நிலவே என்னிடம் நெருங்காதே-46

 


அத்தியாயம்-46

தற்கு பிறகு இரவு ஏழு மணி வரைக்குமே சென்றது அவன் அலுவலக வேலை.. நடுவில் அவனுக்கு மாலை சிற்றுண்டியை அவளே வரவழைத்து அவன் அருகில் கொண்டு சென்று வைத்தாள்..

அவனும் நன்றி சொல்லி வாங்கி கொண்டான்..

ஒரு வழியாக தன் வேலையை முடித்தவன் தன் லேப்டாப் ஐ  மூடி வைத்து விட்டு தன் நீண்ட விரல்களை  நீட்டி மடக்கி நெட்டி முறித்து கழுத்தை நொடித்து சொடக்கு எடுத்தவன் இருக்கையை விட்டு எழுந்தான்..

குளியலறைக்குள் சென்று  ஒரு அவசர குளியலை போட்டு விட்டு தலையை துவட்டியவாறே வெளியில் வர, நிலாவோ பால்கனியில் நின்று கொண்டு வானத்தில் இருந்த நிலாவையும் நட்சத்திரங்க்ளையும் ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அது பௌர்ணமி நாள் என்பதால் வானில் இருந்த வெண்ணிலா தண்ணீரிலும் ஒளிந்து கொண்டு தகதகத்து கொண்டிருந்தது... வானில் இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் தரை இறங்கி வந்ததை போல அந்த நீரில் ஒளிர்ந்து கொண்டிருந்தன..

அந்த படகிலும் சுற்றிலும் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்க, சுற்றிலும் நீராய் சூழ்ந்திருக்க, அந்த வானத்து நிலா பொண்ணும் நட்சத்திர சிற்றார்களும் இவளையே ரசித்து பார்த்து கொண்டிருக்க அந்த சூழலில் மயங்கி அப்படியே கண் மூடி கிறங்கி நின்றிருந்தாள் இந்த நிலா பொண்ணு..    

அவளை கண்டதும் அவனும் பால்கனிக்கு செல்ல, அந்த இரவு நேரத்திலும் எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் அவள் முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் மிளிர்ந்தது...

அவளை பார்த்தாலே அத்தனை அலுப்பும் மறைந்து ஒரு பாசிட்டிவ் வைப்ரேசன் அவன் உள்ளே பரவுவதை போல இருந்தது..

அந்த ரம்மியமான சூழலை இமை மூடி ரசித்திருந்தவளை அவன் ரசித்தபடியே அங்கு செல்ல, அவளும் அரவம் கேட்டு இமை திறந்தவள் தன்னவனை கண்டதும் இவனை பார்த்து புன்னகைத்தாள்...

வெண்பற்கள் பளிச்சிட்ட மனதுக்கு இதமான புன்னகை அது...அதை ரசித்தபடி அருகில் சென்றவன்

“என்ன மூன்... ரொம்ப போர் அடிச்சுதா? “ என்றவாறு அருகில் சென்றான்..

“சே... சே... சூப்பரா செமயா இருக்கு இந்த இடம் ரதன்...அப்படியே மனதை அள்ளுது... ” என்றாள் தன்னை மறந்து ஆர்பரித்தவாறு.. அவள் ரதன் என்று  அழைத்ததில் அவன் விழிகள் விரிய அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது..

நேற்று அந்த தம்பதியர்கள் முன்னால் நடிப்பதற்காக அவனை ரதன் என்று அழைத்தது.. அதன் பின் அப்படி அழைக்கவில்லை.. இப்பொழுது  தானாக வாயில் வந்துவிட உடனே தன் தவறு புரிந்து நாக்கை கடித்து கொண்டாள்..

“சாரி... “ என்றாள் மெதுவாக..

“இட்ஸ் ஒகே. உனக்கு அப்படி என்னை அழைக்க பிடித்தால் அப்படியே கூப்பிட்டுக்கோ.. “ என்று  கண் சிமிட்டி மந்தகாசமாக சிரித்தான்..

இப்பொழுது அகல விழி விரிப்பது இவள் முறையானது..

