என்னுயிர் கருவாச்சி-34

 


அத்தியாயம்-34

 

காலை உணவை முடித்த பின் வெளியில் சென்று  விட்டான்  ராசய்யா.  

அதன் பிறகு மதியம்  நீண்ட நேரம் ஆகிய பிறகும்  மதிய உணவிற்கு  அவன் வீட்டிற்கு திரும்பி வந்து  இருக்கவில்லை.  

இப்பொழுது போல அப்பொழுது செல்போன் வசதி இல்லாததால், உடனே போன்  அடித்து எங்கே இருக்கிறான் என்று கேட்கவும் வழியில்லை. பூங்கொடிக்கு.  

எங்கு சென்றான் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் காத்திருந்தவள், பின் தன் தம்பியை அழைத்து ராசய்யாவை தேடி பிடித்து அழைத்து வரச் சொன்னாள் பூங்கொடி.

“சை...போக்கா. உனக்கு இதே வேலையா போச்சு. மாமா என்ன சின்ன குழந்தையா தொலஞ்சு போக?”  என்று முறைத்தான் தன் அக்காவை.

“டேய்... அவர் சாப்பிட இன்னும் வரலைடா...அதான்... “ என்று கெஞ்சலுடன் இழுக்க,

பாருடா... நேத்து வரைக்கும் இதே மாமாவை சாப்பிட்டாரா இல்லையானு நீ கண்டு கிட்டியா? இப்ப என்ன வந்ததாம்? “ என்று நக்கலாக சிரித்தான் இளையவன்.

நேத்து வரைக்கும் அவர் யாரோதான் டா எனக்கு. ஆனால் இப்ப அப்படியா? என் புருஷன் டா. அவரை பத்தி நான் அக்கறை பட்டுத்தான் ஆகணும். இல்லைனா வரலாறு என்னை தப்பா பேசும்... நீ சின்ன பய. அதெல்லாம் உனக்கு புரியாது. இப்ப நீ போகப்போறியா இல்லையா? “ என்று அதட்டினாள்.

“சரி சரி போய் தொலைக்கிறேன்.  இப்படி அடிக்கடி அவரை தேடிக்கிட்டு இருக்காம பேசாம இனிமே  நானும் இந்த மாமு கூடவே  போய்டறேன்...”   என்று புலம்பியபடி கிளம்பி சென்றான்.

வழக்கமாக ராசய்யா செல்லும்  இடங்களிலெல்லாம் தேடி பார்த்தான்.  கோவிலிலும்,  வயல்காட்டில், வாய்க்கால் மேடு, தென்னந்தோப்பு என தேடிப்பார்க்க,  எங்கேயும் காணவில்லை அவனை.

சற்று நேரம் சுற்றி அலைந்தவன் வீட்டிற்கு திரும்பியவன்  தன் அக்காவிடம் வந்து மாமனை எங்கும் காணவில்லை என்று  கையை விரிக்க அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு கொட்டினாள் தமக்கை.

“ஏன்டா அவசரகுடுக்கை... அதுக்குள்ள என்னடா  அவசரம்? நல்லா  தேடிப் பார்க்க வேண்டியதுதானே?  எதுக்கு அதுக்குள்ள ஓடிவந்த? என்று  முறைக்க, தன் அக்கா கொட்டிய இடத்தில் கையை வைத்து தேய்த்து விட்டுக்கொண்டே

“அக்கோவ்...எல்லா இடத்திலேயும் நல்லாத்தான் தேடிப்பார்த்தேன்... எங்கயும் காணாம். ஒருவேளை நீ பண்ணின டார்ச்சர்ல மாமா சொல்லாம கொல்லாம எஸ் ஆகிட்டாரா? “ என்று நக்கலாக சிரிக்க, மீண்டும் பூங்கொடி கையால் நறுக்கென்று குட்டு வாங்கினான்.

“உன் வாயில பினாயில ஊத்தி கழுவ...ஏன் டா நல்லதா நாலு வார்த்த சொல்ல மாட்ட..நானே அந்த மனுஷன க்ஆணாம்னு டென்ஷன் ல இருக்கேன்...” என்று சிடுசிடுத்தாள்.

“சாரிக்கா... சும்மா உன்ன கலாய்க்கத்தான் அப்படி சொன்னேன்... அப்படியெல்லாம் மாமா உன்ன விட்டுட்டு போக மாட்டார். ஒருவேளை  டவுன்க்கு ஏதும்  போய் இருப்பாரோ என்னவோ.  நம்ம ஊரிலேயே இல்லையே...” என்று தன் தமக்கையை சமாதானம் செய்தான் தம்பி.

