என்னுயிர் கருவாச்சி-22

 


அத்தியாயம்-22

திருமண கலை கட்டியிருந்தது பூங்கொடியின் வீடு.  

எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது.

முன்பு கிராமத்தில் ஒரு வீட்டில் திருமணம் என்றால், அந்த ஊரில் யாருமே இரண்டு நாட்களுக்கு அடுப்பை பத்த வைக்க மாட்டார்கள். மூன்று வேளையும் சாப்பாடு கல்யாண வீட்டில்தான்.

கல்யாண வீட்டிற்கு நேரில் வந்து சாப்பிட முடியாதவர்களுக்கு வீடு தேடி குழம்பு, ரசம், பொரியல் என்று சென்று விடும்.  

திருமணத்திற்கு முதல் நாள்  அன்று பந்தக்கால் நட்டு, மணப்பெண்ணுக்கோ, மாப்பிள்ளைக்கோ  நலுங்கு வைக்க  என திருமண வீட்டிற்கு காலையிலயே ஊரே திரண்டு வந்து விடுவார்கள்... 

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஊரை சுற்றிலும் இருக்கும் நெருங்கிய சொந்தக்காரர்கள்,  அங்காளி பங்காளிகள் என எல்லாருமே முதல் நாளே கூடி இருப்பர்.

நீணட நாட்களுக்கு பிறகு  ஒருவரை ஒருவர் சந்திக்கவும், மகிழ்ச்சியில் முகம் விகாசிக்க,

“என்னண்ணி இப்படி இளச்சி போய்ட்டிங்க? என்ன மச்சான்..ரொம்ப நாளா உங்கள  ஆளவே காணோம்? என் பொண்ணு சடங்குக்கு நீங்க ஏன் வரலை? “ என்று பார்த்தவர்களை எல்லாம் நலம் விசாரித்து, நின்று ஓரிரு வார்த்தை பேசிவிட்டு செல்வர்.   

அதோடு விருந்துக்கு வந்த விருந்தாளியாக நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்காமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

இன்றைய நாட்கள் மாதிரி எந்த விழாவானாலும் கேட்டரிங்ல் ஆர்டர் கொடுத்து, நேராக அதைக்  கொண்டு வந்து இறக்கிய காலம் இல்லை அது.

விருந்துக்கு வரும் பெண்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சமைப்பார்கள்.

அடுப்படியில் இருவர், வெங்காயம் உரிக்க, பூண்டு உரிக்க, காய்கறிகளை நறுக்க, தேங்காய் துருவ,  வடை போன்டா செய்ய என்ன இயல்பாய் ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்துக்கொண்டு ஒன்றாக அமர்ந்து விருந்தை சமைப்பர்.

கை,  வேலை செய்து கொண்டிருந்தாலும், வாயோ சுத்தி இருக்கும் எட்டு பட்டி ஊர் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கும்.

செல்போன் வசதி பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்தில் இந்த மாதிரி எதாவது விழாவின் பொழுது சந்தித்துகொள்ளும் மக்கள், தங்கள் ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோ சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பகிர்ந்து சிரித்து பேசி மகிழ்வர்.

பெண்கள் சமையல் என்றால் ஆண்கள் மற்ற வேலைகளை கையில் எடுத்துக் கொள்வார்கள்.

“என்ன மாப்பு...நேத்து சாயந்தரம் தென்னந்தோப்பு பக்கமா பார்த்தேன்... அப்புறம் எப்படி இருக்கா உங்க ஊர் சரோஜா...” 

என்று ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு,  ப்ரெஸ்ஸாக வெட்டிய தென்னை மட்டையில் கீத்து முடைந்து வீட்டின் முன்னே ரோட்டை அடைத்து ஒரு பெரிய பந்தலை  போட்டிருப்பர்.

அந்த கல்யாண வீட்டு பந்தலை சுற்றி சீரியல் பல்புகள் போட்டு,    நுழை வாயிலில் அழகான வண்ண விளக்குகளால் ஆன “நல்வரவு” என்று பெயர் பலகையும் மாட்டி, அதை ஒரு முறை எரிய விட்டு பார்த்து திருப்தி பட்டு கொள்வர்.   

அதோடு வாயிலின் இரண்டு பக்கமும் நிற்க வைக்க என்று யாராவது ஒருவர் வயலில் இருந்து இரண்டு பெரிய வாழை மரங்களை  வெட்டி கொண்டு வந்து விடுவார்கள்.

கல்யாணத்திற்கோ, இல்லை திருவிழாவிற்கோ தாராளமாக யார் வயலில் வேண்டுமானாலும் சென்று நன்றாக வளர்ந்து ஈன்று இருக்கும் வாழை மரங்களை வெட்டி கொண்டு வருவது வழக்கம்...

வயலுக்கு சொந்தக்காரர்களும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். அந்த அளவில் மக்களிடையே பணத்தை விட, அடுத்தவர்களுக்கு உதவும் குணம் நிறைந்திருந்த காலம் அது.

வாழை மரங்களை வாயிலின் இருபக்கமும் கம்பீரமாக நிற்க வைத்து,  பந்தலில் வேப்பிலை மாவிலை தோரணம் கட்டி அழகு படுத்துவார்கள்.

யாராவது அந்த ஊருக்கு வந்த புதியவர்கள் பார்த்தாலே இது கல்யாண வீடு என்று தெரியுமாறு ஜொலித்து கொண்டிருக்கும் திருமண வீடு.

*****

பூங்கொடியின் வீடும் இன்று அப்படித்தான் ஜொலித்து கொண்டிருந்தது. .

அப்பொழுதுதான் பந்தக்கால் நட்டு, கல்யாண பந்தல்  போட்டு முடித்து மணப்பெண்ணிற்கு நலுங்கு வைத்து எல்லாரும் விருந்து உண்டு கலைந்து சென்றிருந்தனர்.

அப்பொழுதுதான்  பூங்கொடி வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் உச்சியில் கட்டி முடித்திருந்த மைக் செட்டில் இருந்து முதல் பாடல் ஒலித்தது.

மணமகளே மருமகளே வா வா !!
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….

என பாடி, கல்யாணத்தை சிறப்பாக ஆரம்பித்து வைக்க, அனைவர் முகத்திலும் மீண்டும் ஒரு புன்னகை வந்து போனது.

இப்படி எல்லாருமே உற்சாகமாக அந்த வீட்டில் வளைய வர, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விழாவின் நாயகியோ  முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு இருந்தாள்.  

அவள் முகத்திலோ எல்லும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.

அவள் குடும்பத்தார் யாராவது அவளின் அருகில் வந்தால்,  அவர்களை கடித்து குதறி துவம்சம் செய்யும்   ஆவேசத்தில் இருந்தாள் அந்த விழாவின் நாயகி மணப்பெண் பூங்கொடி.  

அதை கண்டு கொண்டதாலோ என்னவோ அவளிருந்த அறைப்பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.  

அந்த கடுப்பு வேறு சேர்ந்து கொள்ள,  இன்னும் கொதிப்புடன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மணப்பெண்.

நடந்து கொண்டிருந்தவளின் கை அனிச்சையாய் அவளின் கன்னத்தை தொட, அங்கே பிசுபிசுத்தது. என்ன வென்று தொட்டு பார்க்க, சற்று முன்னர் தான் எல்லா பெண்களும்  சேர்ந்து அவளுக்கு நலுங்கு வைத்து முடித்திருந்தனர்.  

அவர்கள் அவளின் கன்னத்தில் அள்ளி அப்பி பூசிய சந்தனம் இன்னும் உலராமல் பிசுபிசுத்தது. அதை கண்டு இன்னுமாய் எரிச்சலானவள்  

“சை... இது வேற..எனக்கு இது ஒன்னுதான் குறைச்சல்....”  என்று அதை கழுவுவதற்காக, அறையில் இருந்து  வெளியேற முயன்றாள்  பூங்கொடி.  

