என்னுயிர் கருவாச்சி-28
அத்தியாயம்-28
“உன்னை என் காலடியில் விழ வைக்கிறேன் பார்...
“ என்று பூங்கொடியை பார்த்து சபதம் செய்துவிட்டு சென்றான் ராஜேந்திரன்
“போடா டேய்... தைர்யம் இருந்தால் நீ
சொன்னதை செஞ்சு பார்... “ என்று
ராஜேந்திரனுக்கு கொஞ்சமும் சலைக்காமல் வீரமாக சவால் விட்ட பூங்கொடி, அடுத்த
நொடி ராசய்யாவின் கோபப் பார்வைக்கு அஞ்சி, கப்சிப் ஆகிப்போனாள்.
அடுத்த கணம் அவளைத் திட்டி தீர்த்தான் ராசய்யா.
“எத்தன தடவ
சொல்றது டி... இந்த மாதிரி இருட்டற நேரத்தில தனியா வயல்காட்டுக்கு போகாதே என்று...கொஞ்சமாச்சும்
அறிவு இருக்கா? இப்படி இந்நேரத்துல தனியா வரலாமா? “
என்று திட்ட,
“நம்ம ஊர்ல, தனியா
போக எனக்கு என்ன பயம்? நான் தைர்யமானவளாக்கும்…“ என்று முறைத்தாள் பூங்கொடி.
“ஆமாமா.. உன்
தைர்யத்தை தான் செத்த நேரம் முன்னாடி பார்த்தேனே? அப்படியே கழுகுக்கு பயந்து நடுங்கின கோழிக்குஞ்சு மாதிரி, அந்த பொறுக்கி முன்னாடி நடுங்கி
கிட்டு நின்னதை...” என்று தன்னை மறந்து நக்கலாக சிரிக்க,
உள்ளுக்குள்
அவளை பெண் புலியாக எண்ணிக்கொண்டு, ராஜேந்திரனின்
தாக்குதலை சமாளிக்க தயாராகி இருந்தவளை, கோழிக்குஞ்சு என்று கேவலமாக இவன் சொல்லிவிட, அவளுக்கு தலை இறக்கமாகிவிட்டது.
அது எப்படி
என்னை கோழிக்குஞ்சு என்று சொல்லலாம் என்று சிலிர்த்துக் கொண்டவள்,
“ஹலோ...நான்
ஒன்னும் கோழிக்குஞ்சு இல்ல... பாயும் பெண் புலியாக்கும்...” என்றாள் அவனை
முறைத்தபடி.
“ஆஹான்.. அந்த
புலி அப்ப அந்த ராஸ்கல் மீது பாயாம ஏன் நடுங்கிகிட்டு நின்னுச்சாம்? “ சிரித்தான் இன்னுமாய் நக்கலுடன்.
“ஐய... நான்
ஒன்னும் நடுங்கலை... பதுங்கி இருந்தேன். பாயறதுக்கு... அந்த பொறுக்கி ராஸ்கல் மட்டும்
என்கிட்ட நெருங்கி இருக்கணும். அப்ப தெரிஞ்சிருக்கும் இந்த புலியோட பாய்ச்சல்...
என் பேரு வேணா
பூவா இருக்கலாம்... பார்க்கிறதுக்கு ஆளும் பூவாக, மென்மையாக தெரியலாம். ஆனால் நான்
பூவுக்கு பூவு..அதே பூவு பொங்கி எழுந்தா ? “ என்று வீர வசனம் பேச, அவனோ உள்ளுக்குள் பொங்கி வந்த தன் சிரிப்பை முயன்று அடக்கி கொண்டு
“பொங்கி எழுந்தா? “ என்று எடுத்து கொடுத்து அவளை சீண்ட ,
“பொங்கி எழுந்தா
புயல்.. அதுவும் சாதாரண புயல் அல்ல... சூறாவளி புயல்...” என்று தலையை சிலுப்பிக் கொண்டாள் பூங்கொடி.
“ஷ் அப்பா...
முடியலடி கருவாச்சி.... எதுக்கு இம்புட்டு பில்டப்... “ என்று தன்னை மறந்து வாய்
விட்டு சிரிக்க, தான் பக்கம் பக்கமாக வீர வசனம்
பேசியதெல்லாம் வேஸ்ட் என்பதாய் அவன் நக்கலாக சிரிப்பதைக் கண்டு கடுப்பானவள்,
“யோவ்...என்ன ? என்னைப் பார்த்தால் ஜோக்கர் மாதிரி
தெரியுதா? எதுக்கு இப்படி கெக்க பெக்கனு இளிக்கிற? நான் உண்மையைத்தான் சொன்னேன்...” என்றாள்
அவனை முறைத்தபடி.
