என்னுயிர் கருவாச்சி-23
அத்தியாயம்-23
ராசய்யா, தன்னிடம் கோபித்துக்கொண்டு செல்லும் பூங்கொடியின் கையை பற்றி அவளை தடுத்து
நிறுத்த எண்ணி, அவள் கையை இறுக்கி பிடித்துவிட, அதில் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல் ஒன்று உடைந்து அவள்
கையில் குத்திவிட்டது.
உடனே அவள்
கையில் இருந்து ரத்தம் லேசாக வர, அதைக்கண்டு அதிர்ந்தவன், அவள்
கையை விட்டுவிட்டு, பாதி சாப்பாட்டில் எழுந்து சென்று வேகமாக
தன் கையைக் கழுவிக் கொண்டு அவள் அருகில் ஓடி வந்தான் ராசய்யா.
ரத்தம் லேசாக
வந்து கொண்டிருந்த அவள் கையை தூக்கி பார்த்தவன்
இன்னும் பதறி போனான்...
“கொஞ்சம்
அழுத்திப் பிடித்து விட்டேன் போல... இப்படி ரத்தம் வருது என்னை மன்னிச்சுக்க பூங்கடி..நான்
ஒரு காட்டுமிராண்டி...ரௌடி...உன் பூப்போன்ற கை என் பிடியை தாங்காது என்று கூட
தெரிந்திருக்கவில்லை.
அறிவு இல்லாமல்
இப்படி இறுக்கி புடிச்சிட்டேன்....என்னை மன்னிச்சிடு....” என்று வேதனையுடன் அவள் கையை பார்த்தவன், அடுத்த நொடி ஓடிச்சென்று சமையல் அறையில் இருந்த
மஞ்சள் தூளை எடுத்து வந்து அவள் கையில் வைத்து அழுத்தி விட்டான்.
அவனின் அக்கறையையும், அவன் முகத்தில் தெரிந்த பரிதவிப்பையும்
கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள் பூங்கொடி.
அவன் கண்களில்
அவளுக்கான தவிப்பு இருந்தது. அவளுக்கு வலிக்குமே என்ற முழுமொத்த
கவலை, கரிசனம், அவள் வலியை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்ற
அக்கறை...
அதோடு
தன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்ற அவன் மீதான குற்ற உணர்வு என அனைத்தும் அவன் விழிகளில்
கண்டாள் பெண்.
அவன் பால் அவள்
மனம் கொஞ்சம் இலகினாலும், அடுத்த கணம் அவனால் தானே இப்படி ஆச்சு என்று எண்ணியவள், அவன் பிடியில் இருந்த தன் கையை உருவிக் கொண்டு
மீண்டும் முறைத்தாள்.
அதோடு அவன்
சாப்பிடாமல் பாதியில் எழுந்து விட்டது வேறு அவள் மனதை சுட, உடனே கண்ணாடி வளையல் குத்தியதால் உண்டான்
சிறு எரிச்சலை மறைத்து கொண்டு
“இட்ஸ் ஒ.கே...
இது சின்ன காயம் தான். சீக்கிரம் சரியா போயிடும். நீ உக்காந்து சாப்பிடு...” என்று அவனை வற்புறுத்தி மீண்டும் இலையில் அமர
வைத்து அவன் கேட்ட வடையை எடுத்து வைத்தாள் பூங்கொடி.
சற்று முன் அறைக்கு
உள்ளே சென்றிருந்த தணிகாசலம் வெளிவந்தவர், சற்றுமுன் நடந்த களேபரத்தை காணாதவராய்
“என்ன மாப்ள
சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு? “ என்று தணிகாசலம் விசாரிக்க, அதற்குள் ராசய்யாவும் சமாளித்துக்கொண்டு
“நான் முன்னயே சொன்னதுதான் மாமா... தணிகாசலம் மாமா வூட்டு
சமையல்னா எப்பொழுதும் சூப்பராதான் இருக்கும். அதுவும் கல்யாண விருந்து... சொல்லவா வேண்டும்.
எல்லா ஐட்டமுமே கலக்கலா இருக்கு மாமா...
இன்னைக்கே இப்படினா, நாளைக்கு இன்னும் சூப்பரா இருக்கும்... நான் இப்ப இருந்தே வயித்த
காயபோட்டு வச்சிருக்க போறேன்... “ என்று சிரித்தவன் திடீரென்று அதை கேட்டு
வைத்தான்...
“ஆமா மாமா...
நான் வந்த உடனே கேட்கணும் னு நினைச்சேன்... பேச்சு வாக்கில் மறந்திட்டேன்...
மாப்பிள்ளை எந்த ஊரு? என்ன பேரு? நம்ம பூங்கொடியை நல்லா வச்சு பாத்துக்குவார்தானே? நல்லா விசாரிச்சுட்டிங்களா? “
என்று
அக்கறையோடு விசாரிக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த
தணிகாசலத்தின் முகம் அடுத்த கணம் இருண்டு போனது.
பூங்கொடிக்குமே
அதே நிலைதான்.
தன் முகம் இறுக தன் தந்தையை முறைத்துப் பார்க்க, அவரோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவர்
“வீட்டுக்கு யாரோ
வர்ற மாதிரி இருக்கு மாப்ள... இரு ஒரு
எட்டி பார்த்துட்டு வந்துடறேன்...” என்று நைசாக
நழுவி, முன் வாசலுக்கு விரைந்தார்.
அவரின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்
பூங்கொடி.
ராசய்யாவுக்கோ குழப்பமாக இருந்தது.
தணிகாசலம் மாமா
எப்பொழுதும் பாதி பேச்சில் இப்படி
வெட்டிக் கொண்டு சென்றதில்லை. இன்று
வேண்டுமென்றேதான் அவர் நழுவிச் செல்கிறார் என்று புரிந்தது.
“ஏன் அப்படி
செல்ல வேண்டும்? ஒருவேளை தன் வருங்கால மாப்பிள்ளையைப் பற்றி
என்னிடம் சொல்ல பிடிக்காமல் இங்கு இருந்து நழுவி செல்கிறாரோ? “ என்று யோசித்தவன், இப்பொழுது திரும்பி பூங்கொடியின் முகத்தைப் பார்க்க, அவளின் முகமும் பாறை போல இறுகி கிடந்தது.
அவள் முகத்தில்
மருந்துக்கும் கல்யாண கலை இல்லை என்பது அப்பொழுதுதான் மண்டையில் உறைத்தது.
ஏதோ சரியில்லை
என்பது போல உள்ளுணர்வு உறுத்த, அதற்கு மேல் சாப்பிட பிடிக்காதவனாய், அவசரமாக இலையில் வைத்ததை மட்டும் சாப்பிட்டு முடித்துவிட்டு, எழுந்து கை கழுவ சென்றான்.
