நிலவே என்னிடம் நெருங்காதே-43

 


அத்தியாயம்-43

மூணாறு, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகும்...

முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று ஆறுகள்  சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு மூணாறு என்று பெயர் வந்ததாக கூறுவார்கள்..  

கண்ணுக்கு இனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஒரு ரம்மியமான இடமாகும்

மூணாறின் இன்னொரு சிறப்பு குறிஞ்சி மலர்கள்...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் அரிய மலரான குறிஞ்சி மலர்கள் இங்கே கொட்டி கிடக்குமாம்.. மூணாறில் ”குறிஞ்சிப்பருவம்” ஒரு கண்கொள்ளாக்காட்சி இந்த பருவத்தில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் என எங்கு பார்த்தாலும் குறிஞ்சி மலர்களால் நிறைந்திருக்கும்..

அதிரதன் காரிலயே மூணாறில் முக்கிய பகுதிகளை கண்டு களித்தனர்..

ஒவ்வொரு இடமும் மனதை அள்ளியது..இரு ஜோடிகளுமே வெகு இயல்பாக கதை அடித்து கொண்டு ஒவ்வொரு இடங்களையும் சுற்றி பார்த்தனர்..

அதிரதன் சொல்லிய அறிவுரைப்படி அவர்கள் முன்னால் நிலா ரதன் என்று அவனை அழைத்து பேச அவனும் நிவி என்று அவளுக்கு செல்ல பெயர் வைத்தான்..

அழகாக அவன் நிவி என்று அவளை அழைக்க, அதை கேட்டதும் ஆச்சர்யத்தில் திகைத்து போனாள் நிலா.. அவளை இந்த மாதிரி யாரும் இதுவரை அழைத்தது இல்லை....

வித்தியாசமாக அவனுக்கே உரித்தான ஸ்பெஷல் பெயரில் அவளை அழைக்க, நிலாவுக்கு சில்லென்று தேனருவி பாய்ந்தது உள்ளுக்குள்..

முகம் எல்லாம் பிரகாசிக்க, அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவனோ அந்த தம்பதியினரை கண் ஜாடை காட்டி அவர்களுக்காகத்தான் என்று சொல்லாமல் சொல்ல, மொத்த சந்தோஷமும் அடுத்த நொடி வடிந்து போனது...

பனிச்சாரலாய் உள்ளுக்குள் பெய்த மழை இப்பொழுது அனல்காற்றாய் மாறிப்போனது.. குறிஞ்சி மலராய் மலர்ந்திருந்த அவள் முகம் ஒரு நொடியில் அனிச்ச மலராய் வாடிப்போனது..

ஒரு நொடிதான் எல்லாம்... உடனே தன்னை சமாளித்து கொண்டவள் தோளை குலுக்கியவாறு அந்த தம்பதியினருடன் பேச்சில் இணைந்து கொண்டாள்...

ன்று மாலை ஆறு மணி அளவில் மூணாறின் பிரபலமான அருவிக்கு வந்திருந்தனர்...

அதிரதன் காரை நிறுத்திவிட்டு நால்வரும் சற்று தள்ளி இருந்த அருவியை நோக்கி நடந்தனர்... ஒரு சிறிய காடு போல இருந்த பகுதிக்குள் நான்கு பேரும் நடந்து கொண்டிருந்தனர்..

முன்னால் ஸ்டீபன் மற்றும் லியா ஜோடி நடக்க அவர்களை பின் தொடர்ந்து அதிரதன் மற்றும் நிலா அங்கிருந்த காட்சிகளை கண்டு ரசித்தபடி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்..   

அப்பொழுது நிலா அணிந்திருந்த புடவை முந்தானை ஒரு செடியில் மாட்டிக் கொள்ள, நடப்பதை நிறுத்தி கொண்டு அதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள் நிலா..

