என்னுயிர் கருவாச்சி-37
அத்தியாயம்-37
வண்டியில் இருந்து இறங்கி, கோமதியை
பார்க்க ஓடியவள், அவளுடன் பேசிவிட்டு, கோமதி சென்ற பிறகும் திரும்பி வராததால், தன் வண்டியை திருப்பி கொண்டு அவள் அருகில் வந்தான்
ராசய்யா.
“ஏன் டி ? இங்கயே நிக்கிற? அதான் கோமதி போய்ட்டா இல்ல. வண்டியில ஏறு. போகலாம்...” என்று அவளை இரு சக்கர வாகனத்தில் ஏறச் சொன்னான்.
அவளோ
இயந்திரத்தனமாக வண்டியில் ஏறி அமர்ந்தவள், முன்பு போல ராசய்யா வின் மீது
ஒட்டிக்கொண்டு அமராமல் தள்ளியே அமர்ந்து கொண்டாள்.
அவள்
முகத்திலும் முன்பு இருந்த மகிழ்ச்சியும், குறும்பும் மறைந்து ஒரு குற்றவுணர்வு
நிரம்பி வழிந்ததை போல இருந்தது.
கூடவே ஏதோ உள்ளுக்குள்
சிந்தித்தவளாக எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
அவளிடம்
வந்திருந்த மாற்றம் ராசய்யாவுக்கும் தெரிந்தது.
அவன் மீது ஒட்டி
உரசி வந்தவள்... இப்பொழுது விலகி அமர்ந்ததை
கண்டு அவனுக்கும் யோசனையாக இருக்க,
“என்னாச்சுடி? ஏன் ஒரு மாதிரியா இருக்க? “ என்று அக்கறையுடன் வினவினான்.
“ஒன்னும் இல்ல...”
என்று தன் தலையை இரு பக்கமும் ஆட்டினாள்.
“ஏன் டி. உன்னை பத்தி எனக்கு தெரியாதா? உன்
மூஞ்சி உன் மனசுல இருக்கிறத அப்படியே காட்டி கொடுத்துடும். அந்த கோமதி புள்ளைக்கிட்ட
என்ன பேசின?
அதற்குப் பிறகு தான்
உன் மூஞ்சி வாடி போச்சு. என்ன ஆச்சுன்னு
சொல்லு டி...” என்று அதட்டலுடன்
விசாரித்தான்.
அதுவரை ஏதோ
சிந்தனையில் இருந்தவள்
“மாமா நான் ஒன்னு
கேட்பேன். மறைக்காம சொல்லணும்... “ என்று இழுத்தாள்.
“ஒன்னு என்ன
ஒன்பதே கேளு... உனக்கு இல்லாததா... ” என்று சிரித்தான் ராசய்யா.
மற்ற நேரமாக இருந்திருந்தால், அவனின் சிரிப்பை ரசித்து இருப்பாள்.
கூடவே அவனுக்கு திருப்பி நக்கலாக ஏதாவது சொல்லி இருப்பாள். இப்பொழுதோ அவள் மனதில் சிந்தனைகள் குழப்பிக் கொண்டிருக்க, எங்கோ வெறித்து பார்த்த படி, மெல்ல இதழ் திறந்து
“மாமா...
வந்து...நீங்க கோமதியை விரும்புறிங்களா? அவளை கட்டிக்கிறதா இருந்தீங்களா? “ என்று தட்டு தடுமாறி தயக்கத்துடன்
கேட்டாள் பெண்.
அவள் கேட்டு முடிப்பதற்குள் தனக்குள்ளே பலமுறை செத்து
மடிந்தாள் பூங்கொடி.
அவள் பார்வையில்
ஒரு எதிர்பார்ப்பு... அதெல்லாம் இல்லை
என்று சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு. அவள் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
வண்டியை
ஓட்டியவாறே பக்கவாட்டில் திரும்பி அவளை
ஆழ்ந்து பார்த்தவன்
“ஏன் டி கேக்கற? “ என்றான் ராசய்யா.
அவள்
கேட்டதுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், அவளிடம் மறு கேள்வி கேட்க, திக்கென்றது பெண்ணவளுக்கு.
உடனே அப்படி எல்லாம்
இல்ல டி என்று சொல்லாமல், மறு கேள்வி கேட்டதும், திருமணமாகி இந்த இரண்டு நாளில் அவளே
அவனை நாடி வந்தும், அவளை தொடாமல் ஒதுங்கி சென்றதும் இப்பொழுது
நினைவு வர, பெண்ணவளின் மனம் நொடியில் என்னென்னவோ
எண்ணி கலங்கியது.
