என்னுயிர் கருவாச்சி-26
அத்தியாயம்-26
எப்படியும் அக்கா கொஞ்சமாச்சும் கொடுத்து உதவுவாள் என்று எண்ணி வந்தவளுக்கு பலன் பூஜ்ஜியமாகி போய்விட, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவாறு நடந்தாள்.
ஏனோ அந்த ஆள் தன் அப்பாவை மிரட்டியதை பொற்கொடியிடம் சொல்லவில்லை.
சொல்லியிருந்தாலும் அவள் பெரிதாக கண்டு கொண்டிருக்க மாட்டாள். கல்யாணம்தானே பண்ணிக்க கேட்கிறான்...பண்ணிக்கோ என்றுதான் அட்வைஸ் பண்ணுவாள் என்று யோசித்தவாறு நடந்தாள் பூங்கொடி.
சற்று தூரம் சென்றவள், அப்பொழுதுதான் தன்னுடைய மணிபர்சை அங்கேயே விட்டுவிட்டு வந்தது உறைத்தது.
உடனே திரும்பி வேகமாக பொற்கொடியின் வீட்டிற்கு வந்தவள், உள்ளே நுழைய, அங்கு காதில் கேட்டதை கேட்டு இடிந்து போனாள் பூங்கொடி.
அவளின் அக்கா, தன் கணவன் தினேஷ் உடன் சோபாவில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
தினேஷ் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தான்.
தன் பைக்கை வீட்டிற்கு முன்னால் நிறுத்தியவன், வீட்டிற்கு பக்கவாட்டு சந்தில் பூங்கொடி செல்வதைக் கண்டவன், வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் விசாரிக்க, பொற்கொடியும் பூங்கொடி வந்ததற்கான காரணத்தை சொன்னாள்.
“என் வீட்டு நிலைமையை சொல்லி, கடனை அடைக்க பணம் வேணும் என்று கேட்டாள். நான் அதெல்லாம் இல்லை என்று சொல்லி சமாளித்து விட்டேன்..” என்று சிரித்தாள் மூத்தவள்.
“ஏன் பொற்கொடி... நான் தான் உன் செலவுக்கு என்று தனியாக உன் அக்கவுண்டில் பணம் போட்டு வைத்திருக்கிறேனே. அது நீ உனக்கு விருப்பப்பட்டதை செய்வதற்கு தானே.
உன் அப்பா கஷ்டத்தில் இருக்கும்போது உதவலாம் தானே...உன் தங்கை இவ்வளவு தூரம் வந்து கேட்கும்பொழுது கொடுக்க வேண்டியதுதானே...” என்று பரிந்து பேச, தன் கணவனை முறைத்தாள் பொற்கொடி.
“ஏங்க...இந்த காலத்துல கூட இப்படி பொழைக்க தெரியாத, ஏமாளியா இருக்கீங்க. அவ கேட்டது அஞ்சோ பத்தோ இல்லை எடுத்து நீட்ட.
அவள் கேட்டது ஒரு லட்சம். ஒரு லட்சம் கொடுத்தால் அது திரும்பி வருமா?
இன்னும் ரெண்டு வருஷத்துல, பூவும் கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுவா. அவ கல்யாண செலவு வேற வரும். அப்புறம் இருக்குற கடைக் குட்டிகளையும் பார்க்கணும்.
இந்த லட்சணத்துல என் அப்பாவால எப்படி பணத்தை திருப்ப முடியும்? அதுதான் காசு இல்லைன்னு சொன்னேன்...” என்றாள் தன் கணவனை இன்னுமாய் முறைத்தவாறு.
“ஆனாலும் அவர்கள் கஷ்டப்படும் பொழுது கொடுக்காமல் இருப்பது தவறு இல்லையா...” என்று தன் மனைவிக்கு எடுத்துச்சொல்ல,
“ஆங்... யாரைக் கேட்டு இவ்வளவு பணம் வெளியில் கடன் வாங்கினாராம்? வாங்கினவருக்குத் தெரியாதா அதை எப்படி அடைப்பது என்று.
அதோடு இந்த மாதிரியெல்லாம் கொடுத்து பழக்க கூடாது. நாம நல்லா வசதியா இருக்கோம்னு தெரிஞ்சுக்கிட்டு, பணம் கேட்டு அடிக்கடி வந்து நிப்பாங்க.
