நிலவே என்னிடம் நெருங்காதே-45

 


அத்தியாயம்-45

றுநாள் மீண்டும் காலை உணவை முடித்து கொண்டு மூணாறில் மீதி இருந்த இடங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அடுத்து ஆலப்புழா நோக்கி பயணித்தனர்..

ஸ்டீபன் தம்பதியினர் வந்திருப்பது தேனிலவுக்காக என்பதால் அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதத்தில் இரு ஜோடிகளுக்குமே தனித்தனியாக இரண்டு சொகுசு படகுகளை முன்பதிவு செய்திருந்தான் அதிரதன்..

அதை கேட்டு திடுக்கிட்ட நிலா அவன் அருகில் வந்தவள்

“ஜமீன்தாரே.... அவர்களுக்கு  மட்டும் தனியாக ஒரு படகு போதும்.. நமக்கு எதுக்கு இந்த படகு பயணம்..?  நாம் இங்கயே தங்கி கொள்ளலாம். “ என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்..

அதை கேட்டு முறைத்தவன்

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவர்களுக்கு  மட்டும் ஒரு போட் புக் பண்ணிவிட்டு நமக்கு இல்லை என்றால் அவர்களுக்கு சந்தேகம் வராதா? கூடவே அவர்கள் கில்ட்டியாக பீல் பண்ண மாட்டார்களா?

இந்த ஒரு  போட் எக்ஸ்ட்ரா புக் பண்ணுவதால் உன் அப்பன் வீட்டு சொத்து ஒன்னும் அழிஞ்சு போய்டாது...இது எல்லாம் என் செலவு.. நீ பேசாம கூட வா.. அது போதும்.. “ என்று முறைத்தான்...

“ஐய... ரொம்பத்தான்... அந்த போட் ல போய் உன்ன பார் என்ன பார் னு உட்கார்ந்து இருக்கறதுக்கு இவ்வளவு செலவு எதுக்குனு யோசித்தால் ரொம்பவும் சிலிர்த்துக்கிறானே..

எனக்கென்ன வந்தது..?  என் அப்பன் வீட்டு சொத்து ஒன்னும் அழிஞ்சு போவாது.. உன் அப்பன் வீட்டு சொத்துதான் குறஞ்சு போகும்.. “ என்று மனதுக்குள் பொரிந்தவள் திருப்பி முறைத்துவிட்டு தோளை குலுக்கி கொண்டு திரும்பி நின்று கொண்டாள்..

அதிரதன் முன்பே அந்த நிறுவனத்திடம் பேசி ஆங்கிலம் தெரிந்த படகு ஓட்டிகளாக ஸ்டீபன் படகுக்கு ஏற்பாடு செய்திருந்தான்...

ஸ்டீபன் மற்றும் லியாவிடம்  அதை சொல்லி

“என்ன வேண்டுமானாலும்  அவர்களிடம் கேளுங்கள்... கூடவே கேரளா உணவு மிகவும் வித்தியாசமாகவும் ருசியாகவும் இருக்கும்..

காரத்தை குறைக்க சொல்லி நானே உங்களுக்கு தகுந்த மெனுவை சொல்லி இருக்கிறேன்.. உங்களுக்கு வேற மாதிரி வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள்.. என்ன உதவி வேண்டுமானாலும் வாட்ஸ்ஆப் ல் கால் பண்ணுங்க.. எங்க படகும் உங்க படகு அருகிலயே தான் இருக்கும்..

என்ஜாய் யுவர் ஸ்டே... “ என்று இருவரையும் கட்டி அணைத்து அந்த படகுக்கு அனுப்பி வைத்தான்..

அவர்களும் புன்னகைத்து அவனுக்கு நன்றி  சொல்லி

“யூ டூ என்ஜாய் யுவர் டே.. “ என்று கண் சிமிட்டி சென்றனர்...

கொஞ்சம் தயக்கத்துடனே அந்த படகுக்குள் வந்த நிலா  அப்படியே அசந்து போனாள்….

படகு என்றதும் திரைப்படங்களில் பார்த்த  படகு ஞாபகம் வந்திருக்க, இங்கயோ  அழகான  வரவேற்பறையும் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை, நவீன குளியலறை, மற்றும் அவர்களே சமைத்து சாப்பிட சமையலறை மற்றும் ஒரு பால்கனியையும் கொண்டு ஸ்டார் ஹோட்டல் அறையை போன்று இருந்தது அதன் உள்ளே....