“அப்படி என்றால்
கோமதி சொன்னது உண்மைதானா? இவன் அவளை விரும்பி இருக்கிறானோ? அதனால் தான் என்னை கட்டிக்க
ஆரம்பத்தில் மறுத்துவிட்டான். கோமதி
சொன்னது போல் நான்தான் அவனை கட்டாயபடுத்தி என் கழுத்தில் தாலியை கட்ட வச்சேனா?
கோமதிக்கு போக
வேண்டிய தாலியை நான் பறித்துக் கொண்டேனா? “ என்று பல ஆயிரம் கேள்விகள் அவளின்
இதயத்தை குத்தி கிழித்தது.
அதை... அவளின்
வேதனையை தாங்க முடியாமல் அவளின் கண்களில்
இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது.
அவளின் முகத்தை பின்பக்க
கண்ணாடியின் வழியாக பார்த்தவனுக்கு தூக்கிவாரிப்போட, அதிர்ச்சியில் உடனே வண்டியை ஓரமாக நிறுத்தியவன், திரும்பி பார்த்து
“என்ன ஆச்சுடி? ஏன் உன் கண்ணு கலங்கியிருக்கு? எதுக்கு இந்த கண்ணீர்? “ என்று பதட்டத்துடன் விசாரித்தான்.
அவளோ பதில்
சொல்லாமல், புடவை முந்தானையை எடுத்து வாயில் வைத்துப் பொத்திக் கொண்டு
அழுகையை அடக்க முயன்றாள்.
அதில் இன்னுமாய்
கலவரமானவன்,
“ஏய் கருவாச்சி...
கேக்கறேன் இல்ல.. பதில் சொல்லுடி. எதுக்கு
இப்படி அழுவுற? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? சொல்லுடி...” என்று அதட்ட, அவளோ பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் கேவி
அழுதாள்.
அதைக்கண்டவன்
மனம் இன்னும் பதறியது.
வண்டியை சைட்
ஸ்டேன்ட் போட்டு நிறுத்தியவன், கீழ இறங்கி அவள் அருகில் வந்தவன், அவளின் தோளைத் தொட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக்
கொண்டவன், அவள் தலையை மெல்ல வருட, அவளோ அவன் மார்பில் முகத்தை புதைத்தவாறு
இன்னும் கேவி அழுதாள்.
அதில் இன்னுமாய்
தவித்து போனவன்,
“எதுக்கு டி இப்ப
திடீர்னு அழுவுற? என்னை பிடிக்கலையா? என்கூட வண்டில வர்றது கஷ்டமா இருக்கா? அதுக்குத்தான் இப்படி அழுவுறியா? “ என்று அடிபட்டவனாய் விசாரிக்க,
அடுத்த கணம் அவன்
மார்பில் இருந்து விலுக்கென்று தலையை நிமிர்த்தியவள், தன் அழுகையை நிறுத்திக்கொண்டு அவனை
முறைத்தவள்,
“நான் சொன்னேனா... உன்னை புடிக்கலைன்னு நான் சொன்னேனா...” முறைத்தாள் அவன் மனையாள்.
“பின்ன எதுக்குடி
அழுவுற?” மீண்டும் அக்கறையோடு அவள் அழுவதற்கான
காரணத்தை விசாரிக்க, அப்பொழுதுதான் அவள் அழுவதற்கான
காரணம் நினைவு வர, தற்காலிமாக நின்றிருந்த அவளின் கண்ணீர்
மீண்டும் பெருகியது.
மீண்டும் வாயில்
புடவை முந்தானையை வைத்துக்கொண்டு அவன் மார்பில் புதைந்து அழ, இன்னும் அதிர்ந்தவன்
“ஹே கருவாச்சி..
ஒலுங்கா சொல்லிட்டு அழு... வயிறு எதும் வலிக்குதா? கால் எதுவும் அடிபட்டுடுச்சா...” என்று நொடியில் அவளின் உடலை முழுவதும்
ஆராய்ந்தான்.
அவளோ இல்லை
என்றவாறு அவள் தலையை உருட்ட,
“பின்ன
எதுக்குடி இந்த அழுகையும், கண்ணீரும்?” கோபத்தில் அதட்டினான்.
அதற்குள் ஓரளவுக்கு
தன்னை சமாளித்துக் கொண்டவள்
“சாரி மாமா... உன்னையும்
கோமதியையும் பிரிச்சிட்டேன்...” என்று
மீண்டும் கண்ணீர் உகுக்க, அவள் சொன்னதை கேட்டு குழம்பியவன்
“என்ன டி உளர்ற? “ என்றான் இடுங்கிய கண்களுடன்.