அதனாலதான் இதை முதலிலேயே வெட்டி விட்டுட்டேன்...” என்றாள் வெற்றி களிப்புடன்.
“அது இல்ல பொற்கொடி... “ என்று மீண்டும் தினேஷ் ஏதோ சொல்ல வர,
“என்னங்க... எனக்கு ஒரு சந்தேகம்...நீங்க என் பொறந்த வீட்டுமேல இம்புட்டு அக்கறை படறது என் அப்பாவுக்காகவா? இல்லை மச்சினிச்சிக்காகவா?
உங்களுக்கு என் தங்கச்சி மேல ஒரு கண்ணு இருக்குனு எனக்கு தெரியாதாக்கும்...அதான் அவளுக்காக இம்புட்டு தூரம் வக்காளத்து வாங்கறீங்களா? “
என்று தன் கணவனை முறைக்க, அதுவரை வாயிலின் மறைவில் நின்றபடி இருவரின் உரையாடலை கேட்டு அதிர்ந்து போனவள், இறுதியாக தன் அக்கா சொன்னதைக்கேட்டு இன்னுமாய் பலமாக அதிர்ந்து போனாள்.
தன் அக்கா கணவன் அவளின் தந்தைக்கு சம்மானவன். அவனைப்போய் தன் அக்கா தன்னுடன் ஜோடி சேர்த்து தப்பாக சொல்வதைக் கேட்டு துடித்துப் போனான் பெண்.
தன் கணவனை திட்டிய பொற்கொடி, வாயிலில் நிழல் ஆடுவது கண்டு திரும்பிப் பார்த்தாள்.
அங்கே முகம் வெளிற, உடல் இறுகிப் போய் நின்று கொண்டிருந்தாள் அவளின் தங்கை பூங்கொடி.
அவளை எதிர்பார்த்திராத பொற்கொடி அதிர்ச்சியில் உறைந்து போனவள், பின் தன்னை நிலைபடுத்திக்கொண்டு
“வா...வா... பூவு? என்ன திரும்ப வந்திருக்க? “ என்று தட்டு தடுமாறி விசாரிக்க, இளையவளோ எதுவும் பேசாமல் விடுவிடுவென்று சென்று தன்னுடைய பர்சை எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் தன் அக்காவை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேகமாக வெளியேறிச் சென்றாள்.
அவளின் செயலை கண்டு மற்ற இருவருக்குமே கொஞ்சம் அதிரிச்சியாகத்தான் இருந்தது.
******
வெளியில் வந்த பூங்கொடிக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது.
அவளின அக்கா கையில் பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று சொன்னதும், தன் தந்தையை பற்றிய அவளின் இளக்காரமான் பேச்சும், இறுதியாக தன் அண்ணனாக தந்தையாக பாவிக்கும் தினேஷ் ஐ அவளுடன் சேர்த்து வைத்து கொச்சை படுத்தியதும் அவளுக்குள் கனன்று கொண்டு இருந்தது.
அப்பா வாங்கின கடன் எல்லாம் இவளுக்காகத்தான் என்று தன் அக்காவுக்குமே தெரியும். அப்படியிருக்க தன் தந்தையை எள்ளி நகையாடியதை கண்டு கோபம் வந்தது.
அதோடு , இதுவரை தன் மாமியார்க்காரி கேட்கிறாள் என்று சொல்லி சொல்லி ஒவ்வொரு விசேசத்துக்கும் தன் தந்தையிடம், துணிமணி, பணம், சிறுக சிறுக நகை என்று வாங்கி சென்றது எல்லாம் இவளாகத்தான் செய்திருக்கிறாள் என்றும் புரிகிறதுதான்.
அதை நினைக்கும்பொழுது தன் அக்காவின் மீது வெறுப்பாக வந்தது.
“சை... என்ன மாதிரியான பெண் இவள். தன் தந்தை கஷ்டபட்டு வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை, இப்படி அட்டைப்பூச்சி மாதிரி உறிஞ்சி இருக்கிறாளே...”
இத்தனை நாள் இவளின் சுயரூபம் தெரியாமல் பாவம் புள்ளை மாமியாரிடம் திட்டு வாங்க கூடாது என்று அவள் கேட்டபொழுதெல்லாம் மறுக்காமல் எடுத்து கொடுத்த தன் தந்தையை எண்ணி கோபம் வந்தது.
தன் கோபத்தை எல்லாம் தரையில் உதைத்து விடுவிடுவென்று நடந்து சென்றாள் பூங்கொடி.