அது நன்றாக மாட்டிக்கொண்டிருக்க அவளுடன் வந்த அதிரதன் அவள் சிரமப்படுவதை பார்த்து

“இரு நிவி.. நான் எடுத்து விடுகிறேன்.. “  என்று சொல்லிவிட்டு லாவகமாக அந்த செடியில் இருந்து அவள் புடவை முந்தானையை எடுத்துவிட்டான்..  

இதற்கிடையில் ஸ்டீபன் மற்றும் லியா சற்று தூரம் முன்னால் சென்றிருந்தனர்.. தன் புடவையை நீவி விட்டு கொண்டவள்  முந்தானையை பறக்க விடாமல் மடித்து இடுப்பை சுற்றி முன்னால் வைத்துக் கொண்டாள்..

பின் அவர்கள் பாதையை பார்த்து நடக்க அவர்களுக்கு முன்னால் சென்றிருந்த ஸ்டீபன் மற்றுல் லியாவை காணவில்லை..

எங்கே போய்விட்டார்கள் என்று அவசரமாக கண்களால் தேடியபடி  ஒரு அடி முன்னால் எட்டி வைத்த நிலா அவர்கள் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் மறைவில்  நின்று கொண்டு  ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததை கண்டு கொண்டாள்..

அதிரதனுக்கு முன்னால் சென்றிருந்த நிலாவுக்கு அந்த காட்சி கண்ணில் பட்டுவிட்டது..

அப்பொழுதுதான் அங்கிருக்கும் சூழ்நிலை புரிந்தது..

மனதை மயக்கும் மாலை நேரம்..சில் என்ற  குளுகுளு தென்றல் ஓடி வந்து மேனியில் தீண்ட, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த மேகங்கள் இப்பொழுது ஓய்வெடுப்பதற்காக தரை இறங்கி வந்ததை போல சுற்றிலும் வெள்ளை பொதியாய் பனிமூட்டங்கள் சூழ்ந்திருக்க, அந்த இடமே ரம்மியமாய் மனதை அள்ளுவதாய் இருந்தது...

அந்த இதமான சூழ்நிலைக்கு  காதலர்களுக்கு இயல்பாகவே ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொள்ள தோன்றியிருக்கும்..

அவர்களோ கணவன் மனைவி... நிலா போட்ட கன்டிசனுக்காக இவ்வளவு நேரமாக தங்கள் ஆசையை கட்டுபடுத்தி வைத்திருந்திருக்கின்றனர் என்று புரிய கொஞ்சம் பெருமையாக இருந்தது..

கூடவே அந்த காட்சியும் மீண்டும் கண் முன்னே வர உடனே தன் இதழை கடித்து கொண்டு கண்ணை மூடிகொண்டாள்..அவள் கன்னங்களோ செவ்வானமாய் சிவந்து போயின..

உள்ளே படபடக்க, அப்படியே தயங்கி நின்று கொண்டாள்.. அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அதிரதன் அவளைத் தாண்டி எட்டி வைத்து முன்னே செல்ல உடனே அவன் கையை எட்டிப் பிடித்து இழுத்து போகவேண்டாம் என்று கண்ணால் ஜாடை சொன்னாள்..  

அவனோ யோசனையுடன் திரும்பி அவள்  முகத்தை பார்த்தான்..  

இதுவரை இயல்பாக இருந்த அவளின் குறிஞ்சி மலர் முகம் இப்பொழுது செந்தூரத்தை அள்ளி அப்பிய செந்தாமரை முகமாக  சிவந்து கிடந்ததை கண்டு திகைத்து போனான்..

ஏன் இந்த திடீர் மாற்றம் என்று புரியாமல் குழப்பத்துடன் அவள்  முகத்தை ஆராய, அவள்  கண்களோ அந்த மரத்தை ஜாடை காட்ட  அவன் பார்வையும் தானாக அங்கு சென்றது...  

