என்னுயிர் கருவாச்சி-20

 


அத்தியாயம்-20

 

டுத்த ஒரு மணி நேரத்தில், பேருந்து திருச்சியின் நுழைவாயிலான டோல்கேட்டில் நின்றிருக்க, அங்கயே இறங்கி கொண்டனர் இருவரும்.

அங்கிருந்து காட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி  அந்த விளையாட்டு போட்டி நடக்கும் உருமு தனலெக்ஷ்மி கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.  

முதன்முதலாக தன் குடும்பத்தை விட்டு தனியாக வந்திருந்தால்,  எங்கே இறங்குவது எப்படி காட்டூர் செல்வது என்று தவித்திருப்பாள் பூங்கொடி.  

ஆனால் ராசய்யா உடன் வரவும், அவனே காட்டுர் செல்லும் பேருந்தை நிறுத்தி  அந்த பேருந்தில்   இவளையும் அழைத்துக்கொண்டு இயல்பாக ஏறி இருக்க, அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? முன்னரே இங்க வந்திருப்பானோ? என்று யோசிக்க,  அவள் மனதை படித்தவனாய்    

“ஒவ்வொரு இடத்துக்கும் போய் பார்த்து தான் இடம் தெரியணும்னு இல்ல கருவாச்சி.

உன் அளவுக்கு படிக்கவில்லை என்றாலும் நானும் கொஞ்சமாச்சும்  எழுத படிக்க தெரிஞ்சிருக்கேன்.  பஸ் நம்பரையும்  அது போகும் ஊரையும் படிக்கும் அளவுக்கு கொஞ்சம் ஞானம் இருக்குதான்...” என்று சிரித்தான்.

*****

டுத்த கொஞ்ச நேரத்தில் பேருந்து கல்லூரி நிறுத்தத்தில் நின்றிருக்க, இருவரும் இறங்கி வேகமாக உள்ளே சென்றனர்.

ஒரு சில போட்டிகள் முடிந்திருக்க,  அப்பொழுதுதான் கோ-கோ விளையாட்டு போட்டியை  ஆரம்பிக்க  ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

பூங்கொடி இன்னும் வராததால் அவள் அணியினர் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

இப்பொழுது மாதிரி செல்போன் வசதி அப்பொழுது இல்லை. போன் அடித்து கேட்கவும் வழி இல்லாததால் அந்த கல்லூரியின் வாயிலையே பார்த்து கொண்டிருந்தனர்.

தன் அணியினரை கண்டதும்,  கூட வந்த ராசய்யாவை மறந்து சந்தோஷத்தில் அவர்களை நோக்கி ஓடி வந்தாள் பூங்கொடி. அவளைக்  கண்டதும் அவள் அணியினருக்கும் அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.

அவளைக் கட்டிக்கொண்டனர் எல்லாரும்

“ஏன் டி.. இம்புட்டு நேரம்? நீ எங்கே வராமல் போய்டுவியோ  என்று பயந்து போயிருந்தோம். நீ வரலைனா பேசாமல் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே திரும்பி போய்விட பார்த்தோம்.  நல்ல வேளை... நீ வந்துட்ட...”  என்று குதித்தனர்.

அவள்,  அவள் தோழிகளுடன் ஐக்கியமாகி விட்டதை கண்டவன், அவள் அருகில் வராமல், சற்று தொலைவிலயே   நின்று கொண்டான்  ராசய்யா.  

“ஆமான் டி... நீ யார் கூட வந்த? “  என்று ஒருத்தி  கேட்க, அப்பொழுதுதான்  அவளுக்கு ராசய்யா நினைவு வந்தது. அதோடு அவனை என்ன உறவு என்று சொல்வதென்று தெரியாமல் முழித்தவள்,  

“எங்க பக்கத்து வீட்டுக்காரர் கூட்டிக்கிட்டு வந்தார் டி...” என்று சொல்லி வைத்தாள்.  

அப்பொழுது போட்டிகள் ஆரம்பித்திருந்தன.

******

கோ-கோ விளையாட்டு என்பது நமது இந்திய, அதுவும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகும்.

பிள்ளைகள் சிறு வயதில் இருந்தே ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காய் இந்த விளையாட்டை விளையாண்டு இருக்கலாம்.

