என்னுயிர் கருவாச்சி-25

 


அத்தியாயம்-25

ன்று அதிசயமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட,  படுக்கையிலிருந்து எழுந்து அறைக்கு வெளியில் வர எத்தனிக்க,   அப்பொழுதுதான் சமையலறையில் அவள் பெற்றோர்கள் இருவரும் வாதிட்டு கொண்டிருந்தது  அவள் காதிலும் விழுந்து வைத்தது.

அதைக் கேட்டு ஒரு கணம் தூக்கிவாரிப் போட அதிர்ந்து போனாள் பூங்கொடி.  

அவர்கள் பேசிக்கொண்டிருந்த விசயம் அவளைப் பற்றியது எனும்பொழுது, அப்படியே நின்று முழுவதுமாக அவர்கள் பேச்சை கேட்டவளுக்கு  காலுக்கு கீழே பூமி நழுவுவதை போல இருந்தது.

அருகிலிருந்த சுவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு   தன் மூச்சை உள்ளடக்கி மீண்டும் காதை தீட்டி வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை கவனித்தாள்.

அவர்கள் பேச்சிலிருந்து அவள் புரிந்தது இதுதான்.  

இப்பொழுது அவள் தந்தை பெரும் தொகைக்கு கடன் பட்டிருக்கிறார். அவளின் வயல் அடமானத்தில் இருக்கிறது. வீட்டையும் அடமானம்  வைத்து கடனை வாங்கியிருக்கிறார்.  

இப்பொழுது கடன் கொடுத்தவன் பணத்தை திருப்பிக் கேட்கிறான். 

அவரால் கடனை திருப்ப முடியவில்லை. அதனால் தன் தந்தையை மிரட்டி அவளை மணந்து கொள்ள கேட்கிறான்...   என்பதை புரிந்து கொண்டதும் தூக்கிவாரிப்போட,  திடுக்கிட்டு அதிர்ந்து போனாள் பூங்கொடி.  

முன்ன பின்ன பார்த்திராதவனை  திடீர்னு எப்படி மணந்து கொள்வதாம்?  அதுவும் அவள் இப்பொழுது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.  

அவள் படிப்பு முடிய இன்னும் இரண்டு  வருடங்கள் இருக்கின்றன.  

அதற்குள் எப்படி திருமணம் செய்து கொள்வதாம் ?

அதோடு அவள் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லையே... தன் படிப்பை முடித்து, ஏதாவது வேலைக்கு சென்று ஒரு இரண்டு வருடங்கள் தன் தந்தைக்கு  உதவி செய்த பிறகுதான் தன் திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தாள்.

இப்படி திடுதிப்பென அவளுடையை திருமண பேச்சை ஆரம்பிக்கவும் திடுக்கிட்டாள்.

அதோடு அவள் அன்னை சற்றுமுன் சொன்னதைப்போல , தன் தந்தை திருப்பி கொடுக்க வேண்டிய பணத்துக்காக அவரை  மிரட்டி  தன்னை மணந்து கொள்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?

இதில் இருந்தே தெரிகிறது  அவன் ஒரு கெட்டவன் என்று.

அப்படிப்பட்டவனை எப்படி மணந்து கொள்வது என்று அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் அதிர்ச்சியோடு கூடவே  ஆச்சரியமும் சேர்ந்து கொண்டது.

எப்பொழுதும் அவளை கரித்து கொட்டிக்  கொண்டிருக்கும்  அவள் அன்னை  அவளுக்கு சப்போர்ர் பண்ண,   எப்பொழுதும் குட்டிமா, கண்ணம்மா, பாப்பா  என செல்லம் கொஞ்சும் அவள் தந்தை, இந்த திருமணத்தில்  பிடிவாதமாக நிற்கிறார் என்று புரிய அவளுக்கு ஆச்சர்யம் கலந்த வேதனையாக இருந்தது.

