என்னுயிர் கருவாச்சி-32

 


அத்தியாயம்-32

றைக் கதவு லேசாக திறந்திருக்க, அதை திறந்து கொண்டு  உள்ளே சென்றான் ராசய்யா.  

அங்கே இருந்த இருவர் படுக்கும் அளவில் பெரிதாக இருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டு, தன் காலை மடக்கி முட்டு கொடுத்தவாறு வைத்துக்கொண்டு தன் முழங்காலில் முகத்தை புதைத்தவாறு அமர்ந்திருந்தாள்  பூங்கொடி.  

அவளை அப்படிக் கண்டதும் ராசய்யாவுக்கு மனதை பிசைந்தது. சற்றுமுன் மறைந்திருந்த குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்கியது.

அறைக்கதவை மூடி தாளிட்டு  அவளின் அருகில் சென்றவன்,  அவளையே சில நொடிகள் பார்த்திருந்தான்.

அவன் அவளை பார்ப்பது தெரிந்தும்  தலை நிமிராமல், இன்னுமே தன் முழங்காலுக்கு இடையில் முகத்தை புதைத்துக் கொண்டு இருக்க, தன்  தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான்  ராசய்யா.

“என்னை மன்னிச்சுடு கரு.... பூங்கொடி... ” கருவாச்சி என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக்கொண்டு பூங்கொடி என்று திருத்திக் கொண்டான்...  

“இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை.  எனக்கு எங்கே அந்த பொறுக்கி  உன் வாழ்க்கையை நாசமாக்கிட போறானோனுதான்   இந்த கல்யாணத்தை நிறுத்த முயன்றது.

மத்தபடி நானே உன்னை கட்டிக்கணும்ன்ற எண்ணம் எல்லாம் இல்லை

நீ முன்னாடி ஒரு நாள் சொன்ன மாதிரி நான் உனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவன்.  எல்லாரும் என்னை கட்டாயப்படுத்தவும் வேற வழியில்லாமல் உன் கழுத்தில தாலி கட்ட வேண்டியதாயிடுச்சு.  

நீ ஒன்னும் கவலைப்படாதே.  இது வெறும் மஞ்ச கயிறு தானே.  உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத நான் வேண்டாம்.  

நான் உனக்கு விவாகரத்து கொடுத்துடறேன்.  நீ ஆசைப்பட்ட மாதிரி, அரவிந்த்சாமி மாதிரி நல்லா  படிச்ச மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...”  என்று  அவன் முடிக்கும் முன்னே பளாரென்று சத்தம் கேட்டது.

அடுத்த கணம் அவனது காதுக்குள் ஙொய்ய்ய்ய்ய் என்று சத்தம் கேட்க,  அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தான் ராசய்யா.  

அங்கே கையில் சூளாயுதத்துடன் அரக்கனை வதம் செய்ய நிக்கும் பத்ரகாளியாய்,  பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து விட்டு, முகத்தில் கோபம் செந்தனலாக பொங்க, அவனை எரிக்கும் பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள் அவன் மனையாள்.

அவளின் கை தான் அவனை அறைந்து இருந்தது.

சற்று முன் வரை முழங்காலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு மருகிக் கொண்டிருந்தவள்...

எப்பொழுது கட்டிலை விட்டு எழுந்தாள்?  எப்பொழுது அவனை அறைந்தாள் என்று யூகிக்க முடியவில்லை அவனால்.

அதே நேரம் அவள் அறைந்த சத்தம் வெளியில் கேட்டிருக்க,  எல்லாரும் பதற்றத்துடன் அந்த அறைக்கு ஓடி வந்திருந்தனர்.  

“என்னாச்சு மாப்ள? என்று சிலம்பாயிம்,  தணிகாசலமும் பதட்டத்துடன் கதவை தட்ட,  அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்,  

“ஒன்னும்  இல்ல மாமா...  நீங்க போங்க...”  என்று குரல் கொடுத்தவன்,  தன் கன்னத்தை தடவி விட்டுக் கொண்டவாறு அவளைப் பார்த்து முறைத்தவன்,  

“எதுக்குடி அடிச்ச? “ என்று  சன்னமான குரலில் கேட்டான் ராசய்யா.  

