நிலவே என்னிடம் நெருங்காதே-54

 


அத்தியாயம்-54

போர்க்களத்தில் பாய்ந்து செல்லும் தேர்வீரனின் வேகத்தை விட சீறி பாய்ந்து கொண்டிருந்தது அதிரதனின் கார்.. 

அதை அவ்வளவு வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தான் அந்த தேர்வீரன்...

கைகள் தானாக அந்த காரை இயக்கி கொண்டிருந்தாலும் அவன் உள்ளேயே சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலாக இருந்தது..

அவனை நினைத்து அவனுக்கே கோபமாக வந்தது..

அவன் தாத்தாவிடம் செய்து வந்த சபதம் நிறைவேறும் கடைசி நொடியில் அது நிறைவேறாமல் போய்விட்டதை எண்ணி கொதித்தது.. அதுவும் அவர்கள்  யாருமே தடையாக இல்லாமல் தானே அதற்கு தடையாக வந்ததை எண்ணி அவன்மீது கோபம் கோபமாக வந்தது..

அத்தனை ஆசையுடனும் தாபத்துடனும் தன் நிலா பொண்ணை அணைக்க முயன்றவனுக்கு எப்படி முடியாமல் போனது?  ஏன் அவன் மனம் அதற்கு ஒத்துழைக்கவில்லை ? என்று ஏதேதோ எண்ணி உள்ளுக்குள் தகித்தபடியே தன் வீட்டை அடைந்திருந்தான்..  

அண்ணாநகரில் பிரதானமான பகுதியில் கம்பீரமாக நின்றிருந்தது அவன் சமீபத்தில் வாங்கியிருந்த அந்த சொகுசு பங்களா..

அந்த பங்களாவில் கேட்டின் முன்னே காரை நிறுத்தியவன் அதை நிமிர்ந்து பார்க்க அவனுக்கு பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது..

கிட்டத்தட்ட அவன் தாத்தா தேவநாத ஜமீன்தாரின் ஜமீன் மாளிகையின் சாயலில் ஆனால் அதை விட சிறிய வடிவில் இருந்தது அந்த பங்களா.

அதன் அமைப்பை பார்த்த உடனே தன் ஜமீன் மாளிகையைப் போல இருக்கிறதே என்று எண்ணியவன் உடனே அதை வாங்கி விட்டான் ..

கடந்த மூன்று மாதம் முன்புதான் அதை பதிவு செய்திருந்தான்..  

எப்படியோ தன் சொந்த காலில் நின்று தன் தொழிலை வளர்த்ததோடு அவன் தாத்தாவைப் போலவே அவனாகவே ஒரு மாளிகையை சொந்தமாக்கிக் கொள்ள முடிந்ததை எண்ணி அவனுக்கே பெருமையாக இருந்தது..

ஒரு கர்வத்துடன் அந்த பங்களாவை நிமிர்ந்து பார்க்க அதற்குள் செக்யூரிட்டி கதவை திறந்து வைத்து இவனுக்காக காத்து கொண்டிருந்தான்..

அவசரமாக அந்த காவலாளி இவனை நோக்கி வேக நடையில் வர அவனோ அவனுக்காக காத்திருக்காமல் விருட்டென்று தன் காரை உள்ளே செலுத்தினான்..

அந்த காவலாளியும் ஆச்சரியமாக முன்னால் சென்ற காரையே  பார்த்துக்கொண்டு இருந்தான்..

தினமும் அதிரதன் அந்த காவலாளியை கடக்கும் பொழுது திரும்பி அவனை பார்த்து  புன்னகைத்துவிட்டு செல்வது அதிரதன் வழக்கம்..

இன்று தன் முதலாளியிடம் சொல்ல ஒரு செய்தி இருக்கவே அந்த காவலாளி அதிரதனை நோக்கி வர, அவனோ வழக்கமாக காட்டும் புன்னகையைக் கூட காட்டாமல் விருட்டென்று காரை கிளப்பி சென்றது கஷ்டமாக இருந்தது..

பணக்காரர்களுக்கு இதெல்லாம் சகஜம் என்று அவனும் தோளை குலுக்கி விட்டு தன் இடத்திற்கு சென்றான்..

காரை அதன் செட்டில் நிறுத்தியவன் சாவியை உருவி கையில் ஸ்டைலாக சுழற்றியபடி வீட்டிற்கு வந்தான்...உள்ளுக்குள் இன்னுமே ஆத்திரமும் எரிச்சலும் முன்டி அடித்து கொண்டு இருந்ததுதான்...     