அவனும் மீண்டும்
ஹா ஹா ஹா என்று சிரித்தபடி
“என்ன உண்மை
டி... நீயும் ரௌடிதான்ற உண்மையா... சரி சரி ஒத்துக்கறேன்... ஒத்துக்கறேன்... நீயும்
ரௌடிதான்...“ என்று மீண்டும் நக்கலாக சிரித்தவன்,
“இம்புட்டு வாய்
அடிக்கிறியே...இந்த இருட்டற நேரத்துல தனியா வரலாமானு அறிவு இல்ல. கூட துணைக்கு உன்
தொம்பியவோ, இல்ல அந்த வெள்ளச்சியவோ கூட்டிகிட்டு
வரவேண்டியதுதான..” என்றான் அவளை கண்டித்தபடி...
“ஹ்ம்ம்ம் ஏன்
என் தம்பி, தங்கிச்சிதான் எனக்கு பாதுக்காப்பாக்கும்? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாங்களும்
எங்க போனாலும் துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு
போவதாம்...
அதெல்லாம் ஒன்னும்
வேண்டாம். என்னை நானே தற்காத்துக்க தெரியுமாக்கும்...” என்று கழுத்தை நொடித்தாள்.
“ஆமாமாம்... நீ
உன்னை தற்காத்துகிட்ட லட்சணத்தைத்தான் பார்த்தேனே... நான் மட்டும் வரலைனா அந்த
பொறுக்கி ராஸ்கல் உன்னை நாசம் பண்ணி இருப்பான்... ” என்று நக்கலாக ஆரம்பித்து
கோபத்தில் பல்லை கடித்தான் ராசய்யா.
அவன் மட்டும்
அங்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? என்று எண்ணியவனுக்கு உடல் நடுங்கியது.
*****
பக்கத்தில் இருந்த வாழைக்காட்டுக்கு தண்ணி
பாய்ச்சிக் கொண்டிருந்தான் ராசய்யா.
வயலுக்கு உள்ளே
இருந்ததால், பூங்கொடி ராஜேந்திரனிடம் வழி விடச் சொல்லி வாதாடிக்கொண்டிருந்தது எதுவும்
கேட்கவில்லை.
ஆனாலும்
திடீரென்று அவனுடைய உள்ளுணர்வு எச்சரித்தது. அவன் நெஞ்சம் திடீரென்று படபடவென்று
அடித்துக்கொள்ள, அடுத்த கணம் வயலில் இருந்து சாலைக்கு ஓடி வந்தான்.
அவன் வந்த அதே
நேரம், ராஜேந்திரன், பூங்கொடியை பின்னால் அணைக்க வர, அதைக்கண்டு கோபம் கொந்தளித்தது.
அதோடு அவன்
நிறுத்தியிருந்த காரை பார்த்ததுமே அவன் ராஜேந்திரன் என்று கண்டு கொண்டான்.
அவனைப்பற்றி
ராசய்யாவுக்கு நல்லாவே தெரியும். அதனால் உள்ளம் பதைக்க ஒரே எட்டில் அவனை அடைந்து
பின்னால் இருந்து அவன் காலை தாக்கி இருக்க, ராஜேந்திரனும் அம்மா என்று அலறியபடி சுருண்டு விழுந்தான்.
இப்பொழுது அதை
நினைக்கும்பொழுதும் அவன் உள்ளம் பதைபதைத்தது.
அவனிடம் சிக்கிய
பெண்கள் தப்பிச்சென்றதாக சரித்திரம் இல்லை. ஆனாலும் அவனை போலிஸில் மாட்டி வைக்க முடியவில்லை.
இதுவரை மற்ற ஊர்
பெண்களிடம் கை வரிசையை காட்டியவன், இன்று தன் ஊர் பெண்ணிடம், அதுவும் பூங்கொடியிடம் தவறாக நடந்து
கொள்ள இருந்ததை கண்டு பொங்கி எழுந்தவன் அவனை நைய்ய புடைத்து விட்டான்.
அந்த பொறுக்கியின்
பலம் உணராமல், இந்த சில்வண்டு தான் ஒரு பூவல்ல...புயல் என்று
வெட்டி வசனம் பேசுவதைக் கண்டு கடுப்பானாலும், அவளிடம் அவனால் கிண்டல் செய்யத்தான் வந்தது.
*****
இப்பொழுதும் ராசய்யா அவளிடம் வம்பு
இழுத்துக்கொண்டிருக்க, அவன் சொன்னதுக்கு இன்னுமாய் சிலிர்த்துக்கொண்டவள்,
“நீ வரலைனா இந்நேரம்
அவன் செத்து பொணமாகி இருப்பான்..நீ வந்ததனால தப்பிச்சுகிட்டான்...” இறுகிய
முகத்துடன் சொன்னவளின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தை கண்டு அதிர்ந்தவன்
“என்னடி சொல்ற?” என்றான் சந்தேகமாக...
