என்னுயிர் கருவாச்சி-31
அத்தியாயம்-31
திடீரென்று யாரோ தன்னை சுரண்டுவதை போல
இருக்க, ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த ராசய்யா திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
“யாருடா அது?. தூங்கறவனை சுரண்டறது? “ என்று கடுப்புடன் மனதில்
திட்டிக்கொண்டே திரும்பி பார்க்க, அங்கே தன் பால் பற்கள் தெரிய
சிரித்து கொண்டு நின்றிருந்தான் அவனுடைய குட்டி மச்சான் அன்பரசன்.
அவனை
பார்த்ததும் தன் கடுப்பை மறைத்துக்கொண்டவன்,
“என்னடா
மச்ச்சான்? “ என்று கேள்வியாக பார்க்க,
“என்ன மாமா இது? ஊரே புது மாப்பிள்ளையை காணாம்னு தேடிக்கிட்டு இருக்காங்க. நீங்க பாட்டுக்கு ஜாலியா இங்க
வந்து தூங்கிகிட்டு இருக்கிங்க? “ என்று
சிரித்தான் அன்பரசன்.
அப்பொழுதுதான் தன்
கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றிலும் பார்க்க, அந்தக் கோவில் முழுவதும் இருட்டாக இருந்தது.
இங்க எப்படி வந்தேன்
என்று அவசரமாக யோசித்தவனுக்கு அப்பொழுதுதான் காலையில் நடந்த அவனின் திருமணம் நினைவு
வந்தது.
சாங்கிய சம்பிரதாயங்கள்
எல்லாம் முடிந்து மதியம் இங்கு வந்தவன்...
இருட்டற வரைக்கும் நன்றாக அசந்து தூங்கி இருந்தது உறைத்தது.
கடந்த ஒரு வாரமாகவே
அவனுக்கு ரொம்ப அலைச்சல் தான்.
பண்ணையார்
வீட்டு கல்யாணத்திலயே நிக்க நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவன்... அது
முடிந்து ஊருக்கு திரும்பி வந்ததும், உடனேயே பூங்கொடி கல்யாண வேலைகளைக்
கவனித்துக் கொண்டதில் அவனுக்கு சரியான தூக்கம் இல்லை.
அதனால் இங்கு வந்து
படுத்ததும், தன் வேதனையையும் மறந்து தூங்கிப் போனது
நினைவு வந்தது.
இப்பொழுது தன் மச்சானை
பார்த்ததும், ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்
ராசய்யா.
அதைக்கண்டு
அன்பரசனும் வாயை பொத்திக்கொண்டு சிரிக்க,
“ஏன் டா மச்சான்
சிரிக்கற? “ என்றான் தன் குட்டி மச்சானை யோசனையுடன்
பார்த்தவாறு.
“ஹீ ஹீ ஹீ மாமா... நீ இப்பவே நல்லா தூங்கிட்டாதான் ஆச்சு.. அப்புறம் என் அக்கா
உங்களை தூங்கவே விடமாட்டா...” என்று கண்
சிமிட்டி சிரித்தான் அன்பரசன்.
அதைக்கண்டு ராசய்யா இளையவனை முறைத்தான்.
“ஹீ ஹீ ஹீ
உண்மையத்தான் சொன்னேன் மாமா... கல்யாணம் முடிஞ்சு, வீட்டுக்கு வந்ததுல இருந்து, அவ முகத்துல கோவம் கொந்தளிச்சுக்கிட்டு
இருக்கு. யார் கூடயும் பேசாமல் ரூம்குள்ள போய்ட்டா.
நீங்க மட்டும்
அவ கண்ணுல மாட்டினிங்க, உங்களை நல்லா திட்டி தீர்த்துடுவா. அதுக்கப்புறம் உங்களுக்கு தூக்கம்னு ஒன்னு
வருமாக்கும்? அதுதான் இப்பவே தூங்கிக்கங்கனு சொன்னேன்...” என்று சமாளித்தான் சிறியவன்.
