என்னுயிர் கருவாச்சி-29

 


அத்தியாயம்-29

ராஜேந்திரன் திட்டமே ராசய்யா சொன்னதுதான்.  

இத்தனை நாள், சுத்துப்பட்டு கிராமத்தில் மைனராக வலம் வந்தவனை,  ஒருத்தி கை நீட்டி அடித்து விட்டாள். அதோடு அவன், ராசய்யாவிடம் அடிவாங்குவதை கண்டு அவள் எள்ளி நகையாடியதை  அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவள் பற்ற வைத்த அந்த நெருப்பு  இன்னுமாய் அவன் மனதில் திகுதிகுவென்று எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அணைக்கத்தான்  இப்படி ஒரு திட்டத்தை தீட்டினான்.

அவளை தன் அருகில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு தினம் தினம்  அவளை சித்திரவதை செய்ய வேண்டும். .

அவள் தன்னை அடித்ததற்கு அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் செய்த தவறை  ஒவ்வொரு நாளும் எண்ணியெண்ணி அவள் கண்ணீர் வடிக்க வேண்டும்.

அதற்கு அவளை தன்னிடம் கொண்டு வர வேண்டும். அதோடு அவனுக்கும் மனைவி என்று ஒருத்தி வேண்டும்

எப்படியும் தன் உல்லாச வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுதான்  இருக்க போகிறான். ஆனாலும் பேருக்காக வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி வந்தாக வேண்டுமே.

இரண்டுக்கும் சேர்த்து ஒரே வழி... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... அவளை மணந்து கொள்வது.

மணந்து கொண்டு தன் அருகில் அவளை கொண்டு வந்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்வது என்று திட்டமிட்டுத்தான் தணிகாசலத்தின் பத்திரத்தைக் காட்டி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது.  

எல்லாம் அவன் திட்டமிட்டபடியே  சென்று கொண்டிருக்க,  வெண்ணெய் திரண்டு வரும்  வேளையில்   தாழியை உடைத்தது போல,  இந்த ரௌடி பையன் எல்லாத்தையும் குழப்பறானே  என்று கோபம் வந்தது.  

அவனை அடித்து துவைத்து விடும் ஆவேசம் எழுந்தது தான்.

ஆனால் ராசய்யா வின் திடகாத்திரமான உடற்கட்டுக்கு முன்னால்,  அவனால் எதுவும் செய்ய முடியாது.  

ஏற்கனவே அதை கண்டு கொண்டு இருக்கிறான்.  அதனால் கை முஷ்டியை இறுக்கிய படி, பல்லைக் கடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.  

ராசய்யா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த தணிகாசலம்,

“என்னாது? பழி வாங்கவா? என்று அதிர்ச்சியுடன் நம்பாமல் கேட்க

“ஆமாம் மாமா... இந்த பொறுக்கி ஒருநாள் பூங்கொடி இடம் தப்பா  நடந்து கொள்ள முயன்றான். நல்ல வேளை நான் அப்பொழுது  சரியாக அங்கே வந்ததால் அவனை நன்றாக அடித்து உதைத்து விட்டேன்.  

இவன் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் வஞ்சம் தீர்க்க, இந்தக் குறுக்கு வழியில் பூங்கொடியை மணந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறான்.  

கண்டிப்பாக அவளை சந்தோசமாக வச்சு வாழ மாட்டான்... இதை நான் அடிச்சுச் சொல்வேன்...”  என்று    ராஜேந்திரனை முறைத்தபடி உறுதியாக சொல்ல, அதைக்கேட்டு தணிகாசலம் இடிந்து போனார்

இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவருக்கு தெரியாதே..!

தன் மகள்  எப்படியும் ராஜேந்திரனை திருத்தி விடுவாள் என்று நம்பித்தானே,  தன் பிரச்சனையையும் மீறி தன் பெண்ணை அவனுக்கு கொடுக்க முன்வந்தது.  

ஆனால் அவனுக்குள் இப்படி ஒரு வஞ்சம் இருக்கும் என்று எண்ணி இருக்கவில்லை.  

ஒருவேளை ராசு சொன்ன மாதிரி தன் பிள்ளையை கல்யாணம் பண்ணி அதன் பிறகு கொடுமை படுத்தி இருந்தால் என்னாவது என்று எண்ணியவருக்கு உடல் நடுங்கியது.  

அவருக்கு தலையை சுற்ற,  நெஞ்சை பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்து விட்டார்.  

******

ருகில் நின்றிருந்த ராசய்யா உடனே பதறி,  அவரை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தவன், அவரை  அலாக்காக தூக்கிச் சென்று  அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து,  அவருக்கு தண்ணீரை குடிக்க வைத்து, அவருடைய இதயத்தை நீவி விட்டான்.

கல்யாணத்தில் நடந்துகொண்டிருக்கும் குழப்பத்தைக் கண்டு பொற்கொடியின்  மாமியாருக்கு குசியாக இருந்தது.