பூங்கொடி அவன்
இலையை எடுத்து கொள்ளைப்பக்கம் போட்டு விட்டு திரும்ப, அவளை வழி மறித்தபடி நின்றிருந்தான் ராசய்யா.
அதைக்கண்டு ஒரு நொடி திடுக்கிட்டவள், பின் தன்னை சமாளித்துக் கொண்டு அவனை
நேராக பார்த்து பார்வையால் என்ன என்று வினவ,
அவனும் அவள்
அருகில் வந்தவன், அவள் முகத்தையே ஆராய்ச்சியுடன்
பார்த்தவன்
“என்னாச்சு கருவாச்சி? ஏன் உன் மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி இருக்கு?
பொதுவா உன்னை
கட்டிக்க போறவன் மூஞ்சி தானே நாளையிலிருந்து இந்த மாதிரி இருக்க போகுது. நீ ஏன் இன்னைக்கே
இப்படி இருக்க? “
என்று அவளை இயல்பாக்க
எண்ணி அவளை கலாய்க்க, அவன் எதிர்பார்த்ததை போலவே அவளும் தன் தலையை சிலுப்பி கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
“ஹோய்.. எதுக்கு
இப்ப இந்த முறை முறைக்கிற? சரி சொல்லு... உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா? இல்லையா? “ என்று கேட்டு வைக்க, அதைக்கேட்டு அவளுக்கு நெஞ்சை அடைத்தது.
இதுவரை யாரும் அவளிடம்
கேட்டிராதது. முதன்முறையாக அவன் கேட்க
அவளுக்கு நெஞ்சை அடைத்தது.
கண்ணோரம் கரித்துக் கொண்டு வந்தது. ஆனாலும் முயன்று தன் கண்ணீரை உள்ளிழுத்துக்
கொண்டவள், எதுவும்
சொல்லாமல் தன் தலையை குனிந்து கொண்டாள்.
அவள் பதிலுக்காக
அவளையே ஊடுருவிப் பார்த்திருந்தவன், அவள் பதில் சொல்லாமல் தலையை குனியவும்
மீண்டும் கேட்டான்.
“சொல்லு
பூவு....உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் தானே...” என்று தவிப்புடன் கேட்டு வைக்க,
அதுவரை உள்ளுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த தன் தந்தை
மீது இருந்த கோபத்தை எல்லாம் ராசய்யா மீது திருப்பினாள் பெண்.
“ஏன்? எனக்கு இஷ்டம் இல்லைனா உடனே இந்தக் கல்யாணத்தை
நிறுத்திட போறியாக்கும்? “ என்று நக்கலாக கேட்டு, கழுத்தை நொடித்தவள், விடுவிடுவென்று
தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
விடுவிடுவென்று
செல்லும் அவளையே தன் தாடையை தடவியபடி யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராசய்யா.
மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில்
திருமணம்.
முசிறியில் உள்ள
பெரிய மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தணிகாசலம் வசதிக்கு
அவ்வளவு பெரிய மண்டபத்தில் தன் பெண் திருமணத்தை நடத்துவது என்பது கனவில் கூட எண்ணி
பார்த்திருக்க முடியாது.
ஆனால் திருமண செலவு முழுவதும் மாப்பிள்ளையே பார்த்துக்
கொள்வதாகவும், மாப்பிள்ளை வசதிக்கு இந்த பெரிய
மண்டபத்தில்தான் திருமணத்தை வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி விட, வேற வழியின்றி தணிகாசலமும் தலையை ஆட்டி
வைத்தார்.
வண்ண வண்ண அலங்கார
விளக்குகளால் ஜொலி ஜொலித்த அந்த பெரிய மண்டபத்தை காணும்பொழுது எல்லாருக்கும்
பொறாமை எழுந்தது.
“பூங்கொடிக்கு வந்த
வாழ்வைப் பார். இவ்வளவு பெரிய மண்டபத்தில்
கல்யாணத்தை வச்சுட்டாங்களே... அதுவும் கல்யாண செலவு பூராவும் மாப்பிள்ளை வீட்டு பக்கமாம். சீர் செனத்தி, பவுனுனு கூட எதுவும் போடச் சொல்லலையாம்...
ஹ்ம்ம்ம் கொடுத்து
வச்சவ. புடிச்சாலும் புடிச்சாங்க... நல்ல புளியங்கொம்பா இல்ல புடிச்சிட்டாங்க. இல்லைனா
படிக்கிற புள்ளைய படிப்பை பாதியில் நிறுத்தி, இப்படி சட்டு புட்டுனு கல்யாணத்த பண்ணுவாங்களா? “ என்று பேசிக் கொண்டனர்.
மணப்பெண்
அறையில் அமர்ந்திருந்த பூங்கொடியின் காதிலும் இந்த மாதிரி பேச்சுக்கள் விழத்தான் செய்தன.
அதைக்கேட்ட அவள்
மனதில் தானாய் பரவுகிறது எட்டிக்காயும், வேப்பங்காயும் ஒன்றாய் கலந்து சாப்பிட்டதை போன்ற ஒரு கசப்பு உணர்வு..!
அவர்கள் பொறாமை
கொள்ளும்படி பெருமையாக சொன்ன பெரிய
இடத்தில் வாழ்க்கைப்பட்டு போகும் சந்தோசம் எள்ளளவும் இல்லாமல் அவளின் முகம்
பாறை போல இறுகி கிடந்தது.
******
அதிகாலை முகூர்த்தம் என்பதால், நேற்றிரவே மண்டபத்திற்கு வந்து விட்டனர்
பூங்கொடி வீட்டினர் .
இன்று
அதிகாலையில் அவளை எழுப்பி மணப்பெண் அலங்காரம் செய்ய வேண்டும் என்று அழகு நிலைய
பெண்கள் இருவர் வந்து விட, அவளும் உள்ளுக்குள் பல்லை கடித்துக்கொண்டு மணப்பெண் அறையில் அமர்ந்து
இருந்தாள்.
அதன்பின் சற்று
நேரத்தில் அவளின் அலங்காரங்களை முடித்திருக்க, பின் அழகு நிலைய பெண்கள் கிளம்பிவிட்டனர்.
அனிச்சையாய் அந்த
அறைக்குள் வந்த தணிகாசலம், மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாய் ஜொலித்த தன் மகளைக் கண்டு அதிசயித்து
நின்று விட்டார்.
அரக்கு கலரில்
பெரிய பார்டர் வைத்த ஆங்காங்கே பூக்களை வாரி இரைத்திருந்த காஞ்சிபுரம் பட்டுப்
புடவை. அதே புடவையில் வெட்டி தைத்து கெட்டி ஜரிகை வைத்த முழங்கைக்கு
சற்று மேல் வரை நீண்டிருந்த கை வைத்த ப்ளௌஸ்ம் அணிந்திருந்தாள்
அவளின் கருநாகம்
போன்று நீண்டு தொங்கிய கூந்தலை இறுக்கமாக பின்னலிட்டு, அதில் பூச்சடையை வைத்து தைத்து இருந்தனர்.