அவனும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்த புதிதாக திருமணம் ஆன தம்பதியினருக்கே உரித்தான முத்த காட்சியை கண்டதும் அதை ஒன்றும் பெரிதாக கண்டுகொள்ளாமல் திரும்பி மீண்டும் நிலாவைப் பார்க்க அவளோ  செவ்விதழ் தவிக்க முகம் இன்னுமாய் சிவந்து போக தன் தலையை நாணத்துடன் குனிந்து கொண்டாள்...  

அவனுக்கோ இன்னுமாய் ஆச்சரியமாகி போனது...

மற்றவர்கள் முத்தம் கொடுப்பதை கண்டால் இவள்  ஏன் இப்படி சிவந்து போகிறாள்  என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் மனமோ இப்பொழுது அவனையும் மீறி தறிகெட்டு ஓட ஆரம்பித்தது

மற்றவர்கள் முத்தமிடுவதை பார்க்கும் பொழுதே சிவந்து போகும் மெல்லிடையாள் அந்த முத்தத்தை அவள் அனுபவித்தாள் எப்படி இருப்பாள் என்று  பார்க்க ஆவலாக இருந்தது அவனுக்கு..

வெட்கி சிவந்து குவளை மலர் போல நாணி தலை குனிந்திருந்தவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ள துடித்தன அவன் வலிய கரங்கள்..  

அவனுக்குள் எதுவோ உந்த, ஒரு எட்டி அவளை நோக்கி எடுத்து வைக்க அதற்குள்  முன்னால் இருந்தவர்கள் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தனர்..

அதை கண்ட நிலா உடனே அவள் பிடித்திருந்த அவன் கையை அவசரமாக விட்டுவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்..

அதிரதனுக்கோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகி போனது...

அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன் மானசீகமாக தன் தலையில் ஒரு குட்டு வைத்துக்கொண்டு ஒரு கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டு மறு கையால் தன் தலையை பின்னால்  தடவியவாறு அவளுடன் இணைந்து நடந்தான்...  

அந்த ரம்மியமான சூழலில் இருவரும் அருகருகே ஒட்டியபடி நடக்க அவனுக்குள்  பேரானந்தமாய் இருந்தது..

அதுவும் அவ்வபொழுது மெல்ல உரசி செல்லும் அவளின் மென்மையான மேனியின் தீண்டல் அவனுக்குள் சூடேற்றியது

அதே போல உரசிக்கொண்டே ஒருவர் கைக்குள் மற்றவர் கையை நுழைத்து கொண்டு  நடக்க வேண்டும் போல ஆவலாக இருக்க,  அவன் கைவிரல் ஒன்று  மெதுவாக அவள் கைவிரலை முத்தமிட்டது..  

எதார்த்தமாக அவன் கை அவள் கையை வருடுவதைப்போல காட்டிக் கொண்டான்... அவன் நாடகத்தை புரியாத பெண்ணவளோ  திடுக்கிட்டு அவனை விட்டு சற்று விலகி நடக்க ஆரம்பித்தாள்

நேற்று இரவு அவன் திட்டியது  நினைவில் இருக்க அவள்தான் அவன் அருகில் செல்வதாக எண்ணிக்கொண்டு அவன் மீண்டும் திட்டி விடக்கூடாதே என்று  கவனமாக நடக்க ஆரம்பித்தாள்..  

அவன் அருகில் வந்தாலும் இவள்  விலகி நடுவில் இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.. அதை கண்டதும் அந்த அழுத்தக்காரனுக்கு ஏமாற்றமாக இருந்தது..  

ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டு அவளுடன் நடந்த படி  அங்கு இருந்த இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்..  

ஸ்டீபன் ஜோடியோ ஆங்காங்கே நின்று விதவிதமாக புகைப்படத்தை எடுத்துக் கொள்ள,  இவர்களோ அவர்களை ரசித்தனர்..

பின் புகைப்படம் எடுப்பதற்காக அதிரதனையும் நிலாவையும் ஒன்றாக ஜோடியாக நிற்க சொல்ல,  நிலாவுக்கோ என்ன சொல்வது என்று புரியாமல் அதிரதனைப் பார்க்க அவன் தானாக வந்து அவள் அருகில் நின்று கொண்டான்...  

