என்னுயிர் கருவாச்சி-35

 


அத்தியாயம்-35

 

ற்றவர்கள் எல்லாம் முன்பே சாப்பிட்டு இருக்க,  ராசய்யாவை அமரவைத்து பரிமாறினாள் பூங்கொடி.

அவளையும் அமர சொல்ல, புருஷன் சாப்பிட்ட பிறகுதான் பொண்டாட்டி சாப்பிடனுமாம்... என்றவளை முறைத்தவன்

“அதெல்லாம் ஒரு கழுதையும் வேண்டாம். நீ என் கூடவே உட்கார்ந்து சாப்பிடு...”  என்று அவளை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தான்.  

சாப்பிட்டு முடித்ததும்   வழக்கமாக படுக்கும் கோவிலுக்கு செல்ல, செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, அனிச்சையாய் திரும்பி  பார்க்கவும்,  பூங்கொடி அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

அவளை கண்டதும் அசட்டு சிரிப்பை சிரித்தவன், பின்  செருப்பை கழட்டிவிட்டு, அப்படியே அருகில்  இருந்த குடிசையில் இருந்த பூங்கொடியின் அப்பத்தாவிடம் சென்று விட்டான்.  

அவனைக் கண்டதும் கட்டிலில் சுருண்டு  படுத்திருந்த முதியவள், எழுந்து அமர,  இவனை  பார்த்து புன்னகைத்தவர்,  

“வா... ராசா சாப்டியா? என்று கனிவுடன் கேட்டார்.  

“நான் சாப்டேன் ஆயா? நீங்க  சாப்டீங்களா? என்று அக்கறையுடன்  கேட்க,  பெரியவளுக்கோ  கண் கலங்கியது.  

வயது ஆகி விட்டாலே பூமிக்கு பாரமாக எண்ணி ஒதுக்கி வைத்து விடுவார்கள் பிள்ளைகள்.

தணிகாசலம் அப்படி இல்லை என்றாலும் எப்பயாவது அந்தப் பக்கம் எட்டிப் பார்த்து ஏதாவது வேணுமா என்று வாங்கித் தருவார்.  

மருமகளுடன் சண்டை போட்டாலும் நேரத்துக்கு சாப்பாடு கொண்டு வந்து வைத்து விடுவார் சிலம்பாயி . ஆனால் அவரின் அருகில் அமர்ந்து நாலு வார்த்தை பேச நேரம் இருந்ததில்லை.  

எப்பொழுதாவது பேரப்பிள்ளைகள் ஓடி வந்து அவரிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு ஓடிவிடுவார்கள்.   ஆர அமர உட்கார்ந்து கதை பேசியதில்லை.

ராசய்யா அவரின் அருகில் அமர்ந்து அவரை விசாரிக்க, பெரியவளுக்கு நெகிழ்ந்து போனது. உற்சாகத்துடன் அவன் கையை பிடித்துக்கொண்டு கதை பேச ஆரம்பித்தாள் அந்த பெரியவள்.  

அவரின் சிறுவயது  கதையில்  ஆரம்பித்து, கல்யாணம் ஆகி கணவனுடன் குடும்பம் நடத்திய கதையெல்லாம் ஆசை ஆசையாக பகிர்ந்து கொண்டார்.  

ராசய்யாவும் அதை எல்லாம்  ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில்  ராசய்யாவை தேடி வந்த அன்பரசன்  ராசய்யாவின் மடியில் அமர்ந்து கொள்ள,  மலர்க்கொடி கட்டிலின் இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டு கதை  கேட்டனர்.  

பிள்ளைகள் வந்ததும் பெரியவள்  தன் சொந்த கதையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு பிடித்த கதையை  சொல்ல ஆரம்பித்தார்.    

கதை கேட்கும் சுவாரசியத்தில் நேரம் போனதை  கவனிக்கவில்லை.  அனிச்சையாக நிமிர்ந்து பார்க்க, இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்றிருந்தாள் பூங்கொடி.

ராசய்யாவை எரிக்கும் பார்வை பார்த்தவள், பின் தன் அப்பத்தாவிடம் திரும்பியவள்

“ஏன் கிழவி...உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?  

எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள்தான் ஆகுது.  சின்னஞ்சிறுசுக பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கட்டும்னு என் புருஷனை உள்ள அனுப்பி வைக்காம,  நீ பாட்டுக்கு இந்த மனுஷன கூப்பிட்டு வச்சு,  நீ உன் புருஷனோட வாழ்ந்த கதையை  சொல்லிக்கிட்டு இருக்க.

இது உனக்கே நியாயமா?... “  என்று அதட்டினாள் பேத்தி...

தன் பேத்தியின் முகத்தில் இருந்த கடுப்பை  கண்டு நமட்டு சிரிப்பை சிரித்த பெரியவள்,  

“மறந்துட்டேன் டி வாயாடி. ஏதோ ஒரு ஆர்வத்துல, ரொம்ப நாளைக்கு பொறவு என் பேச்சை கேட்க ஒரு காது கிடைக்கவும், அந்தக் கால நினப்பெல்லாம் அடிச்சுகிட்டு வந்திடுச்சு...

