என்னுயிர் கருவாச்சி-16

 


அத்தியாயம்-16

 

ண்ணை இருட்டிக்கொண்டு வந்தது பூங்கொடிக்கு.

சற்று முன்னால் நடந்ததை அவளால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. ராசய்யா தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்திருக்கவும் இல்லை.

எப்பொழுதும் அவளிடம் வம்பு இழுப்பான் தான். இன்று அவனை திட்டியதை விட எத்தனையோ முறை மோசமாக அவனை திட்டி இருக்கிறாள் தான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஒரு கிண்டல் சிரிப்போடு சென்று விடுவான்.

இந்த மாதிரி ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை.

அப்படியே கோபம் வந்திருந்தாலும் அவளை அடித்து இருக்கலாம் ஆனால் இப்படி கேவலமாக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி செய்வான் ஏன்று தெரிந்திருந்தால்,  அவனை வீழ்த்த தகுந்த மாதிரி தன்னை தயார் படுத்தி இருந்திருப்பாள்.

அவனிடம் வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இப்படி செய்வான் என்று எண்ணியிருக்கவில்லை.

அவன்  கொடுத்த முத்தமும்,  அவன் மீது இருந்து வந்த மதுவின் வாடையும் இன்னுமே அங்கயே சுற்றிக்கொண்டிருக்க, இன்னுமாய் குமட்டிக் கொண்டு வர,  தலையை சுற்றியது பூங்கொடிக்கு.

தலையை பிடித்துக்கொண்டே குனிந்தவாறு சுருண்டு தரையில் அமர்ந்து விட்டாள்.  

சில நொடிகள் அப்படியே அமர்ந்து இருந்தவள், மெல்ல நிமிர்ந்து பார்க்க, அப்பொழுதுதான் சமையல் அறை மேடையின் மீது இருந்த பால் பாட்டில் மீது பார்வை படுகிறது.

அப்பொழுதுதான் ஆதவன் இந்த பால் பாட்டிலுக்காக அழுது கொண்டிருப்பான்... அவள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது உறைக்க,  முயன்று தன்னை  சமனப்படுத்த முயன்றாள் பூங்கொடி.  

மெல்ல எழுந்து, குடிப்பதற்காக அண்டாவில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கையால் முகத்தை துடைக்க, அவள்  கையில் சிவப்பாக ஏதோ வழிந்து கொண்டு இருந்தது.  

அதிர்ந்து போய் கையை திருப்பி பார்க்க அவள் கையில் ரத்தம் பட்டிருந்தது. ரத்தம் எப்படி வந்தது என்று யோசித்தவாறு அவசரமாக அவளின் கை அவளின் உதட்டுக்கு சென்றது.

அங்கே தடவிப்பார்க்க, கையில் பிசுபிசுத்தது. அருகில் இருந்த சில்வர் தட்டை எடுத்து அதில் அவள் முகம் பார்க்க,  அவளின் உதட்டில் இருந்துதான் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  

ராசய்யா  அவள் மீதான கோபத்தில் அழுந்த முத்தமிட்டிருக்க, அவளின் இதழ்கள்  கடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அதைக் கண்டதும் இன்னுமாய் துடித்துப் போனாள் பெண்.

ஏதோ சாக்கடைக்குள் விழுந்துவிட்டதைப் போல,  அவள் உடலெல்லாம் மனித கழிவை பூசிக் கொண்டதைப் போல அருவருத்தது.

உடல் எல்லாம் கம்பளி பூச்சி ஊருவதை போல அருவருக்க, அவன் செயலில் மேனி எங்கும் பற்றி எரிய, அருவருப்பாக முகத்தை சுளித்தவள், உடனே தன் உதட்டை கழுவினாள்.

ரத்தமோ  விடாமல் வழிந்து கொண்டிருந்தது.  