அதன்பின் அவள் பெற்றோர் இருவரும் ஏதேதோ விவாதித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

அதற்கு மேல அங்க நிக்க பிடிக்காமல், அப்பொழுதுதான் எழுந்து வருபவள் போல கண்ணை கசக்கி கொண்டே வெளியில் வந்தாள் பெண்.

அவளைக்கண்டதும் இருவரும் தங்கள் பேச்சை நிறுத்திக்கொண்டனர். அவளும் அவர்களை கண்டு கொள்ளாதவளாய்,  வரவழைத்தை ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு பின்புறம் சென்று முகம் கழுவினாள்.

அருகிலிருந்த வேப்பம் மரத்தில் இருந்து, ஒரு குச்சியை ஒடித்து பல்லை துலக்கி கொண்டு,  வேண்டும் என்றே தாமதமாக வீட்டிற்குள் வந்தாள்.

அவளைக் கண்டதும், வீட்டு தாழ்வாரத்தில் ஒரு தூணில் சாய்ந்தபடி தளர்ந்து போய் அமர்ந்திருந்த தணிகாசலம்,  அவளை தன் அருகில் அழைத்தார்.

பூங்கொடியும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்   தயக்கத்துடன் அவர் அருகில் சென்று அமர, தணிகாசலம் அவள் தலையை வாஞ்சையுடன் தடவிவாறு மெல்ல இழுத்து தயக்கத்துடன் சொன்னார்.

*****

ன் மகளிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை அவர். அதனால் வீட்டு நிலவரத்தை சொல்லி, அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க சொன்னார்.  

ஏற்கனவே இந்த விஷயம் அவள் கேட்டுவிட்டதால்,  பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. அவள் எதிர்பார்த்ததுதானே...

அதோடு அவள்  தந்தை இருக்கும் இக்கட்டான நிலையை புரிந்துக்கொண்ட பெண்ணும் அவரை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை.

ஆனாலும் அவள் முகம் வெளிறி, வெறித்த பார்வையை தன் தந்தை மீது செலுத்தியவள்

“அப்ப உங்களுக்கு உங்க வீடும், நிலமும், உங்க மற்ற இரண்டு பிள்ளைகளும்தான் முக்கியம்...நான் முக்கியம் இல்ல இல்லப்பா..” என்றாள் தழுதழுத்தவாறு.

எவ்வளவு முயன்றும் அவளால் தன் கண்ணீரை அணை போட்டு தடுக்க முடியவில்லை. முகத்தில் வைராக்கியம் இருந்தாலும், கண்களுக்கு அந்த வைராக்கியம் இல்லை போல.

அது பாட்டுக்கு கண்ணீரை உகுத்துக்கொண்டு இருக்க, அதைக்கண்டு பதறிய தணிகாசலம் ,

“அம்மாடி ...எப்படி இல்லடா... எனக்கு நீதான் ரொம்ப ரொம்ப முக்கியம் கண்ணு... இந்த கடனுக்காக மட்டும் உன் கல்யாணத்தை யோசிக்கல...நீ போற இடம் பெரிய இடம்....அங்க போய் நீ ராணி மாதிரி வாழ்வனு உன் பக்கமா பார்த்தும் தான் தாயி இந்த முடிவுக்கு வந்தேன்.

இந்த அப்பன் என்னைக்கும்  ஒரு கண்ணுல வெண்ணேய்ம், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற ஆள் இல்லடாமா.. எனக்கு என் நாலு புள்ளைகளுமே நாலு கண்ணுங்கதான்.

ஒரு கண்ணை வித்து மத்த கண்ணை காப்பாத்த முயலுவேனா? இப்பவும் ஒன்னும் கெட்டு போய்டல. உனக்கு பிடிக்கலைனா சொல்லுடாமா... இந்த பேச்சை விட்டுடலாம்...