“ஆமா மாமா... நீங்க கோமதியை விரும்புனிங்க தானே...அவளைத்தானே
கட்டிக்க்கிறதா இருந்திங்க. இடையில் நான் வந்து உங்களை கட்டாயபடுத்தி என் கழுத்துல
தாலி கட்ட வச்ச பாவி ஆயிட்டேன்...” என்று சத்தமாக ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க,
“என்னடி சொன்ன? “ என்று நரநரவென்று பல்லை கடித்தவன் கை அவள் கன்னத்தை நோக்கி இறங்கியிருந்தது.
அவள் கன்னத்தை
தொடும் கடைசி நொடியில், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், வேகமாக கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு
“சை.... என்ன
பேசறது... எதுல விளையாடறது னு உனக்கு
விவஷ்தையே இல்லையா? என்னைப்போய், கல்யாணம் ஆகாத அந்த புள்ளை கூட கோர்த்து
விடற?
யாராவது
கேட்டால் அந்த புள்ள எதிர்காலம் என்னாவது? உனக்கு கொஞ்சமாச்சும் மண்டையில மசாலா இருக்கா...” என்று வார்த்தையை கடித்து
துப்பினான்.
அவன் திட்டியது
எல்லாம் அவள் மனதில் ஒட்டவில்லை...
“மாமா... அப்ப
நீங்க கோமதியை விரும்பலையா? “ என்று கண்கள் பளபளக்க கேட்க,
“அடிச்சனா பல்லு
முப்பத்திரண்டும் உன் கையில வந்திடும். தத்து பித்துனு ஏதாவது உளாறாம இரு...” என்று தன் ஆத்திரத்தை
கட்டுப்படுத்தி கை முஷ்டியை இறுக்கியவாறு அவளை அதட்ட,
அதைக் கண்டதும்
தான் மீண்டும் ஒரு முறை போன உயிர் திரும்பி வந்ததை போல இருந்தது. பெண்ணவளுக்கு.
முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் ஒளிர, கண்கள் பளபளக்க, முகம் மகிழ்ச்சியில் விகாசிக்க,
“நிஜமா... நீங்க அவளை விரும்பலையா மாமா...” என்று மகிழ்ச்சியுடன்
கேட்க,
“அடச்சீ... அந்தப்
புள்ள எனக்கு தங்கச்சி மாதிரி டி. திடீர்னு எதுக்கு அவளை என்னோடு சேத்து வச்ச
பேசுற?” என்று கண்களில் அனல் பறக்க, அவளை முறைத்தபடி கேட்க
“அது வந்து...
கோமதி உங்களை விரும்பினா மாமா...
உங்களைத்தான் கட்டிக்கணும்னு மனசுல
நினைச்சு இருந்தாளாம். இப்போ நான் உங்களை கட்டிக்கவும் என் மேல கோபமா இருக்கா.
என்னவோ அவ
புருஷனை நான் தள்ளிட்டு போயிட்ட மாதிரி என்னை கேவலமா பேசிட்டா...” என்றாள் வேதனையுடன்.
“அடக்கடவுளே..! இதென்ன கூத்தா இருக்கு? அதுதான் அந்த புள்ள அப்ப அப்ப என்னை ஒரு மாதிரி பாத்து வச்சுதா?
நான் கூட ரெண்டு
மூணு தடவ கூப்பிட்டு இப்படி எல்லாம் யாரையும் பாக்க கூடாதுனு சொல்லி எச்சரிச்சு அனுப்பினேன். அப்பக்கூட எதுவும் சொல்லலையே...” என்று யோசனையுடன் தாடையை தடவ
“ஓஹோ...அப்ப அவ
காதலை சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பிங்களாம்?” என்றாள் இப்பொழுது அவனை செல்லமாக முறைத்தபடி.
“ஹ்ம்ம்ம் என்ன
செய்திருப்பேன்? “ என்று மீண்டும் தாடையை தடவியபடி
யோசித்தவன்,
“நேரா அவ அப்பன்
கிட்ட போய் பொண்ணு கேட்டு, அடுத்த முகூர்த்தத்திலேயே தாலி கட்டி, குடும்பம் நடத்தி இருப்பேன்...
இந்நேரம் எனக்கு
ஒரு குழந்தையும் பிறந்திருக்கும்...” அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை சீண்ட, பூங்கொடிக்கோ கோபம் பொங்கி வந்தது.