அதை பார்த்ததும் ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் நிலா..

அதை கண்டு

“என்ன பட்டிக்காடு... முன்ன பின்ன இந்த மாதிரி போட் ஹவுஸ்க்கு வந்ததில்லையா? “ என்றான் நக்கலாக சிரித்தவாறு..

“ப்ச்.. இல்ல ஜமீன்தாரே... நான் கோயம்புத்தூர் தாண்டியே போனதில்லை.. அதிசயமா ஒரே ஒரு முறை மட்டும் சென்னைக்கு போயிருக்கேன்..என் தாத்தா  எங்கயும் வெளில அனுப்ப மாட்டார்...

எனக்கும் அவரை தனியாக விட்டு செல்ல மனம் வராது.. அதனால் எங்கயும் வெளில பெருசா போனதில்லை.. “ என்றாள் உதடு பிதுக்கி குழந்தையாக..

“ஹ்ம்ம்ம் சரி.. நான் போய் ரெப்ரெஸ் ஆகிட்டு வர்ரேன்.. மதிய உணவு இப்ப இவர்களே கொண்டு வந்து கொடுப்பார்கள்... வாங்கி வை.. “ என்றவன் தன் உடமைகளை வைத்துவிட்டு ஒரு டவலை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்றான்..

நிலாவோ ஆர்வத்துடன் அந்த பால்கனி கதவை திறந்து கொண்டு வெளிவந்தாள்.. சில்லென்ற கடற்காற்று ஓடி வந்து அவளை தழுவி கொள்ள, அது அவள் காதலனின் நினைவை கூட்ட அப்படியே மெய் மறந்து நின்றிருந்தாள்..

இப்பொழுது படகு நகர ஆரம்பிக்க, அதன் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமல் வீட்டில் நின்று கொண்டிருப்பதை போல இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக படகு கரையை விட்டு நகர்ந்து இப்பொழுது முன்னே நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..

சுற்றிலும் நீரால் சூழ்ந்து இருக்க, அதன் நடுவில் அவள் நின்றிருக்க, அந்த சூழலே ரம்மியமாக இருந்தது...

குழந்தை போல ஆர்பரித்து ரசித்து கொண்டிருந்த வேளையில் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்..  

ரெப்ரெஸ் ஆகி வந்தவன்  அவளைக் காணாமல் பால்கனிக்கு வந்திருக்க அங்கே காற்றினால் கூந்தல் அசைந்தாட தென்றலை ரசித்தபடி நின்றிருந்தாள் நிலா..  

அவளை  கண்டதும் அந்த பால்கனி கதவில் ஒரு காலை முட்டுக்கு வைத்து  சாய்ந்துகொண்டு அவளையே  ரசித்திருந்தான்  சில வினாடிகள்..  பின் சுயநினைவுக்கு வந்தவன்  தன் தலையை உலுக்கிக் கொண்டு

“ஹே... பட்டிக்காடு.. வெளில  பார்த்தது போதும்..  உள்ள வா சாப்பிடலாம்..  இன்னும் 24 மணி நேரம் இதை பார்ப்பதுதான் வேலையே..  மெதுவா பார்த்துக்கலாம்.. “ என்று சிரித்தவாறு அவளை அழைத்தான்..

அவள் குரல் கேட்டு புன்னகைத்தவாறு திரும்பியவள் அவன்  அழைத்த  பட்டிக்காடு என்பதில் காரமானவன் அவன் அருகில் வந்து

“ஹலோ...  பட்டணத்துக்காரரே... நான் ஒன்னும் பட்டிக்காடு இல்லை.. நானும்  கோயம்புத்தூர் ஜில்லாவை சேர்ந்தவள் தான்.. “  என்று மிடுக்குடன் சொல்லி முறைத்தவள் முன்னாள் விழுந்திருந்த தன் ஜடையை தூக்கி பின்னால் போட்டுக்கொண்டு கழுத்தை ஒரு வெட்டு வெட்டி அவனுக்கு முன்னாள் நடந்தாள்..  

அவளின் அந்த ஆக்சன் ஐ பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்து நின்றான்.. பின்  தலையை இடவலமாக அசைத்துக்கொண்டு உதட்டில் குளிர் புன்னகையுடன் அவனும் உள்ளே சென்றான்..  

