நிலவே என்னிடம் நெருங்காதே-42

 


அத்தியாயம்-42

கேரளா:

டவுளின் நாடு என்று பெருமையுடனும் மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உயர்ந்திருக்கநாற்பத்து நான்கு ஒன்றுடன் ஒன்று இணைந்த ஆறுகளுடன், ஆசியாவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குவது கேரளா...

அதன் எல்லைக்குள் நுழைந்து மூணாறை நோக்கி தன் சொகுசு ஆடி காரை லாவகமாக செலுத்தி கொண்டிருந்தான் அதிரதன்...

காரின் பின் இருக்கையில் ஸ்டீபன் மற்றும் லியா ஒட்டி அமர்ந்து ஜன்னல் வழியாக தெரிந்த கேரளத்தின் அழகை ரசித்து கொண்டு வந்தனர்... தங்கள் ஹேண்டி கேம் ல் அதை எல்லாம் அழகாக பதிவு செய்து கொண்டே வந்தனர்...

அவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் முன்னால் இருந்த பின்பக்க கண்ணாடி வழியாக பார்த்தவனுக்கும் அந்த உற்சாகம் தொற்றி கொண்டது... இதழ்களில் குளிர்ச்சி புன்னகை தவழ, இலகுவாக காரை ஓட்டி கொண்டிருந்தவன் ஓரக்கண்ணால் தன் அருகில் பார்த்தான்..

அந்த வெள்ளைக்கார தம்பதியினரை போலவே குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் கண் குளிர வெளியில் தெரிந்த இயற்கை காட்சியை அள்ளி பருகியவாறு அமர்ந்து இருந்தாள் நிலவினி...

ஆனால் அவனை விட்டு எவ்வளவு தள்ளி அமர முடியுமோ அவ்வளவு தள்ளி ஜன்னலை ஒட்டி அமர்ந்து இருந்தாள்.. அப்பப்ப பின்னால் திரும்பி அவள் பார்த்து ரசிக்கும் காட்சிகளையும் நம் கேரளத்தின் பெருமையையும் அந்த தம்பதியினருக்கு விளக்கி கொண்டே வந்தாள்..

ஆனால் மறந்தும்  பார்வை அவனிடம் சென்றுவிடவில்லை.. ஏன் அவன் ஒருத்தன் அந்த காரில் இருக்கிறான் என்றே அவள் கண்டு கொள்ளவில்லை..

வழியில் பார்த்த புள்ளி மானையும் யானை கூட்டத்தையும் கண்டதும் கை தட்டி ஆரவரித்தவள்  பின்னால் அமர்ந்து இருந்தவர்களை அழைத்து அந்த காட்சியை காட்ட அவனுக்கு உள்ளுக்குள் சுணங்கியது..

“என்னிடம் சொன்னால் என்ன குறைந்து விடுவாளா இந்த பட்டிக்காடு.. “ என்று  உள்ளுக்குள் பொரும

“ஹா ஹா ஹா அவ எப்படி சொல்லுவா? நீதான் அவ கிட்ட வந்தப்ப தட்டி விட்டு எட்டி நிறுத்திபுட்டியே... பாவம் அந்த புள்ள.. எப்படி துடிச்சு போச்சோ.. அதுல இருந்துதான் உன் சங்காத்தமே வேணாம்னு தள்ளி நின்னுகிச்சு... “ என்று  அவனை பார்த்து முறைத்தது அவன் மனஸ்..

அதை திருப்பி முறைத்தாலும் மனஸ் சொல்வது உண்மைதான்..

நேற்று இரவு தன் மஞ்சத்தில் கிறங்கி கிடந்தவளை விலக்கி நிறுத்தி அதெல்லாம் நாடகம் என்று சொன்னதும் அவள் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம், ஏக்கம், கோபம்,  வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளும் கலந்து வந்து போனதை அவனும் கண்டிருந்தான்..

