என்னுயிர் கருவாச்சி-17

 


அத்தியாயம்-17

 

 றுநாள் காலை உச்சி வெயில் முகத்தில் சுள்ளென்று பட,  முயன்று கண் விழித்தான் ராசய்யா..

கண்ணை திறக்க முடியாமல் கண் இமைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ள, கொஞ்ச நேரம் கண்ணை மூடியபடி அப்படியே மல்லாந்து கிடந்தான்.  

அவனை அப்படியே இருக்க விடாமல் மீண்டும் முகத்தில் சுள்  என்று ஒளியை பாய்ச்சிய அந்த ஆதவன்,  அவன் கன்னத்தில் அறைந்து இருக்க, அதில் எரிச்சலானவன்  

“சை... மனுஷனை நிம்மதியா  தூங்க விட மாட்டேங்கிறான்  இந்த சூரியன். இவனுக்கு தூக்கம் வரலைனா, சீக்கிரம் எந்திரிச்சு வந்து எல்லார் உயிரையும் எடுக்கறான்...”   என்று பூமியிலிருந்து பல மில்லியன் மைல் தொலைவில் இருந்த ஆதவனை திட்டிக் கொண்டே  எழுந்து அமர்ந்தான் ராசய்யா.  

நேற்று அடித்த சரக்கின் உபாயத்தால் தலை விண் விண்ணென்று தெரித்து கீழ விழும்படி வலித்தது.  இரண்டு பக்கமும் நெற்றிப்பொட்டில் கை கட்டை விரலை  வைத்து அழுத்திக் கொண்டவன்  

“என்ன சரக்கு டா வாங்கி கொடுத்தான் அந்த குமரேசன் பய.  இப்படி தலை சுத்துது.  ஏதோ பாரின் சரக்குன்னு  தானே சொன்னான்.  நம்ம ஊரு   பட்ட சாராயத்த விட மோசமா இருக்கு.  

இனிமேல் அந்தக் கருமத்தை தொடவே கூடாது. நமக்கெல்லாம் நம்ம ஊர் சாராயம் தான் பெட்டர்...” என்று நாட்டுக்கு ரொம்பவும் முக்கியமான உறுதிமொழியை எடுத்தவாறு தன் தலையை குனிந்து கொண்டான் ராசய்யா.

அப்பொழுதுதான் தான் எங்கே இருக்கிறோம் என்று மெல்ல விழிகளை மட்டும் உயர்த்திப் பார்க்க,  மேற்கூரை இல்லாமல் சுவரெல்லாம் ஆங்காங்கே கொஞ்சமாக சிதிலமடைந்து போயிருந்த  அந்த வீடு கண்ணில் படுகிறது.

அவனுடைய தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்திட்ட வீடு...அவனுடைய வீடு...ஒரு காலத்தில் வீடாக இருந்தது.  

அரண்மனை போன்ற மாடி வீடு இல்லை என்றாலும் ஒற்றை படுக்கை அறையும்,   பெரிய மைதானம் போன்றதாய் ஒரு முற்றமும் இருந்தது. ஓடு வேயப்பட்டு எப்பொழுதோ  சுண்ணாம்பு பூசப்பட்டு இருந்தது.

வீட்டிற்கு வெளியே சின்னதாய் தாள்வாரம் இறக்கி, அதில் இரண்டு அடுப்பு பதித்து சமையலறையை  உருவாக்கி இருந்தார் அவன் தந்தை. 

அதிகாலையிலயே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு காலை சமையலை ஆரம்பித்து விடுவார் அவன் அன்னை. அதற்குள் வயலுக்கு சென்று மடையை திருப்பி விட்டு காலை சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுவார் அவன் தந்தை.

ஒரு கிண்ணத்தில் பருப்பு சாதத்தை பிசைந்து எடுத்துக்கொண்டு ராசய்யாவுக்கு ஊட்டுவதற்காக வந்தால், அவனோ அவள் அன்னையின் கைக்கு எட்டாமல் முற்றத்தில் இருக்கும் தூணின் பின்னால் சென்று  ஒளிந்து கொள்வான்.

அவனை கண்டு பிடித்து அந்த தூணின் அருகில் சென்றால் அடுத்த தூணுக்கு ஓடி விடுவான்.

இப்படியாய் அந்த முற்றத்தில் இருந்த  தூண்களை  ஒவ்வொன்றாய் சுற்றி வந்ததும்,  அவன் அன்னையும் தந்தையும் அவனை விடாமல் துரத்திப் பிடிக்க, இறுதிவரை   அவன் கிளூக்கி சிரித்தபடி அவர்களுக்கு போக்கு காட்டி ஓட்டம் பிடித்தது இன்னும் கண் முன்னே வந்தது

அவனின் அந்த சிறுவயதில் அவன் எவ்வளவு  வேகமாக ஓடினாலும், அவன் தந்தை இரண்டே எட்டில் பிடித்து விடலாம் தான். ஆனாலும்  மகனை ஓடவிட்டு, அவனை துரத்துவதை போல நடித்த அவன் பெற்றோர்களின் நினைவு வர, அவன் மனதை பிசைந்தது.

