நிலவே என்னிடம் நெருங்காதே-41

 


அத்தியாயம்-41

துள்ளலுடன் தன் புடவை முந்தானையை ஒரு கையில் பிடித்து சுழற்றியபடி கீழறங்கிவந்தவளை மனோகரி அழைத்தார்.

அதை கேட்டு அதிசயித்தாள் நிலா..

அவள் இந்த ஜமீனிற்கு வந்ததில் இருந்து மனோகரி அவளிடம் முகம் கொடுத்து பேசியதில்லை.. அவள் மாமனார் நெடுமாறன் அவ்வபொழுது நிலா என்று  அழைத்து இயல்பாக பேசுவார்..

ஓரளவுக்கு எல்லாரும் அவளை ஏற்று கொண்டிருந்தாலும் மனோகரி மட்டும் இன்னும் தள்ளி நின்றுதான் இருந்தார்.. அவளும் அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. இன்று அவரே அவளை அழைக்க ஆச்சர்யமாய்

“என்னங்க அத்தை...? என்னையவா கூப்பிட்டிங்க ?  “ என்று சிரித்தவாறு தன் மாமியாரிடம் சென்றாள்..  

உடனே மனோகரியும் அவள் கையில் ஒரு பால் டம்ளரை திணித்தார்.

அதை கண்டு திடுக்கிட்டவள்

“அத்தை.. எனக்கு பால் வேண்டாம்... எனக்கு பால் குடிக்கும் பழக்கம் இல்லை.. “ என்றாள்  மெல்ல தயக்கத்துடன்..

“ஹ்ம்ம்ம்ம் இது ஒன்னும் உனக்கில்லை...என் மகனுக்கு.. கொண்டு போய் அவனிடம் கொடு.. “ என்றார் முறைத்தவாறு..

“ஏன் அத்தை... அவர் பால் குடிக்காம போய்ட்டாரா? நீங்களே கொடுத்திருக்கலாம் இல்ல.. “ என்றாள்  தயக்கத்துடன்..

மனோகரி மானசீகமாக தலையில் அடித்து கொண்டார்..

“இவ்வளவு நேரம் அந்த வெள்ளக்கார பொண்ணை பாடாய் படுத்தியவள் இப்ப பார் ஒன்னும் தெரியாதவ மாதிரி நடிக்கிறதை..!  

எல்லாம் என் வாயால் சொல்ல வைக்கவேண்டும் என்று எண்ணம் போல.. சரியான அழுத்தக்காரி.. ஜமீன்தார் பார்த்து கட்டி வைத்தவள் இல்லையா அவரை போலவே அழுத்தமாகத்தான் இருப்பாள்.. “ என்று மனதுக்குள் செல்லமாக  திட்டி கொண்டவர் அவளை முறைத்தவாறு

“அது எனக்கு தெரியாதாக்கும்..!  மருமகளா மத்த பொறுப்பை எடுத்துகிட்டா மட்டும் பத்தாது...என் பொண்ணுங்க மனசை மாத்தின மாதிரி உன் புருஷன் மனசையும் மாத்தி சீக்கிரம் இந்த ஜமீனுக்கு ஒரு வாரிசை பெத்து கொடுக்கற வழியை பார்... அதுக்குத்தான் இது... “ என்று எங்கோ பார்த்து கொண்டு சொல்ல, நிலாவுக்கோ அப்பொழுதுதான் விஷயம் புரிந்தது..

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டதும் கன்னங்கள் சூடேற உடனே தலையை குனிந்து கொண்டாள்..

அதை கண்ட மனோகரி தன் முறைப்பை விடுத்து அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவர்

“நீயும் புதுசா கல்யாணம் ஆனவ தான் மா. நீங்களும் இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலனு தெரியும்... இன்று நாள் நல்லா இருப்பதால் நீங்களும் உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க..” என்றார் கனிவுடன்..

அதை கேட்டு அதிர்ந்தவள்

“அத்த... அது வந்து..... அவர் வேற ஒரு பொண்ணை..... “ என்று இழுக்க

“ஆம்பளைனா வயசு கோளாறுல அப்படி இப்படித்தான் இருப்பான்.. நானும் அவன் பேச்சை கேட்டு அந்த சாந்தினிதான் இந்த வீட்டு மருமகளா வரணும் னு நினைச்சிருந்தேன்..

ஆனால் இந்த ஜமீனில் மருமகளாய் வருவதற்கு வெறும் அழகும் பளபளப்பான தோலும் மட்டும் இருந்தால் பத்தாது.. புத்தி கூர்மையும் திறமையும் சரியாக திட்டமிடுதலும் எல்லாரையும் அனுசரித்து போகும் குணம் எல்லாம் வேண்டும் என்று இப்ப நான் புரிந்து கொண்டேன் நிலா மா..