இன்று காலை அவன் எழுந்ததும் நேற்றைய இரவு சம்பவங்கள் நினைவு வர, பார்வை தானாக அவள் படுக்கையிடம் சென்றது.. ஆனால் எப்பொழுதும் அதிகாலையிலயே எழுந்து விடுபவள் இன்றும் எழுந்து சென்றிருந்தாள்..

அதிரதன் தன் காலை உடற்பயிற்சிகளை முடித்து எப்படி அவளை பார்ப்பது என்ற தயக்கத்துடன் காலை உணவுக்கு வர, அங்கு அவளோ அனைவருக்கும் காலை உணவை பரிமாறியவாறு சிரித்து பேசி கொண்டிருந்தாள்..

அவள் முகத்தில் ஒரு வருத்தம் வேதனை என்று எதுவும் இல்லை.. மாறாக நேற்றை விட இன்று இன்னும் படு உற்சாகமாக இருந்தாள். அதுவும் லியாவை தமிழ் பேசவைத்து அவள் பேசும் அழகை கிண்டல் செய்து  வம்பிழுத்து கொண்டிருந்தாள்...

அதை கண்டவனுக்கோ கடுப்பாக இருந்தது...

ஒருவேளை நேற்று நடந்த சம்பவத்திற்கு அவள் முகம் வாடி வேதனையில் இருந்திருந்தாலாவது அவன் செய்தது தப்பு என்று உறைத்திருக்கும்.. அப்பவும் அவனுக்குள் சிறு குற்ற உணர்வு இருந்தது தான்..

ஆனால் இப்பொழுது அன்றலர்ந்த மலர் போல பளிச்சென்று சிரித்து கொண்டிருப்பவளை பார்த்ததும் கொஞ்சம் இருந்த குற்ற உணர்வும் மறைந்து விட முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டி கொண்டது..

“இவள் இன்னும் கொஞ்சம் கூட பீல் பண்ணவே இல்லையே.. கொஞ்சம் கூட அசர மாட்டேங்கிறாளே.. இன்னும் மோசமா எப்படி இவளை வருத்த வைக்க முடியும்? “ என்று  யோசித்தவாறு டைனிங் ஹாலுக்கு வர, அவனை கண்டதும் அந்த தம்பதியர் அவனுக்கு காலை வணக்கத்தை சொல்லி அழகாக புன்னகைத்தனர்..

அவனும் புன்னகைத்து தன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அதுவரை மலர்ந்து சிரித்தவள் ஒரு நொடி தன் முகத்தை இறுக்கி கொண்டாள்..

அவனுடைய ப்ளேட் ஐ எடுத்து டங் என்று அவன் முன்னால் வைக்க அவனோ நிமிர்ந்து அவள் முகம் பார்க்க ஒரு எரிக்கும் பார்வையை செலுத்தியவள் காலை உணவை எடுத்து வேகமாக தட்டில் வைத்தாள்..

“ஓ.. அப்ப என் மீது கோபமாதான் இருக்கா...நான் கொடுத்த குடைச்சலுக்கு உள்ளுக்குள் வருந்தி கொண்டுதான் இருக்கிறாள்.. அதான.. இந்த அதிரதன் போடும் கணக்கு எதிலும் தப்பாகாது..

எப்படியோ கொஞ்சமாவது அவளை வருத்தபட வச்சாச்சு.. இது ஆரம்பம்தான்.. இதே மாதிரி இன்னும் குடைச்சலை கொடுக்க வேண்டும்..அதை கண்டு என்னை விட்டு விலகி ஓடணும்.  “  என்று அவசரமாக யோசித்தவன் தட்டை பார்த்து சாப்பிட ஆரம்பித்தான்..

அன்று வித்தியாசமாக இடியாப்பம் தேங்காய் பால், மற்றும் குழிப்பணியாரம் என்று விதவிதமாக சமைத்திருக்க, அனைவருமே விரும்பி சாப்பிட்டனர்..