ராசா... நீ போயா... போய் உன் பொண்டாட்டிக்கு என்ன வேணுமோ செய்... அவளை நல்லா கவனிச்சுக்கோ...” என்று நமட்டு சிரிப்பை சிரிக்க,

வாண்டுகள் இருவரும் பெரியவளின் மெலிந்த கையை பிடித்துக்கொண்டு,

“ஆயா...மாமா வேணா  போகட்டும். நீ  கதையை சொல்லு. நாங்க  கேட்கிறோம்...”  என்று சிறியவர்கள் இருவரும் ஆர்வமாக கேட்க

“டேய் பொடிசுகளா... நீங்களும்  போய் தூங்குங்க.  இத்தனை நாள் ஆயாகிட்ட கதை கேட்காமல் இன்னிக்கு என்ன திடீர்னு?  எல்லாத்தையும் ஒரே நாள்ல கேக்கணுமா?  போய் படுங்க...  நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும்...”  

என்று மிரட்டி அவர்களையும் விரட்டி விட்டவள், ராசய்யாவை பார்த்து மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு விடுவிடுவென்று தன் அறைக்கு போக, ராசய்யாவும்  சங்கடத்துடன் எழுந்து அவள்  பின்னே சென்றான்.  

வாசலை தாண்டி வீட்டுக்குள்ளே வர,  அங்கே முற்றத்தில் ஆளுக்கொரு கட்டிலில்,  தணிகாசலமும் சிலம்பாயிம்  ஏற்கனவே படுத்து உறங்கி இருந்தனர்.

இல்லை...  உறங்குவதை போல கண்ணை மூடிக்கொண்டு தன் மகளின்  ஆட்டத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தனர்.  

அவர்களை எழுப்பாதவாறு தயக்கத்துடன் மெதுவாக ராசய்யா உள்ளே செல்ல,  உடனே கதவை மூடி தாளிட்டவள், அவன் பக்கமாய் பார்த்து இடுப்பில் கையை வைத்துக்கொண்டு  முறைத்தவள்,

“யோவ்... உனக்கு கொஞ்சமாச்சும்  இங்கிதம்  தெரியுதா?  நீ பாட்டுக்கு அந்த கிழவி கூட உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க. இங்க உனக்காக ஒருத்தி காத்திருக்கிறது தெரியலையா? என்று  முறைக்க,

“நீ எதுக்கு காத்துக்கிட்டு இருக்க?  தூங்க வேண்டியது தான...”  என்று அவனும் திருப்பி முறைத்தான்.

அவளோ வெளிப்படையாகவே தன் தலையில் அடித்துக் கொண்டாள்.  

“யோவ்... எனக்கு வாயில வண்ண  வண்ணமா வந்துடும்.  தனியா படுத்து தூங்கவா நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க...”  என்று மீண்டும் முறைக்க,  

அப்பொழுதுதான் அவனுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது.

இத்தனை நாட்களாக, அவனை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு செல்பவள்.. அவனை எப்பொழுதும் கரித்து கொட்டிக்கொண்டு இருப்பவள். அவன், அவள் கழுத்தில் தாலி கட்டியபிறகு ஏனோ அவளிடம் எல்லாமே மாறி போனது மாதிரி இருந்தது.

அவளாகவே அவனிடம் ஒட்டி ஒட்டி வருவதும்,  அவனின் மனைவி என்ற உரிமையை நிலைநாட்ட முயல்வதும்  மெல்ல புரிந்தது.

“எப்படி அவளிடம் இந்த மாற்றம்? என்னை அவளுக்கு புடிச்சிருக்கா? இல்லை...நான் அவளுக்காக செய்ததுக்கு  நன்றி கடனுக்காக என் மனைவியாக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாளா?

அவள் மனதில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? “ என்று யோசித்தவாறு அவளை நேராக பார்க்க, அவன் பார்வையை எதிர்கொண்டவளுக்கோ  வெட்கமாக இருந்தது.  

அதுவரை அவனிடம் எகிறிக்கொண்டு இருந்தவள், உடனே வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.

இதுவரை எத்தனையோ முறை  நேருக்கு நேர் நின்று அவனிடம் சண்டை போட்டு இருக்கிறாள்.

அவன் உயரத்துக்கு நிமிர்ந்து அவன் கண்ணை பார்த்து நன்றாக   திட்டி இருக்கிறாள். ஆனால் இன்று முதன் முறையாக அவன் அவளை பார்க்கும் அந்த பார்வை...

இதற்கும் அவன் ஒன்றும் காதலாக பார்த்து வைக்கவில்லை. ஏனோ அவளை ஆராய்ச்சியோடதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஆனாலும் அந்த தனி அறையில், அவனின் அந்த ஆராய்ச்சி பார்வையை கூட எதிர்கொள்ள முடியாமல் வெட்கமாக இருந்தது அவளுக்கு.

ஏதோ ஒரு தைர்யத்தில் அவளாகவே சென்று அவனை அறைக்குள் அழைத்து வந்து விட்டாலும், இப்பொழுது ஏனோ அவன் முகம் பார்க்க வெட்கமாக இருந்தது பெண்ணவளுக்கு.

தன் உதட்டை கடித்துக்கொண்டு, இன்னுமாய் தலையை குனிந்து கொள்ள,

“பூவு....” என்று மெல்ல அழைத்தான் ராசய்யா...

“ஹ்ம்ம்ம்...” என்றாள் வெளிவராத குரலில்.

“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத.... வந்து .... என்னை உனக்கு   பிடிச்சிருக்கா?   என்று தடுமாற்றத்துடன் இழுத்தான் ராசய்யா.