“ஹ்ம்ம்ம் உன்ன அடிச்சதோடு விட்டுட்டேனு  சந்தோச படு. நீ பேசினதுக்கு இந்நேரம் உன் சங்கை அறுத்து இருக்கணும்....”  என்று பல்லைக் கடிக்க,  ஒரு கணம் திக்கென்றது அவனுக்கு.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறா?  நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா? என்று அவசரமாக அவன் பேசிய வார்த்தைகளை நினைவு படுத்திக் கொண்டான்.  

“அவளுடைய நல்லதுக்குத்  தானே சொன்னேன்.  இதில் அவள் என் சங்கை அறுக்கும் அளவுக்கு கோபப்படும்படி என்ன இருக்கு? என்று அவசரமாக ஆராய்ந்தவனுக்கு ஒன்றும் புரியாமல் போக,  

“அப்படி என்னத்தடி  தப்பா சொன்னேன்? என்று குழப்பத்துடன் அவளைப் பார்க்க,

“என்ன தப்பா சொன்னியா?  நீ   சொன்னத  திரும்பவும் சொல்லு...” என்று இடுப்பில் கை வைத்தபடி  அவனை முறைத்தாள்

ஹ்ம்ம் என்னை மன்னிச்சுடு ன்னு சொன்னேன்...” என்றான் யோசனையாக.  

“இல்ல... அதுக்குப் பின்னாடி என்ன சொன்ன?...”  

 

இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை.  எனக்கு எங்கே அந்த பொறுக்கி  உன் வாழ்க்கையை நாசமாக்கிட போறானோனுதான்   இந்த கல்யாணத்தை நிறுத்த முயன்றது.

மத்தபடி நானே உன்னை கட்டிக்கணும்ன்ற எண்ணம் எல்லாம் இல்லை..னு சொன்னேன்...”  

“இல்ல இன்னும் பின்னாடி வா...”

“ஐயோ..இந்த கருவாச்சி ரொம்பவும் படுத்தறாளே..அப்படி என்னத்த சொல்லி தொலைச்சேன்..” என்று  தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக மண்டையை குடைந்து யோசித்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அதையே வாய்விட்டு கேட்டு வைத்தான்.

“அப்படி என்னத்தடி சொன்னேன்.  தெரியலையே...”  என்று முழிக்க,

“ஹ்ம்ம்ம் தெரியாம தான் உன் வாயில இருந்து அப்படி ஒரு வார்த்தை வந்ததா? “ மீண்டும் முறைத்தாள்.

“எப்படி ஒரு வார்த்தை? என்று மீண்டும்  குழப்பமாக அவளை பார்க்க,

“அதான்... கடைசியா சொன்னியே அந்த டயலாக்... “ என்று மீண்டும் எரிக்கும் பார்வை பார்த்தாள்.

ஆங்... கடைசியா சொன்ன  டயலாக் ? கடைசியா என்ன சொன்னேன்? என்று தன் தலையை தட்டி யோசித்தான்..

என்னமோ என்னை விவாகரத்து பண்ணிட்டு...”  என்று இழுத்தபடி அவளே எடுத்து கொடுக்க, அப்பொழுதுதான் அவனுக்கு அது உரைத்தது.  

“நான் உனக்கு விவாகரத்து கொடுத்துடறேன்.  நீ ஆசைப்பட்ட மாதிரி, அரவிந்த்சாமி மாதிரி நல்லா  படிச்ச மாப்பிள்ளையை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...” என்று அவன் சொன்னது நினைவு வந்தது....

அதில் முகம் பிரகாசம் அடைய,   

“ஆமா...  நீ உன் மனசுக்கு புடிச்ச, வேற ஒருத்தனை கட்டிக்கணும்னா,  நான் உன்னை விவாகரத்து பண்ணனும் இல்ல.  அதைத்தான் சொன்னேன்...” என்று அவன்  முடிக்கும் முன்னே மீண்டும் பளார் என்று அடுத்த அறை விழுந்தது அவனின் மறு கன்னத்தில்.  

*****

ந்த முறையும்  தணிகாசலம் அறையை நோக்கி  விரைய,  சிலம்பாயி எட்டி அவர்  கையை பிடித்து நிறுத்திக் கொண்டார்.  