“ஹ்ம்ம்ம் ஆக மொத்தம் இந்த மாப்பிள்ளை பொறுக்கி தானா...அதான பார்த்தேன்.  இந்த கருவாச்சிய போய் ஒருத்தன் தேடி வந்து கட்டிக்கிடறானேனு. அப்பவே யோசிச்சேன்...இப்பத்தான தெரியுது..”   

என்று அருகில் இருந்த அவருடைய உறவுக்காரரிடம் சொல்லி கழுத்தை நொடித்தார். அதைக்கேட்டு பூங்கொடியின் உடல் விறைத்து போனது.  

தணிகாசலம் இப்பொழுது கொஞ்சம் தெளிவாகிவிட,  ராஜேந்திரன் அவரை விடவில்லை.

“இங்க பாருங்க மாமா... எனக்கு முகூர்த்தத்துக்கு நேரம் ஆயிட்டு இருக்கு.  இவன்  சொல்ற மாதிரி  பழிவாங்கத்தான் உங்க பொண்ணைக் கட்டிக்க வந்தேன்.  

இல்லைனா என் அழகுக்கும் அந்தஸ்துக்கும் பெரிய பெரிய  இடத்திலிருந்து பொண்ணு கொடுக்க, காத்துக்கிடக்கிறாங்க.. அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்த கருவாச்சிய தேடி வந்தேனாக்கும்.

அன்னைக்கு இவ என்னை  கை நீட்டி அடிச்சதுக்கும், என்னை பார்த்து சிரிச்சதுக்கும், அனுபவிக்கணும்...அனுஅனுவா துடிக்கணும். அதனால  நாம பேசின படி இப்ப இந்த கல்யாணம் நடக்கணும். இல்லைனா?”  என்று பல்லைக் கடிக்க

இல்லைன்னா என்னடா செய்வ? நான் சொல்றேன் கேட்டுக்க. இவ்வளவு தூரம் நீயே உன் வண்டவாளத்தை ஒத்துக்கிட்ட பொறவு, உனக்கு எங்க வீட்டு பொண்ணை கொடுக்க முடியாது. இந்த கல்யாணம் நடக்காது. நீ நடையை கட்டு...” என்று ராசய்யா அவனை முறைக்க,  

“ஹீ ஹீ ஹீ... அதை என் மாமனார்...திருவாளர் தணிகாசலம் சொல்லட்டும். ஏன் னா அவருடைய வீட்டையும்,  நிலத்தையும் என்கிட்ட அடமானம் வச்சிருக்கார். அது திரும்ப வேண்டாமா அவருக்கு? “ என்று வில்லன் சிரிப்பை சிரித்தான் ராஜேந்திரன்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ராசய்யா...

“என்னடா சொல்ற? “ என்று  புரியாமல் முழிக்க,

“ஏன் டா... உனக்குத்தான் அடுத்தவங்க மனசும், அதுல இருக்கும் தவிப்பும் தெரியும்னு மார் தட்டினியே... உன் தணிகாசலம் மாமா மனசுல இருக்கிற தவிப்பு  உனக்கு புரியலையா?

ஓ... பொம்பள புள்ளைங்க மனசு மட்டும் தான் உனக்கு தெரியுமாக்கும்....” என்று  நக்கலாக சிரிக்க,

“டேய்.... “ என்று ராஜேந்திரனை  நோக்கி கையை ஓங்கி இருந்தான் ராசய்யா.

உடனே  தணிகாசலம் அவனை தடுத்து விட்டார்

“வேண்டாம் ராசு... அவனை விட்டுவிடு....” என்று கெஞ்சினார். அதில் கொஞ்சம் கோபம் தணிந்தவன், இப்பொழுது தணிகாசலத்தை பார்த்து 

“என்னாச்சு மாமா? இந்த  நாய் என்னென்னவோ சொல்றான்? அவன் சொல்றதெல்லாம் உண்மையா? “ என்று தவிப்புடன் விசாரிக்க

அவரோ குற்ற உணர்வுடன் ஆமாம் என்று தலையை ஆட்டியவர் யாரையும் எதிர் நோக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார்.  

அவர் எப்படி சொல்வார்? நான் சொல்றேன்  எல்லாரும் கேட்டுக்குங்க...

இவருடைய மூத்த பொண்ணு கல்யாணத்துக்கும்,  அதைத்தொடர்ந்து வயல் ல வெள்ளாமை வைக்கவும்  என்று கொஞ்சம் கொஞ்சமாக என்கிட்ட கடன் வாங்கி இருந்தார் இவர்....  

அது வட்டியோடு சேர்த்து இப்பொழுது லட்ச ரூபாய் வந்திருக்கு.  அந்த லட்ச ரூபாயை இவர் எடுத்து வைக்கட்டும்.  நான் இந்த மண்டபத்தை விட்டு போய்டறேன்.