உனக்கு முன்னாடியே இந்த ஜமீனுக்கு மருமகளாய் வந்தவ நான்.. ஆனால் எனக்கு அந்த சாமர்த்தியம் பத்தலை.. என் கவனம் எல்லாம் பகட்டாக அணிவதிலும் ஜமீன் மருமகள் என்று பெருமை சொல்லி கொள்வதில் மட்டுமே நின்று போனது... ஒரு நல்ல மருமகளாய் இந்த ஜமீனுக்கு எதுவும் செய்ததில்லை..

என் கண் முன்னாடியே அழிந்து கொண்டிருந்த என் மூத்த மகளின் வாழ்வை நேராக்கணும் என்ற பொறுப்பு கூட எனக்கு தோன்றவில்லை.. ஆனால் நீ வந்த ஒரு வாரத்திலயே ஒவ்வொருத்தரையும் நன்றாக புரிந்து கொண்டு விட்டாய்..

அம்முக்கு நல்ல வாழ்க்கையை திருப்பி கொடுத்திருக்க.. இப்ப அவ எவ்வளவு சந்தோஷமா மாப்பிள்ளை கூட சிங்கப்பூர் ல இருக்கா..இந்த சாமர்த்தியம் எல்லாம் அந்த பட்டணத்துக்காரிக்கு இருந்திருக்காது..

அவளும் இன்னொரு மனோகரியாதான் இருந்திருப்பானு இப்ப புரிஞ்சுகிட்டேன் நிலா மா..ஜமீன்தார் சரியான மருமகளைத்தான் கொண்டு வந்திருக்கிறார்...

இந்த அத்தையின் ஆதரவும் இப்ப உனக்கு... அதி அந்த சாந்தினியை விரும்புகிறான் என்று அப்படியே விட்டுவிடாதே... அது ஒன்னும் காதல் இல்லை.. அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் அவ்வளவுதான்..

அஷ்திவாரம் ஸ்ட்ராங் ஆ இல்லாத மயக்கம் அது..அவனுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவ நீதான்..

ஒரு நல்ல பொண்டாட்டியா நீதான் அவன் மனசை ஜெயிக்கணும்.. உன்னால முடியும்.. நீயும் உன் உரிமையை விட்டு கொடுக்காத.. சீக்கிரம் என் மகன் மனம் மாறிவிடுவான். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்...

சரிடா... நேரம் ஆகுது பார்..சீக்கிரம் உன் ரூமுக்கு போ.. “ என்று தன் மருமகள் கன்னம் வருடி சிரித்தவாறு அவளை மேல அனுப்பி வைத்தாள் பெரியவள்..

நிலாவும் நெகிழ்ந்து போய் குனிந்து தன் மாமியார் பாதம் பணிந்து மாடிக்கு சென்றாள்... 

மாடி ஏறியவள் கால்களோ பின்னி கொண்டன. எத்தனையோ முறை அந்த மாடிப்படிகளில் தாவி ஏறியும் இறங்கியும்  இருக்கிறாள்.. இன்று ஏனோ மேல செல்ல தயக்கமாக இருந்தது...

கால்கள் அவளுடன் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தின... அவளை நினைத்தே அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது...

இரண்டு வாரத்துக்கு முன்பும் இதே மாதிரி சென்றிருக்கிறாள்..

திருமணம் முடிந்த அன்று இரவு அவள் மாமியார் மனோகரி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவளுக்கு அலங்காரம் செய்து அவள் மறுக்க மறுக்க நகைகளை பூட்டி கையில் பால் சொம்பை  கொடுத்து கூடவே துணைக்கு வந்து அந்த அறையில் விட்டுச் சென்றது ஞாபகம் வந்தது..

ஆனால் அன்று அவளும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியத்துடன்  படியேறிச் சென்றாள்..

“ஆனால் இன்று மட்டும் ஏன் இந்த தயக்கம்?  எதற்கு என் கை கால் உதறுது?  “ என்று அவசரமாக அன்றைக்கும் இன்றைக்கும் ஆறு வித்தியாசத்தை தேட உடனேயே அவளுக்கு புரிந்துவிட்டது...

அன்று அவள் மனது வெற்றிடமாக இருந்தது.. எந்த ஒரு எதிர்பார்ப்பும்  இல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல நடந்துகொண்டாள்..  ஆனால் இன்று? என்று  ஒரு நொடி யோசித்தாள்..  

இன்று மட்டும் என்னவாம்  என்று அவள் மனஸ்  கண்சிமிட்டி குறும்பாக கேட்க அவளுக்கு  அதற்குமேல் யோசிக்க பயமாக இருந்தது..

அவளை  மேலும் தடுமாற வைக்க வேண்டாம் என்று  அவள் கால்கள் அதற்குள்  அந்த அறையை அடைந்திருந்தன..  ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றவள் அவசரமாக வந்த அறையை ஆராய, வழக்கம் போல அதிரதன் படுக்கையில் அமர்ந்தவாறு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்..  

