என்னுயிர் கருவாச்சி-19
அத்தியாயம்-19
பூங்கொடியின் வேக நடைக்கு ஈடுகொடுத்து அவளை விட வேக
நடையில் அடி எடுத்து வைத்து அவளை எட்டி பிடித்தான் ராசய்யா.
அதே நேரம் சேலம் டு திருச்சி செல்லும் பேருந்து அவர்கள்
முன்னால் வந்து நிக்க, அதன் பின் வாசல் வழியாக
பூங்கொடியை ஏற சொல்லிவிட்டு அவனும் ஏறிக் கொண்டான்.
எப்பொழுதுமே சேலத்திலிருந்து திருச்சி செல்லும் பேருந்து
சேலத்திலயே இருக்கைகள் நிறைந்து விடும்.
அப்படியும் இல்லையென்றால் நாமக்கல் நிறுத்தத்தில் காலி இருக்கைகள் முழுவதுமே நிறைந்து
விடும்.
அதனால் முசிறி வரும்பொழுது அமருவதற்கு இருக்கை இருக்காது.
திருச்சி செல்லும் வரை நின்று கொண்டேதான் பயணிக்க வேண்டும்.
அன்று அவர்களின் அதிர்ஷ்டம். கடைசி இருக்கைக்கு முன்னால் இருந்த
இருவர் அமரும் இருக்கையில், ஒரு இடம் காலியாக இருக்க, பூங்கொடி அதில்
அமர்ந்து கொண்டாள்.
ராசய்யாவோ படிக்கட்டில்
நின்றவாறு காத்து வாங்கிக் கொண்டிருந்தான்.
பேருந்து செல்லும்
வேகத்திற்கு, பின்னால் வீசிய காற்றில் அவனின் அடர்த்தியான சிகை, வேகமாக காற்றில் முன்னால் வந்து விழ, அதை தன் ஒற்றைக் கையால்
அவ்வபொழுது கோதி விட்டுக் கொண்டிருந்தான்.
படியில் நின்றவாறு பேருந்தின் வாயில் கதவில் ஒற்றைக்காலை
மடித்து ஊன்றி சாய்ந்து நின்றவாறே எந்த பிடிமானமும் இல்லாமல் நின்று பயணித்தவனை கண்ட
பூங்கொடிக்கு திக்கென்றது.
அவள் கல்லூரிக்கு செல்லும் அவள் ஊர் டவுன் பஸ்ஸில் கூட சில இளைஞர்கள், பேருந்தில் வரும் பெண்களிடம் தங்கள் வீரா தீர பராக்கிரமத்தை
காண்பிக்க என்று கெத்தாக படியில் நின்று பயணிப்பார்கள் தான்.
ஆனால் அந்த பேருந்து ஆமை போல ஊர்ந்து கொண்டிருக்கும். கீழ
விழுந்தால் கூட அடி எதுவும் படாது. ஆனால் இவர்கள் செல்வதோ சூப்பர் ஃபாஸ்ட் பஸ்.
அது செல்லும் வேகத்திற்கு கீழ விழுந்தால் அவ்வளவுதான்.
அதை உணர்ந்ததும் அவளையும் அறியாமல் உள்ளம் படபடத்தது. அவள் அந்த
படிக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்ததால் ஓரப் பார்வையிலயே வாயிலை
பார்க்க முடிந்தது.
அப்படி அவனை பார்த்துதான்
திடுக்கிட்டு போனாள்.
“சே.. இந்த கருவாயனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு. இப்படி அசால்ட்டா படியில அதுவும் கைய விட்டுட்டு நின்னுகிட்டு வாரானே... ட்ரைவர் இப்ப சடர்ன்
ப்ரேக் போட்டால் என்னாகும்? “ என்று உள்ளுக்குள் அவனை திட்டிக்கொண்டே அவனை
முறைத்தபடி வந்தாள்
அனிச்சையாய் திரும்பியவன் அவளை பார்த்தவன் அவள் தன்னையே பார்த்து முறைத்து
கொண்டிருப்பதை கண்டு என்ன என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்வையால் வினவ, அதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு
மீண்டும் ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள் பூங்கொடி.
“எதுக்கு இந்த
கருவாச்சி இப்படி முறைக்கிறா? அப்படி என்னத்த
பண்ணி தொலச்சோம்?” என்று தன் மண்டைய குடைந்து கொண்டிருந்தான்
ராசய்யா..
அதே நேரம் பயணச்சீட்டு கொடுக்க என்று நடத்துநர் பின்னால் வந்திருக்க, படிகளில் நின்றிருந்த ராசய்யா இப்பொழுது உள்ளே வந்தான்.