“ஓஹோ... அப்படி
கூட நினைப்பு இருக்கா உங்களுக்கு? நல்லா குறிச்சு வச்சுக்க... இந்த கருவாயனுக்கு இந்த கருவாச்சி தான் ஜோடி...
இனிமேல் யார்
கூடயாவது உங்களை சேர்த்து வச்சு சொன்னிங்க... அவ்வளவுதான்...” என்று எக்கி அவன் தலையில் ஓங்கி கொட்டினாள் பெண்.
“ஸ் ஆ ஆ ஆ வலிக்குதுடி
ராட்சசி...” என்று தலையை தேய்த்து விட்டுக்
கொண்டான் ராசய்யா.
அவர்கள்
இருவரும் ஊரைத் தாண்டி வயல் பக்கமாக செல்லும் சாலையின் ஓரமாக நின்றபடி
பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த
வழியாக சைக்கிளில் வந்த ராசய்யாவின் பங்காளி முத்துப்பாண்டி, சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்களை
பார்த்தவன் ,
“என்ன
மச்சான்... ராத்திரி ஆடின ஆட்டம் பத்தலைனு பகல்லயும் தோப்போரமா ஒதுங்கிட்டியா? நீ கொடுத்து வச்சவன் டா... “ என்று
கிண்டலாக சிரிக்க,
“உனக்கு ஏன்டா மச்சான்
பொறாமை? நீயும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஒதுங்க
வேண்டியது தான? “ என்று ராசய்யாவும் நக்கலாக சிரிக்க,
“எங்க? நமக்கு எல்லாம் ராத்திரி ஒரு ஆட்டத்திலேயே மூச்சு வாங்குது...”
என்றான் ஆற்றாமையுடன்.
“டேய் பங்கு...நமக்குனு
ஏன்டா என்னையும் சேத்துக்கற? உனக்குனு சொல்லு...” என்று ராசய்யா முறைக்க,
“சரி...சரி...மச்சான்...
எனக்குத்தான்...” என்று திருத்திக்கொள்ள,
“அதான்... உன் கெப்பாசிட்டி என்னனு தெரியுது இல்ல. அப்புறம் ஏன்டா அடுத்தவனை பாத்து பொறாமைப்படனும்....பல்லு இருக்கிறவன்
பக்கோடா சாப்பிடறான்... போடா..போய் வேலையை பாரு...” என்று சிரித்தபடி அவன் சைக்கிளை தன் காலால்
உதைத்து தள்ளி விட்டான் ராசய்யா.
“ஹ்ம்ம்ம் நீ
சொல்றதும் சரிதான் மச்சான்... பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்... நீ நடத்து கச்சேரிய....” என்று ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு சைக்கிளை
உருட்டியபடி புலம்பியவாறே சென்றான்.
அதைக் கண்டு
கலகலவென்று வாய்விட்டு சிரித்து வைத்தாள்
பூங்கொடி.
அவள் சிரிப்பை
ரசனையோடு பார்த்தவன்,
“செத்த நேரம்
முன்னால, ஒரு சின்ன புள்ள கண்ண கசக்கிட்டு இருந்தாளே...
அந்த புள்ள எங்க போனா பூங்கொடி? “ என்று நெற்றியில் கைவைத்து
தேடுபவன் போல நடிக்க
“ஹ்ம்ம்ம் எங்கேயும்
போகல… இங்க தான் இருக்கா...” என்று முறைத்தாள்.
“ஆஹான்... செத்த
நேரம் முன்னாடி அழுத புள்ளையா இது...? இப்ப சிரிச்சுகிட்டு இருக்கு. அழுத புள்ள சிரிச்சுதாம்... கழுத பாலை
குடிச்சுதாம்....” என்று அவளை கேலி செய்து சிரிக்க, செல்லமாக அவன் முதுகில் அடித்தாள் அவன்
மனையாள்.
“ஹா ஹா ஹா
இதெல்லாம் ஒரு அடியா...மசாஜ் செய்ற மாதிரி இருக்குடி. இனிமேல் தினமும் இந்த மாதிரி அடி. சுகமா இருக்கு...”
என்று சிரிக்க,
“இப்ப பாரு...இன்னும்
சுகமா இருக்கும்...” என்று அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ஸ் ஆ ஆ ஆ... “ என்று வலித்ததை
போல நடித்தவன், பின் அவளை வாஞ்சையுடன்
“எப்பவும் இப்படியே
சிரிச்சுகிட்டு இரு டி. அதுதான் உன் மூஞ்சிக்கு அழகா இருக்கு. நீ அழுதினா அந்தக் கொடூரமான மூஞ்சை பார்க்க முடியலை...”
