என்னுயிர் கருவாச்சி-24

 


அத்தியாயம்-24

ரு வாரம் முன்பு ஒருநாள் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தார் தணிகாசலம்.  

எல்லாரும் முன்பே சாப்பிட்டு படுத்து விட, பூங்கொடிதான்  அவள் தந்தைக்கு இரவு உணவை பரிமாறினாள்.  

அவர் முகம் வாடிக் கிடந்தது. அதோடு அவர் முகத்திலும் ஏதோ யோசனையாய் இருப்பதை கண்டவள், உணவை பரிமாறிவிட்டு அவரை ஆழ்ந்து பார்க்க,  அவரோ தட்டில் இருந்த சாப்பாட்டை உண்ணாமல்,  விரல்களால் அலைந்து கொண்டிருந்தார்.  

அவர் மனம் ஏதோ சிந்தனையில் இருந்தது புரிந்தது. அதைக்கண்டு யோசனையான பூங்கொடி தன் தந்தையை விசாரித்தாள்.  

“என்னப்பா?  என்ன ஆச்சு?  ஏன்  ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க? “ என்று அக்கறையுடன் விசாரிக்க, அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவர்

“ஒன்னும் இல்லை பாப்பா...”  என்றார் தயக்கத்துடன்.  

“ப்பா...நீங்க ஒன்னும் இல்லை னு சொல்றதிலயே ஏதோ விஷயம் இருக்குனு தெரியுது...

உங்க முகம் ஏதோ நீங்க யோசனையாய் இருப்பதாக காட்டுகிறது. ஏதாவது பிரச்சினையா?  சொல்லுங்கப்பா...” என்று கரிசனத்துடன் வினவ, அவளின் குரலில் இருந்த அக்கறை அவரை இன்னுமாய் வதைத்தது.  

“அவர் பெற்ற பிள்ளைகள் நால்வரில் பூங்கொடி மட்டும்தான் தன் மனதை படிக்கத் தெரிந்தவள்... தன்  உள்ளுக்குள் இருக்கும் வேதனையை கண்டு கொண்டாளே பெண்...” என்று தனக்குள்ளே  பூரித்தவர், அடுத்த நொடி மனம் வெந்தது.  

“இப்படிப்பட்ட புள்ளைக்கு நான் எப்படி அப்படி ஒரு பாவத்தை செய்வது? இது அவளை பாழும் கிணத்துக்குள் தள்ளுவதற்கு சமம் இல்லையா? நானே இதை செய்யலாமா? “ என்று மீண்டும் வேதனையுடன் தலையை குனிந்து கொண்டார் பெரியவர்

அவரையும் மீறி கண்ணோரம் கரித்துக்கொண்டு வந்தது.

ஆனாலும் ஆண்மகன் அழக்கூடாது என்று சொல்லி வளர்ந்தவர், முயன்று தன்  கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு வெள்ளந்தியாய் புன்னகைக்க முயன்றார்.

தன் தந்தை உள்ளுக்குள் எதையோ போட்டு பூட்டி வைத்துக்கொண்டு மருகுகிறார் என்று கண்டு கொண்டவள், தன் முழங்காலை மடக்கி பக்கவாட்டி வைத்தவாறு அவர்  அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டவள், அவரின்  கண்ணிமைகளை நீவி விட்டாள்.

பின் அவரின் இடது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து  அழுத்திக் கொடுத்தவாறு  

“ஹ்ம்ம்ம் சொல்லுங்கப்பா...  என்ன பிரச்சனை?  இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. உங்க மனம் இந்த அளவுக்கு துவண்டு போகும் அளவுக்கு  அப்படி என்ன பிரச்சனை?

எது  உங்க மனதை போட்டு வாட்டுகிறது..? தயங்காம என்னிடம் சொல்லுங்க...” என்று  தனக்கு வரப்போகும் ஆப்பை அறியாமல் தன் தந்தையை துருவினாள் பெண்.

அது ஒன்னும் இல்ல பாப்பா...” என்று தந்தை ஆரம்பிக்க,

“ப்பா... உங்க முகம் அகத்தை காட்டும் கண்ணாடி போல. உங்க முகமே சொல்லுது உங்களுக்கு ஏதோ பிரச்சனை. அதை எண்ணி நீங்க கலங்கி போயிருக்கிங்க என்று.