தன் மகன் வீட்டிலயே ஓடி பிடித்து விளையாட என்றுதான் உள் அறையை விட முற்றத்தை ரொம்பவும் விசாலமானதாக அமைத்து இருந்தாரோ என்று அவ்வபொழுது எண்ணிக்கொள்வான் ராசய்யா..!

கொஞ்சமே கொஞ்சமாய் இன்னுமாய் அவன் நினைவில் ஆடும் அந்த வசந்த காலம்...அது நினைவு வரும் பொழுதெல்லாம் எப்படி பட்ட சுகத்தை, சந்தோஷத்தை, மகிழ்ச்சியை இழந்து விட்டோம் என்று அவன் நெஞ்சம் விம்மும்.

இப்பொழுதும் அப்படித்தான்... தன் பெற்றோர்களின் நினைவில், கண்களில் நீர் கோர்க்க, அவன் உதடுகள் துடிக்க, மனதை பெரும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதை போல வலித்தது.

இந்த வீட்டிற்கு வந்தால் அவனுடைய பெற்றோர்களின் நியாபகம்  வரும். அப்படி நியாபகம் வந்தால் அவன் தவித்து போவான். அந்த வலி, அவன் அனுபவித்த சுகத்தை விட பெரும் வேதனையை தரும் என்றுதான் இந்தப் பக்கமாக வருவதில்லை ராசய்யா.

இந்த வீட்டையும் கண்டுகொள்ளவில்லை.  

பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து போயிருந்தது.  

எப்பொழுதும் இரவில் அந்த ஊர் அம்மன் கோவில் திண்ணையில் தான்  படுத்துக் கொள்வான். எவ்வளவு மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும் அந்த திண்ணைதான் அவனுக்கு படுக்கை அறை.

இப்பொழுது  அங்கு திருவிழா நடப்பதால் இரவில் அங்கே உறங்க முடியாமல் இங்கே தன் வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று அடித்த சரக்கு முழுவதுமாய் அவனை ஆக்ரமித்து இருக்க, உள்ளே வந்தவன் முன்பு முற்றமாக இருந்த கட்டாந்தரையிலயே படுத்து விட்டான்.  

காலையில் எழுந்தவன் , அந்த வீட்டை கண்டதும் மனம் சில நொடி பால்ய காலத்திற்கு சென்று இருக்க,  அது தரும் அந்த இனிமையை விட வலி அதிகமாக இருக்க,  உடனே தன் தலையை சிலுப்பிக் கொண்டான்.

பழைய நினைவுகளையும் அடித்து விரட்டி ஓட்டி விட்டான்.  

அதுவரை தெரியாத வயிற்று  பசி அப்பொழுதுதான் தெரிந்தது.

நேற்று கெடா விருந்து என்பதால் பண்ணையார் வீட்டில் மதியம் மூச்சு முட்ட சாப்பிட்டு முடித்துவிட்டு, அங்கிருக்கும்  வீட்டு வேலைகளை செய்து முடித்தவன்,  ஊருக்குள் வர,  அப்பொழுதுதான் பூங்கொடி அவன் மீது  மஞ்சத் தண்ணியை ஊத்தி இருந்தாள்

அதுவரை யார் கண்ணிலும் அகப்படாமல் இருந்தவன்,  அவளின்  கண்ணில் பட்டு வைக்க, அதோடு அவள் மஞ்சத்தண்ணியை ஊத்தி  மாமா என்று அழைத்து வைத்தது வேறு மனதுக்குள் குறுகுறுவென்று தான் இருந்தது.  

ஆனால் அவளோ அவனை திட்டவும், அதோடு வாக்கு வாதம் முற்றி    அவனை  பொறுக்கி என்று அழைத்து அவனை அறைந்ததும்  நினைவு வர, இப்பொழுதும் அவன் கை முஷ்டி இறுகியது

மற்றொரு கை தானாக உயர்ந்து அவன் கன்னத்தை தடவிக்கொண்டது.

அதன் பிறகு  அவன்  அந்த குமரேசனை  பார்த்ததும், அவன் தன்னை  அழைத்துக் கொண்டு சென்று ஃபாரின் சரக்கு என்று ஊத்தி கொடுத்ததும் நினைவு வந்தது.  

அதற்குமேல் சரியாக நினைவில் வரவில்லை. சில காட்சிகள் மங்கலாக வந்து வந்து போயின.

மதுக்கடையில் இருந்து வந்த பிறகு என்ன செய்தான்?  அதன் பிறகு எப்படி இங்கு வந்தான்  என்பதெல்லாம் தெளிவாக புரியவில்லை அவனுக்கு.  

சற்று நேரம் மூளையைக் கசக்கி யோசித்தவன்,  அதற்குமேல் கஷ்டப்படாமல் விட்டுவிட்டான்.  

இப்பொழுது பசி வயிற்றைக் கிள்ளியது.  

நேற்று மதியம் சாப்பிட்டது தான். இரவில் சாப்பிடாமல் அப்படியே கவிழ்ந்து விட்டான். அவன் மூனு வேளையும் கூட சாப்பிடா விட்டாலும் அவனை எழுப்பி, வற்புறுத்தி சாப்பிடச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்று ஒரு நொடி  சுயபச்சாதாபம் எழுந்தது.