கிண்டல் செய்தவாறு அவளை பண்ணையார்
வீட்டிற்கு அழைத்து சென்றான் ராசய்யா.
******
மூன்றடுக்கு தளத்தில் கம்பீரமாக வீற்றிருந்த
அரண்மனை போன்ற அந்த மாளிகையை பார்த்ததும் தன் கண்களை அகல விரித்தாள் பூங்கொடி.
பண்ணையார்
வீட்டை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள். ஆனால் இந்த பக்கம் வந்ததில்லை.
முதன்முறையாக
திரைப்படத்தில் வருவதைப் போன்ற பங்களாவை நேரில் பார்க்கவும், வியந்துதான் போனாள்.
உள்ளே நடப்பது
எதுவும் வெளியில் தெரியாதவாறு, பெரியதாக கட்டப்பட்டிருந்த மதில் சுவரின் கேட்டின் முன்னால் ராசய்யா அவனுடைய
டிவிஎஸ் ஃபிப்டியை நிறுத்தியிருக்க, அவனை பார்த்ததும் நட்புடன் புன்னகைத்த
செக்யூரிட்டி, கேள்வி
எதுவும் கேட்காமல் கேட்டை திறந்து விட்டான்.
ராசய்யாவும் மெல்ல
தலையசைத்து புன்னகைத்தபடி தன் இரு சக்கர வாகனத்தை உள்ளே விட்டான்.
கேட்டில்
இருந்து அந்த பங்களாவின் போர்டிகோவே இரண்டு கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு நீண்டு
இருந்தது.
தார் போடப்பட்டு
பளபளப்பாக இருந்த அந்த சாலையின் இரு பக்கமும் பூத்து குலுங்கிய அழகழகான வண்ண
மலர்களும், வரிசையாக வைக்கப்பட்டிருந்த அழகு
செடிகளும் கண்ணை கவர்ந்தன.
“வாவ்... செமயா
இருக்கு மாமா... “ என்று ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தாள் பெண்.
“ஹா ஹா ஹா
இதுக்கே வாயை பொளந்தா எப்படி? இன்னும் வீட்டுக்குள்ள வந்து பாரு...மயக்கம் போட்டே விழுந்திடுவ.. அம்புட்டு
பிரம்மாண்டமா இருக்கும்...” என்று சிலாகித்தவன் தன் வாகனத்தை கவனமாக ஓட்டினான்.
சற்று தொலைவில்
இருந்து பார்க்கும்பொழுதே, விலை உயர்ந்த கார்கள், போர்டிகோவில் அணிவகுத்து நின்றன.
பத்தாதற்கு
அருகில் இருந்த கார் செட்டில் இன்னும் சில இம்போர்ட்டட் கார்கள் நின்றிருக்க,
“ஆத்தி...
நமக்கெல்லாம் ஒரு சைக்கில் வாங்கவே நாக்கு தள்ளுது... இவங்களுக்கு மட்டும்
இம்புட்டு காரா? ஆளுக்கு ரெண்டு கார் இருக்கும் போல...”
என்று மீண்டும் வாயை பிளந்தாள்.
“ஹ்ம்ம்ம் இதெல்லாமே நான் ஓட்டியிருக்கேன்
டி. அதுவும் அங்க நிக்குது பார். அதுதான் ரொம்பவும் விலை உயர்ந்த கார்.
பெரிய பெரிய
பணக்காரங்க சிலர்கிட்ட மட்டும்தான் இந்த கார் இருக்காம். சின்ன ஐயா ஆசைபட்டார்னு
பண்ணையார் ஐயா வாங்கி கொடுத்தார். ஆனாலும்
அது சரியா இருக்கானு டெஸ்ட்டு பண்ண , நான்தான் முதல்ல ஓட்டினேன்...
அப்படியே
ராஜகுமாரன் குதிரையில போற மாதிரி ஜிவ்வுனு இருந்துச்சு...என்னா பீலு... செமயா இருந்துச்சுடி. “
என்று கண் மூடி அவன் கார் ஓட்டிய அனுபவத்தை ரசித்து சொன்னான் ராசய்யா.
அவனுக்கு
மோட்டார் வாகனங்கள் என்றால் ரொம்ப பிரியம் என்று அறிந்து வைத்திருந்தாள்.
அதனால்தான் தன்
கையில் இருந்த சம்பாத்தியத்தை எல்லாம் போட்டு புல்லட்டை வாங்கி ஓட்டியபடி, அதில் ராஜா மாதிரி கம்பீரமாக ஊருக்குள்
சுற்றுவான்.