அதனால் என்னிடம் எதுவும் மறைக்காமல் உண்மையை சொல்லுங்க. என்ன பிரச்சனை.? “ என்று முறைத்தபடி கேட்க,  மீண்டும் தயங்கினார் தணிகாசலம்.

பூங்கொடியும் விட்டுவிடாமல் மீண்டும் அவரை வற்புறுத்தி விசாரிக்க, அதன்பின் தான் தன் வேதனைக்கான காரணத்தை சொன்னார் தணிகாசலம்.  

விஷயம் இதுதான்.  

பொற்கொடியின் திருமணத்திற்கு அவர் திட்டமிட்டதை போல இல்லாமல் பல மடங்கு செலவு இழுத்துவிட, அதை சமாளிக்க வெளியில் கடன் வாங்க வேண்டியதாக இருந்தது

ஊரில், தெரிந்தவர்கள் யாரிடமும் அவ்வளவு பணம் இல்லாததால்,  பக்கத்து ஊரை சேர்ந்த கந்துவட்டி ராஜேந்திரன் இடம் கடன் வாங்கியிருந்தார் தணிகாசலம்.

அந்த பணத்தை வைத்து கல்யாணத்தை நடத்தி முடித்துவிட்டார் தான்.

எப்படியாவது விவசாயத்தில் வரும் லாபத்தில் மிச்சம் பண்ணி கடனை அடைத்துவிடலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் உழவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது என்பதற்கினங்க, விவசாயத்தில் முதலீடு செய்து , கடினமாக உழைத்தபோதும் பெரிதாக எதுவும் மீந்து விடவில்லை.

அதை வைத்து   வைத்து மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு, துணி மணி செலவு, மற்றும் இதர செலவுகள் என பட்டியலிட்டு நின்றன.

அது மட்டும் அல்லாமல்,  மூத்த மகளுக்கு திருமணம் முடிந்ததும் கடமை முடிந்தது என்று கையை கழுவ முடியாமல் அடுத்து  தலையாடி, தலை தீபாவளி, தலைப்பொங்கல், அப்புறம் பிள்ளைபேறு என்று வரிசை கட்டி நின்றது அவரது செலவு.

அதனால் விவசாயத்தில் வந்த சொற்ப லாபமும் குடும்பத்தினருக்கே இழுபறியாக இழுத்துக்கொண்டு போன நிலையில், அவர் வாங்கிய கடனுக்கு வட்டியை கூட கட்ட முடியவில்லை அவரால்.

இது போதாதென்று, சென்ற வருடம் பயிரிட்டிருந்த வாழை அப்பொழுதுதான் ஈன்று இருந்தது. அதை அடைத்து கொஞ்சம் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி இருந்தபொழுது அதிலும் மண் விழுந்தது.

அந்த வருடம் அடித்த சூறாவளி காற்று வாழைத்தோட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தோட்டத்திலும் புகுந்து தன் கோர தாண்டவத்தை ஆடிச்சென்றிருக்க, அதன் விளைவாய் ஒரு  ஏக்கர் வாழைகளுமே  ஒடிந்து போய்விட்டன.  

பத்து மாதமாக பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளையை போன்ற வாழைகள்,  ஒரே நாளில் மடிந்து போய்விட, அதற்கு போட்ட முட்டுவலியைக்கூட திரும்ப எடுக்க முடியவில்லை. 

அதோடு  அவரின் பத்துமாத உழைப்பும் வீணாய்ப்  போனது

வயலை  சீர்படுத்தி, மீண்டும்  விவசாயத்தை ஆரம்பிக்க  வேண்டும் என்றால் அதற்கு மீண்டும் பணம் வேண்டும். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியே கட்டமுடியாமல் தவித்து வருபவர் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்தார்.

விவசாயம் செய்யாமலும் வயலை சும்மா போட்டு வைக்க முடியாது. அதோடு அவருக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம் மட்டும்தான். இதை உதறிவிட்டு வேற என்ன வேலை செய்வது என்றும் பிடிபடவில்லை.

கையை பிசைந்து கொண்டு இருந்தவர் பின் வேற வழியில்லாமல் மீண்டும் கந்துவட்டி ராஜேந்திரனிடமே சென்று நின்றார்.

அவனும் இல்லை என்று சொல்லாமல் அவர்  கேட்கும் பொழுதெல்லாம் பணத்தை வாரிக் கொடுத்தான்.  