வீடு இல்லனா என்ன? ஊருக்கு வெளில இருக்கிற பொறம்போக்கு நிலத்துல ஒரு ஓலக்குடிசையை  போட்டு தங்கிக்கலாம். அப்பா கூலி வேலைக்கு போய் அதுல வர்ற காசுல கூலோ கஞ்சியோ குடிச்சிட்டு இருந்துக்கிடலாம்... என்ன சொல்ற?

என்று தன் மகளை  தன் மார்போடு சேர்த்து அணைத்துகொண்டு தழுதழுத்தார் தணிகாசலம்.

அதைக்கேட்டு இன்னுமாய் வேதனையுற்றாள் பெண்.

“இதுதான் மாப்பிள்ளை..உனக்கு புடிக்குதோ, ப்உடிக்கலையோ, இவனைத்தான் நீ கட்டிக்கணும். என் பேச்சைத்தான் நீ கேட்கணும். ஒழுங்கா போய் மணவறையில் உட்கார்..”  

என்று தன் மகளை உருட்டி, மிரட்டி அடி பணிய வைக்கும் எத்தனையோ பெற்றோர்கள் மத்தியில்,  தன் தந்தை தன் விருப்பத்தை மதித்து அவளிடம் சம்மதம் கேட்கிறாரே என்று பெருமையாக இருந்தது.

ஆனால் வெறும் பெருமைப்பட்டு என்ன செய்வது? இப்ப இருக்கும் பிரச்சனையை அது தீர்த்து வைக்காதே? தன் தந்தை சொல்ற மாதிரி ஓலக்குடிசையில் வாழறதெல்லாம் பேச்சுக்கு நல்லா இருக்கும். அதுல இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் அவளுக்கு புரிகிறது தான்.

அதோடு அவளுடைய அக்காவீட்டில் தன் அக்காவுக்கு வேறு தலை இறக்கமாகி விடும். தம்பி தங்கைகள் எப்படி அந்த ஓலக்குடிசையில் கொசுக்கடியில் இருக்க முடியும்? என்னதான் செய்வது ? என்று அவசரமாக யோசித்தவளுக்கு ஒரு யோசனை வந்தது.

அதில் முகம் மலர்ந்தவள்,

“அப்பா... அந்த ஆளுக்கு நீங்க வாங்கின கடன் தானே பெருசு.  நீங்க வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டால், நம்மை விட்டுவிடுவான் தானே...”  என்று கண்கள் பளபளக்க கேட்க,  

“ஆமாம் பாப்பா... ஆனால்  பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது? அங்கதான நம்ம பிரச்சனையே..“  என்றார் வேதனையுடன்.  

“எவ்வளவு அப்பா கொடுக்க வேண்டும்? “ என்றாள் மீண்டும் யோசனையுடன்.

“வட்டியும் அசலும் சேர்த்து லட்சத்துக்கு மேல வருதம்மா...” என்றார்  குற்ற உணர்வுடன்.

அதைக்கேட்டு அதிர்ந்து போனாள் பெண்.

“என்னாது?  லட்சமா? “ என்று அதிர்ச்சியில் மூச்சடைத்து போனாள்  பெண்.

அந்த காலத்தில் ஒரு லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை..!  லட்சம் இருந்தால் அவர் லட்சாதிபதி என்று பெருமையாக பேசப்படும் காலம் அது.

அப்படிப்பட்ட லட்சத்துக்கு எங்கே போவது என்று வாய்விட்டு புலம்ப,

“அதான் பாப்பா...  எங்கும் கேட்க முடியாமல், எதுவும் செய்ய முடியாத கையறு நிலை இப்பொழுது. நாம் பணம் கொடுக்கவில்லை என்றால் நம்ம வீடும்,  வயலும் நம்ம கையை விட்டுப் போயிடும்.  

இரண்டும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்று மனமொடிந்து போய் தலையை தொங்க போட்டுக்கொண்டார் தணிகாசலம்.