அவளின் விழியையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருக்க அவன் பார்வையை கண்டு கொண்டவளோ தன் வெட்கத்தை மறைத்து கொண்டு அவனை பார்க்க அப்பொழுதுதான் அவன் தலையில் இருந்து இன்னும் நீர் சொட்டி கொண்டிருந்ததை கண்டாள்..

“அச்சோ ரதன்.. என்ன இது? இப்படியா இந்த நேரத்தில் தண்ணி சொட்ட சொட்ட வருவிங்க.. நன்றாக துடைப்பதில்லையா? “ என்று அவன் கையில் இருந்த டவலை  எடுத்து அவன் தலையை துவட்டினாள்..

அவளின் உரிமையான அதட்டலும் அவளின் மெல்லிய கரங்கள் அவனுக்கு வலித்துவிடாமல் மெதுவாக தன் தலையை துவட்டிய இதமும் அவளின் அருகாமையும் என்னவோ செய்தது அவனுக்கு..

தன்னையும் மறந்து அந்த நிமிடங்களை அனுபவித்தான் அதிரதன்..

அப்பொழுது சற்று தொலைவில் இருந்து இவர்களை அழைப்பது போல குரல் கேட்க, இருவருமே திரும்பி பார்க்க, அங்கு அருகில் இருந்த மற்றொரு படகில் இருந்து ஸ்டீபனும் லியாவும் பால்கனியில் நின்று இருந்தனர்...

இவர்களை பார்த்து கை அசைத்து கொண்டிருந்தனர்.. இவர்களும் அவர்களை பார்த்து கை அசைத்து எல்லாம் வசதியாக இருக்கா என்று ஜாடையில் கேட்க அவர்களும் கட்டை விரலை உயர்த்தி காட்டி சிரித்தனர்..

அப்பொழுது லியா தன் ஹேண்டி கேம் ஐ காட்டி இருவரையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி இருவரையும் அருகருகில் நிக்க சொல்ல, அதிரதன் புன்னகைத்தவாறு வெற்று மார்புடன் அந்த பால்கனி தடுப்பில் ஒரு காலை மடித்து வைத்து கொண்டு நின்றிருக்க, நிலா அவன் மஞ்சத்தில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள்..

அவனும் அவள் தோள் மீது கை போட்டு அணைத்தவாறு அன்யோன்யமாக இருப்பதாக காட்டி போஸ் கொடுக்க, அதை எல்லாம் லியா அழகாக பதிந்து கொண்டாள்..

பின் தன் கேமராவை பார்த்து போட்டோ சூப்பராக இருப்பதாக கையால் சைகை செய்ய, அவர்களும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்து அவர்களுக்கு குட் நைட் சொல்லி விட்டு உள்ளே வந்து விட்டனர்...

அதே நேரம் இரவு உணவு தயாராக இருக்க, இருவரும் அந்த டைனிங் டேபிலுக்கு சென்றனர்..

எதிர் எதிரே அமர்ந்து கொள்ள நிலாவே இருவருக்கும் தட்டை எடுத்து வைத்து பரிமாறினாள்.. அவனும் எதுவும் பேசாமல் எடுத்து சாப்பிட்டவன் சிந்தனை வேற எங்கோ இருப்பதை கண்டு கொண்டவள்

“என்னாச்சு ரதன்..?  என்ன யோசனையா இருக்கீங்க.?  எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை ? “என்றாள் சிரித்தவாறு..

“ப்ச்... புதுசா ஒரு கோட்டையும் பிடிக்க வேண்டாம்.. இருக்கிற ப்ராஜெக்ட் ஐ தக்க வைத்தால் போதும்.. “ என்றான் சலிப்புடன்..

“ஹ்ம்ம்ம் ஏன் இப்படி சலிச்சுக்கறீங்க? என்ன சொல்றார் உங்க க்ளைன்ட் மிஸ்டர் எட்வின்..?  ப்ராஜெக்ட் ஐ வேற ஒரு நிறுவனத்துக்கு  கொடுத்துவிடுவதாக டீல் பேசறாரா? “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவன்

“ஹே.. பட்டிக்காடு..இப்ப என்ன சொன்ன? உனக்கு எப்படி எட்வின் பத்தி தெரியும் ? “ என்றான் ஆச்சர்யமாக..