இதில் விளையாடுபவர்கள் அனைவருமே எதாவது ஒரு விதத்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கும் குழந்தைகளுக்கு ஓட்டம் என்பதே மறந்து போன ஒன்றாகி போய்விட்டது.

ஏன் நடப்பதே கூட விரைவில் மறந்து போய்விடும். ஏனென்றால்  இப்பொழுதுதான் எல்லாமே உட்கார்ந்த இடத்திலயே கிடைத்து விடுகிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து வருகிறது..!  

காய்கறி வாங்க, துணி எடுக்க என்று எதற்கெடுத்தாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் ஷாப்பிங் என்று ஆர்டர் போட்டுவிடலாம்.

குழந்தைகளுக்கான கிரிக்கெட், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுக்கள் கூட மைதானத்தில் சென்று விளையாடாமல் கம்ப்யூட்டரிலயே விளையாண்டு விடுகிறார்கள்.

இந்த மாதிரி ஆகி விடக்கூடாது...பிள்ளைகளுக்கு நல்ல உடற்பயிற்சி வேண்டும் என்பதால் தான் கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுக்களை அந்த காலத்தில் பெரிதும் விளையாண்டனர் போல. 

கோ-கோ விளையாட்டில், களத்தில் ஓர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்தவர்கள்   எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணியில் இருந்து  இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் ஓடுவதற்காக இறங்குவர்.

அமர்ந்திருக்கும் அணியினர், களத்தில் நின்றிருக்கும்   எதிரணியினரை  துரத்தி அவர்களை தொட்டு அவுட் ஆக்க வேண்டும்...துரத்துபவர்கள்  தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அணி வீரரின் முதுகை தொட்டு   கோ என ஒலி எழுப்ப வேண்டும்.

உடனே அமர்ந்து இருந்த வீரர் எழுந்து ஓடுபவரை துரத்த வேண்டும். அதே போல ஓடுபவர்கள், அடுத்த அணியினரை அவுட் ஆக்க வேண்டும். எந்த அணி அதிக வீரர்களை அவுட் ஆக்குகிறார்களோ  அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

*****

ன்றைய போட்டிக்கு பல அணிகள் கலந்து கொள்வதால் மூன்று சுற்றுகளாக பிரித்து இருந்தனர்.

முதல்  சுற்றில் இரண்டு இரண்டு அணிகள் மோத  வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர்.  

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு கல்லூரிகளும் தனியார்  கல்லூரிகளும் இதில் கலந்து கொண்டனர்.  

கோ-கோ மட்டுமல்லாது வாலிபால், பேஸ்கட் பால், த்ரோ பால் , ரிங் பால் , கபடி போன்ற குழு விளையாட்டுகளுக்கான போட்டிகள் இன்று.

இதே போல தனிவிளையாட்டான அத்லெடிக்ஸ் போட்டிகள்  நாளை நடைபெறுவதாக இருந்தது.

கோ-கோ விளையாட்டிற்கு என ஏற்கனவே குலுக்கல் முறையில் இரண்டு இரண்டு  அணிகளாக தேர்வு செய்து வைத்திருக்க,  முதல் ஆட்டத்தில்  திருச்சி அரசினர் கல்லூரியும், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி அணிக்குமான  போட்டி  ஆரம்பித்து இருந்தது.  

அடுத்ததாக பூங்கொடியின் அணி களமிறங்க வேண்டும்.

முதல் இரண்டு  கல்லூரி அணியினர்  எப்படி விளையாடுகிறார்கள் என்று நோட்டமிட்டவளுக்கு அப்பொழுது தான் ஒன்று  உறைத்தது.  

எல்லாரும் ட்ராக்பான்ட் மற்றும்  டி-ஷர்ட் அணிந்தபடி விளையாண்டு கொண்டிருந்தனர்.  அவளுடைய அணியிலும் எல்லாரும் டிராக்பான்ட், டி-ஷர்ட் மற்றும்  ஷூம்  அணிந்திருக்க , அப்பொழுதுதான் மாஸ்டர் நேற்று சொன்னது நினைவு வந்தது.  