கூடவே அவள் தோளில் உரிமையாக கையை போட்டுக்கொண்டான்..  அவர்களும் சிரித்தவாறு பல கோணங்களில் புகைப்படத்தை எடுத்தனர்..

லேசாக அவன் கை விரல் பட்டதுக்கே தள்ளி சென்றவள் இப்பொழுது அவன் கை முழுவதும் அவள் தோளில் பதிந்திருக்க அதுவும் அவளை தன்னோடு சேர்த்து மெதுவாக அணைத்திருக்க,

“இப்ப என்ன செய்வாளாம் இந்த பட்டிக்காடு...!  அதிரதன் நினைத்தால் அது நடந்தே தீரும்.. “ என்று உள்ளுக்குள் உல்லாசமாக வெற்றி களிப்புடன் புன்னகைத்து கொண்டான் அந்த பிடிவாதக்காரன்..

நிலாவுக்குத் தான் தர்மசங்கடமாக இருந்தது...

அவன் அணைப்பில் உடல் கூச, உள்ளுக்குள் என்னவோ செய்ய மெல்ல நெழிய ஆரம்பித்தாள்.. அவனோ அவள் தோளை பற்றி இன்னுமாய் அழுத்தி அவளை விலகாதவாறு தன் அருகிலயே நிற்க வைத்தான்.

அவளோ அந்த தம்பதியினர் அறியாமல் அவனை ஓரக்கண்ணால் பார்த்து முறைக்க, அவனோ கண் சிமிட்டி மந்தகாசமாக புன்னகைத்தான்... 

அவள் கோபத்தையும் மீறி ஒரு நொடி அந்த மந்தகாச புன்னகையை ரசிக்கவும் செய்தாள் அவன் மனையாள்..

ஒரு வழியாக புகைப்படம் எடுத்து முடித்ததும் கலகலப்பாக பேசி கொண்டு அந்த அருவியை அடைந்தனர்...

ஜோ வென்று சத்தத்துடன் மேலிருந்து கீழாக வெள்ளி கம்பிகளை கோர்த்து நெய்த கம்பளம் போல பாய்ந்து சென்று கொண்டிருந்த அந்த பால் அருவியை ரசித்தபடி நின்றிருந்தனர்..

சுற்றிலும் நிறைய ஜோடிகள் அவர்களை போலவே ஒருவருக்கொருவர் அணைத்தபடி நெருக்கமாக நின்று  கொண்டு அந்த அருவியை ரசித்து பார்த்தனர்..

நிலாவுக்கோ அது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.. இப்படி எல்லாம் அவள் பார்த்ததில்லை இதுவரை..

அந்த அருவியையே இமை தட்டி ரசித்து பார்த்திருக்க, அவளின் வெகு அருகில் நின்றிருந்த அவள் கணவனோ அருவியாய் ஆர்பரிக்கும் அந்த பெண்ணருவியை ரசித்து கொண்டு இருந்தான்..

சிறிது நேரம் பார்த்து ரசித்தவர்கள் பின் நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினர்.. நிலாவுக்கோ அந்த இடத்தை விட்டு வர மனமே இல்லை...

திரும்பி திரும்பி அந்த அருவியையே  பார்த்து கொண்டு முன்னால் நடந்தவள் சிறிது தூரம் சென்றதும் இதோ வருகிறேன் என்று  சொல்லி மீண்டும் ஓடி வந்து அந்த அருவியை ரசித்தபடி நின்று கொண்டாள்..

அதிரதனும் சிரித்தபடி ஸ்டீபன் தம்பதியினரை முன்னால் நடக்க சொல்லி விட்டு அவளுக்காக காத்திருந்தான்...

