என்னுயிர் கருவாச்சி-27


 


அத்தியாயம்-27

 

1999:
லது காலை எடுத்து வச்சு மாப்பிள்ளையும் பொண்ணும் உள்ள வாங்க...” என்று யாரோ ஒருத்தர் இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க, புதுமண தம்பதியர் இருவரும் தங்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்.  

பெயர்தான் புதுமண தம்பதியர் என்று.  ஆனால் புதுமண தம்பதியருக்கு உரிய ஒரு உற்சாகம்,  மகிழ்ச்சி, தன் இணையை கண்டு கொண்டு கரம் பிடித்து விட்ட  பூரிப்பு என்று எதுவும் இல்லை இருவர் முகத்திலும்.

பூங்கொடியின் முகமோ துடைத்து வைத்த வெண்கல குத்து விளக்கைப் போல எந்த ஒரு உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இறுகிப் போய் இருந்தாள்.

கழுத்தில் சற்றுமுன் ஏறிய  பளபளக்கும் தாலியும், அவள் மனதைப்போலவே கனமாக தொங்கிக் கொண்டிருந்த சம்பங்கி மாலையும் புதுப்பெண்ணிற்கு உரிய பொழிவை கொடுக்கத்தான் செய்தது.

ஆனால் அவள் முகத்தில் தான் புதுப்பெண்ணிற்கான பொழிவு  துளியளவும் இல்லை.  

அவளைப் போலவே இல்லை இல்லை  அவளைவிட பல மடங்கு இறுகிப்போய் இருந்தான் அவள் அருகில் நின்றிருந்தவன்.

சற்று முன்னர் அவள் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அணிவித்து,  மூன்று முடிச்சிட்டு அபீசியலாக அவளின் கணவனாகிய ராசய்யா.  

இருவரும் உள்ளே  வந்ததும், அவர்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று,  பூங்கொடியை விளக்கேற்ற வைத்து, பூஜை செய்தனர்.

பின் இருவரையும் முற்றத்துக்கு அழைத்து வந்தனர்.  அங்கிருந்த நாற்காலியில் இருவரையும் அமர வைத்து, மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.

அதன் பிறகு மற்ற சம்பிரதாயங்களையும் செய்யச் சொல்ல,  இருவருமே கடனே என்று இயந்திரம் போல சொன்னதை செய்து வைத்தனர்.  

மறந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.  

சம்பிரதாயங்கள் முடிந்து இருவரும் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து இருக்க,  அங்கு ஓராமாக இருந்த குடிசையில் இருந்த கட்டிலில்,  படுத்து இருந்த  பூங்கொடியின் பாட்டி மெல்ல எழுந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அந்த தள்ளாத வயதிலும் கட்டிலோடு படுத்து காலத்தை கடத்துபவர்.. வயோதிகம் , தள்ளாமை காரணமாக திருமண மண்டபத்திற்கு வந்திருக்கவில்லை.  

பொண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக்கிறேன் என்று மண்டபத்திற்கு வர மறுத்துவிட்டார்.  

இப்பொழுது திருமணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்பி வந்திருக்க, தன் பேத்தியை பார்க்கும் ஆவலில், கட்டிலிலிருந்து எழுந்து,  கைத்தடியை ஊன்றியபடி சிறு தள்ளாட்டத்துடன் மணமக்களை காண வந்தார்.

அவர்களின் அருகில் வரும் முன்னே வாசலில் கிடந்த சிறு கல் ஒன்று அவர் காலை தடுக்கி விட, தடுமாறி கீழ விழ இருக்க,  ராசய்யா வேகமாக எழுந்து,  பாய்ந்து சென்று  அந்தப் பெரியவளை  தாங்கிக் கொண்டான்.  

தாங்கியதோடு நில்லாமல்,  அவரை தன் இரு கையாலும் அப்படியே தூக்கிக்கொண்டு வந்து அங்கிருந்த நாற்காலியில்  அமர வைத்தான்.  