அதனுடனேயே நடைபாதையில் வேக நடையில் நடந்தவன் வீட்டின் நுழைவாயிலை அடைந்ததும் கதவை திறப்பதற்காக கதவின் மேல் கை வைத்து சாவியை பொருத்த அடுத்த நொடி கதவு தானாக திறந்து கொண்டது..

ஒரு நொடி திடுக்கிட்டு உள்ளே பார்க்க கதவை  திறந்த படி நின்றிருந்தாள் அவள்..

அதிரதனுக்கு தூக்கி வாரி  போட மீண்டும் தன் கண்களை தேய்த்துக் கொண்டு நன்றாக உற்றுப் பார்க்க அங்கே  பால்நிலா போல பளிச்சென்று ஒளிவீசும் முகமும்  கண்ணில் மின்னும் குறும்பும் நக்கலாக சிரித்து கொண்டிருந்த இதழுமாய் நின்றிருந்தாள்  அவன் மனையாள் நிலவினி....

அவளை கண்டதும் தன்னையும் மீறி ஆச்சரியத்தில் விழிகளை பெரிதாக விரிக்க

“என்ன ஜமீன்தாரே!.. இந்த ட்விஸ்ட் ஐ நீங்க எதிர்பார்க்கலை போல..  இந்த முழி முழிக்கிறீங்க? ஆனாலும் உங்க முழி செம்ம க்யூட் ஆ இருக்கு...“  என்று தன் புருவத்தை உயர்த்தி ஒற்றை கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் நிலா..

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன் அவளைப் பார்த்து முறைத்து விட்டு அவளை தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்..

“ஏய்.. நீ எப்படி இங்க? “ என்று கோபமாக கத்த ஆரம்பிக்க அதே நேரம்

“ஐ... அண்ணா வந்தாச்சு... “  என்று சந்தோஷ  கூச்சலிட்டவாறு அவனை நோக்கி ஓடிவந்தாள்  யாழினி..

தன் செல்ல தங்கையை கண்டதும் அதுவரை கடுகடுவென்று இருந்த முகத்தை உடனே மாற்றிக் கொண்டு இலகிய முகத்துடன் அவளை எதிர்கொள்ள அவளோ தன் அண்ணனை பார்த்து பல நாட்கள் ஆனது போல ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்..  

அவனுமே அதில் நெகிழ்ந்து போனவன் அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு

"எப்படா வந்த யாழிக்குட்டி ? "  என்றவாறு பார்வையை தன் தங்கையை தாண்டி பின்னால் செலுத்தினான்...

அங்கே வரவேற்பறையில் அவன் அன்னை மனோகரி மற்றும் தந்தை நெடுமாறன் அமர்ந்து இவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் அருகில் அமர்ந்திருந்தார் அந்த ஜமீன்தார்..

இவனை பார்க்காமல் வேற எங்கேயோ முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்..

அதுவரை இளகிய நிலையில் இருந்தவன் அவரைக் கண்டதும் மீண்டும் உள்ளுக்குள் பொங்க ஆரம்பித்தான்..  

ஆனால் அதேநேரம் யாழினி தன் பேச்சை தொடர்ந்தாள்..

“நாங்க ஈவினிங் ஏ வந்துட்டோம் அண்ணா... உன் நம்பருக்கு கால் பண்ணி பார்த்தோம்.. ஆனால் அது ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.. “  என்று பேசியவாறு தன் அண்ணனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..  

அவனும் வரவேற்பறைக்கு சென்று தன் பெற்றோர்களை பார்த்தவன் அவர்களை  வரவேற்கும் விதமாக

“வாங்க மா வாங்கப்பா..  என்ன திடீர்னு வந்திருக்கீங்க? “  என்று தன் பெற்றோர்களை மட்டும் வரவேற்றவன் தன் தாத்தா பக்கம் திரும்ப வில்லை..

ஆனால் ஓரக்கண்ணால் அவர் முகம் எப்படி சுண்டி போகிறது என்று பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தான்..  

அவரோ இன்னுமாய் புன்னகைத்தவாறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.. அதை கண்டவனுக்கு இன்னும் பற்றி கொண்டு வந்தது..

“கொஞ்சமாவது பீல் பண்றாரா  பார்..  எல்லாம் திமிர்.. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற திமிர்.. “  என்றும் உள்ளுக்குள் கருவியவன் அவன் அன்னையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டு  சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்...

“யாழிதான் சென்னையை சுற்றி பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்தாள்..கூடவே நீ உன் லேப்டாப் ஐ அங்கயே விட்டுட்டு வந்திட்டியா.. சரி அதையும் கொடுத்துட்டு அப்படியே ஒரு வாரம் தங்கிவிட்டு செல்லலாம் என்று எல்லாரும் கிளம்பி வந்திட்டோம்..