இந்த முறை அலுவலக வேலை போல.. முகத்தை சின்சியராக வைத்துக்கொண்டு எதையோ  அவசரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தான்..  

ஓரக்கண்ணால் அவனை  கண்டவளுக்கோ மீண்டும் உதற ஆரம்பித்தது....

இத்தனை நாட்களாக எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவனுடன் இந்த அறையில் தனியாக தங்கி இருந்தாள் தான்...

ஆனால் இரண்டு நாட்கள் முன்பு அவன் அவளை இறுக்கி அணைத்ததும் அவளும் அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்து கிறங்கி கிடந்த நாளுக்கு பிறகு ஏனோ அவனை தனியாக சந்திக்க அவளுக்கு தயக்கமாகவும்  வெட்கமாகவும் இருந்தது.

அதனாலயே அடுத்த நாள் அவன் அறைக்கு வராமல் லியாவை காரணம் காட்டி அவள் அறையிலயே தங்கி கொண்டாள்... இரண்டு நாட்கள் எப்படியோ இந்த அறைக்கு வராமல் எஸ்கேப் ஆகியவள் இன்று வேற வழி இல்லாமல் வர வேண்டியதாகி விட்டது..

அதுவும் சும்மா வராமல் கையில் அவனுக்கு பாலையும் வேற எடுத்து வந்திருக்க இன்னுமே ஏதோவொரு இனம்புரியாத உணர்வாக இருந்தது.. வயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்க, இதழ்கள் துடிக்க, தன்னை சமாளித்து கொண்டவள் மெல்ல நடந்தாள்..

எவ்வளவுதான் மெதுமெதுவாக அடி எடுத்து வைத்து பூனை நடை நடந்திருந்தாலும் கடைசியில் அவன் படுக்கையை அடைந்திருந்தாள்.. அவனும் இவள்  வந்ததை கூட அறியாமல் இன்னுமாய் அலைபேசிக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருக்க அவன் அருகில் வந்தவள் அவனை எப்படி அழைப்பது என்று தயக்கமாக இருந்தது..

மெல்ல தொண்டையை செருமினாள் அவன் கவனத்தை கவர... அவள் எதிர்பார்த்த மாதிரியே அவனும் பார்வையை  மேலே நிமிர்த்தி என்ன என்று பார்வையால் வினவினான்..

அவனின் அந்த கம்பீரமான பார்வையில் பெண்ணவளும் ஒரு நொடி பேச்சிழந்து நின்றவள் அடுத்த நொடி சுதாரித்துக்கொண்டு அவன்  முன்னே பால் டம்ளரை நீட்டினாள்..

அவனும் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டவன்  தான் அமர்ந்திருந்த பொசிஸனில் இருந்து கொஞ்சம் நகர்ந்து நேராக அமர்ந்துகொண்டு அந்த பாலை பருகியவாறு மெதுவாக அவளை  பார்த்தவன்

“தேங்க்ஸ்... “  என்றான் மொட்டையாக..  

அதற்குள் ஓரளவுக்கு சுதாரித்துக் கொண்டவள்  

“எதற்காக இந்த தேங்க்ஸ்? “ என்று வாயை திறந்து கேட்காமல்  அவனை போலவே  புருவத்தை உயர்த்தி பார்வையால் வினவினாள்..

அவளின் பார்வையின் கேள்வியை புரிந்து கொண்டவன்  

“ஸ்டீபன் மற்றும் லியாவுக்கு இந்த மேரேஜ் அரேஞ்மென்ட் பண்ணினதுக்கு..தே ஆர் வெரி ஹேப்பி...தே என்ஜாய்ட் டூ.... தாங்க்ஸ்.. " என்றான் மீண்டும் புன்னகைத்தவாறு..

நிலாவுக்கோ நம்பவே முடியவில்லை..

“நான் கேட்பது உண்மைதானா?  பார்ப்பது நிஜம்தானா? என்று தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டாள் பெண்ணவள்..  

எப்பொழுதும் அவளை கண்டாலே முறைத்து கொண்டு இருப்பவன் அவனின்   அழுத்தமான இதழை திறந்து புன்னகைக்க,  அதற்கும் ஒரு படி மேல சென்று அவளுக்கு நன்றி சொல்லி புன்னகைக்கவும் அவளால் நம்பவே முடியவில்லை..

அவளும் மெல்ல  புன்னகைத்தவள்   

“யூ ஆர் மோஸ்ட் வெல்கம்..எனக்கு சப்போர்ட் பண்ணின உங்களுக்கும்  நன்றி.. “ என்றாள் அதே புன்னகையுடன்..