“ஹ்ம்ம்ம் இன்னும்
கோபமாதான் இருக்காளா உன் அக்கா? “ என்றான் பாவமாக.
“ஆமாம் மாமா. அவ முகத்துல கடுகு போட்டால் உடனேயே
பொரிஞ்சுடும். அவ்வளவு ஏன்... அவ முகத்துல இருக்கற சூட்டுல சோறே பொங்கிடலாம்னா
பார்த்துக்கயேன்..
ஆமா... நான்
தெரியாமதான் கேட்கறேன்... அந்த பக்கத்து
ஊர் மைனர் மாப்பிள்ளைக்கு தான் என் அக்காவை பத்தி சரியா தெரியாது. ஏமாந்து போய் அவளை
கட்டிக்க வந்துட்டான்.
உனக்குதான் அவளை
பற்றி எல்லாமே தெரியும்தானே.! அப்புறம் எப்படி மாமா அவ கழுத்துல தாலியை கட்டினிங்க? “ என்று தன் தலையை ஒரு பக்கமாக சரித்து, கன்னத்தில் கையை வைத்து யோசித்தவாறு சந்தேகமாக
கேட்டான் அன்பரசன்.
“வாடா மச்சான்... நீயாவது கேட்டியே...வா...வந்து என் சோகக் கதைய கேளு...” என்று அவனை தூக்கி தன் அருகில்
அமர்த்திக்கொண்டவன்,
“நான் எங்கடா தாலியக்
கட்டினேன்? என்னை அதட்டி மிரட்டி அல்லவா தாலியை கட்ட
வச்சா உன் அக்கா ராட்சசி...” என்று பாவமாக
சொல்ல, அதைக்கேட்டு மீண்டும் வாயில் கையை வைத்து
பொத்திக் கொண்டு சிரித்தான் இளையவன்.
“டேய் மச்சு.
நான் எம்புட்டு பீலிங்ஸ் ஓட சொல்றேன்... நீ என்ன இளிக்கிற? “ என்று ராசய்யா அவனை முறைக்க, முயன்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன்
“ஹீ ஹீ ஹீ பார்த்தேன்
பார்த்தேன்... கல்யாண மண்டபத்தில் நடந்த கூத்தையும், கடைசியில் நடந்த அதிரடி ஆக்சனையும் நானும் தான் பார்த்தேன்
மாமா... “ என்று பெரிய மனுஷனாக சொல்ல,
“ஏன் டா...
நீயாவது உன் அக்கா கிட்ட எடுத்துச்சொல்லி என்னை
விட்டுட சொல்லி இருக்கலாம் இல்ல... ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இப்ப வந்து
இந்த மாமனுக்காக பரிதாபப்படறியே...
அதோட கெக்க
பெக்கனு சிரிப்பு வேற.. இது உனக்கே நியாயமா? “ என்று அவனையும் பெரிய மனிதனாக எண்ணி, அவனிடம் புலம்பி தீர்த்தான் ராசய்யா.
தன் மாமனின் புலம்பலை கேட்ட அந்த குட்டி மச்சான், தன்னையும் பெரிய மனிதனாக எண்ணிக் கொண்டவன்
“அட விடுங்க மாமு.
நடந்தது நடந்து போச்சு. இனி நடந்ததை
மாத்தவா முடியும். எப்படியோ ஒரு ரௌடிகிட்ட
வாழ்க்கை பட்டுட்டிங்க...குடும்பம் நடத்திதான ஆகணும்.
ஆனால் ஒன்னு
மாமு... அவ உங்க மேலதான் செம கடுப்புல
இருக்கிறானு நினைக்கிறேன்.. உங்களை நல்லா வச்சு செய்யப் போறா...எதுக்கும் தயாரா
இருந்துக்குங்க...என்னுடைய அனுதாப வாழ்த்துக்கள்.. “ என்று. மீண்டும் சிரிக்க,
“ஹ்ம்ம் அத
நினைச்சா தான் டா மச்சு... என் வயித்துல புளிய கரைக்கிது.