“சை...இந்த அளவுக்கா கடிச்சு வைப்பான்...சரியான காட்டு மிராண்டி..காண்டா மிருகம்...ரௌடி...பொறுக்கி...விளங்காதவன்...” என்று எல்லா கெட்ட வார்த்தைகளிலும் அவனை திட்டி அர்ச்சனை செய்தவாறு,

அடுப்படியில் இருந்த அஞ்சறை பெட்டியை எடுத்து,  அதில் இருந்த  மஞ்சள் தூளை கொஞ்சமாக எடுத்து கடிபட்ட இடத்தில் வைத்து  அழுத்த இன்னும் உயிர் போகும் வலியை கொடுத்தது.  

ஆனாலும் ராசய்யாவின் செயலால் அவள் மனதில்  எழுந்த வலியை விட இது ஒன்றும்  பெரிதாக தெரியவில்லை அவளுக்கு.  பல்லைக் கடித்து தன் வலியை பொறுத்துக்  கொண்டவள்,  ஒரு டவலை எடுத்து முகத்தில் அழுந்தத் துடைத்துக் கொண்டாள்,

நலுங்கி இருந்த அவள் தாவணியை சரியாக நீவி விட்டுக்கொண்டு,  கலைந்திருந்த கூந்தலையும் சரி செய்தவாறு,  தளர்ந்து போயிருந்த அவளின் சரீரத்தை முயன்று தேற்றி , துவண்டு போன காலையும் இழுத்து வைத்து பால் பாட்டிலுடன் வெளியில்  வந்தாள் பூங்கொடி.  

வீட்டை பூட்டிக்கொண்டு அந்த தெருவின்  கடைசியில் வந்தவளுக்கு அங்கிருந்த குட்டிசுவற்றின் மீது யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது.

அதோடு பக்கத்தில் நெடுநெடுவென்ற இன்னொரு உருவம் நின்றிருக்க, அது  அந்த ரௌடி ராசய்யா தான் என்பது தொலைவில் இருந்தபடியே தெரிகிறது.

அவன் அருகில் சுவற்றின் மீது உட்கார்ந்தவனை சரியாக அடையாளம் தெரியவில்லை.

யாருமில்லாத அந்த இடத்தில் அவர்களை கடந்து தான் செல்லவேண்டும். முன்பிருந்த பூங்கொடி என்றால் யாரையும் சட்டை செய்யாமல் விடுவிடுவென்று கடந்து சென்றிருப்பாள்.

ஆனால் சற்றுமுன் ராசய்யா அவளை மனதால் வீழ்த்தி இருந்ததால்,  அவள் உடலிலும் மனதிலும் இருந்த சக்தி எல்லாம் வடிந்து போயிருந்தது.

அதுவும் அவர்கள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பேச்சில் தன்னை ஜெயிக்க முடியாதவன், தன் உடல் வலிமையை காட்டி ஜெயித்து விட்டானே என்ற ஆற்றாமை இப்பொழுதும் பொங்கி கொண்டிருந்தது.

அவள் மட்டும் அல்ல. பல பெண்கள்,  ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் சரிசமமாக முன்னேறி வந்தாலும்,  இந்த உடல் வலிமை என்பது மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேறதான்.

அதை வைத்துத்தானே எத்தனையோ ஆண்கள் , பெண்களை பணிய வைத்துவிடுகிறார்கள். அதுவும் தங்கள் வலிமையை காட்டி பெண்ணவளின் பெண்மையுடன் அல்லவா மோதுகிறார்கள்.

அந்த ஆணை எதிர்க்க சக்தியின்றி பெண் ஆணுக்கு அடங்கிப்  போவது இங்கேதான்.

அதுவும் இந்த ராசய்யாவை போல ஆண்கள், பெண்ணை முத்தமிட்டு விட்டாலோ, அவளை பாலியல் பலாத்காரம் செய்து அவளின் பெண்மையை அழித்துவிட்டாலோ,  அவளின் தன்னம்பிக்கையை அழித்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

அதற்கு தகுந்த மாதிரி இந்த பெண்களும்  அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

தைர்யமாக வலம் வரும் பெண்கள் பலரும் தங்கள் பெண்மைக்கு ஒரு பங்கம் வந்து விட்டால்,  தங்கள் தன்னம்பிக்கையை தொலைத்து மூலையில் சுருண்டு விடுகிறார்கள் தான்.