அவள் சிரிக்கும் பொழுது கூடவே சிரித்த அவள் கண்களும் கன்னத்தில் அழகாக குழிந்து இருந்த அவளின் கன்னத்து குழியும் இதழோரம் இருந்த அந்த பெரிய மச்சமும் அவன் உள்ளே தடுமாற வைத்தது..

அவளையே ஓரக்கண்ணால் ரசித்து பார்த்தவன் தன் கையில் இருந்த பாலை பருகியபடி

“ஆமா... ஃபர்ஸ்ட் நைட் அரேஞ்மென்ட் எல்லாம் புது ஜோடிக்கு மட்டும்தானா?  பழைய ஜோடிக்கு  இல்லையா? என்றான்  தன் கையில் வைத்திருந்த டம்ளரில் தன் நீண்ட விரல்களால் தாளமிட்டவாறு மந்த காச புன்னகையுடன்...

அவனின் கேள்விக்கும் சீண்டல் பார்வைக்கும் அவள் உள்ளே  ஏதோ புரண்டது... கன்னங்கள் செம்மையுற ஆரம்பிக்க, அதை அவனுக்கு காட்டாமல் மறைக்கும் விதமாக தன் கால் கட்டை விரலை தரையில் அழுந்த அழுத்தி கொண்டாள்..

உதடுகளோ என்னையும் அழுத்தி கொள். இல்லையென்றால் உன் புருஷனிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்ட, அதையும் லேசாக பற்களால் அழுந்த கடித்தபடி தன்னை மறைத்து கொண்டவள்

“பழையா ஜோடியா? அது யார் ஜமீன்தாரே? “ என்றாள் தலை சரித்து குறும்பாக கேட்டவாறு...

“ஹ்ம்ம்ம்ம் அது யாரென்று தெரிந்து கொண்டே கேட்பவளிடம் என்ன சொல்வதாம்...? “ என்று அவனும் உல்லாசமாக புன்னகைத்து கண் சிமிட்டி சிரித்தான்..

அழகாக அடுக்கி வைத்ததை போல வரிசையாக இருந்த அவன் பற்கள் கூட அவனுக்கு அழகையும் கம்பீரத்தையும் கூட்டி இருந்தது...உல்லாசமாக சிரித்தவனை ஒரு நொடி அவளையும் மறந்து அவனை ரசித்து கொண்டிருக்க அவனோ விடாமல்

“ஹ்ம்ம் சொல்லுங்க மேடம்... பழைய ஜோடிக்கு மட்டும்  ஃபர்ஸ்ட் நைட் இல்லையா? “ என மீண்டும் அவளை சீண்ட இந்த முறை எத்தனை முயன்றும் அவள் வெட்கம் அவளையும் மீறி வெளிவந்து குதித்தது...

கன்னங்கள் சிவந்து போக, உடலில் ஒரு சிலிர்ப்பு பரவி செல்ல, அவனை லேசாக முறைத்தவாறு தன் இடத்திற்கு செல்ல எத்தனிக்க அடுத்த நொடி எட்டி, அருகில்  நின்றிருந்தவளின் மென்கரம் பற்றி சுண்டி இழுக்க, இதை எதிர்பாராத அந்த கொடியோ வேரறுந்த மரமாய் அப்படியே சரிந்தாள்...

தன்னை நோக்கி சரிந்தவளை இன்னுமாய் இழுத்து தன் மஞ்சத்தில் போட்டு இறுக்கி அணைத்து கொண்டவன் சற்றும் தாமதிக்காமல் அவளின் பின்னங்கழுத்தில் அழுந்த முத்திரையை பதித்தான்..

தன் கணவனின் முதல் முத்தத்தில் அப்படியே சிலிர்த்து போனாள் பெண்ணவள்..  அவன் பிடியிலிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தவள் அவனின் இந்த அழுத்தமான முத்தத்தால் அவள் உடல் எடை இழந்து போக அடுத்த நொடி தன் முயற்சியை விட்டுவிட்டு அவன் மஞ்சத்தில் இன்னும் வாகாக ஒன்றி கொண்டாள்...

அவனோ அவளின் சங்கு கழுத்தில் தன் தேடலை  முடித்து அவளின் காது மடலுக்கு தாவி இருந்தான் தன் தேடலை..அவளின் வெண்ணிற மென்மையான காது மடலை தன் முரட்டு இதழ்களால் வருட, கைகளோ அவள் முகத்தில் கோலம் இட்டு கொண்டிருந்தது..

தன் கணவனே என்றாலும் அவளுக்குள் ஏனோ சிறு தயக்கம் பெண்ணவளுக்கு...

அவள் இதழ் திறந்து வேண்டாம் என்று சொல்லி மறுக்க முயல, அதே நேரம் அவனின் சூடான  மூச்சு காற்று அவள் காது மடலில் பட்டு இன்னுமாய் அவளை சிலிர்க்க, சிவக்க வைக்க, அவள் சொல்ல நினைத்தது வெறும் காற்றாய் கூட அல்லாமல் வெறும் இதழ் அசைவாய் நின்று போனது....