இல்லைன்னா இவர்  பொண்ணை  எனக்கு கட்டிக்கொடுக்கணும்...”  என்று டீல் பேச, அதைக்கேட்ட  பூங்கொடிக்கோ  அவமானமாக இருந்தது.

தன்னை வைத்து ராஜேந்திரன் பேரம் பேசுவது வேதனையாக இருந்தது.

இப்படி ஒரு நிலைக்கு தன்னை கொண்டு வந்து விட்டாரே இந்த அப்பா என்று பொங்கியது சினம்.

ராசய்யாவுக்கும் அதே நிலைதான். கோபத்தில் அவன் முகம் சிவந்து தணிகாசலத்தை அடித்து துவைக்கும் ஆவேசத்துடன் பார்த்திருந்தான்.

வயதில் பெரியவராக போய்விடவும் அவரை ஒன்னும் செய்ய முடியாமல் தன் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டிருந்தான்.

“என்ன மாமா இது?  ஒரு லட்ச  ரூபாய்க்காக உங்க பொண்ணை விற்க முடிவு செய்து விட்டீர்களா? “ என்று  அடிபட்ட குரலில்  கேட்க, அதைக்கேட்டு இன்னுமே பூங்கொடி மனதில் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.

தன் தந்தையை பார்த்து அவள் கேட்க நினைத்ததை எல்லாம் அவள் சார்பாக அப்படியே ராசய்யா கேட்டு வைத்தான்.  

இதுவரை தன் தந்தையிடம் கேட்க நினைத்த அத்தனையும் அவள் சார்பாக அவள் சொல்லாமலயே அவள் மனதை அறிந்தவனாய்  கேட்டுக் கொண்டிருந்தான் ராசய்யா.

அதைக்கேட்டு ஒரு நொடி மூச்சை அடைத்தது பூங்கொடிக்கு.

தணிகாசலத்தின் முகத்திலோ குற்ற உணர்வு பொங்கி கொண்டு இருந்தது. யாரையும் பார்க்க தைர்யம் இல்லாதவராய்  தலையைக் குனிந்து கொண்டவர்

“தெரியலை ராசு...  ஒரு லட்சத்துக்கு நான் எங்கே போவேன் பணத்தைக் கொடுக்கலைன்னா வீடும் நிலமும் போயிடும் யா...

மத்த பிள்ளைகளையும் நான் எப்படி காப்பாற்றுவது?  அதோடு என் புள்ளைய நல்லா வச்சுக்கறதா  வாக்குக் கொடுத்தான்.  

எப்படியும் பூங்கொடி இவனை கட்டிகிட்டா இவனை திருத்திடுவா... அவளுக்கும் ஒரு  நல்ல பணக்கார வாழ்க்கை  கிடைக்கட்டும் என்றுதான் சம்மதிச்சேன்...” என்று தழுதழுத்தவாறு  கண்ணீர் விட்டார் தணிகாசலம்.  

“அதுக்காக இப்படி செய்யலாமா? “ என்று  தன் கை முஷ்டியை இறுக்கினான்  ராசய்யா

“வளவளன்னு வெட்டி பேச்சு பேசாமல் ரெண்டுல ஒன்னு முடிவை சொல்லுங்க...  லட்ச ரூபா இப்பவே வரணும். இல்லைனா அவர் பொண்ணு மேடையில வந்து உட்காரணும்..” என்று அதட்டினான் ராஜேந்திரன்.

லட்ச ரூபாய்க்கு எங்க போவதாம்? இந்த காசுக்காகத்தான் பூங்கொடி ஏற்கனவே ரெண்டு இடத்தில் கேட்டு பார்த்து விட்டு விட்டாள்.

ஒருவேளை இந்த ஆபத்து நேரத்திலாவது தன் அக்கா உதவுவாளா என்று இந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொற்கொடியிடம் சென்றது பூங்கொடியின் பார்வை.

அதே நேரம் அவள் அக்கா கணவன் தினேஷ் அவள் அக்காவிடம் ஏதோ சொல்லிவிட்டு  மணமேடைக்கு வர முயல, அவனின் முழங்கையை பற்றி இழுத்து தடுத்து நிறுத்தியவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் அக்கா கணவன் தினேஷ் உதவ முன்வருவதும், அவள் அக்காவே அதற்கு தடை போடுவதும் சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு புரிகிறதுதான்.

மறுபக்கம் திருமணத்திற்காக சென்னையில் இருந்து வந்திருந்த அவள் அத்தை சாந்தா... அவர் மகன்  சந்தோஷ் , இருந்த பக்கம் அவள் பார்வை செல்ல, அவனும் அதே நேரம்  நைசாக நழுவி மண்டபத்தை விட்டு வெளியில் செல்வது தெரிந்தது.  

மண்டபத்தில் இருந்தால், யாராவது அவனை மாட்டி வைத்து விடுவார்கள் என்று உணர்ந்து, முன்கூட்டியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று கொண்டிருந்தான்.

