நிலவே என்னிடம் நெருங்காதே-39

 


அத்தியாயம்-39

ரண்டு நாட்கள் முன்பு  காலையில் அந்த ஜமீனிற்கு வந்திருந்த வெள்ளைக்கார தம்பதியினரை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஓய்வு எடுக்க சொல்லி இருந்தனர்..

மதியம் உணவையும் ரசித்து உண்டவர்கள் பின் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்..

மற்றவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் அதிரதன் பார்வையோ அடிக்கடி நிலாவிடம் வந்து சென்றது... கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தன் மஞ்சத்தில் கிறக்கத்தில் மயங்கி கிடந்தவளின் முகம் அடிக்கடி அவன் கண் முன்னே வந்து இம்சித்தது....

அந்த முகத்தை காண, அந்த நாணத்தை காண ஆர்வமாக அவள் முகத்தை  ஓரக் கண்ணால் பார்க்க, அவளோ அப்படி ஒரு சம்பவமே நடவாததை போல வெகு இயல்பாக லியாவின் அருகில் அமர்ந்து கதை அடித்து கொண்டிருந்தாள்..

அவள் முகத்தில் சற்றுமுன் அவன் பார்த்த அந்த பாவம் இல்லை...மாறாக குறும்பு கூத்தாடும் பளிச்சிடும் சிரித்த முகமாக அந்த தம்பதியர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் எதையோ அளந்து கொண்டிருந்தாள்..

நடுவில் இவன் பார்வையை எதிர்கொண்டவள் இவளையே அவன் அடிக்கடி பார்ப்பதை கண்டு கொண்டவள் தன் புருவம் உயர்த்தி  என்ன? என்று மிடுக்குடன் வினவ, இவனோ  தன்னை அவசரமாக சமாளித்து கொண்டு லேசாக அவளை முறைத்து விட்டு தலையை திருப்பி கொண்டான்..

“எதுக்கு இந்த ஜமீன்தார் இப்ப முறைக்கிறார்? “ என்ற யோசனையுடன் தன் கதையை தொடர்ந்தாள்.. அவள் அப்படி என்னதான் பேசுகிறாள் என்று கொஞ்சம் ஆர்வமாக அதிரதனும் கூர்ந்து கவனித்தான்..

மதிய உணவை முடித்துவிட்டு சற்று நேரம் பேசி கொண்டிருந்த பெரியவர்கள் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு சென்று இருக்க, இளையவர்கள் மட்டும் அங்கிருந்தனர்...

நிலவினி நம் கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பீற்றி கொண்டிருந்தாள்... அவர்களும் அதை ஆர்வமாக ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்.. உடனே ஸ்டீபன் அவளை பார்த்து

“மூன்... நாங்களும் உங்க வாழ்க்கை முறைப்படி இருக்க ட்ரை பண்றோம்... எங்களுக்கு ஹெல்ப் பண்ணு.. “ என்று புன்னகையுடன் கேட்டான்...

“வெல் ஸ்டீவ்..அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லை..ஐ வில் கைட் யூ... முதலாவதாக .... “ என்று இழுத்தவள் சுற்றிலும் தன் கண்களை உருட்டி பெரியவர்கள் யாரும் இல்லை என்று உறுதி படுத்தி கொண்டு தன் குரலை தாழ்த்தி கொண்டு

“முதலாவதாக நீங்கள் பொது இடத்தில் கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.. “ என்றாள் தன் கணவனை ஓரப் பார்வை பார்த்தவாறு...

“ஹே... கமான் மூன்.. இதுல என்ன தப்பு இருக்கு..? அவ என்னுடைய கேர்ள் ப்ரெண்ட்.. இப்ப மை வைஃப் கூட.. அவளை கிஸ் பண்றதுல என்ன தப்பு? “ என்றான் சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ கிஸ் பண்றதுல தப்பு இல்ல ஸ்டீவ். ஆனால் அதை நாலு பேர் பார்க்கிற மாதிரி செய்யக் கூடாது... உங்க ரூம்ல நாலு சுவற்றுக்குள் என்னவேணா செஞ்சுக்கங்க.. ஆனால் அதை பப்ளிக் ஆ ஆக்க கூடாது..  