தேவநாதனும் பேசிகொண்டே சாப்பிட்டு  கொண்டிருந்தவர் அதிரதனை பார்த்து அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அவர்களை கேரளாவுக்கு கிளம்ப சொன்னார்..

முன்பே திட்டமிட்டதுதான்.. அந்த தம்பதியினரின் தேனிலவுக்காக மூன்று  நாட்கள் கேரளா சென்று வருவதாக திட்டமிட்டிருந்தனர்..

அப்பொழுது ஒத்து கொண்ட நிலவினி நேற்று இரவு சம்பவத்துக்கு பிறகு அவனுடன் செல்ல விரும்பவில்லை... தான் போகவில்லை என்று சொல்லி பார்வையால் கெஞ்ச, தாத்தாவோ போய்தான் ஆகணும் என்று முடித்துவிட்டார்..

அதற்குமேல் மறுக்க முடியாமல் நிலாவும் உள்ளுக்குள் புலம்பி கொண்டே கிளம்பினாள்.. பின் இரண்டு ஜோடிகளும் தங்களுடைய உடமைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டனர்..

அதிரதனே காரை ஓட்டுவதாக சொல்லி ட்ரைவர் வேண்டாம் என்று அவர்கள் நால்வருமாக கிளம்பி இருந்தனர்...

காரில் அமர்ந்ததும் வழக்கம்போல நிலா பின்னால் திரும்பி அரட்டை அடித்து கொண்டு வர, முதலில் அவளின் ஒதுக்கம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை... தன் தோளை குலுக்கி விட்டு அவர்கள் பேச்சை கேட்டவாறு முன்னால் பார்த்து காரை ஓட்டி கொண்டிருந்தான்...   

ஆனால் வேண்டும் என்றே தன்னை அவள் தவிர்ப்பது தெரியவும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.. அதனால் ஓரப் பார்வையால் அப்பப்ப அவளை முறைத்த படி ஓட்டி கொண்டிருந்தான்..

சில மணி நேர பயணத்திற்கு பிறகு அதிரதன் கார் மூணாறை அடைந்தது. அங்கு இருந்த ஒரு பெரிய ரிசார்ட் ல் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தான்..

கார் நேராக ரிசார்ட் ஐ அடைய, எல்லாம் பார்மாலிட்டிஸ் முடித்து இரு தம்பதியினருக்கும் அந்த ரிசார்ட்ல்  அருகருகில் இருந்த இரு குடில்களை பதிவு செய்திருக்க, இரு தம்பதியினரும் தங்கள் குடில்களுக்கு சென்றனர்..

அதுவரை  சிரித்து கொண்டிருந்த நிலாவுக்கோ இப்பொழுது உதற ஆரம்பித்தது..

தனியாக இந்த அறையில் எப்படி இவனுடன் இருப்பது என்று உள்ளுக்குள் படபடக்க, அடுத்த நொடி

“அவன் என்ன சிங்கமா?  புலியா?  கடிச்சு குதறுவதற்கு.. இல்ல மேலதான் பாய்ந்து விடுவானா? அப்படியே பாய்ந்தாலும் அந்த புலியையும் விரட்ட என்னால் முடியும்.. “  என்று மனதுக்குள் உறுதி செய்து கொண்டவள் மிடுக்குடனே அவனை பின்பற்றி அந்த குடிலுக்குள் சென்றாள்...

உள்ளே சென்றதும் அதன் கதவை வேகமாக முடியவன் அவளை பார்த்து முறைத்தவன்

“ஏய்...  உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? “  என்று அவளைப் பார்த்து முறைத்து பல்லை கடித்தான் அதிரதன்...

அறைக்கு  வந்ததும் வராததுமாக அறிவு இருக்கா என்று கேட்கவும் நிலாக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது. அவனை திரும்பி முறைத்தவள்

“என்கிட்ட அது இல்ல... உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் கடன் தாங்களேன்...” என்று தலை சரித்து நக்கலாக கேட்டவள்

“அப்படி அறிவு இல்லாமல் என்னத்தை செய்துட்டேனாம்.. “  என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு மிடுக்குடன் கேட்டு அவனை முறைத்தாள் நிலா..