“ஆமாம் யா...
அவன் மட்டும் என் மேல கையை வச்சிருந்தா, அடுத்த நொடி, இதாலயே அவன் சங்கை அறுத்து
சாச்சிருப்பேன்... அதுக்குள்ள நீ வந்து அந்த பொறுக்கியை காப்பாத்திட்ட...” என்று
தாவணிக்குள் ஒளித்து இடுப்பில் சொருகி வைத்திருந்த
சூரியை எடுத்து காட்ட, அதைக்கண்டு ஒரு நொடி அரண்டு போனான் ராசய்யா.
“என்னடி இது?” என்று அதிர்ச்சியோடு அவள் கையில் இருந்த கத்தியை
பார்த்து கேட்க
“தெரியல...இதுதான்
சூரி... என்கிட்ட எவனாவது தப்பா நடந்துக்க பார்த்தா, அவனை அடித்து சாய்க்க வேண்டாம். என்கிட்ட அவனை எதிர்த்து சண்டை போட உடலில் பலம்
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் சண்டை
போடாமலயே ஒரு நொடியில் அவன் சங்கை அறுத்துருவேன் இல்ல. அதுக்குத்தான் இதை எப்பவும்
என் கூடவே பத்திரமா வச்சிருக்கேன்...
இப்ப
சொல்லு...நான் புலியா? இல்லை பூனையா? “ என்று அந்த கத்தியை இடுப்பில் சொருகிக்
கொண்டு, முந்தானையை ஸ்டைலாக உதறி, பின்பக்கமாக சுற்றி இடுப்பில்
சொருகிக்கொண்டு, தன் வயலை
நோக்கி சைக்கிளை மிதித்தாள் பூங்கொடி.
*****
வீட்டிற்கு வந்த ராஜேந்திரனோ , அடிபட்ட சிங்கமாக, தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
ராசய்யா அவனைக்
அடித்ததும், அதைப்
பார்த்து பூங்கொடி நக்கலாக சிரித்து வைத்ததுமே அவன் கண்முன்னே திரும்பத் திரும்ப
வந்து சென்றது.
ஒரு வேலையாக காமாட்சிபட்டிக்கு
வந்திருந்தான் ராஜேந்திரன்.
திரும்பி வரும்பொழுதுதான்
பூங்கொடி சைக்கிளை மிதித்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வாழைத்தோப்பு
பக்கம் சென்று கொண்டிருந்தாள்
சைக்கிளை வேகமாக மிதித்ததில் அவளின் மார்பு மேலும் கீழும் ஏறி இறங்குவதை
பார்த்தவனுக்கு, மாராப்புக்கு உள்ளே ஒளிந்திருந்த அவளின் வனப்பான முன்னழகு கவர்ந்து
இழுத்தது.
அவன் அடித்திருந்த
சரக்கு வேறு அவனுக்கு இன்னுமாய் தூபம் போட்டு போதை ஏற்ற, தன் காரை அவள் செல்லும் பாதையில்
திருப்பினான்.
அவளின் சைக்கிளை
பின் தொடர்ந்து வந்தவன், அவள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும், தன் காரை வேகமாக முன்னால் ஓட்டிச்
சென்று அவளை வழிமறித்தவன், அவளிடம் பேச்சை வளர்த்தான்.
அவளோ கோபம்
கொண்டு அவனை திட்டி தீர்க்க, அவளின் கோபத்தில் சிவந்த இதழ்கள் அவனை இன்னுமாய் இம்சிக்க, சைக்கிளை பிடித்து இருந்த அவள் கையை
பிடித்துவிட்டான் ராஜேந்திரன்.
அதில் பொங்கி
எழுந்தவள், ஓங்கி கன்னத்தில் அறைந்து விட, அதில் சினம் கொண்டவன் அவளை பிடித்து
அணைக்க முயல, அந்த நேரம் பார்த்து ராசய்யா அங்கு வந்து நின்று
விட்டான்.
நின்றதோடு
இல்லாமல் நன்றாக அடித்து துவைத்து விட்டான். அதைக்கண்டு பூங்கொடி தன் பயத்தை
மறந்து சிரித்து வைத்தாள்.
ராசய்யா அடித்த
அடியை விட, பூங்கொடியின்
சிரிப்பு அவனை சினம் கொள்ள வைத்தது.
எப்படியாவது
அவளை பழி வாங்க வேண்டும் என்று தனக்குள்ளே சூளுரைத்தவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளைப்பற்றிய ஜாதகம்
அவன் கையில் வந்து சேர்ந்தது.