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எங்க கலாச்சாரம் படி ஒரு ஆண் பெண்ணை முத்தமிடுவது  அவனுக்கு உரிமையாக மனைவியான பிறகுதான்... ஆனால் இங்கயும் எல்லாம் மாறிவிட்டது..

கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி கொண்டு வருகிறோம்.. ஆனால் ஒரு சில அடிப்படை கலாச்சாரங்களை பெரும்பாலோனோர் பின்பற்றிதான் வருகிறார்கள்..

நீங்கள் எங்க கலாச்சாரத்தை பற்றி கேட்டதால் சொல்கிறேன்..முயன்று பாருங்கள்.. கூடவே நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளாமல் உங்கள் ஆசையை கட்டு படுத்தி உங்களுக்கு தனிமை கிடைக்கும் தனிஅறையில் தேக்கி வைத்த ஆசையையும் காதலையும் உங்கள் மனைவியிடம் கொட்டுங்கள்..

அதில் கிடைக்கும் சுகம் இன்னும் அலாதி... ட்ரை பண்ணி பாருங்க.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..

அதை கேட்ட அதிரதனுக்கும் ஏதோ மண்டையில் உறைத்தது... அவனும் இந்த மாதிரி சில முறை நடந்து கொண்டிருக்கிறான் சாந்தினியிடம்..

உரிமையாக கணவன் மனைவியான பிறகுதான் முத்தமிட வேண்டும் என்று அவள் சொல்லியது ஏனோ அவனுக்கு திரும்ப திரும்ப ஒலித்தது..

அவளை, சாந்தினியை சந்திக்கும் பொழுதெல்லாம் முதலில் முத்தமிட்டு கொள்வது வழக்கம்.. அதிலும் அவனை விட, சாந்தினிக்குத்தான் அதில் ஆர்வம் அதிகம்.. இவனை கண்டதுமே தாவி வந்து அவனை அணைத்து முத்தமிடுவாள்..

அதை இப்பொழுது நினைத்து கொண்டவன்

“என் நிலா பொண்ணுக்கு என் மீது அவ்வளவு பாசம்... காதல் ... என்னை காணாமல் தவித்து போகிறாள்.. அதனால் அவ்வளவு வேகம்.. இந்த பட்டிக்காட்டிற்கு என்ன தெரியும் காதலை பற்றி..?  

இப்படி நம்  கலாச்சாரத்தை  பற்றி வாய் கிழிய பேசுகிறாளே..  நான் ஒருத்தியை காதலிக்கிறேன் என்று  தெரிந்தும் சதி செய்து என்னை என் நிலா பொண்ணிடம் இருந்து பிரிக்க நினைப்பது ஏனாம்?

அது மட்டும் நம்ம கலாச்சாரம் ஆகுமா?.. அடுத்த பெண்ணிடம் காதல் கொண்ட எந்த ஆணையும் ஒரு பெண் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்பதும் நம் கலாச்சாரம் தானே..!  

இவள் மட்டும் அதை பின்பற்றுகிறாளா என்ன? ஊருக்குத்தான் உபதேசம்.. தனக்கில்லை போல.. ! “ என்று ஏளனமாக உதட்டை வளைத்து ஒரு நக்கல் பார்வை பார்த்தான்..

அடுத்து பேச்சு எங்கெங்கோ சென்று, இறுதியில் நம் மக்களின் திருமணத்தில் வந்து நின்றது.. நிலவினி நம் திருமணத்தின் அருமை பெருமைகளை எடுத்து கூற அதை கேட்ட லியா

“ஹே மூன்... உங்க திருமணமும் இப்பொழுதுதானே நடந்தது.. உங்க திருமண போட்டோஸ் எல்லாம் பார்க்கலாமா? “ என்க ஒரு நொடி அதிர்ந்து போனாள் நிலவினி..

அவர்கள் திருமணத்தின் பொழுது அவர்கள் இருவருமே ஈடுபாட்டுடன் இருக்க வில்லையே.. கடமைக்காக அல்லவா அந்த திருமணம் நடந்தேறியது.. கிட்டதட்ட திரைப்படங்களில் வரும் ட்ராமா கல்யாணத்தை போல..