அதை கண்ட பெரியவளுக்கு வெட்கமாகி  விட, தன் பொக்கை வாயை திறந்து மலர்ந்து சிரித்தவர், ராசய்யாவின் கன்னத்தை எழும்பும் தோலுமாய் இருந்த தன் தளர்ந்த  கரத்தால் வருடியவர்,

“ராசா...அப்படியே என் மச்சான் மாதிரியே என்ன தூக்கிட்ட ராசா... என் மச்சான் இப்படித்தான் என்னை பொசுக்கு பொசுக்குனு தூக்கிக்குவாரு... அவர்  காடு போன பொறவு, என்னை இப்படி தூக்கிக்க யாருமில்ல...”  என்று தன் கணவனின் நினைவில் கண்கலங்கினார் பெரியவள்.

இத்தனை வருடங்கள் ஆகியும், அவரின் கணவன் மேல் வைத்திருந்த அன்பைக் கண்டு அங்கு கூடி இருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

“என்ன அயித்த... இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் மாமன் நெனப்பு உன் மனச விட்டு போகலையாக்கும்...” என்று உறவுக்கார பெண் ஒருத்தி பெரியவளை கிண்டல் செய்ய,

“என் கட்ட வேகற வரைக்கும் என் மச்சான் நெனப்பு எனக்கு  எப்படிப் போகும் ராசாத்தி...” என்று தழுதழுக்க, அதைக்கண்ட சிலம்பாயிக்கு எரிச்சலாக இருந்தது.

“வயசாகி, உடம்பு தளர்ந்து போனாலும் இந்த வாய் மட்டும் குறையவே மாட்டேங்குது... “ என்று தன் மாமியாரை மனதுக்குள் அர்ச்சனை செய்தவர் , 

“சரி சரி நல்ல நாள் அதுவுமா எதுக்கு மூக்க சிந்தனும்... எந்திரிச்சு புள்ளைங்கள  ஆசீர்வாதம் பண்ணுங்க...”  என்று கழுத்தை நொடித்தார்  சிலம்பாயி.

அப்பொழுதுதான் மணமக்கள்  இருவரும் பெரியவளிடம் ஆசீர்வாதம் வாங்காதது நினைவு வர,  சிலம்பாயி பூங்கொடிக்கு கண் ஜாடை காட்டினாள்.  

அவளும் தன்  அன்னையை முறைத்துவிட்டு, தன்  பாட்டியின் அருகில் சென்று குனிந்து அவர் பாதத்தை தொட, ராசய்யாவும்  அவளுடன் இணைந்து பெரியவரின் பாதத்தை தொட்டான்.  

அதில் நெகிழ்ந்து போனவர், இருவரின் தலையை தொட்டு ஆசிர்வதித்தவர், அவர்களை நெல்ல தூக்கி விட்டு,  அவசரமாக தன் இடுப்பில் சொருகி இருந்த சுருக்குப் பையை எடுத்து பிரித்து,  அதில் பல மடிப்புகளாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.  

பின் அவர்கள் இருவரையும் பார்த்து

“நீங்க  ரெண்டு பேரும் நானும் என் மச்சானும் வாழ்ந்தது போல ஒருத்தருக்கொருத்தர் உயிரா வாழ்ந்து,  நிறைய புள்ளை குட்டிகளை பெத்தெடுத்து சந்தோசமா இருக்கோணும்...” என்று மனம் நிறைந்து வாழ்த்தியவர்,  அவர்களின்  கையில் ரூபாயை திணிக்க, ராசய்யாவோ

“வேண்டாம் ஆயா... நீயே வச்சுக்கோ. உனக்கு வெத்தலை பாக்கு வாங்க ஆகும்...” என்று அந்த ரூபாயை அவர் கையில் திரும்பவும் திணித்தான்.

“என்ன ராசா... பொழைக்க தெரியாதவனா  இருக்கியே... கல்யாணத்துல கொடுக்கற  மொய்க்காச  போய் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா...வச்சுக்கய்யா..” என்று  அவன் கையை பிடித்து திணித்தார்.

அவர் அதோடு நிறுத்தி இருந்திருக்கலாம்..

ஏற்கனவே தண்ணிக்கும் மேட்டுக்குமாய் இழுத்துக்கொண்டிருக்கும் இரண்டு பேருக்கு நடுவில் இன்னும் புகைய வைக்க அவரையும் அறியாமல் திரியை கொழுத்தி போட்டாள்  பெரியவள்...

“ராசா.... எப்ப பாரு   கருவாச்சி கருவாச்சினு  என் பேத்தியை  கிண்டல் செய்வியே...  இப்ப அந்த கருவாச்சியவே  கட்டிக்கிட்ட பாத்தியா..  அதான் அந்த முருகனோட விளையாட்டு.  