“யோவ்... உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? புருஷன் பொண்டாட்டி அவங்க இப்ப அடிச்சுக்குவாங்க...அப்புறம் கொஞ்சிக்குவாங்க... இதுல நாம தலையிடக்கூடாது...”

என்று  காலங்காலமாய் பின்பற்றி வரும்  நம் வாழ்க்கை முறையின் அழகிய தத்துவத்தை தன் கணவனுக்கு எடுத்துக்கூறி தடுத்து விட்டார் சிலம்பாயி.  

“ஆனாலும் சிலம்பு... மாப்பிள்ளை பாவம் இல்ல... ஹ்ம்ம் ராசு பாவம் தான்...  மண்டபத்திலேயே எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சுபுட்டாளே இந்த புள்ள...” என்று தன் மருமகனுக்காக பரிதாபபட்டார் மாமனார்.

சிலம்பாவும்  தன் கணவனை முறைத்தபடி

“ஹ்ம்ம்ம் நானும் பார்த்தேன்... எல்லாரையும் தன் பார்வையாலேயே அதட்டி, உருட்டி, மிரட்டி வைத்துக்கொண்டிருந்த  மாப்பிள்ளை, நம்ம புள்ளைக்  கிட்ட பொட்டி பாம்பா அடங்கி போயிட்டாரே...!

அவ ஒரு அறை விட்டு கட்டுடா தாலியனு சொன்னதும், மறு  வார்த்தை பேசாமல் தாலிய கட்டிட்டார் இல்ல. இதுலயே தெரிஞ்சிடுச்சு. நம்ம ரௌடி புள்ளைக்கு ஏத்த மாப்பிள்ளை இவர்தான்னு.

எல்லாம் உங்கள மாதிரிதான்...வீட்டில எலி...  வெளியில புலி.. கதையாதான் இருக்கும்...”  என்று சிலம்பாயி தன் கோபத்தை விடுத்து  நமட்டுச் சிரிப்பை சிரித்துக் கொண்டார்.

அதைக்கேட்ட  தர்மலிங்கத்துக்கும்  சிரிப்பு வந்தது.  

மெல்ல இதழ் திறந்து புன்னகைத்தவர்

“அப்படினா... பாப்பா ராசுவை ஏத்துக்குவாதானே...” என்று ஆவலுடன் கேட்க,

“ஏத்துக்காம என்ன?  அவளே  தானே வந்து கழுத்துல தாலியை கட்ட சொன்னா. அவங்களுக்குள்ள சீக்கிரம்  எல்லாம் சரியாகிடும்.  இனிமேல் அவளை மாப்ள பார்த்துக்குவார்..” என்று  நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சிலம்பாயி.

“நீ சொல்றது கரெக்டுதான் புள்ள. எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்ற மாதிரி நம்ம புள்ளைக்கு வர இருந்த துன்பம் ராசு தலையிட்டதால  போயிடுச்சு...” என்று பெரியவரும் நிம்மதி மூச்சு விட, அதை பொறுக்காத அவரின் சரிபாதியோ

“எல்லாம் உங்களால வந்ததுதான்...நீங்க மட்டும் சரியா நடந்து இருந்தால் இப்படி ஒரு சிக்கல் நமக்கு வந்து இருக்குமா? “ என்று மீண்டும் தன் கணவனுக்கு அர்ச்சனையை ஆரம்பித்தார்.

அறைக்கு வெளியில் இந்த கூத்து என்றால், அறைக்கு உள்ளேயும் அதே அர்ச்சனைதான் தொடர்ந்து கொண்டு இருந்தது.

*****

பூங்கொடி அடித்ததில் தன் கன்னத்தை அழுத்தி பிடித்தபடி அவளைப் பார்த்து முறைத்தவன்,

“எதுக்குடி இப்படி அடிக்கிற? காரணத்தை  சொல்லிட்டாவது அடி...”  என்று முறைக்க,

“யோவ்...  கல்யாணமாகி நீ உன் பட்டு வேஷ்டியை கூட இன்னும் கழட்டல... நீ என் கழுத்துல கட்டின மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட இன்னும் காயல.  அதுக்குள்ள என்னை கழட்டிவிடுவேன் னு சொல்ற...உனக்கு எம்புட்டு தைர்யம்?” என்று பல்லை கடித்தாள் பூங்கொடி. 