எங்கே அவள் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்ற சிறு கலக்கம். கூடவே அவளுக்கு என்னை பிடித்துவிடக்கூடாது...நான் அவனுக்கு பொருத்தமானவன் இல்லை.

என்னை விட்டு விலக்கி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும். அதற்கு அவள் மனம் என்னிடம் வந்துவிடக்கூடாது என்ற தவிப்பு ஒரு பக்கம் என ராசய்யா அல்லாடி கொண்டிருந்தான்.

அவன்  கலங்கியதை  போல பட்டென்று சொல்லி விட்டாள்.

“ஹ்ம்ம்ம் பிடிக்கல...  எனக்கு உன்னை பிடிக்கல...” என்று சொல்ல, அதைக்கேட்ட ராசய்யாவின் ஒரு மனம் நிம்மதியுற்றாலும் இன்னொரு மனமோ வேதனை கொண்டது.

அவள் அவனிடம் பழகுவதை வைத்து ஒருவேளை அவளுக்கு என்னை பிடித்துவிட்டதா என்று ஒரு மூளையில் இருந்த நப்பாசையில் மண் விழுந்ததை போல இருந்தது.

அவன் முகம் இறுக,

“அப்புறம் எதுக்குடி என்னை சுத்தி சுத்தி வர்ற? இப்ப எதுக்கு என்னை உள்ள கூட்டிகிட்டு வந்த?” என்று எரிச்சலுடன் கேட்க,

“ஹ்ம்ம்ம்  என்ன செய்யறது? அதான் இந்த தாலிய கட்டி  எனக்கு  புருஷன்னு  ஆயிட்டியே... அதுக்கான கடமையை செய்ய வேண்டாமா?

ஒரு பொண்டாட்டியா உன் கூட குடும்பம் நடத்தி புள்ளைய பெத்து கொடுக்க வேண்டாமா? அதுக்குத்தான்....”  என்று தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு  அவனை  சீண்டினாள் அந்த சில்வண்டு.

ஓரக்கண்ணால் தன் கணவனின் முகம் பார்க்க, அவள் எதிர்பார்த்ததை போலவே  அவன் முகம் வாடி போனது.

 கை முஷ்டி இறுக, தாடை விடைக்க இறுகி நின்றவன்

“அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம். உனக்கு பிடிக்காத வாழ்க்கையை நீ ஒரு போதும் வாழ வேண்டாம்... சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்...” என்று எரிந்து விழுந்தவன், கதவை திறந்து கொண்டு வெளியில் செல்ல முயல, அவன்  கையை எட்டி பிடித்து, அவனை நிறுத்தியவள்

“ஆத்தி.. என் புருஷனுக்கு எம்புட்டு கோபம் வருது...” என்று அவன் மோவாயை இடிக்க வர, மறு கையால் அவள் கையை தட்டி விட்டவன்,

“கையை விடுடி... நான் வெளில போறேன்...” என்று அவன் கையை அவள் கையில் இருந்து உறுவிக்கொள்ள முயல, அவளோ இன்னும் இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

அவனின் திடகாத்திரமான கையையே தன் பூப்போன்ற பிஞ்சு கரத்தால் அழுந்த பற்றி அவனை விடுபடாமல் இறுக்கி பிடித்திருந்தாள்.

“பாக்கறதுக்கு ஆள் ஒட்டடகுச்சி மாதிரி இருந்தாலும், என்னா ஸ்ட்ரென்த்.... கையை இப்படி உடும்பு பிடி மாதிரி புடிச்சிருக்காளே.” என்று ஆச்சர்யத்தோடு அவளை பார்க்க,

ஹீ ஹீ ஹீ நான் தான் சொன்னேன் இல்ல. நான் பார்க்க வேணா பூ மாதிரி மென்மையா இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் நான் ஒரு புயல்..புகம்பம்.. இப்படி எதுனாலும் வச்சுக்க.

என் அனுமதி இல்லாமல் என் கையை நீ விலக்கிக்க முடியாது. சரி சொல்லு... எதுக்கு இந்த கோபம்? “ என்றாள் புன்னகைத்தவாறு.

“எனக்கு என்ன கோபம். அதெல்லாம் ஒண்ணுமில்லை...” என்று விட்டேத்தியாக சொல்லி, அந்த அறையின் சுவற்றை வெறித்து பார்த்தான்.

“யோவ்..நீ சொல்லாட்டி எனக்கு தெரியாதாக்கும்..  நான் உன்னை புடிக்கலைனு சொன்னதுக்கானே இத்தனை கோபம்.  நான் முன்ன சொன்ன மாதிரி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல மாமா...

ஏன்யா... உன்னை பிடிக்காமல் தான் அத்தனை பேர்  முன்னாடியும் கட்டுடா தாலியை னு  சொல்லி இருப்பேன் நான்?  இதை கூட புரிஞ்சிக்க தெரியாத மக்கா இருக்கியே...  என் மக்கு  புருஷா...”  என்று எக்கி அவன்  கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள் அவன் மனையாள்.

அதைக்கேட்ட  ராசய்யா அதிர்ந்து போய்

“என்னடி சொல்ற? “ என்று புரியாமல் முழிக்க,

“யோவ்...நீ சரியான ட்யூப் லைட் யா... எவ்வளவு விவரமா சொன்னாலும் மரமண்டையில புரிய மாட்டேங்குது. விலாவரியா புளி   போட்டு விளக்கினாதான் விளங்குமாக்கும்..”  என்று முறைத்தாள்.