நடத்துநர் அருகில்
வரவும், பூங்கொடி தன் கையில் வைத்திருந்த பர்ஸை திறந்து
பயணச்சிட்டு வாங்க காசு கொடுக்க, அவளை முறைத்து
விட்டு, இருவருக்கும் சேர்த்து அவன்
பாக்கெட்டில் இருந்த ஒரு பழைய பர்சை எடுத்து, அதில் இருந்த ஐம்பது ரூபாய் தாளை எடுத்து நடத்துநரிடம்
நீட்டினான் ராசய்யா.
இப்பொழுது அவனை முறைப்பது பூங்கொடியின் வாய்ப்பானது.
“அண்ணே... இந்த காசை வச்சுகிட்டு ரெண்டு டிக்கெட் திருச்சிக்கு கொடுங்க..” என்று நடத்துநரிடம் சொல்லியவாறு பூங்கொடி ராசய்யாவை
முறைக்க,
“அண்ணே...அந்த புள்ள காசை வாங்காதிங்க.. இந்த காசை வச்சுகிட்டு
டிக்கெட் கொடுங்க..” என்று ராசய்யா நடத்துநரை தடுக்க, யார் பக்கம் தீர்ப்பு சொல்வது? யார் கொடுப்பதை வாங்க? என்று நடத்துநரும் குழம்பி
நிக்க,
“ரொம்ப குழப்பிக்காதிங்க அண்ணே... இந்த சில்வண்டு அப்படித்தான்.
அப்பப்ப இப்படி நடந்துப்பா..” என்று சிரித்தபடி ரூபாய் தாளை அவரின் கையில் திணித்தான் ராசய்யா.
அவரும் சங்கடபட்டுக் கொண்டே வாங்கிக் கொள்ள, பூங்கொடி மீண்டுமாய்
முறைத்து விட்டு, கழுத்தை நொடித்தவாறு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
*****
அடுத்த நிறுத்தத்தில், பூங்கொடியின் இருக்கைக்கு அடுத்து ஜன்னல் பக்கமாய்
அமர்ந்திருந்த பெண்மணி கீழ இறங்கி விட, ஜன்னல் ஓர சீட்டு கிடைத்த சந்தோஷத்தில் வேகமாய் ஜன்னல் பக்கம்
நகர்ந்து அமர்ந்து கொண்டாள் பூங்கொடி.
வேற யாரும் பெண்கள் நின்று கொண்டு இல்லாததால் முன்பு அவள்
அமர்ந்து இருந்த இருக்கை இப்பொழுது காலியாக
இருந்தது.
அதுவரை படியில் நின்று கொண்டிருந்த ராசய்யா, லேசாக கால் வலிக்க ஆரம்பிக்க, இப்பொழுது உள்ளே வந்து பூங்கொடியின் அருகில்
இருந்த இருக்கையில் அமர முயன்றான்.
அவ்வளவு தான்..!
திடுக்கிட்டு போனவள், பார்வையாலேயே அவனை அருகில் அமர வேண்டாம் என்று முறைத்து
தடுத்து நிறுத்த, அதைக் கண்டவன் ஒரு நொடி முகம் இறுக, பின் அதை வெளிக்காட்டாமல், அந்த இருக்கையில்
அமராமல் சற்று தள்ளி நின்று கொண்டான்.
அதே நேரம் அந்த இருக்கை இன்னுமே யாரும் அமராமல் காலியாக இருக்க, ராசய்யாவுக்கு பின்னால் நின்றிருந்த பின் நாற்பதுகளில் இருந்த ஒரு பெரியவர் வந்து பூங்கொடிக்கு அடுத்த
இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அதைக்கண்டு பூங்கொடிக்கு தூக்கிவாரிப் போட்டது. அந்த ஆணின் அருகாமை ஒரு
வித அசௌகரியமாக இருந்தது.
ஆனாலும் அவரை உற்று பார்க்க, அவளின் தந்தை வயதை
ஒத்தவர் போல இருந்ததால், அவள் தந்தை மாதிரிதானே என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்
கொண்டவள், அவரைப்
பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் புறமாய் திருப்பிக் கொண்டாள்
சற்று நேரத்தில் ஏதோ வித்யாசமாக உணர்ந்தாள் பூங்கொடி.
தன் அருகில் அமர்ந்து இருந்தவரின் மேல் இடித்து விடாமல்
ஓரமாகத்தான் அமர்ந்திருந்தாள். ஆனால்
இப்பொழுது பெரியவரின் தோள், இவள் தோள்மீது இடிக்க, அவரின் தொடையும்
இவளோடு ஒட்டிக் கொண்டிருந்தது.
விலுக்கென்று நிமிர்ந்து அவரை பார்க்க, அவரோ இருக்கையின்
பின்னால் சாய்ந்து கொண்டு கண்களையும் இறுக
மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.