தணிகாசலம் தன் மனைவியிடம் கூட இதை சொல்லவில்லை. கிட்டதட்ட மூன்று வருடங்களாயிற்று.  

எப்படியாவது இந்த  போகம் வாழை அடைத்து வட்டிக்காசையாவது  கொடுத்து விடலாம் என்று எண்ணி இருக்க,  அதற்குள் ராஜேந்திரனே அவரை  தேடி வந்து விட்டான்.  

*****

ந்தவன் சும்மா வரவில்லை. அவன் கொடுத்த பணத்தை இப்பவே திருப்ப வேண்டும். அதுவும்  வட்டியும் முதலுமாக இப்பவே திருப்ப  வேண்டும் என்று கிடுக்கி பிடி போட்டான்  ராஜேந்திரன்.

அதைக்கேட்டு அதிர்ந்து போனார் தணிகாசலம்.

அதோடு பெரிய அதிர்ச்சி... அவர் காசு கேட்கும் பொழுதெல்லாம் அவன்  காசை வாரிவாரி இறைத்ததற்கான காரணம் இப்பொழுது தெரிந்தது.

பணத்தை திருப்ப சொல்லி கேட்ட ராஜேந்திரன் இடம் இப்பொழுது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை...இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொண்டால்  பணத்தை திருப்பி கொடுத்துவிடுவேன்... என்று மன்றாட,  அவனோ அவர் கெஞ்சலை எல்லாம் சட்டை செய்யவில்லை.  

“ஹீ ஹீ ஹீ பணம் இல்லைன்னா என்ன மாமா...  அதுதான் லட்டு மாதிரி பொண்ண பெத்து வச்சிருக்கீங்களே...அவளை...”  என்று சொல்லி முடிக்கும் முன்னே

“டேய்....” என்று கத்தியவாறு பாய்ந்து சென்று ராஜேந்திரன் சட்டை காலரை பிடித்து இருந்தார்  தணிகாசலம்.  

அவனுக்கோ இதெல்லாம் பழகிவிட்ட ஒன்றை போல,  வெகு அசால்ட்டாக அவர்  கையை தட்டி விட்டவன்,   

“மாமா...இதுதான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு  சொல்றது... நான் இன்னும் சொல்லி முடிக்கவே இல்லை. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.  உங்க பொண்ணை ஒன்னும் வச்சிக்கிறேன் னு  சொல்லல.  பொண்டாட்டியா கட்டிக்கிறேன்னு தான் சொல்றேன்..”  என்று இளித்தான் ராஜேந்திரன்.  

அதைக்கேட்டு தணிகாசலத்திற்கு கோபம் பொங்கி வந்தது

அவனைப்பற்றி அவருக்கு  நல்லாவே தெரியும்.  அவனுடைய நடத்தை சரியில்லை.  பார்க்கும்  பெண்களை எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் சபலபுத்திக்காரன்.

சுத்தி இருக்கும் எட்டு பட்டி ஊர்லயும் அவன் கை வைக்காத பெண்கள் யாரும் இல்லை என்ற அளவுக்கு ஒழுக்கத்தில் உத்தமமானவன்  

அப்படிப்பட்ட ஒரு அயோக்கியனுக்கு தன் பெண்ணை கொடுப்பதா என்று கோபம் பொங்கி வந்தது.

“சீ  வாயை மூடு ராஜேந்திரா... உன் அயோக்கிய குணத்துக்கு என் பொண்ணு கேக்குதா? “  என்று முறைத்தார் தணிகாசலம்.

“எனக்கு என்ன குறைச்சல் மாமா?  பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து பத்து கிடக்கு. அதோட கந்து வட்டி மூலம் மாசா மாசாம் சொளையா வருமானமும் வருது.

உங்க பொண்ணை  ராணி மாதிரி வச்சு பார்த்துக்குவேன்...” என்று முடிக்கும் முன்னே, மீண்டும் பொங்கினார்.

“யாருக்கு வேணும் உன் காசு பணம்? ஒழுக்கம் இல்லாதவனை  ஒருநாளும் மாப்பிள்ளையாக ஏத்துக்க முடியாது...”  என்று மீசை துடிக்க  அவனைப் பார்த்து முறைத்தார் பெரியவர்.  