கழுத்தில் டெம்பிள்
செட் நகைகள்...காதில் அதே செட் நகையுடன்
வந்திருந்த பெரிய குடை ஜிமிக்கி…தலையில் நெத்திசுட்டி…இடுப்பில் ஒட்டியாணம் என்று அவளின் அங்கம் முழுவதும் பூட்டியிருந்த அலங்கார
நகைகளில் இன்னுமாய் அழகு பதுமையாக ஜொலித்தாள் பூங்கொடி.
மாநிறமாக
இருந்தாலும் முகத்துக்கு ப்ளீச்சிங், ஃபேசியல் என்று செய்து, பின் ஏதேதோ க்ரீமை அவளின் முகத்தில் பூசியிருக்க, அதில் அவள் முகம் இன்னுமாய் ஜொலித்தது.
இயற்கையிலயே
வனப்பான உடல் வாகுடன் கொடி போன்று மிளிர்பவள், இந்த திருமண அலங்காரத்தில் அவளின் இயற்கை அழகு இன்னும் பல மடங்கு கூறியிருந்தது.
தன் மகளையே
இமைக்க மறந்து பார்த்து நின்றார் பெரியவர்.
தணிகாசலத்தை
தேடிக் கொண்டு வந்த ராசய்யாவும், அழகு பதுமையாய் நின்றிருந்தவளை கண்டதும் ஒரு நொடி
ஸ்தம்பித்து நின்றான்.
பின் தன் தலையை உலுக்கி, தன்னை சமனபடுத்திக் கொண்டவன் , அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியுடன்
பார்த்து வைத்தவன்,
தணிகாசலம் பக்கம் திரும்பி,
“என்ன மாமா... எப்பவும் ஒரு இத்துப்போன பாவாடையும், தொளதொளன்னு
சட்டையும் போட்டுக்கிட்டு சுத்தின உங்க பொண்ணு எங்க மாமா? இங்க இருக்கிறது யாரு? “
என்று கேலி
செய்ய, சற்றுமுன் அவனின் நேரடி பார்வையில்
சங்கோஜத்தில் நெளிந்தவள், இப்பொழுது அவனின் கேலியில், வழக்கமான அவளின் துடுக்குத்தனம் தலை
தூக்க,
“ஹ்ம்ம்ம் உங்க
மாப்பிள்ளை கண்ணுல விளக்கெண்ணய ஊத்திக்கிட்டு பாக்க சொல்லுங்க அப்பா... அப்பயாவது
உங்க பொண்ணை கண்டுபிடிக்கிறாரானு பார்க்கலாம்...” என்று கழுத்தை நொடித்தாள் பூங்கொடி.
பிறகுதான், தான் அவனை என்ன சொல்லி வைத்தோம் என்று உறைத்தது.
எப்பொழுதும் தணிகாசலம்
ராசய்யாவை மாப்பிள்ளை என்று அழைத்ததால், அவள் வாயிலும் அதுவே வந்திருந்தது.
உடனே அவசரமாக அவர்கள் இருவரையும் பார்க்க, இருவருமே அவள் சொன்னதை பெரிதாக கண்டு கொண்டிருக்கவில்லை.
“அதெல்லாம்
நல்லாவே பார்த்துட்டேன் மாமா...சத்தியமா இந்த
பொண்ணு அந்த கருவாச்சி இல்லை. அது எப்படி மாமா? ஒரே ராத்திரியில் இப்படி பெயிண்ட் அடிச்சு ரதி மாதிரி வெள்ளை ஆக்கிட்டாங்க?
பார்த்து
மாமா...இன்னும் கொஞ்ச நேரத்தில் மேடைக்கு வரப்போகும் மாப்பிள்ளை, நான் பார்த்த பொண்ணு இது இல்லைனு எழுந்திருச்சு
ஓடிட போறார்...” என்று கலாய்க்க, அதில் கடுப்பானவள்
“அப்பா…முதல்ல இந்த கருவாயன இங்க இருந்து
கூட்டிட்டு போங்க. நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன்.
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவனை என்ன செய்வேனு எனக்கே தெரியாது...” என்று பல்லை கடித்தாள் பூங்கொடி.
அதுவரை அவளை
கலாய்த்து கொண்டிருந்த ராசய்யா, அவள் முகத்தில் பொங்கிய கோபத்தையும் எரிச்சலையும்
கண்டவன், தன் கிண்டலை விடுத்து அவள் அருகில்
இன்னுமாய் நெருங்கி வந்தவன்
“என்னாச்சு பூவு? நான்
சும்மா உன்னை கலாய்ச்சேன். அதுக்கு ஏன் இம்புட்டு டென்சனா இருக்க? கல்யாண பொண்ணுக்கான கலையே உன்
முகத்தில இல்லையே..!
உனக்கு இந்த
கல்யாணம் புடிச்சுதான நடக்குது? எதையும் மறைக்காம சொல்லு...” என்று
அவளை குறுகுறுவென்று ஆராய்ச்சியோடு பார்க்க, பூங்கொடியின் பார்வையோ அனிச்சையாய் அவளின்
தந்தையிடம் சென்றது.
தன் மகளின்
பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவருடைய முகமும்
சஞ்சலப்பட, தலையை குனிந்தவாறு, கண்ணோரம் கரித்த நீரை அவர் அவசரமாய் மறைப்பது
தெரிந்தது.
அதைக்கண்ட
ராசய்யா திடுக்கிட்டு போனான்...
“மாமா ஏன்
இவ்வளவு வருத்தப்படறார்? இந்த பூங்கொடியும் சரியில்லையே? “ என்று யோசித்தவன், தணிகாசலத்திடம் ஏதோ கேட்க வர, அதேநேரம் பூங்கொடியின் கல்லூரி தோழிகள்
இருவர் மணப்பெண் அறைக்கு வர, அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்ட தணிகாசலம்
அங்கிருந்து நழுவினார்.
அதற்குமேல் ராசய்யாவும்
அங்கு நிற்க முடியாமல்,
பூங்கொடியை ஆராய்ச்சியோடு பார்த்தவாறு
வெளியேறிச் சென்றான்.
*****
பூங்கொடியின் கல்லூரி தோழிகள் சங்கீதாவும், மீனாவும் வந்திருந்தனர்,
அவசரமாக ஏற்பாடு
செய்த திருமணம் என்பதால், நெருங்கிய உறவினர்கள், மற்றும் காமாட்சிபட்டியில் உள்ளவர்களை மட்டுமே அழைத்திருந்தனர்.