என் பேத்தி, எங்க முன்ன பின்ன  தெரியாதவன கட்டிகிட்டு    கஷ்டப்பட போறாளோனு வெசனபட்டுகிட்டு  இருந்தேன்.. நம்ம  பழனியாண்டவன் புண்ணியத்துல உன் கிட்டயே வந்துட்டா...

இனிமே  நீதான் அவள  பத்திரமா பாத்துக்கோணும் ராசா... அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரப்படாது... சொல்லிபுட்டேன்... “  என்று தழுதழுக்க,  

“கண்டிப்பா ஆயா... அவளை  நல்லா பாத்துக்கிறேன்...”  என்று தன்னை மறந்து கூறியவன்,  அவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள,  அதைக்கேட்டு விழுக்கென்று திரும்பியவள்,  அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு விடுவிடுவென்று அறைக்குள் சென்று விட்டாள் பூங்கொடி.  

*****

வேப்ப மரத்திலிருந்து சிலுசிலுவென்று வீசிய காற்று சுகமாய்  தாலாட்ட, மற்ற நேரமாக இருந்திருந்தால் இந்நேரம் நன்றாக குறட்டை விட்டு உறங்கியிருப்பான் ராசய்யா.

ஆனால் இன்று?

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மாரியம்மன் கோவில் திண்ணையில்,  தலைக்கு அடியில் கையை மடித்து வைத்து  படுத்துக்கொண்டு,  விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ராசய்யா.  

அவனின் நீண்ட வலிய காலை ஒன்றுக்கு மேல் ஒன்றாக போட்டு படுத்திருக்க, அதில் கட்டியிருந்த பட்டு வேஷ்டி, வேப்ப மரத்திலிருந்து  அடித்த குளுகுளு காற்றில் படபடத்தது.  

படபடக்கும் அந்த  பட்டு வேஷ்டியை  கண்டதும்  அவனுக்கு மனம் வலித்தது.  

அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை...!

இரண்டு  மணி நேரம் முன்பு வரை,  எந்த பொறுப்பும் இல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றிக் கொண்டு இருந்தவன் இப்பொழுது  ஒருத்திக்கு  கணவன்  ஆகிவிட்டான்  என்பதை அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை.

அதை உணரும் பொழுது எல்லாருக்கும் வரும் சந்தோசம்... பூரிப்பு எதுவும்  இல்லாமல் முகத்தில் வேதனை வந்து சேர்ந்தது.  

இப்படி நடந்து விடக்கூடாது என்று எவ்வளவு போராடிப் பார்த்தான். ஆனால் அவனால் ஜெயிக்க முடியவில்லை.  

ஒருவேளை இதெல்லாம் அந்த விதியார் செய்த சதியோ?...சும்மா சுத்திக்கிட்டு இருந்தவனை கண்டு காண்டாகி இப்படி கோர்த்து விட்டுட்டாரோ...

“இல்லை.. விதியும் இல்லை...சதியும் இல்லை.  எல்லாம் அந்த ராஜேந்திரன் நாயால்  வந்த வினை இது...”  என்று பல்லைக் கடித்தவன் நினைவுகள் இரண்டு மணி நேரம் பின்னோக்கி  சென்று நின்றது.

ணப்பெண்ணிற்கான சடங்குகளை செய்து,  பூங்கொடியை அறைக்கு   அனுப்பி வைத்த பின்,   மணமகனுக்கான சம்பிரதாயம் ஆரம்பிக்க இருக்க, மணமகனை வரச்சொல்லி அழைத்தனர்.  

அப்பொழுதுதான் மணமகன் அறைக்கதவை  திறந்து கொண்டு வெளியில்  வந்தான் அவன்.  

மணமேடைக்கு வந்தவனை அனிச்சையாய் நிமிர்ந்து  பார்த்தவள்,  அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பூங்கொடி...! அவன் ராஜேந்திரன்...!

இவனா? என்று தன்னை மறந்து அவள் இதழ்கள் முனுமுனுத்தன...

அவளின் பார்வை தானாக அவளின் வலது கைக்கு சென்றது.