“ஆமா..இப்ப புலம்பி என்ன செய்யறது? இந்த அறிவு, அந்த ஆள்கிட்ட கை நீட்டி பணத்தை வாங்கறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும். அகல கால் வைக்காம இருந்திருந்தால் இப்படி வந்து நிக்குமா? “ என்று சிலம்பாயி தன் கோபம் , ஆத்திரம் எல்லாம் கலந்து தன் கணவனை திட்டி தீர்த்தார்.

தணிகாசலமோ தன் மனைவிக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்திருந்தவர் கண்களில் நீர் வழிந்தது.

அதைக்கண்டு பொறுக்க முடியாமல், தன் தந்தையின் கையை அழுத்தி கொடுத்தவள்,

“அப்பா... ஒரு யோசனை...  வேணும்னா அக்கா கிட்ட கேட்டுப் பார்க்கலாமா? அவர்கள் நல்ல வசதியாகத் தானே இருக்கிறார்கள்...”  என்று யோசனை சொன்னாள்.

“ப்ச் அதெல்லாம் தப்பு பாப்பா... பொண்ணை கொடுத்த வீட்டில் போய் கையேந்தி நிற்கக் கூடாது...” என்று  மறுப்பாக சொல்ல

“இதுல என்னப்பா இருக்கு?  அவளும் இந்த குடும்பத்தில் பிறந்தவள் தானே...நம்ம குடும்பத்துக்கு ஒரு கஷ்டம் எனும்பொழுது, அதற்கு உதவுவதில் அவளுடையை பங்கும் இருக்குதானே... “

“அப்படி இல்ல மா... அக்கா இப்பொழுது கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு சென்று விட்ட பெண். இப்பொழுது  அந்த வீட்டுப் பெண்...அதுதான் அவள் குடும்பம்..”

“அது எப்படி?  நாம தானே அவள வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தோம். அதற்குப் பிறகும் எல்லா சீரும்  செய்தோம். நம்ம குடும்பத்து பொண்ணுன்றதாலதான் நாம எல்லாம் செஞ்சோம். இன்னும் செஞ்சுகிட்டிருக்கோம்.

இப்ப  நம்ம  குடும்பத்துக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி வர மாட்டாளா? நீங்க உங்க  பிடிவாதத்தை விட்டு ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாம்...” என்று தன்  தந்தையை சமாதானப் படுத்த , இப்பொழுது சிலம்பாயி தொடர்ந்தார்.

இல்லடி...அதெல்லாம் சரி வராது. அக்கா கொடுக்க முன்வந்தாலும் அக்கா மாமியாரை பற்றித்தான் தெரியுமே.  அவரை மீறி அக்காவால ஒரு துரும்பை கூட அங்க அசைக்க முடியாது...” என்றார் வேதனையுடன்.

“ஹ்ம்ம்ம் அப்படிப்பட்ட இடத்துல எதுக்குப்பா கட்டி கொடுத்தீங்க? “ என்றாள் கோபத்துடன் தன் தந்தையை பார்த்து முறைத்தவாறு.

“ஹ்ம்ம்ம் மாப்பிள்ளை சர்க்கார் உத்தியோகம். நல்ல வசதி... நம்ம புள்ளைய நல்லா வச்சுக்குவாங்கனுதான்...” என்று முடிக்கும் முன்னே பொங்கினாள்

“வசதியாம் பொல்லாத வசதி...அவள் வசதியாகவா இருக்கிறா? தான் நினைத்ததை செய்ய முடியாதவளுக்கு வசதி இருந்து என்ன பிரயோஜனம்?”  என்று வெறுப்புடன் நக்கலாக உதட்டை சுளித்தாள் பூங்கொடி.

“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லு டி. இதைத்தான் சொல்லி நானும் தலையால அடிச்சுகிட்டேன். என் பேச்சை யார் கேட்டா? “ என்று அங்கு ஓரமாக கட்டிலில் படுத்திருந்த தன் மாமியாரை பார்த்து முறைத்தாள் சிலம்பாயி.

