என்னுயிர் கருவாச்சி-30
அத்தியாயம்-30
திருமண மண்டபத்தில் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதை எல்லாம் பார்த்து சிலையாக சமைந்து நின்றிருந்தாள்
பூங்கொடி.
அவளைப் பற்றி எப்படி ஒரு வார்த்தை சொல்லி
விட்டானுங்க...ஒழுக்கத்தை உயிர் மூச்சாக நினைப்பவளைப் போய் என்ன சொல்லிட்டானுங்க... என்று
எண்ணும்பொழுதே அவள் முகம் வெளிறி இருண்டு போய்
நின்றிருந்தாள் பூங்கொடி.
அதே நேரம்
அவளைப்பற்றி ராசய்யா சொன்னதும் நினைவு வந்தது.
அவள் ஒரு
நெருப்பு... தன் கற்புக்கு ஒரு களங்கம் வரும் வேளையில் கொலை செய்யவும் தயங்கமாட்டா
என்று, அவளை முழுவதுமாக புரிந்து வைத்தவனாய், எவ்வளவு
உறுதியாக சொன்னான் என்று அதற்கும் அதிர்ந்து நின்றாள்.
அங்கு ராசய்யா
மிரட்டிய மிரட்டலில், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தணிகாசலத்தின்
பத்திரங்கள் அவருடைய கைக்கு வந்து விட்டன.
ராஜேந்திரன்
இடம் இருந்து அதை வாங்கி தணிகாசலத்திடம் கொடுத்தவன்
“மாமா..
ராஜேந்திரன் கணக்கை செட்டில் பண்ணியாச்சு...இனிமேல் உங்களுக்கு எந்த தொல்லையும்
தரமாட்டான்... கல்யாணம் நின்னு போச்சுனு
எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க...” என்று அடுத்து அவர் செய்ய வேண்டியதை
பட்டியலிட,
“அது எப்படி ராசு...
அப்படி விடமுடியும்? இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. மணமேடை வரைக்கும் வந்து, மணவறையிலும் ஒக்காந்து எழுந்து போயிட்டா பூங்கொடி.
அந்த புள்ளைக்கு
நேத்து நலுங்கு வச்சு, கால்ல மெட்டி எல்லாம் கூட போட்டாச்சு.
இப்ப போய்
கல்யாணம் நின்னு போனா நல்லாவா இருக்கும்?
அதுக்கப்புறம்
அந்தப் புள்ளைக்கு கல்யாணம் அவ்வளவு சீக்கிரம் கூடி வராது...” என்று அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தார் பெரியவர் ஒருவர்.
அதைக்கேட்டு
கடுப்பான ராசய்யா அவரை பார்த்து முறைத்தவன்
“யோவ் பெருசு...
உனக்கு கல்யாண சாப்பாடுதான வேணும்.. சாப்பாடு எல்லாம் ரெடியாதான் இருக்கு.. பேசாம
போய் கொட்டிகிட்டு போ.. சும்மா எதையாவது உளறிகிட்டு இருக்காதா...” என்று
முறைத்தான் ராசய்யா.
“டேய் ராசு.. நீ
உடம்புல பலசாலியா இருக்கலாம். ஆனால் நாங்க அனுபவசாலிங்க...ஊர் உலகத்துல வழக்கமா
நடந்துகிட்டு வருவதுதான் சொல்றோம்...” என்று இன்னொரு பெருசும் கூட்டு சேர்ந்து
கொள்ள, இருவரையும் பார்த்து முறைத்தவன்,
“அதுக்கு இப்ப என்ன
செய்யறதாம்? அந்த பொறுக்கி ராஸ்கலயே கூப்பிட்டு மாப்பிள்ளையா உட்காரச் சொல்றதா?
அதுக்கு அந்த புள்ள
கல்யாணம் ஆகாமலயே இருந்துக்கலாம்...” என்று தன் கை முஷ்டியை இறுக்கினான் ராசய்யா..