****
அடுத்த முயற்சியாய் சந்தோஷ் இடம் கேட்டு பார்க்கலாம் என்று ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து சந்தோஷ் வீட்டு எண்ணிற்கு அழைத்தாள் பூங்கொடி.
சென்ற முறை திருவிழாவிற்கு வந்து சென்ற அவள் அத்தை , தன் வீட்டு தொலைபேசி எண்ணையும் கொடுத்து சென்றிருந்தாள்.
அது இப்பொழுது உபயோகமாக இருக்கிறது என்று எண்ணியவாறு மறுபுறம் அழைப்பை ஏற்க காத்திருந்தாள்.
நல்லவேளை சந்தோஷ் அன்று வீட்டில் இருக்க, அவளின் அழைப்பை அவனே ஏற்றான்.
அழைத்தது பூங்கொடி என்று தெரிந்ததும் ஆச்சர்யமானவன்
“ஹே...ஃப்ளவர்... நீயா? வாட் அ சர்ப்ரைஸ்...” என்று உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பித்தான் சந்தோஷ் .
தன் குரலை கேட்டதும் அவன் உற்சாகம் அடையவும் , பூங்கொடிக்கு இருந்த தயக்கம் கொஞ்சம் மறைந்தது.
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு, பூங்கொடிக்கு அவனிடம் எப்படி கேட்பது என்று தயக்கமாக இருந்தது
ஆனாலும் கேட்டுத்தானே ஆக வேண்டும்.
அவர்களின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரக்கூடாது என்றால் இந்த மாதிரி தயக்கத்தை எல்லாம் விட்டு தொலைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் முயன்று வரவழைத்த தைர்யத்துடன்,
“வந்து...சந்தோஷ்... எனக்கு அர்ஜெண்டா கொஞ்சம் பணம்...ஒரு லட்சம்... கடனாக வேண்டும். சீக்கிரம் திருப்பி கொடுத்துவிடுவேன்...” என்று தயக்கத்துடன் இழுக்க, அதைக்கேட்டு மறுமுனையில் அமைதியாக இருந்தான் சந்தோஷ்.
சற்று நேரம் யோசித்தவன்
“என்கிட்ட இப்ப பணம் இல்லை பூங்கொடி. மாசா மாசம் கை நிறைய சம்பளம் வருகிறதுதான்...
ஆனால் அதெல்லாம் என் அக்கவுண்டுக்கு வருவதற்கு முன்னரே நான் வாங்கி இருக்கும் வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் என இ.எம். ஐ க்கே சரியா போய்டும். மிச்சம்னு கொஞ்சூண்டுதான் மீதியாகும்.
அதுவும் அம்மா அப்பாவோட மருத்துவ செலவு, வீட்டு செலவு என்று மாச கடைசியில் துண்டு விழும்...” என்று தன் கதையை சொல்லி பணம் இல்லை என்று மறுத்து விட்டான்.
அதைக்கேட்டு பூங்கொடியின் மனம் வாடிப்போனது.
எப்படியும் தன் மீது அவனுக்கு இருக்கும் ஆர்வத்தில், ஆசையில் அவளுக்கு உதவ முன் வருவான் என்று எண்ணி இருந்ததில் மண் விழுந்தது
சந்தோஷ் எப்படியும் தனக்கு உதவுவான் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போக, ஏனோ மனம் அவளுக்கு வலித்தது.
அதைவிட அவன் அடுத்து சொன்ன செய்தி, அவள் தலையில் இடியை இறக்கியது.
“அப்புறம் பூங்கொடி... எனக்கு அடுத்த வாரம் என்கேஜ்மென்ட் ஆக போகுது. டேட் பிக்ஸ் ஆனதும் அம்மா போன் பண்ணுவாங்க. குடும்பத்தோடு வந்து என்னோட என்கேஜ்மெண்ட் ல கலந்துக்கணும்..” என்று அடுத்த குண்டை தூக்கி போட்டான்.
“பொண்ணு உன்னை மாதிரி கருப்பு இல்ல. நல்ல சிவப்பா, கலரா, வசதியான இடம். ஒரே பொண்ணு. அவர்களுடைய எல்லா சொத்துபத்துக்கும் அவள் தான் வாரிசு...”
என்று மகிழ்ச்சியுடன் தன் வருங்கால மனைவியை பற்றி புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தான் சந்தோஷ்.