என்னை எதிர்த்து
இந்த ஊரே திரண்டு வந்தாலும், ஒத்த ஆளா நின்னு அத்தன பயலுகளையும் சமாளிப்பான்
இந்த ராசய்யா.
ஆனா உன் அக்கா ஒருத்தி கிட்ட மட்டும் முடியலடா...” என்று சோகமாக
சொல்ல, அதைக்கேட்டு மீண்டும் கலகலவென்று
சிரித்தான் அன்பரசன்.
“ஹா ஹா ஹா மனச தளர
விடாதிங்க மாமு... உங்க மச்சான் நான்
இருக்கேன்ல. தைரியமா வீட்டுக்கு வாங்க. அடி
விழாம நான் காப்பாற்றுகிறேன்...” என்று
தன் மாமனுக்கு தேறுதல் சொன்னவன் அப்பொழுதுதான் ஏதோ நினைவு வந்தவனாக தன் நாக்கை கடித்துக்கொண்டு, கையை உதறியவன்
“ஐயோ மறந்துட்டேனே...”
என்றான் பதட்டத்துடன்.
“என்னடா மறந்துட்ட? “ என்று ராசய்யாவும் விசாரிக்க,
“அது வந்து... உங்களை
தேடிக் கண்டுபிடித்து சீக்கிரம்
வீட்டுக்கு கூட்டிகிட்டு வரச் சொன்னாங்க. நான் வந்த சோழிய மறந்துபுட்டு உங்க கூட உட்கார்ந்து
கதை அடிச்சுக்கிட்டு இருக்கேன்...அதைத்தான் சொன்னேன்...” என்று தன் தலையில் கையை வைத்த படி சொன்னான் இளையவன்.
“ஹ்ம்ம்ம் என்னை எதுக்கு டா கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க? “ என்று மாமன் கேட்க
“ஹீ ஹீ ஹீ என்ன மாமா? ஒரு விவரமும் தெரியாத பச்ச புள்ளையா
இருக்க? உனக்கு இன்னைக்குத்தானே கல்யாணம் ஆச்சு...” என்று ஏதோ விளக்க முயல,
“ஹ்ம்ம் அந்த
சோகக் கதைய ஏன்டா கேக்குற? “ என்று மீண்டும் ராசய்யா புலம்ப
ஆரம்பிக்க, உடனே வேகமாக கையை நீட்டி அவனை தடுத்தவன்
“அந்த சோகக்கதைதான்
எனக்கு ஏற்கனவே தெரியுமே...இன்னொரு தரம் சொல்ல வேண்டாம். உங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆச்சுனா இன்னிக்கு நைட்டு என்ன விஷேசம்? “ என்று விஷமமாக சிரித்தான் அன்பரசன்.
“என்னடா மச்சான்
விஷேசம்? “ என்று புரியாமல் முழிக்க, அவன்
மச்சான் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
“உனக்கு
இன்னைக்கு முதலிரவு மாமா... அதுக்குத்தான்
எல்லாரும் உன்னை தேடிக்கிட்டு இருக்காங்க...”
என்று மீண்டும் வெட்கத்துடன் சிரித்தான் இளையவன்.
அதைக்கேட்ட ராசய்யாவுக்கு பக்கென்றது.
“ஐயோ... அந்தக்
கருவாச்சி வேற ஏற்கனவே பயங்கர கோபத்துல இருக்கா... இந்த லட்சணத்துல நான் அவ கூட தனியா
ரூம்ல இருந்தா...? அவ்வளவுதான்...!
என்னை பிரிச்சு
மேய்ஞ்சிடுவா... எப்படியாவது எஸ் ஆகணும்... அவ கையில மட்டும் மாட்டிடக் கூடாது “ என்று
அவசரமாக யோசித்தவன், அருகில் அமர்ந்து இருந்த தன் மச்சானை கோவில் திண்ணையில் இருந்து கீழ இறக்கி விட்டவன்
“மச்சான்... நீ போ... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றேன்...”