எல்லாரும் ட்ராக்பேன்ட்ம்  டி-ஷர்ட்டும் கொண்டு வர வேண்டும் என்று

இவளோ அவளுடைய தந்தையுடைய அனுமதிக்காக போராடியதில  அதை மறந்து இருந்தாள். வெறும் பர்சை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிட்டாள்.  

அதே நேரம் அவள் அருகில் நின்றிருந்த அவள் தோழி சங்கீதா,  பூங்கொடியை கவனித்தவள்

“ஏன் டி? நீ ட்ராக்சூட் எடுத்துட்டு வரலையா? “ என்று  கேட்க

“இல்லடி...வர்ற அவசரத்தில மறந்துட்டேன்... அதோட அதெல்லாம் நான் ஏற்பாடு செஞ்சு  வச்சிருக்கலை.

பரவாயில்லை டி... என்னால் பாவாடை தாவணியிலயே  விளையாட முடியும். காலேஜ் ல் அப்படித்தானே ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன். அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை...”  என்று சமாளித்தாள் பூங்கொடி.

*****

டுத்த அரை மணி நேரத்தில், முதல் ஆட்டம் முடிந்திருக்க,  அடுத்ததாக முசிறி அரசினர் கலை கல்லூரிக்கும், திருச்சி இந்திரா காந்தி கல்லூரிக்குமான போட்டி.

பூங்கொடியின் அணியினர் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தனர்.  

எல்லாரும் ட்ராக்பேன்டில் இருக்க அவள் மட்டும் பாவாடை தாவணியில்  நின்றிருந்தாள்.  அவள் மட்டும் தனித்து விடப்பட்டது போல கூச்சமாக இருந்தது.  

பார்வையாளராக வந்திருந்த அந்த கல்லூரி மாணவர்களும் மற்றும் மற்ற கல்லூரி மாணவர்கள் வேறு  இவளையே குறுகுறுவென்று வித்தியாசமாக பார்த்து வைத்தனர்.  

அதைவிட சில கல்லூரி மாணவர்கள் பூங்கொடியை பார்த்து விசில் வேறு அடித்து, ஏதோ சொல்லி கத்தி சிரிக்க,  பூங்கொடிக்கு அவமானமாக இருந்தது.

அங்கிருந்த எல்லாரையும் பார்க்க கூச்சமாக இருந்தது. எல்லாரும் இவளையே ஏளனமாக பார்ப்பதை போல இருந்தது.

அடுத்த  கணம், கண்ணோரம் கரித்துக் கொண்டு வர, மனதை ஏதோ ஒரு பாரம் அழுத்த ரொம்பவும் தளர்ந்து போனாள் பெண். அதே நேரம்  அனிச்சையாய் நிமிர்ந்தவள் பார்வையில் படுகிறான்  ராசய்யா.  

சற்று தொலைவில்தான் நின்றிருந்தான்.

அங்கு இருந்த அத்தனை பேரும் பார்மல் பேன்ட் ஷர்ட் , ஜீன்ஸ் பான்ட் என்று நின்றிருக்க, அவன் மட்டும் வெள்ளை வேஷ்டியும், முழங்கை வரை  மடித்து விடப்பட்ட கட்டம் போட்ட சட்டையுமாய் அலட்டிக்கொள்ளாமல் இவளை பார்த்த படி நின்றிருந்தான்.

அத்தனை பேர் நடுவில் அவன் மட்டும் வேஷ்டியில் இருக்கிறான் என்ற சங்கோஜம் சிறிதும் இல்லாமல் நான் இப்படித்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அசால்ட்டாய் நின்றிருந்தான்.

இவளின் முகத்தில் இருந்தே அவளின் அகத்தை படித்துவிட்டான் போல அவள் கண்களில் உருண்டு இருந்த ஒரு துளி நீரை அவ்வளவு தொலைவில் இருந்தும் கண்டு கொண்டவன், அவளை முறைத்தான்.

“மற்றவர்கள் கிண்டலையும், கேலியையும் கண்டுகொள்ளாதே...விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்து...”  என்ற விதமாய் தலையசைத்து சைகையில் சொன்னவன் , கை கட்டை விரலை உயர்த்திக் காட்டி அவளுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி வைத்தான்.  

ஏனோ அவனை கண்டதும் பெண்ணவள் மனதில் தானாய் பரவுகிறது ஒரு இதம்...தைரியம்...தன்னம்பிக்கை.  

