நிலவே என்னிடம் நெருங்காதே-49

 


அத்தியாயம்-49

றுநாள் அந்த ஆடி கார் கோயம்புத்தூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தது...

மீதம் இருந்த இடங்களையும் சுற்றி பார்த்தவர்கள் இப்பொழுது ஜமீனுக்கு திரும்பி கொண்டிருந்தனர்...

பின் இருக்கையில் இருந்த அந்த வெளிநாட்டு தம்பதியர்க்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி... அவர்களின் இந்த பயணத்தை அவர்கள் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து ரசித்ததாய் சிலாகித்து பேசி கொண்டு வந்தனர்..

முன் இருக்கையில் அமர்ந்து அவர்கள் பேசுவதற்கு வெறும் வெற்று புன்னகையை திருப்பி கொடுத்தவாறு வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள் நிலா...

ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனோ முன்னால் இருந்த சாலையை வெறித்தபடி உடல் இறுக கை முஷ்டியை  இறுக்கியபடி அந்த காரை செலுத்தி கொண்டிருந்தான்..

மறந்தும்  இவள் பக்கம் திரும்பிவிடவில்லை..

இப்பொழுது மட்டுமல்ல... இன்று  காலையில் இருந்தே உடலை இறுக்கி கொண்டுதான் இருக்கிறான்.. அவளிடம் எதுவும் பேசி இருக்கவில்லை..அப்பப்ப அவள் பக்கம் வரும் ஓரப் பார்வையும் மிஸ்ஸிங்..

இந்த ட்ரிப் க்கு வரும்பொழுது இருவருமே ஒரு வித இலகு தன்மையுடன் ஒருவரை ஒருவர் ஓரப் பார்வை பார்த்து ரசித்து கொண்டுதான் இருந்தனர்.. ஆனால் இந்த ட்ரிப் முடிவிலோ பல மைல் தூரம் விலகி சென்று விட்டதை  போல இருந்தது நிலாவுக்கு...

உள்ளம் வேதனைப் பட்டாலும் அதை மறைத்து கொண்டு அந்த தம்பதியினருடன் கலகலவென்று  பேசி சிரித்து கொண்டே வந்தாள் நிலா.. அவளின் அந்த பேச்சும் சிரிப்பும் இன்னும் ஆத்திரத்தை கூட்டியது அதிரனுக்கு...

“திமிர் பிடிச்சவ... நேற்று நைட் நடந்து கிட்டதுக்கு கொஞ்சமாவது வருந்துகிறாளா என்று பார்.... உடம்பெல்லாம் திமிர்.. அந்த ஜமீன்தாரை போலவே.. “ என்று பொரித்தவன் அவளை பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் சாலையின் பக்கம் கவனத்தை செலுத்தினான்...

ங்களை உங்கள் வீட்டு பிள்ளையாக நடத்திய உங்கள் அனைவருக்கு நன்றி.. எங்களுடைய இந்த நாட்களை என்றும் மறக்க முடியாது.. வி ஹேட் அ வொன்டர்புல் ஸ்டே.. மறக்கமுடியாத ஹனிமூன் எங்களுக்கு... தேங்க் யூ சோ மச்... “ என்று  ஸ்டீபன் மற்றும் லியா அனைவரையும் கட்டி அணைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசினை கொடுத்தனர்...

தேவநாதனும் ஜமீன் பாரம்பரிய வைர நகைகளில் ஒன்றை லியாவுக்கு பரிசளித்தார்... அவளோ வேண்டாம் என்று மறுத்து பின் அனைவரும் வற்புறுத்த வாங்கி கொண்டு அவர் பாதம் தொட்டு பணிந்தாள்..

நிலாவும் ஸ்டீபனுக்கு கைகுடுத்து லியாவை கட்டி அணைத்து பிரியா விடை கொடுக்க, அனைவரும் வாசல் வரை வந்து கை அசைத்து அந்த தம்பதியினருக்கு விடை கொடுத்தனர்...

அதிரதன் அவர்களை அழைத்து கொண்டு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டிற்கு சென்றான்...

அவர்களை விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்தவன் ஏதோ ஞாபகம் வர, தன் தாத்தாவை பார்க்க அவருடைய அறைக்கு சென்றான்...