அதைக் கண்டவளுக்கு நெஞ்சை அடைத்தது.

“அப்படி என்றால் எனக்காக ஒரு லட்சம் கொடுக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை... அப்ப இந்த பொறுக்கியை கட்டிகிட்டு இவன் கொடுக்கும் டார்ச்சரை அனுபவிக்க வேண்டும்... அதுதான் என் விதியா? “ என்று நொந்து கொண்டிருந்தாள் பூங்கொடி.

******

தே நேரம்  தன் தலையை தட்டி யோசித்த ராசய்யா, உடனே  தன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு அவனுடைய புல்லட்டின்  சாவியை எடுத்து ராஜேந்திரன் கையில் திணித்தான்.  

“டேய் பண்ணாட.. இது என்னுடைய புல்லட் சாவி.  இன்றைய விலைக்கு லட்ச ரூபாக்கு மேலேயே போகும். இவர் கொடுக்க வேண்டிய காசுக்கு இதை வச்சுக்க.  இப்பவே இவருடைய பத்திரங்களை எல்லாம்  கொண்டு வந்து கொடு... “  என்று அதட்டினான் ராசய்யா.  

ராசய்யாவின் செய்கையை கண்டு அனைவரும் அதிர்ந்து போயினர்.  

பூங்கொடிக்கு மூச்சே  நின்றுவிட்டது

கொஞ்சமும் யோசிக்காமல் தனக்காக தன் உயிராக மதித்து வைத்திருந்த புல்லட் ஐ கொடுக்கிறானே என்று நெஞ்சை அடைத்தது அவளுக்கு.  

ராஜேந்திரனும் அதிர்ச்சியுடன் ராசய்யாவை பார்த்தான்.

அவனை இளக்காரமாக பார்த்து வைத்தவன் பின்  தணிகாசலம் பக்கம் திரும்பி

“ஏன் மாமா... பணம் கிடைக்குமானு  ஊரெல்லாம் கேட்டீங்களே... என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா?  வெட்டி பய...இவன் கிட்ட ஒரு லட்சம் எப்படி இருக்கும்னு தானே யோசிச்சுபுட்டிங்க

இவன் கிட்ட சொல்லி என்னவாக போகுதுனு தானே என் கிட்ட உங்க பிரச்சினையை சொல்லல.  என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காது.  

ஹ்ம்ம்ம் போனது போகட்டும்.  இப்பயாவது தெரிஞ்சுதே... இந்த இத்துப்போன செல்லாக் காசுக்காகத்தான் இந்த ராஸ்கல் உங்களை கிடுக்கிப்பிடி போட்டிருந்தானா?

இது தெரிந்திருந்தால், அப்பயே அவன் காசை விட்டெறிந்து  இருக்கலாம்.

நல்ல வேளை..இப்பயாவது எனக்கு தெரிய வந்ததே...இப்ப அவன் காசை  விட்டெறிந்து விட்டேன்.  இனிமேல் நீங்க தாராளமா தலை நிமிர்ந்து நடக்கலாம்...”  என்று அவர் தோளை தட்டிக் கொடுத்தான்.

தணிகாசலத்திற்கு இன்னுமே அதிர்ச்சி விலகவில்லை... ராசய்யாவை யோசனையுடன் பார்த்தவர்

“அது வந்து...  ராசு... வேண்டாம் யா.... “ என்று தணிகாசலம் மறுக்க,

“ஏன் மாமா... ஏன் வேண்டாங்கறிங்க...? “ என்று தன் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு அவரை துளைக்கும்  பார்வை பார்த்தான் ராசய்யா.

“வந்து... நீ இந்த வண்டியை எப்படி வச்சிருந்தனு எனக்கு தெரியும் யா... அதை எம்புட்டு நேசிச்சனு எனக்கு தெரியும் யா.  அதைப்போய் இவன் கிட்ட எப்படி தூக்கி கொடுக்க?...அதெல்லாம் வேண்டாம் ராசு... நான் பட்ட கடனை நான்தான் அடைக்க வேண்டும். “ என்றார் வேதனையுடன்.

“மாமோய்...எனக்கு பூங்கொடி வாழ்க்கைதான் முக்கியம்.  அந்த புள்ள சந்தோசமா சிரிச்சிகிட்டு வாழனும்.  

அதுக்காக இந்த புல்லட் என்ன?  எங்கிட்ட இருப்பது எல்லாம் கூட கொடுப்பேன்.  நீங்க ஒன்னும்  வருத்தப்படாதீங்க.  

முதல்ல இந்த நாய்க்கிட்ட இருந்து பத்திரத்த எல்லாம் வாங்கிட்டு அவனுடைய செட்டில்மெண்ட் ஐ முடிச்சு அனுப்புங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்...”  என்று சொன்னவன்,  ராஜேந்திரன் பக்கம் திரும்பி

“டேய் கந்து... அதான் உன் பாக்கிய கொடுத்தாச்சு இல்ல. சட்டுபுட்டுனு மாமாவோட பத்திரத்தை எல்லாம் கொண்டாந்து கொடுத்துட்டு உடனே இடத்தை காலி பண்ணு என்று முறைத்தான் ராசய்யா.