“ஹீ ஹீ ஹீ.. அதான் கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஆள் அப்படி கத்திகிட்டு இருந்தாரே.. நீங்களும் பொறுமையாக அவருக்கு  விளக்கி கொண்டு இருந்தீங்களே.. அப்ப கவனிச்சேன்.. “ என்றாள் இயல்பாக..

“ஓ... நீ சொன்னது சரிதான்.. முதலில் நான் சொன்ன தொகைக்கு சம்மதித்து ஒப்பந்தம் எல்லாம் செய்தாகிவிட்டது.. இப்பொழுது ப்ராஜெக்ட் ஐ இம்ளிமென்ட் பண்ற நேரத்தில் பின் வாங்கறார்..

இன்னும் கொஞ்சம் குறச்சுக்க சொல்றார்.. அல்ரெடி ரொம்பவுமே நான் குறச்சுதான் கொடுத்திருக்கேன்.. இதை விட இன்னும் குறைத்தால் நமக்கு நஷ்டம்தான் ஆகும்..

அதுதான் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்... “ என்றான் இன்னுமாய் யோசனையுடன்..

“அது எப்படி நஷ்டம்   தான் என்று உறுதியாக சொல்றீங்க? “ என்று புருவத்தை உயர்த்தினாள்..

“ஹ்ம்ம்..  நான் எல்லா  கால்குலேசனும் போட்டு பார்த்துட்டேன்..எப்படி செல்வை குறைச்சாலும் நமக்கு நஷ்டம்தான் வருது.. “ என்றான் யோசனையுடனே...

நிலா தன் அலைபேசியை எடுத்து இடது கையால் அதை ஆன் பண்ணி சில பட்டன்களை தட்டி பின் திரையில் ஒளிர்ந்த ஒரு சார்ட் ஐ காண்பித்தாள்..

அதை வாங்கி பார்த்தவன் கண்கள் பெரிதாக விரிந்தன..

“ஹே மூன்.... இது எப்படி? “  என்று ஆச்சர்யமாக பார்க்க,

“நீங்க சொன்ன அதே க்ளைன்ட்.. இந்த ப்ராஜெக்ட் அவர் சொன்ன தொகைக்கே கொடுத்தாலும் ஐந்து வருடத்தில் நமக்கு கிடைக்கவேண்டிய லாபம் இது...

நீங்கள் இந்த வருட  நஷ்டத்தை மட்டும் பார்க்கிறீர்கள்..அதையே ஐந்து வருட காலத்தில் ஆராய மறந்து விட்டீர்கள்..

நான் அதை எல்லாம் ப்ரெடிக்ட் செய்து இதில் காட்டி இருக்கிறேன்.. இப்ப சொல்லுங்க.. இந்த ப்ராஜெக்ட் நஷ்டமா? “ என்று புருவத்தை உயர்த்தினாள் புன்னகைத்தவாறு..

அதை கேட்டு தூக்கி வாரி போட்டது அதிரதனுக்கு..

“இத்தனை வருடங்கள்  பிசினஸ் பண்றான்.. எட்வின் விசயத்தில் இந்த சின்ன லாஜிக் ஐ எப்படி கவனிக்க தவறிவிட்டான்..

இந்த பட்டிக்காட்டிற்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? “ என்று அவசரமாக யோசித்தவன்

“வாவ்...!  சூப்பர் மூன்.. கரெக்ட் ஆ சொல்லிட்ட.. நான் எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேன்.. ஆமா..  உனக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது..?  அப்ப நான் கான் காலில் இருந்த பொழுது நீ உட்கார்ந்து உன் மொபைலை நோண்டி கொண்டு இருக்கவில்லையா? “ என்றான் ஆச்சர்யமாக..

“ஹீ ஹீ ஹீ.. நீங்க அந்த க்ளையன்ட் உடன் பேச ஆரம்பிச்சதும் அவருடைய் கம்பெனியை பற்றி நோண்டி பார்த்தேன்.. நல்ல வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்லும் கம்பெனி அது..