பூங்கொடி
அவளுக்கு இருந்த வேதனையில், அவள் சார்பாக யாரையும் அழைத்திருக்க வில்லை.
ஆனாலும்
தணிகாசலமே முசிறிக்கு வந்து சங்கீதா வீட்டிலும், மீனா வீட்டிலும் பூங்கொடி சார்பாக இரண்டு நாட்கள் முன்புதான் திருமணத்திற்கு
அழைத்து சென்றார்.
இன்னும் இரண்டு
நாளில் தன் தோழிக்கு திருமணம் என்பதை அவர்களாலும் நம்பவே முடியவில்லை.
செல்போன் வசதி
இல்லாததால், போன் அடித்து என்னடி நடக்குது என்று
விசாரிக்கவும் வழியில்லை. அதனால் யோசனையுடனேதான் கிளம்பி இந்த திருமணத்திற்கு
வந்திருந்தனர்.
அறைக்கு உள்ளே
வந்தவர்கள் பூங்கொடியை பிடித்துக்கொண்டனர்.
“என்னடி
நடக்குது? ஏன் இந்த திடீர் கல்யாணம்? நீ எப்படி இதுக்கு சம்மதிச்ச? “ என்று சரமாரியாக கேள்விகளை தொடுக்க, எதற்கும் பதில் சொல்லாமல் கசந்த புன்னகை
மட்டுமே தன் இதழ்களில் தவள விட்டாள் பெண்.
ஆனாலும் அதையும்
நொடியில் மறைத்துக்கொண்டு இயல்பாக தன் தோழிகளிடம் பேச, அவர்களும் காரணத்தை ஆராய்வதை
விட்டுவிட்டு, மணப்பெண்ணை கிண்டலும் கேலியும் செய்ய
ஆரம்பித்தனர்.
சற்று நேரம் மூவரும்
கலகலத்து சிரித்துக் கொண்டிருக்க, அனிச்சையாய ஜன்னலின் வெளியில்
பார்த்தவள் ஸ்தம்பித்து நின்றாள் சங்கீதா.
“ஹே பூவு... அங்கே
நிற்கிறாரே... அவர் உன் வீட்டுக்காரர் தானே... ஐ மீன் உன் பக்கத்து வீட்டுக்காரர் தான? அன்னைக்கு பார்த்ததைவிட இன்னைக்கு ஆள் இன்னும் ஹேன்ட்சமா, செமயா
இருக்கார் டி... “
என்று வெளியில்
நின்றிருந்த ராசய்யாவை ஆர்வமாக பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தாள் சங்கீதா.
“யாரு டி அது?“ என்று மீனா ஆர்வமாக வெளியில் பார்க்க,
“அதான் டி...
கோ-கோ விளையாண்ட பொழுது, பூங்கொடியை அழைத்து வந்தவர் டி. நான் கூட
சொன்னேனே என் ஹீரோ னு... அவர் தான் டி...” என்று வெளியில் நின்றிருந்த
ராசய்யாவை சுட்டிக்காட்ட, பூங்கொடியின் பார்வையும் அனிச்சையாய்
அங்கு சென்றது.
*****
வெள்ளை வேஷ்டியை தொடைவரை ஏத்தி கட்டியிருந்தான். வழக்கம் போல கட்டம் போட்ட சட்டை...முழங்கை
வரைக்கும் சுருட்டி விட்டிருந்தான்.
அந்த
மண்டபத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான்.
இப்பொழுது
மட்டுமல்ல. நேற்றிலிருந்து தணிகாசலத்தின் வீட்டில் தான் இருக்கிறான். வீட்டில் இருந்த வேலைகள் எல்லாம் இழுத்து போட்டு
செய்தான்.
திருமணத்திற்கு
வரும் சொந்தக்காரர்களை அழைத்து வருவது, அவர்களை உபசரிப்பது என எல்லாவற்றிலும் முன்னின்று செய்து
கொண்டிருந்தான் ராசய்யா.
அது மட்டுமா? பொற்கொடியின் மாமியாரை சமாளிப்பது தான் அவனுடைய தலையாய
வேலையாக இருந்தது.
அந்த அம்மா
வந்ததிலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்ப முயன்று கொண்டிருந்தார்.
அவருக்கு
தணிகாசலத்தை மட்டம் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தான் தான் அந்த வீட்டின் மூத்த சம்பந்தி
என்று பெருமை அடித்துக்கொண்டு தணிகாசலத்தை
கொஞ்சமும் மதிக்காமல் அவரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.
தணிகாசலமும் அவரின்
நாக்குக்கு பயந்தே அவர் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து தண்மையாக போய்விடுவார்.
இப்பொழுது
இரண்டாவது பெண்ணிற்கு, தங்களை விட பெரிய இடமாக பிடித்து விட்டார் என்று கேள்வி பட்டதில் இருந்து, இனி தன் மதிப்பு அங்கே குறைந்துவிடும் என உள்ளுக்குள் கனன்று
கொண்டிருந்தார்.
எப்படியாவது
தணிகாசலத்தை மடக்க வேண்டும்...நன்றாக
மட்டம் தட்ட வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அம்மாள்.
“இரண்டாவது
பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுறீங்க? “ என்று தணிகாசலத்தை நோண்டினார்.
“பெருசா எதுவும்
போடல சம்பந்தி...மாப்பிள்ளை வீட்டிலேயே பாப்பாவுக்கு தேவையான நகையை வாங்கி விடறதா
சொல்லிட்டாங்க. அவ இப்ப போட்டிருக்கிற
நகையோட ஏற்கனவே அவளுக்கு பண்ணி வச்சிருக்கிற டாலர் செயின் மட்டும்தான்...” என்று மெல்ல
தயக்கத்துடன் இழுத்தார் தணிகாசலம்.
சம்பந்தி அம்மாவுக்கு
ஏனோ தன்னை குத்தி காட்டியதை போல இருந்தது. பொற்கொடிக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என்று
கறாரா பேசி, பேசியபடியே வாங்கியும் விட்டார். இப்பொழுது
சின்ன பொண்ணுக்கு எதுவும் போட வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள்
என்பது அவருக்கு சுருக் என்று தைத்தது.
ஆனாலும் தன் தலையை
உலுக்கிக்கொண்டு, அவர் சொன்னதை கண்டுகொள்ளாதவராய்
“சீர் செனத்தி
எவ்வளவு செய்றீங்க? “ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார்.
“அது வந்து சம்பந்தி...கல்யாணம்
திடீர்னு நிச்சயமாய்டுச்சு. அதெல்லாம்
ரெடி பண்ணலை. அதோடு மாப்பிள்ளை
வீட்டிலேயும் சீர் செனத்தி எதுவும் வேண்டாம்னுட்டாங்க.