அதுதான் இந்த ஆண்களுக்கும் வேண்டும்.

நேருக்கு நேர் நின்று ஜெயிக்க முடியாதவர்கள் இந்த மாதிரி குறுக்கு வழியைத்தானே தேர்ந்தெடுக்கிறார்கள் இந்த திமிர் பிடித்த ஆண்கள்...

“ஆனால் அந்த கருவாயனை ஜெயிக்க விடமாட்டாள் இந்த பூந்க்கொடி...என் சம்மதம் இல்லாமல் என் மீது திணிக்கபடும் எதுவும் எனக்கு சொந்தமானது இல்லை. அவன் என்னை முத்தமிட்டு விட்டதால் ஒன்னும் என் கற்பு பறிபோய் விடவில்லை.

அசிங்கத்தை மிதித்து விட்டால் நம் காலை வெட்டியா விடுகிறோம்...காலை கழுவிக்கொண்டு கவனமாக செல்வதில்லை. அது போலத்தான் இந்த நாய் பண்ணினதும். அவன் செய்த செயலால் நான் ஒன்னும் பாதிக்கப்படவில்லை என்று அவனுக்கு காட்டுகிறேன்...

தப்பு யார் செய்தாலும் தப்பை தப்பு என்று சுட்டிக்காட்டுவது தப்பு என்று யார் சொல்லிவிட முடியும். இவன் காட்டும் பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டாள் இந்த பூங்கொடி.

அவனுக்கு நான் யாரென்று காட்டுகிறேன்...” என்று தலையை சிலுப்பி கொண்டவள், அதுவரை அவள் உடலை சூழ்ந்திருந்த அயர்ச்சியை தூர விரட்டியவள், தன் முழு உயரத்துக்குமாய் நிமிர்ந்தவாறு நிமிர்ந்த நடையுடன் அந்த தெருவின் கடைக்கோடிக்கு சென்றாள்.

கொஞ்சம் அருகில் சென்றதும் அங்கே சுவற்றின் மீது அமர்ந்திருப்பவன்  குமரேசன் என்பது புரிகிறது. அவன் ஏதோ ராசய்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

ராசய்யா மதுபானக்கடையில் இருந்து வேகமாக வந்ததும் குமரேசனும் அவனைப் பின் தொடர்ந்து வந்தான்.

கோவிலில் இருந்து வந்த பூங்கொடி அவள் வீட்டிற்குள் சென்றதும்,  ராசய்யாவும் வீட்டிற்கு உள்ளே சென்றதை கண்டதும் அவனுக்குள் வெற்றி சிரிப்பு.

பூங்கொடி வீட்டின் பக்க வாட்டில் மறைந்து கொண்டு,  அதன் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான் குமரேசன்.

சற்று நேரம் கழித்து ராசய்யா தள்ளாட்டத்துடன் வெளியில் வர, அவன் உதட்டில் இருந்த சிவப்பு  உள்ளே ஏதோ நடந்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்ல, அடுத்து ஒரு குரூர திருப்தியுடன் வேகமாக ஓடி வந்து இந்த குட்டிசுவற்றில்  ஏறி உட்கார்ந்து கொண்டு ராசய்யாவின் வருகைக்காக காத்திருந்தான் குமரேசன்.

ராசய்யாவும் வந்து சேர, அவனை பிடித்துக்கொண்டான் குமரேசன்.

அவனிடம் என்ன நடந்தது என்று ஆர்வமாக விசாரிக்க, ராசய்யாவும் எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை. ஏதோ மந்திரித்து விட்டவனை போல எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான்.

அவன் சொல்லாவிட்டாலும் என்ன நடந்திருக்கும்  என்று ஓரளவுக்கு  குமரேசனால் யூகிக்க முடிந்தது. அதனால் ராசய்யாவிடம் பிட்டை போட்டான் குமரேசன்.