கண்டிப்பாக இன்னும் ஐந்து வருடங்களில் பெரிதாக விரிவாக்கி விடுவார்கள்.. அதற்குத்தான் அப்படி விரிவாக்கும்பொழுது  ஐந்து வருடங்களில் நமக்கு என்ன லாபம் வரும் என்று ப்ரெடிக்ட்  பண்ணி பார்த்தேன்.. “

“ஆமா.. இதெலாம் உனக்கு எப்படி தெரியும்? “ என்றான் இன்னுமே ஆச்சர்யம் விலகாமல்..

“ஹா ஹா ஹா எனக்கு எப்படி தெரியுமா..?  இல்லை இந்த பட்டிகாட்டுக்கு எப்படி தெரியும் னு தெரிஞ்சுக்கணுமா? “ என்றாள் தலை சரித்து குறும்பாக சிரித்தவாறு..

“ரெண்டும்தான்.. “ என்றான் அவனும் புன்னகைத்தவாறு..

“தி க்ரேட் தேவநாதன் ஜமீன்தார் வீட்டு  மருமகள்... முன்னேறி வரும் நாளைக்கு பெரிய பிசினஸ் மேன் ஆக ஆகப்போகிற மிஸ்டர் அதிரதன் மனைவி.. இதை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

உங்கள் தொழிலை பற்றியும் தாத்தா தொழிலை பற்றியும் நானாக நோண்டி பார்த்து தெரிந்து கொண்டேன்.. “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு..

“ஆமாம்.. நீ என்ன படிச்சிருக்க? “ என்றான் கண்கள் இடுங்க அவளை ஊருடுவி பார்த்தவாறு..

“உங்க அளவுக்கு இல்லங்க ஜமீன்தாரே... கொஞ்சமா எம்.பி.ஏ வரைக்கும் படிச்சிருக்கேன்..” என்றாள் அதே சிரிப்பு மாறாமல்.  

“வாட்?”  என்றான் அதிர்ந்தவாறு..

“ஐய... இதுக்கு  எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகறீங்க ஜமீன்தாரே..?  ஏன் என்னை பார்த்தா படிக்காதா பட்டிக்காடாவா இருக்கு? “ என்றாள் மிடுக்குடன்..

“இல்ல.. வந்து... நீ கிராமம் தான... “ என்று இழுத்தான்..

“ஹா ஹா ஹா .. கிராமத்துல பொறந்து வளர்ந்ததால ஏபிசிடி மட்டும்தான் படிக்க தெரியும்னு நினைச்சிட்டிங்களாக்கும்...” என்று வாய்விட்டு சிரித்தாள்..

வெள்ளி சதங்கையை குலுக்கி விட்டதை போல முல்லை பூக்களின் மொட்டுக்களை வரிசையாக கோர்த்ததை போல பளீரென்று ஒளிவீசியது அவளின் புன்னகை...

தன்னை மறந்து ஒரு நொடி அவளின் புன்னகையை ரசித்திருந்தான்... அதை கலைக்கும் விதமாக அவள் தொடர்ந்தாள்..

“யாரையும் வெளி தோற்றத்தை வைத்து எடை போட்டு விடக் கூடாது ஜமீன்தாரே.. அதே போல கிராமம் தானே னு நக்கலாகவும் பார்க்காதிங்க.. இன்று பெரிய இடத்தில் இருக்கும் பல மேதாவிகளும் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான்... “ என்றாள் அவனை நேராக பார்த்து...

“ஹ்ம்ம்ம் ஒத்துக்கறேன்... நீ சொல்வது சரிதான்.. சரி சொல்லு.. எங்க படிச்ச? எப்ப முடிச்ச? “ என்று அவளை பற்றி முதன் முதலாக விசாரித்தான்...

“கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டில தான் படிச்சேன்.. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தும் எனக்கு ஏனோ வழக்கமாக எல்லாரும் படிக்கும் இன்ஜினியரிங் படிக்க பிடிக்கவில்லை..

என் தாத்தா அடிக்கடி தேவநாதன் தாத்தாவை பற்றி பெருமையாக பேசுவார்... அவர் எப்படி டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ ஸ்டார்ட்  பண்ணி அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் என்று..

அதை கேட்டு கேட்டு வளர்ந்ததால் எனக்கும் தொழில் சம்பந்தமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம்.. அதனாலயே B.B.A எடுத்து படித்தேன்.. அதை முடித்ததும் அங்கயே மேற்படிப்பாக M.B.A சேர்ந்து விட்டேன்.. நான் படிப்பதற்கு தேவநாதன் தாத்தா தான் உதவி செய்தாராம்..