கொஞ்சம் சேலை
மட்டும் எடுத்தோம்...” என்று சிலம்பாயி மறைக்காமல் சொல்லிவிட,
“எத்தனை எடுத்தீங்க? “ என்று கேட்க, சிலம்பாயி எதார்த்தமாக பத்து என்று வாங்கியதை சொல்லிவிட்டார்.
அதைக்கேட்டு தணிகாசலத்தை
மட்டம் தட்ட வாய்ப்பு கிடைத்து விட்டதாய் துள்ளி எழுந்தார்.
“அது எப்படி? பெரிய பொண்ணுக்கு அஞ்சு புடவை கூட
எடுத்து தரலை. சின்ன பொண்ணுக்கு மட்டும்
பத்து எடுக்கலாம்? “ என்று குதிக்க, சிலம்பாயி கையை பிசைந்தார்.
மற்றவர்களிடம்
அடாவடியாய் பதில் கொடுக்கும் சிலம்பாயி, தன் சம்பந்தியிடம் மட்டும் தணிந்து போவார்.
என்னதான்
ஆனாலும் பெண்ணை கொடுத்த இடமாயிற்றே...அடங்கிதான் போகவேண்டும் என்று எப்பொழுதும்
அந்த சம்பந்தி அம்மாவின் அதட்டலுக்கு கொஞ்சம்
தணிந்து போவார்.
இப்பொழுது இந்த
புடவை விசயத்தை அந்த அம்மா பெரிதாக்குவதை கண்டு உள்ளுக்குள் பல்லை கடித்தாலும்
தன்னை கட்டுபடுத்திக் கொண்டு
“ஏற்கனவே பெரியவளுக்கு
கொஞ்சம் புடவை எடுத்து வைத்திருந்தாள். சின்னவளுக்கு நல்லதா புடவை ஒன்று கூட இல்லை.
போற இடத்தில் நல்லதா கட்டிக்கணும்னு எங்களால முடிஞ்சதை மட்டும்தான் வாங்கி
கொடுத்தோம்...” என்று தயக்கத்துடன் சொல்ல,
“அதெல்லாம் முடியாது.
கணக்குனா கணக்குதான். மூத்த பொண்ணுக்கு எப்படி செய்திங்களோ அதே மாதிரி சின்ன பொண்ணுக்கும்
வாங்கி கொடுங்க. இல்லையா சின்னவளுக்கு செய்ற மாதிரி பெரியவளுக்கும் எடுத்துக் கொடுங்க...”
என்று குதிக்க, தணிகாசலும்
, சிலம்பாயும் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.
அந்த அம்மாவின்
சத்தத்தை கேட்டு எரிச்சலான பூங்கொடி, தன் அக்கா கணவன் தினேஷ் ஐ பார்த்தாள்.
இவனாவது தன்
அன்னையை கண்டிப்பான் என்று பார்க்க, அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று விட்டேத்தியாக வேற எங்கயோ பார்வையை திருப்பி
கொண்டிருந்தான்.
மறந்தும் தன்
அன்னையை கண்டிக்காமல், நடப்பதை
ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்து வைத்தான்.
அவன்
சம்பாதிப்பதற்கு இந்த புடவை எல்லாம் சாதாரணம்.
அதோடு
பொற்கொடியிடம் இல்லாத புடவையே இல்லை. அப்படி இருந்தும் இந்த அம்மா இந்த அஞ்சு
புடவைக்கு பிரச்சனை பண்றாரே என்று உள்ளுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள் பெண்.
அதற்கு மேல்
சமாளிக்க முடியாமல், பூங்கொடியே விறுவிறுவென்று சென்று, பெட்டியில் வைத்திருந்த ஐந்து புடவைகளை கொண்டு வந்து பொற்கொடியின் மாமியாரின்
கையில் திணித்தாள்.
“இது போதுமா
அத்தை?...இன்னும் வேணும்னாலும் கேளுங்க. எல்லா புடவையையும் கூட உங்க
மருமகளுக்கு எடுத்துக்கங்க..பாவம் இல்லாதவள் ஆயிர்றே..! ” என்று நக்கலாக சொன்னாள்
பூங்கொடி.
“நாங்க என்ன
அவ்வளவு இல்லாமலயா இருக்கோம்... கட்டின மருமகளுக்கு கட்டிக்க புடவை கூட வாங்கி
கொடுக்க முடியாத அன்னாடம் காச்சி இல்ல நாங்க..
உங்க அக்கா நேரத்துக்கு
ஒரு புடவை கட்டற அளவுக்கு பீரோ முழுவதும் வாங்கி அடுக்கி வச்சிருக்கிறான் என்
மவன். இது என்ன பிசாத்து துணி...” என்று
நீட்டி முழக்கி கழுத்தை நொடித்தாள் மாமியார்.
அதைக்கேட்டு
மீண்டும் பல்லை கடித்தாள் பூங்கடி.
“பொண்டாட்டிக்கு
வாங்கி கொடுக்கறது புருஷன் கடமைதானே. அதையெல்லாம் இந்த அம்மா சொல்லி
காட்டுதே...அவ்வளவு அடுக்கி வச்சிருக்கிறவங்க இங்க எதுக்கு பிரச்சனை பண்றாங்களாம்? “
என்று தனக்குள்ளே
பல்லைக் கடிக்க, அதையெல்லாம் ஓரமாக நின்று
கவனித்துக்கொண்டிருந்த ராசய்யாவுக்கும் எரிச்சலாக வந்தது.
அவனுக்குமே
தெரியும்...பொற்கொடியின் திருமணத்திற்கு தணிகாசலம் மாமா தன் கையை மீறி செல்வு
செய்தார் என்று.
அந்த அம்மா அதோட
விட்டுடாம இன்னமும் அது நொட்டை இது நொட்டை என்று குத்தம் சொல்லிக்கொண்டிருப்பதை
கண்டு எரிச்சலாக வந்தது.
அந்த அம்மா
புடவையோடு தன் பிரச்சனையை நிறுத்தாமல் அடுத்த காரணத்திற்கு தாவினார்.
“சின்ன
பொண்ணுக்கு பெரிய மண்டபத்தில் கல்யாணம் பண்றிங்க. ஆனால் பெரியவளுக்கு ஒரு
பைசா கூட செலவு செய்யாமல் கோவில்ல வச்சு
தானே கல்யாணம் பண்ணிங்க...” என்று கணக்கு பார்க்க,
“ஐயோ சம்பந்தி..
இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரோடு ஏற்பாடு. அவ்வளவு பெரிய மண்டபத்தில் கல்யாணம்
பண்ற அளவுக்கு என்கிட்ட ஏது வசதி. இருந்த சேமிப்பு எல்லாம் மூத்தவ கல்யாணத்துலயே
கரஞ்சு போச்சு.