இப்பொழுதோ கழுதை
தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப்போல, பெரிய புல்லட் ,சிறிய டிவிஎஸ் பிப்டியாகி போனது.
அதுவும் ஓசி
வண்டி என்று நினைக்கும்பொழுது அவளின் மனம் கனத்தது.
தன்னால்தானே அவனுக்கு இப்படி ஒரு நிலை என்று அவள் மனம் அவளை
குற்றம் சாட்டியது.
அதே நேரம்
ராசய்யாவும் அவளை பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான்.
அதையே
வாய்விட்டும் சொன்னான்.
“உன்னை கட்டிக்க
இருந்தானே ராஜேந்திரன்... அவன் கூட பெரிய பெரிய கார் வச்சிருக்கான் பூங்கொடி.
ஒருவேளை நீ என்னை கட்டிக்காமல் அவனை கட்டியிருந்தால், இந்த மாதிரி காரில் ராணி மாதிரி வலம்
வந்திருக்கலாம்.
இப்ப பார் இந்த
வெறும்பயலை கட்டிகிட்டு, உன்னை ஓசி வண்டியில இப்படி உச்சி
வெய்யில்ல வேர்க்க ,விறுவிறுக்க கூட்டி வர வேண்டியதாயிற்று.
சை.. எல்லாம்
என்னால்தான். நான் தலையிடாம இருந்திருந்தா இந்நேரம் நீ ராணி மாதிரி ஜம்முனு ஏசியில
படுத்து புரளலாம்...” என்று முடிக்கும் முன்னே ஆவென்று அலறினான்.
அவனின் தோள்பட்டையில்
நன்றாக கடித்து வைத்திருந்தாள் பூங்கொடி .
“ஹே ராட்சசி..
எதுக்குடி கடிச்ச...” என்று பக்கவாட்டில் திரும்பி கேட்க,
“நீ பேசினதுக்கு
உன் குரல் வலையை கடிச்சிருக்கணும். அது முன்னால இருந்ததால் இதுதான் எனக்கு கிடச்சது.
இன்னொருதரம்
அந்த பொறுக்கிய பத்தி பேசின, நான் ராட்சசி... இல்ல இல்ல ரத்த காட்டேறியாவே மாறிடுவேன். ஜாக்கிரதை...”
என்று பல்லை கடித்தவாறு அவனை முறைத்தாள்.
“ஏன் டி.. உன்னை
நல்லாத்தானே பாத்துக்குவான்... “ என்று
முடிக்குமுன்னே மீண்டும் அவன் தலையில் ஓங்கி கொட்டியவள்,
“எப்படி..
பத்தோட பதினொன்னா என்னையும் வச்சுக்குவான். யாருக்கு வேணும் அவன் காசு பணம் கார்
எல்லாம். கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் என் புருஷன் எனக்கு மட்டுமே சொந்தமா, என் மேல உசுரா இருக்கணும்.
நீ என்னை அப்படி
பாத்துக்குவனு எனக்கு தெரியும் மாமா... அதனால் எனக்கு இந்த டிவிஎஸ் பிப்டியே
போதும்..
ஏன் இது இல்லைனா
கூட நீ என்னை நடந்து கூட்டிகிட்டு வந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்...” என்று அவன்
இடுப்பை கட்டிக்கொண்டு அவன் பரந்த முதுகில் மெல்ல முத்தமிட்டாள்.
அதில்
சிலிர்த்து போனான் ராசய்யா...!
அவளின்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் தலையில் கூடை கூடையாய் பூக்களை கொட்டியதை போல
இருந்தது. ஜில்லென்ற பனிமழை பொழிவதை போல இருந்தது. ஆனாலும் தன்னை
மறைத்துக்கொண்டவன்
“ஹ்ம்ம்
பாக்கலாம்..பாக்கலாம்... எத்தனை நாளைக்கு என்ன சகிச்சுக்க போறனு...” என்று அவளை
சீண்ட,
“பாரு.. பாரு..நல்லாவே
பாரு... “ என்று பழிப்பு காட்டினாள்
காரிகை..
*****
இப்பொழுது அவர்கள் வாகனம் போர்டிகோவை
நெருங்கியிருக்க, அங்கிருந்த கார்களை பார்த்தவள், அவ்வளவு பெரிய பங்களாவிற்கு அந்த சிறிய
வாகனத்தில் செல்வது ஏனோ அசௌகரியமாக இருந்தது.
அதே நேரம்
அவனுடைய புல்லட்டும் அதில் அமர்ந்து கம்பீரமாக வருவதும் கண் முன்னே வர, மீண்டும் ஒருகணம் அவள் கண்கள் பணித்தது.