அந்த அறையை  அடையவும் உள்ளே இருந்து கலகலவென்று சிரிப்பு சத்தம் கேட்டது... உள்ளே செல்லாமலயே அந்த சிரிப்பு யாருடையது என்று புரிந்தது...

ஒரு நொடி அவளின் மலர்ந்த சிரிப்பை ரசித்தாலும் அடுத்த நொடி எரிச்சலாக வந்தது.. உடனே அவளை பார்க்க பிடிக்காமல் தன் அறைக்கு திரும்பி செல்ல முயன்றவன் கால்கள் அடுத்து கேட்ட பேச்சால் அப்படியே நின்றது....

“வாவ்... நீங்க ரொம்ப கில்லாடி தாத்தா... “ என்றாள் நிலா சிரித்தவாறு..

“ஹா ஹா ஹா.. தேவநாதன் ஜமீன்தார் னா கொக்கா? “ என்று தன் மீசையை பெருமையுடன் நீவி விட்டு கொண்டார்...

“எப்படி தாத்தா... உங்க பேரனுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வராமல் இவ்வளவும் செய்திருக்கீங்க? “ என்றாள் ஆச்சர்யத்துடன்..

தன் பெயர் அடிபடவும் இன்னும் காதை நன்றாக தீட்டி வைத்து கொண்டு உள்ளே நடக்கும் சம்பாசணையை கூர்ந்து கவனித்தான்...

“ஹா ஹா ஹா அவன் கிடக்கிறான் பொடிப்பய.. நான் தூக்கி வளர்த்தவன்.. என்னை அவ்வளவு எளிதாக ஜெயித்து விட முடியுமா? அவனை மட்டும் உன்னை அழைத்து கொண்டு ஹனிமூன் க்கு போய்ட்டு வாடா னு சொல்லி இருந்தால் அசஞ்சிருப்பானா உன் புருஷன்...

எப்படி அந்த கபுல் க்கு உதவி செய்வதை போல உங்க ரெண்டு பேரையும் அனுப்பி வைத்தேன்...

உனக்கு ஒன்னு தெரியுமா நிலா... ஆக்சுவலா டேவிட் ம் அவர் மனைவியும்தான் இந்தியா வருவதாக இருந்தது.. ஐந்து மாதங்கள் முன்பு அவர் கேட்டிருந்தார்.. நானும் அதை ஒத்து கொண்டிருந்தேன்.. அப்புறம்தான் உங்க கல்யாணம் நடந்துவிட, அங்கே டேவிட் மகனுக்கும் அப்பொழுதுதான் திருமணம் நடந்து இருந்தது..

உடனே அவர்கள் இருவரையும் நான்தான் தேனிலவுக்காக இந்தியாவுக்கு அழைத்தேன்.. அவர்களும் ஒத்து கொண்டார்கள்... உன் புருஷன் அப்பவும் என்னை நம்பாமல் நான் அனுப்பிய இமெயில் எல்லாம் எடுத்து பார்த்திருப்பான்..

அதில் டேவிட் குடும்பத்தின் இந்திய பயணம் என்றுதான் இருக்கும்... அது யார் யார் வரப்போகிறார்கள் என்று இருந்திருக்காது... அதை பார்த்துவிட்டு இது நான் எதுவும் திட்டமிடவில்லை என்று நினைத்திருப்பான்.. அதனால்தான் அவர்களுடன் செல்ல ஒத்து கொண்டான்...

அந்த ஸ்டீபன் மற்றும் லியாவிடம் சொல்லி உங்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க சொல்லி இருந்தேன்.. அந்த இரவு பார்ட்டி கூட என்னுடைய திட்டம்தான்... “ என்று சிரித்தார் அந்த சாணக்கியர்..

அதை கேட்டு அசந்து நின்றாள் நிலா... ஆனால் அடுத்த நொடி அவள் முகம் வாடிவிட்டது..

“இவர் இவ்வளவு மெனக்கெட்டு தங்களை ஹனிமூன் அனுப்பி வைத்த காரணம்தான் நிறைவேற வில்லையே “ என்று முகம் வாடினாலும் தன்னை மறைத்து கொண்டு

“எதுக்காக தாத்தா இந்த நாடகம்? “ என்றாள் லேசாக முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா. அம்மணி.. சில விசயங்கள் தானா கனியும் னு நாம காத்திருக்க கூடாது... தானா கனியாட்டியும் அதை தடியால் அடித்து கனிய வைக்கவேண்டும்...