அப்பாவும் இங்க இருந்தே தொழிலை பார்த்து கொள்வார்.. எல்லாருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆ இருக்கட்டும் என்று கிளம்பி வந்திட்டோம்.. “ என்றாள் மனோகரி சிரித்தவாறு...

“என்னது? ஒரு வாரமா? இதுல எதுவும் இந்த சாணக்கியரின் திட்டம் இருக்குமோ? “ என்று ஓரக்கண்ணால் அவரை பார்க்க அவரோ இவன் பார்வையை கண்டு கொண்டவர் தன் மீசையை நீவி விட்டு கொண்டு நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டார்..  

அவரின் சிரிப்பை கண்டவன் கடுப்பாகி தன் தலையை சிலுப்பி கொண்டவன்

“ஒரு வாரம் என்ன? எத்தனை வருடங்கள் இங்கே அந்த சதிகாரியை என் கண் முன்னால் உலா வர விட்டாலும் என் மனம் மாறாது.. “ என்று சிலிர்த்து கொண்டவன் மற்ற கதைகளை பேசி கொண்டிருந்தான்..   

அதற்குள் நிலா சமையலறைக்குச் சென்று  குடிப்பதற்காக பழச்சாற்றை கொண்டுவந்து அனைவரிடமும் கொடுத்தாள்..

அதிரதன் முன்னே நீட்ட அவனும் அவளை  முறைத்தபடி எடுத்துக் கொண்டான்..

“சரி மா..  எல்லாரும் சாப்டீங்களா?  நான் வேணா ஆன்லைனில் ஆர்டர் பண்ணவா?  கிச்சனில் எந்த பொருளுமே இருந்திருக்காது.. “  என்று  யோசனையுடன் வினவினான்..  

“அதெல்லாம் நாங்கள் அப்பயே சாப்பிட்டோம் அதி கண்ணா.. நிலாவும் யாழியும் கடைக்கு போய் தேவையான சாமான்களையெல்லாம் வாங்கி வந்து விட்டனர்..

நிலா தான் சமைத்தாள்..  சூப்பராக இருக்கு.. நீயும் சாப்பிட வா.. “  என்று புன்னகைக்க அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது..

இதுவரை அவளை எதிரியாக பார்த்துக்கொண்டிருந்த அவன்  அன்னை இப்பொழுது நிலா புராணம் பாடுவதை கேட்க கடுப்பாக இருந்தது

தன் பக்கம் மீதி இருந்தவர்களையும் அவள் தன் பக்கமாக இழுத்து விட்ட தந்திரம் நன்றாகவே புரிந்தது... தன் அன்னை சொன்னதை கேட்டதும்

“அது என்ன? உரிமையானவள் போல என் வீட்டில் வந்து இவளாகவே எல்லாம் செய்வது? “  என்று உள்ளுக்குள் பொரிந்தவன் அவளை பார்த்து முறைக்க அவளுமே அவன் தன் அன்னையும் இவள் பக்கம் வந்துவிட்டதை எண்ணி புலம்பியதை புரிந்தவளாய் தன் சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி கொண்டு தன் பார்வையை வேற பக்கம் மாற்றி கொண்டாள்..

அவளை முறைத்து பாத்தவன்

“சரி.. எல்லாரும் தூங்குங்க.. காலையில் பார்க்கலாம்... குட் நைட் யாழி... “ என்று அனைவருக்கும் இரவு வணக்கத்தை சொல்லி உள்ளே இருந்த படிகள் வழியாக மாடி ஏறி தன் அறைக்கு சென்றான்...

அவன் அணிந்திருந்த ஆடையை களைந்து குளியலறைக்கு சென்று நன்றாக குளித்து முடித்தவன் இலகுவான ஒரு இரவு ஆடையை அணிந்து கொண்டு வெளியில் வந்தவன் கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டு ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தான்..

அதே நேரம் அவன் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள் நிலவினி..  

அவளை கண்டதும் கட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்தவன் நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டு அவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன்

“ஏய்.. இப்ப எதுக்கு நீ இங்க வந்த? " என்று உறுமினான்...