ஒருவேளை உறங்கி விட்டார் போல... தூக்கத்தில் தான் இப்படி தன்னை இடிப்பதை
போல உட்கார்ந்து இருக்கார் போல என்று
எண்ணியவள், இன்னுமாய்
தன் உடலை குறுக்கி பேருந்தின் சுவற்றோடு ஒன்டிக் கொண்டாள்.
ஆனால் சற்று நேரத்தில் அவளின் பக்கவாட்டில் எதோ குறுகுறு வென்று இருந்தது. மீண்டும் திரும்பிப் பார்க்க, அந்த பெரியவரின் கை விரல்கள்
அவளின் அந்தரங்கமான பகுதியை லேசாக உரசிக் கொண்டிருந்தது.
உறக்கத்திலும் எதேச்சையாய் மோதுவதை போலத்தான் இருந்தது.
ஒருவேளை அனிச்சையாகத்தான் கை விரல் மோதுகிறதோ என்று எண்ணியவள் , இன்னுமாய் உடலை குறுக்கி அவர் மீது மோதாமல்
மறுபக்கமாய் ஒன்டிக் கொள்ள, அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அவரின் விரல்கள் அத்துமீறின.
இதுவரை இந்த மாதிரி அவள் வெளியில் பேருந்தில் எங்கும்
தணியாக பயணித்தது இல்லை.
வருடம் ஒரு முறை அவள் தந்தை திருச்சி சமயபுரத்திற்கும், பழனிக்கும் குடும்பத்தோடு
அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்பொழுது எல்லாம் அவரே அனைவருக்கும் பேருந்தில் சீட்
பிடித்துக் கொடுத்து அமர வைத்து விடுவார். அவளின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எப்போதும் அவளின் அக்கா, அல்லது தம்பியும் தங்கையும் மட்டுமே அமர்ந்திருப்பார்கள்
கல்லூரிக்கு தினமும் பேருந்தில் வந்து செல்கிறாள் தான். அங்கு எல்லாருமே தெரிந்தவர்கள். அதோடு அவளின் கல்லூரி தோழிகள் யாராவது ஒருத்திதான் அவளோடு
அமர்ந்து கொண்டிருப்பார்கள்.
இந்த மாதிரி வேற ஒரு புது ஆளுடன் அதுவும் ஆடவருடன் பயணம் செய்தது
இல்லை. அதுவும் அந்த பெரியவர் அவளின் தந்தை வயதை ஒத்தவர் என்பதால் தான் அவள்
அருகில் அமர அனுமதித்தாள்.
இப்பொழுது அவரின் செய்கை
அனிச்சையானதா? இல்லை வேண்டுமென்றே செய்கிறாரா? என்று கண்டுகொள்ள கொஞ்சம் குழப்பமாக இருந்தது.
இந்த மாதிரி பேருந்தில், பெண்களை இடிப்பதற்கும்
அதில் கிடைக்கும் அல்ப சந்தோஷத்தில் தங்களுடைய காம வெறியை தீர்த்துக் கொள்ள என்றே பல
கயவர்கள் பேருந்தில் பயணிப்பார்கள் என்று அந்த பேதைப் பெண்ணுக்கு தெரிந்து இருக்கவில்லை.
அதனால் முதலில் குழம்பிப் போனவளுக்கு சற்று
நேரத்திலேயே ஏதோ புரிந்தது.
அந்த பெரியவரின் விரல்கள் அனிச்சையாய் உரசாமல் வேண்டுமென்றே தான்
படுகிறது என்று தெரிந்ததும், அடுத்த கணம் பொங்கி எழுந்து விட்டாள் பூங்கொடி.
முகத்தில் ரௌத்திரம் பொங்க, தன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தவள், அவரை அறைய கையை ஓங்கியபடி
பக்கத்து இருக்கையில் பார்க்க, அந்த கயவன் இருக்கையில் இல்லை.
எங்கே போனார் என்று அதிர்ச்சியுடன்
நிமிர்ந்து பார்க்க, அவரின் சட்டையை கொத்தாகப் பற்றி, அவர் அமர்ந்திருந்த
இருக்கையில் இருந்து தூக்கி இருந்தான் ராசய்யா.
அதோடு அவர் கன்னத்தில்
பளாரென்று ஒரு அறை விட்டான்.
பேருந்தில் இருந்தவர்கள் எல்லாரும் திரும்பிப் பார்க்க, ராசய்யா பூங்கொடியை விட
முகத்தில் கோபம் பொங்க உறுமிக் கொண்டிருந்தான்.
“ஏன் டா நாயே... இடிக்கிறதுக்கும், இப்படி புள்ளைங்களை உரசி பார்க்கறதுக்குனே பஸ்ல வர்றது. உனக்கு அரிச்சுதுனா அதுக்குத்தான் தாலிகட்டி வூட்ல ஒருத்திய
பொண்டாட்டின்னு வச்சிருப்பியே..!