திருமணம் என்றால் வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் அல்ல.. மணமக்கள் இருவரும் மனம் ஒத்து அந்த திருமணத்தை ஏற்று கொள்ளவேண்டும்.

தன் துணையாக இணையாக மனதில் வரித்து அந்த ஆண் தாலியை கட்ட, அதை வெட்கத்துடனும் நாணத்துடனும் அவன் மனையாள் காதலுடன் வாங்கி கொள்வதுதானே முழு திருமணம்..

அவர்கள் திருமணத்தில் அவன் விருப்பபட்டு தாலியை கட்டவும் இல்லை இவளும் காதலுடன் அதை வாங்கி கொள்ளவும் இல்லை..

அவன் தாலி கட்டியது அவன் தாத்தாவின் உருட்டல் மிரட்டலுக்கு அடங்கி.. அவள் வாங்கி கொண்டதும் தாத்தாவின் அன்பு கட்டளைக்காகவும் அவள் தாத்தாவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காகவும் ஒரு பொம்மையாய அமர்ந்து இருந்தாள் அன்று..

அதைப்போய் நல்ல திருமணத்திற்கு உதாரணமாக அவர்களிடம் எப்படி காட்டுவது என்று யோசித்து கொண்டிருக்க, அவள் அருகில் அமர்ந்து இதுவரை  தன் அண்ணி சொல்லிய விளக்கத்தை எல்லாம் ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்த யாழினி வேகமாக எழுந்து

“திருமண போட்டோ ஆல்பம் இருக்கு.. நான் எடுத்து வருகிறேன்.. “ என்று எழுந்து துள்ளலுடன் ஓடினாள்..

நிலா யாழினிக்கும்  நம்ம கலாச்சாரத்தை  பற்றி தெரிய வேண்டும் என்றே அவளையும் உடன் இருக்க வைத்தே சொல்லி கொண்டிருந்தாள்.. நாளை அவளும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற அக்கறையில்..

நிலா தங்கள் திருமண ஆல்பத்தை  காட்ட தயங்கி கொண்டிருக்க,  யாழி வேகமாக அதை எடுத்து வந்து டீப்பாய் மீது வைத்து அதை திறந்தாள்..

அதிரதன் பார்வையும் அவனையும்  மீறி அந்த ஆல்பத்தின் மீது படர்ந்தது..

முதல் பக்கத்தில் பார்த்ததுமே இருவர் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தது..

இருவரும் சிரித்த முகமாக மாலையும் கழுத்துமாக வணக்கம் சொல்லி கொண்டிருந்தனர்.. அப்பொழுதுதான் உறைத்தது அது திருமண வரவேற்பின்பொழுது அந்த போட்டோ கிராபர் இருவரையும் நிக்க வைத்து சிரிக்க வைத்து பல கோணங்களில் எடுத்தது..

அந்த புகைப்படத்தை  பார்த்தால் இருவரும் ஆதர்ஷ தம்பதிகள் போல மனம் விரும்பி மணம் முடித்தவர்கள் போல அவ்வளவு அன்யோன்யமாய் தத்ரூபமாய் இருந்தது..

அந்த புகைப்படத்தை  கண்டதும் அந்த தம்பதியர்  இருவரும் ஆச்சர்யபட்டு

“வாவ்...!  நீங்க ரெண்டு பேருமே சூப்பரா இருக்கிங்க.. மேட் பார் ஈச் அதர்.. பெர்பெக்ட் மேட்ச்.. ஹைட், வெய்ட் அன்ட் ஸ்மைல் கூட அவ்வளவு பொருத்தமாக இருக்கு... ஐ லவ் திஸ் போட்டோ.. “ என்றவன் தன் அலைபேசியில் அதை பதிந்து கொண்டான் ஸ்டீவ்..

நிலா மற்றும் அதிரதனுக்கும் கூட ஆச்சர்யம்தான் எப்படி இவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று..

அவர்கள் இருவருமே ஆல்பத்தை இப்பொழுதுதான் பார்க்கிறார்கள்... அந்த ஆச்சர்யம் மட்டும் அல்லாமல் அடுத்து வந்த எல்லா புகைப்படங்களுமே ஆச்சர்யத்தை கொடுத்தது..

திருமண சடங்குகள் நடைபெற்ற பொழுதும் ஒவ்வொரு போட்டோவும் அவ்வளவு அம்சமாக இருந்தது..