கண்ணில் நீர்
திரண்டு நிக்க, சற்று முன்னர்தான் அவள் அழுதததுக்கு அவளை
அவன் கேலி செய்து சமாதானப் படுத்தியது
நினைவு வர, தன் இதழ்களில் ஒரு இளநகை தவழ, வெளிவர இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதே நேரம்
ராசய்யா அந்த பங்களாவின் முன்னால், ஒரு ஓரமாக தன் வாகனத்தை
நிறுத்திவிட்டு கீழ இறங்க, அடுத்த நொடி
ஒரு உருவம் ஓடிவந்து அவன் மீது தாவி ஏறியது.
அதில் பேலன்ஸ்
தவறி புல் தரையில் சரிந்தான் ராசய்யா.
அவன் மீது ஏறி
அமர்ந்து கொண்டு முகமெங்கும் முத்த மழை பொழிய, அதைக்கண்ட பூங்கொடி அருவருப்பில் முகத்தை சுளித்தாள்.
“டேய் பைரவா...போதும்
டா...விடுடா...” என்று கெஞ்சலாக கேட்க, அப்பவும் விடாமல், நீண்ட நாள் பார்க்காதவனை போல, ராசய்யாவின் மேல் முத்த மழை பொழிந்து
வைத்தான் பைரவா...அந்த வீட்டின் செல்ல நாய்.
ராசய்யாவும் கருகருவென்று , சண்டைக்கு
வளர்த்து இருக்கும் ஆட்டுக்கெடா போன்று கொழுகொழுவென்று
வளர்ந்திருந்த அதன் திமிலை வருடியபடி, அதனோடு சற்று நேரம் உருண்டு புருண்டு விளையாண்டவன், பின் அதை விலக்கி எழுந்து நின்றான்.
பைரவனின் கால் தடம் பட்டு, சட்டையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக் கொண்டே
“வர வர உன் பாசத்துக்கு அளவே இல்ல டா... ஒரு நாள் உன்னை பார்க்க வரலைன்னு
இப்படியா உன் பாசத்தை கொட்டுவ...” என்று செல்லமாக திட்ட, பைரவன் இன்னும் அதன் வாலை ஆட்டியவாறு அவன்
காலையே சுற்றி சுற்றி வந்தான்.
அப்பொழுதுதான்
ராசய்யாவின் கால் அருகே இன்னொரு ஜோடி கால் தெரியவும், நிமிர்ந்து
பார்க்க, அங்கே பூங்கொடி பைரவனை முறைத்த படி நின்றிருந்தாள்.
ஏனோ அவன், தன் கணவன் மீது உரிமை எடுத்துக்கொண்டு
அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தது அவளுக்கு பொறாமையாக இருந்தது.
“சே... இந்த
நாய்க்கு கிடைக்கிற அதிர்ஷ்டம் கூட எனக்கு
கிடைக்கலை..” என்று உள்ளுக்குள் புலம்பியவள், அதை தன் சக்களத்தியாக பாவித்து முறைக்க, அவளை முன்ன பின்ன பார்த்திராத பைரவன், அவளை
யாரோ என்று எண்ணி அவளை பார்த்து குரைக்க ஆரம்பித்தான்.
குட்டியானை போன்று
வளர்ந்திருந்த அதன் தோற்றம் அப்பொழுதுதான்
அவள் கருத்தில் பட்டது.
அதுவும் நாக்கை
தொங்க போட்டுக்கொண்டு அவளை பார்த்து குரைக்க, அவ்வளவுதான் நடுநடுங்கிப் போனாள் பூங்கொடி.
அவளுக்கு நாய்
என்றால் பிடிக்கும்தான். அவள் தெருவில்
இருக்கும் நாய்குட்டிகளை எல்லாம் கொஞ்சி இருக்கிறாள் தான். ஆனால் அதெல்லாம் நாயாக, சாதுவாக இருந்தது.
அவள் முன்னே நிற்பதோ
ஆட்டுக்கெடா வை போல, பெரிய ஜாதி நாய். அதன் கூரிய பற்கள், யானைத் தந்தம் போல பெரிதாக இருக்க, அந்த பற்களால் லேசாக கவ்வினாலே ஒரு
கிலோ சதை வெளியே வந்துவிடும் அளவுக்கு பயங்கரமாக இருந்தது.
அவளைப் பார்த்து
இன்னுமாய் குரைக்க, அதில் நடுங்கியவள், அப்படியே ராசய்யாவின் பின்னால் பதுங்கிக்
கொண்டாள்.