“கழட்டி விடறதா?  நான் எங்கடி அப்படி சொன்னேன்? “ என்றான் முறைத்தபடி.

“ஹ்ம்ம்ம்  விவாகரத்து னா என்ன அர்த்தம்?  கழட்டி விடறதுதான? “ என்று பெண்ணவளும் முறைக்க

கழட்டிவிட எல்லாம் இல்லடி...” என்றான் குரல் கரகரக்க.

“வேற எதுக்காம்? எதுக்காக என்னை டைவர்ஸ் பண்ணனும்னு சொன்ன? “ என்று மீண்டும் முறைக்க,   

“எல்லாம் உன் நல்லதுக்குத்தான்... “

“என்ன என் நல்லதுக்கு? “ விடாமல் நோண்டினாள்.

“அதான் சொன்னேனே... அது வந்து... “  விவாகரத்து என்று சொல்லி இரண்டு முறை அவளிடம் அறை வாங்கியது நினைவு வர, அவன் கரம் ஒன்று தானாக அவன் கன்னத்தை தடவிக்கொண்டது.

இப்பொழுது எப்படி மீண்டும் சொல்வது என்று தயக்கத்துடன் இழுக்க,

“என்ன வந்து போயினு  இழுக்கற...சீக்கிரம் சொல்லு.... ” என்று முறைத்தவளுக்கு அப்பொழுதுதான் ஏதோ உறைக்க,

“யோவ்...இரு...இரு...  செத்த முன்னாடி நீ சொன்னதெல்லாம் எனக்காக சொன்ன மாதிரி தெரியலையே...  எல்லாம் உனக்காக சொன்ன மாதிரி இருக்கே...”  என்று தன் கணவனை ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க, அதில் அதிர்ந்தவன்

“எனக்காகவா?  என்னடி உளர்ற? “ என்று முறைப்பது அவன் முறையாயிற்று.

“ஹ்ம்ம்ம் எல்லாரும் உன்னை கட்டாயப்படுத்தவும்,  வேற வழியில்லாமல் என் கழுத்தில தாலி கட்ட வேண்டியதாயிடுச்சு னு சொன்ன தான...  

எனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத நீ வேண்டாம் னு சொன்னியே..அதெல்லாம் எனக்காக சொன்னதா? இல்லை உனக்காக நீயே சொல்லிக்கிட்டதா? “ என்று கண்கள் இடுங்க , அவனை ஊடுருவி பார்த்தாள் பெண்.  

“எனக்காக எதுக்குடி சொல்லனும்? “ என்று குழப்பமாக அவளை பார்க்க,  

“நீதான் ஏற்கனவே சொல்லி இருக்கியே... உனக்குத்தான் ரதி மாதிரி பொண்ணு வேணும்னு சொன்னியே...அப்படி எந்த ஊர் ரதிக்காச்சும் எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்திருப்ப இல்ல.

திடீர்னு உன் கனவெல்லாம் கலைஞ்சு போய்,  இந்த கருவாச்சி என்கிட்ட மாட்டிக்கிட்டனு  வேதனையா இருக்கா? அதான்  என்னை கழட்டி விட்டுட்டு வேற ஆள பார்க்க முடிவு பண்ணிட்டியாக்கும்? என்று முறைக்க, அதைக்கேட்ட  ராசய்யாவுக்கோ  அதிர்ச்சியாக இருந்தது.  

அவளுக்காக யோசித்து அவன் பேசியதை எல்லாம் அவள் இப்படி திருப்புவாள்  என்று யோசித்திருக்க வில்லை.

உடனே பதறியவன்,

“அது இல்லடி.  நான் சொன்னது எல்லாம் உனக்காகத்தான்.  நானே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கிறேன் னு சொன்னேன்.  

உனக்குத்தான்  என்னை புடிக்காதே.  எப்படி உன்னால என்னோட கடைசி வரைக்கும் காலம் தள்ள முடியும்? என்று மார்புக்கு குறுக்காக கைகளை இறுக்கி கட்டியபடி எங்கோ வெறித்து பார்த்தபடி சொல்ல,

“அது என் பாடு... அந்த பாட்டை நான் பட்டுக்கிறேன்.  எனக்காக நீ ஒன்னும் விசனப் பட தேவையில்லை...”  என்று தன்  கழுத்தை நொடித்தாள்  அவன் மனையாள்.  