******
அவளின் தந்தை தன்னிடம் கடன் வாங்கி
இருக்கும் தணிகாசலம்தான் என்று அறிந்ததும் துள்ளிக் குதித்தான்.
மடமடவென்று ஒரு திட்டத்தை
தீட்டினான்.
அவர் அடமானம்
வைத்திருந்த வீட்டு பத்திரத்தையும், நிலத்து பத்திரத்தையும் காட்டி, அவர் மகளை திருமணம் பண்ணித்தர சொல்லி நெருக்கடி
கொடுத்து, அவரையும் சம்மதிக்க வைத்து, அடுத்த ஒரு வாரத்தில் இந்த திருமணத்தையும்
ஏற்பாடு செய்து, இதோ மணமேடை வரைக்கும் வந்து விட்டான்.
அவன்
எதிர்பார்த்த மாதிரியே எல்லாம் நல்லபடியாகத்தான்
சென்று கொண்டு இருக்க, கடைசியில் வெண்ணெய் திரண்டு வரும்
வேளையில் தாழி உடைந்ததை போல, இப்பொழுது ராசய்யா திடீரென்று
மேடைக்கு வந்து அவன் சட்டையைப் பிடித்து தூக்கி அறையும் விட்டிருந்தான்.
அதில் அதிர்ந்து
போன ராஜேந்திரன், நொடியில் சுதாரித்துக்கொண்டவன்,
“டேய்... ராசு
என்ன பண்ற? எதுக்குடா என் சட்டையை புடிச்ச? என்னை எதுக்குடா அடிச்ச? “ என்று ராசய்யாவை முறைத்தபடி, அவன் பிடியில் இருந்து தன் சட்டையை
விலக்கி கொள்ள முயன்றான் ராஜேந்திரன்.
“டேய்....இது
பூங்கொடி கல்யாணம். உனக்கு இங்கே என்ன வேலை? “ என்று ராசய்யா அதட்ட,
“ஹீ ஹீ ஹீ
நான்தான் டா உங்க ஊர் பூங்கொடியை கட்டிக்க போற மாப்பிள்ளை...” என்றான் மிடுக்குடன்.
அதைக்கேட்டு அதிர்ந்து
போன ராசய்யா
“என்னாது? மாப்பிள்ளையா? “ என்று அதிர்ச்சியுடன் அவனை
பார்த்து முறைக்க
“ஆமான் டா...
ஏன் என் மாமனார் உன்கிட்ட சொல்லலை? வேணும்னா தணிகாசலம் மாமாவிடம் கேட்டு
தெரிஞ்சுக்கோ...” என்று நக்கலாக சிரிக்க, அதற்குள் உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த தணிகாசலம், மேடையில் நடக்கும் தகறாரை கண்டு அதிர்ந்து, மேடைக்கு வேகமாக ஓடி வந்தார்.
ராசய்யா வை
அதிர்ச்சியோடு பார்த்து
“ராசு என்ன இது? முதல்ல மாப்பிள்ளை சட்டையில் இருந்து
கையை எடு..” என்று அதட்ட, அதைக்கேட்டு தூக்கி வாரிப்போட
அதிர்ந்தவன்
“என்ன மாமா சொன்னிங்க? மாப்பிள்ளையா? போயும் போயும் இந்த பொறுக்கியா
பூங்கொடிக்கு மாப்பிள்ளை? “ என்று சந்தேகமாக கேட்க,
“ஆமாம்... இவர்தான் மாப்பிள்ளை...இன்னொரு தரம் பொறுக்கினு
சொல்லாத. அவர் என் வீட்டு மாப்பிள்ளை...”
என்று எங்கோ வெறித்தபடி சொன்னார் தணிகாசலம்.
“என்ன மாமா? உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? இவன் சரியான பொம்பள பொறுக்கி... இவனப்போயா பூங்கொடிக்கு கட்டிவைக்க போறீங்க? “ என்று கோபத்துடன் முறைத்தான் ராசய்யா.
“போதும் நிறுத்து ராசு... அவர் ஒன்னும்
பொறுக்கி இல்ல. இன்னொருதரம் அப்படி சொன்ன, நான் மனுஷனா இருக்க மாட்டேன். யாரு இப்பல்லாம்
யோக்கியமா இருக்கானுங்க. எல்லாம்
கல்யாணத்துக்கு பின்னால் திருந்திடுவாங்க.
இந்த கல்யாணம் இப்ப நடக்கணும். நீ தகராறு பண்ணாம
நகரு...” என்று தணிகாசலம் ராசய்யாவை
விரட்ட, அதைக் கேட்ட பூங்கொடியோ அதிர்ந்து போனாள்.