சிறிது நேரம் ஆசை தீர அந்த காட்சியை ரசித்து பார்த்தவள் அதிரதன் மட்டும் தனக்காக காத்து கொண்டிருப்பதை கண்டு மீண்டும் வேகமாக அவன் அருகில் ஓடி வந்தாள்..

மூச்சு வாங்க வந்து நின்றவளையே மீண்டும் இமை தட்டி பார்த்து ரசித்தவன்

“என்ன பட்டிக்காடு... ? இந்த இடம் பிடிச்சிருக்கா? நாளைக்கும் இங்கயே வருவோமா? “ என்றான் சிரித்தபடி...

“ஹ்ம்ம்ம் எனக்கு ஓகே தான்.. ஆனால் அவர்களுக்கு இது போரடிக்குமே. “ என்றாள் பாவமாக...

“ஹா ஹா ஹா டோன்ட் ஒர்ரி.. நாளைக்கு இதை விட சூப்பரா ஒரு இடத்துக்கு போக போறோம்.. ஒரு நாள் முழுவதும் தண்ணிலயேதான் இருக்க போகிறோம்.. நீ ஆசை தீர பார்த்துக்கலாம்... இப்ப போகலாமா? “என்று புன்னகைத்தவாறு நடக்க ஆரம்பித்தான்..

அவளும் அவனுடன் இணைந்து நடக்க, அதுவரை அந்த அருவியை பார்த்த குஷியில் இருந்தவளுக்கோ அப்பொழுதுதான் உறைத்தது உறைய வைக்கும் குளிர்...

உடனே தன் புடவை முந்தானையை இழுத்து போர்த்தி கொள்ள, இன்னுமே அந்த குளிரில் அவள் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.. உதடுகளோ தந்தி அடிக்க ஆரம்பித்தன...

அவளை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கோ அவள் குளிரில் நடுங்குவது புரிய அப்பொழுதுதான் அவள் ஸ்வெட்டர் எதுவும் அணிந்திருக்கவில்லை என புரிந்தது..

“என்ன பட்டிகாடு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஸ்வெட்டர் எடுத்துகிட்டு வரவேண்டியதுதான? “ என்றான் சிறு கோபத்துடன்..

“ஹ்ம்ம்ம் இப்படி சில்லுனு இருக்கும் னு யாருக்கு தெரியுமாம்..? அறிவு இருக்கிற நீங்களாவது சொல்லி இருக்க வேண்டாமா? “ என்று திருப்பினாள் அவனை முறைத்தவாறு..

“ஹப்பா... கோபம் மட்டும் மூக்குக்கு முன்னால் வந்திடுது.. “ என்று வாய்க்குள் முனகியவன்

“சரி.. என் டீசர்ட் ஐ போட்டுக்கறியா? “ என்றான்.. அவனுமே ஸ்வெட்டர் எதுவும் அணிந்திருக்கவில்லை... ஆனால் அவனுக்கு இந்த குளிர் எல்லாம் பழக்கம் என்பதால் பெரிதாக எதுவும் தெரியவில்லை..

ஆனால் அவள் புதிதாக இந்த மாதிரி வானிலையை அனுபவிக்க அவளின் மெல்லிய உடலுக்கு அதை எதிர்த்து போராட முடியாமல் உதற ஆரம்பித்தது...

வேண்டாம்... என்று அவசரமாக மறுக்க, அவனோ அவள் சொல்லியதை காதில் வாங்காமல் தன் டீசர்ட் ஐ கழற்றி அவள் அனுமதி இல்லாமலயே அவளுக்கு அணிவித்தான்..

அவனோ வெற்று மார்புடன் இருக்க, அவசரமாக கண்களை சுழற்றினாள் யாராவது அவர்களை பார்க்கிறார்களோ என்று..

மற்றவர்கள் எல்லாரும் முன்னால் சென்றிருக்க, அவர்கள் மட்டுமே பின்னால் சென்று கொண்டிருந்தனர்..