என்று அன்பரசனை கழட்டிவிட முயன்றான் ராசய்யா...
“ஐ...இது நல்லா
இருக்கே...நான் இப்படிக்கா போனதும், நீ அப்படிக்கா
எஸ்கேப் ஆயிட பாக்குறிங்களா? ஏன் மாமா... எங்க அக்காவ கட்டுன கையோட சன்யாசம் போக திட்டம் போட்டுட்டீங்கனா? அதெல்லாம்
விட மாட்டேன்...
எப்படியோ என் அக்கா
பூவுக்கு வாழ்க்கை பட்டுட்டிங்க/... இனிமேல் அவ கூட தான் குப்பை கொட்டியாகணும்...அதனால
இப்ப எழுந்திருச்சு வூட்டுக்கு வா மாமா...”
என்று ராசய்யாவின் கையைப் பிடித்து இழுத்தான் அவன் மச்சான்.
ராசய்யாவும் ஏதேதோ காரணம் சொல்லி நழுவ முயல, அவனை விடாமல் பிடித்து இழுத்தவாறு வீட்டை
நோக்கி நடந்தான் அன்பரசன்.
“சை... இவன்
அக்கா மாதிரியே இவனும் சரியான பிடிவாதக்காரன் மாதிரி இருக்கான். உசரம் ரெண்டடி இருந்துகிட்டு
என்னா பேச்சு பேசறான்... “ என்று உள்ளுக்குள் நொந்தபடி, தன் மச்சான் உடன் நடந்தான் புதுமாப்பிள்ளை...
என்ன புது
மாப்பிள்ளை சார்? மச்சான்
கைய புடிச்சு கூட்டிகிட்டு போறான்? எங்க ஃபர்ஸ்ட் நைட்க்குத்தானே...நடத்து... நடத்து...” என்று பார்க்கிறவர்கள் எல்லாம் ராசய்யாவை கேலி
செய்ய,
அவர்களை எல்லாம்
முறைத்தபடி, தன்
கை விரலை பிடித்திருந்த அன்பரசன் கையை உதறிவிட்டு, வேகமாக
தன் மாமனார் வீட்டை நோக்கி நடந்தான் ராசய்யா..!
*****
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள்
எல்லாம் கலைந்து சென்றிருக்க, அமைதியாக இருந்தது பூங்கொடியின் வீடு.
இக்கட்டில் உதவாத
தன் மூத்த மகள் பொற்கொடியிடம் யாரும் சரியாக முகம் கொடுத்து பேசாததால், அவளும் தன் குடும்பத்தாரை அழைத்துக்
கொண்டு தன் வீட்டிற்கு சென்றிருந்தாள்.
வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே தயக்கமாக இருந்தது ராசய்யாவுக்கு.
முன்பு சொல்லிக்கொள்ளும்படி
எந்த நெருங்கிய உறவு முறையும் இல்லாத பொழுதே எத்தனையோ முறை எந்த தயக்கமும்
இல்லாமல் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறான் அவன்.
இப்பொழுது அந்த
வீட்டிற்கு உரிமையுள்ள மாப்பிள்ளை ஆன பிறகும் ஏனோ உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது.
ஏதோ பெரிய தவறு
செய்துவிட்ட குற்ற உணர்வு அவனை குத்தி கிழித்தது.
தயங்கி, தயங்கி தயக்கத்துடன் உள்ளே சென்றவனை கண்டதும்
திண்ணையில் அமர்ந்திருந்த சிலம்பாயி வேகமாக எழுந்தாள்.
முந்தானையை இழுத்து
தன் வலது பக்க தோளை மூடிக் கொண்டவர்
“வாங்க மாப்பிள்ளை...”