இதுவரைக்கும் தன்னை
கட்டிக்க போகிறவன், கந்துவட்டி மட்டும்தான் என்று எண்ணி இருந்தவளுக்கு அவனின் ஒழுக்கமில்லாத
வாழ்க்கை அதிர்ச்சியை கொடுத்தது.
ராசய்யா சொன்னதை
வைத்து மட்டுமல்ல. அவன் அவளிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றான் தானே...
இப்பொழுது அவள்
தந்தையும் அதை மறைமுகமாக ஒத்துக்கொண்டு, கல்யாணத்திற்கு பிறகு திருந்திடுவான் என்றான் பழைய லாஜிக்கை சொல்வதைக்கேட்டு
இன்னுமே நொறுங்கி போனாள் பெண்.
“அப்படி என்றால்
அவருக்கு முக்கியம் அந்த பத்திரங்கள் மட்டுமே.. என் வாழ்க்கை எப்படியோ சீரழிந்து போனாலும்
அவருக்கு கவலை இல்லையா? “ என்று யோசிக்க, அந்த நொடி உலகமே வெறுத்துப் போனது பூங்கொடிக்கு.
இந்த உலகில் எல்லாரும்
சுயநலவாதிகளாக கண்முன்னே கொக்கரித்தனர்.
தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலம் பிடித்த
பிசாசுகளாக தெரிந்தனர்.
தன் உடன் பிறந்த
சகோதரி...தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று
கிடைத்த வரை லாபம் என்று பொறந்த வீட்டில் இருந்து சுரண்டிக் கொண்டாள்.
அந்த சந்தோஷ்...
அவனின் டைம்பாஸ்க்காக, தன்னிடம் குழைந்து குழைந்து பேசியதும்
அவளை குறுகுறுவென்று பார்த்து வைத்து தன்னுள்ளே அற்ப சந்தோஷபட்டுக் கொண்டான்.
அவளை விட, அழகாய், வசதியாய் இன்னொருத்தியை கண்டதும் அந்த பூவிடம் தாவி விட்ட சுயநலவாதி.
அவள் தந்தை தன்னை
பாப்பா, செல்லம் என்று கொஞ்சி அழைத்தவர், இப்பொழுது தன் சுயநலத்திற்காக அவர் கையாலேயே தன்னை பாழும் கிணற்றில் தள்ளி விட்டு விட்டார்
அவள் அன்னையும் ஆரம்பத்தில்
அவளுக்காக வாதிட்டாலும், பின் தன் மற்ற இரண்டு பிள்ளைகளுக்காக இளைய மகளின் வாழ்க்கையை பணயம் வைக்க ஒத்துக்கொண்டார்
“இப்படி எல்லாருமே
தங்களுடைய நலனைத் தான் பெருசாக கருதுகின்றனர்... எனக்காக யாரும் இல்லை... என் மீது உண்மையாக அக்கறைப்
பட யாருமே இல்லை. என் நலத்திற்காக யாரும்
இல்லை...” என்று மனம் வெதும்ப, அதே நேரம்
“நான் இருக்கேன்...”
என்று கம்பீரமாக ஒலித்தது ஒரு குரல்.
அந்த மண்டபமே
அதிரும்படி ஒலித்தது அந்த குரல்.
“பூங்கொடிக்கு நீங்க
செய்யும் அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லைனு நினைச்சுகிட்டிங்களா? நான் இருக்கேன்..அவளுக்காக நான்
இருக்கேன்... என்னால பூங்கொடியோட வாழ்க்கை நாசமாவதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது.
நேத்துல இருந்து
பார்த்துகிட்டேதான் இருந்தேன். அந்த புள்ள மூஞ்சில துளிகூட கல்யாண கலையே இல்ல.
அதில் இருந்தே அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையோனு சந்தேகமா இருந்தது.
இந்த பொறுக்கியை
பார்த்ததும் இப்ப தெளிவாகிடுச்சு...
கண்டிப்பா இவனை
கட்டிக்க உங்க பொண்ணு மனதார சம்மதிச்சிருக்க மாட்டா...அப்படீனா அவளை உருட்டி
மிரட்டி இல்லைனா சென்டிமென்ட்டா ஏதாவது பேசிதான் சம்மதிக்க வச்சிருப்பிங்க.
அவளுக்கு
பிடிக்காத இந்த கல்யாணத்தை கட்டாயபடுத்தி பண்ணவேண்டிய அவசியம் என்ன மாமா? எதுக்கு இவ்வளவு அவசர அவசரமாக இந்த கல்யாணம்?