அதுவும் ஒருசில இடத்தில் நிலா அவனை ஓரக்கண்ணால் பார்ப்பது கூட அந்த போட்டோ கிராபர் துல்லியமாக படம் பிடித்திருக்க, யாழி அதை சொல்லி அவளை கிண்டல் அடிக்க அவள் முகமோ செவ்வானமாய் சிவந்து போனது..

அதிரதனுமே சில இடங்களில் அவளை மந்தகாச புன்னகையுடன் பார்ப்பது போல  இருந்தது..அதை கண்டவன் திடுக்கிட்டான்..

“நான் எப்ப இவளை பார்த்து புன்னகைத்தேன்..?  அன்று இருந்த நிலையில் அவளை நான் நிமிர்ந்து கூட பார்க்கவில்லையே..! ஆமாம்... நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது..  அவளை முறைத்துத்தான் பார்த்தேன்... அப்ப இது எப்படி?” என்று யோசிக்க தன் தாத்தாவின் திட்டம் புரிந்தது..

அவன் முறைக்கும் இடங்களில் எல்லாம் எடிட் பண்ணி அவன் புன்னகைப்பதை போல மாற்றி இருந்தார் அந்த போட்டோகிராபர்..அப்படி மாற்ற சொல்லி சொல்லி இருந்தார் அந்த ஜமீன்தார்..

அதனால் அந்த புகைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இருவரும் பார்க்க மனம் ஒத்து அந்த திருமணத்தை ஏற்று கொண்டதை போலத்தான் இருந்தது..

அதை எல்லாம் பார்த்து முடிக்க உடனே லியாவுக்கு இதே மாதிரி தாங்களும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஸ்டீபனிடம் சொல்ல, அவனுக்குமே அது பிடித்து விட இருவரையும் பார்த்தவன்

“அதி அன்ட் மூன்...  நாங்களும் இந்த மாதிரி திருமணம் செய்து கொள்ள முடியுமா? “ என்றான் ஆர்வமாக..

அதை கேட்டு அதிரதன் யோசிக்க, நிலா முந்தி கொண்டு

“ஒய் நாட் ப்ரோ? நீங்க ஓகே சொல்லுங்க.. சூப்பரா இதே மாதிரி உங்க கல்யாணத்தையும் நடத்திடலாம்.. “ என்று  கண் சிமிட்டி சிரித்தாள்…  

“ஐயோ.. இவ எதுக்கு தேவை இல்லாம இதை இழுத்து விடறா ? ’’ என்று அவசரமாக அவளை முறைத்து பார்க்க அவளோ அவனை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி தோளை குலுக்கி சிரித்தாள்..

“இப்ப எதுக்கு இந்த இளிப்பு? “ என்று முறைத்தவாறு அவன்  ஏதோ சொல்ல வர

“ரதன் டார்லிங்..அவங்க ஆசையா கேட்கறாங்க... நம்ம கெஸ்ட் ஆ வந்தவங்க ஆசையை நிறைவேற்றுவது நம் பண்பாடு அல்லவா.. அதனால் அவங்களுக்கும் நம்ம முறைப்படி திருமணம் நடத்தலாம்.. ப்ளீஸ்.. “ என்று தலை சரித்து கொஞ்சலுடன் கேட்க, அதிரதனுக்கோ மயக்கம் வராத  குறைதான்..   

“இவளா இப்படி பேசுவது? அதுவும் தன்னை ரதன் என்று அழைத்து..!” 

இதுவரை அவன் தாத்தாவை தவிர வேற யாரும் அவனை ரதன் என்று அழைத்ததில்லை.. யாராவது அழைத்தாலும் அவனுக்கு அது பிடிக்காது.. நேரடியாகவே சொல்லி விடுவான் அப்படி அழைக்க வேண்டாம் என்று..

ஏனேன்றால் அது அவன் தாத்தாவிற்கே உரித்தான ஸ்பெஷல் பெயர்... அவர் மட்டும்தான் தன்னை அப்படி அழைக்கவேண்டும் என்று சிறு வயதில் மனதில் பதித்தது. அவரை வெறுத்தாலும் இன்றும்  அதை மறக்காமல் பின்பற்றுகிறான்..  