அதுக்கு மேல
ஒன்னு மாத்தி ஒன்னா அவளுக்கு செய்யவே வருமானம் எல்லாம் காலியாகுது. இதுல நான் எங்க
அம்புட்டு செலவு பண்ணி கல்யாணத்தை நடத்த.
கல்யாண செலவுல
நம்ம காசு சல்லி காசு கூட இல்லை...” என்று
அவசரமாக தணிகாசலம் தன் சம்பந்தியை சமாதானபடுத்த முயன்றார்.
“பரவாயில்லையே...
இப்படிக்கூட ஒரு இளிச்சவாயன் மாப்பிள்ளை
உங்களுக்கு கிடைச்சிருக்கானே... ஆமா மாப்பிள்ளைக்கு கை கால் மூக்கு முழி எல்லாம் நல்லா
இருக்கு இல்ல.
அவசரகதியில்
எங்கள கூட கலந்துக்காம சட்டு புட்டுனு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டீங்க. மூத்த
மருமகன், மூத்த சம்பந்தி என்று எங்ககிட்ட ஒரு
வார்த்தை சொல்லலை.
எங்ககிட்ட
கலந்துக்கவும் இல்லை....கல்யாணம் ஆன பின்னாடி நாலே நாள் ல உங்க பொண்ணு மூக்கை
சிந்திகிட்டு வரப்போறா..? “ என்று எள்ளலாக நீட்டி முழக்க, பூங்கொடியின் முகம் பாறை போல
இறுகிப்போனது.
தணிகாசலத்தின்
முகமோ இன்னுமே இருண்டு போனது. அவர்கள் இருவரின் முகவாட்டத்தை கண்ட ராசய்யா, அதற்குமேல் பொறுக்க முடியாமல் நேராக அவரிடம்
வந்தான்.
“ஏம்மா...பார்த்தா
பெரிய மனுசி மாதிரி பந்தா காட்டற... நல்லதா ஒரு நாலு வார்த்தை பேசத் தெரியல.
நானும் வந்ததில் இருந்து பார்த்துகிட்டே
இருக்கேன். ஏதாவது ஒரு குறையை சொல்லிக்கிட்டு இருக்க. அதோடு நிப்பாட்டாமல் நீ
பாட்டுக்கு வாய்க்கு வந்ததை சொல்லிகிட்டு இருக்க.
மாப்பிள்ளைக்கு
ஒரு குறையும் இல்ல. தணிகாசலம் மாமா பார்த்து வச்சார்னா அது தங்கமான மாப்பிள்ளையாதான்
இருக்கும்...” என்று பெருமையுடன் தணிகாசலத்தை பார்க்க, அவருக்கோ சாட்டை அடி வாங்கியதை போல
இருந்தது.
அவர் முகம்
வெளுத்து போனது. மனதில் குற்ற உணர்வு பொங்கி எழ, எப்பொழுதும் தலை நிமிர்ந்து நிற்பவர் முதன்முறையாய் தலை குனிந்தார்.
ராசய்யாவின்
வார்த்தையை கேட்டு பூங்கொடி, மட்டும் சிலம்பாயி இருவரின் பார்வையும் தணிகாசலத்தை துளைத்தது.
அவர்களின்
பார்வையை எதிர்கொள்ள முடியாமல் இன்னுமாய் தலையை குனிந்து கொண்டார் தணிகாசலம்.
அவரின்
மனவோட்டத்தை அறியாத ராசய்யா பெரியவளை அதட்டிக் கொண்டிருந்தான்.
“ஆமா... ஒவ்வொன்னுக்கும்
கணக்கு பார்க்கிற இல்ல. இப்ப நான் சொல்ற
கணக்கை கேள்.
தணிகாசலம் மாமா மூத்தப் பொண்ணுக்கு போட்டது 10 பவுன். இப்ப சின்ன பொண்ணுக்கு போடுவது
5 பவுன் தான்.. அதனால 5 பவுன திருப்பி
கொடுத்துடுங்க.
அப்புறம் கல்யாண
செலவு சின்னவளுக்கு மாப்பிள்ளை வீட்டிலயே எல்லா செலவையும் போட்டு கட்டிக்கிறாங்க.
உங்க மருமகளுக்கு கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணினாலும், வரவேற்பு மண்டபத்துல தான வச்சார்.
அதுக்கு பாதி
செலவையும் மாமா தானே போட்டுகிட்டார். இப்ப சின்ன புள்ளைக்கு பைசா செலவு செய்யாததால, அவர் அப்ப மூத்த பொண்ணுக்கு பண்ணின செலவை
திருப்பி கொடுங்க...” என்று அவரை முறைத்தபடி அதட்டினான்.
இதுவரை அந்த
வீட்டில் அவரை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டதில்லை.
சில நேரங்களில் பூங்கொடி
பொறுக்க முடியாமல் வாயை திறக்க முயன்றாலும், சிலம்பாயிம், தணிகாசலமும் பார்வையாலயே அவளை அடக்கி
விடுவார்கள்.
அதனால் அவளும்
பல்லை கடித்துக்கொண்டு வாயை மூடிக்கொள்வாள். அது இன்னுமே அந்த அம்மாவுக்கு வசதியாக
இருந்தது.
அதனால் இங்கு
வரும்பொழுது எல்லாம் தன் வெண்கல குரலில் ஹை பிச்சில் ஏதாவது கத்திக் கொண்டிருப்பார்.
எல்லாரும் அவர்
வாய்க்கு அடங்கி போய்விடுவார்கள். ஆனால் முதன்முறையாக அவர் குரலுக்கு எதிர் குரல்
ராசய்யாவிடம் வந்திருக்க, அதில் கடுப்பானவர் அவனை வெட்டி விட முயன்றார்.
“நீ யாரு
தம்பி...எங்க குடும்ப விஷயத்துல நீ தலையிடாத...” என்று அவனை வெட்டி விட முயல, அவனோ அதற்கெல்லாம் அசராமல்
“யார் வேணாலும் நியாயத்தை
சொல்லலாம் பெரியமா... நான் தணிகாசலம் மாமாவுக்கு தங்கச்சி பையன். உறவுமுறையிலும் நியாயத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கு.
இனிமேல் ஏதாவது
நொட்டம் சொன்னிங்க, இப்ப நான் சொன்னனே அதை எல்லாம் செட்டில்
பண்ணிட்டு அப்புறம் நொட்டம் சொல்லுங்க.
கல்யாண முடிகிற
வரைக்கும் எதுவும் பேசக்கூடாது...” என்று முறைத்து அடக்கி வைக்க, அதன்பிறகுதான் அமைதியானார் அந்த மாமியார்.
ஆனால் இப்பொழுது
மண்டத்திற்கு வந்தும் ஒவ்வொன்றிலும் குறை கண்டு கொண்டிருக்க, அவரை ராசய்யாதான் சமாளித்துக் கொண்டிருந்தான்.