“ஹா ஹா ஹா என்ன ஜமீன்தாரே.... இங்க சென்னைக்கு எதுக்கு வந்தனு  கேட்கறீங்களா இல்ல உங்க பெட்ரூமுக்கு இல்லை இல்லை நம்ம பெட்ரூமுக்கு எதுக்கு வந்தேன்னு கேட்கிறீங்களா? “  என்றாள் புன்னகைத்தவாறு

அவளை நேராக பார்த்து முறைத்தவன்

“ரெண்டும் தான்..”  என்றான் அவளை இன்னுமாய் முறைத்தவாறு

“ஓகே அப்ப ரெண்டுக்கும் சேர்த்து ஒரே பதில் தான்... ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தியாம்.. நான் சொல்லல..  நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்க..

அதனால அந்த அதிரதன் எவ்விடமோ இந்த மிஸஸ் நிலவினி அதிரதனும் அவ்விடமே.. “  என்று தலை சரித்து கண்சிமிட்டி சிரித்தாள்..

அதைக் கேட்டவன் இன்னும் கடுப்பாகி

“ஷட் அப்... இடியட்... நான்தான் உன்னை என் பொண்டாட்டி னு ஏத்துக்கவே  இல்லையே.. இந்த மாதிரி பிதற்றுவதை எல்லாம் நிறுத்து.. அப்புறம் திடீர் என்று எதுக்கு இந்த டயலாக்..? “ என்று அவளை பார்த்தவாறு தன் தாடையில் கை வைத்து யோசித்தவன் எதையோ கண்டு கொண்டவனை போல

“காட் இட்...ஓ இதுதான் உங்களுடைய அடுத்த திட்டமா? என்னை அங்கு பிடித்து வைக்க முடியவில்லை என்றதும் உன் கூட்டணி தேவநாதன் சாணக்கியர் அடுத்து குடும்பத்தையே பெயர்த்துக் கொண்டு இங்கே வந்துவிட்டாராக்கும்!  

அவர் எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசித்தாலும் என்னை ஜெயிக்க முடியாது..  என்னைக்கும் நீ எனக்கு மனைவியாக முடியாது..”  என்று பழைய பல்லவியை பாட அவளோ  தன் காதில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டவள்

“ஐயோ...  போதும் ஜமீன்தாரே...  கொஞ்ச நாளா தான் இந்த பாட்டை நிறுத்தி இருந்திங்க.. திரும்பவுமாஎன்னால முடியல.." என்று  சொல்லி சிரித்தவள் 

“ஒரு விஷயம் ஜமீன்தாரே..!  நீங்கள் என்னை மனைவியாக ஏற்று கொள்ளவில்லை  என்றாலும் நீங்கள் கட்டிய இந்த தாலி என் கழுத்தில் இருக்கிறவரை நான்தான் உங்கள் மனைவி.. நீங்கதான் என் கண்கண்ட தெய்வம்...

இது நான் சொல்லவில்லை.. சட்டமும் அதைத்தான் சொல்கிறது.. முடிந்தால் என்னை சட்டப்படி விலக்கி விட்டு அப்புறம் சொல்லுங்க நான் உங்க மனைவி இல்லைனு.. அப்ப ஒத்துக்கறேன்.. இப்ப கம்முனு படுங்க.." என்றவள் பார்வை அந்த அறையின்  மூலையில் சற்றுமுன் அவன் கழட்டி வீசி இருந்த அவன் ஆடைகளிடம் சென்றது...  

"என்ன ஜமீன்தாரே.. இப்படித்தான் பொறுப்பில்லாமல் இருப்பீங்களா? இதை இப்படியா போட்டு வைப்பது?”  

என்று செல்லமாக முறைத்தவள் அங்கு சென்று குனிந்து அந்த ஆடையை எடுத்தாள்.. 

அப்பொழுது குபீரென்று ஒரு நெடி அவள் நாசியை தாக்கியது...

அது என்ன நெடி என்று நொடியில் புரிந்து விட அவள் முகம் சுருங்கியது ஒரு நொடி..

அதுவரை அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவன் ஒரு நொடி அவள் முகம் கோணியதை கண்டு கொண்டவன்  அவளை வருத்தப்பட வைக்க ஒரு துருப்பு சீட்டு கிடைத்துவிட்டதை எண்ணி உள்ளுக்குள் துள்ளி குதித்தான்...

“என்ன தேவநாதன் ஜமீன்தார் வீட்டு மருமகளே! அந்த ட்ரெஸ் ஐ பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிட்ட... ஆமா அதுல இருந்து வர்ற ஸ்மெல் என்ன ஸ்மெல் னு தெரியுதா? " என்றான் நக்கலாக சிரித்தவாறு..

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“ஹா ஹா ஹா இது கூட தெரியாமல் நான் எப்படி தேவநாதன் ஜமீன்தார் வீட்டு மருமகளா இருப்பதாம்..!  இது ஒரு பெர்ப்யூம் ஸ்மெல்.." என்றாள் அவனை போலவே நக்கலாக சிரித்தவாறு. .