“டேய் ராசு... நீ யோசிச்சுதான் செய்றியா? லட்ச ரூபாய போய் இவர நம்பி தூக்கி கொடுக்கற? அது இவர் மேல இருக்கற அக்கறையா? இல்ல..இல்ல... நீதான் முன்னாடியே சொல்லிட்டியே...இவர் பெத்த ரத்தினம்  மேலதான் உன் அக்கறைனு.

அது சரி...  அந்த கருவாச்சி மேல உனக்கு ஏன் இம்புட்டு அக்கறை என்று  தெரிஞ்சுக்கலாமா?

இரு இரு..நானே சொல்றேன்...  நீ ஒரு நாள் விளையாட்டு போட்டிக்கு கூட்டிகிட்டு போறேன் பேர்வழினு  அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு போய் ஒரு நாள் புல்லா சுத்திட்டு வரல

நீ எப்பவும் அடிக்கடி அந்த புள்ளையவே  சுத்திக்கிட்டு இருக்கியே...  உங்களுக்குள்ள கசமுசா எதுவும் நடக்காமலயா இருந்திருக்கும்...

அதான் இப்படி சிலித்துகிட்டு அந்த புள்ளைக்கு உதவ முன்னால வர... என்ன? நான் சொல்றது கரெக்ட்தான...” என்று கோணலாக சிரித்தான் ராஜேந்திரன்.

*****

ராஜேந்திரன் சொன்னது போல பூங்கொடியை பழிவாங்க மட்டும் அவன் மணக்க திட்டமிட்டிருக்கவில்லை.

இதுவரை எத்தனையோ பெண்களை அனுபவித்து, ருசித்து இருந்தவனுக்கு, பூங்கொடியின் வனப்பான, எடுப்பான அழகு அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தான் இருந்தது.

அவள் கருப்பாக இருந்தாலும், நாட்டுக்கட்டை போல நச்சுனு, அது அது அங்க அங்க எடுப்பாக இருக்க, அவனுக்கு உள்ளுக்குள் புயல் அடித்தது.

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியாதான் இருக்கும் என்று அந்த கோழியை தினம் தினம் ருசிக்கவும் திட்டமிட்டுத்தான் , கல்யாணம் என்ற பெயரில் அவளை தன் சொந்தமாக்கி கொள்ள எண்ணியது.

அதோடு அவனை விட பெரிய இடத்தில் பெண் எடுத்தால், வர்றவ  பேச்சைக்கேட்டு அவன் ஆட வேண்டி இருக்கும். தன்னுடைய வழக்கமான உல்லாச வாழ்க்கையை தொடர முடியாது.

இதுவே இல்லாத வீட்டில் பொண்ணெடுத்தால், தன் காலை சுத்திக்கொண்டு, கணவனே கண் கண்ட தெய்வம். கல்லானாலும் கணவன்... குவார்ட்டர் அடித்துவிட்டு வந்தாலும் புருஷன் என்று தாலிக்கு மரியாதை கொடுத்து தன்னை விட்டு போகமாட்டாள்.

தன்னை அடக்கவும் மாட்டாள்... சோ ஒரு கல்லில் பல மாங்காய்... “ என்று திட்டமிட்டு, கட்டம் போட்டுத்தான் இந்த திருமண காயை நகர்த்தி இருந்தான்.

இந்த வெட்டிப்பய ராசுவால் இப்பொழுது எல்லாம் தவிடுபொடியாகி விட்டது. அவன் கட்டி வைத்த சீட்டுக்கட்டு மாளிகை ராசு என்ற சூறாவளியால் சின்னாபின்னமாகி விட்டது என்றதும் அவன் மனதில் கோபம் வெகுண்டு எழுந்தது.

ராசுவின் உடல் வலிமைக்கு முன்னால் அவனை தன்னால் வீழ்த்த முடியாது என்று பம்மியவன், ஒரே வழியான பணத்தைக்கொண்டு அவனை மடக்கி இருந்தான்.

ஆனால் இப்பொழுது அவன் லட்ச ரூபாய்க்கு மேலயே போகும் புல்லட்டையே தூக்கி கொடுத்து அந்த ஒரு வழியையும் அடைத்து விட, இன்னும் கோபம் பொங்கியது.

அதன் விளைவாக, பூங்கொடியை பற்றி தப்பாக கதை கட்டிவிட்டால் இனி அவளுக்கு திருமணம் என்ற ஒன்றே நடக்காது.

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் அவள்  மீண்டும் அவனுக்கு கிடைக்கலாம் என்று ஒரு அவசர திட்டத்தை தீட்டி இப்பொழுது இருவரையும் சேர்த்து வச்சு தப்பாக பேச ஆரம்பித்தான் ராஜேந்திரன்.