அவள் ஊர் திருவிழாவிற்கு வந்தபொழுது, அவளை ஆர்வத்துடன் கண்கள் மின்ன பார்த்திருந்தான் சந்தோஷ்.
பூங்கொடிக்கும் அவனின் பார்வை தன் மீது படும்பொழுதெல்லாம் குறுகுறுவென்று, மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம் படர்வதை போல இருக்கும்.
அதோடு அவள் தோழிகள் வேறு சந்தோஷ் ஐயும் அவளையும் சேர்த்து வைத்து ஓட்டியதில், அவள் மனதின் ஒரு ஓரத்தில் சிறு நம்பிக்கை இருந்தது.
எப்படியும் சந்தோஷ் ற்கு தன் மீது விருப்பம் இருக்கிறது. அவன் அன்னையிடம் சொல்லி தன்னை பெண்கேட்டு வருவான் என்று நம்பி இருந்தாள்.
அந்த நம்பிக்கையினால் தான் அவனிடம் உதவி கேட்கவே வந்தது.
ஆனால் அவன் தன்னிடம் பழகியது எல்லாம் வெறும் டைம்பாஸ்க்காக மட்டுமே...தன் மீது அவனுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்பது இப்பொழுது புரிந்தது.
இதைத்தானே அன்று அந்த ராசய்யாவும் சொன்னான்.
அவன் பார்வை சரியில்லை.. எல்லா புள்ளைகளையும் விரசமாக பார்த்து வைக்கிறான். அவனை நம்பாதே என்று அவன் அட்வைஸ் பண்ணியதற்கு அவனிடம் எரிந்து விழுந்தாள்.
ஆனால் இன்று அவன் சொன்னதுதான் உண்மையாயிற்று.
நல்ல வேளையாக, இந்த சந்தோஷின் ஆசைப் பார்வையைக் கண்டு, அவள் மனதில் பெரிதாக ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கவில்லை. சிறு சலனம் இருக்கத்தான் செய்தது.
ஆனாலும் அவளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் அவனை பற்றி நினைத்துக்கொண்டிருக்க நேரமில்லை.
அது ஒரு வகையில் இப்பொழுது நல்லதாகவே முடிந்து இருக்கிறது என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டவள், தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அவனுக்கு தனது வாழ்த்தை சொல்லி போனை வைத்து விட்டாள்.
அதன் பிறகு எப்படி அவள் கல்லூரிக்கு சென்றாள்... எப்படி வீட்டிற்கு திரும்பி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.
எப்படியும் பணத்தை திருப்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தவளுக்கு, அவள் நம்பி இருந்த இருவருமே கையை விரித்து விட்டனர்.
அதைவிட அவர்களின் சுயரூபம் கண்டுதான் இன்னுமே துடித்துப்போனாள். இதை எதிர்பார்த்திராத அந்த சிறு பெண்ணால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
*****
கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தவளை பிடித்துக்கொண்டார் தணிகாசலம்.
“பாப்பா... ஏன் உன் முகம் எப்படியோ இருக்கு? “ என்று அக்கறையுடன் விசாரிக்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறியவள்
“ஒன்னும் இல்லப்பா... இன்னைக்கு க்ரௌண்ட்ல விளையாண்டது டயர்டா இருக்கு...” என்று சமாளித்தாள். அவரும் தயக்கத்துடன்
“அப்புறம் பாப்பா...நான் சொன்ன விஷயம் பத்தி யோசிச்சியா? அந்த ராஜேந்திரனுக்கு என்ன பதில் சொல்வது? “ என்று தயக்கத்துடன் இழுக்க, அவளுக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.
தன் கைகளை கோர்த்தும் பின்பு பிரித்தும் வெறித்த பார்வையுடன் ஏதோ யோசித்து கொண்டிருந்த தன் மகளின் நிலையை கண்டு வருந்தியவர்,
“உனக்கு விருப்பமில்லைனா விட்டுடலாம். நான் முன்பே சொன்னபடி ஒன்னு குடிசைக்கு போய்டலாம். இல்லைனா குடும்பத்தோட விசத்தை குடிச்சிட்டு நிம்மதியா போய் சேர்ந்துடலாம்...” என்று கசந்த புன்னகையுடன் சொல்ல, அதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனாள் பூங்கொடி.