என் பேரன் இருக்கானே.. சரியான அழுத்தக்காரன்.. அவ்வளவு சீக்கிரம் மலை இறங்கி தன் ஈகோவை விட்டு இறங்கி வர மாட்டான்.. அவனுக்கு உன் அருமை புரிய வேண்டும்..

அழிக்காமலயே ஒரு கோட்டை சின்னதாக்க அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட்டுவிட்டால் போதும்.. அதுபோலத்தான்.. அவன் அந்த பட்டணத்துக்காரியிடம் மயங்கி கிடக்கும் மயக்கத்தை தெளிய வைக்க வேண்டும் என்றால் அவளை விட அழகியை அவன் முன்னே  காட்டணும்..

அதோடு கண் பார்க்காததை மூளை சீக்கிரம் மறந்துவிடுமாம்.. அதே போல அடிக்கடி கண் முன்னே  இருப்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுமாம்.. அதனால் தான் உன்னை அவன் கண் முன்னே இருக்க வைத்தது..  உங்கள் இருவரையும் தனியாக இருக்க வைத்தது..

லியா பொண்ணு சொன்னாள்  அவனிடம் நல்ல மாற்றம் வந்திருப்பதாக....

என்ன அம்மணி? என் திட்டம் வெற்றிதான? சீக்கிரம் எனக்கு கொள்ளு பேரன் வந்திடுவான் தான? “ என்றார் மறைமுகமாக கேட்டு சிரித்தவாறு...   

அவளோ வேதனையுடன் தலையை குனிந்து கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்..

உள்ளுக்குள்ளே

"என்னை மன்னிச்சிடுங்க தாத்தா...உங்க திட்டம் தெரியாமல் கிட்ட வந்த என் புருஷனை எட்டி உதைத்து விட்டேன்... ஆசையாக என்னிடம் வந்தவரை இன்னுமாய் விலகி போக வைத்துவிட்டேன்.. இப்பொழுது முதலுக்கே மோசமான கதையாய் ஆகிவிட்டது என் நிலை.. " என்று  உள்ளுக்குள் புழுங்கினாள்..

அவள் தலை குனிந்து நின்றதை அவள் வெட்க படுவதாக எண்ணி கொண்டவர்

"எப்படியோ அம்மணி... என் நெஞ்சு வலி நாடகம் அப்புறம் இந்த ஹனிமூன் திட்டம் இரண்டும் மெகா வெற்றி.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு...இனிமேல் என் பேரன் எனக்கு கிடைத்து விடுவான் ...  "  என்று சிலாகித்து பேச, அதை எல்லாம் வெளியில் நின்று  கேட்டு கொண்டிருந்தவனோ எரிமலையானான்...

அவர் அவனை ஏமாற்றி கேரளாவுக்கு அனுப்பி வைத்த நாடகத்தை கண்டே கொதித்து போனவன் அவர் முழுவதும் பேசி முடிக்கட்டும் என்று  காத்திருந்தவன் கடைசியில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொல்லி அவனை இங்கே இருக்க வைத்ததும் நாடகம் என்று  சொல்லவும் பொங்கி எழுந்தான்...

அதுக்குத்தான் பகலில் பக்கம் பார்த்து பேசணும்.. இரவில் அதுவும் பேசக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.. ஆனால் தன் திட்டம் வெற்றி அடைந்த களிப்பில் அந்த பெரியவர் அதை மறந்து விட்டிருந்தார்...

“சே... எவ்வளவு வஞ்சகமாக என்னை ஏமாற்றிவிட்டார்... என்ன ஒரு சாணக்கியத்தனம்? என்னமா திட்டம் போட்டு காயை நகர்த்தி இருக்கிறார்.. அதைக் கூட புரிஞ்சுக்க முடியாத அடி முட்டாளா இருந்திருக்கிறேனே..!  

அவர் ஆட்டி வைத்ததுக்கு எல்லாம் நானும் ஆடி இருக்கிறேனே.. சே... அவரை சும்மா விட மாட்டேன்.. " என்று பொங்கி எழுந்தவன்

"தா.... த்...... தா..... " என்று அந்த ஜமீனே அதிரும் வண்ணம் கர்ஜித்தான்...