“அப்படியா...?  அப்ப  அந்த ஒழுக்கத்தை வச்சு உங்க பெரிய பொண்ணு கல்யாணத்தை  முடிக்க வேண்டியதுதானே...அதே ஒழுக்கத்தை பிடித்துக் கொண்டு, விவசாயத்தையும் தூக்கி நிறுத்த வேண்டியதுதான...  

அதுக்கெல்லாம் ஒழுக்கமில்லாத இந்த ராஜேந்திரன் வேணும்...அவன்  காசு, பணம் வேணும்...ஆனால்  உங்க  பொண்ணை கட்டிக் கொடுக்க மட்டும்  இந்த ராஜேந்திரன் ஒழுக்கம் இல்லாதவன் ஆயிடுவான்...என்னங்க மாமா நியாயம் இது...”

என்று அவர்   பிடித்து இருந்ததால், கசங்கி இருந்த சட்டையை நீவிக் கொடுத்தவாறு தணிகாசலத்தை பார்த்து நக்கலாக சிரித்தான்.

 

இவன் சொல்வது ஒரு விதத்தில் உண்மைதான்.  அன்று மட்டும் ராஜேந்திரன் இல்லையென்றால், அவரின் மூத்த மகள்  கல்யாணம் நின்று போயிருக்கும்.

இவர் பணம் கேட்ட இடத்தில் எல்லாம் இல்லையென்று கையை விரித்துவிட, அப்பொழுது இரவோடு இரவாக சென்று,  காசுக்காக கை நீட்டி இவனிடம் தானே நின்றார்.

இன்னைக்கு பொற்கொடி சந்தோசமாக  வாழ்கிறாள், என்றால் இவன், இந்த ஒழுக்கமில்லாதவன் கொடுத்த பணம் தானே காரணம்.  

அதே போலத்தான் அவரின்  விவசாயமும் படுத்துக்கிட்ட பொழுது கூட, அதை தூக்கி நிமிர்த்த,  அவரிடம் பணம் இல்லை.  

அப்பொழுது சிலம்பாயின்  கைக்கு காதுக்கு என்று கொஞ்சமாக போட்டிருந்த  நகைகளைக் கூட விவசாயக் கடனில், அடமானத்திற்கு வைத்தாகி விட்டது.

எந்த நகையும் இல்லாமல்தான் சிலம்பாயி இப்பொழுதும் உலா வந்து கொண்டிருந்தார்.  அப்பொழுதும் பணத்துக்காக இவனிடம் தானே கையேந்தி நின்றேன்...” என்று தனக்குள்ளே யோசித்துக்கொண்டிருந்தார்.  

அவர் யோசித்துக் கொண்டிருப்பதை கண்ட ராஜேந்திரன்,  

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடல மாமா.  உங்க பொண்ணை நான்  கட்டிக்கத் தான் கேட்கிறேன். என்னைத் தட்டிக்கேட்க வீட்ல ஒரு ஆள் இல்லாததால் எப்படி எப்படியோ இருந்திட்டேன்.  

எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா,  நான் ஏன் அடுத்த வீட்டுக்கு போகப்போறேன்.  அதனால யோசிக்காமல் உங்க பொண்ணை கொடுங்க...நீங்க வாங்கின பணம் எதுவும் திருப்பித் தர வேண்டாம்.  

உங்க பத்திரத்தை உங்க  கையில் கொடுத்து விடுவேன்...“  என்று ஆசை வார்த்தை காட்ட,  முன்பிருந்த கோபம் தணிந்து இப்பொழுது  யோசனையானார் தணிகாசலம்.

அவரின் சிந்தனையே அவர் இறங்கி வருகிறார் எனக்காட்ட,  மனதுக்குள் துள்ளி  குதித்தான்  ராஜேந்திரன்.

சற்று நேரம் ஏதோ யோசித்தவர், பின் ராஜேந்திரனை பார்த்து

“அதில்ல ராஜேந்திரன்... வந்து... பொண்ணு படிச்சிகிட்டு இருக்கு... “ என்று இழுக்க  

“அதுக்கென்ன மாமா...கல்யாணத்துக்கு பொறவு அவ ஆசைப்பட்ட படிப்பை படிக்கட்டும். அதுக்கு மேல படிக்க விரும்பினாலும் படிக்க வைப்பது என் பொறுப்பு...”   என்று சமாதானம் செய்தான்.

