோடு ஏதாவது தப்பாக சிலம்பாயி காதுக்கு போச்சுனா அம்புட்டுதான். அவள் காலேஜ்க்கு முழுக்க போட வேண்டியதுதான். அதனாலயே அவனை வெளியேற்ற முயன்றாள் பூங்கொடி.

அதை புரிந்து கொள்ளாத ராசய்யாவோ, பூங்கொடிக்கு உதவி செய்வதாய் எண்ணி அவளுக்கு உபத்திரத்தை கொடுத்துக் கொண்டிருந்தான்.

“இங்கே பாரு பூவு... நீ என்னை கை நீட்டி அடிச்சதுக்கு உன்னை பழி வாங்கத்தான் வந்தேன்.  ஆனால் என்னால் அப்படியெல்லாம்  உன்கிட்ட நடந்துக்க முடியல.  

கடைசியா சொல்றேன்...அந்த சந்தோஷ் சரியில்லாதவன்.  அவன்கிட்ட இருந்து தள்ளி நில். “  என்று உரிமையுடன் எச்சரிக்க,  பெண்ணவளுக்கோ  அந்த அவனின் அக்கறை சக்கரை எதுவும் மண்டையில் உறைக்கவில்லை.

மீண்டும் அவனை  விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியவள், அவன் சொன்னதை மேலோட்டமாக கேட்டுவிட்டு,

“என் மேல இருக்கிற அக்கறைக்கு  ரொம்ப தேங்க்ஸ். எனக்கு எது சரி எது தப்புன்னு தெரியும்...அதை நான் பார்த்துகிறேன். யாரும் எனக்கு சொல்லித் தர வேண்டாம்.  

நீ முதல்ல இடத்தை காலி பண்ணு. நீயே ஒரு பொறுக்கி. நீ என் அத்தை மவனை பற்றி பேச வந்துட்ட...” என்று எள்ளலாக சிரித்து முறைக்க,  அவள்  பொறுக்கி என்று அழைத்ததில் கொஞ்சமாக இறங்கி இருந்த அவன் கோபம் மீண்டும் பொங்கி எழுந்தது.  

கூடவே அவன் சொல்வதை அவள் கொஞ்சமும் காதில் போட்டுக் கொள்ளாமல், திமிராக பதில் சொல்லிக்கொண்டிருந்ததை கண்டதும் குமரேசன் சொன்னது  நினைவு வந்தது.

“அவள் திமிரை நீதான் அழிக்க வேண்டும் மச்சான். கொஞ்சமாவது அவ யாரையாவது மதிக்கிறாளா? யாரை பார்த்தாலும் எடுத்தெறிஞ்சு பேசறாபொசுக் பொசுக்குனு கையை நீட்டறா...” என்று சொன்னது நினைவு வர, அடுத்த கணம்  தன் கை முஷ்டியை இறுக்கினான் ராசய்யா..

“ரொம்ப திமிரா பேசாத டி. நான் சொல்றதைக் கேட்பியா   மாட்டியா? “  என்று உறும, அவன் சொன்ன டி யில் கொதித்து எழுந்தவள், அவனை எதிர்த்து பேசவேண்டும் என்பதே பிரதானமாய் பட,

“மாட்டேன் போடா... நீ என்ன பெரிய உத்தமபுத்திரனா.  நீ சொல்றதை நான் கேட்க. நீயே ஒரு பொறுக்கி... நீ இன்னொருத்தனை பற்றி குத்தம் சொல்ல வந்துட்ட.. போவியா...” என்று இளக்காரமாக முறைக்க,  அதில் இன்னும் வெகுண்டு எழுந்தான் ராசய்யா.  

“இங்க பார் பூவு. நீ என்னை ரௌடி னு சொல்லு...வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்தறவன் னு சொல்லு..ஒத்துக்கறேன். ஆனால் பொறுக்கினு மட்டும் சொல்லாத...” என்று பல்லை கடித்தான்.