அதே நேரம் அவள் வீட்டு வாசலில் புல்லட் சத்தம் கேட்டது.  

அனிச்சையாய் திரும்பி அறையில் இருந்த  ஜன்னல் வழியாக வாயிலை பார்க்க, அங்கே தன் புல்லட்டில் அமர்ந்தவாறு ஒற்றை காலை தரையில் ஊன்றி நின்றிருந்தான் ராசய்யா.  

அவள் வீட்டு முன்னால் இருந்த பந்தலையும், மாவிலை தோரணத்தையும்,   வாயிலில்  இருந்த வாழை மரங்களையும் யோசனையோடு பார்த்தவறு நின்று இருந்தான் ராசய்யா.

ஜன்னல் வழியாக அவனை பார்த்தவளுக்கு இன்னும் கடுப்பானது.

வழக்கமாக உடுத்தும் அழுக்கு கைலிக்கு பதிலாக வெள்ளை வேஷ்டியும்,  முழங்கை வரை மடித்து விடப்பட்ட சட்டையும் அணிந்திருந்தான்  ராசய்யா.

அனாலும் பரட்டை தலையும், ஒலுங்கு படுத்தாத தாடி மீசை என வழக்கமான ரௌடி கெட்டப்பில் தான் இருந்தான்.  

*****

பூங்கொடி ராசய்யாவை பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது .

அன்று விளையாட்டு போட்டியில் அவள் அணி வெற்றி பெற்றதுக்கு  எல்லாரும் பூங்கொடியை பாராட்ட,  ராசய்யா தள்ளி  நின்று ரசித்து பார்த்துக்  கொண்டிருந்தான்.  

அதன்பின் அனைவரும் முசிறி கிளம்பிவிட்டனர்.  

இந்த முறை பூங்கொடி அவள்  அணியினருடன் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டு கதை அடித்துக்கொண்டு வந்தாள்.  ராசய்யாவை கண்டு கொள்ளவில்லை.  

அவனும் பி.டி மாஸ்டருடன் அமர்ந்துகொண்டு அவருடன் பேசிக்கொண்டு வந்தான்.  

முசிறியில் இறங்கியதும், அங்கு இருந்து அவள்  ஊருக்கு  புல்லட்டில் வரும்பொழுது தான் அவளிடம் பேசினான் ராசய்யா.

இப்பொழுதும் இருவருக்கும் இடையில் நீண்ட இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து இருந்தவளை புல்லட்டின் முன்னால் இருந்த பின்பக்க கண்ணாடி வழியாக பார்த்தவன்,   

“வாழ்த்துக்கள் கருவாச்சி...! கலக்கிட்ட... செமயா விளையாண்ட...” என்று புன்னகைக்க

“அடேங்கப்பா... இவ்வளவு சீகிரம் சொல்லிட்ட.. “ என்றாள் நக்கலாக.

அவள் ஜெயித்ததும் அனிச்சையாய் அவளின் பார்வை ராசய்யாவிடம் தான் சென்று நின்றது. அதற்குள் அவள் தோழியர் அவளை சூழ்ந்து கொள்ள, அவர்களுடன் ஒன்றி விட்டாள்.

அதன்பிறகு பேருந்தில் வரும்பொழுதும் அவள் கிட்ட அவன் வரவில்லை. தள்ளி நின்று கொள்ள, அவளும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள். இப்பொழுது அவள் ஜெயிச்சதுக்கு வாழ்த்து சொல்ல, தனக்குள்ளெ இருந்த சிறு கோபத்தில் நக்கலாக கேட்டு வைத்தாள்.

அவளின் கோபத்தை புரிந்து கொண்டவனாய் மெல்ல புன்னகைத்தவன்

“மேடம்தான் அதுக்கு பொறவு ரொம்ப பிசியாயிட்டிங்களே...நம்மளை எல்லாம் கண்டுக்குவிங்களா?” என்று அவனும் நக்கலாக கேட்டு வைத்தான்.

அவளும்தான் விளையாண்டு முடித்தபிறகும், பேருந்தில் வந்த பொழுதும் அவனை கண்டு கொள்ளவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி வைத்தான்.

“சரி...சரி...ரொம்ப தேங்கஸ்...” என்றாள் போனா போகட்டும் என்று சொல்வதைப் போல.

அவளுக்கு தெரியும்... அவனால் தான் அவள் ஜெயித்தாள் என்று. அவனின் ஒவ்வொரு ஆறுதல் பார்வையும்தான் அவளுக்கு எனர்ஜி பூஸ்டராக இருந்தது.

அதோடு பாவாடை தாவணியில் விளையாண்ட  அவளின் சங்கடமான நிலையை புரிந்து கொண்டு உடனே அவளுக்கான் ட்ராக்பேன்ட்ம் டீசர்ட்ம் வாங்கி கொடுத்ததும் அதனால் அவள் இன்னுமே இலகுவாக விளையாண்டாள் என்பது அவள் அறிந்த ரகசியம்.

ஆனால் வாய் விட்டு அவனை பாராட்ட வரவில்லை. எப்பொழுதும் போல அவனிடம் ஒட்டாத நிலையில் ஒரு நன்றியை சொல்லி வைக்க,

“எதுக்கு? “ என்றான் திரும்பி அவளை பார்த்தவாறு.

“எல்லாத்துக்கும் தான்...” என்றாள் முகத்தை திருப்பியபடி.

“எல்லாத்துக்கும் னா? “ என்றான்  இதழ்க்கடையோரம் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை சீண்ட வேண்டும் என்பதற்காய்.

“ஹ்ம்ம்ம் எல்லாத்துக்கும் னா எல்லாத்துக்கும் தான். உனக்கு எதுக்கெல்லாம் வேணுமோ அதுக்குனு வச்சுக்க...

“வச்சுக்கறதா? வச்சுக்கறதெல்லாம் வேண்டாம். வேணும்னா சொல்லு. கட்டிக்கிறேன். என்ன  என்னைய கட்டிக்கிறியா? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி குறும்பாக கண் சிமிட்டி கேட்டான் ராசய்யா.

கண்ணாடி வழியாக அவன் பிம்பத்தை காண, அவன் முகத்தில் கொஞ்சம் கூட ஆசையோ, தாபமோ,  விரசமோ  இல்லை. மாறாக அவளை சீண்டி பார்க்கும் முழு மொத்த குறும்புத்தனம் மட்டுமே மண்டிக்கிடந்தது.

“ம்க்கும்...முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டானாம்...உனக்கெல்லாம் கட்டிக்க நான் கேக்குதா? எனக்கெல்லாம் எப்பேர்பட்ட புருஷன் வரப்போறான் தெரியுமா?

அப்படியே அரவிந்த்சாமி மாதிரி...  வெள்ளை வெளேர்னு, ஜீன்ஸ்ம் டீசர்ட்ம் போட்டுகிட்டு, சின்னதா மீசை வச்சுகிட்டு, குறுகுறுனு பார்த்துகிட்டு  ரோஜா படத்துல அந்த ரோஜா புள்ளைய ,  பொண்ணு பார்க்க கார்ல வர்ற  மாதிரி வரப்போறான்.

கட்டினா என்னத்தான் கட்டுவேன் னு சொல்லி கட்டிக்குவான். என்னை தங்க தாம்பாளத்துல வச்சு தாங்குவான்... “ என்று கண்கள் மின்ன, முகம் பூரிக்க, வெட்கத்துடன் தன் கனவை சொன்னாள் பூங்கொடி.