அவனின் பதிலைக்கேட்டு கொஞ்சம் திருப்தி அடைந்தாலும்   மீண்டும் ராஜேந்திரனின் ஒழுக்கமற்ற வாழ்க்கை அவரை யோசிக்க வைத்தது.

இவனை மாதிரி எத்தனையோ பேர்  எந்தப் பொறுப்பும் இல்லாமல்  சுத்திகிட்டு இருந்தவர்கள்...தனக்கென்று ஒருத்தி வந்தபிறகு, கெட்ட பழக்கத்தை எல்லாம் விடுத்து, திருந்தி நல்ல மனிதனாய் வாழ்ந்ததை, வாழ்வதை  நேரிலும் பார்த்து இருக்கிறார்

ஒருவேளை அவர்களைப்போல  இவனும் நல்லவனாகி விடுவானோ?  இவன் மட்டும் நல்லவன் ஆகி விட்டால், அதற்கு பிறகு  இவனிடம் எந்த குறையும் இருக்காது.

சொத்துபத்து ஏகப்பட்டது கிடக்கு. மூத்தவளை போல மாமியார் தொல்லையும் இல்லை. தன் வீட்டில் இருந்து கஷ்டப்படுவதை போல, போற இடத்தில் இளைய மகள் கஷ்டப்பட தேவையில்லை.

எப்படியும் அவளுக்கும் திருமணம் என்ற ஒன்றை பண்ணியாக வேண்டும். கண்டிப்பாக, இந்த முறை அவரின் வசதிக்கு ஏற்பதான் மாப்பிள்ளை பார்த்தாக வேண்டும்.

அப்படி பார்த்தால், அவர் செய்யும் சீர் செனத்திக்கு  கவர்மென்ட் உத்தியோகத்தில் இருக்கிற மாப்பிள்ளை கட்டாயம் கிடைக்க மாட்டான்.

இந்த ஊரை சுத்தி இருக்கும் ஏதோ ஒரு குக்கிராமத்தில் குப்பனுக்கோ, சுப்பனுக்கோ வாழ்க்கைபட்டு, சேத்தில்தான் காலை வைத்தாக வேண்டும்.

அவளுக்கு உடம்பு அசந்து வேலை செய்வது கஷ்டம்... என்று தனக்குள்ளே சிந்தனையானார்.

அதே நேரம் அன்று ஒரு நாள், பூங்கொடி  வயலில் வாழை மரத்துக்கு உரம் வைக்கிற பொழுது,  அவளின் கையில் காப்பு காச்சு போனது இப்பொழுது அவர் மனக்கண்ணில் வந்து போனது.

“அந்த மாதிரி என் பொண்ணு ஏன் கஷ்டப் படவேண்டும்? .  அவளாவது நல்லா இருக்கட்டுமே...”  என்று மீண்டுமாய் ஆழ்ந்து யோசித்தார் தணிகாசலம்.

ஆரம்பத்தில் தன்னிடம் எகிறியவர்  இப்பொழுது யோசிப்பது கண்டு மீண்டும் குதூகலித்தான் ராஜேந்திரன்.  

“ரொம்பவும் யோசிக்காதிங்க மாமா...  சீர் செனத்தி எதுவும் செய்ய வேண்டாம் திருமண செலவு முழுக்க முழுக்க என்னோடது.  முசிறியில் இருக்கும் பெரிய  மண்டபத்துல ஜாம் ஜாம் னு கல்யாணத்தை  நடத்திடறேன்

நீங்க பொண்ணை கூட்டிகிட்டு மண்டபத்துல வந்து இறங்கினா போதும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவளை ராணி மாதிரி பார்த்துக்குவேன்... உங்க கடைசி பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைப்பது என் பொறுப்பு.

நீங்களும் இனிமேலும் இந்த வயக்காட்டுல விழுந்து கிடக்க வேண்டாம்... என் வீட்டோட வந்திடுங்க... என் பங்களா, நடமாட ஆள் இல்லாம வெறுச்சோடிதான் கிடக்குது...

அதனால் தாராளமா உங்க குடும்பம் வந்து அங்கயே தங்கிக்கலாம்...” என்று இன்னுமாய் ஆசை வார்த்தை காட்ட,  தணிகாசலம் அதற்கெல்லாம் மசியவில்லை.  