எனக்கு இது ஆரம்பத்தில் தெரியாது... என் தாத்தா இறக்கும் பொழுது தான் அதை சொன்னார்... இது மட்டும் அல்ல.. என் தாத்தாவிற்கு சிறுவயதில் இருந்தே நிறைய உதவி செய்து வந்திருக்கிறார்..

மஹாபாரதத்தில் துரியோதனனை கெட்டவனாக காட்டி இருந்தாலும் அவனுக்குள் நிறைய நல்ல பண்புகள் உண்டு.. அதில் ஒன்றுதான் நட்பு பாராட்டுவதில் சிறந்தவன்.. தன் நண்பன்  கர்ணனுக்கு உதவியது..

தேரோட்டியின் மகனாக வளர்ந்த தன் நண்பனையும் ஆதரித்து அவனுக்கு ஒரு சிறிய நாட்டை கொடுத்து அவனையும் அரசனாக்கினான் துரியோதனன்..

அந்த செஞ்சோற்று கடனுக்காகத்தான் கர்ணன் கடைசிவரை தன் நண்பன் பக்கம் நின்றான்...

அது போலத்தான் என் தாத்தாவும்..

ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டபட்ட என் தாத்தாவுக்கு சொந்தமாக விவசாயம் பண்ண நிலம் கொடுத்து அவரையும் தேவநாதன் தாத்தா தூக்கிவிட்டார்..  

அதற்கு பிறகு என் அப்பா அம்மா இறந்த பிறகும் கைகுழந்தையை வைத்து கொண்டு என் தாத்தா தடுமாறிய பொழுதும் அடிக்கடி தேவநாதன் தாத்தா உதவி செய்திருக்கிறார்..

இப்ப சொல்லுங்க.. அப்படி உதவி செய்த ஒருத்தருக்கு கை மாறாக அவர் கேட்ட  சிறு உதவியை செய்யலாமா?  வேண்டாமா? “ என்று அவனை நேராக பார்த்து வினவினாள் நிலா...

அப்பொழுது தான் கொஞ்சமாக புரிந்தது அவள் பக்கம் இருக்கும் நியாயம்..

ஆனாலும் தான் இன்னொருத்தியை விரும்புவது தெரிந்து எப்படி இவள் சம்மதிக்கலாம் என மனம் முரண்ட உடனே பார்வையை கடுமையாக்கியவன்

“செஞ்சோற்று கடனுக்காக, அடுத்தவங்க கேட்டாங்க என்று கண்ணை மூடி கொண்டு கிணற்றில் குதிச்சிடுவியா? இது நீ சம்பந்தபட்டது மட்டும் அல்ல.. இதில் என்னுடையை வாழ்க்கையும் இருக்கு னு ஏன் யோசிக்க மறந்த? “ என்றான் முறைத்தவாறு...

“அப்படி ஒன்னும் உங்களை உங்கள் வாழ்க்கையை அழித்து விட வில்லையே... தாத்தா உங்களுக்கு எப்பொழுதும் நல்லதுதானே செய்வார்... அவர் ஏன் அப்படி செய்தார்... “ என்று தேவநாதனை பற்றி கொஞ்சம் உயர்வாக பேசி கொண்டிருக்கும் பொழுதே வேகமாக கையை நீட்டி அவளை தடுத்தான்..

“போதும்.. அவரை பற்றி பேசாதே... எனக்கு எரிச்சலாக வருகிறது.. இப்ப இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்து கொள்ள விரும்பவில்லை.. வேறு பேசலாம்.. “ என்று அந்த பேச்சை நிறுத்திவிட்டான்...

“ஹ்ம்ம் எல்லா விசயத்திலும் நன்றாக யோசித்து முடிவு எடுப்பவன் இந்த தாத்தா விசயத்தில் மட்டும் ஏன் தான் கண்ணையும் காதையும் மூடி கொள்கிறானோ?

கொஞ்சமாவது அவர் பக்கம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று யோசிக்கிறானா பார்... குதிரைக்கு கடிவாளம் இட்டமாதிரி தாத்தா தப்பானவர் என்றே  எண்ணி கொண்டு அதில் இருந்து வெளி வர மாட்டேங்கிறானே..