அதைக்கேட்ட ராசய்யாவுக்கு  குழம்பி போனது.  

“இந்த கருவாச்சி என்ன சொல்றா?  என்கூட வாழறது கஷ்டம் இல்லைன்னு சொல்றாளா? இல்லை  கஷ்டம்னு  சொல்றாளா? “ என்று யோசிக்க, அவன் முழித்தவாறு யோசிப்பதை கண்டவளுக்கு லேசாக புன்னகை எட்டி பார்த்தது.

ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு மீண்டும் அவனை முறைத்தவாறு பார்த்தவள்,  

“யோவ்... முதலும் கடைசியுமாக சொல்றேன்... கேட்டுக்க... பிடிக்குதோ பிடிக்கலையோ நீ என் கழுத்தில தாலியை கட்டிட்ட. எல்லாருடைய ஆசிர்வாதத்தோட நாம கணவன் மனைவியும் ஆகியாச்சு.

இனிமேல்  இதிலிருந்து  விலக முடியாது. அதனால  விவாகரத்து அது இது னு ஏதாவது உளறின தொலைச்சுடுவேன்...  ஜாக்கிரதை...”  என்று விரல் நீட்டி  மிரட்டினாள் அந்த சில்வண்டு.  

அதைக்கேட்டவனுக்கோ  அவனையும் அறியாமல்  அப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது. அதுவரை அவனை அழுத்தி வந்த பாரம் நீங்கி மனம் லேசானதைப் போல ஒரு சுகமான பீல்.

எங்கே பூங்கொடிக்கு இந்த திருமணத்தை பிடிக்காமல்,  கட்டாயத்தில் அவளை இந்த பந்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்களோ?  என்று தவிப்பாக இருந்தது.

அதனால் தான் அவன் அப்படி பேசியது.

இப்பொழுது அவளுடைய பேச்சிலிருந்து அவளும் இந்த திருமண  பந்தத்தை ஏற்றுக் கொள்கிறாள் என்பது புரிய, அதை புரிந்ததும்  பெரும் ஆறுதலாகவும் இன்னுமாய்  நிம்மதியாகவும் இருந்தது புதுமாப்பிள்ளைக்கு.

ஆனால் அந்த நிம்மதி... மெல்லிய சுகம் எல்லாத்துக்கும் ஆயுட்காலம் ஒரு நொடிதான்..!    

அடுத்த கணம், அவள் சொல்லிய பிடிக்குதோ பிடிக்கலையோ நீ என் கழுத்தில தாலியை கட்டிட்ட என்ற வாக்கியம் அவன் காதில் ஒலித்தது.

அப்படீனா அவளுக்கு என்னை பிடிக்கவில்லை...

பிடிக்காத வாழ்க்கையை எப்படி என்னுடன் வாழ்வாள்? அவளுக்கு ஏன் அந்த கஷ்டத்தை கொடுக்க வேண்டும்?”  என்று நல்லவனாக மீண்டும் யோசித்தான்.

“பூவு... புடிக்காத வாழ்க்கையை  எதுக்கு வாழணும்... பிரிஞ்....” என்று ஆரம்பிக்கும் முன்னே,  அவனை முறைத்தவாறு அவள் தன் கை முஷ்டியை இறுக்க, அதில் தான் சொல்ல வந்ததை கப்பென்று பாதியில் நிறுத்திக் கொண்டான் ராசய்யா...!

ஏற்கனவே அவள் அறைந்ததன் எதிரொலி இன்னும் அவன் இரண்டு கன்னத்திலும் இருந்து கொண்டுதான் இருந்தது.

அடுத்த அறை வாங்க, அவன் முகத்தில் இடம் இல்லை..” என்று உள்ளுக்குள் அதிர்ந்தவன்  

“சரி...இதை இப்போ பேசித் தீர்க்க வேண்டாம்.  பொறுமையாக அவளிடம் எடுத்துச் சொல்லி அவளிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்...” என்று முடிவு செய்தவன்,  ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டான்.