அந்தக் கையால் தானே இரண்டு  மாதம் முன்பு அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

அவள் அடித்ததினால், அவள் கையில் ஏற்பட்ட வலியும், அவன் செய்த செயலால் அவள் நெஞ்சில் பதிந்து போன அருவருப்பும் வேதனையும் இன்னும் அவளை விட்டு  விலகியிருக்க வில்லை.

அப்படியிருக்க,  அவன் தான், அவள்  மணந்து கொள்ளப் போகிறவன் என்று தெரிந்ததும், அடுத்த கணம், அவள் உள்ளம் எரிமலையாய் கொதிக்க, முகத்தில் கோபம் கொந்தளிக்க விடுவிடுவென்று தன் தந்தையை தேடிச்  சென்றாள் பூங்கொடி.

யாரோ ஒருத்தன்... கந்து வட்டிக்காரன் என்றல்லவா சொல்லி வைத்தார் இந்த அப்பா... ஆனால் இவன்தான் அவன் என்று சொல்ல மறந்து விட்டாரா இல்லை மறைத்து விட்டாரா?

அவளுக்கும் இவன் கந்து வட்டிக்காரன் என்பது தெரியாதே..! பார்த்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் நல்ல சூழ்நிலையில் அவனை பார்க்கவில்லை. அப்படியிருக்க அவனைப்பற்றி இவளுக்கு மட்டும் என்ன தெரியுமாம்?

மனதில் பெயர் வைத்திராத பல சூறாவளி புயல்கள்  சுழற்றி  அடிக்க, அவசரமாக தன் தந்தையை தேடினாள்.

அவளின் முகமாற்றத்தை கண்டு கொண்ட அவள் தோழிகள் இருவரும் என்னவென்று விசாரிக்க, ஒன்னும் இல்லை என்று மலுப்பி சமாளித்து விட்டாள்.

அதே நேரம் யாரையோ அழைத்து வர பேருந்து நிலையத்துக்கு சென்றிருந்த ராசய்யா திரும்பி வந்தான்.

மண்டபத்திற்குள் நுழைந்தவன், அங்கே நடுநாயகமாக போட்டிருந்த மணமேடையில்,  மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த ராஜேந்திரனை கண்டதும்,  ஒரு நொடி திடுக்கிட்டு அதிர்ந்து போனான் ராசய்யா.

அடுத்த கணம் தன்னை  சுதாரித்துக்கொண்டவன், மேடையை  நோக்கி பாய்ந்து சென்றவன்,  அப்பொழுதுதான் ஐயர் செய்யச் சொன்னதை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன்  சட்டையை கொத்தாக பிடித்து தூக்கினான் ராசய்யா.  

அதைப் பார்த்து எல்லாரும் அதிர்ந்துபோய்,  அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நிக்க, ராசய்யா யாரையும், எதையும்  கண்டுகொள்ளாமல் பளார் என்று அவன் கன்னத்தில்  ஓங்கி அறைந்திருந்தான்.

அதைக்கண்டு அந்த மண்டபமே ஸ்தம்பித்து நிக்க, அந்த அறை சத்தம் கேட்டு மணமகள் அறைக்குள் இருந்த பூங்கொடி கூட வெளியில் எட்டி பார்த்தாள்.

“ஏன்டா பொறுக்கி ராஸ்கல்... நீ கெட்ட கேட்டுக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா?  ஏன் நீ ஊரெல்லாம் மேயறது பத்தாதுன்னு வீட்டிலயும் பர்மனென்ட் ஆ ஒருத்திய வச்சுக்க உடம்பு அரிக்குதாக்கும்...” என்று மீண்டும் அவன் கன்னத்தில் பளார் என்று அறைய,

அதைக்கேட்டு அங்கிருந்த எல்லாருமே திடுக்கிட்டுப் போனார்கள்.  

பூங்கொடியும்  ராசய்யா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள்.

“இவன் அவ்வளவு மோசமானவனா? ஏதோ கந்துவட்டிக்காரன்...அன்னைக்கு தன்னிடம் அப்படி நடந்து கொண்டான்...” என்று மட்டும் எண்ணி இருந்தவளுக்கு,  ராசய்யா சொன்ன ஊர் மேயும் விஷயம் அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அப்படி என்றால் இவன் ஒழுக்கமில்லாதவன். கண்டிப்பாக இவனுடைய நடத்தையை பற்றி அப்பாவுக்கு தெரிந்திருக்கும்.  அப்படி தெரிந்தும் தன் மகளை இவனுக்கு கட்டி கொடுக்க எப்படி சம்மதித்தார் என்று நொறுங்கி போனாள் பெண்.