இந்த திருமண பேச்சை ஆரம்பித்த அன்னைக்கு மட்டும் இந்த கிழவி வந்து தன் மகனிடம் இந்த இடத்தை முடிக்க சொல்லாமல் இருந்திருந்தால், தன் கணவனிடம் எப்படியாவது எடுத்து சொல்லி, கைக்கு மீறின சம்பந்தம் வேண்டாம் என்று தடுத்து இருப்பார் சிலம்பாயி.

தணிகாசலத்தின் அன்னை அன்று இந்த இடத்தையே முடிச்சுடு என்று சொல்லவும்,  தாய் சொல்லை தட்டாத பிள்ளையாக களத்தில் குதித்து, எல்லாவற்றையும் சொதப்பி வைத்துவிட்டார் என்ற ஆத்திரம் இன்னுமே சிலம்பாயிக்குள் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

தன் மாமியாரை பார்க்கும்பொழுதெல்லாம் ஜாடை சொல்லி திட்டி வைப்பார்.

தன் மருமகளின் ஜாடை பேச்சைக்கேட்ட தணிகாசலத்தின் அன்னை,

“டேய் ராசா... இப்ப என்ன கெட்டுப்போச்சு? என் மூத்த பேத்தி மகாராணி மாதிரி தானே இருக்கா? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? உன் பொண்டாட்டி எதுக்கு என்னை ஜாடை சொல்லி திட்டறா?” என்று படுத்தவாறு குரலை உயர்த்தினார் தணிகாசலத்தின் அன்னை.

இருக்கிற பிரச்சனை போதாதுனு இப்ப மாமியார் மருமகள் பிரச்சனையும் சேர்ந்துகிட்டா மனுஷன் என்ன பண்ணுவார்?

ஏற்கனவே சிலம்பாயி கொதிக்க வைத்த எண்ணெய் மாதிரி கொதித்துகொண்டு இருக்கிறாள்.

இப்பொழுது அவளை அடக்க முடியாது. அதனால் தன் அன்னை பக்கம் பார்த்தவர்

“ஆத்தா... நீ செத்த சும்மா இரு...தலைக்கு மேல இருக்கிற பிரச்சனையை பார்க்கலாம்..” என்று அதட்டியவர்  

“பாப்பா...  உனக்கு தெரியாதது இல்ல...  நாளைக்கு ராத்திரிக்குள்ள கெடு கொடுத்திருக்கறான்.  வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம்  இல்லைனா குடும்பத்தோடு விஷத்தை குடித்துவிட்டு சாக வேண்டியதுதான்...”  

என்று வெறுப்புடன் எழுந்தவர், தன் அருகில் இருந்த  துண்டை எடுத்து  உதறி தோளில் போட்டுக்கொண்டு,  தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார் தணிகாசலம்.

அவரின் தளர்ந்த நடையையும் , வேதனையில் வாடி சுருங்கிய முகத்தையும் கண்டவளுக்கு மனதை பிசைந்தது.

மீண்டும் அவசரமாக யோசித்து ஏதோ முடிவு செய்தவளாக, கிளம்பி  கல்லூரிக்கு சென்றாள்  பூங்கொடி.  

******

ல்லூரியில் காலை வகுப்புகளில் அவளால்  கவனம் செலுத்த முடியவில்லை.

கண் முன்னே தொங்கி கொண்டிருக்கும் கத்தியைப் போல , மஞ்சள் கயிற்றில் கோர்த்து பளபளவென்று  மின்னிக்கொண்டிருந்த மாங்கல்யம் தான் அவள் கண் முன்னே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

காலை பொழுதை எப்படியோ நெட்டி தள்ளியவள்,   மதியம் உணவு இடைவேளையில் தன் அக்கா பொற்கொடியின் வீட்டில் சென்று நின்றாள்.