அடுத்த கணம் மீண்டும் தன் தலையை உலுக்கிக் கொண்டவன்

“எனக்கு யாரும் தேவையில்லை.  அவங்கவங்க கடமை முடிந்தது என என்னை பெத்து போட்டுட்டு போயிட்டாங்க. எனக்கு யாரும் தேவையில்லை...”  என்று வாய் விட்டு கத்தினான் ராசய்யா.  

அத்தனை அத்தனையாய் வலியும் வேதனையும் அவன்  கண்களில் குடி கொண்டிருந்தது. அதேநேரம்

“என்னடா மாப்ள?  இங்க உட்கார்ந்து கிட்டு என்ன பண்ற? “  என்றவாறு உள்ளே வந்தார் தணிகாசலம்.  

ஊரே திருவிழா  கொண்டாட்டத்தில் இருந்தாலும் தான் பெறாத பிள்ளைகளான நெல்லுக்கும், வாழை மரங்களுக்கும் வயலுக்குச் சென்று  காலையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அவருக்கு.

அப்பொழுதுதான் அந்த நாளை நல்லபடியாய் ஆரம்பித்த ஆத்ம திருப்தி. .

தன் வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர், இந்த வீட்டிலிருந்து ராசய்யா வின் குரல் கேட்க,  தன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே வந்திருந்தார்.

வீட்டில் உறவினர்கள் வந்திருப்பதால் வேஷ்டியும்,  மேல் சட்டையும் போட்டு இருந்தார்.  

அவரைக்  கண்டதும் தான் , தன்னை மறந்து சத்தம் போட்டு கத்தி இருந்தது நினைவு வர,  தன்னை சமாளித்துக் கொண்டு அவரை பார்த்து அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான் ராசய்யா.  

உள்ளே வந்தவர் அப்பொழுதுதான் ராசய்யாவை கவனித்தார்.  

அழுக்கேறிய ஒரு லுங்கியும்,  ஆங்காங்கே கிழிந்த சட்டையும்,  பரட்டைத் தலையுமாய்  இருந்தவனைக்  காண அவர்  மனம் வலித்தது.

ராசய்யாவின் அன்னையை அவருக்கு நன்றாகத் தெரியும்.  

எப்பொழுதும் அண்ணா வென்று வாய் நிறைய அழைப்பாள்.  அவன் தந்தையும், தணிகாசலமும்  பால்ய சினேகிதர்கள் தான்.  

இவனை அவர்கள்  எப்படி கொண்டாடினார்கள் என்று தான் தெரியுமே.  

இடுப்பை விட்டு கீழ இறக்கி விடாமல் எப்பொழுதும் தூக்கி வைத்துக்கொண்டே வயல் வேலையை கவனித்துக்கொண்ட அவன் அன்னை...

தன் கழுத்தை சுற்றி இரண்டு கால்களையும் தொங்க விட்டவாறு தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு சுற்றி வரும் அவன் தந்தை என்று ராசய்யாவை ராஜகுமாரன் போலத்தான்  கொண்டாடினார்கள்.

யார் கண் பட்டதோ?  இன்று யாருமில்லா  அனாதையாய், இந்த  குட்டி சுவற்றில் வந்து,  பரதேசியை போல படுத்து கிடக்கிறவனை காண உள்ளுக்குள் பிசைந்தது.

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனருகில் வந்து அமர்ந்தவர்

“என்ன மாப்ள?  நேத்து கொஞ்சம் மப்பு ஜாஸ்தி ஆய்டுச்சா? இங்க வந்து மட்டை ஆய்ட்ட.” என்று கேலியாக சிரிக்க, அவனும் பதிலுக்கு தலையை சொரிந்தபடி அசட்டு சிரிப்பை சிரித்து  வைத்தான்.  

“சரிய்யா.. வா நம்ம வீட்டுக்கு போலாம்...” என்று ராசய்யாவை தன் வீட்டிற்கு அழைத்தார். அவன் கண்ணில் இருந்தே அவன் பசியில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டவர், அவனை தன் வீட்டிற்கு அழைத்தார்.

“இல்ல மாமா... அங்கன  எதுக்கு?  உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருப்பாங்க...நான் எதுக்கு நடுவுல... “  என்று மறுத்தான் ராசய்யா.  

“அட வாய்யா... ஆயிரம் சொந்தம் வந்தாலும் நீயும் எனக்கு சொந்தக்காரன் தானே...அதோட நேத்து நீ வீட்டுக்கு சாப்பிட வரல. இன்னைக்காவது வா...உன் அத்தை காலங்காத்தாலயே பொங்கி வச்சுட்டா.. வந்து ஒரு வாய் சாப்பிட்டுபுட்டு வா...” என்று உரிமையுடன் அதட்டினார் தணிகாசலம்.

அவனின் பசியை புரிந்து கொண்டுதான் சாப்பிட அழைக்கிறார் என புரிகிறதுதான். அதைக்கண்டு இன்னுமாய் நெகிழ்ந்து போகிறான். ஆனாலும் ஏனோ அவர் வீட்டுக்கு செல்ல தயக்கமாக இருந்தது.