படிக்கிற புள்ளையை
எதுக்காக படிப்பை நிறுத்தி, இந்த அவசர கல்யாணத்தை நடத்தனும்? “ என்று அத்தனை பேர் முன்னிலையில் பூங்கொடிக்காக வாதாடினான்
ராசய்யா.
அதைக்கேட்டு
நெஞ்சை அடைத்தது பூங்கொடிக்கு.
மணமகள் அறையில்
இருந்தாலும், வெளியில் நடப்பதெல்லாம் கேட்டுக் கொண்டுதான்
இருக்கிறாள்.
தனக்காக அத்தனை
பேர் முன்னிலையில் தன் தந்தையை நிக்க வைத்து கேள்வி கேட்பவனை எண்ணி ஒரு கணம்
ஆச்சர்யமாகவும், தன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்திவிட்ட
தன் தந்தைமீது கோபமும் பொங்கி வந்தது.
“இங்க பாரு ராசு...
இது எங்க குடும்ப விவயம்...இதுல நீ தலையிடாத.. “ என்று அவனை விலக்க முயன்றான் ராஜேந்திரன்.
“நானும் அவர் குடும்பத்துல
ஒருத்தன் தான். அவருடைய தங்கச்சி மவன். பூங்கொடிக்கு நான் அத்த மவன்.
அவளுக்கு ஒரு கெடுதல் நடக்க நான்
விடமாட்டேன்...” என்று ராஜேந்திரனை பார்த்து முறைத்தவன், பின் தணிகாசலம் பக்கம் பார்த்தவன்
“எதுக்காக இந்த அவசர
கல்யாணம்? அதை முதல்ல சொல்லுங்க மாமா... அதுவும் இந்தப்
பொறுக்கிய போய் எப்படி மப்பிள்ளையா தேர்வு செஞ்சீங்க...சொல்லுங்க...” என்று
தணிகாசலத்தை முறைத்தபடி கேட்க,
“டேய்...இன்னொருதரம்
என்னை பொறுக்கி னா அவ்வளவுதான்... “ என்று ராஜேந்திரன் எகிற,
“என்னடா செய்வ? ஊரெல்லாம்
மேயறவனுக்கு பேர் பொறுக்கிதான? உண்மையைச் சொன்னா குத்தத்தான் செய்யும்...” என்று நக்கலாக சிரிக்க,
“ஆமா...இவர்
பெரிய ஹீரோ...வெட்டியா ஊரை சுத்திகிட்டு, ஊரெல்லாம் வம்பு இழுத்துகிட்டு திரியும்
ரௌடி தானே நீ. நீ என்ன என்னை மட்டம் தட்டற? “ என்று ராஜேந்திரன் முறைக்க
“ஆமான் டா.. நான்
ரௌடி தான் டா... என் கண்ணு முன்னாடி யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும்
ரௌடிதான். ஆனால் உன்ன மாதிரி பொம்பள புள்ளைகளை
விரசமா பார்க்கற ஆளில்லை.
எல்லா
புள்ளைகளையும் என் கூட பொறந்த தங்கச்சியாவோ, அக்காவோ நெனச்சு பழகுறவன்...” என்று முறைத்தான் ராசய்யா.
“அப்ப பூங்கொடியையும்
உன் தொங்கச்சியா நினைச்சுதான்
பழகறியாக்கும்? அதனால் தான் இவ்வளவு அக்கறையாக்கும்?“ என்று நக்கலாக சிரித்தான் ராஜேந்திரன்.
“டேய்...பூங்கொடினு இல்லை.
எந்த புள்ளைக்கும், என் கண்ணு முன்னாடி ஒரு அநியாயம் நடந்தால் அதை என்னால பார்த்துக்கிட்டு
இருக்க முடியாது...” என்று முறைத்தான்
அதைக்கேட்டு
கடுப்பான ராஜேந்திரன், தன் சட்டை மேல் இருந்த ராசய்யா கையை தட்டிவிட்டு, தன் சட்டையை நீவி விட்டு கொண்டவன்,
“ராசு... நீ ரொம்ப அதிகமா போற? இப்ப இங்க என்ன அநியாயம் நடந்திருச்சாம்? என்னைப் பார்த்தா அநியாயம் பண்றவன்
மாதிரியா இருக்கு...
எனக்கும் தணிகாசலம்
மாமாவிற்கும் ஒரு கணக்கு இருக்கு.
அதுக்குத்தான் இந்த கல்யாணம். நீ இதுல தலையிடாத...” என்று
முறைத்தான்.
“டேய்
நல்லவனே...உனக்கும் தணிகாசலம் மாமாவிற்கும்
ஒரு கணக்கு இருக்குனா அந்த கணக்கை
அவரோட வெச்சுக்கணும். சம்மந்தமில்லாமல் இந்த புள்ளைய எதுக்கு உங்க கணக்குல இழுக்கறிங்க...”