அதைக்கேட்டு

“ஹா ஹா ஹா .. “ என்று பெரிதாக வாய் விட்டு சிரித்தான் ராசய்யா. அவனின் சிரிப்பை கண்டு கடுப்பானவள்

“யோவ்.. எதுக்கு இப்ப நக்கலா சிரிக்கிற? “ என்று முறைத்தாள் பூங்கொடி.

அவனோ இன்னுமே தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருக்க, அவளோ பொறுமை இல்லாமல் அவனை முறைத்தவள் அவன் தலையில் நங் என்று கொட்டி

“எதுக்கு சிரிக்கிற? சொல்லிட்டு சிரி...” என்று சிடுசிடுக்க , இன்னுமே சிரித்து கொண்டிருந்தவன் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டவன்

“அது சரி கருவாச்சி...உனக்கு அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்படறது நியாயம்தான். ஆனால் உன்னைக்கட்டிக்க போற அரவிந்தசாமி, அந்த ரோஜா புள்ளைய மாதிரி பொண்டாட்டி வேணும்னு நினைக்க மாட்டானா? “ என்று மீண்டும் நக்கலாக சிரித்தான் ராசய்யா.

அவன் சொல்வதின் அர்த்தம் புரிய,  அவள் முகம் அனிச்சமலராய் சுருங்கி போனது. 

அவள் கருப்பாக இருக்கிறாள். வெள்ளையாக இருக்கும் மாப்பிள்ளை கண்டிப்பாக அவன் நிறத்துக்கு பொருத்தமான பொண்ணைத்தானே பார்ப்பான்.

அவ்வளவு ஏன்.. தான் கருப்பா இருந்தாலும், கட்டிக்க போற பொண்ணு நல்ல கலரா இருக்கணும்னுதானே எல்லா பயலுகளும் நினைப்பானுங்க.

ஏன்... இந்த பரட்டையே தனக்கு ரதி மாதிரி பொண்ணு வேணும்னு இல்ல சொன்னான். அப்படி என்றால் ? என்னை கட்டிக்க யாரும் முன் வர மாட்டாங்களா?

பொற்கொடியை தேடி வந்து கட்டிகிட்டு போன மாதிரி தன்னை தேடி எந்த ஹீரோவும் வரமாட்டானா? என்று மனம் வாடிப் போனது பூங்கொடிக்கு.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதாய் அவள் மனம் வாட்டம் முகத்திலும் பிரதிபலித்தது.

அதுவரை வளவளத்து கொண்டு வந்தவள் அமைதியாகி விடவும்,  அதோடு அவள் முகம் வாடிகிடப்பதையும் கண்ட ராசய்யாவுக்கு மனம் பதைத்தது.

கொஞ்சம் ஓவராதான் ஓட்டிட்டமோ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன், அவள் முக வாட்டத்தை காண பொறுக்காமல்

“ஹோய் கருவாச்சி...சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... உனக்கு என்ன குறைச்சல் டி. நீ சொன்ன மாதிரி அரவிந்த்சாமியே உன்னைத் தேடி வருவான்.

அப்படி தேடி வரலைனாலும் இந்த ராசய்யா எதுக்கு இருக்கேன். உனக்கு புடிச்ச, நல்லா படிச்ச மாப்பிள்ளையா தேடி பிடிச்சு கொண்டு வந்து நிறுத்திட மாட்டேன்...” என்று அவளை சமாதான படுத்த முயன்றான்.

அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள்

“ஆமாமா...நீ எப்பேர்பட்ட மாப்பிள்ளை பார்ப்பனு எனக்கு தெரியாதா? .. உன்னை மாதிரி ஒரு ரௌடியத்தான் கூட்டிகிட்டு வருவ? என்று கழுத்தை நொடிக்க,

“ஆளைப்பார்த்து எடை போடாத மா... நீ முதல்ல படிப்பை முடி.. அப்புறம் பார்.. கருவாச்சி... உனக்கு மாப்பிள்ளையை வரிசையில் கொண்டு வந்து நிறுத்தறேன்...“  என்று சிரித்தான்.

அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளாதவள், அவன் சொன்ன கருவாச்சியில் கடுப்பாகி,

“நீ மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தறது இருக்கட்டும். முதல்ல என்னை கருவாச்சினு கூப்பிடறதை நிறுத்து...” என்றாள் அவனை முறைத்தபடி

“ஹா ஹா ஹா அதை எப்படி நிறுத்துவதாம்...இருக்கற உண்மையைத்தானே சொல்றேன்...வேணும்னா இந்த முகத்திற்கு ஏதோ க்ரீம் மாதிரி தடவிக்குவாங்களே...

நீயும் அப்படி ஒன்ன வாங்கி தடவிக்க அப்பயாவது வெள்ளையாறியானு  பார்க்கலாம்,,”  என்று மீண்டும் குறும்புடன் நக்கலாக சிரித்து  அவளை கலாய்க்க,

“ஹலோ...போதும் பல்லு சுளுக்கிக்க போகுது.  என்னை கருவாச்சினு சொல்ற இல்ல...இதுக்குனே பார் உனக்கு என்னை விட கருகருனு பொண்டாட்டி வரப்போறா..! “ என்று  கழுத்தை நொடித்தவாறு வெடுக்கென்று மறுபக்கம் திரும்பிக் கொண்டாள் பெண்.

ருவரும் வழக்கடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.  

அவள் வீட்டிற்கு வந்ததும்,  போட்டியில்  வாங்கிய கோப்பையை தன் தந்தையிடம் கொடுத்து அவர்  காலில்   விழுந்து  வணங்க, அவள் பெற்றோர்  இருவருமே பூரித்து போயினர்.  

தணிகாசலத்திற்கோ பெருமையாக இருந்தது.  தன் மகள் சொன்ன மாதிரி ஜெயித்துவிட்டாள்  என்று பெருமையுடன் அவளை கட்டிக்கொண்டார்.

காலையில் அத்தனை தூரம் இந்த விளையாட்டுக்கு போகக்கூடாதுனு ஸ்ட்ரிக்டாக சொன்னவர் இப்பொழுது  உள்ளம் குளிர்ந்து போய்விட, தன் மகளை கட்டி அணைத்து  உச்சி முகர, பெண்ணவளோ அதற்கு காரணமானவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ அவள்  தம்பி தங்கைகளுடன் விளையாண்டு கொண்டிருந்தான்.  

அவள் வீடு மட்டும் அல்லாமல் அந்த கிராமமே  பூங்கொடி ஜெயித்ததை பெருமையாக  சொல்லிக் கொண்டனர்.

அப்படி சொல்லும்படி எல்லாரிடமும் பெருமை அடித்து வைத்து இருந்தான்  ராசய்யா.

அதோடு அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் பூங்கொடி அணியின் வெற்றியை பற்றி வந்திருந்த செய்தியையும்,  பூங்கொடி அவளின் அணியினரோடு எடுத்துக் கொண்டிருந்த போட்டோவையும் கொண்டு வந்து,  சிலம்பாயிடம் காட்டினான் ராசய்யா.  

“பாருங்க அத்தை. நான் சொன்ன மாதிரியே உங்க பொண்ணு போட்டோ பேப்பர்ல  வந்திருக்கு தெரியுதா.  நான் சொன்ன மாதிரியே பேப்பர்ல வந்துச்சா இல்லையா?

என்று பூரிப்புடன் அன்றைய மாவட்ட செய்திகள் தாங்கிய நாளிதழை  கொண்டு வந்து சிலம்பாயிடம் காட்ட,   சிலம்பாயி ம்  அந்தப் பேப்பரை வங்கி ஆர்வமாக பார்த்தாள்.

கோப்பையை உயர தூக்கி பிடித்தபடி  அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள் பூங்கொடி.