பின்  அந்தப் பேச்சை முடிக்கும் விதமாக, வேற பேச்சிற்கு தாவினான்.  

“சரி பூவு... இப்ப எதுக்கு என்னை உள்ள வரச்சொன்ன? என்று பேச்சை மாற்ற,  அதைக்கேட்டவளுக்கோ  தூக்கிவாரிப் போட்டது.  

“ஃபர்ஸ்ட் நைட் ல வந்து எதற்காக வரச் சொன்ன  என்று கேட்ட முதல் புருஷன் இவனா தான் இருப்பான்...” என்று அவளுக்கு பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்  கொண்டவள், தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
முயன்று தன் சிரிப்பை அடக்கியவள், மீண்டும் அவன் புறமாக திரும்பி,  

“யோவ்...  இன்னைக்கு நமக்கு என்னன்னு தெரியுமா? என்றாள்  அவனை முறைத்து பார்த்தபடி.

“நமக்கு என்ன?  என்னாச்சு ? “ என்று குழப்பமாக அவளைப் பார்க்க,  

“ஹ்ம்ம்ம் நமக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்.  நீ பாட்டுக்கு போய் கோயில் திண்ணைல படுத்துக்கிட்டா  ஊருல எல்லாம்  என்ன பேசுவாங்க?.”

“என்ன பேசுவாங்க?” என்றான் இன்னுமாய் குழப்பத்துடன்.

“ஆங்...பூங்கொடி, புருஷனை முதல் நாளே தெருவுக்கு துரத்தி விட்டுட்டானு சொல்ல மட்டாங்க?

அதோட சொலையா ஒரு லட்சம் கொடுத்து என்னை வாங்கி இருக்கியே...  அந்த காசுக்கு முதல் நாளிலிருந்து நீ என்னை அனுபவிக்க வேண்டாம்? என்று நக்கலாக சொல்ல,  அடுத்த நொடி ஆஆஆ என்று அலறினாள் தன் கன்னத்தை பிடித்தபடி.  

அவளை ஓங்கி அறைந்திருந்தான் ராசய்யா.  

இதுவரை சாதுவாய், அவள் அறைந்த பொழுது கூட அமைதியாக வாங்கிக்கொண்டவன் முகம் இப்பொழுது கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.  

“இன்னொரு தரம் உன்னை விலைக்கு வாங்கினேன் என்று சொல்லி உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்தாத டி...”  என்று பல்லைக் கடித்து வார்த்தைகளை  கடித்து துப்பினான்  ராசய்யா.

திடீரென்று அறைந்ததில் அதிர்ந்து போன பெண்ணவள், அதற்குள் சுதாரித்துக்கொண்டவள் அவன் அறைந்ததில் கோபம் ஆனவள்

“யோவ்...இப்ப எதுக்கு  என்னை அடிச்ச...உண்மையைத்தானே சொன்னேன். நீ  எதுக்கு எனக்காக உன் பொண்டாட்டியா மதிச்ச உன் புல்லட்டை தூக்கி கொடுத்த?  என்று அவனை முறைக்க

“அது உன் மேல இருக்கிற அக்கறையினால…”

“அக்கறையா?  என் மேல உனக்கு எதுக்குய்யா அக்கறை?  என்னை  பெத்தவங்களுக்கோ, என் கூட பொறந்தவளுக்கோ இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு?

அவங்களே என் மேல அக்கறை படாதப்ப உனக்கு ஏன் டா என் மேல அக்கறை? என்று கோபமாக ஆரம்பித்தவள், முடிக்கும்பொழுது எவ்வளவு முயன்றும் தன் அழுகையை... மனக்குமுறலை அடக்க முடியாமல் தழுதழுத்தாள்.

கண்ணோரம் கரித்துக்கொண்டு வந்தது. இரண்டு கண்ணீர் துளிகள் இப்ப விழவா? அப்புறம் விழவா என்று அவளின் அனுமதிக்காக காத்து நின்றன.

இதுவரை கோபமாக, பத்ரகாளியாய் இருந்த பொழுதெல்லம் ஒன்று தோன்றாத ராசய்யாவுக்கு,  அவளின் இந்த கலங்கிய முகம் நெஞ்சை பிசைந்தது.