“இதோடா...ஒரு பொறுக்கியை  பொறுக்கினு சொன்னா இம்புட்டு கோபம் வருது... செத்த நேரத்துக்கு முன்னால் என் கையை பிடிச்சு இழுத்தவன் தானே நீ... அப்ப பொறுக்கி இல்லாம வேற என்னானு சொல்றதாம்..” என்று நக்கலாக சொல்ல,

“ஏய் இன்னொரு தரம் அப்படி சொல்லாத...நான் கையை புடிச்சது உன்னை போக வேண்டாம்னு தடுக்கத்தான். மத்தபடி வேற எந்த தப்பான எண்ணத்திலயும் இல்ல...” என்று விளக்க முயல,

“நீ இப்ப இந்த இடத்தை காலி பண்ணல, நான் அப்படித் தான் சொல்வேன்...  பொறுக்கி...  பொறுக்கி... “ என்று கத்த,  அடுத்த முறை பொறுக்கி என்று சொல்லியவளின்  சத்தம் அவளுக்கே கேட்கவில்லை.  

அவள் பொறுக்கி என்று கத்த முயல, அவளின் இதழ்களோ அசைய மறுத்தன.

அப்பொழுதுதான் அவளின் மென்மையான செவ்விதழ்கள் அவனின் கரடுமுரடான அழுத்தமான உதடுகளால்  சிறை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்தாள் பெண்ணவள்.

அவன் அவ்வளவு தூரம்  தன்னை பொறுக்கி என்று சொல்ல வேண்டாம் என்று எச்சரித்தும் அவள் கோபப்பட்டு அப்படியே அழைத்திருக்க, அதில் உச்சகட்ட கோபத்திற்கு சென்றவன் வேகமாய் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்து அவளை அடைந்தவன், அவளை  தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து மறு கரத்தால் அவளின் பின்னங்கழுத்தைப் பிடித்து நிமிர்த்தி,  அவனை பொறுக்கி  என்று சொன்ன வாயை அடைத்து இருந்தான்  ராசய்யா.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய சம்பவத்தை முழுவதுமாக உணர முடியவில்லை பூங்கொடியால். அவளின் மூளை முற்றிலுமாக செயல் இழந்து போயிருந்தது.

சில நொடிகள் கடந்து செல்ல, மெல்ல மெல்ல செயல் இழந்து போயிருந்த அவளின் மூளை இப்பொழுது கொஞ்சமாக விழித்துக் கொள்ள, அவனின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்றாள் பூங்கொடி.

அவனோ அவள் வாயை அடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவள் இதழை  சிறை பிடித்தவன், அவன் உள்ளே சென்றிருந்த மது இப்பொழுது அதன் வேலையை காட்ட, தன்னிலை இழந்து போனான்.

மதுவின் ஆதிக்கத்தால் மாதுவின்  மெல்லிதழை  சுவைக்க ஆரம்பித்தான்  ராசய்யா.

அவன் இதழின் அழுத்தமும் அவன் மீது இருந்து வந்த மதுவின் நெடியும் இன்னுமாய்  அவளின் மூளையை விழித்துக் கொள்ள வைக்க, அப்பொழுதுதான் அங்கே நடந்து கொண்டிருப்பது மண்டையில் உறைத்தது.

உடனே அவளுக்கு குமட்டிக்கொண்டு வர, அருவருப்பில் முகத்தை சுளித்தவள் இன்னுமாய் அவனிடமிருந்து திமிறிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

அதுவரை மென்மையாக அவளை தண்டித்து கொண்டிருந்தவன்,  அவள் முகத்தில் வந்த வெறுப்பை, அருவருப்பை காண மீண்டும் கொதித்தது.

தன்னோடு சேர்த்து இன்னுமாய் அணைத்தவன் அவளின் இதழை வன்மையாக முத்தமிட  ஆரம்பித்தான்.