அடுத்த புகைப்படத்தில் அவளுடையை அணியினர் உடன் நின்று கொண்டிருக்க, தன் மகளை அந்த பேப்பரில் காண பூரித்து போனாள் சிலம்பாயி..

அந்த நாளிதழ் காமாட்சிபட்டி கிராமம் முழுவதுமே சுற்றி வந்தது என்று சொல்லவா வேண்டும்?

ராசய்யாவே அந்த பேப்பரை கொண்டு போய் ஒவ்வொருத்தரிடமும் காட்டி பெருமை அடித்துக்கொள்ள, எல்லாரும் பூங்கொடியை பாராட்டி தள்ளினர்.

முதன்முதலாக  தங்கள் ஊரை சேர்ந்த ஒரு பொம்பளபுள்ளை வெளியில சென்று விளையாடி பரிசு பெற்று வந்ததை எண்ணி எல்லாருக்கும் பெருமைதான்.

அடுத்து வந்த நாட்கள் பூங்கொடி அந்த ஊரின் கதாநாயகி ஆகிப்போனாள்.

அதன் பிறகு பூங்கொடி ரொம்பவும் பிசியாகி போனாள்.

போட்டிக்கு செல்லும் முன் தன் அன்னையிடம் வாக்கு கொடுத்த படி , கல்லூரி முடிந்து வந்த பிறகு வயலில் இருந்த வேலைகளை முகம் சுளிக்காமல் அடுத்து வந்த நாட்கள் செய்து முடித்தாள்.  

வார விடுமுறை நாட்களிலும் வயலுக்கு சென்று விடுவாள். அதனால் ராசய்யா   அவள் கண்ணில் படவில்லை.  அதன் பிறகு இன்று தான் அவனை பார்க்கிறாள்.  

அதற்குள் அவள் வாழ்வில் தான் என்னென்னவோ நடந்துவிட்டது.  

*****

ரு பெருமூச்சுடன் வாயிலை பார்க்க,  ராசய்யாவின்  புல்லட்டை கண்டதும் பூங்கொடியின் தம்பி அன்பரசன் , அவனிடம் ஓடிவந்தான்

“ஐ... ராசு மாமா. ஏன் மாமா இத்தனை நாளா இந்த பக்கம் வரலை?...” என்று கேட்டவாறு ஓடி வந்தவன்  பார்வையோ அந்த புல்லட்டை ஆசையாக வருடியது.  

அதைக்கேட்டு புன்னகைத்த ராசய்யா, அவனின் ஆசையை புரிந்து கொண்டு 

“வாடா மச்சான்... கொஞ்சம் வேலை டா...உன்னை பார்க்கத்தான் வந்தேன்.. வா..ஒரு ரௌன்ட் போகலாம்...”  என்று அவனைத் தூக்கி புல்லட்டின் மீது அமர வைத்துக் கொண்டவன், தன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணி ரெண்டு ரௌன்ட் சுற்றி வந்தான்.  

அன்பரசனுக்கு ராசய்யாவோட இந்த மாதிரி புல்லட்டில் இல்லைனா ட்ராக்டரில் செல்வது என்றால் ரொம்ப பிடிக்கும்.

அவன் சின்ன உருவத்துக்கு குதிரை மாதிரியான புல்லட்டில் அமர்ந்து கொண்டு கம்பீரமாக போவதும், ட்ராக்டரில் அமர்ந்து கொண்டு கீழ பார்க்க அவ்வளவு குஷியாக இருக்கும்.

தன் தோழர்களிடம் போய் தன் அனுபவத்தை இன்னும் கொஞ்சம் பில்டப் பண்ணி சொல்லுவான்.

அந்த வாண்டுகளும் இவனை பொறாமையுடன் பார்த்து வைப்பார்கள். மற்ற வாண்டுகளுக்கும் ராசய்யா உடன்  புல்லட்டில் செல்ல ஆசைதான்.

ஆனால் ராசய்யாவின் தோற்றத்தை பார்த்து பயந்து ஒதுங்கி விடுவார்கள். அவன் அருகில் செல்லவே மற்றவர்களுக்கு தயக்கமாக இருக்கும்.

ஆனால் அன்பரசன் மட்டும் அவனிடம் வெகு இயல்பாக சென்று கதை அடிப்பான்.

இப்பொழுதும் ராசய்யாவின் புல்லட்டில் செல்வது ரொம்பவும் குஷியாகி போய்விட, ராசய்யாவும் அவனுடன் கதை அடித்தபடியே இரண்டு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் வீட்டு வாயிலுக்கு வந்தான்.

“டேய் மச்சான்... இன்னைக்கு  இது போதும்டா...அப்புறம் இன்னும் கொஞ்சம் தூரம் போலாம்..” என்றவாறு அவனை கீழே இறக்கி விட, அதே நேரம்  அவனருகில் ஓடி  வந்தாள் மலர்க்கொடி.

“நான் எப்படி இருக்கேன் மாமா? “  என்று தன் பட்டு பாவாடையை  இரு கையாலும் பிடித்து, குடை போல விரித்து, தன்னை ஒரு சுற்று சுற்றி காட்ட, அந்த குட்டியின் ஆக்சனை ரசனையுடன்  பார்த்தவன்

“உனக்கு என்னடி வெள்ளச்சி... சும்மா ஜம்முனு இருக்க... ஆமா கல்யாண பொண்ணு புள்ள உன் அக்காவா இல்ல நீயா? உன்னை பார்த்தாதான் பொண்ணு மாதிரி ஜம்முனு இருக்க..”  என்று அவள் கன்னத்தை பிடித்து லேசாக கிள்ளி கண் சிமிட்டி சிரிக்க,  அந்த குட்டியும்  வெட்கப்பட்டு சிரித்து வைத்தாள்.

அதைக்கண்டு உள்ளே இருந்த பூங்கொடிக்கு இன்னுமே கடுப்பானது.  

உள்ளிருந்த படியே ராசய்யாவை முறைக்க,  அதை அறியாதவனோ இன்னும் வெள்ளையாய் தொடர்ந்தான்.  

“ஹோய் வெள்ளச்சி...ரொம்ப நல்லா வெட்கபடற டி..பேசாம இந்த மாமாவை கட்டிக்கிறியா?  உன் அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம்...” என்று வம்பு இழுக்க,  

“சீ... போங்க மாமா...கல்யாணம் பண்ணிக்கறதுக்கெல்லாம் நான் அக்கா மாதிரி பெரியவளா ஆகணும். வேணும்னா நான் பெரியவளா ஆகற வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுங்க. அப்ப கட்டிக்கிறேன்...”  என்று அவளும் வெட்கப்பட்டு சிரிக்க,

“அப்படி போடு அருவாள... இந்த வீட்டிலேயே நீதான்டி விவரமானவ... சரி..மாமா உனக்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன்..நீ சீக்கிரம் பெரியவளாகு...”

என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ள வர, அவளோ அவன் கைக்கு எட்டாமல், அவனுக்கு அழகு காட்டி விட்டு,  குனிந்து, தன் பாவாடையை இரண்டு கையாலும் தூக்கி சுருட்டி பிடித்துக் கொண்டு ஓடி விட்டாள்.  

அந்த காட்சியை கண்ட பூங்கொடிக்கு அதுவரை இருந்த கடுகடுப்பு மறைந்து யோசனையாக இருந்தது.  

ப்பொழுதுமே ராசய்யாவை அவளின் தம்பி, தங்கைக்கு  ரொம்பவும் பிடிக்கும்.  அவனை பார்க்கும்பொழுதெல்லாம் அவனிடம் உரிமையாக தொற்றிக் கொள்வார்கள்.