“சே..சே.. அந்த ராஸ்கல இனிமே நம்ம ஊர் பக்கம் எட்டி கூட பார்க்க விடமாட்டோம்... நாங்க சொல்றது வேற யாராவது நல்ல மாப்பிள்ளை ரெடியா இருந்தா கையோட கல்யாணத்தை
முடிச்சிடலாம்...” என்றனர் இருவரும்
“ஹ்ம்ம்ம் வேற யாராவது
நல்ல மாப்பிள்ளையா?“ என்று தன் தாடையில் கை வைத்து
யோசித்தவன், பின் தணிகாசலத்தை பார்த்து
“மாமா... உங்க தங்கச்சி
மவன்..சந்தோஷ்... பட்டணத்திலிருந்து வந்திருக்கிறானே... அவனை கேட்டுப் பார்க்கலாமா? அவன் பூங்கொடிக்கு பொருத்தமானவனா இருப்பான்... நான்
வேணா கேட்டு பார்க்கவா? “ என்று யோசனையுடன் கேட்க,
“இல்லப்பா... தங்கச்சி
வீட்ல பூங்கொடியை கட்டற ஐடியா இருந்தால், முன்னயே
கேட்டிருக்கும். நம்ம வீட்டை விட்டுட்டு, வெளியில தான் பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க.
அப்படி இருக்கிறப்ப
நம்மளே வழியப்போய் கேட்பது நல்லா இல்ல...” என்று
தடுத்தார் தணிகாசலம்
“அப்படினா...எனக்குத்
தெரிஞ்ச பையன் ஒருத்தன் பக்கத்து ஊர்ல
இருக்கான். நல்லா படிச்சு இருக்கான். பட்டணத்துல
நல்ல வேலையில இருக்கான். நான் சொன்னா கேட்பான். போய் கையோட கூட்டிக்கிட்டு
வந்திடறேன்...” என்று பரபரத்தான் ராசய்யா.
“நீ யார சொல்ற? கந்தம்பட்டி வெங்கட் பயலையா? அவனுக்கு போன வாரம்தான்யா நிச்சயம்
ஆச்சு... “ என்று ஒருத்தர் சொல்ல,
“ஓ...அப்படியா? தெரியாம போச்சே... அப்பனா வேற யார் நல்லவனா இருக்கான்? “ என்று தாடையில் கை வைத்து யோசிக்க, அதற்குள் அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தை பார்த்து , கல்யாணத்தினால் வந்திருக்க வேண்டிய
வருமானம் போச்சே என்று வருத்தமாக அமர்ந்து இருந்த ஐயர் எழுந்து மெல்ல அருகில்
வந்தவர்,
“அப்ப நான்
கிளம்பட்டுங்களா?
“ என்று எல்லாரையும் பார்த்து பொதுவாக கேட்டார்.
“யோவ்
ஐயரே..அதுக்குள்ள என்ன அவசரம் ... அதான்
பேசிகிட்டு இருக்கோம் இல்ல...” என்று ஒரு
பெருசு ஐயரை முறைக்க,
“அது இல்லிங்க..
நல்ல நேரம் முடியப் போகுது... சீக்கிரம் மாப்பிள்ளைய கூட்டிகிட்டு வந்தா தான்
கல்யாணத்தை நடத்த முடியும் ...அதான்... “ என்று தலையை சொரிய,
“ஏன்
மாமா...இப்படி அவசர படாம, பேசாம இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்திபுட்டு, அப்புறம் நல்ல பையனா பார்த்து பூங்கொடிக்கு நானே கட்டி வைக்கிறேன்...” என்று ராசய்யா சொல்ல,
“வெண்ணையை கையில
வெச்சிகிட்டு நெய்க்கு அலைவானேன் ராசு... நீதான் பூங்கொடி மேல இவ்வளவு அக்கறைப்படறியே...
அவளுக்காக ஒரு லட்சத்தையே தூக்கி கொடுத்துபுட்டியே.
உன்னை விட
அவளுக்கு ஒரு நல்லவனை எங்க பார்க்க முடியும்? பேசாம நீயே அந்த புள்ளைய கட்டிக்க ராசு..”
என்று
குண்டை தூக்கி போட்டார் கூட்டத்தில் ஒருவர்.