எனக்கு துணையாய் என் பக்கத்திலும் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்கு இன்னுமாய் தன்னம்பிக்கையை கூட்டியது.

அதோடு இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக  அவள் வீட்டினரிடம் எவ்வளவு போராடி வந்திருக்கிறாள்  என்பது நினைவில் ஆட,  எப்படியாவது இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும்...  

தன் தந்தையின் முன்னே நான் ஜெயித்து விட்டேன் என்று பெருமையுடன் நிக்க வேண்டும்  என்ற வைராக்கியம் வீறு கொண்டு எழ, தன் தயக்கத்தை விடுத்து, அவமானமாய் எண்ணியதை தூர தூக்கி எறிந்தாள்.

இன்னுமாய் தன் முழு உயரத்துக்குமாய்  நிமிர்ந்து நின்று அங்கிருந்த அனைவரையும் நேர் பார்வை பாத்து ஆட்டத்திற்கு தயாரானாள் பூங்கொடி.  

*****

பூங்கொடி அணியினர் முதலில் ஓடவேண்டும். இந்திரா காந்தி கல்லூரி அணியினர் அவர்களை துரத்த வேண்டும்.  

பூங்கொடி ஓடுவதில்தான் திறமையானவள்.  

யாரிடமும் அகப்படாமல் வரிசையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணின் முதுகு புறமாய் நின்று கொண்டு , அந்த பெண்ணிற்கு கோ கொடுக்க வரும்பொழுது  அடுத்தவளிடம் சென்று விடுவாள்.

அதுவும் மின்னல் வேகத்தில் ஓடிவிடுவாள்.  தனக்கு  என்று ஒரு யுக்தியை வகுத்துக்கொண்டு யார் கைக்கும் சிக்காமல் லாவகமாக ஓடி விடுவாள் பூங்கொடி.  

அதேபோல போட்டி இறுதிவரை சோர்ந்து போகாமல் நின்று விளையாடும்  அளவுக்கு ஸ்டமினாவும் வேண்டும்.  

வயலில் கடினமான  வேலைகளை  செய்து பழகி இருந்ததால், சோர்ந்து போகாமல் இறுதிவரை தாக்கு பிடிப்பது எளிதாக வந்துவிடும் பூங்கொடிக்கு.

இப்பொழுது போட்டி ஆரம்பித்து.

அவர்களுடன் விளையாடும் இந்திரா காந்தி  கல்லூரி அணியினர்  இந்தப் போட்டியில் ரொம்பவும் கை தேர்ந்தவர்கள் போல.

ஏற்கனவே பலமுறை அவர்கள் கோப்பையை தட்டி சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி பட்டதும் அது வேறு எல்லா பெண்களின் வயிற்றிலும்  புளியை கரைத்தது.

ஏனென்றால் முசிறி அணியினருக்கு  இந்த மாதிரி போட்டியில் கலந்து கொள்வது இதுதான் முதல் தரம். அதுவே ஒவ்வொருவருக்கும் கலக்கத்தை கொடுத்தது.

போட்டி ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே, பூங்கொடி அணியின் முதலில் களம் இறங்கிய அவளோடு சேர்த்து மூன்று பெண்களில் இரண்டு பெண்களை அவுட் ஆக்கி விட்டார்கள் எதிரணியினர்.  

அடுத்து இருப்பது பூங்கொடி மட்டும்தான்.

அவள்  அணியில் பூங்கொடியை விட்டால்  அவளுக்கு பிறகு வரும் மற்றவர்கள் எல்லாம் எளிதாக அவுட்டாகி விடுவார்கள்.  பூங்கொடி  மட்டும்தான் எப்பொழுதுமே நின்று  விளையாடுவாள்.  

அதனால் இப்பொழுது அவள் அணியின் பாதி வெற்றி என்பது அவள் கையில் தான் இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு கவனமாக ஓடினாள் பூங்கொடி.  

வழக்கம் போல தன் பாவாடையை உயர்த்தி இடுப்பில் சொருகிக்கொண்டு,  முந்தானையையும் முதுகு புறமாக சுற்றி கொண்டு வந்து இடுப்பில் இழுத்து சொருகிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்.