அவளின் வேதனை புரிய ஓரு நொடியில் உறுகிப் போனது அவன் மனம்.

அவனும் தன் கோபத்தை விடுத்து,  மெல்ல அவள் அருகில் வந்தவன், பெண்ணவள் கையை பற்றியவன் அதை தன் கைக்குள் வைத்துக்கொண்டு மெல்ல அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். 

உனக்கு நடந்தது நடக்க இருந்தது அநியாயம் தான் பூங்கொடி.  

அதனால் தான் உன்னை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற, என்னால்  முடிந்ததைச் செய்தேன்...”  என்று அவன் முடிக்கும் முன்னே, அவன் தோள் மீது சாய்ந்திருந்தவள் மெல்ல தலையை மட்டும் நிமிர்த்தி,

“அதுதான் ஏன்னு கேக்குறேன்? “ என்றாள் அவன் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவாறு.

அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாதவன்,  வேற பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டவன்

“தெரியல...”  என்றான் மெல்லிய குரலில்.  

அதைக் கேட்டவளுக்கு ஒரு கணம் ஏமாற்றமாக இருந்தது.

அவனிடம் என்ன மாதிரியான பதிலை எதிர்பார்த்தேன்? ஏன் எனக்கு இப்படி ஏமாற்றமாக இருந்தது என்று அவசரமாக யோசித்தவள், உடனே விடை எதுவும் கிடைக்காததால்,  தன்னை சமாளித்துக் கொண்டவள்,  

“வந்து... மண்டபத்துல சொன்னியே...  யாருக்கும்,  எந்த புள்ளைக்கும்  அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பேன் என்று..!  

அந்த மாதிரி பத்தோடு பதினொன்னாதான்  எனக்கு உதவி செய்தியா? என்று தழுதழுத்தவாறு கேட்க, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் குழம்பியவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருத்தான்.

அவனின் திருதிருவென்ற பார்வையை  கண்டவளுக்கு ஏனோ கோபம் உடனே தணிந்து போனது.  

ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவள்,

“சரி... போனது போகட்டும்.  இனிமேல் கோவில் திண்ணையில் எல்லாம்  படுக்காத..” என்றாள் அவனை பார்த்தவாறு.

“அப்புறம் எங்க படுக்கறதாம்? “ என்று ராசய்யா மீண்டும் குழப்பத்துடன்  கேட்க, அவன் மனையாளோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள்.

“தத்தி...தத்தி... ஆளுதான் முரட்டு ஆளா வளர்ந்து வச்சிருக்கான். புத்தி கொஞ்சம் கூட இல்ல. நான் என்ன சொல்ல வர்றேன் னு புரிய மாட்டேங்குது இந்த மடச்சாம்பிராணிக்கு..” என்று தன்னுள்ளே தன் கணவனை அர்ச்சனை பண்ணியவள்,

“உனக்கு இப்ப  கல்யாணம் ஆகிடுச்சுய்யா... இனிமேல்  வீட்லதான் தூங்கணும்...”  என்று  முறைக்க,

“அது நல்லா இருக்காது பூவு...அதோடு நாளைக்கு உனக்கு விவகாரத்து...”  என்று சொல்ல வந்தவன்,  மீண்டும் பாதியில் நிறுத்திக்கொண்டு

“உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய என்னால் எந்த தடங்கலும் வரக்கூடாது... உன் மேல எந்த குறையும்  இருக்கக்கூடாது...”  என்று அவன் முடிக்கும் முன்னே,  

அவன் கையில் இருந்த தன் கையை  வெடுக்கென்று உருவிக் கொண்டவள், அவன் தோளில் இருந்து விலகி தள்ளி நின்று கொண்டு,

“இப்ப  நீ என்ன சொல்ல வர்ற? என்று முறைக்க,  

“அது வந்து.... “ என்று ராசய்யாவும்  தடுமாற,

“அதாவது... நீ  ராத்திரி வீட்ல என் கூட தனியா இருந்தா நமக்குள்ள எல்லாம்  நடந்துருச்சுன்னு சொல்லுவாங்க.