முகத்தில் கோலமிட்டவன் கைகளோ மெல்ல அசைந்த அவளின் செவ்விதழுக்கு தாவி இருந்தது...

லிப்ஸ்டிக் போடாமலயே செர்ரி பழம் போல சிவந்தும் ஆரஞ்சு சுளை போல திரண்டும்  இருந்த  அவளின் இதழை மெல்ல வருடின...

அந்த தீண்டலில் அந்த இதழ் வருடலில் இன்னுமாய் உருகி குழைந்து அவனுள் புதைந்து கொண்டாள் அவன் மனையாள்..

அதில் இன்னும் சூடேறியவன் அவளை முன்பக்கமாக திருப்பி அவள் மோவாயை நிமிர்த்தி இதுவரை அவன் கைகள் செய்து கொண்டிருந்த வேலையை அவன் இதழுக்கு மாற்ற அவள் இதழ் நோக்கி தாபத்துடன் குனிந்தான்..

இதுவரை அவன் முகம் பார்க்காமல் அவனுள் ஒன்டி கொண்டிருந்தவள் இப்பொழுது வெகு அருகில் தாபத்துடன் தன்னை நோக்கி குனியும் தன்னவன் முகம் காண இன்னுமாய் வெட்கம் வந்து அப்பி கொண்டது...

சிவந்து போனவள் அவன் முகம் காண முடியாமல் கண்களை இறுக்க மூடி கொண்டாள்..

கணவனின் இறுகிய அணைப்பிலும் அவனின் தீண்டலிலும் பெண்ணவளுக்கு சொர்க்கத்தின் வாயிலை அடைந்ததை போல மகிழ்ச்சி ஊற்றேடுத்து பெருகியது...

அன்று போலவே இன்றும் அந்த சொர்க்கத்தின்  வாயிலை பார்த்து ரசித்து கொண்டிருந்தவள் அடுத்து அதன் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவள் கால்கள் தவித்தன.. மெல்ல மெல்ல அதன் கதவில் கை வைத்து தள்ள முயன்றாள்..

கண்களை இறுக்க மூடி கொண்டு தன் கணவனின் இதழ் தீண்டலுக்காக தவித்திருக்க, எந்த அசைவும் முன்னேற்றமும் இல்லை அவனிடத்தில்..

சிறிது நேரம் அப்படியே கிறங்கி கிடந்தவள் எந்த அசைவும் இல்லாமல் போக மெல்ல விழிகளை திறந்தாள் பெண்ணவள்..

திறந்தவளின் இமைகளில் மீண்டுமாய் தெரிந்த தன்னவன் முகத்தை காண அப்படியே அதிர்ந்து உறைந்து போனாள்...

இதுவரை அவளை பார்த்து மந்தகாசமாய் உல்லாசமாய் சிரித்து கொண்டிருந்தவன் முகம் பாறை போல இறுகி கிடந்தது.. குழைந்து இருந்த அவன் கண்களோ நெருப்பை கக்கின..

நிலாவுக்கோ ஒன்றும் புரியவில்லை... தன் கண்களை மீண்டும் மீண்டுமாய் சிமிட்டி தான் காண்பது கனவா நனவா என்று அவசரமாக ஆராய்ந்தாள்..

அவளின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளை கண்டவனோ

ஹா ஹா ஹா என்று இடியென சிரிக்க ஆசையோடு அவள் கன்னம் நிமிண்டிய அவன் கரமோ இப்பொழுது ஆத்திரத்தில் அவள் கன்னத்தை அழுத்தியது...

“என்ன மிஸஸ் நிலவினி அதிரதன் ? அப்படியே ஷாக் ஆகிட்ட? இதை இந்த ட்விஸ்ட் ஐ எதிர்பார்க்கல இல்ல? சொர்க்கத்தின் வாயில் வரை சென்று  அதை பறித்து கொண்டால் எப்படி வலிக்கும் என்று உனக்கு தெரிய வேண்டாம்?

அதுக்குத்தான்.. அந்த வலியும் வேதனையும் உனக்கு புரிய வைக்க வேண்டும் என்றுதான் இந்த நாடகம். “ என்று மீண்டும் கடகடவென சிரித்தான்..

அவளோ இன்னுமே ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க முழித்து கொண்டிருக்க

“என்னடி? ஒன்னும் புரியாதவளாட்டம் இப்படி முழிக்கிற? உன்னை அணைத்த இதே கைகள் எத்தனையோ முறை என் நிலா பொண்ணை அணைத்திருக்கிறது..