“பரவாயில்ல மாமா...பண்ணையார் அம்மா இன்னைக்கு சோலி இருக்குனு வரச்சொல்லி இருக்கு. அங்கன போய் சாப்டுக்கறேன்...” என்று தயக்கத்துடன் மறுக்க

“ஓஹோ...பண்ணையார் வீட்டு சாப்பாடுதான் நல்லா காரசாரமா இருக்குமாக்கும். உன் அத்தை ஆக்கறது நல்லா இல்லைங்கிற? “ என்று முறைக்க

“ஐயயோ..அப்படி எல்லாம் இல்ல மாமா... அத்தை கை பக்குவம் யாருக்கு வரும்..” என்று சமாளிக்க

“அப்படினா மறுபேச்சு பேசாம,  முதல்ல வாய்க்காலுக்கு போய் நல்லா குளிச்சுட்டு வேற கைலிய கட்டிகிட்டு என்னோட கிளம்பு. நான் இங்கனயே இருக்கறேன்...”  

“இல்ல மாமா... அது வந்து...” என்று மீண்டும் தயங்க

“டேய் மாப்ள... நீ இப்ப வரப் போறியா இல்லையா? வரலைனா உன்னை கையை காலை கட்டி தூக்கிட்டு போய்டுவேன். கிழவன் ஆனாலும் இன்னும் என் உடம்புல தெம்பு இருக்குடா மாப்ள.

அதனால் ஒலுங்கா  போய் கிளம்பி வா...” என்று  உரிமையுடன் அதட்டினார் தனிகாசலம்.  

அவனும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்த வாய்க்காலுக்கு சென்றவன், அங்கு ஓடிக்கொண்டிருந்த நீரில் அவசரமாக ஒரு காக்கா குளியலை போட்டுவிட்டு, மடித்து வைத்திருந்த மற்றொரு கைலியை கட்டிக்கொண்டு தணிகாசலத்துடன் கிளம்பி விட்டான்.  

ன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்து பாப்பா... மாப்ள நல்லா சாப்பிடட்டும்...” என்று தன்னை ஏவிய தந்தையை முறைத்துப் பார்த்தாள் பூங்கொடி

சற்று முன், வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, தன்  அக்கா மகன் ஆதவனை தூக்கிக்கொண்டு, ஒரு கிண்ணத்தில் சாதத்தை போட்டுக் கொண்டு அவனுக்கு ஊட்டுவதற்காக வீட்டிற்கு வெளியே வர,  திடீரென்று தன் முன்னால் வந்து நின்ற ராசய்யாவை  கண்டதும் ஒருகணம் திடுக்கிட்டு போனாள் பெண்.  

அவனைக் கண்டதும் நேற்றைய சம்பவம் கண் முன்னே வந்தது.  

அதில் அவள் உடல் விறைக்க, கை முஷ்டியை இறுக்கியவள்,  முகம் அருவருக்க, அவனை  வெட்டவா குத்தவா என்று முறைத்து  பார்த்தாள் பூங்கொடி.  

அவளைக் கண்ட ராசய்யாவுக்கு ஏதேதோ காட்சிகள் மங்கலாக நினைவு வந்தது.  

நேற்று இந்த வீட்டிற்கு வந்ததை போலவும்,  பூங்கொடி இடம் ஏதோ வாக்குவாதம் செய்ததை போலவும் மங்கலாக தெரிய,  அதே நேரம் அவன் பார்வை அவளின் உதட்டுக்கு சென்றது.  

அவளின் உதடு இன்னுமே நன்றாக வீங்கியிருந்தது.  அதைக்கண்டவனுக்கு  மீண்டும் சில காட்சிகள் தெளிவில்லாமல் தெரிந்தது.  

அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டது  போல தோன்ற, உடனே உள்ளுக்குள் அதிர்ந்து போனான்.

“சே...சே..  அப்படி எல்லாம் நடந்திருக்க மாட்டேன்...” என்று  தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன், வழக்கம் போல அவளிடம் வம்பு இழுத்தான்.  

“என்ன கருவாச்சி?  காலங்காத்தாலேயே அக்கா மவனோட கொண்டாட்டம் போல...” என்று அவளை சீண்ட, பூங்கொடியே பல்லை நறநறவென்று கடித்து தன் கை முஷ்டியை இறுக்கினாள்.  

பார்வையாலேயே அவனை எரித்து விடுவதைப் போல பார்த்தவள்,  அவனை திட்டுவதற்கு எத்தனிக்க அதற்குள் வீட்டிற்கு உள்ளே  வந்தார் தணிகாசலம்.

தன் தந்தையை கண்டதும் தன் கோபத்தை கட்டு படுத்திக் கொண்டவள், தன் கழுத்தை வேகமாக திருப்பி ஒரு முறை முறைத்துவிட்டு வீட்டு வாயிலை நோக்கி செல்ல முயல

“பாப்பா... மாப்ள இன்னும் சாப்பிடலையாம். கொஞ்சம் அவருக்கு  சாப்பாடு போட்டுட்டு போமா...” என்று பணிக்க, அதைக்கேட்டவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.  