"ஹ்ம்ம் குட்.. வெரி குட்.. பட்டிகாட்டில் பிறந்திருந்தாலும் இந்த மாதிரி  பெர்ப்யூம் ஸ்மெல் எல்லாம் கூட கரெக்ட் ஆ தெரிஞ்சு வச்சிருக்கியே..ஆமா இதன் பெயர் தெரியுமா? “ என்றான் அதே நக்கல் சிரிப்புடன்..

"ஏன் தெரியாது..?." என்று மிடுக்குடன் முறைத்தவள் அந்த பெர்ப்யூம் ன் பெயரை சொல்லி அதுதானே என்றாள்..

அதை கேட்டு வாயடைத்து போனான் அதிரதன்..

பொதுவாக இந்த பெர்ப்யூம் ரொம்ப காஸ்ட்லியானது.. பட்டணத்தில் இருக்கும் பெண்கள்தான் அதுவும் மேல்தட்டு மக்களே இந்த மாதிரி பெர்ப்யூம்களை பயன்படுத்துவார்கள்..

சாந்தினிக்கு இந்த பெர்ப்யூம் என்றால் கொள்ளை பிரியம். குளிப்பதை போல எப்பொழுதும் உடல் எல்லாம் அடித்து கொள்வாள்..

அவளை கைகளில்  அள்ளிய பொழுது அவளிடம் இருந்த அந்த ஸ்மெல் அவன் ஆடையிலும் ஒட்டி கொண்டது.. அதை வைத்துத்தான் அவளை வெறுப்பேற்றி கொண்டிருந்தான்.. இல்லை வெறுப்பேற்ற முயன்று கொண்டிருந்தான்..

அவளோ அவன் போடும் அத்தனை பாலையும் சிக்சராக விலாசியவள் அவனே எதிர்பாராமல் அந்த பெர்ப்யூம் பெயரையும் சொல்ல , இப்பொழுது பல்ப் வாங்குவது இவனாயிற்று...

“என்ன ஜமீன்தாரே !.. அப்படி திகைச்சு போய்ட்டிங்க.. நான்தான் அன்னைக்கே சொன்னேனே.. ஆளை பார்த்து எடை போடாதீங்க.. அவங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீங்களாகவே முடிவு செய்யாதிங்க னு...” என்று கிளுக்கி சிரித்தவள்

“நான் இந்த மாதிரி பெர்ப்யூம் ஐ பயன்படுத்தாவிட்டாலும் நான் படிக்கும் பொழுது எங்கள் கல்லூரியில் இந்த பெர்ப்யூம் ரொம்பவும் பிரபலம்.. முக்கால்வாசி பெண்கள் இந்த பெர்ப்யூமைத்தான் பயன்படுத்துவார்கள் அதனால் எனக்கும் இதெல்லாம் தெரியுமாக்கும் " என்று நக்கலாக சிரித்தாள்..

அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை கண்டு இன்னுமாய் கடுப்பானவன் எப்படியாவது அவளை வருத்தப்பட வேதனைப்பட  வைக்க வேண்டும் என்று அவசரமாக தன் தலையை தட்டி யோசித்தவன் அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.....

"ஹ்ம்ம் ரொம்ப புத்திசாலிதான்.. அப்படியே இது யார் பயன்படுத்தி இருப்பார்கள் என்று சொல்லேன் பார்க்கலாம்.. " என்றான் அவனும் விடாமல் பால் போட்டவாறு...

“ஐய... இதை கண்டுபிடிக்க சிபிசிஐடி யா வேணும்? எல்லாம் உங்க நிலா பொண்ணு அடிச்சிகிட்டதுதான..அதுதான் அவளை கொஞ்சறப்ப உங்க மேலயும் ஒட்டிகிச்சு.. " என்றாள் அதே நக்கலுடன் கொஞ்சமும் அலட்டிக்காமல்..

“ஹா ஹா ஹா.. கரெக்ட்..சூப்பர் பட்டிக்காடு.. ஆனால் இன்று  வெறும் கொஞ்சல்ஸ் மட்டும் அல்ல.. அதுக்கும் மேல... நேற்று உன் கூட்டணி சாணக்கியர் தேவநாதன் ஜமீன்தார் கிட்ட நான் சொல்லிவிட்டு வந்தது நினைவு இருக்கா... 

என் நிலா பொண்ணுடன் கணவன் மனைவியாக வாழப்போகிறேன் என்று.. அதை,  என் சபதத்தை நிறைவேற்றி வைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்..