“டேய் மச்சான்... நீதான் டா ஆம்பள சிங்கம்.  உன்னை எதிர்த்துப் பேசியவளின் திமிரை  அடக்கிட்டியே...சபாஷ்...இனிமேல் அவள்  யார்கிட்டயும்  வாலாட்ட மாட்டாள்...”  

என்று ராசய்யாவின் தோளை தட்டிக் கொடுக்க, ராசய்யாவோ அவன் கையை தட்டி விட்டு விடுவிடுவென்று சென்று விட்டான்.

“ஏன் இம்புட்டு கோபமா போறான்?  அப்படீனா ஒன்னுமே நடக்கலையா? சை...நம்ம திட்டம் சொதப்பிடுச்சா? “ என்று தாடையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்க,  அப்பொழுதுதான்  பூங்கொடி அந்த வழியாக வருவது தெரிந்தது.

அவள் அருகில் வந்ததும், குட்டிச்சுவற்றில் இருந்து எட்டி குதித்து அவள் முன்னால் சென்று நின்றான் குமரேசன்.

அவளை மேலிருந்து கீழாக நோட்டமிட்டவன், பின் அவளின்  முகத்தை உற்றுப் பார்க்க,  அவளோ அவள்  முகத்தை வெடுக்கென்று மறுபக்கமாய் திருப்பிக் கொண்டாள்.

அதைக்கண்டவனுக்கு அவமானமாக இருந்தது.

எந்த பெண்ணும் அவனை இப்படி அவமதித்ததில்லை. உள்ளுக்குள் பல்லை கடித்தவன் ஆனாலும் தன் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக்  கொண்டவன்  

“பாருடா... ஜான்சி ராணிக்கு இன்னும் திமிர் அடங்கலை போல. மச்சானை விட்டு  இன்னொரு தரம் உன் திமிரை அடக்கி காட்டவா? “ என்று வில்லங்கமாக இளித்து வைக்க, அதைக்கேட்டு விலுக்கென்று அவன் புறமாய் திரும்பினாள் பூங்கொடி.

“அப்படி என்றால் அந்த கருவாயன் வெறும் அம்புதான். இந்த பொறுக்கிதான் அவனை எய்தவனா?” என்று எண்ணியவள், அவனை எரிக்கும் பார்வை பார்த்து முறைத்தாள்.

அவள் முகத்தை கண்ட குமரேசன் அப்பொழுதுதான் அவள் உதட்டின் நடுவிலிருந்த காயம் கண்ணில் பட்டது. உடனேயே என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டவன்.

“வாவ் சூப்பர்  ராசு மச்சான். நான் சும்மா உன்னை மிரட்டி வைக்கத்தான் சொன்னேன். ஆனால் மச்சான் ஒரு படி மேலயே போய்ட்டான் போல. வேற என்னவோ  நடந்திருக்கும் போலவே...

என்ன பூங்கொடி?  மச்சான் வெறும் ஒத்திகை மட்டும்தான் பார்த்தானா? இல்ல முழுசாவே எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சா? “  என்று கண்சிமிட்டி நக்கலாக சிரிக்க, அடுத்த கணம் பளார் என்ற ஓசைதான் கேட்டது.

அதுவரை நக்கலாக சிரித்தவன், இப்பொழுது கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தான் குமரேசன். 

அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள் பூங்கொடி.  

“டேய் பொறுக்கி நாயே...நீதான் இத்தனைக்கும் காரணமா? அதான... அந்த கருவாயனுக்கு இம்புட்டு தைர்யம் எங்க இருந்து வந்ததுனு யோசிச்சேன்.

ஏன் டா... உன் அப்பா அம்மா சம்பாரிக்கிற காசுல தின்னுபுட்டு,  உடம்பை சென பன்னி மாதிரி வளர்த்தி வச்சுகிட்டு இதுதான் நீ செய்யற வேலையா? அவனுக்கு ஊத்தி கொடுத்து தூண்டி விடறயே...நீயெல்லாம் ஆம்பளைனு வெளியில சொல்லிடாத.