*****
“வாவ்... சூப்பரா இருக்கார் டி.. நீ சொன்ன மாதிரி
அப்படியே ஹீரோ மாதிரி தான் இருக்கார்...என்ன
தில்லு...என்ன கட்ஸ்...” என்று மீனா ராசய்யாவை ரசித்து பார்த்து கொண்டிருக்க, அவள் தலையில் பட்டென்று தட்டினாள்
சங்கீதா.
“ஹோய்... அவர்
என் ஆள் டி. உனக்கு அண்ணா முறையாக்கும் ....” என்று முறைக்க,
அதில் கடுப்பான
மினா சங்கீதாவை முறைத்தவள்
“ஹோய்... அது
எப்படி எனக்கு அண்ணன் ஆவார் டி...” என்று சண்டைக்கு வந்தாள்.
“ஹ்ம்ம்ம்... அவர்
என் ஆளு டி..அப்ப உனக்கு அண்ணன்தான் ஆவார்...” என்று சங்கீதா மீனாவை முறைக்க,
“ஐயோ..ஐயோ...லூசு
சங்கி... நம்ம வழக்கம் தெரியாம இருக்கறியே செல்லம். பேசிக்கா நீயும் நானும் ஒரே
குலம் டி. பங்காளி வீடு. ஐமீன் நாம ரெண்டு
பேரும் சிஸ்டர்ஸ்.
அப்படீனா எனக்கு
அவர் அண்ணன் னா, உனக்கும் அண்ணன் தான் டி..மக்கு...”
என்று தன் தோழியின் நெற்றியில் கையால் இடித்தாள் மீனா.
அதைக்கேட்டு
அதிர்ந்து போனாள் சங்கீதா...
“ஓஹோ. இப்படி
ஒன்னு இருக்கா? உன்னை யார்டி எனக்கு பங்காளியா
வரச்சொன்னது? “ என்று முறைக்க,
“அதையேதான் நானும் கேட்கிறேன். உன்னை யார்
எனக்கு சிஸ்டரா வரச்சொன்னது? “ என்று இருவரும் குடுமி பிடி சண்டை போட்டுக்கொள்ளாத குறையாக சிலிர்த்துக் கொண்டு நின்றனர்.
பின் சற்று நேரத்தில்
இருவரும் தானாகவே சமாதானம் அடைந்தவர்கள்
“சரி.... சரி...
போனா போகுது.... அவர் உனக்கு அண்ணன் இல்லைதான்.. ஆனாலும் உனக்கு அக்கா வீட்டுக்காரர்...
மாமா வா நினைச்சுக்க...” என்று கெஞ்சலுடன்
பார்த்தாள் சங்கீதா...
“ஹா ஹா ஹா...
பாருடா...உனக்கு காரியம் ஆகனும்ன உடனே நீ அக்காவானாலும் பரவாயில்லைனு உன்னை அக்கா
னு சொல்லிட்ட... ஹ்ம்ம்ம் போனா போகுது...
அதுக்காகவாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...
உன் ஆளை நீயே சைட்
அடிச்சுக்க... நான் வேற ஏதும் நல்ல பீஸ் ஆ தேறுதானு தேடிப் பார்க்கறேன்...” என்று
நெற்றியில் கையை வைத்து அந்த மண்டபத்தில் தேடுவதை போல பாவணை செய்தாள் மீனா.
“ஹ்ம்ம்ம் தேடு...தேடு...என் ஆளு
மாதிரியெல்லாம் வேற யாரும் கிடைக்கவே
மாட்டான்...என் ஆளு ஹீரோ டி...” என்று ராசய்யாவை மீண்டும் ஆர்வமாக பார்த்து
வைத்தாள் சங்கீதா.
அதுவரை அவர்கள்
வழக்கடித்து கொண்டிருந்ததை கண்டு கொள்ளாமல் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்த பூங்கொடி, சங்கீதா , ராசய்யாவை ஆர்வத்த்டன் பார்ப்பதைக் கண்டு கடுப்பானாள்.
தன் தோழிகள் இருவர் தலையிலும் பட்டென்று ஓங்கி தட்டியவள்
“ஏன்டி...உங்க ரெண்டு
பேரோட டேஸ்ட்ம் இவ்வளவு மட்டமா இருக்கு. நான்
அன்னைக்கே சொன்னேன்... இவனெல்லாம் போய் ஹீரோவானு... இந்த சங்கிதான் நட்டு கழன்டு போய்
ஏதோ உளறிகிட்டு இருக்கானா, உனக்கு கூடவா அறிவு இல்ல மீனு...” என்று மீனாவை முறைத்தாள் பூங்கொடி.
அதைக்கேட்டு தோழிகள்
இருவருக்கும் சுர்ரென்று கோபம் வந்தது. அது எப்படி தங்களை பார்த்து மட்டமான டேஸ்ட் னு இவ சொல்லலாம் என்று பொங்கி எழுந்தவர்கள்
“ஹலோ மேடம்...எங்க
டேஸ்ட் மட்டமாகவே இருக்கட்டும். இந்த மகாராணியார் டேஸ்ட் எப்படியோ? உன் ஆளு நீ எதிர்பார்த்த மாதிரி அரவிந்தசாமி
மாதிரி இருக்காரோ?
நாங்களும்
வந்ததிலிருந்து பார்த்துகிட்டே இருக்கோம். உன் ஆளை கண்ணுலயே காட்ட மாட்டேங்கற...
ஆமா... உன் அவருக்கு
உன் மேல பயங்கர லவ்ஸ் போல. கட்டினா உன்னைத்
தான் கட்டுவேன் னு ஒத்தக்கால்ல நின்னு இந்த
கல்யாணத்தை நடத்தறாராமே...
அதுவும் ஒரே வாரத்துல மலையவே புரட்டற மாதிரி இந்த திருமண
ஏற்பாட்டை ஜெட் வேகத்துல செய்து அசத்தி விட்டாராமே..!
மண்டபம் முழுவதும்
இதைப்பற்றிதான் பேச்சா இருக்கு... சொல்லுடி
...! எப்படி உன் ஆள்? எப்ப எங்க எப்படி சந்திச்சார் உன்னை? எப்படி உன்னிடம் மயங்கி காதல் வலையில் விழுந்தார்?... கண்டிப்பா செம இன்ட்ரெஸ்டிங் ஆதான் இருக்கும் உன் லவ் ஸ்டோரி...சொல்லு..சொல்லு...
“
என்று பூங்கொடியின்
கழுத்தை சுற்றி கை போட்டு, மற்றொரு கையை இடுப்பில் ஊன்றியும், சாய்வாக சாய்ந்து நின்று தன் காலை குறுக்காக
வைத்துக் கொண்டு கேள்வியும், ஆர்வமும் கலந்ததாய் பூங்கொடியை கேலி செய்தாள் சங்கீதா.