என்று மரியாதையுடன் அழைக்க, ராசய்யாவுக்குத்
தான் தர்மசங்கடமாக இருந்தது.
அதற்குள் அவன் மாமனாரும்
அங்கு வந்துவிட,
“எங்க
போயிட்டீங்க மாப்ள... உங்கள எங்கெல்லாம் தேடறது...” என்று மரியாதையுடன் அழைக்க,
“மாமா...அத்தை...
இந்த மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை எப்பவும் போலவே வா போனே கூப்பிடுங்க...” என்று தடுக்க,
“அது எப்படி மாப்ள...
முன்ன நீ வெறும் ராசு.. இப்ப நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...மாப்பிள்ளை
மட்டுமா? எங்க பொண்ணையும், இந்த குடும்பத்தையும் காத்த குலசாமி... அதுக்க்கான
மரியாதை செய்துதானே ஆகவேண்டும்..” என்று தழுதழுத்தார் தணிகாசலம்.
ராசய்யா மட்டும்
தக்க சமயத்தில் வந்து இந்த திருமணத்தை தடுத்திருக்காவிட்டால் தன் செல்ல பெண்ணின்
வாழ்க்கை நாசமாகி இருக்குமே...
அந்த குற்ற உணர்வில்
அவரும் சீக்கிரம் போய் சேர்ந்து இருப்பார்.
அந்த
குடும்பத்தையே காத்த சாமியை போலதான் ராசய்யாவை பார்த்தார் பெரியவர்.
“ஐயோ மாமா...அதெல்லாம்
ஒன்னுமில்ல. மாப்பிள்ளை னா உடனே கொம்பு வந்திடுமா என்ன? நான் எப்பவும் உங்க பழைய ராசு தான். என்னை அப்படியே
கூப்பிடுங்க...” என்று முறைத்தான்.
அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவரும் மெல்ல புன்னகைத்தவர்
“சரி வாய்யா... சாப்பிடலாம்...”
என்று வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றவர்
உள் அறைப் பக்கம் பார்த்தவர்
“பாப்பா...
வந்து மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுமா... “ என்று குரல் கொடுக்க, உள்ளறையில் இருந்து எந்த சத்தமும் இல்லை.
இரண்டு முறை குரல்
கொடுத்தும் கதவு திறக்காததால், கலவரமானான் ராசய்யா.
“ஆஹான்..மச்சான்
சொன்ன மாதிரி ரொம்பவும் கோபமா தான் இருக்கா போல...” என்று உள்ளுக்குள் அபாயமணி
அடிக்க, முயன்று தன்னை சமாளித்துக் கொண்டவன்
“பரவாயில்லை
மாமா... நானே போட்டு சாப்பிட்டுக்குறேன்...”
என்று புன்னகைத்தான் ராசய்யா.
“அதெல்லாம்
வேண்டாம் மாப்ள.. இருங்க நான் போடுறேன்...” என்று சிலம்பாயி வேகமாக முன்னால் வந்து, அவனை அமர வைத்து இலையை போட்டு பரிமாறினார்.
பூங்கொடி சாப்பிட்டாளா? என்று கேட்டு அறிந்து கொண்டவன், இலையில் இருந்த சாப்பாட்டை கையால் அலைந்தான்.
முன்பெல்லாம் வயிற்றுக்கு
வஞ்சகம் பார்க்காமல் குழப்பி அடித்து சாப்பிடுபவனுக்கு ஏனோ இன்று சாப்பாடு
இறங்கவில்லை...
பேருக்கு எதையோ சாப்பிட்டவன், எழுந்து கை கழுவிக்கொண்டு, கையை தன் வேஷ்டியை தூக்கி துடைத்துக்கொண்டவன் , தன் வாயையும் துடைத்துக்கொண்டு தணிகாசலம்
அருகில் வந்தான்.
“சரிங்க மாமா...எனக்கு
வெளில கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு அப்படியே கோயில் திண்ணையில படுத்துக்கிறேன்...”