அவனுமே அவர்களிடம் கொஞ்ச நேரம் சிரித்து பேசிவிட்டு செல்வான்.  

அதுவே அவளுடைய அக்கா கணவர் தினேஷ் வந்தால்,  இருவருமே எங்கயாவது ஓடி ஒளிந்து கொள்வார்கள்.  

இவனிடம் அவர்கள் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சுவதை போல தினேஷ் இடம் கொஞ்சுவதில்லை...உரிமையாக பழகுவதும் இல்லை.  

அதைக்கண்டுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அப்படி என்னத்த சொக்கு பொடி போட்டு வச்சிருக்கான்..? சின்னஞ்சிறுசுகளில் இருந்து பெருசுக வரைக்கும் எல்லாம் இவனைப்போய் ஹீரோ வா பார்த்து வைக்குதுக...” என்று நக்கலாக சிரித்து வைத்தாள் பூங்கொடி.  

அதே நேரம் அங்கே வந்தார்  தணிகாசலம்.  

அவரைக் கண்டதும் அதுவரை புல்லட்டிலிருந்து கீழ இறங்காமலயே ஒற்றைக்காலை ஊன்றி நின்றிருந்தவன், தணிகாசலத்தை கண்டதும்  தன் புல்லட்டை நிறுத்திவிட்டு கீழிறங்கி நின்றான் ராசய்யா.

“வாய்யா...மாப்ள...எங்க இந்த பக்கம் ஆளவே காணோம்? “ என்று சிரித்து வரவேற்றபடி, தலையில் கட்டியிருந்த முன்டாசை கழட்டியபடி அவன் அருகில் வந்தார் தணிகாசலம்.

ராசய்யாவும் அவரை பார்த்து புன்னகைத்தவன்,  

“பண்ணையார் வீட்ல ஜோலி மாமா... அவங்க பையனுக்கு மெட்ராஸ் ல கல்யாணம். அங்க பட்டணத்துல கார்  ஓட்ட ஆள் வேணும்னு என்னையும் கையோட கூட்டிகிட்டு போய்ட்டாங்க.

இப்பதான் ஊருக்குள்ள  வந்தேன்.  

வந்ததும் தான் கேள்விபட்டேன்... நம்ம கருவாச்சிக்கு நாளைக்கு கல்யாணம்னு. அதான் உங்களுக்கு  கூடமாட ஒத்தாசை செய்யலாம்னு நேரா இங்க வந்திட்டேன்..” என்று விவரிக்க,  அதைக்கேட்ட பூங்கொடிக்கு அதுவரை இருந்த கொஞ்சம் இலக்கமும் மறைந்து போய் முகம் கடுகடுப்பானது.  

“இவன் ஒத்தாசைக்கு வரலைனு யாரு அழுதா? “  என்று கழுத்தை நொடித்தாள்.

ஆமா மாமா ஏன் இப்படி திடுதிப்புனு  கல்யாணத்த வச்சுபுட்டிங்க... இன்னும்  அந்த புள்ள படிச்சுகிட்டு  இருக்கே... அது படிப்பை ஏன் நிறுத்தனும்? “ என்று யோசனையோடு தணிகாசலத்தை பார்க்க,  அதைக்கேட்டு ஒரு கணம் பூங்கொடியின் மனம் வலித்தது

இதே கேள்வியைத் தானே பலமுறை பலபேர் கேட்டுவிட்டார்கள்.

ராசய்யாவின் கேள்விக்கு ஒரு நொடி தணிகாசலம் தடுமாறினாலும் அடுத்த நொடி சமாளித்துக்கொண்டு  

“ஒரு நல்ல இடம் தேடி வந்தது மாப்ள... காத்துள்ள போதே தூத்திக்கணும் இல்ல.  அதுதான் அவசரமா கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம்...”  என்றவர் அத்தோடு அந்த பேச்சை முடிக்கும் விதமாய் ராசய்யாவை திசை திருப்ப எண்ணி,

“வாய்யா மாப்ள...உள்ள வந்து ஒரு வாய் சாப்பிடு....”  என்று அவனை வீட்டிற்கு உள்ளே அழைத்தார்.    

“இல்ல மாமா...இப்பதான் பட்டணத்தில இருந்து வந்தேன்...உடம்பெல்லாம் கசகசனு இருக்கு. போய் ஒரு குளியல போட்டுட்டு பொறவு வாரேன்...” என்று மறுக்க, தணிகாசலம் அவனை விடவில்லை.

அதெல்லாம் சாப்பிட்டுபுட்டு அப்புறம் போய் சாவகாசமா அந்த வாய்க்கால் வுழுந்து புரளு...இப்ப வா...பலகாரம் எல்லாம் சூடா இருக்கறப்பவே சாப்பிடு..” என்று வற்புறுத்தி அவனை வீட்டிற்குள் அழைத்து வந்தார் தணிகாசலம்.

அந்த நேரம் பார்த்து வீட்டில் யாரும் இல்லை. சிலம்பாயி ம் மற்றம் உறவினர்கள் எல்லாரும் வெளியில் சென்றிருக்க,  பூங்கொடி மட்டுமே வீட்டில் இருந்தாள்.

இப்பொழுது யாரை அழைத்து ராசய்யாவுக்கு சாப்பாடு போடச் சொல்வது என்று யோசித்தவர், பின் அறைக்கு உள்ளே இருந்த பூங்கொடியையே அழைத்தார்.  

“பாப்பா... வெளியில வாடாமா.  ராசு வந்திருக்கான் பாரு. வூட்ல யாரும் இல்ல போல.  அவனுக்கு செத்த சாப்பாடு போட்டுட்டு போ...”  என்று அழைத்தார் தணிகாசலம்.

ஏற்கனவே அவன்  மீதும், தன் தந்தையின் மீதும்  கடுப்போடு இருந்தவள், அவரின் அழைப்பை கேட்டு இன்னும் கடுப்பானாள்.

“இவன் என்ன பெரிய இவனா ? இவன் வந்தா மட்டும் எப்பபார்  நான்தான் இவனுக்கு பரிமாறனும். என்னவோ என்னைய கட்டிக்கிட்டவன்  மாதிரி இல்ல அடிக்கடி என்னையவே  கூப்பிட்டு பரிமாறச் சொல்கிறார்.

இந்த அப்பாவுக்கு கொஞ்சம் கூட விவஷ்தையே இல்லை...”  என்று உள்ளுக்குள் பொரிந்து தள்ளியவள் அறைக்கு உள்ளேயே நின்று கொண்டாள்.

தணிகாசலமோ  விட்டுவிடாமல் மீண்டும்  பாப்பா என்று அழைக்க,  வேற வழியில்லாமல் கதவை படக்கென்று திறந்துகொண்டு வேகமாக வெளியில் வந்தாள் பூங்கொடி.

அதே வேகத்தில் சமையல் அறைக்கு சென்று வாழை இலையையும் மற்ற பதார்த்தங்களையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

ராசய்யா ஏற்கனவே அங்கு சாப்பிட உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் சற்று தள்ளி தரையில் அமர்ந்தவாறு கதை பேசிக்கொண்டிருந்தார் தணிகாசலம்.

ராசய்யா அமர்ந்து இருந்த கோலத்தை கண்டு முகத்தை அருவருப்புடன் சுளித்தவள்,

“சை..சாப்பாடுனா எப்படி வந்து உட்கார்ந்துக்கறான் பார்...கொஞ்சம் கூட வெட்கம், மானம்,  சூடு, சொரணை  எதுவும் இல்லாமல்...” என்று தனக்குள்ளே பொங்கி கொண்டிருந்த ஆற்றாமையை ராசய்யா மீது கோபமாக திருப்பினாள்.   