“ஆமான் டி. உன் அளவுக்கு எனக்கு அறிவு இல்லதான். ட்யூப்லைட் தான். நீயே புரியற மாதிரி சொல்லு..” என்று சரண்டர் ஆக,

“உன்னை எனக்கு புடிச்சிருக்கு. என் மனதுக்கு பிடித்துதான் உனக்கு கழுத்த நீட்டினேன்.. அதனால் எனக்கு உன்னை பிடிக்கலையோன்ற குற்ற உணர்வு உனக்கு வேண்டாம்... என்னை பார்த்து நீ  பயந்து ஓடவும் வேண்டாம்...” என்று புன்னகைத்தாள் பூங்கொடி.

அதைக் கேட்டதும்தான் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது ராசய்யாவுக்கு.. அதுவரை அழுத்தி வந்த பெரும் பாரம் விலகி மனம் லேசானதைப் போல இருந்தது. 

அந்த நொடி அவளை அப்படியே தூக்கி தட்டாமலை சுற்ற வேண்டும் போல இருந்தது. அவன் முகம் பளிச்சென்று ஒளிர, அடுத்த கணம், அவனின் நிலை கண் முன்னே வந்தது.

அவளுக்கு அவனை புடிக்கலாம். ஆனால் பொருளாதர நிலையில் அவனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க  முடியாதே என்ற நிதர்சனம் கண் முன்னே வர, அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி துடைத்து வைத்தாற் போல மாயமாய் மறைந்து போனது.

அவனின் முகத்தில் வந்து போன மாற்றத்தை கண்டு கொண்டவள்,

“என்னாச்சு மாமா? “ என்றாள் அக்கறையுடன்.

அவன் கையை பிடித்திருந்த அவளின் கையை பிடித்து  அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன் , அவனும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு எங்கோ வெறித்தபடி பேச தொடங்கினான்.

“இங்க பாரு பூவு.... நம்ம கல்யாணம் அவசரமா நடந்திருச்சு.  இப்போதைக்கு நான் தங்க ஒரு கூரை கூட இல்லாத வெட்டிபய.  முதல்ல நமக்கு தங்கறதுக்கு சொந்தமா ஒரு வீடு வேணும்.  

அப்புறம் உனக்கு மூனு வேளையும்   சாப்பாடு போடணும்...” என்று அவன் முடிக்கும் முன்னே

“ஏன் திடீர்னு இந்த பேச்சு? என்னாச்சு மாமா? எங்க வீட்ல யாராவது ஏதாவது  சொன்னாங்களா? என்றாள் அவனை ஆராய்ந்து  பார்த்தவாறு.  

“சே..சே... அதெல்லாம் இல்ல. என்ன போய் யார் என்ன சொல்லப்போறா?  எனக்கே குற்ற உணர்வா  இருக்கு.  என்னதான் இருந்தாலும் இது இப்ப என்னுடைய மாமனார் வீடு.  இங்க எப்படி தினமும் தங்கறது? 

“ஓஹோ... அப்ப கோவில் திண்ணையில காத்து வாங்க படுத்து கிடக்கறதுக்கு உங்க தன்மானம் ஒன்னும் சொல்லல...ஆனால் இங்க தங்க, மாமனார் வீடு ன்ற தன்மானம்  தலைதூக்குதாக்கும்? “ என்று முறைக்க,  

“அது அப்படியில்லை மா...” என்று சமாதானம் சொல்ல வர,  

“ஒன்னும் வேண்டாம்...நீ ஒரு சமாதானமும் சொல்ல வேண்டாம். அப்புறம் இது ஒன்னும் உன் மாமனார் வீடு இல்ல. இந்த வீட்டுக்காக நீங்க லட்ச ரூபா தூக்கி கொடுத்திருக்கிங்க.

சொல்லப்போனா இப்ப இது உங்க வீடு.  இங்கே தங்க என்ன யோசனை? “ என்று பொரிய,  உடனே அவள் வாயை பொத்தினான் ராசய்யா.

“அப்படி எல்லாம்  சொல்லாத டி.  மாமா அத்தைக்கு கேட்டுட போகுது....” என்று மெதுவாக குரலை தாழ்த்தி சொன்னான்.

இவள் சொல்வதைக் கேட்டால் அவர்களுக்கு மனசு கஷ்டபடுமே என்று கஷ்டமாக இருந்தது ராசய்யாவுக்கு.

தன் வாயை மூடியிருந்த கையை  விலக்கி விட்டவள்,   

“கேட்கட்டும்...நல்லாவே கேட்கட்டும். இந்த வீட்டை தக்க வச்சுக்கத்தானே  என்னை வித்தாங்க...”  என்று சுவற்றை வெறித்தபடி கசப்புடன் சொல்ல, அதைக்கேட்டவன் முகம் சுருங்கியது.

“எத்தனை தரம்  சொல்றது கருவாச்சி?  உன்னை வித்தாங்கனு சொல்லி  உன்னையும், என்னையும்  கேவலப்படுத்தாத . இன்னொருதரம் அப்படி சொன்ன, சொன்ன வாயிலயே நாலு போடுவேன்...” என்று முறைத்தான்.

“சரி சரி சொல்லல...”  என்று சமாதான கொடியை பறக்க விட்டாள் பெண்.