நாளைக்கு என்னை கட்டிக்க போறவனுக்கு அது இடஞ்சலா இருக்கும்...இதான சொல்ல வந்த? “ என்று நக்கலாக கேட்க,

அவனும் ஆமாம்... என்று தலையை வேகமாக உருட்டினான்.

“ஏன் யா...  இப்பல்லாம் ராத்திரிய விட பகலில்தான் நிறைய கசமுசா நடக்குதாம்.  

பகல்ல எப்படியும் நீ என்னோடதான இருப்ப. அப்ப நாளைக்கு வரப்போறவன்  என்னை சந்தேகப்பட மாட்டானா? “ என்றாள் தலையை சரித்து தன் உதட்டை சுளித்து நக்கலாக  அவனைப் பார்த்தவாறு.  

“இல்லை...  இல்லை...  அப்படி எல்லாம் சந்தேகப்படாதவனை கொண்டு வந்து நிறுத்துவது  என் பொறுப்பு....”  என்று அவன் முடிக்கும் முன்னே பொங்கி விட்டாள் பூவையவள்.  

“ஏன்டா... என்னை என்ன கோயிலுக்கு நேந்து விட்ட தேவதாசினு நினைச்சுபுட்டியா?  வர்றவன் போறவன் எல்லாம் என் கழுத்துல தாலிய கட்ட.

ஒரு வில்ஒரு சொல்ஒரு இல் ங்கிற மந்திரத்தில் ஒரு இல் ங்கிறது  ஆம்பளைங்களுக்கு மட்டுமில்ல. பொம்பளைங்களுக்கும் அது பொருந்தும்.

நீ வேணா உன் பொண்டாட்டியை அடுத்தவனுக்கு தாரை வார்த்து கொடுக்கும் பெரிய வள்ளல்...முற்போக்கி சிந்தனை உடையவனா இருக்கலாம். நானெல்லாம் தமிழ்நாட்டு மண்ணுல பொறந்து வளர்ந்த  சராசரி  பொண்ணுதான்.

நம்ம மண்ணோட கலாச்சாரம் என் ரத்தத்துலயும் ஓடுதான். நீ கட்டின தாலிக்கும் நீ என் நெத்தியில வச்ச பொட்டுக்கும் உரிய மரியாதையை தெரிந்தவள்தான்.

எனக்கு புருஷன் னா  அது நீ மட்டும்தான்.  புடிக்குதோ  புடிக்கலயோ உனக்கு நான் தான் பொண்டாட்டி.  நீ தான் எனக்கு புருஷன்.  

நாம ரெண்டு பேரும் தான் ஒன்னா சேந்து குப்பக் கொட்டியாகணும்.   இன்னொரு தரம் எனக்கு இன்னொரு கல்யாணம் பண்றது பத்தி பேசின,  இடுப்புல சொருகி இருக்கிற கத்திய எடுத்து உன் கழுத்துல சொருகிடுவேன்...  

மூடிக்கிட்டு போய் கட்டில்ல படுய்யா....கட்டின தாலியோட ஈரம் கூட காயாம, வந்துட்டான் எனக்கு இன்னொரு கல்யாணம் பண்றதுக்கு...” என்று படபடவென்று பொரிந்து தள்ளியவள்,  கட்டிலில் இருந்த ஒரு  போர்வையை  உருவிக்கொண்டு,  தரையில் விரித்து படுத்து விட்டாள்.  

இடி இடித்து மழை பெய்து ஓய்ந்ததை போல இருந்தது ராசய்யாவுக்கு...

அவள் படுத்துவிட்டாலும் அவள் கொட்டிய வார்த்தைகள் இன்னுமே அங்கயே சுற்றிக்கொண்டு இருந்தது.

“இப்ப இவ என்ன சொல்ல வர்றா?  என்று இன்னுமே குழப்பமாக இருந்தாலும், அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போய்விட, ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு,  அங்கிருந்த கட்டிலிக்கு சென்றான்.

கட்டிலில் படுத்தவன் , தலைக்கு  அடியில் இரு கையையும் மடித்து வைத்துக்கொண்டு,  மல்லாந்து  படுத்தவாறு , விட்டத்தை பார்த்து வெறித்தபடி படுத்திருந்தான் ராசய்யா..!  


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!