ராஜேந்திரன் சொன்னதைக்கேட்டு கொதித்தவன்

“டேய்...” என்று கர்ஜித்தவாறு ராஜேந்திரன் சட்டையை பிடித்து இறுக்கினான் ராசய்யா.

அவனோ இப்பொழுது அசால்ட்டாக ராசய்யாவின் பிடியை தட்டி விட்டவன்,  

“ப்ச்.... சும்மா எகிறாத  ராசு.  உண்மையைத் தானே சொன்னேன். அது உண்மை  இல்லைனா  உனக்கு ஏன் இம்புட்டு கோபம் வருது...  குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்குமாம்...”  

என்று ராஜேந்திரன் மீண்டும் ராசய்யாவை  சீண்டி தன் பல் முப்பத்திரண்டும்  தெரியும்படி இளித்தான்.  

“ஆமா அண்ணே... நீங்க சொல்றது கரெக்ட்தான். ஒரு தரம் ஃபாரின் சரக்க அடிச்சிட்டு பூங்கொடி தனியா வீட்ல இருக்கிறப்ப,  பூங்கொடி வீட்டுக்கு உள்ள  போனான் இந்த ராசய்யா.

நானும் இந்த நேரத்துல எதுக்கு இங்க போறானு வாசலயே பார்த்துகிட்டு இருந்தேன். உள்ள போனவன் ஆளையே காணோம்.   

அப்புறமா ஒரு அரைமணி நேரம் கழிச்சு,  சட்டை பட்டனை போட்டுகிட்டே வெளியில் வந்தான்.

அவன் உதட்டில எல்லாம் செவப்பா இருந்துச்சு. கொஞ்ச நேரத்திலேயே பூங்கொடியும் வெளியில வந்துச்சு

அது  உதட்டிலயும் காயம்பட்டு மஞ்சத்தூள் வச்சிருந்தது.  எல்லாரும் என்னாச்சுனு கேட்டப்ப ஏதோ சொல்லி சமாளிச்சுது. ஆனா  அது கண்ணெல்லாம் கலங்கியிருந்தது. அவங்களுக்குள்ள  என்னவோ நடந்திருக்குது.

கண்டிப்பா ராசு குடிபோதையில் பூங்கொடி கிட்ட ஏடாகூடமா நடந்திருப்பான்... அதான் இப்ப உதவற மாதிரி நடிக்கறான்...” என்று இன்னும் எக்ஸ்ட்ரா பில்டப் கொடுத்து அன்றைய நிகழ்ச்சியை எல்லார் முன்னாலயும் போட்டு உடைத்தான்  குமரேசன்.

நீண்ட நாட்களாக அவன் போட்டு வைத்திருந்த திட்டம்...ஏதாவது ஒரு காரணத்தால் அது நிறைவேறாமலயே தள்ளி போய்க்கொண்டிருந்தது. 

அவனுக்கு பூங்கொடியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தான்.  

அதற்காகத்தான் அன்று ராசய்யாவுக்கு ஊத்தி கொடுத்து ஏத்தி விட்டது.  

ஆனால் அது நவுத்துப்போன ஊசி பட்டாசை போல புஸ் என்று ஆகிப்போனது.

அதன் பிறகும்  ராசய்யா பூங்கொடியை தன் புல்லட்டில் ஏற்றிக்கொண்டு விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றதும்,  ஒரு நாள் முழுவதும் அவர்கள் இருவரும் ஒன்றாக சுத்தினார்கள்   என்பதும் அவனுக்குள் இருந்த தனலை விசிறி வைத்து ஊதி விட்டதை போல ஆனது.

அன்றிலிருந்து இன்னுமாய் அவள் மீது வஞ்சம் கொண்டு சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.

அவன் திட்டம் எல்லாம் வீணாப்போகும் படி திடீர்னு  அவளுக்கு பெரிய இடத்தில் திருமணம் ஆகப்போகிறது என்று தெரியவும் இன்னும் கொதித்து போனான்.

கடைசி வரைக்கும்  அவளை பழிவாங்க முடியாமல் போய்விட்டதே என்று ஏமாற்றத்துடன் இருந்தவனுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பம் தானாக கிடைத்து இருந்தது.

மணமேடையில் அமர்ந்திருந்த ராஜேந்திரனை பார்த்ததுமே அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது.

அவனை பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்ததால் ஓரளவுக்கு திருப்தி அடைந்தான்.

அவளை சும்மா பார்த்து வைத்தாலே, என்னமோ கண்ணகி மாதிரி எல்லாரையும் பொசுக் பொசுக்குனு கை நீட்டினா இல்ல. இப்ப அவளுக்கு பொருத்தமாத்தான் ஒழுக்கம் கெட்டவன்..ஊர் மேயறவன் வாச்சிருக்கான். இப்ப என்ன செய்வாளாம்? “ என்று மனதுக்குள்ளே கொக்கரித்துக் கொண்டான்.