திடீரென்று  கேட்ட தன் பேரனின் குரலால் திடுக்கிட்டவர் அவசரமாக வெளியில் வர அங்கே சினம் கொண்டு சீறி பாயும் புலியாய் ஆவேசத்துடன் நின்று கொண்டிருந்தான் அதிரதன்...

"சீ... நீங்க இவ்வளவு சீப் ஆ இருப்பிங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை...இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது..

இந்த மயக்கும் மோகிணியை வைத்து என்னை மயக்கி உங்க பக்கம் இழுக்கும் இந்த கேவலமான காரியத்தை செய்ய எப்படி உங்களால முடிந்தது.. எதுனாலும் என்கூட நேருக்கு நேர் மோதி இருக்கணும்.. அதை விட்டு இது என்ன முதுகுல குத்தற வேலை..

நீங்க போய் இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்வீங்கணு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. " என்று பொரிந்து தள்ளியவன் தன் ஆறடிக்கும் மேலான உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவன் அவரை நேராக எரிக்கும் பார்வை பார்த்தவன்

"வெல் மிஸ்டர் தேவநாதன் ஜமீன்தார்.. உங்க திட்டம் எல்லாம் இந்த அதிரதனிடம் பழிக்காது... எவ்வளவுதான் நீங்க கூடிப்பேசி திட்டம் போட்டு எனக்கு எதிரா சதி செய்து என்னை உங்க பக்கம் இழுக்க முயன்றாலும் இந்த அதிரதன் வளைந்து கொடுக்க மாட்டான்..

யாரை என்னிடம் இருந்து பிரிக்க இவ்வளவு சதி திட்டம் போட்டிங்களோ இனி அவளுடன் தான் குடும்பம் நடத்த போகிறேன்.. இவ்வளவு நாள் நம்ம கலாச்சாரத்தை மதித்து முறைப்படி இவளை விவாகரத்து செய்துவிட்டு என் நிலாவை மணந்து கொள்ள எண்ணி இருந்தேன்..

ஆனால் இனி அதுவரைக்கும் காத்திருக்க போவதில்லை.. இன்றிலிருந்து என் நிலா பொண்ணுதான் நான் தாலி கட்டாத என் மனைவி... அவளுடன் தான் வாழப்போகிறேன்..

அடுத்த பத்து மாதத்தில்  நீங்க கேட்ட இந்த ஜமீன் வாரிசு என் நிலா மூலமாகத்தான் வரும்...நாட்களை எண்ணிக் கொள்ளுங்கள்.. குட் பை... " என்று இருவரையும் சுட்டெறிப்பவனை போல பார்த்து புயலென வாயிலை நோக்கி நடந்தான்..

அவன் போட்ட சத்தத்தை கேட்டு அறையில் இருந்து வெளிவந்த மனோகரியும் நெடுமாறனும் அதிரதனின் கோபத்தை கண்டு அரண்டு போய் நின்றார்கள்.. தன்னை சுதாரித்து கொண்ட மனோகரி

“அதி கண்ணா....”  என்று வேகமாக சென்று அவன் கை பிடித்து அவனை தடுக்க முயல

"ப்ளீஸ் மா... என்னை தடுக்காதிங்க.. இனி எனக்கும் இந்த ஜமீனுக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல.. நான் வருகிறேன்... " என்று அவர் கையை விலக்கி கொண்டு விடுவிடுவென்று வெளியேறி சென்றான்....

அவன் கோபத்தை கண்ட தேவநாதனோ அதிர்ந்து தளர்ந்து போய் நின்றார்....

இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவர்.. எப்படியும் தன் பேரன் மனம் மாறி இருப்பான் என்ற சந்தோஷத்தில் உற்சாகத்தில் சூழ்நிலை மறந்து தன் உள்ளே இருந்ததை வெளியில் கொட்டி இருக்க, அது இப்படி பூமரங்காக அவரையே தாக்கும் என்று அறிந்திருக்கவில்லை...

ரொம்பவும் தளர்ந்து போய் தன் கையில் இருந்த கைத்தடியை கெட்டியாக பற்றி கொண்டார்..

அவரை ஆதரவாக பற்றி கொண்டவள் தன் கணவன் சென்ற திசையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த நிலாபொண்ணு....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!