அதைக்கேட்ட  பூங்கொடிக்கும்  யோசனையாக இருந்தது.  

தன் மகளின் தவிப்பை பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கும் கொஞ்சம் தவிப்பாக  இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளின் அருகில் வந்த தணிகாசலம்,

“கவலைப்படாத பாப்பா... மாப்பிள்ளை என்ன சின்ன குழந்தையா?  எங்காவது ஏதாவது வேலையா போயிருப்பார்.. சீக்கிரம் வந்திடுவார்.  நீ போய் சாப்பிடு மா...” என்று அக்கறையுடன் உடன் சொல்ல,  அவளோ விளுக்கென்று திரும்பி அவரை பார்த்து ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள்.

பின் பின் விடுவிடுவென்று அறைக்குள்ளே சென்று விட்டாள்

பூங்கொடியை நன்றாக தவிக்க விட்டு, இரவு எட்டு  மணி அளவில் தான் வீடு திரும்பி வந்தான் ராசய்யா.

மற்ற நேரமாக இருந்திருந்தால், அவன்  வருவது அவனுடைய புல்லட் சத்தத்தில் இருந்தே  தெரிந்துவிடும்.  அனிச்சையாக ஜன்னலை திறந்து பார்த்த பூங்கொடிக்கு மனதை பிசைந்தது.  

எப்பொழுதும் தன் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு தொடை தெரிய புல்லட்டில் கம்பீரமாக வந்து இறங்குபவன்...  இன்று தளர்ந்த நடையுடன்  வீட்டிற்கு நடந்து வருவதைக் கண்டு மனதை பிசைந்தது.  

தன்னால் தானே அவன் புல்லட்டை கொடுக்க வேண்டியதாயிற்று என்று கஷ்டமாக இருந்தது

வீட்டிற்கு உள்ளே வந்தவனை மற்றவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.  

எங்க மாமா போன நீ?  உன்ன காணாம அக்கா என்னை போட்டு படுத்தி எடுத்துட்டா..உன்ன தேடி  

ஊரெல்லாம் சுத்திட்டு வரேன்..”  என்று அன்பரசன் தன் மாமனை முறைக்க, ராசய்யாவுக்கு அப்பொழுது தான் உறைத்தது.  

இத்தனை நாள் எங்கே சென்று சுற்றி விட்டு வந்தாலும் அவனை எதிர்பார்த்து யாரும் காத்துக்கொண்டு இருந்ததில்லை.  அவனுக்கும் அவன் செல்லும் இடத்தையோ, எப்பொழுது வருவான் என்று  எதையும் யாரிடமும் சொல்லி விட்டு செல்ல வேண்டிய அவசியம் இருந்ததில்லை.  

திரும்பி வந்தாலும் கோவில் திண்ணையில் படுத்துக் கொள்வான்.  அவன் சாப்பிட்டானா இல்லையா என்று அக்கறை படத்தான் யாரும் இருந்ததில்லையே...

ஆனால் இன்று ஒருத்தி அவனுக்காக  காத்திருக்கிறாள்  என்று புரிந்ததும் இப்பொழுது மனதை

பிசைந்தது. கண்ணோரம் லேசாக கரித்து கொண்டு வர,  அவசரமாக உள்ளிழுத்துக் கொண்டான்.

“ஆமாம் மாப்ள... நீங்க வருவீங்கனு  சின்ன பாப்பா வாசலையே பார்த்துக்கிட்டே இருந்துச்சு.

உங்களை காணாமல் மத்தியான சாப்பாடு கூட சாப்பிடவே இல்லை.  

இனிமேல் எங்க போனாலும் பாப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடுங்க...”  என்று எடுத்துச் சொன்னார் தணிகாசலம்.    

“சரிங்க மாமா...”  என்று தலைய ஆட்டியவன்,  பூங்கொடி எங்கே என்று விசாரிக்க

அன்பரசன் உள் அறையை கைகாட்டி,  

“அக்கா செம காண்டுல இருக்கு மாமு...  நேத்து மாதிரியே இன்னைக்கும்  உங்க கன்னம் பழுக்க போகுது. வாழ்த்துக்கள்...”    

என்று  குட்டி மச்சான்  கண்சிமிட்டி, குறும்பாக சிரிக்க, அவனை முறைத்தபடி, அவன்  தலையை பிடித்து செல்லமாக ஆட்டிவிட்டு, தயக்கத்துடன்  அறைக்கு உள்ளே சென்றான் ராசய்யா.