அவன் முன்னே இலையை பொத்தென்று போட்டு,  தன் கோபத்தை எல்லாம் அந்த தண்ணீரில் காட்டி இலையில் சட்டென்று பட்டு தெறிக்குமாறு வேகமாக தெளித்தாள்.  

அதுவரை தணிகாசலத்திடம்  பேசிக்கொண்டிருந்தவன் பூங்கொடியை நிமிர்ந்து பார்த்திருக்கவில்லை.  

அவளோ  தண்ணியை இலையில் தெளித்தும் அவன் துடைக்காமல் தணிகாசலத்திடம் கதை பேசிக்கொண்டிருக்க, அவளே குனிந்து அந்த இலையை  துடைத்துவிட்டு, பலகாரங்களை  எடுத்து இலையில் வைத்தாள்.  

இலையில் வைத்ததை கண்டவன் முகத்தை சுளித்தவாறு, பக்கவாட்டில் திரும்பி  

“என்ன மாமா..வெறும் சைவம் தானா?  நான் கூட அசைவ விருந்தா இருக்கும்னு இல்ல நெனச்சேன்...”  என்று கிண்டலாக சொல்ல,  அதைக்கேட்டு இலையில் வைத்துக் கொண்டிருந்தவள் குனிந்தவாறு வெடுக்கென்று  நிமிர்ந்து தலையை மட்டும் தூக்கி  அவனை முறைத்து பார்த்தாள்.  

அதே நேரம் ராசய்யாவும் முன்னால் பார்க்க, ஒரு நொடி ஸ்தம்பித்து போனான்.

அப்பொழுதுதான் பூங்கொடியை பார்த்தான்.

தழைய தழைய புடவை கட்டி இருந்தாள்.  

அவளின் மாநிறத்திற்கு எடுப்பாக மயில் கழுத்து கலரில் ஆங்காங்கே பூக்கள் போடப்பட்டிருந்த,   கரும் ஊதா வண்ண பார்டர் வைத்த மைசூர் சில்க் புடவை அணிந்திருதாள்.

அதே புடவையில் வெட்டி தைத்த சிறிய பார்டர் வைத்த குட்டையான கை வைத்த  ரவிக்கையும்  அணிந்திருந்தாள்.  

நடுவில் வகிடு எடுத்து, இரு பக்கமும் படிய சீவி, தன் நீண்ட கூந்தலை  பின்னல் இட்டு தொங்கவிட்டிருந்தாள்.  

தலையில் நெருக்கமாக தொடுத்து மடித்து வைக்கபட்டிருந்த மல்லிகைச் சரம்,  சரிந்து தோள் வழியாக முன்னால் விழுந்திருந்தது.  

நெற்றியில் அதே மயில் கழுத்து கலரிலான  நடுவில் கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டு. அதன் மேலே சிறு கோடாக சிறிய சந்தனக் கீற்று. கைகளில் குலுங்கும் கண்ணாடி வளையல்கள்.  

அவள் கன்னத்தில் இரு பக்கமும்  பூசியிருந்த சந்தனம் இன்னும் கலையாமல் இருக்க, அவ்வளவு நெருக்கத்தில் அவள் முகத்தை கண்டவனுக்கோ  ஒரு நொடி மனம்  ஸ்தம்பித்து நின்றது.

இதுவரை அவளை பாவாடை தாவணியில் , இல்லையென்றால் ஒரு தொளதொள சட்டையை மாட்டிக்கொண்டு சுற்றி வருபவளை பார்த்து பழகிய கண்களுக்கு முதன் முறையாக அவளை புடவையில் அதுவும் மெலிதான ஒப்பனையில் மணப்பெண்ணாய் காண,  அவனையும் அறியாமல் அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

அவளையே வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தான் ராசய்யா...

அவன் பார்வையை எதிர்கொண்டவளோ அவனை முறைத்து வைத்து பார்வையை வெடுக்கென்று திருப்பிக்  கொண்டவள்,

“ஏன்ப்பா... பண்ணையார் வூட்ல மூனு வேளையும் கறியும் மீனுமா கொட்டிகிறவருக்கு, கல்யாண வூட்டுல என்ன சாப்பாடு போடுவாங்கனு எப்படி நினப்பு இருக்குமாம்?.

அதான...ஆட்டுகறிக்கும், மீன் வறுவலுக்கும் நடுவுல,  நம்ம வூட்டு  வடையும் பாயாசமும் எப்படி தொண்டைக்குள்ள இறங்குமாம்?.

அதனாலதான் வாசலோட நழுவ பார்த்தார். அது தெரியாம நீ அவர உள்ள கூட்டிகிட்டு வந்துட்ட...”  என்று அவளின் முறைப்பான பதிலைக் கேட்டு,  தன்னிலை பெற்றான் ராசய்யா.  

தன் தலையை உலுக்கி தன்னை சமனப்படுத்திக் கொண்டவன், அவளின் கிண்டலை கண்டு கொண்டு  

“ஹா ஹா ஹா மூனுவேளையும் பண்ணையார் வூட்ல சாப்பிட்டாலும், தணிகாசலம் மாமா வூட்டு சாப்பாடு போல வராதே..

அதோட மத்த கல்யாணத்துல எல்லாம் இந்த இத்து போன வடையத்தான் போடுவாங்கனு எனக்கும் தெரியும் கல்யாணப்பொண்ணே...!  

ஆனால் உன் கல்யாணம் ஸ்பெஷல் ஆச்சே... தணிகாசலம் மாமாவோட செல்ல மவ... அதுதான் மாமா ஏதாவது விஷேசமா பண்ணியிருப்பார் னு கேட்டேன்...”    என்று சமாளிக்க

“கறி விருந்து தான மாப்ள...பாப்பா கல்யாணம் முடியட்டும்.  சம்பந்தி விருந்தப்ப ஓடறது, பறக்கறது, நீந்தறது னு எல்லா ஐட்டத்தையும் ஏற்பாடு செஞ்சு அசத்தி புடலாம் அசத்தி... “  என்று சிரித்தார் தணிகாசலம்.

அதைக்கேட்ட  பூங்கொடிக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

இந்த கல்யாணமே அவள் விருப்பம் இல்லாமல் நடப்பது...இதில் அவள் தந்தை சம்பந்தி விருந்து வரை திட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டு எரிச்சலாக வந்தது.

இருவரையும் எரிப்பவளை போல முறைத்து பார்த்துவிட்டு மீண்டும் வெடுக்கென்று கழுத்தை நொடித்தவாறு குனிந்து சாதத்தை அள்ளி இலையில் பொத்தென்று வைத்தாள்.

அவளின் செயலில் இருந்தே  அவள் கோபமாக இருக்கிறாள் என்று  கண்டு கொண்ட ராசய்யாவோ அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்த்தான்.

“மாமா... எனக்கு ஒரு சந்தேகம்... “ என்று இழுத்தான்.

“சொல்லு மாப்ள? என்ன சந்தேகம்? “ என்று தணிகாசலம் யோசனையாக ராசய்யாவை பார்க்க

“வந்து... கல்யாண பொண்ணு னா அடக்க ஒடுக்கமா வெட்கபட்டு  குனிஞ்ச தலை நிமிராமல் இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன். போன மாசம் கல்யாணம் ஆச்சே..கோவிந்தன் மாமன் பொண்ணு. அது கூட அப்படித்தான் இருந்தது.

தாலி கட்டற வரைக்கும் நிமிர்ந்து மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்கலை.

ஆனா உங்க பொண்ணு மட்டும் வெட்கம் னா  கிலோ என்ன விலைனு கேட்பா  போல....