“எதுனாலும் நமக்குனு ஒரு கூரை வேணும். சரி.. அத நான் பாத்துக்கிறேன்.. நீ இப்ப படுத்து தூங்கு.. இன்னைக்கு நான் கீழ படுத்துக்கிறேன்...” என்று கட்டிலில் இருந்த போர்வையை எடுத்தான்.

“நிங்க எதுக்கு கீழ படுக்கணும்? “ என்றாள் முறைத்தபடி

“எனக்கு கட்டாந்தரையில் படுத்து பழகிடுச்சு...”

“அப்ப நான் மட்டும் என்ன தினமும்  பஞ்சு மெத்தையிலயா  புரண்டு படுத்து தூங்கினேன்... நானும்  கீழ படுத்து தூங்கறவ தான். நானே கீழ படுத்துக்கிறேன்...”  

“அதெல்லாம் வேண்டாம்... நீ கட்டில்லயே படுத்துக்க...”  என்று மறுத்தான் ராசய்யா.

சரிய்யா... உனக்கும் வேண்டாம்... எனக்கும் வேண்டாம்... வா.. ரெண்டு பேருமே   கட்டில்ல படுத்துக்கலாம்...” என்று மையலுடன் நோக்கி, அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க, அவள் பார்வையில் இருந்த அவனுக்கான அழைப்பை கண்டு தடுமாறி போனான் ராசய்யா.

அடுத்த கணம் தன்னை சுதாரித்துக்கொண்டவன்

“இல்ல.. அதெல்லாம் சரிவராது...” என்று அவசரமாக மறுத்தான்.

“என்ன சரிவராது? “ என்று கண்கள் இடுங்க கேட்க,

“அது வந்து....நாம கொஞ்சம் செட்டில் ஆகிறவரைக்கும் தள்ளியே இருக்கலாம்...”  என்றான் அவசரமாக.

“தள்ளி இருக்கறதுனா? ஓ... நீ அதச்சொல்றியா?  ஹா ஹா ஹா அதான்   நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சே...இன்னும் எதுக்காக தள்ளி இருக்கணுமாம்? “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்

கூடவே  எல்லாம் என்பதை அழுத்திச் சொல்லி சிரிக்க,  ராசய்யா மீண்டும் திடுக்கிட்டு போனான்.

“நெஜமாதான் சொல்றியா டி?  நான் கூட நீ ஏதோ விளையாட்டுக்குத்தான் சொல்றேன்னு நினைச்சேன்...” என்று அதிர்ச்சியோடு விசாரிக்க,  

“நெஜமாதான் மாமா... செத்துப் போன எங்க தாத்தா மேல சத்தியம்...” என்று கண்களை உருட்டினாள் அப்பாவியாக உள்ளுக்குள் சிரித்தவாறு.  

தன் தாடையை தவியபடி  யோசித்தவன், “அது எப்படி? “ என்று சத்தமாக யோசித்தான்.

“அது எப்படினு நானே உனக்கு விளக்கமா சொல்றேன் மாமா... இப்படி வந்து உட்கார்...” என்று அவனை கை பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவள். அவனை ஒட்டி நெருங்கி அமர்ந்து கொண்டு நேற்றைய சம்பவத்தை விளக்க ஆரம்பித்தாள்.  

“அது எப்படினா?  நீங்க கட்டில்ல படுத்து தூங்குனீங்களா?  நான் இங்க கீழ படுத்து இருந்தேனா. கொஞ்ச நேரத்தில் , நீங்க  தூக்கத்திலேயே எழுந்து வந்து திடீர்னு என் பக்கத்துல படுத்திட்டிங்க.  

இந்த கையில்ல கை... இதை எடுத்து என் முகத்தை இப்படி வருடினிங்க...”  என்று தன் கணவனின் கையை எடுத்து அவளின்  முகத்தில் வைத்து அவளின் முக வடிவை அவன் கையால் அவளாகவே அளக்க,  அந்த தீண்டலில் உள்ளுக்குள் சிலிர்த்து போனான்  ராசய்யா.  

உடனே தன் கையை  வெடுக்கென்று இழுத்துக்  கொண்டவன்

“ஏய்...  நீ தொடாமலேயே சொல்லு டி... “  என்று முறைக்க, அவளும் தன் வெண் பற்கள் தெரிய சிரித்தவள்,  மீண்டும் அவன் கையை எடுத்து

“அப்புறம் இந்த கையால என் கன்னத்தை இப்படி தடவுனிங்க.... அப்புறம் என் உதட்டுல வச்சு இப்படி வருடினிங்க...”  என்று செயல்முறை விளக்கத்துடன் விவரிக்க, அந்த காளையவனுக்கோ உள்ளுக்குள் ஏதேதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

மன்மதன் அவன் மீது தன் அம்பை எரிய சரியாக குறிபார்த்துக்கொண்டு, நமட்டு சிரிப்புடன் காத்திருக்க, அவனோ அதற்கு இடம் கொடாமல், கொஞ்சம்  அவளை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டான்.

அதைக்கண்டு பெண்ணவள் இன்னுமாய் உள்ளுக்குள் பொங்கி சிரித்தாலும், அதை வெளிக்காட்டாமல்,

“மாமா... இப்படி தள்ளி உட்கார்ந்தா நான்  எப்படி மெதுவா சொல்றதாம்? எனக்கென்னப்பா.. நான் வேகமா கத்தி சொல்லுவேன்.. அப்புறம் அது வெளில படுத்திருக்கிறவங்களுக்கும் கேட்டு வைக்கும்.