இப்படி ஆசை இருக்கிறவன் வீட்டிலேயே உட்கார்ந்து உன் பொண்டாட்டியை
தடவிக் கிட்டே இருக்க வேண்டியது தானே.
நீயெல்லாம் எதுக்குடா பஸ்ல வர்ற? “ என்று அசிங்கமாக திட்டியவாறு அவன் கன்னத்தில்
மீண்டுமாய் பளார் என்று அறைந்தான்
ராசய்யா.
“என்ன தம்பி சொல்ற? ஏதோ அசதியில
கொஞ்சம் தூங்கிட்டேன். அதுக்குள்ள நீ என்ன என்னென்னவோ பேசற? பத்தாததுக்கு சட்டையை புடிச்சு
அடிக்கிற. நான் யார் தெரியுமா? “ என்று முறைத்தான் அந்த கயவன்.
“டேய்...நீ யாரா இருந்தால் எனக்கென்ன. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும் னு
தெரியாது. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். அந்த புள்ளை கிட்ட உன் சில்மிஷத்தை காட்டிக்கிட்டே
வர்ற..
அதுவும் ஒதுங்கி ஒதுங்கி தள்ளி உட்கார்ந்தாலும் வேணும்னே உரசற.. எவ்வளவு தைர்யம்
உனக்கு? “ என்று உறும,
“ஐயோ..அபத்தமா பேசாத தம்பி... என் பொண்ணு வயசு தம்பி அந்த
புள்ளைக்கு. அதுகிட்ட போய் அப்படி நடந்துக்குவேனா? “ என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நல்லவன்
மாதிரி வேஷம் போட,
“அததான்டா நாயே நானும் கேட்கிறேன்... உன் பொண்ணு மாதிரி தானே அந்த
புள்ளயும். அதுகிட்ட போய் இப்படி நடந்திருக்க. எப்படிடா மனசு வந்துச்சு...”
என்று மீண்டும் சட்டை காலரை இறுக்க, அந்த ஆளோ
“இல்லவே இல்லை...நான்
அப்படியெல்லாம் செய்யவே இல்லை...தூக்கத்தில் கை லேசா பட்டிருக்கும்...” என்று சாதிக்க, அதை கேட்டு பூங்கொடிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
குட் டச் பேட் டச் என்றெல்லாம் வெளிப்படையாக பிள்ளைகளுக்கு
சொல்லி கொடுக்காத காலம் அது.
இருந்தும் ஒரு வயது பெண்ணிற்கு தெரியாதா? தன் மீது ஒருவரின்
தீண்டல், தொடுகை...தொடுவது
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதில் இருக்கும் வித்தியாசத்தை அவளின்
பெண்மை இயற்கையாகவே காட்டி கொடுத்து விடும்.
அப்படி புரிந்ததால்தான் அந்த கயவனின் அத்துமீறல் விரசமாக பட்டது
பூங்கொடிக்கு.
அந்த ஆள் அப்படி எல்லாம் செய்யவே இல்லை என்று சாதிக்க, அதில் கோபம் கொண்டவள் பொங்கி எழுந்து அந்த ஆளை பார்த்து ஏதோ
சொல்ல முயல, ஹ்ம்ம்ம் என்று அவள் பக்கமாய் கையை நீட்டி அவளை பேச
வேண்டாம் என்று பார்வையாலயே தடுத்தான் ராசய்யா.
அவனின் உறுமலுக்கும் அவனின் அந்த அதட்டலான பார்வைக்கும்
அப்படியே பணிந்து போனாள் பெண்.
“யோவ்... எதேச்சையா கை படறத்துக்கும் வேணும்னே உரசறதிற்கும் வித்தியாசம் தெரியாதா? நானும் பார்த்துகிட்டே
வர்றேன். அந்த புள்ள எவ்வளவு தூரம் தள்ளி தள்ளி உட்காருது. நீ வேணும்னு
அந்த பக்கமாக ஒட்டிகிட்டு உட்கார்ந்து உன்
சில்மிஷ வேலையும் காட்டற.
இனிமேல் யார்கிட்டயும் இந்த மாதிரி
நடந்துக்க மாட்ட. என்ன சொல்ற? “ என்று மிரட்ட அந்த ஆள் போலீஸ் என்றதும்
விதிர்விதிர்த்து போனான்.
அடுத்த நொடி பூங்கொடியின் காலில் விழுந்து
இருந்தான் அந்த பெரியவன் என்ற போர்வையில் இருந்த கயவன்.
“என்னை மன்னிச்சுக்க தாயி...ஏதோ சபல
புத்தியினால தெரியாம பண்ணிட்டேன். என்ன
மன்னிச்சிடு...” என்று பெரிய கும்பிடு
போட்டு காலில் விழுந்தான்.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல்
முழித்தாள் பூங்கொடி.