என்று சொல்ல, அதைக்கேட்டு திடுக்கிட்ட தணிகாசலம், யோசனையோடு தன் மனைவியை பார்த்தார்.
கண்ணால் தன்
மனைவிக்கு ஜாடை காட்டி எதையோ சொல்ல சொல்ல, அதைக்கண்ட சிலம்பாயி
தன் கணவனை முறைத்தார்.
“ஆளுதான்
குடும்பத்தை தாங்கற பெரிய மனுஷன் னு பேரு. இந்த மாதிரி விஷயத்தை ஒரு ஆம்பிளைக்கு
இன்னொரு ஆம்பிளை எடுத்துச் சொல்லாம என்னை
கோர்த்து விடறாரே...
இந்த மனுஷனை
என்ன செய்ய? . எதையும் சரியா செய்யத்தெரியாத துப்பு கொட்ட
ஆம்பளை... “ என்று உள்ளுக்குள் திட்டியவர், பின் மெல்ல நெளிந்தவாறு
“அது வந்து... இன்னைக்கு உங்களுக்கு முதராத்திரி மாப்ள... அதனால நீங்க இங்கதான் இருக்கோணும்...” என்று வெட்கப்பட்டு இழுத்தவாறு மென்று முழுங்க, அதைக்கேட்ட ராசய்யாவுக்கு அப்பொழுதுதான் அன்பரசன் சொன்னது நினைவு
வந்தது..
“அதெல்லாம்
ஒன்னும் வேண்டாம் அத்தை... “ என்று மறுத்து
ஏதோ சொல்ல வர, அதே நேரம் அறைக்கதவை பட்டென்று திறந்து கொண்டு
வாயிலில் வந்து நின்றாள் பூங்கொடி.
“டேய் அன்பு.. எதுவும்
பேசாமல் உன் மாமாவை ரூமுக்கு வரச்சொல்லுடா...”
என்று அதட்டலுடன் சொல்லிவிட்டு விறுவிறுவென்று
அறைக்கு உள்ளே போய்விட, அவளின் அந்த திடீர் அதட்டலில் ராசய்யாவோ திருதிருவென்று முழித்தான்.
அவன் முழிப்பதை
கண்ட பெரியவர்களுக்கு தங்கள் வேதனை மறந்து சிரிப்பு பொங்கி வந்தது.
ஆனாலும் முயன்று
தங்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.
அங்கு நடப்பதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்பரசனும், மலர்க்கொடியும் ராசய்யாவின் முழியைக்
கண்டு பெரியவர்களை போல சிரிப்பை அடக்காமல், களுக்கென்று கிளுக்கி சிரித்தனர்.
அதைக்கேட்டு அவர்கள்
பக்கம் திரும்பிய ராசய்யா அவர்களை முறைக்க, இப்பொழுது திண்ணையில் இருந்து எட்டிக்குதித்து
அவன் அருகில் ஓடி வந்த அன்பரசன்,
“வாங்க மாமா... நான்
உங்களை கூட்டிகிட்டு போறேன்...” என்று அவன் கையை பிடித்து இழுத்துச் சென்றான்..
சில அடிகள் எடுத்து
வைத்ததும்,
“என்ன மாமு...கசாப்பு
கடைக்கு போற ஆடு மாதிரி பீல ஆகுதா? அந்த ஆட்டுக்கு கூட இம்புட்டு பயம் இருக்காது மாமு. உன் கண்ணுல அப்படி ஒரு பயம்.
ஆனாலும் பார்த்த
இல்ல... அக்கா கண்ணுல அப்படியே ஃபயர் தெரியுது. இன்னைக்கு
உனக்கு பட்டாசுதான்...” என்று மெல்ல கிசுகிசுக்க, அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினான் ராசய்யா.
அவன் குரலை தாழ்த்தி
குசுகுசுவென்று சொல்லி இருந்தாலும் அது பின்னால் நின்றவர்களுக்கு கேட்டு வைத்தது.