அவன் முதுகில்
முகம் புதைத்து அட்டை போல ஒட்டிக்கொள்ள, அதைக்கண்டு வாய் விட்டு சிரித்தான்
ராசய்யா.
“ஏன் டி? என்னைய மட்டும் அந்த விரட்டு விரட்டற. இந்த நாய்க்கு இப்படி பயந்து நடுங்கிற? நீ தான் பாயும் புலியா?” என்று கிண்டலாக சிரிக்க,
“யோவ் மாமா... உன்னை மிரட்டினா நீ என்னை எதுவும் செய்ய மாட்ட..எவ்வளவு
வேணா மிரட்டிக்கலாம்..முறச்சுக்கலாம். ஏன் நாலு அடி கூட அடிச்சுக்கலாம். ஆனா இது அப்படியா?
பார்க்கையிலயே
டெரரா இருக்கு. என் மேல பாஞ்சா
அவ்வளவுதான். முதல்ல இதை இங்கிருந்து
போகச் சொல்லுயா...” என்று கெஞ்சி வைக்க, அவனோ இன்னுமே வாய் விட்டு சிரித்தபடி, குனிந்து அதன் தலையை வருடியவன்
“டேய் பைரவா... இது என் பொண்டாட்டி தான். அவளை ஒன்னும் செய்யாத. இனிமேல் இவளும் உனக்கு பிரண்டு தான். எங்க சேக் ஹேண்ட் கொடு பார்க்கலாம்...”
என்று கொஞ்சியவாறு
சிரிக்க, அதுவரை அவளை பார்த்து குரைத்துக்
கொண்டிருந்த பைரவன் , ராசய்யாவின் கொஞ்சலான குரலைக்
கேட்டதும் பொட்டி பாம்பாக அடங்கி போனது.
அதோடு அதன் இரண்டு முன்னங்காலையும் தூக்கிக்கொண்டு
பூங்கொடியை நோக்கி வர, அவ்வளவுதான்...
“ஐயோ... அம்மா...
“ என்று அலறியபடி இன்னும் ராசய்யாவின்
முதுகின் பின்னால் பம்மினாள்.
“ஹே பயப்படாதடி..
பைரவன் ஒன்னும் செய்ய மாட்டான். உன்கிட்ட
ப்ரெண்ட் ஆக, கை கொடுக்க வர்றான்... நீயே அவன் கிட்ட
கேளு... “ என்று சிரிக்க,
“என்னாது..? நாய்கிட்ட எல்லாம் கேட்கறதா? இதையெல்லாம்
ப்ரெண்டுனு சொல்றானே..” என்று புலம்பியபடி, மெல்ல தலையை அவன் முதுகில் இருந்து நிமிர்த்தி பயத்துடன் பைரவனை பார்க்க, அதுவும்
ஆமாம் என்பதாய் தலையசைத்து வைத்தது.
“அவன் ஒன்னும்
பண்ண மாட்டான். நீ குனிஞ்சு உன் கையை அவன்
கிட்ட நீட்டு...” என்க
“ஆத்தி...நான் மாட்டேன்...
என் கையை அது கடிச்சுடும்..” என்று மீண்டும் அவன் முதுகில் ஒட்டிக்கொண்டாள்.
“அதெல்லாம் கடிக்க
மாட்டான். உன் கையை நீட்டு. இப்ப நீ கையை
நீட்டலைனாதான் உன்னை கடிச்சு வைப்பான். எப்படி வசதி? “ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பயமுறுத்த, அதில் பயந்து போனவள்,
“எதுக்கு வம்பு? கை தான... கொடுத்துடுவோம்...” என்று முயன்று தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு, கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு, தன் குலதெய்வத்தை எல்லாம்
வேண்டிக்கொண்டே மெல்ல குனிந்து கையை நீட்ட, பைரவனும்
தன் முன்னங்காலை எடுத்து அவளின் கையில்
வைத்தான்.
நீட்டிய தன் கையை
கடிக்காமல், அதன் மீது மென்மையாய் அதன் காலின்
ஸ்பரிசம் படவும்,
மெல்ல கண்ணை திறந்து பார்க்க, அப்பொழுதுதான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
பைரவனோ தன் வாலை வேகமாக ஆட்டியபடி, எக்கி அவள் முகத்தை நாக்கால் நக்கி
எச்சில் பண்ண, அதில் அவளின் பயம் நீங்கி, குறுகுறுக்க, இப்பொழுது மலர்ந்து புன்னகைத்தாள் பூங்கொடி.
இப்பொழுது பைரவனை பொறாமையோடு பார்ப்பது ராசய்யாவின் முறையானது.
Comments
Post a Comment