அந்த வரவேற்பறையில் ஓரமாக சின்ன  டைனிங் டேபிள் போல இருவராக அமர்ந்து சாப்பிட வசதி செய்திருந்தனர்.. இருவரும் உள்ளே வந்து அங்கு  சென்று அமர்ந்து கொள்ள, மதிய உணவு தயாராக இருந்தது.. 

மூடி இருந்த பாத்திரங்களை திறந்தாள் நிலா.. கேரளா ஸ்பெஷல் உணவு மீன் குழம்பு இறால் புட்டு இறால் வறுவல் என எல்லாமே வித்தியாசமான டேஸ்டில் ருசியாக இருந்தது..

இருவரும் அதை ரசித்து உண்டனர்.. இடையில் அந்தப் பணியாளர் ஒருவர் அறைக்கதவை தட்டி விட்டு  உள்ளே வந்து வேறு ஏதாவது வேண்டுமா என்று மலையாளத்தில் கேட்க நிலா அதிரதனை முந்திக்கொண்டு

“எதுவும் வேண்டாம் சேட்டா...  நீங்கள் சாப்பிட்டீர்களா? “  என்று மலையாளத்தில் கேட்க அவரும் மகிழ்ந்து போய்

“இன்னும் இல்லை மேடம்.. இனிமேல் தான் சாப்பிட வேண்டும்..  ஏதாவது வேண்டுமென்றால் இந்த மணியை அடியுங்கள்.. “  என்று சொல்லி  சிரித்தவாறு அறைக் கதவை மூடிவிட்டு சென்றார்

அவள்  அழகாக மலையாளத்தில் பேசியதை கண்டு திகைத்துப் போனான் அதிரதன்..  கூடவே அவள் அந்த ஸ்டீபன் தம்பதியினரிடமும்  ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதும் நினைவு வந்தது..

உடனே அவளைப் பார்த்தவன்

“கே பட்டிக்காடு..  உனக்கு  மலையாளம் தெரியுமா? “  என்றான்  ஆச்சரியத்துடன்

“எனிக்கு குறச்சு குறச்சு மலையாளம் அறியும்.. “என்று மலையாளத்தில் பதில் சொல்லி கண்சிமிட்டி சிரித்தாள்..

அதை கேட்டு வியந்தவன்

“ஹ்ம்ம் இங்கிலீஷ் ம் பின்ற.. சரி வேற என்ன லாங்குவேஜ் எல்லாம் தெரியும்? “  என்றான் ஆர்வமாக

“ஹீ ஹீ ஹீ உங்க அளவுக்கு எல்லாம் தெரியாது ஜமீன்தாரே..  என்ன கன்னடம், தெலுங்கு அப்புறம் கொஞ்சம் ஹிந்தி தெரியும்.. ஃபாரின்  லாங்குவேஜ் ப்ரென்ச் மற்றும் ஸ்பேனிஸ்  தெரியும்.. “  என்று அதேபோல கண் சிமிட்டி தலை சரித்து சிரித்தாள்..  

அதைக்கேட்ட அதிரதனுக்கோ மயக்கம் வராத குறைதான் 

“ஹா ஹா ஹா.. நான் எந்த லாங்குவேஜ்  பெயர் எல்லாம் தெரியும் என்று  கேட்கவில்லை பட்டிக்காடு.. எந்த லாங்குவேஜ் எல்லாம் பேசத்தெரியும் என்று கேட்டேன்.. “ என்றான் நக்கலாக சிரித்தவாறு,,

“ஹீ ஹீ ஹீ... நானும் அதைத்தான் சொன்னேன் பட்டணத்தாரே.. " என்று  ஹிந்தியிலும் சாப்பாடு சூப்பர் என்று  ப்ரெஞ்ச் மொழியிலும் இது எப்படி என்று  ஸ்பேனிஷிலும் பேசி காட்ட அவனோ  ஆச்சர்யத்தில் பெரிதாக விழி விரித்தான்...

“நீங்க இப்படி முழிக்கிறது க்யூட் ஆ இருக்கு ஜமீன்தாரே.." என்று சிரிக்க அவனோ சிறு வெட்கத்துடன் அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன்

“ஆமா..  எப்படி இதெல்லாம் கத்துகிட்ட? “  என்றான் ஆச்சர்யத்துடன் இன்னும் நம்பாமல்.

“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? பொதுவாகவே நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு..  அதனாலேயே முக்கியமான மொழிகளை நானே கற்றுக்கொண்டேன்..”  என்றாள் மீண்டும் கண்சிமிட்டி

“பட்டிக்காட்டில்  எப்படி??  யார் உனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? “  என்றான்  இன்னும் ஆச்சரியம் விலகாமல்..