அவள் இதழ் வருடி முத்தமிட்டிருக்கிறது... அப்பொழுது நாங்களும் இதே மாதிரிதானே சொர்க்கத்தின் வாயிலை கண்டிருப்போம்.. ஆனால் அதை  முழுவதும் அனுபவிக்க விடாமல் அந்த ஜமீன்தாருடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றி உன் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டாயே...!  

என் நிலா பொண்ணை என்னிடம் இருந்து பிரிக்க முயன்றாயே.... அப்ப எனக்கு எப்படி வலித்திருக்கும்? அந்த வலியையும் வேதனையையும் உனக்கு காட்டத்தான் இந்த நாடகம்..

இப்பொழுதாவது புரிந்திருக்குமே என்னை பற்றி.. நீயாக என்னை விட்டு விலகி விடு.. என் நிலா பொண்ணுதான் என் பொண்டாட்டி.. அவளுக்கு மட்டும்தான் இந்த அதிரதன் முழுமையாக அர்பணிப்பான்.. என்னை விட்டு விலகி விடு.. “

என்று பல்லை கடித்தான்..  

அவள் கன்னத்தை இன்னுமாய் இறுக்கி அழுத்திய கரங்கள் அவள் இதழுக்கு வர,  அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவள் பட்டென்று அவன் கையை தட்டி விட்டு அவனை பின்னுக்கு தள்ளி அவன் பிடியில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள் அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு புயலென குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்....  

அந்த குளியலறையின் கதவை அறைந்து மூடியவள் கண்களிலோ கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது... கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டவள் உதடு துடிக்க கண்ணீர் அருவியாய் கொட்ட அந்த தண்ணீர் குழாய் ஐ திறந்து விட்டுவிட்டு  தன் முகத்தை கைகளால் மூடி கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள் நிலா...

எதுக்கு அழுகிறோம்  என்றுதான் அவளுக்கு தெரியவில்லை..

தன்னை பிடிக்காமல் கட்டாயத்தின் பேரில் தாலி கட்டியவனை எண்ணி அழுகிறாளா? அவன் மனதில் தனக்கு பதிலாக வேற ஒருத்தி குடியிருக்கிறாள் என்று அழுகிறாளா?

கடந்த இரண்டு நாட்களாக அவனுடனே சுற்றி கொண்டிருந்துவிட்டு அவனை சிரிக்க சிரிக்க ரசித்து இருந்தவள் இன்று அவனே அவளை இழுத்து அணைத்து சொர்க்கத்தின் வாயிலை காட்டி அதை பறித்து கொண்டதை எண்ணி அழுகிறாளா?

இல்லை அவனின் மந்தகாச புன்னகையில் மயங்கி தன் கணவன் தன்னை ஏற்று கொண்டான் என்ற நெகிழ்ச்சியில் அவன் மஞ்சத்தில் உரிமையுடன் சாய்ந்திருக்க அவனோ இது எல்லாம் நாடகம் என்று அவளை தள்ளி வைத்து பொய்த்து போனதை எண்ணி அழுகிறாளா?  அவளுக்கே தெரியவில்லை..

ஆனாலும் அழவேண்டும்.. அதுவும் வாய் விட்டு கதறி அழவேண்டும் போல இருக்க, வாய்விட்டே அழுதாள் நிலா..

அழுவது கோழைத்தனம் என்பார்கள்.. ஆனால் சில நேரம் தன் வேதனையை மனதிற்குள் போட்டு புதைத்து கொண்டு வெளிக்காட்டாமல் இருப்பதை விட மனம் விட்டு ஒரு மூச்சு அழுதுவிட்டால், உள்ளே அடைத்து கொண்டிருப்பது எல்லாம் வெளியில் வந்துவிட்டால் ஒரு வித நிம்மதியாக இருக்கும்...

அப்படித்தான் இருந்தது நிலாவுக்கு.. ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட, கொஞ்சம் தெளிவாக இருந்தது. அவளால் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முடிந்தது..

என்ன நடந்தது என்று திருப்பி பார்த்தாள்.. நடந்தது எல்லாம் அவனின் நாடகம் என்று அவன் சொல்லியது கருத்தில் வந்தது.. ஆனால் மனம் அதை ஏற்க மறுத்தது..

அவளை கண்டதும் அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒரு ஒளி,  நாடகமா? அவன் இதழில் தெரிந்த மந்தகாச மயக்கும் புன்னகை நடிப்பா? தன்னை தாபத்துடன் இறுக்கிய அணைத்து தீண்டியது வேஷமா? நம்பமுடியவில்லை அவளால்..!  

இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா? அவன் பார்வையில் செயலில் எல்லாம் ஒரு கணவனுக்கான் உரிமையையும் தாபத்தையும் தானே கண்டாள். அவளை பழிவாங்கும் எண்ணம் கொஞ்சமுமே இல்லையே..  அப்படி இருந்திருந்தால் அதை உடனே கண்டு கொண்டிருப்பாள்..