அதைக்கேட்டு
அதிர்ந்து போனான் ராசய்யா.
அந்த யோசனையை சொன்னவரை
முறைத்து பார்த்தவன்
“யோவ் பெருசு...நீ
தெரிஞ்சுதான் பேசுறியா? கிறுக்குத்தனமா எதையாவது உளறாத...
நான் எங்க? அந்தப் புள்ள எங்க? நான் போய் எப்படி அந்த புள்ளைய கட்டிக்கிறதாம்...?” என்று முறைத்தான் ராசய்யா.
“உனக்கு
என்னய்யா குறைச்சல்...ஆள் பார்க்க ரௌடி மாதிரி இருந்தாலும், அப்பப்ப அடிதடினு இறங்கினாலும், பொறுப்பில்லாம ஊர சுத்தினாலும் உன் மனசு
தங்கம் யா...” என்று ராசய்யாவை புகழ,
“யோவ்..
நிறுத்து.. நீ இப்ப என்ன புகழறயா? இல்ல கிடச்ச சான்ச விடாமல் என்ன கலாய்க்கிறியா? “ என்று அவரை முறைத்தான் ராசய்யா.
மற்றவர்கள்
எல்லாம் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் பொத்தி சிரித்தனர். ராசய்யா முன்னால்
சிரித்து வைத்தால் அவனை பகைச்சுக்க வேண்டுமே என்று வந்த சிரிப்பை வாய் பொத்தி
அடக்கிக் கொண்டனர்.
ராசய்யாவை
புகழ்ந்த பெரியவரோ ஈஈஈஈ னு அசட்டு சிரிப்பை சிரிக்க, அவரை மீண்டும் கடுப்புடன் பார்த்து முறைத்தவன்
“அதெல்லாம்
ஒத்து வராது. பூங்கொடி படிச்ச புள்ள...
அதுக்கு நல்லா படிச்சு, பெரிய வேலையில இருக்கிற, அவளை ராணி மாதிரி பார்த்துக்கற
மாப்பிள்ளைதான் செட் ஆகும்.
எனக்கு கொஞ்சம்
டைம் கொடுங்க. நானே அப்படி ஒரு
மாப்பிள்ளைய தேடிப்பிடிச்சு அவ முன்னால கொண்டு வந்து நிறுத்தறேன்...” என்று தவிப்புடன் சொன்னான் ராசய்யா.
“ம்கூம்.. அதெல்லாம்
சரி வராது ராசு..! நீ என்னதான் எங்களை
உருட்டி மிரட்டினாலும் பூங்கொடி விசயத்துல நாங்க சொல்றதுதான் கரெக்ட்டு.
நீ எத்தனை பேரை
கொண்டு வந்து நிறுத்தினாலும், வர்றவன் எல்லாம் இந்தக் கல்யாணம் நின்னு போனதையும், உனக்கும், பூங்கொடிக்கும் நடுவில் முடிச்சுப் போட்டு பேசியதை எல்லாம் தெரிந்து கொள்ள
வேண்டி இருக்கும்.
அப்படி கேட்டபொறவு, யாரு இந்த புள்ளைய கட்டிக்க முன் வருவான்? ஆம்பளை ஊர் மேய்ஞ்சாலும் எத்தனை
பொம்பளைங்க கூட பழகினாலும் தனக்கு வரப்போறவ... சுத்தமா, எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடம்
கொடுக்காதவளா இருக்கோணும்னுதான் எதிர்பார்ப்பானுங்க
அப்ப இந்த
விஷயம் தெரிய வந்தா எப்படி கட்டிக்குவானுங்க...?
அப்படியே பெருந்தன்மையா
கட்டிகிட்டு போனாலும், நாளைக்கு ஒரு சின்ன பிரச்சனைனா கூட இதை சொல்லிக்காட்ட மாட்டான் னு என்ன
நிச்சயம்?