அவள் அக்கா  முசிறியில் தான் வசிக்கிறாள்  என்றாலும்,  காரணம் இல்லாமல் ஒரு நாளும் தன் அக்கா வீட்டிற்கு சென்றதில்லை பூங்கொடி.

அவள் மாமியார் ஏதாவது ஜாடை  சொல்லி வைப்பார் என்றே தன் அக்காவை பார்க்க கூட  செல்வதில்லை.  

இப்பொழுதும் கால்கள் பின்னிக்கொள்ள, தயக்கத்துடன் அந்த வீட்டிற்குள் சென்றவளை ஐ சித்தி.... என்று கத்தியவாறு ஓடி வந்து கட்டிக்கொண்டான் குட்டி பையன் ஆதவன்.  

அவனைக் கண்டதும் தானாக ஒரு இதம் பரவியது அவள் மனதில்.

தன்னுடைய கவலை, பிரச்சனையெல்லாம் அந்த நொடி மறந்துபோக, முகமலர்ச்சியுடன்  அவனை அள்ளி எடுத்து, லைக்கு மேல தூக்கி போட்டு பிடித்து,  அவனின் அடி வயிற்றில் குறுகுறுப்பு மூட்டி முத்தமிட்டாள்.

அதில் கிளுக்கி சிரித்தவன், கூச்சத்தில் இன்னுமாய் வளைந்து நெளிந்தவன் தன் சித்தியின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் கன்னத்தோடு கன்னம் இளைந்தான்.

அவனின் அந்த கொஞ்சலில் மனம் இன்னுமாய் லேசாகிப் போனது.

அதே நேரம் சத்தம் கேட்டு உள் அறையில் இருந்து வந்தாள் பொற்கொடி.

தன் தங்கையை பார்த்ததும் முகம் மலர, அவளை வரவேற்றவள், சோபாவில் அமர வைத்து அவள் குடிப்பதற்கு என்று ஜூசை கண்ணாடி டம்ளரில் ஊற்றி வந்து கொடுத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து விசயத்தை கேட்டாள் பொற்கொடி.

பூங்கொடியும் தயங்கியவாறே தங்கள் வீட்டு நிலையை எடுத்துச் சொல்லி,

“கொஞ்சம் பணம் வேணும் அக்கா. எப்படியாவது சீக்கிரம் கொடுத்துடறோம். நிலைமை கைமீறி போயிடுச்சு.  அதை சமாளிக்க ஒரு லட்சம் உடனே வேண்டும்...”  என்று மென்று முழுங்கி சொல்ல,

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் பொற்கொடி.  

“என்னது? ஒரு லட்சமா? “ என்று வாயைப் பிளந்தாள் மூத்தவள்.

“ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர்னு கூட எனக்கு தெரியாதே... ஆமா..அவ்வளவு  பணத்தை வாங்கி என்ன செய்தாராம் உன் அருமை அப்பா...”  என்று நக்கலாக கேட்டு வைத்தாள் பொற்கொடி.

அதோடு உன் அருமை அப்பா என்று சொல்லி அவள் அவர் மகள் இல்லை என்பதை நாசுக்காக சொல்லி தள்ளி நிற்பதும் புரிகிறதுதான்.

அதைக்கேட்டு பூங்கொடிக்கு சுறுசுறுவென்று கோபம் பொங்கி வந்தது.

“இவளுக்கு தெரியாதா எதுக்காக இவ்வளவு கடன் வாங்கினார் என்று?  எல்லாம் இந்த மகாராணி இப்படி சொகுசாக இந்த பங்களாவில் வசிக்கத்தான்...  