சிலம்பாயிக்கும் இந்த விசயம் இப்பொழுதுதான் தெரிகிறது.

இந்த விஷயத்தையும் தன்னிடம் இருந்து மறைத்துவிட்ட தன்  கணவனை எரிக்கும் பார்வை  பார்த்தார் சிலம்பாயி.  

பூங்கொடிக்கு ராஜேந்திரனைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து  இருந்ததால், பெரிதாக அதிர்ச்சி இல்லை.

ஆனால் அவள் அதிர்ச்சி எல்லாம் தன்னிடம் அப்படி நடந்து கொண்டவன் இப்பொழுது தன் தந்தையை மிரட்டி தன்னை மணந்து கொள்ள துடிப்பது ஏன் என்றுதான் அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் நினைவுகள் அந்த நாளை நோக்கி சென்றது.  

ரண்டு  மாதங்கள்  முன்பு , ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்தி சாயும் மாலைப் பொழுதில்,  சைக்கிளில் தன் வயல்க்காட்டுக்கு சென்று கொண்டிருந்தாள் பூங்கொடி.

அன்று அதிசயமாக தன் தொளதொள பாவாடை சட்டைக்கு லீவ் விட்டுவிட்டு, தாவணி பாவாடை அணிந்திருந்தாள்.

வெந்தயக்கலரினாலான பூப்போட்ட அழகிய காட்டன் பாவாடையும், அதே பாவாடையில் வெட்டி தைத்த ஜாக்கெட்டும் , வெந்தயக் கலரிலான தாவணியும் அணிந்திருந்தாள்.

அன்று விடுமுறை என்றதால் தலைக்கு சீயக்காய் தேய்த்து குளித்திருந்தவள், தன் கூந்தலை அப்படியே ப்ரியாக தொங்கவிட்டு ரப்பர் பேன்ட் போட்டிருந்தாள்.  

தன் தாவணியின் முந்தானையை இழுத்து சொருகிக்கொண்டு,  அந்த மாலை நேரத்தில் சிலுசிலுவென்ற தென்றலின் தீண்டலில்,  பச்சை பசேல் என்று இருக்கும் வயல்களுக்கு நடுவில்,  சைக்கிளில் போவது அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

இன்று வீட்டில் வேலை பெரிதாக இல்லாததால், தன் அன்னையின் வசவிலிருந்து தப்பிக்க,  தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியாக வயலுக்கு கிளம்பி விட்டாள்.

நாள் முழுவதும் உழைத்து களைத்திருந்த அந்த ஆதவன்,  அப்பொழுதுதான் இளைப்பாற இறங்கி கொண்டிருந்தான்.

அந்தி சாய ஆரம்பித்து இருந்த மாலை வேளையில், ஆதவனின் பொன்னிற கதிர்கள் பச்சை பசேல் என்று இருந்த நெற்கதிர்களின் மீதும்,  வாழை மரத்தின் இலைகளின் மீதும் பட்டு தெறிக்க, திடீரென்று அந்த இடமே தங்கத்தை குலைத்து இழைத்ததை போல பளபளவென்று ஜொலி ஜொலித்தது.

அதை பார்த்து ரசித்துக்கொண்டே

என்  மச்சான பாத்தீங்களா?  மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே..!  அவர் வந்தாரா காணலியே..!

என்று சத்தமாக பாடிக்கொண்டே, உற்சாகத்துடன்  தன் சைக்கிளை மிதித்தாள் பூங்கொடி.

உல்லாசமாக பாடிக்கொண்டிருந்தவளின் பாட்டு திடீரென்று நின்று போனது. வேகமாக ஓடிக்கொண்டிருந்த அவளின் மிதிவண்டியும் அப்படியே சடர்ன் ப்ரெக் இட்டு நின்றது.

காரணம்.. அவள் போகும் வழியை மறித்தபடி, தன் காரை நிறுத்திவிட்டு அதன் மீது சாய்ந்து நின்று,  மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக அவளை பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான் ஒரு புதியவன்...ராஜேந்திரன்.