அப்பொழுதுதான் அவள் தனக்காக மட்டுமே யோசிக்கிறாள் என்பது புரிந்தது. தன் தம்பி தங்கைகளின் எதிர்காலம் என்னாவது என்று யோசிக்க தவறிவிட்ட தன் தவறு அப்பொழுதுதான் உறைத்தது.
தன் அக்காவை போல தானும் சுயநலமாக யோசித்ததை எண்ணி அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.
அவள் இந்த திருமணத்திற்கு சம்மதித்தால் அவள் ஒருத்தியின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாகும். சம்மதிக்கவில்லை யென்றால் குடும்பம் அனைவரின் வாழ்வுமே கேள்விக்குறியாகி விடும் என்று யோசித்தாள்.
அதோடு சிலம்பாயும், தணிகாசலமும் வேறு மாப்பிள்ளை ஒன்றும் கெட்டவரில்லை.
ஏதோ காசு பணத்தில் கொஞ்சம் கறாராக இருப்பவர். அதனால்தான் உன் மேல இருக்கும் ஆசையில் இப்படி ஒரு வழியை தேர்ந்து எடுத்து விட்டார். உன்னை நல்லா வச்சு பார்த்துக்குவார். நீ பயப்பட தேவையில்லை.
உன் படிப்பை கூட தொடரலாம் என்று சொல்லிவிட்டார். மேல படிக்கிறதுனாலும் படிக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்...” என்று மாப்பிள்ளை புராணத்தை பாடி அவளை கன்வின்ஸ் பண்ணினர்.
தணிகாசலம், ராஜேந்திரனின் ஒழுக்கமற்ற வாழ்க்கையை பற்றி சொல்லவில்லை. அதைக்கேட்டு தன் மகள் பயந்து விடுவாள். இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விடுவாள்.
எப்படியும் திருமணத்திற்கு பிறகு தன் மகள், ராஜேந்திரனை திருத்தி விடுவாள் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்த விசயத்தை மறைத்து விட்டார். தன் மனைவியிடம் கூட சொல்லவில்லை.
அவர்களை பொறுத்தவரை, அவன் கந்துவட்டி தொழில் பண்றவன். ஈவு, இரக்கம் இல்லாதவன். கொடுத்த காசுக்காக மிரட்டி பொண்ணை கேட்கிறான் என்பது மட்டுமே விசயமாக இருந்தது.
அவர் மறைத்த விசயமே பெரிய பூதமாக மாறப்போவதை அவர் அப்பொழுது அறியவில்லை.
தன் பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் போகவும், இறுதியில் திருமணத்திற்கு சம்மதம் என்று கசப்புடன் தலையை ஆட்டி வைத்தாள் பூங்கொடி.
*****
அவ்வளவுதான்..!
அவள் சம்மதம் சொன்ன, அடுத்த வாரமே திருமணத்தை வைத்துவிட்டான் ராஜேந்திரன்.
பூங்கொடியும் தன் மனதில் இருக்கும் வலி, வேதனையை மறைத்துக் கொண்டே வளைய வந்தாள்.
இப்பொழுது அதை எண்ணி பார்த்தவளுக்கு நெஞ்சை அடைத்தது. உள்ளுக்குள் படபடவென்று அடித்துக்கொண்டது. ஏதோ தவறாக நடக்கப்போவதை அவள் உள் மனம் அடித்து சொல்லிக்கொண்டே இருந்தது.
அதே நேரம் மணமேடையில் திருமண சடங்குகள் ஆரம்பித்து இருக்க, முதலில் மணமகளுக்கான சடங்கு செய்ய மணமகளை மணவறைக்கு அழைத்து வரச் சொன்னார் அந்த புரோகிதர்.
பூங்கொடியும் தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு தோழிகளுடன் தலையை குனிந்தவாறு முன்னால் வந்து மணமேடையில் அமர, மணப்பெண்ணிற்கான சடங்குகளை செய்து அவளை அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்து மணமகனுக்கான சம்பிரதாயம் ஆரம்பிக்க இருக்க, மணமகனை வரச்சொல்லி அழைத்தனர்.
அப்பொழுதுதான் மணமகன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான் அவன்.
அவனைச் சுற்றிலும் சில அல்லக்கைகள் அவனுக்கு குடைபிடிக்காத குறையாக அவனை சூழ்ந்து வந்தனர்.
மணமேடைக்கு வந்தவனை அனிச்சையாய் நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பூங்கொடி...!
Comments
Post a Comment