“இந்த பொறுக்கி செய்த வேலைக்கு இவனுக்கு நான் சோறு போடணுமாக்கும்.  வேணும்னா கொஞ்சம் விஷத்தை கலந்து வைக்கிறேன்...”  என்று உள்ளுக்குள் பொரிந்தவள், முயன்று தன் கோபத்தை கட்டு படுத்தியவள்,    

“உள்ள அம்மா இருப்பாங்க பா... அவங்களை போடச் சொல்லுங்க...”  என்று வெடுக்கென்று மறுத்தாள்.  

“ஹ்ம்ம் உன் அம்மாவ  இப்பத்தான் பக்கத்து வூட்ல பார்த்தேன். ஏதோ கதை அடிச்சுகிட்டிருக்கா... பொற்கொடியும்  மாப்பிள்ளையும் கூட வெளியில போயிருக்காங்க போல. நீ  ஒரு நட வந்து சாப்பாடு போட்டுட்டு போடா மா...” என அவளை சிக்கலில் மாட்ட வைக்க

“பா... அவனுக்கு கை இல்லையா? சோறு வேணும்னா அவனே   போட்டு திங்கட்டும்...”  என்று முறைத்தாள் பூங்கொடி.

அதைக்கேட்ட தணிகாசலத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது.  

“எப்பொழுதும் எல்லாரிடமும் தன் மகள்  மரியாதையாகத்தானே  நடந்து கொள்வாள். இப்ப என்ன  ஆச்சு? ராசய்யாவை முறைப்பதும், மரியாதை இல்லாமல் பேசுவதும்? “  என்று யோசித்தவர்

“என்ன ஆச்சு பாப்பா?  வீட்டுக்கு வர்றவங்களை இப்படித்தான் சொல்லுவியா? “ என்று கடிந்து கொள்ள,  அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள்  

“இவன்...  இவர்...  என்ன நம்ம வீட்டுக்கு விருந்தாளியா?  எப்பவும் வந்து போறவர் தானே பா.  அது தான் உரிமையா போட்டு சாப்பிடச் சொன்னேன்...”  என்று சமாளிக்க, அப்பொழுதும் அவள் தந்தையின் முகம் தெளியவில்லை.

தன் மகள் செய்வது தவறு என்று அவர் பார்வையாலயே உணர்த்திக்  கொண்டிருந்தார்.

ன் பிள்ளைகள் நால்வரையுமே இப்படித்தான் பார்வையாலயே கண்டிப்பார் தணிகாசலம்.

குரலை உயர்த்தி கூட பேசுவதில்லை. அவருக்கு பிடிக்கவில்லை என்றால், தன் பார்வையை சுருக்கி, திருப்தி இல்லாத பார்வை ஒன்று போதும்.

பில்ளைகளும் அவர் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு தங்கள் தவறை திருத்திக் கொள்வார்கள்.

இப்பொழுது பூங்கொடியின் நடவடிக்கை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை பார்வையாலயே உணர்த்த, அதை புரிந்து கொண்டவள் தன் தந்தையை சமாதான படுத்த முயன்றாள்   

அது வந்துப்பா... நான்  குட்டி பையனுக்கு சாப்பாடு ஊட்டனும் இல்லையா...அதான்...” என்று தயக்கத்துடன் இழுக்க,

“மலரு.....” என்று தன் கடைசி மகளை அழைத்தார் .

வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த மலர்க்கொடி,

“என்னப்பா? “  என்று துள்ளலுடன் ஓடி வர,

“நீ இந்த குட்டிப்பையனுக்கு செத்த நேரம் சோறு ஊட்டு...அக்கா இப்ப வந்திடுவா...” என்று ஆதவனை பூங்கொடியிடம் இருந்து வாங்கி மலர்கொடியிடம் கொடுக்க, அவளும் அந்த குட்டியை தூக்கி கொண்டு, மற்றொரு கையில் கிண்ணத்தை கேட்டு நீட்டினாள்.

அதற்குமேல் மறுக்கமுடியாமல் பூங்கொடியும் வேற வழியில்லாமல் சாப்பாட்டு கிண்ணத்தை தன் தங்கையிடம் கொடுத்தவள்,  தரை  அதிரும்படி தட் தட் என்று எட்டி வைத்து விடுவிடுவென்று நடந்து சமையல் அறைக்குள் நுழையவும்,  நேற்றைய சம்பவம் மீண்டுமாய் நினைவு வந்தது.  

இங்கேதானே நேற்று நின்று இருந்தான்.  அவளை கட்டியணைத்தான்... முத்தம் வேற கொடுத்து தொலைத்தான்...” என்று நினைக்கும் பொழுது, மீண்டும் குமட்டிக்கொண்டு வந்தது.  

“பொறுக்கி...நேற்று அப்படி நடந்துகிட்டவன்...கொஞ்சம் கூட அதுக்கு வருத்தப்படாம, எதுவுமே நடக்காததை போல ஈஈஈ னு இளிச்சுகிட்டு வந்து நிக்கறான். அவனுக்கு என் கையாலேயே சோறு போட சொல்றாரே இந்த அப்பா.. “ என்று பல்லைக் கடித்தாள் பூங்கொடி.

நேற்று நடந்தது மட்டும் அவள் தந்தைக்கு தெரிந்தால், அந்த கருவாயனை இந்த வீட்டு வாசல் பக்கமே அண்ட விடமாட்டார் தான் அவள் தந்தை.