தன் கைக்கு மீறி செலவு செய்து இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார்.  அந்த செலவுதான் இவ்வளவு வந்து நிக்குது...” என்று உள்ளுக்குள் திட்டிக்கொண்டவள், அதை வெளிப்படையாக சொல்லாமல்

அது வந்துக்கா....விவசாயத்துக்கு முட்டுவளி செய்யவும் வீட்டு செலவுக்கும் தான் வாங்கியிருக்கிறார்..” என்று தணிந்த குரலில் சொல்ல,

“ஹ்ம்ம் விவசாயம் பார்க்க வாங்கியிருந்தால்,  அதில் லாபம் வந்திருக்குமே அதை வச்சு கடனை அடைத்து இருக்கலாமே...” என்று  குற்றம் சாட்ட

“என்னக்கா இப்படி சொல்ற? அப்பாவை பற்றி உனக்கு தெரியாதா? தனக்காக ஒரு நையா பைசா கூட செலவு பண்ணமாட்டார். ஒரு டீ குடிக்க கூட அவ்வளவு தரம் யோசிக்கிறவர்.

அப்படிப்பட்டவர்  ஏதாவது வெட்டி செலவு பண்ணி இருப்பார் என்றா நினைக்கிறாய்?  சரி எப்படியாவது ஒரு லட்சம் ஏற்பாடு பண்ணி தா கா...” என்று பேச்சை திருப்ப,

“என்ன விளையாடறியா? என்கிட்ட ஏதுடி அவ்வளவு பணம்? என்று முறைக்க

“உன்கிட்ட னா  மாமா கிட்ட கேட்டு பாரேன்...அப்புறம் நான் வந்தது அப்பாவுக்கு கூட தெரியாது. அவர் உன்னிடம் கேட்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார்...”

“ஆமா இந்த வெட்டி ரோசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அவரை யார் நான்கு பிள்ளைகளை பெத்துக்க சொன்னதாம்?  இரண்டோடு நிறுத்தி இருந்தால் இவ்வளவு கஷ்டம் இல்லை இல்ல...”  என்க,  மீண்டும் கோபம் பொங்கி வந்தது இளையவளுக்கு.

ஆனாலும் தன் பல்லை கடித்து அடக்கிக் கொண்டவள்,

“அதெல்லாம் இப்ப பேசினா நல்லா இருக்காது பொற்கொடி.  பாஸ்ட் இஸ் பாஸ்ட்.  இப்ப என்ன பிரச்சனையோ அதைப் பார்க்கலாம்...”  

“ஹ்ம்ம் என் கிட்ட எல்லாம் அவ்வளவு பணம் இல்லைடி.  மாமா கிட்டயும் கேட்க முடியாது.  அவர் தன் அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டார்.  அதனால் வேற யார்கிட்டயாவது கேட்டுப்பார்...  சாரி...” என்று கையை விரித்து விட்டாள் மூத்தவள்.  

“இல்லக்கா... ஒரு லட்சம் இல்லைனாலும் உன்னால முடிஞ்சதயாவது கொடு. மீதியை வேற யார்கிட்டயாவது கேட்டுப் பார்க்கிறேன்...” என்றாள் கெஞ்சலுடன்.  

“அஞ்சு பைசா கூட என்கிட்ட இல்லடி.  நாங்களே இந்த வீட்டை லோன் போட்டுத்தான் வாங்கி இருக்கோம். அவர் வாங்கற சம்பளத்துல முக்கால்வாசி ட்யூ கட்டவே போய்டுது....”  என்று மழுப்ப, அதற்குமேல் தன் அக்காவிடம் வாதாட பிடிக்கவில்லை பூங்கொடிக்கு.  

அவள் சொல்வதைப் போல அவளும் கஷ்டத்தில் தான் இருக்கிறாளோ?  என்று அவளை கூர்ந்து பார்க்க,  வீட்டில் இருக்கும் பொழுது கூட நல்ல விலை உயர்ந்த புடவையைத்தான் அணிந்திருந்தாள்.

கழுத்திலும் தாலிக்கொடியோடு கூடுதலாக இரண்டு  செயினையும் போட்டிருந்தாள்.  