நேற்று இரவு போலவே இப்பொழுதும் கட்டிலில் முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் பூங்கொடி.

அவளை அப்படி பார்த்ததும் கஷ்டமாக இருந்தது ராசய்யாவுக்கு.

இதுவரைக்கும் யாருக்கும் அஞ்சாமல், நிமிர்வுடன்  வளைய  வந்தவள்...  இந்த இரண்டு நாட்களாக இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாளே என்று வேதனையாக இருந்தது.

“எல்லாம் என்னால தான்...  எப்படி வாழ வேண்டியவள்...பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தவள். கல்யாணம் என்ற விலங்கை பூட்டி அவள் இறக்கையை உடைத்து விட்டேனா? அதனால்தான் இப்படி வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறாளா?

என்று மனம் பதைத்தவன் மெல்ல  கட்டிலின் அருகில் சென்று,  அவள் அருகில் அமர்ந்து பூவு... என்று அழைக்க, அவளோ நிமிர்ந்து பார்க்கவில்லை.

மீண்டும் பூங்கொடி என்று அழைத்து அவளின் தோளை மென்மையாக தொட,  பட்டென்று அவன்  கையை தட்டி விட்டாள் அவன் மனையாள். ஆனால் இப்பவும் நிமிர்ந்து பார்க்கவில்லை.  

“ப்ச்... இப்ப எதுக்குடி கருவாச்சி இந்த கோபம்? என்று மெல்ல சிரித்தபடி சொல்ல, அவன் எதிர்பார்த்ததை போலவே கருவாச்சி என்ற மந்திரம் நன்றாகவே வேலை செய்தது.

அவனின்  கருவாச்சி என்ற அழைப்பில் விழுக்கென்று நிமிர்ந்தவள்,  

“யோவ்...  இன்னொருதரம் என்னை கருவாச்சி ன,  இருக்கிற கோபத்தில கொலையே பண்ணிடுவேன்...”  என்று உருவினாள் பூங்கொடி.

“ஆஹான்... கொலை பண்ற அளவுக்கு என் மேல அப்படி என்னடி கோபம்? நான் என்ன செஞ்சேன் ?   என்று அவனும் முறைக்க

“ஹ்ம்ம்ம் நீ என்ன செய்யல? என்று திருப்பி முறைத்தாள்.

“ஹ்ம்ம்ம் நான் என்னடி செஞ்சேன்?  சொல்லித்தொலை...” என்று எரிச்சலுடன் விசாரிக்க,  

“யோவ்... உன் மனசுல நீ என்ன  மைனர்னு நினைப்பா?  என்னவோ அவுத்துவிட்ட காளை மாதிரி ஊரெல்லாம் சுத்திட்டு இப்ப வர்ற?  இங்க பொண்டாட்டினு  ஒருத்தி இருக்கிறது உனக்கு நெனப்பு இருக்கா?  இல்லையா? என்று அதட்டலுடன்  முறைக்க

அவளின் உரிமையான அதட்டலில்  மீண்டும் நெஞ்சை அடைத்தது

அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து யாரும் அவனை இப்படியெல்லாம் அதட்டியது இல்லை.  

பூங்கொடி தான் ஒரிரு முறை வெளியில் அவன் நடந்து கொள்வது சரி இல்லை என்று அவனை திட்டி இருக்கிறாள்  

அப்போது யாரோ ஒருத்தியாக அவனுக்கு இருந்தவள்... இப்பொழுது அவனுடைய மனைவியாய் அவனை அதட்ட, ராசய்யாவுக்கு உள்ளம் குளிர்ந்து  போனது.

“மன்னிச்சுக்க பூவு..  பழைய பழக்க தோஷத்துல வெளில போறப்ப யார்கிட்டயும் சொல்லணும்னு தோனல. அதுதான் எதுவும் சொல்லிக்காம போய்ட்டேன். “  

“ஓஹோ... இம்புட்டு நேரம் எங்க  போய் சுத்திட்டு வர்றீங்க?  இன்னைக்கு எந்தக் கோவில் திண்ணையும் காலி இல்லையா? என்று நக்கலாக திட்டி  வைக்க

“ஊர் சுத்தவெல்லாம் போகலை டி. பண்ணையார் வீட்டுக்கு போயிருந்தேன்.  பண்ணையார் ஐயா அவசர வேலையா வர சொல்லி இருந்தாங்க. அதை செஞ்சி முடிச்சுட்டு தான் வரேன்.