பூங்கொடியின்  அந்த கோலத்தை கண்டு இளைஞர்கள் இன்னுமாய் விசில் அடித்துக் கொண்டிருந்தனர்.  

அதெல்லாம் அவள் காதில் பட்டு ஒலித்தாலும் கருத்தில் பதிய வைத்துக் கொள்ளாமல் கவனமாக ஓடினாள்.  

இறுதிவரை அவளை பிடிக்க  முடியவில்லை.  இறுதியில் இரண்டு பேர் மட்டும் அவுட் ஆகி இருக்க, அந்த சுற்று  முடிவடைந்தது.  

*****

டுத்து சற்று இடைவேளைக்குப் பிறகு இந்திரா காந்தி கல்லூரி அணியினரை  பூங்கொடி அணியினர் பிடிக்க வேண்டும்.  

மூன்று நபரை அவுட் ஆக்கினால்,  இவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகிவிடுவார்கள்.  

அதே நேரத்தில் மீண்டும் போட்டி ஆரம்பிக்க,  இப்பொழுது பூங்கொடிக்கு என்னவோ போல் தலை சுற்றுவது போல இருந்தது.  

ஏற்கனவே ரொம்ப நேரம் ஓடி கலைத்து இருந்தவள் உடல் ஓய்வு எடுக்க சொல்லி  கெஞ்சியது. ஆனால் அவள் அணியில்    சப்ஸ்டிடுட்ஸ் வேற யாரும் இல்லாததால்,  அவளும் அணியில் ஒருத்தியாய் அமரவேண்டும்.  

எதிரணியினரை ஓடி  பிடிக்க வேண்டும். தன் தலையை உலுக்கி, தன்னை  சமாளித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.

போட்டி ஆரம்பிக்க, எதிர் அணியினர்  இவர்களைவிட நன்றாக விளையாடினார்கள்.  

முதலாவதாக களத்திற்குள் வந்த மூன்று பெண்களில் ஒருத்தியைக் கூட அவர்களால் அவுட்டாக்க முடியவில்லை.  

சற்று நேரத்தில் மீண்டும் மனம் தளர்ந்து போய்விட,  அனிச்சையாய் பார்வையாளர் பக்கம் பார்க்க,  இப்பொழுதும் ராசய்யா அவளுக்கு ஏதோ சைகையால் சொல்லிக் கொண்டிருந்தான்.  

“மனம் தளராதே...இறுதிவரை தொடர்ந்து போராடு...” என்று அவனின்  இதழ் அசைவில் சொல்லி வைக்க,  இதுவரை விரட்டுவதில் பெரிதாக ஈடுபடாமல் இருந்தவள்,  அவள்  அணியினர் எதிர் அணியினர் யாரையும் அவுட் ஆக்குவது போல் தோன்றாததால், பூங்கொடி சேசிங் ற்கும் தயாரானாள்.    

இப்பொழுது ஓடி வந்து கொண்டிருந்த அவள் அணி பெண், பூங்கொடிக்கு கோ கொடுத்திருக்க, எழுந்தவள்  பக்கத்து பெண்ணிற்கு கோ கொடுப்பதை போல ஆக்சன் காட்டி, அதற்கு தகுந்த மாதிரி ஓட ஆரம்பித்து இருந்த பெண்ணை அவளை விட  வேகமாக ஓடி பிடித்து விட்டாள்.  

அவள் அணிக்கு கிடைத்த முதல் அவுட்..!

அடுத்த நொடி மைதானம் முழுவதுமே கேட்டது ஒரு விசில் சத்தம்.  

பூங்கொடிக்கு திரும்பிப் பார்க்காமலயே  தெரிந்தது அது யாருடைய விசில் சத்தம் என்று.

அவள் ஊரில் பொங்கள் பண்டிகைக்கு வைக்கும் கோ-கோ விளையாட்டு போட்டியில் விளையாடும் பொழுது, அவள் ஜெயித்து விட்டால்,  இப்படித்தான் விசில் அடிப்பான் ராசய்யா.

அப்பொழுதெல்லாம் திரும்பி அவனை பார்த்து  முறைத்து விட்டு செல்பவள் இன்று ஏனோ அதே விசில் அவளுக்கு உற்சாகத்தை தந்தது.