“டேய் சொம்பு...
போதும்டா.. ரொம்ப பில்டப் கொடுத்து ராசு மாமாவை
பயமுறுத்தாத... அவன் கிடக்கிறான் மாமா... நீங்க தைர்யமா போங்க... அடிகிடி பெருசா விழுந்தா
மலருனு ஒரு குரல் கொடுங்க.. நான் ஓடி வந்திடறேன் உங்களை காப்பாத்த...” என்று கண் சிமிட்டி
சிரித்தாள் மலர்க்கொடி.
“டேய் சும்மா
இருங்க பசங்களா... ராசு இப்ப நம்ம வீட்டு
மாப்பிள்ளை. மரியாதை கொடுத்து பேசனும். முன்ன மாதிரி எல்லாம் விளையாடக்கூடாது...” என்று சிறியவர்களை அதட்டினார் சிலம்பாயி.
“அத்தை... நான் முன்ன
சொன்னதுதான்.. இப்பவும் எந்த பழக்கத்தையும்
மாத்த வேண்டாம். ரெண்டு பேரும் என்கிட்ட முன்ன
எப்படி பழகினாங்களோ அப்படியே பழகட்டும்...” என்றவன், மலர்க்கொடி பக்கம் திரும்பி
“ரொம்ப தேங்க்ஸ்
டி மச்சினிச்சி...நீ ஒருத்தி போதும் எனக்கு சப்போர்ட் பண்ண...தம்பி உடையான் படைக்கு
அஞ்சான் ன்ற மாதிரி மச்சினிச்சி உடையான் எந்த
புயலுக்கும் அஞ்சான்... “ என்று சிரித்தவன் பின் தன் குட்டி மச்சானை பார்த்து
“டேய் மச்சான்...
நானெல்லாம் உன் அக்காவை விட டெரர் ஆ எத்தனை பேர பார்த்திருக்கேன் டா.. நான் இறுக்கி புடிச்சா
ஒடிஞ்சு வுழுந்துடும் கொடி போல இருக்கா உன் அக்கா... அவளை பார்த்து எனக்கு என்ன பயம்? “ என்று தன்
மீசையை முறுக்கிக் கொள்ள,
“ம்க்கும்..ம்க்கும்..”
. என்று தொண்டையை செருமியவன்
“பார்க்கலாம்...
பார்க்கலாம்... இதே கெத்து நாளைக்கு காலையில உங்ககிட்ட இருக்குதானு பார்க்கலாம்...” என்று கிண்டலாக
சிரித்தான் அன்பரசன்.
“டேய் அன்பு... அவர உள்ள அனுப்பாம என்னடா வளவளனு பேசிகிட்டு
இருக்க? அவரை உள்ள வரச்சொல்...” என்று மீண்டும் உள்ளிருந்து பூங்கொடி அதட்டலுடன் சத்தமாக
குரல் கொடுக்க,
“மாமு... சீக்கிரம் உள்ள போங்க... இல்லனா உங்க பொண்டாட்டியே வந்து உங்க கையை பிடித்து
தரதரவென இழுத்துகிட்டு போயிட்டு வா...” என்று கண்சிமிட்டி சிரித்தான் அன்பரசன்.
அதைக்கேட்டு அதுவரை
எல்லார் மனதிலும் இருந்த ஒருவித இறுக்கம் மறைந்து எல்லார் முகத்திலும் சிரிப்பு வந்தது.
*****
இதுவரைக்கும் சிலம்பாயிக்கும், தணிகாசலத்திற்கும் கொஞ்சம் சஞ்சலமாக இருந்தது.
திருமணம்
முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து பூங்கொடி யாரிடமும் ஒரு
வார்த்தை கூட பேசவில்லை.
மதிய உணவுக்கும்
வெளியில் வரவில்லை.
மலர்க்கொடி சென்று
அழைத்தும் அவளை கடித்து குதறாத குறையாக விரட்டி விட்டாள்.