ஆனால் அதிலும் இப்பொழுது மண் விழும்படி ராசய்யா திடீர்னு வந்து இந்த கல்யாணத்தை நிறுத்த முயலவும், வட போச்சே கதையாகிப்போனது குமரேசனுக்கு.

அதிலும் கடைசி வாய்ப்பா, ராஜேந்திரன்,  பூங்கொடியையும், ராஜேந்திரனையும் சேர்த்து வச்சு தப்பா பேசவும், இதுவும் தனக்கு கிடைத்த ஒரு நல்ல சான்ஸ் என்று ராஜேந்திரன் சொன்னதுக்கு ஒத்து ஊதினான்.

எப்படியும் அவர்கள் ஊர்க்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று நிறைய பேர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

எல்லாருமே வாயில் ஈ போகும் அளவுக்கு வாயை  ஆ வென்று  திறந்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவர்களுக்கு முன்னால், பூங்கொடியை பற்றி தப்பாக கதை கட்டிவிட்டால், அது கண்டிப்பாக சுத்தி இருக்கும் எல்லா ஊர்க்கும் காட்டுத்தீயாய் பரவி விடும்.

அதற்கு பிறகு பூங்கொடிக்கு திருமணம் என்ற ஒன்று நடப்பது கஷ்டம்தான் என்று கணக்கிட்டவன்,  ராஜேந்திரனை தொடர்ந்து அவனும் அன்று நடந்த சம்பவத்தை  தவறாக இட்டுக்கட்டி சொன்னான் குமரேசன் .  

குமரேசன் சொன்னதைக் கேட்ட ராசய்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் அவனுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே நினைவிலில்லை.

குமரேசன் ஊத்தி கொடுத்தது மட்டும் நினைவில் இருந்தது. அவள் தன்னை அடிச்சதுக்கு, அவளை பழிவாங்க என்று அவள் வீட்டிற்கு சென்றது நினைவு இருந்தது.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவில் இல்லை.

ஆனால் அடுத்த நாள் பூங்கொடி உதட்டில் அடிபட்டு இருந்தது நினைவிற்கு வந்தது. அவன் விசாரித்ததற்கு  வேண்டுதல் என்றல்லவா சொல்லிவிட்டு சென்றாள்.

ஒருவேளை குமரேசன் சொல்ற மாதிரி ஏதாவது தப்பா நடந்திருப்பேனா?  அவசரமாக யோசித்தான் ராசய்யா.  

ஆனால் அவனுக்கு தெரிந்தவரைக்கும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றுதான் தோன்றியது.

அவனே குடிபோதையில் நிலை தடுமாறி தவறாக நடக்க முயன்றிருந்தாலும், பூங்கொடி  அந்த மாதிரி நடக்க அனுமதித்திருக்க மாட்டாள்.

அவன்தான் பார்த்தானே...இடுப்பில் எப்பொழுதும் சிறிய கத்தியை சொருகி வைத்திருப்பவள்.

கண்டிப்பாக அதை எடுத்து அவனை சொருகி இருப்பாள். அப்படி என்றால் தவறாக எதுவும் நடக்கவில்லை.

இந்த குமரேசன் நாய் ஏதோ கதை கட்டி விடறான் என்று நொடியில் கண்டு கொண்டவன்,  குமரேசனை கொலுத்திவிடும் பார்வை பார்த்தான்.

அங்கே நடந்து கொண்டிருந்த வாக்கு வாதத்தை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்த  முனுசாமியும் வேகமாக  முன்னால் வந்தான்.  

“எல்லாருக்கும் நானும் ஒன்னு சொல்லிக்கிறேன். நேத்துக்கூட பூங்கொடி வீட்டுல பார்த்தேன்.  கல்யாண பொண்ணு அடக்க ஒடுக்கமா ரூம்க்குள்ள இருக்காம, பூங்கொடியே வந்து இவனுக்கு பரிமாறிக்கிட்டு இருக்கு.  

ராசய்யாவும் அந்த புள்ளைய ஒரு மார்க்கமா பார்த்து வச்சான்.. அதோட நிக்காம பூங்கொடி கைய புடிச்சு இழுத்தான்.  என்னால நேர்ல அந்த கன்றாவதி காட்சிய பார்க்க முடியல.  

அதுதான் மாமாவை பார்க்க உள்ளே வந்தவன்,  அப்படியே  திரும்ப போயிட்டேன்...”  என்று ராசய்யாவை நக்கலாக பார்த்தபடி சொன்னான்.  

அன்று அத்தனை பேர் முன்னாடியும் அவனை நடுரோட்டில் வைத்து ராசய்யா அடிச்சத்துக்கு, இன்று அவன் மீது பழியை போட்டு எல்லாரும் அவனை திட்டுவதை காணவேண்டும் என்று நேற்று பார்த்த காட்சியை சாட்சியாக வைத்து வெடியை கொலுத்தி போட்டான் முனுசாமி.