நாலு சுவற்றுக்குள்ள நமக்கு  நடந்த விஷயத்தை  எல்லாருக்கும் நானே மைக் போட்டு சொன்ன மாதிரி இருக்கும். பரவாயில்லையா? “ என்று தலை சரித்து குறும்பாக முறைத்தபடி கேட்டாள்.  

தன் கண்களை சுருக்கி முகத்தை சுளித்து,  மூக்கை மேலே இழுத்தவாறு சிறுபிள்ளையாய் சிணுங்கும் அவளை காண, அதுவரை  அமைதியாய் படுத்திருந்த அவனின் ஆண்மை வேகமாக துள்ளி எழுந்தது.

தன் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் தன்னவளை இறுக்கி கட்டியணைத்துக் கொண்டு, அவள் விளக்கியதை எல்லாம் செய்ய அவனின் கரங்கள்  பரபரத்தன.    

ஆனாலும் நல்ல பையனாக, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், பரபரக்கும்  தன் கரங்களை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு

“சரி சரி...இந்த மாதிரி  கதை, திரைக்கதை, வசனம் எதுவும் சொல்லாம,  சுருக்கமா என்ன நடந்துச்சுனு  சொல்லு...” என்று செல்லமாக முறைக்க,   

பெண்ணவளோ பொங்கி வந்த சிரிப்பை தன் இதழ்கடை  ஓரம் அடக்கிக் கொண்டு, தன்  உதட்டையும் பற்களால் அழுந்த கடித்து  தன் சிரிப்பை   அடக்கியவள்,  

“அப்புறம்...  உங்க கை என் கழுத்துக்கு கீழ வந்துச்சா... “   இன்று குறும்பாக இழுக்க, உடனே பதறி

“வேண்டாம் டி. நீ  விலாவரியாக விளக்க வேண்டாம். நான் கேட மாதிரி  முன்கதை சுருக்கம் மாதிரி சுருக்கி மட்டும் சொல்லு...” என்று படபடத்தான்.  

மீண்டும் தன்னுள்ளே சிரித்துக் கொண்டவள்

“ஹ்ம்ம் உங்க கை என் மீது எல்லா இடத்துலயும் அத்துமீறி விளையாண்ட பிறகு,  என் கன்னத்தில் செல்லமா  முத்தம் கொடுத்தீங்க.

ஒன்னு, இரண்டு, மூனு னு ஆரம்பிச்சு, நிக்காம அதிரடியா முத்தமழையா பொழிஞ்சிட்டிங்க.  அப்புறம் அப்படியே என் மேல கவிழ்ந்து....”  என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் வாயை தன் கையால் அவசரமாக  பொத்தினான் ராசய்யா.  

“அம்மா..தாயே...   இதுக்கு மேல நீ விளக்கவே வேண்டாம்...”  என்று அவசரமாக அவள் வாயை அடைக்க,  மூடியிருந்த அவன் கரங்களை கஷ்ட பட்டு விலக்கிவிட்டு  மீண்டும் தொடர,  அவனோ  விடாமல் அவள் வாயை பொத்திக்  கொண்டான்.

சற்று நேரம் அவன் கையை விலக்க, போராடியவள்,  அது முடியாமல் போக, அவன் கைக்கு அழுத்தமாக முத்தமிட்டாள்.

அவள் கஷ்டபட்டு விலக்கிய பொழுது விலகாத அவன் கரம் ,  பெண்ணவளின் அழுத்தமான முத்தத்தில், அது தந்த ஷாக்கில், தன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.  

அதை கண்டு,

“ஹா ஹா ஹா என்று மலர்ந்து சிரித்தாள் பூங்கொடி.  

கொஞ்ச நாட்களாகவே இறுகிக் கிடந்த அவளின் முகத்தில் மலர்ந்திருந்த அந்த சிரிப்பை  கண்டதும் ஆணவன் மனம் நிறைந்து போனது.

ஒரு கணம்  தன்னவளையே இமைக்க மறந்து ரசித்து பார்த்து  இருந்தான்  ராசய்யா.

சிரித்து முடித்தவள்.

“மாமா...  உன்னை எப்படி மடக்கினேன்  பாத்தியா? பூங்கொடினா கொக்கா? “ என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டவள்,

“சரி... அதுக்கப்புறம் என்ன நடந்தது னு சொல்றேன் கேளு...”  என்று  குறும்பாக கண் சிமிட்ட, அதில் திடுக்கிட்டவன்,  

“வேணாம் டி...இதுவரைக்கும் நீ சொன்னதே போதும். இதுக்கு மேல  நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்...”    என்று   தடுக்க முயல,

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம்  செல்லாது.  ஒரு கதையை ஆரம்பித்தால்,  அதை பாதியில் நிறுத்தக்கூடாது.

விளையாட்டுப் போட்டியில் கூட விளையாடும் பொழுது அந்த ஆட்டத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும்னுதான் சொல்லி இருக்காங்க.  

அதனால் நான் மீதியையும் சொல்லித்தான் தீருவேன்...” என்று அடம்பிடிக்க, அவனோ சங்கோஜமாக வெட்கபட்டு நெளிந்தான்.