பார்க்கலாம்.. சீக்கிரம் அவனாகவே அவரை பற்றி புரிந்து கொள்வான்.. “  என்று  பெருமூச்சு விட்டவள் மற்ற கதைகளை பேச ஆரம்பித்தாள்..

இருவருக்குமே நிறைய விசயங்களில் ஒத்த கருத்தாய் இருந்தது...

அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், பிசினஸ்,  சினிமா என அவளுக்குமே நிறைய விசயங்கள் தெரிந்திருக்க, இருவருமே உணவை ரசித்து உண்டபடி சுவாரஸ்யமாக பேசியவாறு சாப்பிட்டு முடித்தனர்...

பின் அதிரதன் தன் லேப்டாப்பை எடுத்து வைத்து கொண்டு அவள் சொன்ன மாதிரி எட்வின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து தன் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து அவர் கேட்ட தொகைக்கும் கொஞ்சம் அதிகமாக பேசி முடித்து அந்த ஒப்பந்தத்தை முடித்தான்..

நாளையில் இருந்து அதற்கான வேலைகள் ஆரம்பித்து விடும்.. ஏற்கனவே இந்த க்ளைன்ட்க்காக டீம் தயாராக வைத்திருப்பதால் வேலை ஆரம்பித்துவிடும்.. அப்பவும் பெரிதாக நஷ்டம் இல்லை..

நிலா சொன்னமாதிரி நீண்ட கால ஒப்பந்தமக பார்க்க நல்ல லாபமும் கூடவே தங்களுக்கு பெரிய வாடிக்கையாளர் என்ற பட்டியலில் இந்த நிறுவனமும் சேர்ந்து கொள்ளும்பொழுது அது ஒரு விளம்பரமே.. என்று புரிய இதை பரிந்துரை செய்த அந்த பட்டிக்காட்டுகாரியை மனதுக்குள் மெச்சி கொண்டான்..

ஓரக் கண்ணால் அவளை பார்க்க, அவளோ அங்கிருந்த சோபாவிலயே நன்றாக உறங்கி இருந்தாள்.. அப்பொழுதுதான் மணியை பார்க்க பத்தை தாண்டி இருந்தது..

அவனும் தன் லேப்டாப் ஐ மூடி வைத்துவிட்டு எழுந்தவன் சோபாவில் அசந்து உறங்குபவளை தன் கைகளில் அள்ளி கொண்டான்...

மெல்லிய கொடி போல கனமே இல்லாமல் அவ்வளவு மென்மையாக இருந்தாள்.. தூக்கி கொண்டு நடக்கும்பொழுது முகத்தை சுளித்து கண்களை இன்னுமாய் சுருக்கி இருக்க அப்படியே சிறுபிள்ளை போல மிளிர்ந்தாள்..  

அவளை அப்படியே அணைத்து கொள்ள அவன் உள்ளே தவிக்க, தன்னை கட்டுபடுத்தியவன் அவளை படுக்கை அறைக்கு கொண்டு சென்று படுக்கையில் கிடத்தியவன் தானும் மறுபக்கம் படுத்து கொண்டான்...

நேற்றாவது பெரிய கிங் சைஸ் பெட்.. அதனால் இருவருக்கும் இடையில் நிறைய இடைவெளி இருந்தது.. ஆனால் இது ஹனிமூன் கபுல்க்கான சொகுசு படகு என்பதால் படுக்கையை சிறிதாக அமைத்து இருந்தார்களோ?

இருவருக்கும் இடையில் மிகவும் குறைந்த இடைவெளிதான்.. அவ்வளவு நெருக்கத்தில் அவளை பார்க்க, அதுவும் அவளின் ஏறி இறங்கும் மார்பும் சற்றுமுன் அவன் கைகளில் உணர்ந்த அவளின் மேனியின் மென்மையும் அவனை புரட்டி போட்டது...

அவன் பார்வை அவளின் திரண்ட செவ்விதழில்  குத்தி நிக்க, இரண்டு நாட்கள் முன்பு அதை அவன் ஆசையாக வருடியது நினைவு வந்தது...