நீ உண்மையிலயே ஆம்பளையா இருந்தா, என்னை பழிவாங்கனும்னு நினைச்சிருந்தா  என் கிட்ட நேருக்கு நேர் மோதி இருக்கணும். இப்படி அடுத்தவனை ஏத்திவிட்டு அதுல உன் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றக் கூடாது.

பேசாம வேஷ்டியை அவுத்து போட்டுட்டு சேலையை எடுத்து கட்டிக்க.  நீ ஏத்திவிட்டா இந்த பூங்கொடி சாஞ்சுடுவானு தப்பு கணக்கு போட்டுட்ட.  என்கிட்ட உன் பாச்சா எல்லாம் பழிக்காது.

இன்னொரு தரம் எவனையாவது தூண்டி விட்டு என்னை தண்டிக்க நினைச்ச,  தொலச்சுடுவேன் தொலச்சு... பி கேர்புல்...” என்று அடிபட்ட பெண் சிங்கமாக உறுமிவிட்டு டங் டங் என்ற அழுத்தமான காலடியுடன் அங்கிருந்து வேகமாக  சென்று மறைந்தாள் பூங்கொடி

குமரேசனும் தன் கன்னத்தை பிடித்தபடி   அவசரமாக சுற்றிலும் பார்த்தான்.  நல்லவேளை யாரும் பாத்திருக்கவில்லை.  

ஒரு நிம்மதி மூச்சு விட்டவன் அடுத்த கணம் கோபம் பொங்கியது.

முன்பு ஒருமுறை இப்படித்தான் ஆனது. .

அவளிடம் ஏதோ வம்பு இழுக்க, இதே போல கன்னத்தில் அறைந்து விட்டாள். அந்த ஆத்திரத்தில் அவளை மடக்க எண்ணி, அவளை இழுத்து அணைக்க முயல, அவளோ  தன் முன்னங்காலை உயர்த்தி, முட்டியால் அவனின் இரண்டு கால்களுக்கு நடுவில் சரியாக தாக்கி இருந்தாள்.

இதை எதிர்பார்த்திராத குமரேசன் அம்மா என்று அலறியவாறு கால்களுக்கு இடையில் கையை வைத்துக்கொண்டு அரற்ற ஆரம்பித்து விட்டான்.  

அவள் இன்னும் கொஞ்சம் வேகமாக தாக்கியிருந்தால் அவனுடைய வம்சம் அவனோடு முடிந்து போயிருக்கும்

அந்த அளவுக்கு அவனை தாக்கியிருந்தாள் பூங்கொடி

அதனாலேயே இந்த முறை அவன் தள்ளி நின்று ராசய்யா வை ஏவி விட்டான்.  

ஆனால் அவள் என்னவோ அடங்கின மாதிரி தெரியவில்லை.  என்ன நடந்தது என்று ராசய்யாவும்  சொல்ல மாட்டேங்குறான்.  அவளைப் பார்த்தால் தண்டனையை அனுபவித்தவளை  போல தெரியவில்லை  

என்னதான் நட ந்திருக்கும் என்று மண்டையை போட்டு குடைந்து கொண்டான் குமரேசன்.

அதே நேரம்  அவள் உதட்டில் தெரிந்த அந்த மஞ்சள் என்னவோ நடந்து இருக்கு என்பதை மட்டும் சொல்லாமல் சொல்லியது. ஏதோ அதுவரைக்கும் கொஞ்சமாச்சும் அவளை தண்டித்து விட்ட சிறு குரூர திருப்தி அவன் உள்ளே.

ஆனாலும் இதெல்லாம் பத்தாது. அவளுக்கு பெரிய அடியாக கொடுக்க வேண்டும். அந்த அடியில் அவள் தலையை தூக்கவே கூடாது...”  தான் வாங்கின அறையை மறந்து,  உள்ளுக்குள் வஞ்சமாக சிரித்துக்கொண்டான் குமரேசன்.

ன் டி... இங்க இருக்கிற வீட்டுக்கு போய் பால் பாட்டிலை எடுத்துட்டு வர இம்புட்டு நேரமா? “  என்று எரிந்து விழுந்தாள் பொற்கொடி.