என் நிலா ஹனி இருக்காளே... செம டேஸ்ட்.. கைகளில் அள்ளும் பொழுது கொஞ்சம் கூட வெய்ட் ஏ இல்லை.. அப்படியே ஒரு பூங்கொத்தை கைகளில் ஏந்தியதை போல அவ்வளவு சாப்ட்..

அதுவும் அவள் கட்டி இருந்தாளே ஒரு புடவை. நீயும்தான் சேலைனு ஒன்ன சுத்திக்கிற..என் நிலா கிட்ட கேட்டுப்பார். எப்படி சேலை கட்டுவது னு சொல்லித்தருவா..

அவள் இடை இருக்கே அது அப்படி ஒரு கொடி இடை.. அவள் கால் இரண்டும் வாழை தண்டு...அதுவும் அவளின் வளைவு இருக்கே.. “ என்று சாந்தினியை  அந்தரங்கமாக வர்ணிக்க, அதை கேட்ட நிலாவோ உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தாள்..

தன் கணவன் வேற ஒரு பொண்ணை நிமிர்ந்து பார்த்தாலே பத்திகிட்டு வரும் எந்த பெண்ணுக்கும்.. தன்னை தவிர வேற யாரையும் அவன் ஏறெடுத்தும் பார்க்ககூடாது என்று பொறாமை கொள்வர் பெண்கள்..

இங்கு இவனோ கட்டின மனைவியிடமே இன்னொரு பெண்ணை ரசித்து அவளின் ஒவ்வொரு பாகத்தையும் வர்ணிப்பதை கண்டு கொதித்து கொண்டு வந்தது அவளையும் மீறி...

அவன் கன்னத்தில் ஓங்கி அறையவேண்டும் போல ஆத்திரம்.. நுனி மூக்கு விடைத்து சிவக்க, காது இரண்டும் கோபத்தில் விடைத்து கொண்டு நிக்க அவள் கை முஷ்டி இறுக ஆரம்பித்தது...

அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவள்  உடல்மொழியில் தெரிந்த மாற்றங்களை கண்டு கொண்டவன்  அவளுக்கு கோபம் வருகிறது என தெரியவும் இன்னுமே துள்ளி குதித்தவன் தன் பேச்சை இன்னுமே சுவாரஸ்யத்துடன் தொடர்ந்தான்..

அவன் அவளை அள்ளி கொண்டதும் கட்டிலில் கிடத்தி தாபத்துடன் அவளை நோக்கி குனிந்ததையும் ஏற்ற இறக்கத்துடன் அனுபவித்து   ரசித்து கூற நிலாவுக்கோ அன்று அவன் அவளை அள்ளி கொண்டு சென்றது கண் முன்னே வந்தது..

அந்த சுகம் அப்படியே உள்ளுக்குள் பரவ, அன்று அவன் தன் இதழ் நோக்கி தாபத்துடன் குனிந்த தருணம் மீண்டுமாய் கண் முன்னே வர, அவள் உதடுகள் தவிக்க ஆரம்பித்தன..

என்னதான் அவன் அவளை விலக்கி வைத்திருப்பது அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று காட்டிகொண்டாலும் அடிப்படையில் அவளும் இரத்தமும் சதையுமான ஒரு மனுஷிதானே..

அதுவும் எந்த ஒரு திருமண கனவும் இல்லாமல் தாத்தா கேட்டுகிட்டதுக்காக இந்த திருமண பந்தத்திற்குள் வந்திருந்தாலும் இப்பொழுது தன் கணவனாய் காதலனாய் அவனை தன் மனதில் குடியேற்றி வைத்து விட்டாளே..

அப்படி அவனை கணவனாய் உணர்ந்த நேரம் அவனுடைய மனைவியாய் அவளுக்கு ஆசா பாசங்கள் இருக்கத்தான் செய்யும்... அதை எல்லாம் அடக்கி கொண்டுதான் அன்று அவனை விலக்கி வைத்தாள் அவன் தன்னை மனைவியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று..

இன்று மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வை அவன் வர்ணிக்க, மீண்டும் அந்த நாள் இரவு அவள் கண் முன்னே வந்தது...

அதன் தாக்கம் இப்பொழுதும் அவள் உடலில் பரவ, முகம் நாணத்தால் சிவக்க, கன்னங்கள் செம்மையுற, தவித்த தன் இதழை பற்களால் கடித்து அழுத்தி கொண்டவள் அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் தவித்தவள் தலையை தாழ்த்தி கொண்டாள்..

அவளின் நிலை கண்டு அதிரதனோ ஆச்சர்யமானான்....