ஆனாலும் நடந்ததை அவரிடம் எப்படி சொல்வதாம்?  உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுக்க, வேற வழியில்லாமல் சமையல் அறையில் இருந்த  வாழை இலையைக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டாள்.

தணிகாசலம் சட்டையை  கழட்டியவர் அதை மாட்டுவதற்காக அறைக்கு உள்ளே சென்றிருந்தார்.

ராசய்யா இலையின் அருகில்  அமர்ந்ததும், அவன் முகத்தில் தெளிப்பதைப் போல தண்ணியை இலையில் விட்டெறிந்தாள். அது தவறாமல் அவன் முகத்திலும் பட்டு தெறித்தது தான்.  

அதைக்கண்ட ராசய்யாவின் புருவங்கள் ஒரு நொடி முடிச்சிட்டு ஏறி இறங்கின. அவனும் வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். பூங்கொடி அவனிடம் ஒரு மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறாள்...

தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று யூகித்தவன்  எதற்காக இந்த கோபம் என்று புரியாததால்

“ஏய் கருவாச்சி. எதுக்கு இம்புட்டு கோபம்? “ என்று சிரித்தபடி அவளை குறும்பாக பார்க்க,  அவளுக்கு மீண்டுமாய் பற்றிக்கொண்டு வந்தது.

“ராஸ்கல்...எப்படித்தான் இவனால் இப்படி நடிக்க முடியுதோ? எதுவுமே நடக்காததை  போல நடந்து கொள்கிறானே... சரியான நடிகன் தான்...”

என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தவள் எதுவும்  பேசாமல் சமையல் அறைக்கு சென்று உணவு பாத்திரங்களை முற்றத்திற்கு எடுத்து வந்தாள்.

வேண்டும் என்றே காலை தரையில் டங் டங் என்று வைத்து கொஞ்சமாய் நொண்டியவாறு நடந்து வர, அதைக்கண்டவன்

“என்னாச்சு பூவு? ஏன் ஒரு மாதிரி நடக்கற? “ என்று தன் குறும்பை விடுத்து அக்கறையுடன் விசாரித்தான் ராசய்யா.

“ஹ்ம்ம் இடுப்பு சுளுக்கிடுச்சு...அதான்..” என்று முறைத்தாள்.

“ஓஹோ... நான் வேணா சுளுக்கு எடுத்து விடவா? “  என்று விஷமமாக சிரிக்க,  

“பொறுக்கி... பொறுக்கி... எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால்,  சுளுக்கு எடுத்து விடவா என்று எவ்வளவு தைரியமாக கேட்பான்.  

இதெல்லாம் இந்த அப்பா கொடுக்கும் இடம்...இவனை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் நடு வூட்ல கொண்டு வந்து உட்கார வச்சுகிட்டு சோறு போடறாரே.. அவரை அடிக்கணும்..  என்று மீண்டுமாய் உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள் பூங்கொடி.

உள்ளுக்குள் திட்டிக்கொண்டிருந்தாலும் அவள் கை பாட்டுக்கு அதன் வேலையை செய்து கொண்டுதான் இருந்தது.

இலையில் சாதத்தை போட்டு குழம்பை ஊற்றி பொரியலையும் வைத்தாள். அதே நேரம் அறையில் இருந்து வெளிவந்த தணிகாசலம் ராசய்யாவின் அருகில் வர, அவரை பார்த்தவன்  

“என்ன மாமா இது.. ஒரே சைவமா இருக்கு.  இதப்போய் யார் சாப்பிடறது? “  என்று முகத்தை சுளிக்க

“டேய்... உனக்கெல்லாம் சோறு போடறதே பெருசாம். இதுல உனக்கு கறி சோறுதான் வேணுமா? இதுதான் இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பானாம் ஒருத்தன்.

அந்த மாதிரி போனா போகுது பசியோட இருப்பான் னு அப்பா இரக்கபட்டு கூட்டிகிட்டு வந்தால், நீ சைவம் ஆகாது அசைவம்தான் வேணுங்கிறான் பார்...” என்று பொரிந்தாள் உள்ளுக்குள்.

அதே நேரம் பூங்கொடியை பார்த்த அவள் தந்தை

“பாப்பா... நேத்து வச்ச மட்டன் குழம்பு இருக்கும் பாரு. அத கொண்டு வந்து வை. அதோட இன்னைக்கு  செஞ்ச தலக்கறியும் குடலும் இருந்ததே.  அதையும் கொண்டு வந்து வை...”  என்று தன் மகளை பணிக்க, பூங்கொடியோ தயங்கி நின்றவள்,  

“வந்து... எல்லாம் தீர்ந்து போச்சுப்பா...காலையிலயே எல்லாரும் சாப்பிட்டாச்சு..” என்று மலுப்பினாள்.

அவர் சொன்ன படி, அவள் அன்னை காலையிலயே அசைவம் செய்து இருந்தாள்  தான்.

திருவிழாவுக்கு வந்திருந்த சொந்தக்காரரில்  ஒருத்தர் சைவம் தான் சாப்பிடுவார் என்பதால் அவருக்கு மட்டுமாய் கொஞ்சமாக தனியாக சைவம்  சமைத்து இருந்தார் சிலம்பாயி.