இன்னைக்கு வேலைக்கு 500 ரூபாய் கொடுத்தாங்க.  வழக்கமா நான் கையில காசு வங்கிக்கறது  இல்லை.  பண்ணையார் அம்மாகிட்ட இருக்கட்டும்னு கொடுத்திருவேன்.  தேவைக்கு மட்டும் அவங்ககிட்ட இருந்து வாங்கிக்குவேன்.

ஆனா இன்னைக்கு அவங்களே கூப்பிட்டு காசு தந்தாங்க.  

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ராசு... உனக்குனு   ஒருத்தி வந்துட்டா.  இனிமேல் சம்பாதிக்கிறத  கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கிட்ட கொடுனு சொல்லி கொடுத்துட்டாங்க... “  என்று சொன்னவன், சட்டை பாக்கெட்டில் கையை விட்டு ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான்.

“இந்தா பூவு.  என்னுடைய சம்பாத்தியம்...”  என்று அவள் கை பிடித்து கொடுக்க, அதைக்கண்டவவளுக்கு  கண்ணோரம் கரித்தது.  

அவன் கொடுத்த சம்பளத்தை விட, அவளை பொண்டாட்டி என்று அழைத்தது தான் அவளுக்கு நிம்மதியாக , சந்தோஷமாக இருந்தது.

அதோடு  திருமணமான அடுத்த நாளே புதுமாப்பிள்ளை என்று சோம்பி இருக்காமல்,  உழைக்கச் சென்றுவிட்ட தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.  

தோற்றத்தில் கரடு  முரடனாகவும் ரவுடியாக இருந்தாலும்,  குணத்தில் கள்ளம் கபடம் இல்லாத சிறுபிள்ளை போன்றவன் என்று அவளுக்கு புரிந்தது.  தன் கோபத்தை தணித்துக்  கொண்டவள், வெளிவந்த கண்ணீரை உள்ளிளுத்துக்கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தவள்,  

“ஹ்ம்ம் போன இல்ல.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போக வேண்டியதுதானே...”  என்று தழுதழுத்தாள்.

ஏனோ காலையில் இருந்து அவனைக்காணாமல் அவள் உள்ளே அப்படி ஒரு தவிப்பு.

அவள் தம்பி சொன்னதுபோல நேற்று வரை அவன் எங்க போறான்..சாப்பிட்டானா இல்லையா என்று கண்டு கொள்ளாதவள்... இன்று அவனுக்காக இத்தனை தவிப்பு தவிக்க காரணம் என்ன என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

அந்த தவிப்புதான் குரல் கமற, தழுதழுத்தவாறு வெளிவந்திருந்தது.

அவளின் கலங்கிய கண்களும், சோர்ந்து போயிருந்த முகமும், அவனுக்கான அவளின் தவிப்பை சொல்லாமல் சொல்ல, அதில் அப்படியே நெகிழ்ந்து போனான் அந்த காளை.

அவளின் வேதனை புரிய,

என்னை மன்னிச்சுக்கடி... அதான் சொன்னேனே...இது வரைக்கும் அந்த மாதிரி எல்லாம் யார்கிட்டயும் சொல்லி விட்டு போனதில்லையா...அதான்....”  என்று அசடு வழிந்தான்.  

“சரி சரி இனிமேல் நீ எங்க போனாலும் என்கிட்ட சொல்லிட்டு போ.  திடீர்னு நீ காணாமல் போய்விடவும் ஒருவேளை என்னை புடிக்காமதான் ஓடி போய்ட்டியோனு நினைச்சிட்டேன்... “  என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள் அவன் மனையாள்.  

“அது எப்படி ஓடறதாம்... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்காமல் எப்படி ஓடறதாம்? “ என்று அவனும் சிரித்தபடி உளறி வைக்க,  அடுத்த நொடி பெண்ணவளின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனது. முகத்தில் கோபம் பொங்க,  

“நல்ல வாழ்க்கைனா?  எப்படி..? என்று முறைத்தபடி கேட்க

“அது வந்து...  வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து...”  என்று அவன் முடிக்கும் முன்னே,  அவள் கையை வேகமாக நீட்டி நிறுத்து என்று செய்கையால் அதட்டியவள்

“யோவ்... அதான்   நேத்து ராத்திரியே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சே...இப்ப நான் ஊருக்காக, இந்த தாலிக்காக மட்டும் உன் பொண்டாட்டி இல்ல.