“ஹ்ம்ம்ம் நம் கலாச்சாரத்தை,  திருமணத்தின் அருமை பெருமைகளை  பற்றி வாய் கிழிய பேசுற இல்ல.. அவங்க முன்னாடி என்கிட்ட முறச்சுக்கிட்டு இருந்தா அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வராதா?  கார்ல வர்றப்ப ஏன் என்னை கண்டுக்கவே இல்லை..? “   என்றான் எரிச்சலுடன்

அதைக் கேட்டதும் இன்னுமாய் தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவனை நேராக நிமிர்ந்து கூர்ந்து பார்த்தவள்

“நீங்க என்ன சொல்ல வரீங்க ஜமீன்தாரே.. ?  நாம இருவரும் ஆதர்ஷ தம்பதிகளாக அவர்களிடம் காட்டிக்கொள்ள வேண்டுமா?  எப்படி எப்படி நேற்று இரவு நீங்க என்னிடம் நடித்ததாக சொன்னீங்களே?  அந்த மாதிரியா?

என்று தன் புருவத்தை உயர்த்தி நக்கலாக சிரித்தாள் நிலா..

அதிரனுக்கோ இப்படி நேருக்கு நேர் கேட்பவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க அதைக்கண்டு உள்ளுக்குள் பொங்கி சிரித்தாள்  அவன் மனையாள்..

ஆனாலும் தன் சிரிப்பை தனக்குள்ளே அடக்கி கொண்டவள்  அவனைப் பார்த்து

“ஹ்ம்ம் சொல்லுங்க ஜமீன்தாரே...  எப்படி நடிக்கோணும்?  அவங்க முன்னாடி உங்களை டார்லிங்,  டியர்,  பேபி அப்படின்னு சொல்லி கொஞ்சனுமா? “ என்று தலை சரித்து குறும்பாக கேட்டாள் நிலா...

அதுவரை முறைத்து கொண்டிருந்தவள் முகம் எல்லாம் இப்பொழுது குறும்பு கூத்தாடியது.. அவள் கண்களும் அவளுடன் இணைந்து குறும்புடன் சிரிப்பதை போல இருந்தது...

அதை கண்டு கடுப்பானவன்  

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...  நீ இயல்பாக பேசினாலே போதும்.. “  என்று முறைத்தான்...

“ஓகே..  டன்...  அப்புறம்ம்ம்ம்ம் என்னென்ன எப்படி எப்படி எங்கெங்க பேசணும்னு சொல்லி கொடுத்துடுங்க..  அதே மாதிரி நானும் பேசிடறேன்..  ஏன்னா எனக்கெல்லாம் உங்கள மாதிரி நடிக்க தெரியாதுப்பா... “  என்று மறைமுகமாக அவன் மண்டையில் ஒரு குட்டு வைத்தாள்...

“ஹா ஹா ஹா உனக்கா  நடிக்க தெரியாது? “  என்று ஏளனமாக உதட்டை வளைத்தான் அதிரதன்..  

அதைக்கேட்டதும் மீண்டும் புசுபுசுவென்று கோபம் வந்தது நிலாவுக்கு..

“நான் என்ன அப்படி நடிச்சுப்புட்டேன் னு  சொல்லுங்க பார்க்கலாம்..?  “  என்று முறைத்தாள்

ஆங்.. நடிக்கத் தெரியாம தான் உன் கட்சிக்காரர் தேவநாதன் ஜமீன்தார் உடன் சேர்ந்துகொண்டு என்னை கட்டாயப்படுத்தி உன் கழுத்தில் தாலி கட்ட வைத்தாயாக்கும் !  