“என் பிள்ளைகளை வளர்ப்பது என் கடமை மாப்ள...அதை யார் தலையிலும் கட்ட முடியாது. அதே போல என் உடம்புல கடைசி சொட்டு உயிர் இருக்கும் வரை என் கால் சேத்துல தான் நிக்கும்.

லாபமோ, நட்டமோ கட்டின பொண்டாட்டி, புள்ளையை மாதிரி என் நிலமும் என் உயிரோடு கலந்தது.

அதை யாருக்கும்  எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாது. எனக்கு வேண்டியது எல்லாம் என் சின்ன பாப்பா நல்லா ,சந்தோஷமா இருக்கணும். நீங்க அவளை கண்கலங்காம சந்தோஷமா வச்சுக்கிட்டாலே போதும்...” என்று தழுதழுத்தார் தணிகாசலம்.

அவரின் பேச்சில் இருந்து அவர் தனக்கு பச்சை கொடி காட்டிவிட்டார்... அதுவும் தன்னை மாப்பிள்ளை என்று அழைத்துவிட்டார்  என்று கண்டு கொண்டவன் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.

சில்லென்று பனிமழை பொழிந்தது. மழை பெய்யாமலயே மழையில் நனைந்தான்.

அடுத்த கணம் அவரின் கையை பற்றிக்கொண்டு

“ரொம்ப நன்றி மாமா...கண்டிப்பா உங்க பொண்ணை நல்லா பார்த்துக்குவேன்... அப்படினா அடுத்த வாரத்திலேயே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு. அதிலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.

ஏனா ஆனி மாசம் முடிய இன்னும் பத்து நாள்தான்  இருக்கு...ஆனிக்கு பொறவு  ஆடி மாசம் வருது உங்களுக்கே தெரியும்.  

ஆடி மாசத்தில யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.  உங்க பொண்ணை பார்த்ததிலிருந்தே தலைசுத்தி போய் கிடக்கேன்... இன்னும் ஒரு மாசம் எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. அதனால்  இப்பவே கல்யாணத்தை வச்சுக்கலாம்...” என்று  பரபரத்தான் ராஜேந்திரன்.  

அதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனார் தணிகாசலம்.

“என்னப்பா  சொல்ற?  ஒரு வாரத்துல கல்யாணம்னா  எப்படி முடியும்? “ என்றார் யோசனையோடு.  

“ஏன் மாமா முடியாது? என் கிட்ட இல்லாத ஆட்களா? அதெல்லாம் தாராளமா நடத்திடலாம்...” என்று இளித்தான்.

விட்டால் நாளைக்கே தாலி கட்டி அவளை பொண்டாட்டி ஆக்கிக்கும் வேகம் அவன் முகத்திலும், பேச்சிலும் தெரிந்தது.

ஆனாலும் ஏனோ தணிகாசலத்தின் மனதில் நெருடலாகவே இருந்தது.

“வந்து...என்னால உடனே எந்த முடிவையும் சொல்ல முடியாது. வீட்ல கலந்துக்கணும்.  என் புள்ளை கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கணும்...” என்று இழுக்க ,

“பூங்கொடி  உலகம் தெரியாத பொண்ணு.  அதுக்கென்ன முடிவு எடுக்க தெரியும் மாமா? வேணா அத்தைகிட்ட பேசிட்டு  சொல்லுங்க. கூடவே  உங்க நிலவரத்தையும் எடுத்து சொல்லுங்க

அத்தையே  இது   சரிதான்னு சொல்லுவாங்க. நம்ம புள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது இன்று பூரித்து போவாங்க...” என்று அடித்துச் சொல்ல,  அவரும் யோசனையுடனே திரும்பி வந்தார்  

அவர் கிளம்பும் முன் மீண்டும் ஒன்றை திரும்பத் திரும்ப சொன்னான் ராஜேந்திரன்.  

“மாமா... நான் நல்லவனுக்கு நல்லவன்... கெட்டவனுக்கு பலமடங்கு கெட்டவன்.  எப்படியோ உங்க பொண்ணு மேல எனக்கு காதல் வந்துடுச்சு.  

அதனால தான் இத்தனை தூரம் தன்மையா பேசிக்கிட்டு இருக்கேன். உங்க கிட்ட  இருந்து சம்மதம் னு ஒரு வார்த்தை மட்டும்தான் வரணும்.