உடம்பலவிலும் உனக்கு பொண்டாட்டி ஆயிட்டேன். கன்னி கழிஞ்ச என்னை இனிமேல்  எவன் கட்டுவான்.  இந்த நல்ல வாழ்க்கை என்ற பேச்சை இதோட விடு...” என்று முறைத்தாள் பெண்ணவள்.

அதைக் கேட்டு அதிர்ந்த ராசய்யா

“சும்மா நடக்காதத சொல்லி என்னை குழப்பாத பூங்கொடி. அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை... “  என்று சந்தேகத்துடனே சொல்லி வைக்க,

“ஓஹோ..அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?  என்றாள் இடுப்பில் கை வைத்து முறைத்தபடி.

“அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், கட்டாயம் எனக்கு நினப்பு இருக்கும். இவ்வளவு நடந்திருக்குனு சொல்ற. அது எப்படி எனக்கு தெரியாம இருக்கும்? “ என்று  முறைத்தான்.  

“என்ன கேட்டா?  அன்னைக்கு நடந்தது  மட்டும் உனக்கு தெரிஞ்சுதா?  நீ என்னை  இறுக்கி அணச்சு என் உதடு  கிழிஞ்சு போற அளவுக்கு முத்தம் கொடுத்த.

அடுத்த நாள் உனக்கு எதுவுமே நினப்பு இல்லாம, என்கிட்டயே  என்னாச்சுன்னு கேட்டது நினப்பு இருக்கா? .  அப்ப நடந்தது மட்டும் உனக்கு தெரிஞ்சுதாக்கும்?     என்று தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு சிடுசிடுத்தாள் பூங்கொடி.  

 

“அது... அன்னைக்கி மப்புள இருந்தேன். அதனால எனக்கு என்ன நடந்ததுனு  நினப்பு இல்ல. ஆனால் நேத்து அப்படியெல்லாம் இல்லையே. தெளிவாதான் இருந்தேன்.  

கண்டிப்பா உன்கிட்ட நான் தப்பா நடந்திருக்க மாட்டேன்...”  என்று அவளை கூர்ந்து பார்க்க,

“யோவ்...  உனக்கு கொஞ்சமாச்சும் மண்டைல  மசாலா இருக்கா? நீ என்கிட்ட  ஒரு புருஷனா நடந்துகிட்டத போய் யாராவது தப்பா நடந்துகிட்டேனு சொல்லுவாங்களா?  எல்லாம் சரியாதான் நடந்துகிட்ட...”  என்று வெட்கப்பட்டு சிரிக்க, ராசய்யாவுக்கு குழப்பமாகி போனது.   

அவள் என்ன சொல்ல வர்றா?  என்னை புருஷனா ஏத்துக்கிட்டடானு சொல்றாளா?  இல்லை அவளை இக்கட்டில் இருந்து காப்பாற்றியதற்காக மனைவியாக நடந்து கொள்ள வேண்டும் என்று பேசுகிறாளா? என்று குழம்பியவன் மீண்டும் தலையை தட்டி யோசித்தான்.

அவன் முகத்தில் இருந்தே குழம்பி இருக்கிறான் என கண்டு கொண்டவள் உள்ளுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாள். தன் சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி கொண்டு,  

“யோசிச்சது போதும் மாமா....  முதல்ல வா சாப்பிடலாம்.  எனக்கு பசி வயித்தை கிள்ளுது. இன்னும் செத்த நேரம் நீ வரலைனா சிறுங்குடல பெருங்குடல் தின்னிருக்கும்.

நீ எங்க போயிட்டியோனு  உன்ன நினச்சிக்கிட்டே  மத்தியான சாப்பாடு கூட சாப்பிடல...”  என்று பாவமாக சொல்ல,  

அதைக் கேட்டவன் இன்னுமாய் உருகி விட்டான்.

“எனக்காக இவ சாப்பிடாம இருந்திருக்கிறாளே... இவளை என்ன செய்ய? “ என்று பூரிப்பும், வருத்தமும் கலந்த கலவையாய் உணர்ந்தவன்

“ஹே லூசு... இது என்னடி  புது பழக்கம்?  இத்தனை நாள் நீபாட்டுக்கு  சாப்பிடல.  இப்ப ஏன் நான் இல்லைனதும், நீ சாப்பிடாம இருக்க...”  என்று கடிந்து கொள்ள,  உடனே தன் ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு அவன் கட்டியிருந்த தாலியை எடுத்து காட்டி

“ஹ்ம்ம்ம் எல்லாம் இதால வந்தது. நீ இத என் கழுத்துல கட்டறதுக்கு முன்னாடி நான் எப்படி வேணா இருந்திருக்கலாம்.  ஆனால் இதை நீ என் கழுத்துல கட்டினதுக்கு பிறகு,  அதுக்கான மரியாதையும் கடமையும் செஞ்சாகனுமில்ல...”