“யோவ்... போதும் எந்திரி. நீ கேட்ட
மன்னிப்பு உன் மனசார வந்ததா இருக்கணும். வேற யார்கிட்டயாவது இது மாதிரி நடந்துகிட்ட, தொலச்சிடுவேன். ஓடிப்போ...” என்று அடுத்த நிறுத்தத்தில் அவனை பேருந்திலிருந்து கீழ தள்ளி விட்டான் ராசய்யா.
இதெல்லாம் அடிக்கடி பேருந்தில் நடக்கும்
நிகழ்வுதான் என்பதால் நடத்துநரும் எதுவும் கண்டு கொள்ளாமல் அன்றைய கணக்கை டேலி
பண்ணிக் கொண்டிருந்தார்.
*****
இப்பொழுது ராசய்யா பூங்கொடியின்
அருகில் இயல்பாக வந்து அமர, அவளுக்கு தடுக்க தோன்றவில்லை.
“இவனை அருகில் அமர வேண்டாம் என்று
சொல்லிவிட்டால் திரும்பவும் வேற ஏதாவது ஒருத்தன் பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டா? ஐயயோ..அதுக்கு இந்த கருவாயனே பரவாயில்லை..அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...”
என்று எண்ணிக்கொண்டவள் அவன் பக்கமாய்
திரும்பாமல் ஜன்னலுக்கு வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்.
ஆனால் அவள் அருகில் அமர்ந்தவனோ அடுத்த
கணம் படபடவென்று பொரிய ஆரம்பித்தான்.
“ஏய் பூங்கொடி...உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?” என்று ஆரம்பிக்க, ஏற்கனவே அந்த
கயவனின் செயலில் கடுப்பில் இருந்தவள், இப்பொழுது
இவன் வேறு அறிவு இருக்கா என்று கேட்கவும் சுர் என்று கோபம் பொங்கி வந்தது.
“எனக்கு அறிவு இல்ல. உன்கிட்ட இருந்தா
கொஞ்சம் கடன் கொடேன்...” என்று வெடுக்கென்று பதில் சொல்ல,
“இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை...”
என்றான் இளக்காரமாக.
“வேற எதுல குறஞ்சு போய்ட்டேனாம்?” அவளும் உதட்டை வளைத்து இளக்காரமாகவே கேட்டு வைத்தாள்.
“ஆமா... என்கிட்ட இப்படி எகிறியே... அந்த ஆளு
லேசா உரசறப்பவே பளார்னு கன்னத்துல ஒன்னு கொடுக்க வேண்டியதுதானே...!
உன் வீரம் எல்லாம் என்கிட்ட மட்டும்தானா? மத்தவங்க கிட்ட வாய மூடிக்கிட்டு
கம்முனு உட்கார்ந்திருக்க...” என்று எரிந்து
விழுந்தான் ராசய்யா.
அந்த ஆள் அவளின் பக்கத்தில் உர்கார்ந்ததில்
இருந்தே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்
ராசய்யா..
அவள் தன்னை அருகில் அமர அனுமதிக்காமல்
அடுத்த ஆளை அமர வைத்ததுமே அவனுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது.
பின்ன... அவனுடைய புல்லட்டில் வரும்பொழுதே
ஒரு மைல் தூரம் இடைவெளி விட்டல்லவா அமர்ந்து கொள்வாள். அப்படிப்பட்டவள் அவனை
அருகில் அமர வைத்திருந்தால் தான் ஆச்சர்யம்.
ஆனாலும் அந்த ஆள் வயதில் பெரியவர் என்பதால்
தான் அனுமதித்திருக்கிறாள் என்று புரிந்து
கொண்டவன் அனிச்சையாய் அந்த ஆளை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் அந்த ஆளின் ஓரப்பார்வையில்
இருந்த விரசமும், பூங்கொடியை ஒட்டி
உரசியடி அமர்ந்து இருப்பது அவன் கண்ணிலும் பட்டதுதான்.
அப்பொழுதே கை முஷ்டியை இறுக்கி ஓங்கி ஒரு அறை
விட தவித்த தன் கையை மடக்கிக் கொண்டு, அவளே இதை
சமாளிக்கட்டும் என்று எண்ணி பொறுத்திருந்தான்.
அவளோ அந்த ஆளை ஆரம்பத்திலயே ஒரு அறை கொடுத்து அதட்டாமல், இன்னுமாய் பேருந்தின் சுவர் ஓரமாக ஒன்ட, அந்த ஆளும் எல்லை மீற ஆரம்பிக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல்
தான் அவனை சட்டை காலரை பிடித்து தூக்கி ஓங்கி அறைந்து இருந்தான்.
அந்தக் கோபத்தை இப்பொழுது அவள் இடம் கொட்டினான்.
அதைக் கேட்டவளுக்கோ மீண்டுமாய்
சுர் என்று கோபம் வந்தது.