சமையல் அறைக்குள் ச்என்றவள், முதலில் தலக்கறியைத்தான் எடுத்தாள். பின் என்ன நினைத்தாலோ... இவனுக்கெல்லாம் தலக்கறி வைப்பதா என்று நொடித்தவள், அந்த சைவ உணவை எடுத்து வந்து ராசய்யாவுக்கு வைத்தாள்.    

வச்சதை சாப்பிட்டு போகாமல் அவனோ கறிக்குழம்பு கேட்க,  பற்றிக்கொண்டு வந்தது பெண்ணவளுக்கு.

பத்தாததுக்கு அவள் தந்தை வேறு தலக்கறியை கொண்டு வந்து வைக்க சொல்ல, இல்லை என்று சொல்லி சமாளித்தாள்.

“இருக்காதே ரெண்டாட்டு தலையும், குடலும்  இல்ல செஞ்சா உன் அம்மா. அதுக்குள்ள எப்படி தீர்ந்து போகும்....  உள்ள போய் பாரு. வேற ஏதாவது பாத்திரத்தில் போட்டு வச்சிருப்பா.. “ என்று பூங்கொடியை  விரட்ட,

அதற்கு மேல் அவரை சமாளிக்க முடியாது. அவள் மறுத்தால் அவராகவே நேராக சமையல் அறைக்கு சென்று  மீதமிருக்கும் எல்லாத்தையும் கொண்டு வந்து இவனுக்கு போட்டு விடுவார் என்று கடுப்பானவள்  வேகமாக  சமையல் அறைக்குள் சென்றாள்.

பாத்திரங்களை உருட்டுவதைப்போல பாவ்லா காட்டி பின்  ஒரு பாத்திரத்தில் இருந்ததை கண்டு பிடித்தவளைப் போல எடுத்துக்கொண்டு வர, குழம்பு ஊற்றிய பகுதியை இலையின் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு  கறிக் குழம்பு ஊத்துவதற்காக காத்திருந்தான் ராசய்யா.

அதைக்கண்டவளுக்கு மீண்டும் பற்றி எரிந்தது.

“சை...கொஞ்சமாவது வெக்கம் மானம் சூடு சொரனை னு ஏதாவது இருக்கா இவனுக்கு? நான் இவ்வளவு தூரம் சாப்பாடு போட மறுத்தும், எதிர்ப்பை வெளிப்படையாக காட்டிவிட்ட போதும் ஒன்னுமே புத்தியில் உறைக்காததை போல நடந்து கொள்கிறானே..

வேற ஒருத்தனா இருந்தால், இந்நேரம் சோறு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று எந்திரிச்சு போய்ருப்பான்.

நான் விட்டேத்தியா நடந்துக்கிறதையும் கண்டுக்காம எருமை மாதிரி இப்படி உட்கார்ந்து இருக்கானே...”  

என்று உள்ளுக்குள் பொரிந்து தள்ளியவள் மீண்டும் அவனிடம் வந்தவள் இலையில் வேண்டுமென்றே பொத்தென்று தலைக்கறியை தூக்கி போட்டு, மட்டன் குழம்பையும் ஊற்ற,  அவனோ கண்டுகொள்ளாமல் சோற்றில் குழி பறித்து , குழம்பை  குழியில் ஊற்றச்  சொல்லி,  கவலமாக உருட்டி அதை வாயில் போட்டு ருசித்து சாப்பிட்டான்.

அதே நேரம் அங்க வந்து ஓரமாக அமர்ந்த தணிகாசலத்தை பார்த்தவன்  

எத்தனை வூட்ல சாப்பிட்டாலும் அத்தை கை பக்குவத்துக்கு  ஈடாகாது மாமா...அம்புட்டு டேஸ்டா இருக்கு...” என்று பாராட்டிவிட்டு  சப்புக் கொட்டி சாப்பிட,  பூங்கொடியோ  மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.  

தலைக்கறியை முடித்து இருக்க, தணிகாசலம்  இன்னும் கொஞ்சம் அள்ளி வைக்கச் சொல்ல, அவளும் மீண்டுமாய் முறைத்தபடி இலையில் எடுத்து வைக்க, வைத்ததையெல்லாம் காலி பண்ணிக் கொண்டிருந்தான் ராசய்யா.  

சற்று நேரம் பொறுத்து பார்த்தவள், கடைசி ஒரு கரண்டியையும் இலையில் பொத்தென்று வைத்தவள்,

“அவ்வளவுதான்...சமைச்சது எல்லாம் தீர்ந்து போச்சு.  இன்னும் வேணும்னா  புதுசா தான் சமைக்கணும். இனிமேல் யாராவது வீட்டுக்கு  வந்தாலும்,  புதுசா தான் சமைக்கணும்...” என்று ராசய்யாவை முறைக்க,  அவனோ பெரிதாக  ஏப்பம் ஒன்றை  விட்டவன்  

“போதும் மாமா. இதுவே முக்கால் வயிறு நிறஞ்சு போச்சு... கொஞ்சூண்டுதான் பாக்கி இருக்கு..சமாளிச்சிக்கிடலாம்...”  என்று எழுந்திருக்க முயல,  

“அடப்பாவி...இது வயிறா இல்லை  மாட்டு தாலியா?  இவ்வளவு கொட்டிக்கிட்ட பின்னும் முக்கால் வயிறுதான் நிறஞ்சு இருக்குனு சொல்றானே...இவன எத வச்சு அடிக்க...” என்று உள்ளுக்குள் பொரிந்து தள்ள, இவள் மனதை அறியாத அவள் தந்தையோ அடுத்த ஐட்டம்க்கு தாவி இருந்தார்.  