“ஹே... வேணாம் டி.... விட்டுடேன்...” என்று கெஞ்ச, அவளோ அதை காதில் போட்டு கொள்ளாமல் அவனை கொஞ்ச நேரம் கெஞ்ச வைத்தவள்,

“அப்புறம் என்ன நடந்ததுனா......”  என்று இழுத்து, ராசய்யாவுக்கு பிபி ஏற வைத்தவள்,

“ஹீ ஹீ ஹீ எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும்  ஃபர்ஸ்ட் நைட்ல என்ன நடக்குமோ அதுதான் நடந்தது...”  என்று வராத வெட்கத்தை வந்ததாய் வரவழைத்து, வெட்கப்பட, ராசய்யா வோ  மீண்டும் ஒரு முறை அதிர்ந்து போனான்.  

அவனுக்கு எப்படி யோசித்தாலும் அவள் சொன்னமாதிரி ஒரு நிகழ்வு கூட நினைவில்லை.  

“அப்புறம் எப்படி?  தூக்கத்தில் என்றால் கூட இவ்வளவு பெரிய மேட்டர்...  அது எப்படி எனக்கு நினைவு இல்லாமல் போகும்...” என்று இன்னும் தீவிரமாய்   யோசித்து பார்த்தான்.  

“இல்லடி...  சுத்தமா எனக்கு எதுவுமே நினைப்புல இல்லை. கண்டிப்பா அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்க மாட்டேன்.  

அந்த குமரேசன் நாய் பாரின் சரக்கை  ஊத்தி கொடுத்த பொழுது கூட இந்த மாதிரி தப்பை செய்திருக்க மாட்டேன். எனக்கு நினைப்பு இல்லை...” என்று பாவமாக சொல்ல,  

“சரி சரி... புலம்பாத மாமா... நேத்து நைட் நடந்தது நினப்பு  இல்லாமல் இருந்துட்டு போகட்டும். இப்பதான்  தெளிவா இருக்க இல்ல. நேற்று ஞாபகம் இல்லாததை இப்பொழுது ஞாபகம் படுத்திக்கலாம்.  

வீணா நான் டெமொ  எல்லாம் காமிக்க வேண்டாம். ரியல் காட்சியையே இப்ப அரங்கேற்றலாமே...”  என்று தலை சரித்து மையலுடன் அவனை பார்க்க,  அவனுக்கோ உள்ளமெல்லாம் துள்ளிக் குதித்தது.  

அவள் சொன்ன நிகழ்வுகளை  நிகழ்த்திக் காட்ட   அவனுக்கும் ஆசைதான்.  

ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ளவும், அவளை அள்ளிக்கொள்ளவும்  ஏதோ ஒன்று தடையாக இருந்தது. 

அது என்னவென்று யோசிக்க, என்ன அது என்று புரியவில்லை.

பேச்சு வாக்கில், தன் தோளின் மீது சரிந்திருந்தவளை மெல்ல விலக்கியவன்,

“பூங்கொடி... நீ சொன்ன மாதிரி எனக்கு தெரியாமல் ஏதோ நடந்திருந்தா , அது  நடந்ததாகவே இருந்துட்டு போகட்டும்.  இனிமேல் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.  அந்த மாதிரி எதுவும் நடந்துக்க மாட்டேன்.  

நாம கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம். முதலில் நாம ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும்.  உன்னை கண்கலங்காமல் பார்த்துக்குவேன்   என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் மற்றதெல்லாம்.  

அதோட உனக்கும் இந்த திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் அவகாசம் வேண்டும். அது வரைக்கும் நீ என்னை விட்டு தள்ளியே இரு...”  என்றவன், எழுந்து பாயை எடுத்து  தரையில் விரிக்க, பெண்ணவளின்  கண்கள் ஒரு கணம் பணித்தது.

திருமணமான முதல் நாளே புதுசாக அந்த பந்தத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் புது மனைவியின் விருப்பத்தை, அவளுக்கு பிடித்து    இருக்கிறதா என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல் அவளை தாம்பத்தியத்திற்கு கட்டாயப்படுத்தும் எத்தனையோ கணவன்மார்களின் கதைகளை கேட்டு இருக்கிறாள்.  

அவள் வயதை ஒத்த தோழிகள் வேதனையோடு தங்கள் முதல் இரவு சம்பவத்தை பகிர்ந்துகொண்டது  நினைவு வந்தது.  

அப்படி இருக்க,  அவளே  அவனை நேரடியாக தாம்பத்தியத்திற்கு அழைத்தும்,  அவனாக தன் உரிமையை நிலைநாட்ட கொஞ்ச நாள் வேண்டும் என்றும்,  அவள் மனதளவில் அந்த உறவுக்கு தயாராக அவகாசம் கொடுத்து நிற்கும் தன் கணவனை எண்ணி பெருமையாக இருந்தது.

இதற்கும் அவன் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் அடுத்தவர்களின் மனதை அறிய...  அதுவும் அவளின் மனதை அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.  

திருமண மண்டபத்தில்,   அவள் சார்பாக அவன் பேசியது எல்லாம் அவள் மனதை அவன் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறான் என்று  காட்டிக் கொடுத்து விட்டது.  

அப்படிப்பட்ட ஒருவனை கணவனாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தனக்குள்ளே பூரித்துக் கொண்டாள்  பெண்ணவள்

அதே நேரம் அவன் தரையில் படுக்க முயல,  விரிக்க இருந்த பாயை  பிடுங்கிக் கொண்டவள் அவனை முறைத்தாள்.