“ஹா ஹா ஹா நாம இருக்கிறது கற்காலம் இல்லை ஜமீன்தாரே...  குளோபலைசேஷன் பத்தி தான் உங்களுக்கு நன்றாக தெரியுமே..

எல்லா நாடுகளுமே ஒன்றாக இணையும் பொழுது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும்  பெரிதாக என்ன வித்தியாசம் வந்து விடப் போகிறது..?  

இப்பொழுது கிராமங்களுமே நகரங்களுக்கு சமமாக முன்னேறி வருகின்றன... அதற்கான ஒரு வழிமுறைதான் இந்த இணையம்..

எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கத்தான்  இந்த கூகுள் மாமா இருக்கிறாரே ! “  என்று  தன் அலைபேசியை எடுத்து ஆட்டி காட்டினாள்..  

“இது இருந்தால் போதும்..  எங்கிருந்தாலும் எதை வேணாலும் கற்றுக்கொள்ளலாம்..  தெரிந்துகொள்ளலாம்.. கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற காலம் மலையேறி விட்டது..

நாங்களும் டெக்னாலஜிக்குள்  வந்துவிட்டோம்..  எங்கள் பக்கத்து வீட்டில் பல்லில்லாத பொக்கை வாய் கிழவி கூட வாட்ஸ்அப் ஃபேஸ்புக் என்றும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. “ என்று கண்சிமிட்டி சிரித்தாள்..  

அதைக்கேட்டவனுக்கு ஆச்சரியமாகி போனது.. அவள் சொல்வது உண்மைதான் என தோன்றியது...  கூடவே அவள் பேசுவது சுவாரஸியமாக இருக்க அவள் கிராமத்தை பற்றி கேட்டுக்கொண்டே மதிய உணவை  சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

நிலாவும் தன் பேச்சை கேட்க ஒரு ஆள் கிடைத்தவுடன் தன் கிராமத்து  கதையெல்லாம் அளந்து கொண்டிருந்தாள்..  

வெறும் பேச்சை ஆரம்பித்தது மட்டும் தான் அதிரதன்.. அதற்குப் பிறகு ஹ்ம்ம்ம் மட்டுமே சொல்லி கொண்டிருந்தான்.. அவனை பேச விடாமல் ஓட்டை பானையைப் போல சிரித்தபடி வழவழத்து கொண்டிருந்தாள் நிலா...

அவனும் அவள் பேச்சையே ரசித்து கேட்டு கொண்டிருந்தான்..

அப்பொழுது அதிரதன் அலைபேசி சிணுங்க, அதை எடுத்து பார்க்க அபி அழைத்து இருந்தான்..  அப்பொழுதுதான் நினைவு வந்தது அவன்  முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள்..

அவன் வேலை  ஞாபகம் வர, உடனே வேகமாக உணவை முடித்துக் கொண்டு தன் லேப்டாப் ஐ  திறந்து வைத்து தன் அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான்..

அதற்கு பிறகு அவள் ஒருத்தி அங்கிருப்பதையே மறந்து போனான்..

நிலாவும் கொஞ்ச நேரம் வெளியில் வேடிக்கை பார்த்தவள் பின் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்..

அப்பொழுது ஒரு கான்ப்ரென்ஸ் காலில் இருந்தான் அதிரதன்.. வெளிநாட்டு வாடிக்கையாளர் போல.. அவர் ஏதோ கத்தி கொண்டிருக்க, இவனோ வெகு இயல்பாக அவருக்கு விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்..

அவன் குரலில் இருந்த ஆளுமையும்,  அவன் நுனிநாக்கு ஆங்கிலமும்,  பொறுமையாக எதிரில் இருந்தவருக்கு புரிய வைக்க முயன்று கொண்டிருந்த  அவன் தொழில் திறமையும் கண்டு வியந்து போனாள் நிலா..

அவனையே இமைக்க மறந்து ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்..

எதேச்சையாக இவள் பக்கம் பார்த்தவன் அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து என்ன?  என்று புருவத்தை உயர்த்த அவளோ நத்திங் என்று  உதடு அசைத்து அசட்டு சிரிப்பை சிரித்து பார்வையை வேற பக்கம் மாற்றி கொண்டாள் நிலா..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!