அதைக் கேட்டதும்
பூங்கொடியின் முகம் இருண்டு போனது.
“ம்ம்கும்.... காதலாம்...
மண்ணாங்கட்டியாம்...அவன் எதற்காக இந்த
திருமணத்தை அவசர படுத்துகிறான் என்று எனக்குத்தானே தெரியும்..” என்று உள்ளுக்குள் நொடித்தவள், மற்றொரு மனமோ, உணர்ச்சிவசப்படாமல் அறிவுடன் கேள்வி கேட்டது.
“ஒருவேளை இந்த சங்கி
சொல்வதைப்போல என் மேல அவனுக்கு காதலாகி இருக்குமா? காதல் கதைகளில் வருவது போல, என்னை மணந்து கொள்ள இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்தானோ?
ஆனால் இத்தனை
நாள் இல்லாமல் திடீர்னு எங்கிருந்து வந்தான்? அப்படியே காதலில் கசிந்துருகி இருந்தாலும் அதை நேரடியாக என்னிடம் சொல்ல வேண்டியதுதான? “
என்று தனக்குள்ளே
யோசித்துக் கொண்டிருக்க அதற்குள் மீனாவும் அவள் அருகில் வந்தவள், பூங்கொடியின் மறுபக்கம் தோள்மீது கையை வைத்து
ஒய்யாரமாக நின்று கொண்டு பூங்கொடியை நோண்டினாள்.
“சொல்லுடி... சங்கி
கேட்கற மாதிரி உன் ஆளு எப்படி? நீ எதிர்பார்த்த மாதிரியே எம்.ஜி.ஆர் கலர்ல
இருக்காரா? ஆளு கருப்பா? சிவப்பா? நெட்டையா? குட்டையா? குண்டா? ஒல்லியா? “ என்று அடுக்கிக் கொண்டே போக, அதில் இன்னுமாய் கடுப்பானவள்
“ம்க்கும்... யாருக்குத்
தெரியும்? “ என்று விட்டேத்தியாக கசப்புடன் புன்னகைத்தாள் பெண்.
அதைக்கேட்டு
மற்ற இரு தோழிகளும் அதிர்ச்சியடைந்தார்கள்.
“என்னடி சொல்ற?” என்று இருவரும் அதிர்ச்சியோடு கேட்க,
“ஆமான்...டி.. நீங்க கேட்ட மாதிரி அந்த ஆள் கருப்பா? சிவப்பா? நெட்டையா? குட்டையா? குண்டா? ஒல்லியா னு எனக்கு தெரியாது...” என்றாள் எங்கோ வெறித்து பார்த்தபடி.
“ஏன்? “ என்று மீண்டும் அதிர்ச்சியோடு இருவரும்
கோரஸாக கேட்டு வைக்க
“ஏன்னா? நான்
அந்த ஆளை பார்த்ததில்லை...” என்றாள் இன்னும் முகம் இறுகிப்போய்.
அதைக் கேட்டு இரு
பெண்களுக்கும் தூக்கிவாரிப் போட, அதிர்ந்து போய்
“என்னடி சொல்ற? அப்ப
நீ மாப்பிள்ளையை பார்க்கவே இல்லையா? “ என்றனர் அதிர்ச்சியுடன்.
பூங்கொடியும் ஆமாம்
என்று தலையை அசைக்க, அதில் இன்னும் அதிர்ந்தவர்கள்
“வாட்? உனக்கு
கணவனாக வரப்போகிறவன் முகத்தை கூட பார்க்காமல் கல்யாணம் பண்ணிக்க போறியா? இது என்னடி கூத்தா இருக்கு. அந்த காலத்தில்
கூட மாப்பிள்ளை போட்டோவையாவது காட்டி பிடிச்சிருக்குனு சொன்னதக்கபுறம்தான் கல்யாணம்
பண்ணுவாங்க.
இந்த காலத்தில
கூட இப்படி முட்டாளா இருக்க? அதெப்படி மாப்பிள்ளையை பார்க்காமலயே நீ சம்மதம் சொல்லலாம்?
ஒருவேளை இந்த
கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா? உன்னை கேட்டுத் தானே இந்த கல்யாணத்தை
ஏற்பாடு செய்தார் உன் அப்பா? “ என்று மீண்டும் யோசனையுடன் கேட்க, பூங்கொடியின் இதழ்களிலோ கசப்பாய் தவழ்ந்தது வெற்று
புன்னகை ஒன்று.
“சம்மதம்
கேட்பதா? அதுவும் என்னிடம்...கல்யாண பெண்ணிடம் சம்மதம் கேட்பதா?
ப்ச்... என்னதான்
காலம் மாறினாலும், நாகரீகம்
வளர்ந்து வந்தாலும், பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிட்டது என்று மார் தட்டிக் கொண்டாலும் இன்னும்
பெண்களுக்கு முழுவதுமாக சம உரிமை கிடைத்துவிடவில்லை என்பதுதான் உண்மை.
“இந்த பொண்ணை எனக்கு
பிடித்திருக்கிறது. இவளைத்தான் கட்டிக்குவேன் என்று தலைநிமிர்ந்து தைரியமாக சொல்லும்
ஆண்களைப் போல... எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை...எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று
சபை நடுவில் உரக்க சொல்லும் உரிமை இன்னுமே
பெண்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அப்படியே
தைரியம் வந்து தன் மனதை வெளிப்படுத்தினால், அதையெல்லாம் யார் காதில் போட்டுக் கொள்கிறார்களாம்...
நீ சின்ன பெண்..
உலகம் தெரியாதவள்... பெத்தவங்க நாங்க உனக்கு நல்லது தான்
செய்வோம்... நாங்களே உன்னை புதை குழியில் தள்ளுவோமா? “ என்று ஏதேதோ சொல்லி அவளின் வாயை அடைத்து
விடுகின்றனர்.
அதற்குமேல் அந்த
பெண்ணும் பெற்றவர்களுக்கு கட்டுபட்டு தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வாழ்க்கையை
இயந்திரதனமாக வாழ்ந்து மடிகிறாள்.
அந்த வரிசையில் பூங்கொடி
மட்டும் விதிவிலக்கா என்ன? அவளும்தான்
இந்த திருமணம் வேண்டாம் என்று போராடிவிட்டாள்.. ஆனால்
அவள் போராட்டம் இங்கே எடுபடவில்லை... “ என்று தனக்குள்ளே வேதனை கொண்டவள், நக்கலாக வெறுமையுடன் புன்னகைத்தாள்.
அதே நேரம் அவள் மனம் இந்த திருமணப் பேச்சை ஆரம்பித்த புள்ளிக்கு சென்றது.
Comments
Post a Comment