“ஆமாமா... நீ மட்டும் என்ன
யோக்கியம்... நீயும் பொறுக்கி தானே... அன்னைக்கு என்கிட்ட அப்படி நடந்து கொண்டவன் தானே...” என்று உள்ளுக்குள் பொங்கியவள், அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
ஏற்கனவே அவனை பொறுக்கி என்றதற்கு அவன் கோபப்பட்டது நினைவு வர,
“இந்த போட்டிக்கு போய்விட்டு வரும்வரை இவனிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்க
வேண்டும் வீணாக வம்பை விலைக்கு வாங்க கூடாது...” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவள்,
“ம்க்கும்... முன்னப்பின்ன
செத்து இருந்தால் சுடுகாடு தெரியும். இப்படி எல்லாம் பஸ்ல இடிப்பானுங்கனு எனக்கு எப்படி
தெரியுமாம்...? ஆனாலும் கடைசியில் நானே அவனை அறையத் தான் எழுந்தேன். அதுக்குள்ள நீ முந்திக்கிட்ட...” என்று தணிந்த குரலில் சொன்னாள்.
குரல் மட்டும்தான் தணிந்தது. அவளின் முறைப்பையும், அதில் இருந்து இருந்த காரத்தையும் மட்டும் மறக்கவில்லை. அவனை முறைத்தபடியே
தணிந்த குரலில் பாவமாக சொல்ல, அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது.
அவள் அந்த குக்கிராமத்தை விட்டு வெளியில் எங்கும் சென்று வந்து பழக்கமில்லதவள் என்று.
வெளியில் பெண்களுக்கு இந்த மாதிரி இடைஞ்சல்கள், ஆபத்துகள், தொல்லைகள் காத்திருக்கின்றன என்று அறியாதவளாய்
இருக்கிறாள். அதனால் தான் தணிகாசலம் மாமா அவளை தனியாக அனுப்ப பயந்தார் என்பது இப்பொழுது
புரிந்தது.
“இப்படி வெளி உலகம் தெரியாமல் வீட்டு புறாவாய் அடைந்து
கிடக்கிறாள்.. ஆனால் வாய் மட்டும் எட்டு ஊருக்கு அடிப்பாள்...” என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
இப்பொழுது அவன் முகம் கனிந்து விட, முகத்தில் லேசான குறுநகை
தவழ, அவளை
நேராக பார்த்தவன்
“ஹோய் கருவாச்சி... இதையெல்லாம் செத்து பார்த்துதான் தெரிஞ்சுக்கணும் னு இல்லை...
பொம்பள புள்ளைங்க எப்போதும் விழிப்புணர்வோடு இருக்கணும். இப்ப புரியுதா ஏன் உன் அப்பா உன்னை தனியா அனுப்ப மறுத்தார்னு...”
என்று புன்னகைக்க, அதில் இன்னுமாய்
அவளுடைய தன்மானம் பாதிக்க,
“ஹலோ... நான் தனியா வந்து இருந்தா மட்டும் எனக்கு சமாளிக்க தெரியாதா
என்ன? அதெல்லாம் சமாளிச்சிருப்பேன்...” என்று கழுத்தை
வெட்டி அவனை முறைக்க
“ஆமாமா நீ நல்லாவே சமாளிச்சு இருப்ப...அதான் பார்த்தேனே...”
என்று ராசய்யா நக்கலாக சொல்ல, மீண்டுமாய் சுர்ரென்று
கோபம் வந்தது.
“அதெல்லாம் எனக்கு தெரியும். நானும் பதினெட்டு வயது ஆனா மேஜர்
ஆன பெரிய பொண்ணு தான். எல்லாம் சமாளிப்பேன்...”
என்று கழுத்தை நொடித்தவள், அதோடு பேச்சை முடித்தவளாய் வெடுக்கென்று ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
*****
முசிறியில் இருந்து திருச்சி செல்லும் அந்த பயணம்
அவளுக்கு எப்பவும் ரொம்பவுமே பிடிக்கும்.
வருடம் ஒருமுறை திருச்சிக்கு வந்தாலும், இந்த பேருந்து பயணமும்
ஜன்னல் சீட்டுதான் அவளுக்கு பிடித்தது.
இதற்காகவே அவள் தம்பி தங்கைகளுடன் சண்டை இட்டு ஜன்னல் சீட்டை பிடித்து
விடுவாள். அவளை அடுத்து அந்த இரு வாண்டுகளையும் அமர வைத்து விட்டு வெளியில்
வேடிக்கை பார்த்து வருவாள்.
பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலென்று பச்சை கம்பளத்தை
விரித்ததை போல, கண்ணுக்கு
குளிர்ச்சியாக இருக்கும்.