பெண்ணவளும்  அவனிடம் இருந்து விடுபட முயல,  பாவம் அவனின் திடகாத்திரமான உடல் வலிமைக்கு முன்னால் அந்த பெண்மையின் போராட்டம் பெரிதாக ஜெயிக்கவில்லை.

அவனோ இன்னும் இன்னுமாய் ஆழமாய், அழுத்தமாய்  வன்மையாய் முத்தமிட, கண்ணில் நீர் துளிர்க்க, செய்வதறியாது தவித்தவள், சற்று நேரத்தில் மூச்சுக்காற்றுக்காய் தவிக்க ஆரம்பித்தாள்.

அவளின் இதழ்களில் புதைந்து கொண்டிருந்தவனோ அனிச்சையாய் அவள் முகம் நோக்க, அவளின் முகத்தில் தெரிந்த வலியும் வேதனையும், கண்களில் தெரிந்த கண்ணீரும், கூடவே அவள் மூச்சுக்காற்றுக்காய் தவித்து தடுமாறுவதும் காண, சட்டென்று தன் பிடியை தளர்த்தினான்.

மனமே  இல்லாமல் அவளின் இதழை விடுவித்தான். அவளின் கழுத்தை வளைத்து இருந்த பிடியையும் தளர்த்தி தன் கையை விலக்கி கொண்டான்.

அவனின் வலிமையான இரும்பு கரத்தில் இருந்து விடுதலை கிடைத்ததும், கழுத்து லேசாக நெறிபட்ட வலியில் பூங்கொடி  லொக் லொக் என்று இருமி தன் தொண்டையை   சரி பண்ண,  அவளை வன்மமாக பார்த்தவன்,  

“இப்ப தெரிஞ்சுகிட்டியா என்னைப்பற்றி...இன்னொரு தரம் என்னை பொறுக்கினு சொன்ன, அவ்வளவுதான்...” என விரல் நீட்டி மிரட்ட,  அதற்குள் ஒருவாறு சுதாரித்து இருந்தவள், பார்வையில் அமிலத்தை கொட்டி அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தவள்,  தன்னை மறந்து மீண்டும் போடா பொறுக்கி என்று சொல்லி முறைத்து  வைத்தாள்.

அவளை விட்டு விலகி சற்று தள்ளி இருந்தவன், அவளின் பொறுக்கியில்  மீண்டும் ரௌத்திரமானவன், அவளை இழுத்து இறுக்கி அணைத்து அவளின் இதழை மீண்டும்  மோசமாய் இன்னும் மோசமாய் தண்டித்தான்.  

இப்பொழுது அவன்  கொடுத்த முத்தத்தின் வலி தாங்காமல்,  மீண்டும் முகத்தில் வேதனை பொங்க, வலியில் சுருண்டவள் தன்னை விட்டு விடச் சொல்லி பார்வையால் கெஞ்ச,   அதைக் கண்டு இப்பொழுது முழு திருப்தி ராசய்யாவுக்கு.

எப்பொழுதும் யாருக்கும் அஞ்சாமல் திமிராக பதில் அளிப்பவளின் கண்களில் பயத்தை கொண்டு வந்தாச்சு. இனிமேல் யாரிடமும் இவள் கையை நீட்ட மாட்டாள்...” என்று உள்ளுக்குள் வெற்றி சிரிப்பை சிரித்துக்கொண்டான்.

தன் பிடியை விட்டவன் மீண்டும் அவளை குரூரமாக பார்த்தவன்  

“இது... இந்த பயம் எப்பவும்  இருக்கணும். இன்னொரு தரம் என்னை பொறுக்கி னு  சொன்ன,  இதைவிட மோசமா தண்டிப்பேன்.  எழுதி வச்சுக்க...”  என்றவன் தரை அதிர தள்ளாட்டத்துடன் அங்கிருந்து வெளியேறினான்  ராசய்யா..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!