அதோடு இதுவரை அவள் அணிக்காக யாரும் கைத்தட்டி, விசிலடித்து உற்சாக படுத்தி இருக்கவில்லை. எல்லாரும் இந்திரா காந்தி கல்லூரி பெண்களுக்கு மட்டுமே பாராட்டாய் விசில் அடித்தபடி இருந்தனர்.  

முதன்முறையாக பூங்கொடியின் அணிக்காக விசில் சத்தம் கேட்க, அந்த உற்சாகத்தில் அடுத்த பெண்ணையும் பூங்கொடியே எளிதாக மடக்கி விட்டாள்.  

இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தன். இன்னும் ஒரேயொரு பெண்ணை பிடித்தாக வேண்டும்.  ஏற்கனவே அவள் மட்டுமே அந்த அணியில் அதிகமாக ஓடியிருந்தது ரொம்பவும் கலைத்து இருந்தாள்.  

ஆனாலும் அவள் ஊர் கருப்பண்ண சாமியை  மனதிற்குள் வேண்டிக் கொண்டே வரிசையில்,  அமர்ந்திருக்க,  எதிரணி பெண்ணை விரட்டிக் கொண்டிருந்த அவள் அணி பெண் ஒருத்தி  நேராக துரத்துவதற்கு பதிலாக திடீரென்று பூங்கொடிக்கு கோ கொடுத்து விட்டாள்.

எதிர் அணி பெண் சற்று தொலைவில் ஓடி இருக்க, துரத்தி கொண்டு வந்தவள் எப்படியும் நேராகத்தான் ஓடுவாள் என்று கொஞ்சம் அசட்டையாக அமர்ந்து இருந்தவளை திடீரென்று கோ கொடுத்து எழுப்பிவிட,  

அதை எதிர்பார்த்திராதவள், அமர்ந்தபடியே சட்டென்று எழ,  அதே நேரம் அவள் பாவாடையில் கால் மாட்டி  தட்டிவிட,  எழுந்த வேகத்தில் அப்படியே கீழே சரிந்தாள் பூங்கொடி.

விழும் வேகத்தில்,  அவள் மாராப்பு  நழுவி அவளின் இடுப்பும், மார்பும் மற்றவர்களின் பார்வைக்கு காட்சி அளிக்க, சுற்றி நின்ற வாலிபர்கள் ஓ வென்று கூச்சலிட்டு கைதட்டி கிண்டல் செய்து வைத்தனர்.

அதைக்கண்டு அவமானமாக இருந்தது பூங்கொடிக்கு. அவசரமாக தன் மாராப்பை இழுத்துவிட்டு கொண்டாள்.

கீழே விழுந்ததில் முழங்கையில் சிராய்த்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  

பி.டி மாஸ்டர் அவளை நோக்கி ஓடி வர,  அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள்,  தன்  வலியையும் பொருட்படுத்தாமல், வேகமாக எழுந்து,  பாவாடையை தூக்கி  சொருகிக் கொண்டு, முந்தானையும் இழுத்து  நன்றாக சொருகிக் கொண்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தாள்.

அவள் சரியாகி விட்டாள் என்றதும் மாஸ்டரும் ஒதுங்கி கொள்ள, மீண்டும் போட்டி தொடர்ந்தது.

பூங்கொடி கீழ விழுந்ததில் சில நொடிகள் இதில் செலவாகி இருக்க, இனி நேரத்தை  வீணாக்கக் கூடாது என்று உறுதி செய்து கொண்டவள், ஓடிக்கொண்டிருந்த பெண்ணின்  டெக்னிக்கை நோட்டமிட்டாள்.

அந்த பெண்ணின் தந்திரம் புரிந்து விட, அதை முறியடிக்கும் விதமாய் பின்பற்ற, போட்டி முடிய ஒரு நிமிடம் இருக்க,  மூன்றாவது பெண்ணையும் அவுட் ஆக்கி விட்டாள்  பூங்கொடி.  

மீண்டும் ஒரு பெரிய விசில் ராசய்யாவிடம் இருந்து.  

இந்த முறை ஏனோ முறைக்காமல் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள் பூங்கொடி.

அவள் அணியினர் அனைவரும் ஓடிவந்து பூங்கொடியை  தூக்கி சுற்றி வாழ்த்து தெரிவித்தனர்.

******


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!