“இப்ப எதுக்குடி முறைக்கிற? “ என்று  அவனும் முறைக்க,  

“நேத்து மாதிரி நீயே  கட்டில்ல படுத்துக்குங்க.  நான் கீழே படுத்துக்கிறேன்...”

“ஏன்?  நான் வழக்கமாக தரையிலதான்  படுத்துக்குவேன்.  எனக்கு இதெல்லாம் பழகினது...”

“அதுக்கில்ல மாமா... நான் பாட்டுக்கு கட்டில்ல படுத்தா,  நேத்து மாதிரி நீ எழுந்து வந்து, நேத்து விட்ட ஆட்டத்தை தொடர்ந்தா?

கட்டில்ல  படுத்தா வெளில சத்தம் கேட்கும்.  கீழன யாருக்கும் எந்த சத்தமும் கேட்காது இல்ல... அதேன்...” என்று காலால் தரையில் கோலமிட்டு, கண் சிமிட்டி வெட்கத்துடன்  சிரிக்க,  அவளை முறைத்துப் பார்த்தான்  ராசய்யா.  

இன்னைக்கு அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது...”  என்றான் இன்னுமாய் அவளை  முறைத்தவாறு

“அது எப்படி?  அவ்வளவு கேரண்டியா சொல்றீங்க? என்று தலை சரித்து குறும்பாக கேட்க,  

“எல்லாம் இந்த ராசய்யா மேல இருக்கிற நம்பிக்கையினால் தான் டி.  நேத்து வேணா  ஏதோ தெரியாம நடந்து இருக்கலாம். இன்னுமே அதை என்னால் நம்ப முடியவில்லை.  இன்னைக்கு கண்டிப்பா அப்படி நடக்காது...”  என்றான் தீர்க்கமாக.

“ஓஹோ... அப்படி நடந்துட்டா? என்று தன் புருவங்களை உயர்த்தி சவால் விட்டாள் பெண்.  

“அப்படி எல்லாம் நடக்காது...”  என்றான் மீண்டும் உறுதியாக.

“நடந்துட்டா? “ என்று அவளும் விடாமல் சவால் விட,

“ஹ்ம்ம் அப்படி  நடந்துட்டா என்ன செய்ய?  என்று தன்  தாடையை தடவியபடி யோசித்தவன்

“சரி டி...  என் பேரை மாத்தி  வச்சிக்கிறேன்...” என்றான் மிடுக்குடன் ராசய்யா...

“எப்புடி? யாய்சரா னா? “ என்று கிளுக்கி சிரித்தாள் பெண்ணவள்.

“யாய்சரா வா? அப்படீனா?

“அதான் யா... ராசய்யா ன்ற பேரை மாத்தி சொன்னா யாய்சரா னுதானே வரும். அப்படியா வச்சுக்க போற? .

ஐய...  அப்படியே உன் பேரை மாத்தி வச்சிக்கிறதனால  எனக்கு என்ன லாபம்? ராசய்யான்ற பேரே மோசம். அதுல யாய்சரா இன்னும் படு மோசம்..” என்று உதட்டை சுளித்து பழிப்பு காட்டினாள்.  

“சரிடி. அப்ப நீயே சொல்லு...”  என்று இறங்கி வந்தான்.

“ஹீ ஹீ ஹீ பெருசா  ஒன்னுமில்ல. என்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போகணும்....”  என்றாள் கண்கள் பளபளக்க.  

“சரி டி... அவ்வளவுதான...  நானும் உன் சவாலுக்கு  ஒத்துக்கறேன். அதே மாதிரி இந்த சவாலில் தோத்துட்டா நீ என்ன செய்வ? “ என்று  அவளைப் போலவே புருவங்களை உயர்த்தினான்.

“ஹ்ம்ம்ம் தோத்துட்டேனா?  என்ன செய்ய?  என்று அவளும் அவனைப் போலவே தாடையை தடவியபடி    யோசிக்க,  

“இரு..இரு நான் சொல்றேன். நீ சவால் விட்ட மாதிரி  எதுவும் நடக்கலனா,  நான் சொல்றதை எல்லாம் நீ செய்யணும்...”  குறும்பாக சிரித்தான்.

“ப்பூ அம்புட்டு தானா... டீல்.. இந்த சவாலுக்கு நான் ஒத்துக்கறேன்...” என்று தன்   கட்டைவிரலை உயர்த்திக் காட்டியவள், பின்  தன் கையிலிருந்த பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.  

“அப்பா...புள்ளையாரப்பா...! ஆஞ்சநேயா..! சாமி அய்யனாரே...ஊரை காக்கும் கருப்பண்ணசாமி... இந்த கருவாட்சி சொல்றமாதிரி நேத்து  கண்டிப்பா நான் அப்படி எதுவும் நடந்திருக்க மாட்டேன்.

அப்படியே என்னை மீறி ஏதாவது ஏடாகூடமா நடந்திருந்தாலும்,  இன்னைக்கு தப்பு தண்டா எதுவும் நடக்கக்கூடாது. நீங்கதான் என் கற்பை காப்பாத்தனும். என் கூட துணைக்கு வாங்க...”

என்று   எல்லா பிரம்மச்சாரிய கடவுள்களையும் வணங்கிவிட்டு கட்டிலில் இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டான்  ராசய்யா.

அவன்  வேண்டுதல் பலிக்குமா?  காலையில் பார்க்கலாம்..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!