“இதுதான் பெண்மையின் இலக்கணமா? இதுவரை தன்னுடன் சரிக்கு சமமாக வாயடித்து கொண்டிருந்தவள் நொடியில் இப்படி சிவந்து போனாளே..”  என்று ஆச்சர்யமாக இருந்தது..

அதே நேரம் அவன் மனம் அவன் நிலா பொண்ணை நினைத்து பார்த்தது... அவளை அனுகிய பொழுது இந்த மாதிரி எந்த ஒரு மாற்றமும் இல்லை அவள் இடத்தில்..

முகம் சிவக்க வில்லை... உதடு தவிக்கவில்லை.. இப்பொழுது நன்றாக நினைத்து பார்த்தால் அவள் கண்களில் கூட அப்படி ஒன்றும் காதல் இல்லை..

“அப்படி என்றால் ?? “ என்று யோசிக்க ஆரம்பித்தவன் அதற்கு மேலும் யோசிக்க அவனுக்கு பயமாக இருந்தது.

எங்கே தன் தாத்தாவிடம் தோற்று விடுவோமோ என்று முதன் முறையாக அச்சம் வந்தது..

உடனே தன் தலையை உலுக்கி கொண்டவன்

“இல்லை.. காதல்தான்.. அவளிடம் இருப்பது காதல்தான்.. நானும் என் நிலா பொண்ணைத்தான் காதலிக்கிறேன்.. அவளுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் அவளை மணந்து கொள்வதாக.. அவள்தான் என் மனைவி.. “ என்று மீண்டும் தனக்குள்ளே சொல்லி கொண்டு தலையை சிலுப்பி கொண்டான்..

அதற்குள் நிலாவும் தன்னை சமாளித்து கொண்டவள் தன்னை இயல்பாக்கி கொண்டு அவனை நேருக்கு நேராக பார்த்து

“அப்புறம் என்னாச்சு ஜமீன்தாரே..? “ என்றாள் மீண்டுமாய் குறும்பு கூத்தாடும் முகத்துடன்...

நொடியில் தன்னை சமாளித்து கொண்ட அவளின் சாமர்த்தியத்தை உள்ளுக்குள் மெச்சி கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே பார்த்து கொண்டிருக்க, அவளோ

“சொல்ல முடியலையா...?  இருங்க நானே சொல்றேன்...  

உங்க நிலா பொண்ணுக்கு முத்தம் கொடுக்க போனிங்க...ஆனால் அது முடியல...அக்னி சாட்சியாய் நீங்க எனக்கு கட்டின தாலியும் அம்மி மிதித்து எனக்கு நீங்க போட்டுவிட்ட மெட்டியும் உங்க கண் முன்னே வந்து உங்களை மிரட்டி இருக்கும்...

உடனே நம்ம கலாச்சாரத்துக்கு கட்டுபட்டு அரண்டு போய் பாதியிலயே ஓடி வந்துட்டிங்க.. இதுதானே நடந்தது? “ என்றாள் புருவத்தை உயர்த்தி அதே குறும்பு சிரிப்புடன்..

அதை கேட்டவனோ அதிர்ச்சியில் சிலை போல உறைந்து போனான்...

“நடந்ததை நேரில் பார்த்த மாதிரி அப்படியே சொல்கிறாளே இந்த சதிகாரி..! எப்படி தெரிந்ததாம் என் மனம் இவளுக்கு? “ என்று அவசரமாக யோசித்தான்..

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றமாதிரி எப்படியாவது இதை,  இவளை சமாளிக்கவேண்டும் என்று அவசரமாக யோசித்தவன்

“ஹா ஹா ஹா அதுதான் இல்லை...எங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது... அந்த வெற்றி களிப்பில்தான் வீட்டுக்கு வந்தேன்.. “ என்றான் வரவழைத்த கெத்துடன்....

“ஹா ஹா ஹா.. நீங்கள் சொல்லும் கதையை நம்ம வீட்டு கடைக்குட்டி உங்க அருமை தங்கை யாழிகுட்டி  வேணா நம்பலாம் ஜமீன்தாரே.. நான் நம்ப மாட்டேன்.. “ என்றாள் கொஞ்சமும் அசராமல் மிடுக்குடன்..

“ஏனோ? அது எப்படி அவ்வளவு நம்பிக்கை..?  நடத்தி முடித்த நானே சொல்கிறேன்.. நீ எப்படி நம்ப மாட்டேன் என்கிறாய்? “ என்றான் சிறு ஆச்சர்யத்துடன் உள்ளுக்குள் பொங்கிய சிரிப்புடன்...