என்று பதிலுக்கு முறைத்தான் ராசய்யா.
அதில் இன்னுமாய்
கடுப்பான ராஜேந்திரன், தணிகாசலத்தை கோபமாக பார்த்து,
“என்ன மாமா இதெல்லாம்? எவன்
எவனையோ பேச விட்டு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க? நான் சொன்னது...நாம பேசினது எல்லாம்
மறந்து போச்சா?
உங்க பத்திரம் எல்லாம்
என்கிட்ட பத்திரமாதான் இருக்கு. மறந்துடாதீங்க...” என்று குறிப்பு காட்டி தணிகாசலத்தை முறைத்தான்
ராஜேந்திரன்
தணிகாசலத்திற்கும்
என்ன செய்வது என்று தெரியாமல், கையை பிசைந்தபடி நின்றிருந்தார்.
ராசய்யா வந்து இப்படி
தகராறு பண்ணுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவர்.
ஆரம்பத்தில்
திருமணத்திற்கு ஒத்துக்காத தன் மகளே, இறுதியில் இந்த திருமணத்தை ஏற்றுக்
கொண்டு மண்டபம் வரைக்கும்...மணமேடைக்கும் வந்துவிட்டாள்.
இன்னும் சற்று
நேரத்தில் அவள் கழுத்திலும் தாலி ஏறப்போகிறது.
இந்த நேரத்தில்
ராசய்யா வந்து இப்படி தகராறு பண்றானே என்று
எரிச்சலாக இருந்தது.
அந்த எரிச்சலில்
அவனை கோபமாக பார்த்து முறைத்தவர்,
“ராசு...மாப்பிள்ளை
சொல்றது சரிதான்.. நீ இந்த விசயத்துல தலையிடாத.
நீ முதல்ல இங்க இருந்து போ. நாங்க
எல்லாம் பேசி முடிச்சு, ஏற்கனவே பாப்பா கிட்ட சம்மதம் வாங்கித்தான் இந்த திருமணம் நடக்குது.
அதனால் நீ
குழப்பம் பண்ணாமல் உன் வேலையப் பாரு...”
என்று சிடுசிடுத்தார்.
எப்பொழுதும்
தன்னை மாப்ள என்று வாய் நிறைய கூப்பிடும்
தணிகாசலம் மாமா , இப்பொழுது மாப்பிள்ளையை விட்டு வாய்க்கு
வாய் ராசு என்று தன் பெயர் சொல்லி அழைத்ததை கண்டு வேதனை கொண்டது அவன் மனம்.
ஆனாலும் ஏனோ
அவனுக்கு இந்த திருமணம் நெருடலாக இருந்தது.
எப்பொழுதும்
சிரித்துக்கொண்டும், இல்லையென்றால் முறைத்துக்கொண்டும் வளைய வரும் பூங்கொடி நேற்றிலிருந்து தன்னுணர்வு
இழந்து, ஏதோ வெறித்தவளாய் நடமாடுவதை கண்டு
அவனால் தாங்க முடியவில்லை.
கண்டிப்பா இந்த
கல்யாணம் அவளுக்கு நல்லது செய்யாது என்பதும் மட்டும் அவன் உள்ளுணர்வு
அடித்துச்சொல்ல, யாரோ எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட
மனமில்லை அவனுக்கு.
நாளைக்கு அந்த
புள்ளை கண்ணை கசக்கி கொண்டு வந்து நின்றால் , சத்தியமாக அவனால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அப்படி ஒரு நிலை
அந்த புள்ளைக்கு வரவிடக்கூடாது என்றுதான் இப்பொழுது போராடிக் கொண்டிருந்தான்.
“இல்ல மாமா... இந்த கல்யாணம் கண்டிப்பா பூங்கொடி சம்மதத்தோட நடக்கல. அது முகத்தில கல்யாண கலை கொஞ்சம் கூட இல்ல. அப்படின்னா
நீங்க எதுக்கோ அவளை மிரட்டித்தான் இந்த
கல்யாணத்திற்கு சம்மதிக்க வச்சு இருக்கீங்க.
அப்படி என்ன
இவன்கிட்ட இருக்குனு இவனை மாப்பிள்ளையா புடிச்சிருக்கிங்க? இவன் எதுவும் எதுக்காச்சும் உங்களை மிரட்டினானா? சொல்லுங்க
மாமா...”
என்று இடுங்கிய
கண்களுடன், தணிகாசலத்தை பார்க்க, அவருக்கோ அத்தனை பேர் முன்னால் தன்னை நிக்க
வச்சு கேள்வி கேட்கிறான் என்று கோபம் வந்தது.