அதைக்கேட்டு இன்னுமாய் அதிர்ந்து போனான் ராசய்யா..

நேத்து எதார்த்தமாக பூங்கொடி கையைப் பிடித்து வைத்தான்.  அதுக்குப் போய் எப்படி இப்படி இட்டுக்கட்டி பேசறானே ...” என்று கோபம் கொந்தளித்தது. .  

உடனே முகத்தில் ரௌத்திரம் பொங்க, அருகில் நின்ற குமரேசன் மற்றும்  முனுசாமி இருவரின்  சட்டையையும்  தன் இரு கையாலும் இறுக்கி  பிடித்தவன்  

“டேய்... பொறம்போக்குகளா... இனி ஒரு வார்த்தை அந்தப் புள்ளையை பத்தி  தப்பா பேசுனிங்க... அடுத்த வார்த்தை பேச  உங்களுக்கு  நாக்கு இருக்காது ஜாக்கிரதை...” என்று  உறுமினான் ராசய்யா...

“ஓஹோ... அது எப்படி ராசு... நீ உறுமினா உடனே அடங்கிப் போயிருவாங்களாக்கும்...  

நீ பெரிய பலசாலிங்கிறதுக்காக, இவங்க ரெண்டு பேரையும் மிரட்டி அவங்க வாயை அடைச்சிடலாம். ஆனால் இப்ப உங்க ரெண்டு பேரோட வண்டவாளமும் ஊருக்கே தெரிஞ்சு போச்சே...

எனக்கும் உங்க ரெண்டு பேர் வண்டவாளமும் அரசல் புரசலா தெரியும் தான். சரி போனா போகுதுனு இந்த கருவாச்சிக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு நினைச்சிதான் இந்த கல்யாணத்தை பேசினது.

நீ என்னவோ பெரிய உத்தமன் மாதிரி இப்ப சீன் போட்டுகிட்டு இருக்க... “ என்று நக்கலாக சொல்ல, அடுத்த கணம் இடியென அவன் கை ராஜேந்திரன் தாடையில் இறங்கி இருந்தது.

அடுத்த அடி குமரேசன் மற்றும் முனுசாமிக்கும் தப்பவில்லை.

கீழ வரை தொங்கிய வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு, தன் முழுக்கை சட்டையையும் தன் புஜம் வரைக்கும் இழுத்து விட்டுக்கொண்டவன் 

“என்னடா சொன்ன.. நான் சீன் போடறனா?

நீ ஒரு பொறுக்கி... இவன் ஒரு வெளங்காதவன்..தண்டச்சோறு...அப்பன் ஆத்தா சம்பாதிக்கிற காசுல திண்ணுட்டு ஊரை சுத்திகிட்டு இருக்கற வெட்டிப்பய...  அடுத்து நிக்கறவன் உழைச்சு சம்பாரிச்சு பொண்டாட்டி புள்ளைக்கு கஞ்சி ஊத்த வக்கு இல்லாத  குடிகார நாய்...

நீங்க மூனு பேரும் சேர்ந்துகிட்டு வாய்க்கு வந்ததை சொல்லிட்ட, பூங்கொடி தப்பானவ ஆய்டுவாளா?  

அவ நெருப்புடா...அந்த புள்ளை கிட்ட யாரும்  நெருங்க முடியாது...   

இந்த நாய்தான் அன்னைக்கு எனக்கு  ஊத்தி கொடுத்து ஏத்திவிட்டு அந்த புள்ளைய தண்டிக்க சொன்னான்.

ஆனால் சத்தியமா சொல்றேன்... தப்பு தண்டா   எதுவும் நடந்து இருக்காது. நானே நிலை தடுமாறி தப்பா நடந்துக்க முயன்றிருந்தாலும்,  அந்த புள்ள என்னைய கொலையே பண்ணுவாளே  தவிர,  வேற எதுவும் தப்பா நடக்க விடமாட்டா...  

அவளைப் போய் கேவலமா பேசுறீங்க...  

இப்ப சொல்றேன் கேட்டுக்கோ... பூங்கொடி கலங்கமற்றவ...உங்கள மாதிரி வீணாப்போனவனுங்க நாக்கு மேல பல்ல போட்டு இட்டுகட்டி சொன்னா, அது உண்மை ஆய்டாது...

அவளைப் பத்தி சுத்துபட்டு எல்லா ஊருக்கும் தெரியும்...இதுவரைக்கும் நீங்க ப்ஏசினது போதும்.  

டேய் கந்து.  நீ முதல்ல இடத்தை காலி பண்ணு...மாமாவோட பத்திரம் இன்னும் அஞ்சு நிமிசத்துல என் கைக்கு வரணும்...” என்று உறுமி அவர்களை எல்லாம் அடித்து விரட்டாத குறையாக விரட்டி அடித்தான் ராசய்யா.


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!