ஒருவேளை இவளுக்கு கல்யாணம் இல்லையோ...நான் வெளியில பார்த்தப்ப வெட்கப்பட்டுட்டே ஓடினாளே  சின்னக்குட்டி... அவளுக்குத்தான்  கல்யாணமா..? உண்மையை சொல்லுங்க....“  

என்று பூங்கொடியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு தணிகாசலத்திடம் கேட்க, அவன் என்னவோ ஏதோ முக்கியமான சந்தேகத்தை கேட்க போகிறான் என்று கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் தன் மகளின் கோப முகத்தை கிண்டல் அடிக்கவும், வாய் விட்டு சிரித்தார் தணிகாசலம்.  

சிரித்து முடித்தவர்

“வெட்கம் தானே...  அதெல்லாம் பாப்பாக்கு கல்யாண மேடையில் மாப்பிள்ளை பயனை பார்த்த  உடனே தானா வந்துடும் மாப்ள...” என்று தன் மகளுக்கு சப்போர்ட் பண்ண,

“அப்படியா மாமா? “ என்று தன் சிரிப்பை அடக்கியபடி சீரியஸாக கேட்க

“அப்படித்தான் மாப்ள ... என் பொண்டாட்டி... அதான் உன் அத்தை இருக்காளே.. அவ இப்படித்தான்..கல்யாணத்துக்கு முன்னாடி, நீ சொன்ன மாதிரி வெட்கம் னா கிலோ என்ன விலைனு கேட்கற ஆளுதான்.

எட்டு ஊர்  வாய் அடிப்பா. அவ வம்பு இழுக்காத ஆளுங்களே இருக்க மாட்டாங்க. எங்க கல்யாணத்தப்ப,  மணமேடைக்கு வர்ற  நிமிஷம் கூட யார் கூடயோ  சண்டை போட்டுகிட்டு தான் வந்தா.

மேடைக்கு வந்த உடனே, என்னை பார்த்ததும் அப்படியே சொக்கி போயிட்டா.  அதுக்கப்புறம் குனிஞ்ச தலை நிமிரவே இல்லைனா பாரேன்...”  என்று தன் பழைய நினைவில், அது தந்த சுகத்தில் இப்பொழுதும்  வெட்கப்பட்டு தணிகாசலம் மென்மையாக புன்னகைத்தார்.

“அட்ரா சக்க...  அப்படீனா அத்தை வெட்கப் பட்டது அந்த ஒருதரம்  மட்டும் தானா மாமா?  அப்பவே நல்லா பாத்து வச்சிருப்பீங்களே.  அதுக்கப்புறம் எப்பயாவது திரும்பவும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடச்சுதா? “ என்று கேலியுடன் தன் மாமனை கேட்க, அவரும் சிரித்தவாறு

“ம்ஹூம்...  அதுக்கப்புறம் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவே இல்ல மாப்ள. உன் அத்தைகிட்ட மருந்துக்கு கூட வெட்கம் வரலை. நானும் வெட்கப்படற மாதிரி கொஞ்சம் நடிச்சுதான் காமி டி னு ஆசையா கேட்டால் அதுக்கு என்னை பிடிபிடினு பிடிச்சுக்குவா...” 

என்று ஒரு முறை அவசரமாக சுற்றிலும் பார்த்து தன் மனைவி அருகில் இல்லை என்பதை உறுதி படுத்துக்கொண்டு  தன் மனதினில் அதுவரை போட்டு பூட்டி வைத்திருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டினார் தணிகாசலம்.

“உங்க பாடு ரொம்பவும்  குஷ்டம் தான்  மாமா...  அது சரி...  அத்தை வெட்கப்படாததற்கு  இப்படி சலிச்சுக்கிறீங்களே...  எனக்கு ஒரு சந்தேகம் மாமா...” என்று மீண்டும் தணிகாசலத்தை  பார்த்தான்.

அவரிடம் கதை அடித்துக்கொண்டே இருந்தாலும், இலையில் வைத்து இருந்ததை எல்லாம் காலி  பண்ணிக் கொண்டிருந்தான் ராசய்யா.  

“இப்ப என்ன சந்தேகம் மாப்ள? “  என்று பெரியவரும் ஆர்வமாக கேட்க,

“அது வந்து...இப்படி அத்தை எப்பவும் உங்ககிட்ட சண்டைக்கோழி மாதிரி சிலுத்துகிட்டு இருக்காங்களே...அப்புறம்   எப்படி இத்தனை வருஷமா அவங்க கூட குடும்பம்  நடத்தி நாலு பிள்ளைகளையும் பெத்துக்கிட்டிங்க? “  

என்று தன் மனதில் ரொம்ப நாளாக உறுத்தி கொண்டு இருந்ததை இன்று சந்தடி சாக்கில் வாய்விட்டு கேட்டு வைத்தான் ராசய்யா.  

அவன்  அறிந்தவரையில், பார்த்தவரையில்  எப்பொழுதும் சிலம்பாயி , தணிகாசலத்தை  கடித்துக்கொண்டே இருப்பார். வீட்டிலும் , வயலிலும்   சிலம்பாயி சத்தம் தான் எப்பொழுதும் ஓங்கியிருக்கும்.  

தன் பெயருக்கு பொருத்தமாக தணிகாசலம் எப்பவும் தணிந்து போய்விடுவார்.  அதனால் அவர்களை பார்க்கும்பொழுது நீண்ட நாட்களாகவே அவன் மனதில் எழும் சந்தேகத்தை இப்பொழுது கேட்டு வைத்தான்.

அதைக்கேட்ட தணிகாசலமும் வெட்கப்பட்டு சிரித்தவாறு

அதெல்லாம் குடும்ப ரகசியம் மாப்ள. உனக்கு  கல்யாணமானா எல்லாம்  தானா தெரியும்.  அதுக்குத்தான் சட்டுபுட்டுன்னு ஒரு புள்ளையப் பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றது...”  

என்று நமட்டு சிரிப்பை சிரிக்க, பூங்கொடியோ இருவரையும் பார்த்து முறைத்து  தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

அதோடு அப்பொழுதுதான் ஒன்றை கவனித்தாள்.  

அவளின் தந்தை யாரிடமும் இந்த மாதிரி கதை அடிப்பது இல்லை.  

எப்பொழுதும் வயலும் வேலையும்  அதைவிட்டால் வீடு மட்டுமே அவரின் தினசரி அஜெண்டா.  

எப்பொழுதாவது ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்கு சென்று வருவார். அங்கே  கூட இப்படி எல்லாம் பேசி சிரித்து பார்த்ததில்லை.

ஏன் அந்த வீட்டு பெரிய மாப்பிள்ளை...  பொற்கொடியின் கணவன்... தினேஷ் இடம் கூட அவர் நின்று பேசியதில்லை.

வீட்டுக்கு வருகிறவர்களை வாருங்கள் என்று அழைத்து, ஓரிரு வார்த்தை நலம்  விசாரித்துச் செல்வதோடு முடிந்துவிடும் அவரின் உரையாடல்.  

அப்படி இருக்க ஆனால் ராசய்யாவிடம் மட்டும் அவர் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக பேசுகிறார் . 

“அப்படி என்னதான் எங்க அப்பாக்கும் சொக்கு பொடி போட்டானோ? “  என்று யோசிக்க, அது என்ன சொக்கு பொடி  என்பதையும் தணிகாசலமே சொன்னார்.

“நான்  யார்கிட்டயும் இப்படி மனம் விட்டு பேசுவதில்லை  மாப்ள.  உன் அப்பன்  இருக்குற வரைக்கும் அவன்தான் எனக்கு க்ளோஸ் பிரண்டு.  நாங்க ரெண்டு பேரும் தான் ஜோடி போட்டுகிட்டு ஒன்னா சுத்துவோம்.