“கடமையா? என்ன கடமை? என்று ராசய்யா   புரியாமல் கேட்க,

 

“அதான் மாமா... எப்பவும் புருஷன் மேல அக்கறையா இருக்கணும். புருஷனுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கிறது...  புருஷன் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது என்று சில பல எழுதாத ரூல்ஸ் இருக்கே...அதத்தான் சொன்னேன்...”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  நீ ஒன்னும் அப்படி எல்லாம் இருக்க வேண்டாம். நான் காடுமேடெல்லாம் அலையறவன். அங்கங்க கிடைக்கிறதை சாப்பிட்டுக்குவேன்.

நேரம் காலம் னு எல்லாம் எதுவும் கிடையாது. நீ எனக்காக எல்லாம்  இந்த மாதிரி காத்துக்கிட்டு இருந்தா எனக்கு புடிக்காது. உனக்கு பசிக்கிற நேரம் நீ போட்டு  சாப்பிடு...”  என்று அறிவுறுத்த, பெண்ணவளின் மனம் நெகிழ்ந்து போனது.

அவளின் நல்லதுக்காகத்தான் சொல்கிறான் என்று புரிகிறதுதான். எத்தனை  கணவன்கள் இப்படி சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டு பாப்பக்கா ஒரு முறை அவ புருஷன் வர்றதுக்கு முன்னாடியே சாப்டிடுச்சுனு அவ மாமியார் பேசின பேச்சு இன்னும் பூங்கொடியின் காதில் ஒலித்துகொண்டுதான் இருந்தது.

அப்படி இருக்க, தன் கணவன் அவளின் நலனுக்காக காத்துகொண்டு இருக்க வேண்டாம் என்று கடிந்து கொண்டதைக்கண்டு பெருமையாக இருந்தது.

“யோவ்... இந்த தாலியை சுமக்கிற எனக்கு கடமை  இருக்குனு சொன்னேன் இல்ல. அதே மாதிரி தான் இந்த தாலிய  கட்டின கணவனுக்கும் சில பொறுப்புகளும் கடமைகளும் இருக்கு.

முதலாவதா நீ எங்கே போனாலும்,  எப்படி சுத்தினாலும் உனக்குன்னு ஒருத்தி காத்துக்கிட்டு இருப்பாங்கற  நினைப்பு உனக்கு இருக்கணும்.  அவ  சாப்பிட்டாளா இல்லையா  என்ற அக்கறையும்   உன் மனசுல இருந்துகிட்டே இருக்கணும்.  

அதனால் இனிமேல் சோரு கண்ட இடம் சொர்க்கம்னு இருந்தடாத.  என்னையும் கொஞ்சம் அப்பப்ப நினச்சுக்க...” என்று இல்லற வாழ்க்கையின்  அரிச்சுவடியை விளக்கினாள் அந்த சிறியவள்.  

தன் தாய் தந்தையரை பார்த்து வளர்த்து இருந்தால்,  இதெல்லாம் அவனுக்கும்  புரிந்து இருக்கும்.  ஒற்றை பையனாக...அதுவும்  கொஞ்ச நாள் அவன் தாத்தாவின் வளர்ப்பிலும்,  அதன் பிறகு தானாகவே வளர்ந்து நின்றவன்.

அதிலும் இந்த கணவன் மனைவி இடையே இருக்கும்,   அன்பும் பாசமும், புரிதல், அன்னியோன்யம் எல்லாம்  அறிந்திருக்கவில்லை ராசய்யா.

பூங்கொடி அதை  எல்லாம் எடுத்துச்சொல்ல,  ஆச்சர்ய்த்தோடு கேட்டுக்கொண்டிருந்தவன்

சரிங்க டீச்சரம்மா... இனிமேல் அப்படியே நடந்துக்கறேன். இப்ப முதல்ல வந்து சாப்பிடுங்க... மீதி பாடத்தை அப்புறம் வச்சுக்கலாம்...” என்று கிண்டலாக சிரித்தவாறு அவளின்  கைப்பிடித்து அவளை எழுப்பி அறைக்கு வெளியே அழைத்து வந்தான் ராசய்யா..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!