அப்படி இருக்க அவள் அவன் பெயரை அழைத்ததும் கூடவே டார்லிங் ஐ சேர்த்து கொண்டதும் கண்டு முதலில் ஆச்சர்யபட்டவன் அடுத்து இதெல்லாம் அவள் நடிப்பு என புரிய முகம் இறுக பல்லை கடித்தான்..

தன் அண்ணி தன் அண்ணனை டார்லிங் என்று அழைத்ததற்கு தன் அண்ணனின் திருதிரு முழியை கண்டு யாழியோ வாயில் கைவைத்து அடக்கி கொண்டு சிரித்தாள்..

நிலா மற்றும்  யாழி இருவரையும் பொதுவாக பார்த்து முறைத்தவன் தன் முகத்தை மாற்றி கொண்டு

“ஸ்யூர் ஸ்டீவ்.. நான் தாத்தாவிடம் கலந்து கொண்டு மேற்கொண்டு திட்டமிடலாம்.. “ என்று அப்போதைக்கு அந்த பேச்சை முடிக்க முயன்றான்..

உடனே யாழி

“அண்ணா.. நல்ல விசயத்தை தள்ளி போடக்கூடாது னு சொல்வாங்க.... இருங்க நான் போய் தாத்தாவை இப்பவே கூட்டிகிட்டு வருகிறேன்.. “ என்று தன் அண்ணனின் பதிலுக்கு காத்திருக்காமல்  துள்ளி குதித்து தாத்தாவின் அறைக்கு ஓடினாள்..

அடுத்த நிமிடம் தேவநாதனும் அங்கு வந்துவிட, ஸ்டீபனின் ஆசையை கேட்டதும் அவருக்கும் முகம் மலர்ந்தது

“வெல்டன் மை சன்.. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.. எங்க பசங்களே இந்த திருமணத்தை அதன் மதிப்பை புரிந்து கொள்ளாமல் இருக்க, நீங்க ரெண்டு பேரும் அதை மதித்து எங்க முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவது ரொம்பவும் மகிழ்ச்சி..” என்று தன் பேரனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சிலாகித்து கொண்டவர்

“கண்டிப்பா நீங்க ஆசை பட்ட மாதிரி ஜாம் ஜாம் னு நடத்திடலாம்..ரதன்.. நான் சொல்றதை எல்லாம் கவனமா கேட்டுக்க.. “ என்றவர் அடுத்து கடகடவென்று என்ன செய்யவேண்டும் என்று பட்டியலிட்டார்...

அதிரதனும் வேண்டா வெறுப்பாக அதை கேட்டு கொண்டாலும் அந்த தம்பதியினரின் முகத்தில் தெரிந்த ஆர்வம் அவனுக்கும் ஒரு ஆர்வத்தை தூண்டியது..

அதன்படி அவன் தாத்தா சொன்ன ஏற்பாடுகளை எல்லாம் மடமடவென்று செய்து முடித்தவன் அடுத்து திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் மற்ற பொருட்கள் வாங்க வேண்டும் என்று நிலா அதிரதனிடம் சொல்ல அவனும் அனைவரையும் அழைத்து கொண்டு கோயம்புத்தூர் சென்றான்.. .

கூடவே நிலா ஒரு திருமணம் நடக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று அந்த தம்பதியருக்கு விளக்கி கொண்டு வர, அதிரதன் அவர்க்ளை அவர்களுடைய ஜவுளி ஸ்டோர்க்கு அழைத்து சென்றான்..

அதில் லியாவுக்கு அழகான பட்டு புடவையும் மற்ற பொருட்களும் வாங்கி கொண்டு அந்த புடவைக்கு பொருத்தமான ப்ளவுஸ் ஐ அங்கயே தைக்க கொடுத்து மற்றும் அலங்காரத்துக்கான பொருட்களையும் வாங்கி கொண்டு உணவை அங்கயே முடித்து கொண்டு திரும்பி இருந்தனர்..

அடுத்த நாளும் திருமண ஏற்பாட்டில் அந்த ஜமீன் களை கட்டியது.. அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட எல்லாருக்கும் கல்யாண விருந்தை ரெடி பண்ணினாள் நிலா..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!