காலத்துக்கும்
அந்தப் புள்ளைக்கு இந்த கல்யாணம் நின்னு போனது ஒரு சொல்லாகவே போயிடும் யா...” என்று இன்னொரு பெரிசு எடுத்துச்சொல்ல
“ஹலோ பெரிசு... நீ
என்னதான் விளக்கம் சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ராணி மாதிரி வாழ
வேண்டிய அந்த புள்ளைய, நீ முன்ன சொன்னியே வெட்டிப்பய…ரௌடி.பொறுப்பில்லாதவன்.. நான் எப்படி
கட்டிக்கிறதாம்.
அதெல்லாம் ஒத்து
வராது... செத்த பொறு.. நான் இப்பவே இன்னொரு மாப்பிள்ளையை தேடிபிடிச்சு கொண்டு வர்றேன்...” என்று அவசரமாக அங்கிருந்து நகர முயல,
அதே நேரம்
பட்டென்று மணமகள் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள் பூங்கொடி.
எல்லாரும் திரும்பி
அவளையே பாவமாக பார்த்து வைக்க, அவளோ இறுகிய முகத்துடன் விடுவிடுவென்று
ராசய்யாவின் அருகில் வந்தாள்.
அவனை நேராக ஊடுருவி
பார்த்தவள்
“இப்ப வந்து
எனக்கு தாலிய கட்ட போறியா? இல்லையா? “ என்றாள் அவனை முறைத்தபடி.
அதைக்கேட்டு
எல்லாரும் அதிர்ந்துபோக, ராசய்யாவுக்கோ தூக்கிவாரிப் போட அதிர்ந்து போனான். நாக்கு
ஒட்டிக்கொள்ள,
“எ...என்.... என்ன
சொல்ற பூவு? “ என்று மீண்டும் சந்தேகமாக இழுக்க,
“தமிழ்ல தானே சொன்னேன்..! வெட்டி பேச்சு பேசிகிட்டு இருக்காம, ஒழுங்கா போய் மாப்பிள்ளைக்கான பட்டு வேஷ்டியும், சட்டையும் போட்டிக்கிட்டு, மாலைய கழுத்துல போட்டுகிட்டு
மணவறையில வந்து உட்கார்.
இன்னும் பத்து
நிமிஷத்துல என் கழுத்துல தாலி ஏறனும்...” என்றாள் அவனை முறைத்து பார்த்தபடி.
அதற்குள் தன்னை
சமாளித்துக்கொண்டவன்
“ஏய்? நீ என்னடி சொல்ற? இவங்கதான் புத்தி கெட்டுப்போய் ஏதோ
உளறிகிட்டு இருக்காங்கனா, நீயும் அதை புடிச்சுகிட்டு அறிவு இல்லாம
உளறாத? “ என்று அவளை முறைத்தான் ராசய்யா..
“ஐயா... அறிவு கொட்டி கிடக்கும் அறிவாளி சாரே...
புத்திசாலி புலவரே... எங்களுக்கு அறிவு கம்மியா இருந்துட்டு போகட்டும். உன்
அறிவாளித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு இப்ப வந்து மேடையில உட்கார்...” என்று முறைத்தாள் பூங்கொடி.
“இல்ல பூவு...அது
வந்து... நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை...”
என்று மீண்டும் தவிப்புடன் மறுக்க
“இருந்துட்டு
போகட்டும்...அதுக்கு என்ன இப்ப..? ” என்றாள் வீராப்பாய்.
“நான் ஒரு
ரௌடி...வெட்டிப்பய... அனாதை...” என்று
சொல்லியவன் அடுத்த வார்த்தை வராமல், தன்
கன்னத்தில் கை வைத்தபடி நிறுத்திக்கொண்டான் ராசய்யா.
அவன் கன்னத்தில்
பளாரென்று ஓங்கி அறைந்திருந்தாள் பூங்கொடி.
“நான் இருக்கிற
வரைக்கும் இனிமேல் நீ அனாதை இல்லை. அனாதை என்ற வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது.
மீறி சொன்ன,
தொலச்சுடுவேன்..
சும்மா வளவளன்னு
பேசிகிட்டு இருக்காம முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள வந்து தாலிய கட்டுடா...” என்று விரல் நீட்டி மிரட்டி ராசய்யாவை அதட்ட, அதைக்கண்ட எல்லாருமே ஒரு நொடி
வாயடைத்துப் போயினர்.