அவள் ஊருமே அப்படித்தான் இருக்கும் என்றாலும், கண்ணுக்கு எட்டிய தூரம்
வரைக்கும் பசுமையாகவும் பச்சை போர்வையை போர்த்தியது போன்ற பசுமையாகவும் அதை பேருந்தில்
அமர்ந்தவாறு பார்க்க பார்க்க திகட்டவில்லை அவளுக்கு.
நெல் வயல்களின் வழியாய் ஓடி வந்த தென்றல் அவளின் முகத்தில் முத்தமிட்டு
குதூகலிக்க, மனசுக்கு அவ்வளவு சுகமானதாக இருக்கும்.
அதோடு பேருந்தில் ஒலிக்கும் ராஜாவின் 80ஸ், 90ஸ் பாடல்கள், சுகமான தாலாட்டாய்
இருக்கும். எப்பொழுதும் தன் தம்பி தங்கையிடம் வாயடித்துக் கொண்டு இருப்பவள், இந்த பயணத்தின் பொழுது மட்டும் தனிமையை விரும்புவாள்.
இப்பொழுதும் அந்த பச்சை பசேல் என்ற வயல்களையும், அவளை தழுவி நலம் விசாரித்துச்
செல்லும் தென்றலையும் ரசித்தவாறு வர, அதே நேரம் அந்த
பேருந்தில் ஒலித்தது அவளுக்கு பிடித்த அந்த பாடல்.
போவோமா ஊர்கோலம்
....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும்
கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம்
ஆனந்தம்..!
அந்த பாடலை கேட்டதும், அந்த பாடலில் வரும்
கதாநாயகியை போல அந்த வயல்களின் நடுவில் ஓடியாட வேண்டும் போல மனம் குதூகலித்தது.
ஒரு நொடி அவளை அந்த கதாநாயகியின் இடத்தில் வைத்து கற்பனை செய்து
பார்த்தாள். அந்த இயற்கை அழகை கண்டு மனம் சுகமாய் இனித்தது.
கற்பனையில் பாடுவதைப்போல, அந்த பாடலையும்
மெல்ல மெல்ல முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்
அப்பொழுதுதான் அதைக் கண்டாள்.
அந்த பாடலில் வரும் கதாநாயகன் மாதிரி தன்னுடன் வருவது யார் என்று
கற்பனையிலயே ஊன்றி பார்க்க, அடுத்த நொடி தூக்கி
வாரிப்போட அதிர்ந்து போனாள்.
அவள் வயல் வரப்பில் ஓடி ஆடி விளையாடுவதை ரசித்தபடி, கட்டியிருந்த வெள்ளை வேஷ்டி காற்றி பறக்க, அதை ஒரு கையில் பிடித்தபடி, லேசான குறுநகையுடன் அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்
ராசய்யா.
அதைக்கண்டு அதிர்ந்தவள், அவசரமாய் தன் கற்பனை
காட்சியை கலைத்து போட்டாள்.
“சை...போயும் போயும் இவன் போய் என் ஹீரோவா வந்து தொலச்சிருக்கானே...!
அந்த பாடலில் வரும் கதாநாயகன் போல குண்டாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த கருவாயன்
மாதிரி கருகருனு இல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என் ஹீரோ...
கருப்பண்ண சாமி...அப்படி ஒரு மாப்பிள்ளையை மட்டும் எனக்கு கட்டி
வச்சிடு... எனக்கு பொறக்கும் முதல் புள்ளைக்கு உன் பேரையே வச்சிடறேன்...” என்று அவசரமாக
வேண்டிக்கொண்டாள் அந்த பேதைப்பெண்.
அதன் பின் மீண்டும் தன் கவனத்தை வெளியில் தெரிந்த இயற்கை காட்சியில்
திருப்ப, இப்பொழுது அவள் மனம் மீண்டும் குதூகலித்தது.
“எவ்வளவுதான் கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இந்த வயல்களின்
அழகுக்கு ஈடாகாது. இதை எல்லாம் விட்டுபோட்டு எப்படித்தான் டவுனுக்கு போகிறார்களோ?” என்று உள்ளுக்குள் முகத்தை
சுளித்தாள்.
“ஹோய் பூவு...நீயும்
தான் படிச்சு வேலையில் இருக்கிற மாப்பிள்ளைய கட்டிகிட்டு பட்டணத்துல செட்டில் ஆவேனு
தான சொன்ன? இப்ப என்ன ப்ளேட்டை திருப்பற? “ என்று அவள் மனஸ் அவளை முறைக்க,
“ஹீ ஹீ ஹீ அது
அப்ப... ஆனால் இப்ப, இந்த அழகையெல்லாம்
பார்க்கிறப்ப இதை எல்லாம் விட்டு போட்டு போவேனு தோணலை..” என்றாள் சிறுபிள்ளையாய்
உதட்டை பிதுக்கியவாறு...