அதே போல இன்றும் அவள் இதழை தொட்டு பார்க்க அவன் கரங்கள் துடிக்க, அவனையும் மீறி அவன் கரங்கள் நீண்டன அவள் இதழ் நோக்கி..

கிட்டதட்ட அவள் இதழை நெருங்கிய வேளை நாராசமாய் ஒலித்தது அவன் அலைபேசி.. உடனே எரிச்சலுடன் தன் கையை இழுத்து கொண்டவன் அவள் உறக்கம் கலைந்து விடக் கூடாதே என்று அவசரமாக அருகில் இருந்த அலைபேசியை எடுத்தான்..

திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் தூக்கி வாரி போட்டது..

“ஓ.. மை காட்... எப்படி மறந்தேன்...?  இவளை எப்படி மறந்தேன்..?  என் நிலா பொண்ணை எப்படி மறந்தேன்..?  நேற்றிலிருந்து கொஞ்சம் கூட இவள் நியாபகம் வரவில்லையே...” என்று அதிர்ந்து போனான்...  

நேற்று இரவு அவளும் அழைத்திருக்கவில்லை.. கூடவே இன்று முழுவதும் பிசியாக இருந்ததால் சாந்தினி பற்றிய நினைவே வரவில்லை..

இப்பொழுது அவள் பெயரை திரையில் காணவும் சிறு குற்ற உணர்வு மேல் எழும்ப, அவசரமாக தன் படுக்கையில் இருந்து எழுந்தவன் பால்கனிக்கு சென்று  நின்று கொண்டான்..

அவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க, அடுத்த நொடி

“ஹாய் பேபி.. ஹௌவ் ஆர் யூ? “ என்று கொஞ்சலுடன் ஆரம்பித்தாள் சாந்தினி..

எப்பொழுதும் அவள் குரலை கேட்ட உடனே துள்ளி குதிக்கும் அவன் மனம் இன்று ஏனோ அமைதியாக இருந்தது... ஆனாலும் முயன்று வரவழைத்து கொண்ட உற்சாகத்துடன்

“ஐம் பைன் நிலா... நீ எப்படி இருக்க? நேற்று ஏன் போன் பண்ணவில்லை.. “ என்றான்

“நேற்று நான் கொஞ்சம் பிஸி அத்தூ... ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தேன்.. “ என்று அவள் பார்ட்டி கதையை விவரித்தாள்..

ஏனோ அதை கேட்கும்பொழுது எரிச்சலாக இருந்தது.. அவள் பேசி முடித்ததும் ஏதோ நினைவு வந்தவனாக

“நிலா... உனக்கு என் பிசினஸ் ஐ பற்றி தெரியுமா? எனக்கு யார் க்ளைன்ட் இப்படி ஏதாவது தெரியுமா? “ என்றான் ஆர்வமாக..

“ப்ச்.. அதெல்லாம் எனக்கு தெரியாது அத்தூ... அதை எல்லாம் தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்..?  அதை பார்க்கத்தான் நீங்க இருக்கிங்களே... “ என்று  கிளுக்கி சிரித்தாள்..

மேலும் அவளுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று சில கேள்விகளை கேட்க, மற்ற விசயங்களில் பக்கா ஞானசூன்யமாக இருந்தாள்..

அவள் வேலையை பற்றி தெரிந்திருந்தது... சினிமா அப்புறம் பார்ட்டி, மேக்கப் இதுதான் அவளுக்கு பிடித்த டாபிக் ஆக இருந்தது..

மற்ற கதைகள் எல்லாம் போர் என்றாள்... அதிரதன் சிறிது நேரம் பேருக்காக பேசி கொண்டிருக்க, அவளோ அடுத்த கட்டத்துக்கு சென்றாள்.. அலைபேசியிலயே அவனுக்கு முத்தமிட, இன்று ஏனோ எரிச்சலாக இருந்தது அதிரதனுக்கு..

முத்தத்திற்கு நிலவினி  சொன்ன கலாச்சார விளக்கமும் கூடவே அடுத்தவர்கள் முத்தமிடுவதை பார்க்கும் பொழுதே கன்னம் சிவந்து போகும் தன் மனையாளின் முகம் கண் முன்னே வர, இவளோ கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் முத்தத்தை வாரி வழங்க, அதில் லயிக்கவில்லை அவன் மனம்..