இரண்டு கைகளிலும் மின்னும் தங்க காப்புகளை அணிந்திருந்தாள். வீட்டிலும் ஆங்காங்கே நல்ல விலை உயர்ந்த அலங்கார பொருட்களை வாங்கி அடுக்கி வைத்திருந்தனர்.

மாசா மாசம் கஷ்டப்பட்டு ட்யூ கட்டுகிறவர்களுக்கு, இப்படி தேக்கு மரத்தினால் ஆன சோபா செட்டுகளை வாங்கிப்போட எப்படி பணம் வந்ததாம்?

அதோடு அவள் கழுத்திலும், கைகளிலும் அணிந்திருக்கும் நகைகளின் மதிப்பே அதிகம். அப்படி இருக்க என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது என்று யோசித்தவள்,  அப்பொழுதுதான் தன் அக்காவின் கையில் கிடந்த தங்க வளையல்களை கவனித்தாள்.

அது அவள் தந்தை அவளின் திருமணத்திற்காக வாங்கிக் கொடுத்தது தான்.

இன்றுவரை, பூங்கொடிக்கு வெறும் கண்ணாடி வளையல் தான்.  அதுகூட சீக்கிரம் உடைந்து விடுகிறது என்று ப்ளாஸ்டிக்கிலான உருண்டையான காப்பு மாதிரி ஒன்றை மாட்டி கொண்டிருக்கிறாள்.

இரண்டு வருடமாக, அந்த வளையலையும் உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்து வருகிறாள்.

தன் அக்காவின் கையில் கிடந்த வளையலை பார்த்ததும்,

“அக்கா... உன் கையில் போட்டிருக்கும் வளையல் அப்பா வாங்கி கொடுத்தது தான. அதில் இரண்டை கொடுத்தால், நான் அதை அடகு வைத்து அதில் கொஞ்சம் பணத்தை ரெடி பண்ணிடலாம்.

சீக்கிரம் உன் வளையலை திருப்பி கொடுத்துடறேன்...”  என்க,  அதைக்கேட்டு கோபமானாள் பொற்கொடி.

“நீ என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க?  கையில இருக்கிறத கழட்டிக் கொடுத்தால், என் மாமியார்க்காரிக்கு தெரியாதாக்கும்.

இதை நான் இப்பொழுது கழட்டி கொடுத்தால், என் மாமியார்க்காரி என்னை சும்மா விடுவாளா? அந்த கிழவிக்கு கழுகு கண்ணு. ஒரு வளையல் குறைஞ்சா கூட அதுக்கு தெரிஞ்சுடும்.

சம்மந்தி வீட்ல கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம வாங்கிட்டு போய்ட்டாங்கனு அந்த அம்மா நெட்டூரம் இழுக்கும்.

எனக்குத்தான் அசிங்கம். நம்ம குடும்பத்துக்கும் இது கெட்டப்பேர். அதோட சும்மாவே என்னை ஒன்னும் இல்லாம வந்தவனு கரிச்சு கொட்டும்.

இந்த லட்சணத்துல வளையலை கழட்டி கொடுத்தேனு தெரிஞ்சுது அம்புடுத்தான். அடுத்து நானும் பொட்டியை கட்டிக்கொண்டு அங்க வந்து நிக்க வேண்டியதுதான்.

மூனோட நாலு புள்ளைகளா, இல்ல இல்ல என் பையனையும் சேர்த்து அஞ்சு பேரா அப்பாவுக்குத்தான் சுமைதான் ஏறும்.

அதெல்லாம் ஒத்து வராது. நீ வேற ஏதாவது வழி இருந்தால் யோசித்துப்பார்...”  என்று அந்த பேச்சை அதோடு முடித்து விட்டு தன் மகனை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள்  பொற்கொடி

அதற்குமேல் அவளிடம் கெஞ்ச பிடிக்காமல் ஏமாற்றத்துடன் எழுந்து சென்றாள் பூங்கொடி.

******



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!