அந்தி சாயவும் ஓரளவுக்கு
உறவினர்கள் எல்லாம் கிளம்பி சென்ற பிறகுதான் வெளியில் வந்தாள்.
அதுவரை தெரியாத பசி
அப்பொழுது தெரிய, ஒரு தட்டை எடுத்து தனக்கு வேண்டியதை
போட்டுக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
சற்று நேரம் கழித்து
வெளியில் வந்தவள், நேராக வீட்டிற்கு வெளியில் இருந்த கீத்து
வைத்து தடுத்து இருந்த குளியல் அறைக்கு சென்று குளித்து விட்டு, ஒரு
புடவையை கட்டிக்கொண்டு விடுவிடுவென்று அவளுடைய அறைக்குள் சென்றுவிட்டாள்.
அதன்பிறகு
இப்பொழுதுதான் அவளின் குரல் கேட்டது.
இதுவரை பேசாத இருந்த
தங்கள் மகளின் குரலை கேட்டதும், ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் மற்றொரு
பக்கமோ மாப்பிள்ளைக்கு கொஞ்சமும் மரியாதை
கொடுக்காமல் தடாலடியாக அவள் பேசியது சங்கடத்தைக் கொடுத்தது.
என்ன நினைப்பாரோ
என்று சங்கடத்துடன் ராசய்யாவை பார்க்க, அவனோ அதை பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை.
அவனை கிண்டல் அடித்த
அன்பரசனை அவன் இயல்பாக பேசி சமாளித்தது கண்டு இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.
அதோடு எப்போதும் பூங்கொடியும், ராசய்யாவும் இப்படித்தான் அடிச்சுக்குவாங்க
என்பதால் பெரியவர்கள் இருவருக்கும் தன் மகளின் வாய் திறப்பே ஆறுதலாக
இருந்தது.
அதோடு தன் புருஷனை
அவள் அறைக்குள் அழைத்ததும் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“நீங்க உள்ள
போங்க மாப்பிள்ளை... அப்புறம் அது வந்து... “ என்று இழுத்த சிலம்பாயி, பின் தன் தொண்டையை செருமிக் கொண்டு குரலை தாழ்த்திக் கொண்டு
“பூவு எல்லார்
மேலேயும் ரொம்ப கோபமா இருக்கா. அந்தக் கோபத்துல உங்களை ஏதாவது ஏடாகூடமா திட்டி வைப்பா...
நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்... அவ கோபத்தை எப்படியாவது தணிச்சிடுங்க...” என்று
சிலம்பாயி எடுத்துச் சொல்ல, தணிகாசலமும் அவன் அருகில் வந்தவர், அவன் கையை பிடித்துக் கொண்டு,
“ஆமாய்யா.. நீ மட்டும் இல்லேன்னா என் பொண்ணோட வாழ்க்கை
எப்படி எப்படியோ போயிருந்திருக்கும். சரியான நேரத்துல வந்து அவளை காப்பாத்திட்ட. .
அதோடு மட்டுமல்ல...
நீ அவளை கடைசி வரைக்கும் கண் கலங்காம பார்த்துக்குவனு நம்பிக்கை இருக்கு...
பூவு எங்க மேல கோபமா
இருந்துட்டு போறா... ஆனா நீங்க ரெண்டு
பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு, அனுசரிச்சு சந்தோஷமா வாழனும்...” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கியவாறு
தழுதழுத்தார் தணிகாசலம்.
அதைக்கண்ட ராசய்யாவுக்கும்
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
தன் கையை பிடித்திருந்த அவர் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன், சொல்லி
இருந்தான் அந்த வார்த்தைகளை.
“எல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க மாமா... பூங்கொடி இனி என் பொறுப்பு...” என்று சொல்லி, அவரை ஆறுதல் படுத்திவிட்டு அந்த அறைக்குள் சென்றான் ராசய்யா...!
Comments
Post a Comment