“ஹீ ஹீ ஹீ ஜமீன்தாரே... உங்களுடன் இத்தனை நாட்கள் ஒன்றாக தங்கி குப்பை கொட்டி இருக்கிறேனே...

தாலி கட்டிய தாபத்துடன் அணைக்க  எல்லாம் உரிமையும் இருக்கிற  உங்க பொண்டாட்டி கைக்கு எட்டும் தூரத்தில் உங்க பக்கத்துலயே படுத்து தூங்கறப்பயே உங்க கட்டுப்பாட்டை இழக்காமல் உறுதியை குலைக்காமல் நல்லவராக இருந்தவர்..

இன்று தாலி கட்டிய மனைவியை விடுத்து அது உங்க ஆருயிர் காதலியே என்றாலும்  முறை இல்லாத உறவில் உங்களால் ஈடுபட முடியாது..

ஏனென்றால் நம்ம கலாச்சாரம் இன்னுமே உங்க இரத்தத்தில் கலந்துதான் இருக்கு...அது என்னைக்கும் உங்களை நேர்வழி மாறி தப்பு வழிக்கு அழைத்து செல்லாது..

நீங்க கொஞ்சும்  உங்க நிலா பொண்ணோட அதிரதன் வேணுமான தப்பு செய்யலாம்.. ஆனால் எனக்கு தாலிகட்டிய என் புருஷன்,  தேவநாதன் ஜமீன்தாரின் பேரன் ஒரு போதும் நெறி மாறி நடக்க மாட்டார்..

என் புருஷனே தப்பு பண்ணி விட்டேன் என்றாலும் அதை நான் நம்ப மாட்டேன்.. அவரால் அப்படி ஒரு காரியத்தை செய்ய முடியாது.. எங்க வேணாலும் அடிச்சு சொல்வேன்..

அதனால் இந்த மாதிரி கதை  எல்லாம் இனி என்னிடம் வேண்டாம்... என்னை வருத்தப்பட வைக்க வேற ஏதாவது நல்ல ஐடியாவா கண்டு பிடிங்க... இப்ப படுத்து தூங்குங்க.. குட் நைட்..  “

என்று மிடுக்குடன் உரைத்தவள் தன் முன்னால்  விழுந்திருந்த ஜடையை அசால்ட்டாக பின்னால் தூக்கி போட்டவள் அவள்  கையில் வைத்திருந்த அவன் ஆடைகளை அதற்கான பாக்சில் போட்டுவிட்டு கொஞ்சமும் தயங்காமல் அவன் படுக்கையில் ஏறி அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்...

அதிரதனோ இன்னுமாய் வாய் அடைத்து போய் அப்படியே சிலையாக  அமர்ந்து இருந்தான்..

“என்ன பெண்  இவள்? பழகிய இந்த குறுகிய நாட்களில் என்னை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறாளே..!  இதற்கு இரவில் மட்டும்தான் அவளை பார்ப்பது.. ஒரு மூன்று  நாட்கள் மட்டுமே அவளுடன் கூடவே இருந்தது.. இந்த நாட்களில் என்னை இந்த அளவுக்கு புரிந்திருக்கிறாளா? “ என்று ஆச்சர்யமாக இருந்தது..

ஒரு நல்ல மனைவிக்கு முதல் தகுதியே தன் கணவனை நன்றாக புரிந்து வைத்திருப்பது... அதே போலத்தான் கணவனுக்கும். நல்ல கணவன் தன் மனைவியை புரிந்து வைத்திருப்பதும்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற வரையறுக்கப்படாத ஆனால் தானாகவே வந்து சேரும் தகுதி..

“அப்படி என்றால் ?? “ என்று கொஞ்சம் நல்லவிதமாக தன் மனையாள் பக்கமாக யோசிக்க ஆரம்பித்தவன் அதற்குமேல் யோசிக்க பயமாக இருக்க பாதியில் நிறுத்தி கொண்டவன்

“இல்லை.. இவள் ஏதேதோ சொல்லி என்னை குழப்ப பார்க்கிறாள்...நான் தோற்ககூடாது... அந்த ஜமீன்தாரிடம் போட்ட சபதத்தில் நான் ஜெயித்து காட்டுவேன்... அவர் திமிரை அடக்கி காட்டுவேன்.. “

என்று அதே பல்லவியை திரும்ப பாடி கொண்டவன் தன் புறமாக முதுகு காட்டி படுத்து இருந்தவளை முறைத்தவாறு அவனும் திரும்பி படுத்து கொண்டு நீண்ட போராட்டத்துக்கு பிறகு கண் அயர்ந்தான் அந்த பிடிவாதக்காரன்...! 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!