மாறாக இப்பொழுது எரிச்சலை கூட்டியது... அதற்குமேல் அதை தொடர முடியாமல்

“ஓகே நிலா... நான் தூங்கணும்.. நாளைக்கு பேசலாம்.. “ என்று தன் அலைபேசியை  அணைக்க போக

அவளோ

“அத்தூ.. திஸ் இஸ் நாட் பேர்.. உங்களுக்காகத்தான் நான் காத்துகிட்டிருக்கேன்.. என் பேச்சை கூட கேட்க பிடிக்கலையா... நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஐ மிஸ் யூ... “ என்று கீச்சிட்ட குரலில் ஆரம்பித்து கொஞ்சல் குரலில் முடித்தாள்..

அதில் தன் எரிச்சல் தணிந்துவிட,

“ஸாரி மா.. இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்.. டயர்ட் ஆ இருக்கு.. நாளைக்கு நிறைய பேசலாம்.. இப்ப சமத்தா படுத்து தூங்கு.. குட் நைட் பை.. “ என்க அவளோ மீண்டும் முத்தமிட்டு மனமே இல்லாமல் தன் அலைபேசியை அணைத்தாள்..

இரவிற்காக படகை  நடுவில் நிறுத்தி இருந்தனர்... மேலே பால் நிலா இவனை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க மேலே அண்ணாந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்..

எப்பொழுதும் தெரியும் அவன் நிலா பொண்ணிற்கு பதிலாக அந்த சதிகாரி நிலவினியின் முகம் தெரிந்தது..

திடுக்கிட்டு பாரவையை கசக்கி கொண்டு மீண்டும் உற்று பார்க்க மீண்டும் சற்று முன் உதடு சுளித்து கண்களை சுருக்கி புன்னகைத்த அவள் முகமே...

அவன் மனமோ அவசரமாக அந்த இரு நிலாக்களையும் ஆராய்ந்து பார்த்தது... இருவருக்கும் மலை அளவு வித்தியாசம்.. இருவருமே வேற வேற துருவங்களாக இருந்தனர்....

எல்லாவற்றிலும் அவன் ஆசைக்காதலி நிலா பொண்ணைவிட அவன் மனையாள் நிலவினி மேலாக இருக்க, அதை கண்டு,  தன் ஆராய்ச்சியை கண்டு திடுக்கிட்டான்..

அப்பொழுது அவன் தாத்தா சொல்லி இருந்த அறிவுரை நினைவு வந்தது..

எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்கலாம்.. தப்பில்லை.. ஆனால் யோசித்து ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதன் பிறகு அதை பற்றி யோசிக்க கூடாது என்று..

“அதுபோலத்தான் சாந்தினிக்கு நான் வாக்கு கொடுத்திருக்கிறேன்... அவளும் என் மீது ஆசையை வளர்த்து கொண்டிருக்கிறாள்..

அவளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது.. அவள் எல்லாவற்றிலும் கீழ இருந்தாலும் அன்பில் அவள் தான் முதல் இடம்.. என் மீது உயிரையே வைத்திருக்கிறாள்..

இந்த நிலவினி தாத்தாவின் பேச்சை கேட்டு நடிக்க வந்தவள்.. யாருக்கு தெரியும்.. இப்ப கூட நல்லவள் போல நடித்து கொண்டிருக்கலாம்.. என் மனதை கவர இப்படி எல்லாம் கூட நடித்து கொண்டிருக்கலாம்.. “என இல்லாத கோபத்தை இழுத்து வைத்து கொண்டான் அதிரதன்..

அவன் இன்னொரு மனமோ

“டேய் பைத்தியக்காரா? அந்த புள்ள முகத்தை பார்த்தால் நடிப்பதை போலவா இருக்கு? “ என்று முறைத்தபடி கேட்க

“ஷட் அப்.. நீ ஒன்னும் அவளுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்... எனக்கு என் நிலா பொண்ணுதான் பொண்டாட்டி.. “ என்று அதே பாட்டை ரிபீட் பண்ண அவன் மனஸ் ஓ அவனை இன்னுமாய் முறைத்தபடி தன் தலையில் அடித்து கொண்டது...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!