“பாப்பா...உன் அம்மா பாயாசம் மாதிரி ஏதோ வச்சு இருந்தாளே.., அதையும் லேசா சூடு பண்ணி கொண்டு வந்து கொடு...” என்று உபசரிக்க   

“இன்னைக்கு என்னாச்சு இந்த அப்பாவுக்கு? என்னமோ மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகனை கவனிக்கிற மாதிரி இல்ல இந்த அப்பா விழுந்து விழுந்து கவனிக்கிறார்.  என்ன விஷயம் ? “ என்று தன் தந்தையை யோசனையுடன்  பார்க்க,  அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவராய்

“எதையும் சொல்லிடாத...போய் எடுத்துகிட்டு வா...”  என்றார் கண் ஜாடையில்.

அவளும்  தன் கழுத்தை வெடுக்கென்று வெட்டி நொடித்தவள்,  பாயாசத்தை சூடு பண்ணி எடுத்து வந்து கொடுத்தாள்.  

அதையும் ஒரு துளி மிச்சமில்லாமல் குடித்துவிட்டு மீண்டும் பெரிதாக ஒரு ஏப்பத்தை விட்டான் ராசய்யா.  

ரொம்பவும் திருப்தியான சாப்பாடு மாமா...” என்று பாராட்ட

“ஆமாமா...ஓசில சாப்பிட்டா திருப்தியா இல்லாமலயா இருக்கும்...” என்று இப்பொழுது வெளிப்படையாகவே நக்கலாக சொல்லி வைக்க, தணிகாசலத்துக்கோ கஷ்டமாக இருந்தது.

“இந்த புள்ள இன்னைக்கு ஏன் இப்படி நடந்து கொள்ளுது?  பொதுவா இப்படி நடந்துக்காதே..” என்று தன் மகளை ஆராய்ச்சியுடன் பார்த்து வைத்தார். கூடவே தன் மகளை கண்டிக்கவும் செய்தார்.

ராசய்யா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கூடவே  பூங்கொடிக்கு வக்காலத்து வாங்கினான்.

“விடுங்க மாமா... என்னதான் இருந்தாலும் பூவு சின்ன  புள்ள தான மாமா... ஏதோ துடுக்குத்தனமா பேசுது...அதை எல்லாம் கண்டுக்க கூடாது..” என்று சமாதானம் செய்தான்.    

அதைவிட கிளம்பி வீட்டிற்கு வெளியில் சென்றவன்,  திரும்பி பூங்கொடியிடம் வந்தவன்  

“என்ன ஆச்சு கருவாச்சி? ஏன் உன் உதடு இப்படி பணியாரம் போல வீங்கி கிடக்கு? “  என்று ரகசியமாக கேட்டானே  பார்க்கலாம்

அவளுக்கு வந்த  ஆத்திரத்துக்கு அவனை கண்டதுண்டமாக வெட்டி காக்காய்க்கு  போட வேண்டும் போல ஆத்திரம் பொங்கி வந்தது.  

இவன்  வேண்டுமென்றே என்னை நோட்டம் பார்க்கிறானா? இல்லை இவனுக்கு நேற்று நடந்தது எதுவும் நினைவில் இல்லையா? “ என்று  அவசரமாக ஆராய்ந்தவள்  

“அது எப்படி நினைப்பு இல்லாமல் போகும்? எல்லாம் தெளிவாவே நினைப்பு வச்சிருப்பான். இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி நடிக்கிறான்...”  என  கோபம் பொங்கி வந்தது.

“ஹ்ம்ம்ம்ம்ம் வேண்டுதல்...”  என்றாள் நக்கலாக உதட்டைக் சுளித்து

“ஆங்...வேண்டுதலா? வேண்டுதல் னு நாக்குல அழகு குத்திப்பாங்க.. அக்னி சட்டி எடுப்பாங்க...அங்க பிரதட்சனம் பண்ணுவாங்க...இப்படி உதடு வீங்கற மாதிரி என்ன வேண்டுதல்?

இப்படி எல்லாம் கூட வேண்டுதல் இருக்கா என்ன ? “ என்று யோசனையுடன்  அவளை பார்க்க, அவளோ மதுரையை எரித்த கண்ணகியாய் அவனை எரித்து விடுவதை போல பார்த்தவள்

“ஆமாம்... இப்பதான் இதை புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க...”  என்று எரிச்சலுடன் திருப்பிக் கொடுக்க,  அவனும் யோசனையுடன் பின்னந்தலையைத் தடவியபடி சென்றான் ராசய்யா.  

அவன்  சென்ற பிறகும், பூங்கொடி அவன் முதுகையே வெறித்து பார்த்தபடி இருக்க,  அவள் உள்ளமோ  எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தது.

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!