ஒருவேளை வேற ஏதாவது மாத்தி வந்ததுனா, அடுத்த நிமிஷம் இந்த ராஜேந்திரனின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்.

உங்க வீட்டு பத்திரம், வயக்காட்டு பத்திரம்  எல்லாம் என் கிட்ட பத்திரமாதான்  இருக்கு.  அது பத்திரமா உங்க கிட்ட திரும்பி வரணும்னா, உங்ககிட்ட இருந்து சம்மதம் என்ற ஒரு வார்த்தைதான் எனக்கு வரணும்.  

நாளைக்கு  ராத்திரிக்குள்ள ஒரு நல்ல முடிவை சொல்லுங்க...நீங்க சொல்ற முடிவை பொறுத்துதான்  நாளன்னைக்கு நீங்க உங்க வீட்ல இருப்பிங்களா இல்லை நடுத்தெருவுல நிப்பிங்களானு தெரியும்...” என்று இளித்துக்கொண்டே அவர் தலையில் பெரிய இடியை இறக்கினான்.  

அப்பொழுதுதான் அவர் செய்து வைத்த மடத்தனம் புரிந்தது.

அவனிடம் வட்டிக்கு பணம்   கேட்க சென்றபொழுது,  ராஜேந்திரன் வீட்டு பத்திரத்தையும் வயலுக்கான பத்திரத்தையும் கேட்டான்.

இது வெறும் செக்யூரிட்டிக்காகத்தான் என்று சமாதானம் செய்தான்.  

“எப்படியும் வாங்குகிற கடனை அடைக்க வேண்டும் தான். அப்படி அடைத்துவிட்டு பத்திரத்தை   திரும்ப வாங்கிக் கொள்ளலாம்...”  என்று எண்ணியவர், அதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராயாமல், பத்திரத்தை  கொண்டு போய்  கொடுத்து விட்டார்

இப்பொழுது கந்து வட்டி ராஜேந்திரன் அதை வைத்து மறைமுகமாக அவரை  மிரட்டுவது புரிந்தது.

அதைக் கேட்டு அதிர்ந்து போனவர், தளர்ந்த நடையுடன் வீடு திரும்பினார்.

*****

ளர்ந்த நடையுடன் வீடு திரும்பியவரை,  மகள் அவரின் மனதை கண்டுகொண்டு  விசாரிக்க, அவருக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணில்  நீர் திரண்டது.  

ஆனாலும் பெத்த புள்ளை முன்னால்  கண்ணீர் விடக்கூடாது என்று தன் கண்ணீரை உள்ளித்துக் கொண்டார்.  

“ஒன்னும்  இல்ல பாப்பா...நீ போய் தூங்கு. நீ நாளைக்கு காலேஜ் போகணும் இல்ல.  நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன்...நீ போ...  என்று எதுவும் சொல்லாமல் மகளை அனுப்பி வைத்தார்.

பூங்கொடியும் தன் தந்தை எதையோ தன்னிடம் மறைக்கிறார்  என்று தெரிந்தாலும் அவரே சொல்லாமல் அவரை தோன்டி , துருவ பிடிக்காமல் யோசனையுடன் எழுந்து உள் அறைக்குள் சென்று விட்டாள்.  

*****

றுநாள் விடியற்காலையில், சீக்கிரம் எழுந்து,  சமையல் அறையில் காலை உணவை தயாரித்துக்கொண்டிருந்த சிலம்பாயிடம் விசயத்தை தயக்கத்துடன் சொல்லிவிட்டார் தணிகாசலம்.

அதைக்கேட்டு அதிர்ந்து போனார் சிலம்பா...தன் கணவனை திட்டி தீர்த்தார்.  

“யோவ்... பத்திரத்தை எல்லாம் கொண்டு போய் கொடுத்திருக்கியே...என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணலையா உனக்கு? அப்புறம் பொண்டாட்டி னு நான் ஒருத்தி குத்துக்கல்லாட்டம் எதுக்கு இங்க இருக்கிறேன்?

உனக்கும்,  உன் புள்ளைகளுக்கும்  வடிச்சு கொட்டவும்,  ராத்திரில உனக்கு முந்தானை  விரிக்கவும், உன் ஆசைக்கு புள்ளைகளை பெத்து போடவும் தான்  நான் இருக்கிறேனா?  