அந்த கோபத்தில்
ராசய்யாவை உறுத்து விழித்தவர்,
“ஏதோ யாரும் இல்லாத
அனாதை பையன் னு உன் மேல பாசம் காட்டினது
தப்பா போச்சு. அதுக்கான நன்றிக்கடனை நீ
நல்லாவே காட்டிட்ட... இப்படித்தான் சபைக்கு
நடுவுல வச்சு என்னை அவமானப்படுத்துவியா ராசு? “ என்று வார்த்தைகளை அள்ளித் தெளித்தார் பெரியவர்.
அதைக்கேட்டு
அதிர்ந்து போனான் ராசய்யா
இதுவரை அவனை, யாருமில்லாத அனாதை என்று எத்தனையோ
பேர் சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்கள்.
அப்பொழுது
எல்லாம் அதை துச்சமாக எண்ணி காதிலயே போட்டுக் கொண்டதில்லை.
“உண்மையைத்தானே சொல்கிறார்கள்..சொல்லிவிட்டு
போகட்டும்...” என்று தோளை குலுக்கி விட்டு
சென்று விடுவான்.
ஆனால் இன்று
அவனின் உயிராக மதிப்பு வைத்து, அவனை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு அன்பு பாராட்டிய தணிகாசலம்
மாமாவே அவனை அனாதை என்று சொல்லிவிட, அதைக்கேட்டவனுக்கு பெரிய அடியாக இருந்தது.
பூங்கொடியும் அதைக்கேட்டு
அதிர்ந்து போனாள்.
அப்படி ஒரு
வார்த்தையை யார் கேட்டாலும் அது எப்படி வலிக்கும் என்று புரிந்து கொள்ள
முடிந்ததால் தவிப்புடன் ராசய்யா முகத்தைப் பார்த்தாள்
அவள்
நினைத்தபடியே அவனின் முகம் தொங்கிப் போனது.
அதுவரை யாருக்கும்
தலை வணங்காமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வலம் வருபவன், அனாதை என்ற வார்த்தையை கேட்டு துவண்டு
போனான்.
ஆனாலும் ஒரு
கணம்தான்...அதற்குள் தன்னை சமனப்படுத்தி
கொண்டவன், தன் ஆளுயரத்துக்கு நிமிர்ந்து நின்று
“நீங்க சொல்றது சரிதான்
மாமா... நான் ஒரு அனாதை தான்...அனாதையா வளர்ந்தாலும் ஓரளவுக்கு அடுத்தவங்க மனதையும், அதில் இருக்கும் தவிப்பையும், புரிந்து கொள்ளத் தெரிந்தவன்...
அப்படி
பார்த்ததால் தான் பூங்கொடி மனதில் இருந்த தவிப்பு புரிந்தது அவளுக்கு இந்த
திருமணத்தில் விருப்பம் இல்லை. உங்களுக்காகத்தான் தலையை ஆட்டி வைத்திருக்கிறாள்
என்று அடித்துச் சொல்வேன்...” என்றான் அவரை
துளைக்கும் பார்வை பார்த்து.
அதைக்கேட்டு இன்னுமாய்
அதிர்ந்து போனான் பூங்கொடி.
இத்தனை
வருடங்கள் உயிராய் நினைத்து வளர்த்த அவள்
பெற்றோர், உடன் பிறந்த தன் அக்கா என்று யாருமே கண்டிராத
அவள் மனதின் ஆழத்தை கண்டு கொண்டிருக்கிறானே என்று இடிந்து போனாள் பூங்கொடி.
அங்கு ராசய்யாவோ
இன்னுமாய் அவளுக்காக மன்றாடிக் கொண்டிருந்தான்.
“பாருங்க மாமா...
இந்த நாயி என்ன சொல்லி உங்களை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சானோ எனக்கு தெரியாது. ஆனால் அது சத்தியமா பூங்கொடியை நல்லபடியா, சந்தோஷமா வாழ வைக்கவாக இருக்காது.
என் கணிப்பு சரினா, இவன் உங்க பொண்ணை கல்யாணம் பண்றது அவளை சந்தோசமா
வச்சு குடும்பம் நடத்த இல்ல. அவளை பழி வாங்கத்தான் இந்த கல்யாணத்தை இம்புட்டு
அவசரப்பட்டு நடத்தறான்...” என்றான் ராஜேந்திரனை முறைத்தபடி.
அதைக்கேட்டு அங்கு
இருந்தவர்கள் அனைவருமே அதிர்ந்து போயினர்..!
ராஜேந்திரன் ஐயும் சேர்த்துத்தான்...
Comments
Post a Comment