நீ நடிக்கவில்லை என்றால் நான் வேற ஒருத்தியை விரும்புவது உனக்குத் தெரிந்த பொழுது இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது..  

ஆனால் நீயும் அவரோடு சேர்ந்து கிட்டு தானே என்னை இந்த பெரிய சிக்கலில் மாட்ட வச்சி இருக்க...  நீ பெரிய சதிகாரி தான்.. நாடகக்காரி தான்.. “  என்று மீண்டும் நக்கலாக ஏளனமாக சிரித்தான் அதிரதன்..

“ஹலோ ஜமீன்தாரே..!  ஒரு விஷயம் கவனிச்சீங்களா?  நான் ஒன்னும் இதுல நடிக்கல..  சொன்னதை செய்தேன்..  நான் என்றாவது வந்து உங்களிடம் ஏதாவது பேசி  ஏமாற்றி உங்களை மணந்து கொண்டேனா?  

நீங்க வேணா உங்க தாத்தாவை மதிக்காமல் அவர் பெருமையை உணராமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கு இத்தனை நாட்களாக தேவநாதன் தாத்தா நல்லதுதான் செய்திருக்கிறார்..  

அந்த நன்றி கடனுக்காக என் தாத்தா,  தேவநாதன் தாத்தா கேட்கிறத செய்யச் சொல்லி என்னிடம் வாக்கு வாங்கி கொண்டார்..

அதனால்தான் உங்க தாத்தா சொல்ற மாதிரி நான் நடந்து கொண்டேன்..  உங்களுக்கு வேணும்னா  அவர் மேல்  நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்..  ஆனால் எனக்கும் என் தாத்தாவுக்கும் உங்க தாத்தா ரொம்பவும் முக்கியம்..  

அவர் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை.. அவர் எது செய்தாலும் அடுத்தவங்க நன்மைக்காகத் தான் செய்வார் என்று தான் என் தாத்தாவும் வாக்குக் கொடுத்தார்..

நானும்  என் தாத்தாவுக்கு வாக்குக் கொடுத்தேன்..  அதேபோல்தான் நடந்து கொண்டேன்.. இதில் நான் எங்க நடித்தேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. “ என்று  நிமிர்ந்த பார்வையுடன் கூர்மையாக பார்த்தாள்

அதிரனுக்கு என்ன சொல்வது? அவளை எப்படி மடக்குவது  என்று தெரியவில்லை.. அவள்  சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.. அதனால் அதற்குமேல் பேச முடியாமல் போய்விட

சரி சரி பழைய கதை இப்பொழுது எதற்கு? . ஸ்டீபன் அன்ட்  லியா முன்னாள் நல்லபடியாக நடந்துகொள்..  நமக்குள்ளே இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு தெரிய வேண்டாம்..

நம்மளை ஆதர்ஷ தம்பதிகளாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. அந்த பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம்...  “  என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு...

அவளும் அதற்குள் தன் கோபத்தை தணித்திருந்தவள்  

ஓகே டன்..  அவ்வளவுதானா..  இல்லை வேற ஏதாவது இருக்கா? “  என்றாள் தன் புருவத்தை உயர்த்தி..

அவ்வளவுதான்...  இப்போ நீ போய் ரெப்ரெஸ் ஆகிட்டு வா... மதியம் சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்ல வேண்டும்.. “ என்றவன் தன் அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்..

*****

டுத்த பத்து நிமிடத்தில் இரண்டு ஜோடிகளும் ரெப்ரெஸ் ஆகிவிட்டு மதிய உணவிற்காக அந்த ரிசார்ட்டில் இருந்த  உணவு  கூடத்திற்கு சென்றனர்

கேரள முறையில் அவர்களுக்கு பிடித்தமான சில உணவு வகைகளை நிலா  பரிந்துரைக்க அவர்களும் அதை ரசித்து உண்டு முடித்ததும் மூணாறை சுற்றிப் பார்க்க சென்றனர்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!