என்கிட்ட ஒரு வார்த்த கேக்கணும்னு தோணலை இல்லை...”  என்று படபடவென்று பொரிந்து, முந்தானையை எடுத்து வாயில் வைத்து பொத்திக்கொண்டு அழுதவாறு மூக்கை உறிஞ்சினார் சிலம்பாயி.

அதைக்கண்டு வேதனையாக இருந்தது தணிகாசலத்துக்கு.

திருமணம் ஆன இத்தனை வருடங்களில் ஒரு நாளும் மூக்கை சிந்தியதில்லை சிலம்பா.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிச்சிடலாம் என்று தன் கணவனுக்கு ஆறுதல் சொல்லி தட்டி கொடுப்பவள்...

வயலிலும் ஒரு ஆண்மகன் செய்யும் வேலைக்கு ஈடாக,  மாடாக உழைப்பவள். அப்படிப்பட்ட தன் மனைவி இன்று கண்ணீர் விடுவதை காணவும் தணிகாசலத்துக்கும் நெஞ்சை அடைத்தது.

தப்பு செய்துவிட்டோம் , என்று அவர் மனசாட்சியே அவரை குற்றம் சாட்டியது.

ஆனாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புரயோஜனம் என்று தன்னைத்தானே சமாதானபடுத்திக்கொண்டவர் தன் மனைவியையும் சமாதானம் படுத்த முயன்றார்.

“தப்புதான் சிலம்பு....உன்கிட்ட சொல்லாம விட்டது தப்புதான். அந்த நேரத்துல உன்கிட்ட சொல்லி, உன்னையும்  வேதனை படுத்துவானேன்?  எப்படியும்  சமாளிச்சுடலாம் என்று தான் இப்படி செய்தேன்...  

ஆனால் அது இப்படி வந்து முடியும் என்று நினைக்கவில்லை...” என்றார் வேதனையுடன்.  

“ஹ்ம்ம்ம் அன்னைக்கே தலையால அடிச்சுக்கிட்டேன்...நம்ம வசதிக்கு அகல கால் வைக்க வேண்டாம்.  மூத்தவளுக்கு இவ்வளவு பெரிய இடம் வேண்டாம். நம்ம  வசதிக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கலாம்னு...

யாராவது என் பேச்சை கேட்டிங்களா? உங்க ஆத்தாகூட சேர்ந்துகிட்டு நீயும் இல்ல ஆடின. “ என்று தன் கணவனை முறைத்தார் சிலம்பாயி.

“இப்ப என்ன நட்டமாய்டுச்சு புள்ள..பெரியவ சந்தோஷமா தான இருக்கா...நாம கஷ்டபட்டாலும் நம்ம புள்ள வசதியாதான வாழற?

“ஆமாமா... நல்ல்ல்ல்ல்லா வசதியாதான் வாழற..ஆனால் வசதி இருந்து என்ன புரயோஜனம். அந்த மாமியார்க்காரி சொல்ற மாதிரி இல்ல ஆடவேண்டி இருக்கு. அவங்கள மீறி இவளால அங்க ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது...”

“ஆனாலும் நம்மள மாதிரி வேகாத வெய்யில வெந்து சாகவேண்டாம் தானே... குளுகுளு ஏசியில சொகுசாதானே வாழ்ந்து கிட்டு இருக்கா...”

“சரி..உங்க பேச்சுக்கே வருவோம்.. மூத்தவ சொகுசாவே வாழறானு வச்சுக்குவோம்... அவ சொகுசா வாழறதுக்கு அடுத்தவளை பலிகடா ஆக்கலாமா?

இவளை கொண்டுபோய் பாழும் கிணத்துல தள்ளறது சரியா?

“அப்படி ஏன் நினைக்கிற சிலம்பு.  மாப்ள சொல்றத பார்த்தா நம்ம புள்ளையை நல்லா  வச்சு பாத்துக்குவார்னுதான்  தோணுது... “  

“எப்படி? இப்படி பொண்ணை கட்டிக்கொடு னு  கழுத்துல கத்தியை வைக்காத குறையாக மிரட்டி இல்ல பொண்ணு கேட்கறான்.  அவன் எப்படி நல்லவனா  இருக்க முடியும்? “ என்று தன் கணவனை முறைத்தார் சிலம்பாயி..!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!