ஏற்கனவே உடலாலும் மனதாலும் பலவீனப்பட்டு இருந்தவள், தன் அக்கா திட்டவும் அவளையும் மீறி  கண்ணீர் குபுக் என்று வந்து நின்றது. அதைக்  கண்ட பொற்கொடி பதறி  

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு கண்ணை கசக்கற? “ என்று பொற்கொடி இளையவளை முறைத்தவள்,  அப்பொழுதுதான் அவள் உதட்டில் இருந்த காயத்தை கவனித்தாள்.

“என்னடி இது?  உதட்டில காயமாயிருக்கு? என்னாச்சு? “  என்று ஊடுருவி கேட்க, அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள்,

“அது ஒன்னும் இல்லக்கா...வாசல் நிலையில இடிச்சுக்கிட்டேன்...லேசா காயம் ஆய்டுச்சு...”  என்று மலுப்பி சிரித்து  கஷ்டப்பட்டு உண்மையை மறைத்தாள்.  

கூடவே மலையளவு கோபம் ராசய்யா மீது...  

இதுவரை யாரிடமும் பொய் சொல்லியிராதவள்... இப்பொழுது முதன்முறையாக நடந்ததை மறைத்து பொய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள்... அதை எண்ணி வேதனையாக இருந்தது.  

அப்படிபட்ட வேதனைக்கு அவன் மீது எல்லையில்லா கோபம் கரை புரண்டு வந்தது.

அதோடு அவள் அக்கா  மட்டுமின்றி பார்த்தவர்கள் எல்லாம் அவளின் உதட்டில் இருக்கும் காயத்தைப் பற்றி விசாரிக்க, தன் பல்லைக் கடித்தவாறு முன்பு சொன்ன அதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வைத்தாள் பூங்கொடி.

ஆனாலும் சந்தோஷ் அவள் சொன்னதை நம்பாமல் ஆராய்ச்சியுடன் அவளை ஊடுருவி பார்த்தவன்

“உன் காயத்தை பார்த்தால்  நிலையில் இடிச்சுக்கிட்ட காயம் மாதிரி தெரியலையே...எனக்கு சந்தேகமா இருக்கு...” என்று தன் தாடையை தடவியபடி அவளை சந்தேகமாக பார்த்து வைக்க, அதில் எரிச்சலானவள்

“உன் சந்தேகத்திற்கு எல்லாம் என்னால் விளக்கம் கொடுத்துக்கிட்டிருக்க முடியாது. இது நிலையில இடிச்சதால வந்த காயம்தான்...” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தாள் பூங்கொடி.

அதைக்கேட்டு அதிர்ந்து போனான் சந்தோஷ்.  

பூங்கொடி அவனிடம் இந்த மாதிரி இதுவரை எரிந்து விழுந்ததில்லை.  திடீரென்று அவனிடம் கடுப்பாக பேச, அவன்  முகம் சுருங்கிப் போனது.  

அப்பொழுது அந்த வழியாக சென்ற ராசய்யா, பூங்கொடி அவனை முறைத்து பார்த்து எரிந்து விழுந்ததையும்,  சந்தோஷ் ன் முகம் சுருங்கியதையும், கண்டு குரூரமாக பார்த்து ரசித்தான்.  

அனிச்சயாய் திரும்பிய பூங்கொடி, ராசய்யாவின் அந்த குரூர சிரிப்பை கண்டு இன்னும் பொங்கி எழுந்தாள்.

“டேய் கருவாயா... உன் வலிமையைக் காட்டி என்னை அடக்கி விட்டதா நினைப்பா? ஒரு பொம்பள நினைத்தால் எதையும் சாதிப்பா... ஆம்பளைங்களுக்கு நிகரா நாங்களும்  சளைத்தவர்கள் இல்லை என காட்டறேன்.

என்னை இப்படி வேதனைப்பட வைத்த உன்னை கதற வைக்கிறேன் பார். அப்படி செய்யலைனா நான் பூங்கொடி இல்லை....” என்று வஞ்சத்துடன்  தனக்குள்ளே சூளுரைத்துக் கொண்டாள் பூங்கொடி..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!