ஒரு பெண்ணுக்கு பெண்ணின் புலன்களுக்கு அந்த அபூர்வ சக்தி உண்டு.. தப்பான நோக்குடன் தன்னை அணுகும் எவரையும் அனுமதிக்க மாட்டாள்.. அது தன் கணவனே என்றாலும்.

அவன் அவளை அணுகியபொழுது அப்படி எதுவும் தப்பாக தோன்றவில்லை.. ஏன் தோன்றவில்லை? தன்னையே கேட்டு கொண்டாள்..

அப்பொழுதுதான் அந்த திடுக்கிடும் உண்மை புரிந்தது..

அது,  அவள் மனதில் அவள் கணவன் குடிபுகுந்து இதய சிம்மாசனத்தில் சிரித்தவாறு அமர்ந்து கொண்டு அவளை ஆட்சி செய்யும் உண்மை புரிந்தது..

அதை உணர்ந்ததும் திடுக்கிட்டாள்...

இது எப்படி சாத்தியம்? தாத்தா கேட்டு கொண்ட பொழுது கூட ஒரு கடமைக்காகத்தானே இந்த திருமணத்திற்கு ஒத்துகொண்டாள்.

அவன் முறுக்கி  கொண்டு இருந்த பொழுதுகூட அவளுக்கு பெரிதாக எதுவும் பாதிக்காமல் அவனுடன் வாய் அடித்தாளே.. அப்பொழுது எல்லாம் அவள் மனம் வெற்றிடமாக இருந்தது..

ஆனால் எப்பொழுது அவன் உள்ளே நுழைந்தான் என்று புரியவில்லை..

ஒருவேளை மஞ்சக்கயிறு மேஜிக் என்று சொல்வார்களே.. அதுபோல தன் கணவன் என்ற உரிமையில் அவளையும் அறியாமல் காதல் வந்துவிட்டதோ !

காதாலா? இதுதான் காதலா? இதுக்கு பெயர்தான் காதலா?

காதல் எந்த நொடியில் எப்படி மலரும் என்று இந்த உயிர்களை படைத்த பிரம்மாவுக்கே கூட தெரியாதாம்.. அப்படி இருக்க இந்த பேதை பெண்ணுக்கு மட்டுமா தெரிந்துவிடும்..

தன் காதலை நினைத்து சிலிர்த்தாலும் அடுத்த நொடி அவள் முகம் வாடிவிட்டது..

“எதிர்காலம் இல்லாத காதல்...!  அவன் மனதில் வேற ஒருத்தி இருக்கிறாளே..!  

அவளை விட்டு விலக முடியாமல் விலக பிடிக்காமல் தானே அவன் தன்னை துரத்த இத்தனை முயற்சி செய்கிறான்..

ஒருவேளை அவன் கொண்டதும் உண்மையான காதலா? அப்படி என்றால் அவனை அவன் காதலியிடமிருந்து பிரிப்பது தவறல்லவா? இதைத்தானே எனக்கு புரிய வைக்க முயல்கிறான்.. அவன் மீது காதல் கொண்ட பிறகுதான் காதலின் அருமை பெருமை புரிகிறது..

தன் காதலியை,  காதலனை பிரிந்தால் எப்படி வலிக்கும் என்று இப்பொழுது அவளுக்கும் புரிந்தது..

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை...

“அவன் சாந்தினியை ஆழமாக காதலித்தால் நடிப்பதற்காக கூட எப்படி என்னை தீண்ட முடிந்தது..?  இன்றுதான் நடித்தான்.. ஆனால் அன்று நடிக்கவில்லையே.. அவனாகத்தானே என்னை அணைத்து கொண்டான்..!

அப்படி என்றால் அது காதல் இல்லையோ ? தாத்தா சொல்வது போல அந்த சாந்தினி மீது இருப்பது மாயைதானோ? உண்மையான காதலை புரிந்து கொண்டால் பொய்யை விட்டு விலகிவிடுவானோ?

அதைத்தானே தாத்தா சொன்னார்.. தகரத்தை கண்டு கொண்டால் அதைவிட்டு விலகிவிடுவான் என்று..

என்னென்னவோ யோசித்து கொண்டிருந்தவள் ஒரு ஆழ மூச்சை இழுத்து விட்டுகொண்டு

“எது எப்படியோ?  தாத்தாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.. அவனுக்கு அவன் கொண்டு உள்ளது காதல் இல்லை என்று புரிய வைக்கவேண்டும்..எந்த காரணம் கொண்டும் தப்பானவளை அவன் வாழ்க்கை துணையாக அமைத்து கொள்ளக்கூடாது...அவன் கொண்டுள்ள மயக்கத்தை தெளிய வைக்கவேண்டும்..  அதுவரை ஓயக் கூடாது..