“ஹ்ம்ம்ம் அது சரி...அப்படீனா உள்ளூர் மாப்பிள்ளையா பாத்துடலாமா? “ என்று அவல் மனஸ் கண்
சிமிட்டி குறும்பாக சிரிக்க,
“சே..சே...உள்ளூர் மாப்பிள்ளையா? என் அழகுக்கு
பொருத்தமா உள்ளூர்ல எவன் இருக்கான்...? “ என்று
உள்ளுக்குள் பெருமை அடித்தவள் பார்வை அனிச்சையாய் திரும்பி தன் அருகில் அமர்ந்து
இருந்த ராசய்யாவை தழுவி நின்றது.
இதுவரை வெளியில் தெரிந்த வயல்வெளிகளை பார்த்து, முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அவ்வபொழுது புன்னகை
தவழ சிறு குழந்தையாய் ஆர்ப்பரித்தவாறு
வந்தவளையே இமைக்க மறந்து பார்த்தவாறு வந்தான் ராசய்யா.
அவன் பார்வையை எதிர் கொண்டவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.
“இவன் ஏன் என்னை இப்படி பார்த்து வைக்கிறான்? ஒருவேளை என்னை சைட் அடிக்கிறானோ? சே சே..
அவனுக்குத்தான் ரதி மாதிரி பொண்ணு வேணும்னுட்டானே... அப்புறம் என்ன?
ஆனாலும் இவன் பக்கத்துல இருக்கிறது தெரியாம நான் பாட்டுக்கு
சிரிச்சு வச்சுட்டேனோ? என்னை கண்டு
கொண்டானோ? நடுவுல பாட்டு வேற பாடி வச்சேனே... சீ மானம்
போச்சு...
ஹ்ம்ம்ம் போனா போகட்டும்...எனக்கு என்ன வந்தது..? என் கண்ணு நான் பார்ப்பேன்..
என் உதடு நான் சிரிப்பேன்.. என் வாய் நான்
பாட்டு பாடுவேன்.. இவனுக்காக எல்லாம் நான் பயந்துக்க மாட்டேன்...
ஆனாலும் எப்படி பார்த்து வைக்கிறான் பார்... இந்த போட்டிக்கு
போய்ட்டு வந்த பிறகு இருக்கு இவனுக்கு. என்னை பார்க்கிற அந்த கண்ணை நோன்டி காக்காய்க்கு
போடறேன்...” என்று தனக்குள்ளே அவனை திட்டி தீர்த்தவள்,
அதுவரை அவளுக்குள்
இருந்த இனிமை மறந்து கடுமை பரவ, மீண்டும் ஒரு முறைப்பை
அவன் பக்கமாய் வீசிவிட்டு, ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள் பெண்ணவள்.
அவளின் அருகில் அமர்ந்து இருந்தவனோ திகைத்து போனான்.
சற்று முன் வரை அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்... குதூகலிப்பு...
மகிழ்ச்சி ஊற்றுகள்...அடுத்து அவனை பார்த்ததும் அவள் மாட்டிக் கொண்டதாய் ஒரு திருட்டு முழி...
கூடவே அவன் தன்னை கண்டு கொண்டானே என்ற வெட்கமும் அசடும் வழிந்த
முகம்...அடுத்து இவன் கண்டு கொண்டால் எனக்கென்ன வந்தது என்ற அசால்ட்டு ஏளன தனம்..
அவன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டதும் அதே அழகு முகம்
நொடியில் கோபமாகி கடுகடுத்த கோப முகம்..!
நொடியில் அவள் முகத்தில் வந்து வந்து போன அவளின் திடீர் திடீர் மாற்றங்கள் அவனுக்கு புதிதாக இருந்தது.
இதுவரை பெரிதாக பெண்களுடன் பழகியிராதவன்...!
பெண்கள் இப்படித்தான்.. அது சிறு பிள்ளையாகட்டும்...வளர்ந்த
குமரியாகட்டும்... மணம் முடித்து ஒருத்தனுக்கு மனைவியாகட்டும்..ஒரு குழந்தையும் பெற்று தாயாகட்டும்.
அதுவே காலம் ஓடிப்போய் பேரன் பேத்தி எடுத்து பொக்கை வாய் கிழவியாகட்டும்...
பெண்கள் தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் முகத்திலயே இப்படி அத்தனை உணர்வுகளையும் அதுவும்
நொடியில் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அறிந்திராதவன்.
இந்த சில்வண்டின் இந்த திடீர் திடீர் மாற்றங்கள் அவனுக்கு புதிதாய், வித்தியாசமாய், ஆச்சர்யமாய்
இருந்தது.
தன் முகத்தை திருப்பி கொண்டவளையே இன்னுமாய் ஆர்வமாக பார்த்து ரசித்து வந்தான் ராசய்யா..!
Comments
Post a Comment