*****
அதற்கு மேல் ராசய்யா பேச்சு அங்கே எடுபடவில்லை.
அவளே விடுவிடுவென்று சென்று மணமேடையில் அமர்ந்து
கொள்ள, அதற்கு
மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பூங்கொடியே
ராசய்யாவை மணக்க சம்மதம் சொல்லிவிட, இப்பொழுது எல்லாரும் ராசய்யாவை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தனர்.
“ராசு..அதான்
கட்டிக்க போற பொண்ணே நல்லா கன்னத்துல அறஞ்சு சொல்லிட்டாளே.. அப்புறம் என்னயா?
இப்ப நீயா
மேடையில போய் உட்கார்றியா? இல்ல நாங்க எல்லாம் சேர்ந்து உன்னை குண்டு கட்டா தூக்கிட்டு போய் உட்கார
வைக்கவா? “ என்று மிரட்ட,
இனி தன்னால் சமாளிக்க
முடியாது என்று உணர்ந்தவன், சுத்தி நின்றவர்களை எல்லாம் ஒரு முறை காரமாக முறைத்துவிட்டு விடுவிடுவென்று மணமகன்
அறைக்கு உள்ளே சென்றான்.
அங்கு உறவுக்காரர்
ஒருவருக்கு கொடுக்க என்று வாங்கி வைத்திருந்த பட்டு வேஷ்டியையும் சட்டையும் போட்டுக்கொண்டு, மணமேடையில் வந்து அமர்ந்துவிட்டான்
ஐயரும் எப்படியோ
இந்த கலவரத்திலும் கல்யாணம் நல்லபடியா நடந்தால் அவருடைய வரும்படி கை விட்டு போகாது
என்ற குசியில் வாயெல்லாம் பல்லாக, தன்னுடைய மந்திரத்தை சுருக்கிக்கொண்டு சொல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பெரியவர்களின் ஆசி பெற்று
வந்திருந்த அந்த மாங்கல்யத்தை எடுத்து ராசய்யாவின் கையில் கொடுத்தார்.
அதை வாங்கிய
ராசய்யாவின் கரங்கள் நடுங்கியது.
பூங்கொடியை
பார்த்து இது வேண்டாம்... என்னை விட்டுடேன் என்று பாவமாக ஜாடையில் கெஞ்ச, அவளோ அவனை முறைத்தவள்,
“மூடிகிட்டு கட்டுடா
தாலிய...” என்று பல்லை கடித்து அவனுக்கு
மட்டும் கேட்கும்படி முறைத்து வைக்க, அதற்குமேல் வேற வழியில்லாமல் அவளை குற்ற உணர்வுடன் பார்த்தபடி, அந்த
மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு இட்டான் ராசய்யா.
சுற்றி
நின்றவர்கள் எல்லாரும் மன நிறைவுடன் வாழ்த்தி அட்சதையை தூவி ஆசிர்வதித்தனர்.
****
இப்பொழுது அதை நினைக்கும்பொழுது அவனுக்கு மனதை
வலித்தது. ஏதோ தவறு செய்துவிட்டதை போல அவன் மனதை பிசைந்தது..
“அந்தப் புள்ளைக்கு
ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு
தான் ராஜேந்திரனுடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினேன்.
கடைசியில் பிள்ளையார்
புடிக்கபோய் குரங்கான கதையைப் போல, ஒன்னுமில்லாத வெட்டிப்பய என்னைப்போய் கட்டிக்கிட வேண்டியதாயிடுச்சே.... இதுக்கு நான்
இந்த கல்யாணத்தை நிறுத்தாமலயே இருந்திருக்கலாம்.
அந்த
ராஜேந்திரனை கட்டிகிட்டு சொகுசாவது வாழ்ந்திருப்பா...எல்லாத்தையும்
கெடுத்துட்டனே... “ என்று மனதில் மருகியபடி
அப்படியே உறங்கிப் போனான் ராசய்யா..!
Comments
Post a Comment