இனி ஒருதரம் அவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள விடக்கூடாது.. இந்த உடல் சுகத்தை காட்டி என்னை விலக வைக்க முயல்கிறான்... பைத்தியக்காரன்.. என் மனதில் காதல் இல்லாமல் அவன் நிழல் கூட என்னை நெருங்க முடியாது என தெரியாத பைத்தியக்காரன்..

என் காதல் இனி என் உள்ளே.. அவனிடம் இனி நான் மயங்கி நிக்க மாட்டேன்.. ஆனாலும்  அவனுக்கு உண்மையான காதலை, நம் திருமணத்தின் புனிதத்தை , தாலியின்,  மனைவியின் மதிப்பை அவனுக்கு உணர்த்துவேன்.. “

என்று தனக்குள்ளே சூளுரைத்தவள் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து அழுந்த துடைத்தவள் முகமும் மனமும் தெளிவாகிவிட, குளியல் அறையில் இருந்து வெளிவந்தவள் தன் படுக்கைக்கு சென்று படுத்து கொண்டாள்..

பால்கனியில் நின்று தனக்கு பிரியமான அந்த பால் நிலாவை வழக்கம்போல ரசித்து கொண்டிருக்காமல் இன்று மட்டும் அதிசயமாய் வெறித்து கொண்டிருந்தான் அதிரதன்..

அவன் முகத்தில் அவளை வென்று விட்ட ஒரு குரூர திருப்தி.. தன் எதிரியை தோற்கடித்த வெற்றி கழிப்பு....

ஆனால் மனதில்??

ஏனோ அவன் மனம் அமைதி அடையவில்லை.. தன் மஞ்சத்தில் கிறங்கி கிடந்தவளின் முகமே கண் முன்னே வந்து இம்சித்தது..

அவன் இறுக்கி அணைத்த பொழுது உணர்ந்த அவள் மேனியின் மென்மை இன்னுமாய் அவன் உள்ளே சிலிர்க்க வைத்தது..

“எப்படி இது? வேற ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டுள்ள நான் அடுத்தவளை எப்படி அணைக்க முடிந்தது?

இல்லை.. நான் ஒன்னும் அவளை ஆசையாக அணைக்கவில்லை.. எல்லாம் ஒரு நாடகத்துக்காக அவளை வருத்தபட வைப்பதறக்காக அணைப்பதை போல நடித்தேன்.. திரைப்படங்களில் வருமே கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்வதை போல..

அது போலத்தான் இதுவும்... இதுவும் வெறும் நடிப்பு மட்டும்தான்.. “  என்று தனக்குத்தானே பலமுறை சொல்லி கொண்டான்..

“ஹா ஹா ஹா வெறும் நடிப்பு என்றால் திரைப்படங்களில் அந்த ஷாட் முடிந்தவுடனே அதில் இருந்து வெளிவந்து விடும்  நாயகனை போல நீயும் வெளிவந்திருக்கலாமே..!  

ஆனால் நீ ஏன் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறாயாம்? “ என்று கண் சிமிட்டி நக்கலாக சிரித்தது அவன் மனஸ்...

அதை கேட்டு தூக்கி வாரிபோட்டது அந்த அழுத்தக்காரனுக்கு..தன் மனஸ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போனவன்  

உடனே ஷட் அப் என்று முறைத்து தன்   மனஸ் ஐ அடக்கியவன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு முன்னும் பின்னும் அந்த பால்கனியில்  நடக்க ஆரம்பித்தான்...

அவன் அறியவில்லை... தன் எதிரியை அழிக்க என்று அவன் எடுத்த ஆயுதம் கைப்பிடி இல்லாத இருபக்கமும் கூர்மையான கத்தியை போன்றது... எதிரியை தாக்குவதோடு கொஞ்சம் கவனம் திரும்பினாலும் மறுபக்கம் அதை பிடித்திருக்கும் அவனையும் தாக்கி வேதனை படுத்தும் என்று அறிய மறந்திருந்தான்...

சற்று முன் நடந்த முதல் கட்ட போராட்டத்தில் பாதிப்பு அவனுக்கும் தான்..

என்னதான் வெறும் நடிப்புக்காக பழிவாங்கத்தான் அவளை அணைத்தேன் என்று சொல்லி கொண்டாலும் அவளை கண்டதும் அவனுக்குள்ளே எழுந்த அந்த புயல் இன்னுமாய் சுழற்றி அடித்து கொண்டுதான் இருந்தது..

அதை முயன்று தன் கட்டுக்குள் கொண்டு வர முயன்றவன்

“இவள் சதிகாரி... என்னை மயக்க பார்க்கிறாள்.. என் நிலாபொண்ணு தான் என் மனைவி.. ஐ லவ் மை நிலா.. “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு தன்னை இறுக்கி கொண்டான் அந்த நிலாப்பிரியன்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!