திடீரென்று ஒரு புதியவன், இப்படி வழிமறித்து நிற்பதைக்கண்டு திடுக்கிட்டு போனாள் பூங்கொடி.

தன் சைக்கிளில் இருந்து கீழ இறங்கியவள்,  அவசரமாக கண்கள சுழற்ற, கண்ணுக்கு எட்டும் தூரம் வரையிலுமே யாருமே தென்படவில்லை.

வயலில் வேலை செய்பவகள் எல்லாரும் முன்பே வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருந்தனர்.

அவள் வழக்கமாக தங்கள் வயலுக்கு சென்று வருவதால், இன்று மாலை ஆகி விட்டதை  கண்டுகொள்ளாமல் கிளம்பி இருந்தாள்.

அன்று வேலை செய்த களைப்பில் சீக்கிரமே ஆதவன் ஓய்வெடுக்க இறங்கி விட, அதுவரை தகதகத்துக்கொண்டிருந்த வெய்யிலும் மறைந்து இருள் சூழ ஆரம்பித்து இருந்தது.

இந்த வேளையில், வயல்காட்டுக்கு நடுவில், யாருமில்லாமல் அவள் மட்டும் தனியாய்... அவளை வழி மறித்தபடி ஒரு புதியவன்...

அதுவும் அவன் பார்வை அவளின் கழுத்துக்கு கீழயும், தாவணியை இழுத்து சொறுகி இருந்ததால் பளிச்சென்று  தெரிந்த அவளின் இடையையும் ஆபாசமாக மேய்ந்து கொண்டிருந்தது.

அவனின் பார்வையில் அருவருப்பானவள், அவசரமாக விலகியிருந்த தன் முந்தானையை சரியாக இழுத்து விட்டுக் கொண்டும், இடுப்பில் இருந்த தாவணியை மேல ஏத்திவிட்டு தன் இடையை மறைத்தாள்.

அதே நேரம்  அந்த சூழ்நிலையை கண்டு உள்ளுக்குள் கிலி பரவினாலும்,  அதை வெளிக்காட்டாமல், வரவழைத்த தைர்யத்துடன் அவனை நேருக்கு நேராக  பார்த்தவள்

“ஹலோ மிஸ்டர்... யார் நீங்க? எதுக்கு இப்படி காரை நடு ரோட்ல நிறுத்தி வச்சிருக்கிங்க? “ என்று படபடவென்று பொரிந்தாள்.

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் , கோபத்தில் சிவந்து துடித்த  அவளின் செவ்விதழை போதையுடன் பார்த்து வைக்க, அதில் இன்னுமாய்  திடுக்கிட்டவள்

“ஹலோ... கேட்டுகிட்டே இருக்கேன். பதில் சொல்லாம எதுக்கு இப்படி பார்த்து வைக்கறிங்க? வழியை விடுங்க...நான் போகணும்... “ என்று மீண்டும் முறைக்க, அதுவரை அவளை பார்வையாலயே துகில் உரித்து ரசித்துக் கொண்டிருந்தவன் அப்பொழுதுதான் வாயை திறந்தான்.

“ஹ்ம்ம்ம் அதுக்குள்ள என்ன அவசரம் பேபி...செத்த நேரம் இந்த மாமன்கூட பேசிகிட்டு இருந்துட்டு பொறவு போகலாம்...” என்று தன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரிக்க, அதில் சுர் என்று கோபம் வந்தது பெண்ணுக்கு.

“கண்ட பொறுக்கி எல்லாம் எனக்கு மாமன் ஆகிட முடியாது.... முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட எனக்கு என்ன பேச்சு... நீ முதல்ல வழியை விடு...” என்று சிடுசிடுத்தாள்...

“ஹா ஹா ஹா...முன்ன பின்ன தெரியாதவனா?  நீதானே இப்ப என் மச்சானை பாத்திங்களானு  பாடிகிட்டே...இல்ல தேடிகிட்டே வந்த... நீ தேடின மச்சான் நான் தான் செல்லம்...” என்று கண் சிமிட்டி மீண்டும் கோணலாக இளித்தான் ராஜேந்திரன்.

அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது.