அப்பொழுது  ஒரு இளவட்ட கல்லூரி பெண்கள் கூட்டம் அவர்களை கடந்து செல்ல, முன்னால் சென்றவர்கள் திரும்பி அதிரதனை பார்த்தவர்கள் கண்கள் விரிந்தன..

“வாவ்.... செம ஹேண்ட்ஸம் டீ.... இவ்வளவு குளிரில் எப்படி வெற்று மார்புடன் நிக்கறார் பார்... பயங்கர கட்ஸ் டீ... ஹிஸ் வைப் இஸ் சோ லக்கி...” என்று கண் சிமிட்டி இவர்கள் காது பட பேசி சிரித்தவாறு முன்னால் ஓடி சென்றனர்...

நிலாவுக்கோ அவர்கள் சொன்னதை கேட்டு பெருமையாக இருந்தது...

அந்த நொடி வந்து சேர்ந்தது என் புருஷன் இவன் என்ற பெருமையும் கர்வமும்...

பெருமையுடன் கண்களை சுழற்ற அப்படியே உறைந்து நின்றாள்.. அந்த பெண்கள் வர்ணித்தபடியே பரந்து விரிந்த மார்பும் எஃகை போன்ற உறுதியான வலிய புஜங்களும் என அவன் பெயருக்கு ஏற்றார் போல ஒரு போர் வீரனாய் கிரேக்க சிற்பமாய் மிளிர்ந்தான் அவளவன்...

அவனையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருக்க,

“எத்தனை மார்க் போட்ட ? கொஞ்சமாவது தேறினனா? “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு..

அப்பொழுதுதான் அவனையே பார்த்து கொண்டு இருப்பது புரிய உடனே முகம் சிவக்க தன் பார்வையை மாற்றி கொண்டாள் பெண்ணவள்..

அவனும் உல்லாசமாக சிரித்து கொண்டு அவளுடன் இணைந்து நடக்க, இப்பொழுது தைர்யமாக அவள் கைக்குள் தன் கையை விட்டு கொண்டான்.. அவள் நிமிர்ந்து பார்க்க,

“அப்பதான் குளிர் கொஞ்சம் குறையும் பட்டிக்காடு... இன்னும் என் கிட்ட வா...” என்று அவளை அருகில் அழைத்தவன் அவள் கையை எடுத்து தன் இரண்டு கையால் தேய்த்து அவளுக்கு சூடேற்றியவாறு முன்னால் நடந்தான்..

அவளும் கன்னம் சிவந்தாலும் தன் கையை இழுத்து கொள்ள முடியாமல் அதை விட இழுத்து கொள்ள பிடிக்காமல் தன் கையை அவனிடமே விட்டு விட்டு அவனுடன் இணைந்து நடந்தாள்..

ஏனோ இருவருக்குமே அந்த நேரம் அந்த நொடி ரொம்பவும் பிடித்து போனது...இப்படியே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும் போல இருந்தது... இருவருமே மெதுவாக நடக்க ஆரம்பித்தனர்...

அந்த ஊசி போன்று குத்தும் குளிருக்கு வேகமாக நடந்து காரை அடையாமல் இருவருமே மெது மெதுவாக நடக்க எவ்வளவு மெதுவாக நடந்தாலும் இறுதியில் காரை அடைந்திருந்தனர்..

உடனே விழித்து கொண்டவள் அவசரமாக தன் கையை அவனிடம் இருந்து உருவி கொண்டவள் கன்னம் சிவக்க வேகமாக கார் கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டாள்..

அவன் டீஷர்ட் ஐ கழட்டி கொடுக்க, அவனும் கண் சிமிட்டி அதை வாங்கி அணிந்து கொண்டவன் காரில் இருந்த கணப்பை ஏற்றி விட்டு அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தி கொண்டவன் காரை ஸ்டார்ட் பண்ணி ஓட்டினான்...         

வழியிலயே இரவு உணவை முடித்து கொண்டு அந்த ரிசார்ட்க்கு திரும்பி வந்தனர்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!