மனசுவிட்டு சிரிச்சு பேசிக்குவோம்.  அவன் போனது எனக்கு ரொம்ப பெரிய அடி.  என் வலதுகை  போன மாதிரி ஆயிடுச்சு...”  என்று தன் நண்பனின் நினைவில்  தழுதழுக்க,  அதைக்கேட்டு ராசய்யாவின் முகம் இறுகியது.  

யாராவது அவன் பெற்றோர்களை பற்றிய பேச்சை எடுத்தாலே அவன் பாறை போல இறுகி போய்விடுவான்.

தன்னை அநாதையாக விட்டுச் சென்ற தென் பெற்றோர்கள் இருவரின் மீதும் எப்பவும் கோபம் பொங்கிக் கொண்டிருக்கும்.  

இன்று தணிகாசலம் அதை நினைவு படுத்தி விட,  அவன் முகம் இறுக, தாடை விடைக்க,  கை-முஷ்டி இறுகியது.  

ராசய்யாவுக்கு இலையில் பதார்த்தங்களை வைத்து விட்டு அவன் அருகில் நின்று கொண்டு அவர்கள் இருவரின் கதையை கேட்டுக்கொண்டுதான் நின்றிருந்தாள் பூங்கொடி.

அப்பொழுதுதான் எதேச்சையாக தணிகாசலம் ராசய்யாவின் பெற்றோர்களை பற்றி சொல்லிவிட, அதற்கு அவன் முகத்தில் பொங்கிய இறுக்கத்தை கண்டவளுக்கு  தன் கோபம் மறந்து இரக்கம் சுரந்தது.

அவன் மனவேதனை கொள்கிறான் என்று  கண்டு கொண்ட பெண்ணவளுக்கு ஏனோ அவளையும் அறியாமலயே கஷ்டமாக இருந்தது.

அவனின் வேதனையை காண தாளாதவளாய், தன் தந்தையை பார்த்தவள்

“என்னப்பா இது...  கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கிறப்ப,  இங்க உக்காந்து ரெண்டு பேரும் கதை அடிச்சுகிட்டு இருக்கிங்க...” என்று  அந்தப் பேச்சை அதோடு முடிக்கும்படி மறைமுகமாக தன் தந்தையை எச்சரித்தாள் பூங்கொடி.

அதை கேட்ட  தணிகாசலத்தின் முகம் மலர்ந்தது..  கண்களில் மின்னல் பளிச்சிட்டது.

இதுவரை இந்த அவசர கல்யாண ஏற்பாடு பிடிக்காமல், தன்  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த தன்  செல்ல மகள், இப்பொழுது  அவளாகவே கல்யாண வேலை இருக்கு என்று சொல்லவும்,  தன் மகள் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டாள் என்று எண்ணி பூரித்து போனார் தணிகாசலம்.

அதுவரை மனதில் உறுத்தி வந்த சிறு உறுத்தல் மறைந்து விட, முகம் மலர நிமிர்ந்து தன் மகளை பார்த்தவர்

“அதுக்கென்ன பாப்பா... முக்கால்வாசி வேலை எல்லாம் முடிஞ்சிருச்சு.  பத்தாததுக்கு இப்ப ராசு மாப்பிளையும் வந்து விட்டாரே.  இனிமேல் என்ன கவலை . எல்லாம் முடிச்சிடல்லம்.”

என்று வாயெல்லாம் பல்லாக சொல்லி வெள்ளையாக சிரிக்க,  அப்பொழுதுதான் அவளுக்கு அந்த திருமணத்தை பற்றிய நினைவே வந்தது.

அவள் முகம் அடுத்த கணம் இருண்டு போனது.

“அதெல்லாம் கலக்கிடலாம் மாமா... நம்ம கருவாச்சி கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தறது என் பொறுப்பு... “  என்று ராசய்யாவும் சிரிக்க, சற்றுமுன் அவன் மனவேதனையை கண்டு கனிந்து இருந்தவள் , அவனின் கருவாச்சி என்ற அழைப்பில்  மீண்டும் சுறுசுறுவென்று கோபம் பொங்கியது.  

தன் மகளின் முகத்தில் பொங்கிய கோபத்தை கண்ட தணிகாசலம் முதல்முறையாக தன் மகளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.

“யோவ் மாப்ள...பாப்பா  கல்யாணமாகி அடுத்த வீட்டுக்கு போகப்போறா. இனிமேல் பாப்பாவை அப்படி கூப்பிடக் கூடாது...”  என்று ராசய்யாவை கண்டிக்க, அதைக்கேட்டு  பூங்கொடிக்கு கண்கள் விரிந்தன்.  

ராசய்யா அவளை கருவாச்சி என்று அழைத்து  கேலி  செய்யும் பொழுதெல்லாம், தணிகாசலம்  எதுவும் சொல்லாமல், ராசய்யாவை கண்டிக்காமல்   சிரித்துக் கொள்வார்.  

கிராமங்களில் இந்த மாதிரி கிண்டல் கேலி பேசுவது வழக்கம் என்பதால் அதை பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்.

அதைக்கண்டு  அவளுக்கு எப்பொழுதுமே வருத்தமாக இருக்கும்.  

தன்னை கருவாச்சி என்று கிண்டல் அடிப்பவனை ஓங்கி ஒரு அறை விடாமல் அவனோடு சேர்ந்து சிரிக்கிறாரே என்று கோபம் பொங்கும்..

ஆனால் இன்று முதன் முறையாக  தனக்காக பேசிய தன் தந்தையை   காண ஆச்சரியமாக இருந்தது.  

“ஹ்ம்ம்ம் அப்படி நல்லா மண்டையில் உறைக்கிற மாதிரி எடுத்து சொல்லுங்கப்பா இன்னொரு தடவை என்னை அப்படி கூப்பிட்டால் அவ்வளவுதான்...” என்று அவள் பங்குக்கு பொரிந்து  வைக்க

“ஹா ஹா ஹா நாளைக்குத்தான நீ அடுத்தவன் பொண்டாட்டி ஆகப் போற.  அதுவரைக்கும் நீ என் தணிகாசலம் மாமன் பொண்ணு தானே.  எனக்கு கலாய்க்க உரிமை இருக்கு கருவாச்சி.  

அது சரி... அந்த உலுந்த   வடை நல்லா இருக்கு. இன்னும் நாலு வடையை எடுத்து வை...”  என்று புன்னகைத்து வைக்க,  

“ஐய... என்னை கருவாச்சினு கூப்பிட்ட இல்லை ... இனிமேல் உனக்கு சாப்பாடு போட மாட்டேன். இதுக்குமேல உனக்கு ஒன்னும்  கிடையாது. எழுந்திருச்சு போய்யா... “  என்று முறைத்தவள், அருகிலிருந்த வடை இருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நகர முயல, அனிச்சையாய்   எட்டி அவள் கையை பிடித்தான் ராசய்யா.

“கோவிச்சுக்காத  கருவாச்சி...  உன் கல்யாண சாப்பாடு எவ்வளவு டேஸ்ட்டா இருக்கு தெரியுமா? இப்படி பாதி சாப்பாட்டோட முடிச்சுடக் கூடாது.  அதுவும் அந்த வடை செம டேஸ்ட். இன்னும் கொஞ்சம் வை... “ என்று கிண்டலாக சொன்னான்.

அவளோ அவனை முறைத்தபடி அவன் கையில் இருந்த தன் கரத்தை விடுவித்து கொள்ள முயல, அவன் பிடி உடும்பு பிடியாக இறுகி இருந்தது.

“ம்ஹூம்.. நான் கேட்டதை தரலைனா  உன் கையை விட மாட்டேன்...” என்று குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்த ஒரு ஜோடி விழிகள், அவர்கள் இருவரையும் குரோதமாக பார்த்திருந்தன..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!