அவளுக்கு இருந்த உற்சாகத்தில்,  அவள் சத்தமாக பாடிக்கொண்டே வந்ததும், அதே நேரம் ஒரு கார் மெதுவாக அவளை பின் தொடர்ந்து வந்ததும் பின் சற்று முன்னர் அவளை கடந்து சென்றதும் நினைவு வந்தது. .

பெண்கள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பது எவ்வளவு சத்தியம். அவளுக்கு இருந்த உற்சாகத்தில், கொஞ்சம் கவனக்குறைவால், அவளை பின் தொடர்ந்து வந்த காரை கவனிக்கவில்லை.

அப்படி கவனித்து இருந்தால், இப்படி இருட்டும் முன்னே மெயின் ரோட்டிலயே நிறுத்தி அவனை உண்டு இல்லைனு ஆக்கி இருக்கலாம்.

இப்படி கவனிக்காமல் விட்டு கோட்டை விட்டு விட்டு இப்படி இவன் கிட்ட வந்து மாட்டிகிட்டமே என்று படபடப்பாக இருந்தது.

ஆனாலும் தன் படபடப்பை மறைத்துக்கொண்டு,

“என்ன உளர்ற? நீ ஒன்னும் என் மச்சான் இல்லை முதல்ல இந்த மாதிரி தனியா போற பொண்ணு  கிட்ட வழிமறித்து நிப்பதும், வம்பு பண்ணுவதும் தப்பு. முதல்ல வழியை விடு...” என்று மிடுக்காக அதட்டினாள் பெண்.

அவளின் மிரட்டலுக்கு பயந்தவன் போல தெரியவில்லை அவன். இன்னுமே உல்லாசமாக சிரித்தவன்

“என்னது? வம்பு பண்ணினேனா? நான் பாட்டுக்கு சும்மாதான என் காரை நிறுத்திட்டு பேசிகிட்டிருக்கேன்... வம்பு பண்ணினேன்ற ?   ஓ..அப்படி வம்பு  பண்ணலைனு வருத்தமா செல்லம்? இப்ப பண்ணிட்டா போச்சு...”

என்று காரில் சாய்ந்து இருந்தவன், நிமிர்ந்து அவளை நோக்கி வர, அதில் திடுக்கிட்டவள், அவசரமாக தன் சைக்கிளை திருப்பி, வந்த வழியாக திரும்பி செல்ல முயன்றாள்.

ஆனால் அவளின் எண்ணம் புரிந்தவனாய், அவள் சைக்கிளில் ஏறும் முன்னே, ஒரே எட்டில் வேகமாக சைக்கிளுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு,  சைக்கிள் ஹேண்டில்பாரை பிடித்துக்கொண்டான்.

அதோடு சைக்கிளை பிடித்து இருந்த அவளின் கைமீது அவன் கையை வைக்க, அடுத்த நொடி பொங்கி எழுந்தவள்,

“கையை எடுடா பொறுக்கி ராஸ்கல்...” என்று கர்ஜித்தவாறு , தன் மறுகையால்  ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் பூங்கொடி.

அதை எதிர்பார்த்திராரவன், அவளின் அறையில் கோபம் கொண்டவன்

“என்னடி? ரொம்பத்தான் கண்ணகி வேஷம் போடற? நான் பார்க்காத புள்ளைகளா? உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறேன்? இந்த மாதிரி சண்டித்தனம் செய்யும் கன்னுக்குட்டியை அடக்கி ஆள்வதில்தான் தனி கிக்...”

என்று இளித்தவாறு , அவளின் பின்பக்கமாக வந்து அவளின் இடையோடு அணைக்க முயல, அடுத்த நொடி அம்மா என்று அலறியபடி சுழற்றிக் கொண்டு  சென்று  தரையில் விழுந்தான் ராஜேந்திரன்.

அவன் தன்னை அணைக்க வருகிறான் என்றதில் வெளவெளத்துப்போனவள், தன் கைமுஷ்டியை இறுக்கி அவனை தாக்க தயராக இருக்க, அதே நேரம் அவனிடம் இருந்து அம்மா என்ற குரலும் அவன் கீழ விழும் சத்தமும் கேட்டு திரும்பி பார்த்தாள் பூங்கொடி.

ரோட்டோரம் மல்லாந்து கிடந்தான் ராஜேந்திரன்.  

அவனிடம் இருந்து தப்பிவிட்ட நிம்மதியில் நிமிர்ந்து பார்க்க,  தன் கை முஷ்டியை இறுக்கியவாறு,  முகத்தில் கோபம் பொங்க அருள் வந்த கருப்பண்ண சாமியைப்போல வானத்தையும், பூமியையும் இணைக்கும் பாலமாக, நெடுநெடுவென்று நின்றிருந்தான் ராசய்யா.

அவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு, பின் குனிந்து கீழே விழுந்தவன்  சட்டையை பிடித்து மீண்டும் தூக்கியவன்,

“ஏன்டா பண்ணாடா...  தனியா போற புள்ளைக்கிட்ட என்னடா உன் வீரத்தை காட்டற? எங்க?   என்கிட்ட காட்டுடா உன் வீரத்தை...”

என்று உறுமியவன், ராஜேந்திரன்  கழுத்தில் தன் வலிய கரத்தை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தவாறு கழுத்தை நெரிக்க, அதில் மூச்சு அடைபட்டு மூச்சு காற்றுக்காக தினறினான் ராஜேந்திரன்.

அதோடு கழுத்து  எலும்புகள் நொறுங்கி போகும் அளவுக்கு உயிர் போகும் வலி வேறு.   

ராசய்யாவின் திடகாத்திரமான வலிமைக்கு முன்னால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தவன், ராசய்யாவின் கையை தன் இரு கையாலும் பிடித்துக்கொண்டு கழுத்தை நெரிக்காதவாறு தடுக்க முயன்றான்.

அவனின்  இரும்பு போன்ற உறுதியான கரத்தை ராஜேந்திரன் இரண்டு கையை சேர்த்துமே விலக்க முடியவில்லை. வலியில் துடி துடித்துப் போனான்.  

அதைப்பார்த்து களுக்கென்று கிளுக்கி சிரித்தாள் பூங்கொடி.

சற்றுமுன் தன்னிடம் அப்படி வீர வசனம் பேசியவன், ராசய்யாவின் பலத்துக்கு முன்னால் பம்முவதைக்கண்டு அவளையும் மறந்து களுக்கென்று சிரித்து வைத்து இருந்தாள்.

அவள் சிரிப்பது அவளுக்கே ஆப்பாக வரப்போவதை அறியாமல் மேலும் ராஜேந்திரனை வெறுப்பேத்தினாள்.

“என்ன மச்சான்... எங்க போச்சு உன் வீர தீர பராக்கிரமம் எல்லாம்...” என்று ராஜேந்திரனை பார்த்து எள்ளி நகையாடினாள் பூங்கொடி..

அதில் எரிச்சலானவன், அவளை முறைக்க, 

என்னடா முறைக்கிற? ஒழுங்கா உன் ஓட்டக்காரை எடுத்துகிட்டு உன் ஊரைப்  பாத்து போயிடு. இனிமேல் இந்த ஊர் பக்கம் காலடி எடுத்து வச்ச தொலச்சிடுவேன்... ஜாக்கிரதை...” என்று ராசய்யா மிரட்ட,

“ஆமாம்... ஆமாம்... மறந்தும் இந்த ஊர் பக்கம் வந்திடாத... அதோடு எந்த பொண்ணையும் வம்பு இழுக்காத... அப்புறம்  நீ முச்சுவிட உன் கழுத்து இருக்காது.... “ என்று நக்கலாக மிரட்டி மீண்டும் நக்கலாக சிரித்தாள் பூங்கொடி.  

அதில் இன்னும் எரிச்சலானவன், ராசய்யாவின் இரும்பு பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கழுத்தை நீவி விட்டுக் கொண்டே அவனிடம் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டவன்,  

“டேய் ராசு... என்னைப்பத்தி தெரியாமல், என் பவர் பத்தி அறியாமல் என் கூட மோதிட்ட.... உன்னை சும்மா விடமாட்டேன் டா... உன்னையும் சேர்த்துத் தான் டி.  உன்னை என் காலடியில் விழ வைக்கிறேன் பார்... “ என்று சபதம் செய்துவிட்டு சென்றான் ராஜேந்திரன். .

“போடா டேய்... தைர்யம் இருந்தால் நீ சொன்னதை  செஞ்சு பார்... “ என்று அவனுக்கு கொஞ்சமும் சலைக்காமல் வீரமாக சவால் விட்டாள் பூங்கொடி.


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!