நிலவே என்னிடம் நெருங்காதே-55

 


அத்தியாயம்-55

லகல வென்று கேட்ட சிரிப்பொலியில் கண் விழித்தான் அதிரதன்... வெள்ளி சதங்கையை குலுக்கி விட்டார்போல மனதை இழுக்கும் அதே கலகலவென்ற சிரிப்பு...

ஆளை பார்க்காமலயே அந்த சிரிப்புக்கு சொந்தக்காரி யார் என்று தெரிந்துவிட, படுக்கையில் படுத்தவாறு இமை மூடி அவளின் சிரிப்பொலியை ஒரு நொடி ரசித்திருந்தான்..

அடுத்த நொடி தலையை உலுக்கி கொண்டவன்

“இந்த சதிகாரி இரவில் ஏன் இப்படி பேய் மாதிரி சிரித்து வைக்கிறாள்? “ என்று முனகியவாறு தன் அருகில் பார்வையை செலுத்த காணவில்லை அவளை... படுக்கையில் இருந்து முன்பே எழுந்து சென்றிருந்தாள்..

அப்பொழுதுதான் கண்களை சுழற்றி எதிரில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்க்க அது அதிகாலை ஆறு என காட்டியது...

அதற்குள் விடிந்து விட்டதா? என்ற சோம்பல் வந்து ஒட்டி கொண்டது அவன் உடலிலும் மனதிலும்..

போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு இன்னுமாய் சுருண்டு படுத்து கொண்டான்..ஆனால் அவனை அப்படி சுருண்டு படுக்க விடாமல் மீண்டும் பாடாய் படுத்தியது அவளின் சிரிப்பொலி...

அதை கேட்காமல் தன் காதை மூடி கொண்டாலும் அவன் கண்களோ இப்படி கலகலவென்று நகைப்பவளின் முகத்தை காண வேண்டும் என அடம்பிடித்து எகிறி குதித்தது அவனிடம்..

சாதாரணமாகவே அவள் முகம் பௌர்ணமி நிலவாய் பளபளக்கும்.. அதுவும் இப்படி இவள் வாய் விட்டு சிரிக்கும்பொழுது இன்னுமாய் அது விரிந்து சூரியனை கண்ட செந்தாமரை போல மலர்ந்து நிக்கும்..

ஓரிருமுறை அவள் அப்படி சிரித்து இருக்க அவளின் மலர்ந்த தாமரை முகத்தை திருட்டுதனமாக பார்த்து ரசித்திருக்கிறான் அந்த திருடன்...

இன்றும் அப்படி அவள் மலர்ந்து சிரித்து கொண்டிருக்க அந்த முகத்தை காண அவன் கண்கள் அவனிடம் சண்டை இட்டு மன்றாடி கொண்டிருந்தது..

ஓரளவுக்கு அதை கட்டு படுத்தியவன் அதற்குமேல் முடியாமல் போக மேலே இருந்த போர்வையை உதறி எழுந்தவன் எரிச்சலுடன் அவள் சிரிப்பொலி வந்த திசையை பார்த்தான்..

அந்த அறையில் இல்லை அவள்.. பின் எங்கிருக்கிறாள் என்று கண்களை சுழற்ற அவளின் சிரிப்பொலி வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது..

உடனே சன்னலின் அருகில் சென்றவன் அதன் திரையை விலக்கி விட்டு வெளியில் பார்க்க, அவன் கண்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அதே மலர்ந்த செந்தாமரை முகமாய் தோட்டத்தில் நின்றிருந்தாள் நிலவினி...

அந்த வீட்டு தோட்டத்தில் முன்பே வைத்திருந்த ஒரு வெள்ளை ரோஜா ஒன்று அழகாக மலர்ந்து சிரித்து கொண்டிருக்க, அந்த பனியில் நனைந்த ரோஜாவை கையில் ஏந்தி அவளும் அதை முத்தமிட்டவாறு மலர்ந்து புன்னகைத்தாள்..

ஒரு ரோஜாவே இன்னொரு ரோஜாவை அணைத்து தழுவி முத்தமிடுவதை போல இருக்க, அந்த காட்சியை காண திகட்டவில்லை அவனுக்கு..

அதுவரை அவனுள் இருந்த சோம்பல் நீங்கி ஒருவித உற்சாகம் வந்து ஒட்டிகொண்டது.. அவனை அறியாமலயே மனதினில் ஒரு புத்துணர்ச்சி பரவ, அவளை இமைதட்டி பார்த்து ரசித்திருந்தான்..

 

அப்பொழுதுதான் அந்த ரோஜாவில் இருந்து பார்வையை அகற்றியவள் அவள் அருகில் இருந்தவரிடம் ஏதோ சொல்லி மீண்டும் கலகலவென்று சிரித்தாள்..

அவளை தொடர்ந்து அவன் பார்வையும் அவள் அருகில் செல்ல அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது...

அவன் தந்தை நெடுமாறன் அந்த அதிகாலையில் ட்ராக் சூட் மற்றும் டீசர்ட் அணிந்து அவள் அருகில் நின்று அவளுடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.. அதை கண்டதும் ஆச்சர்யமாகி போனது அவனுக்கு..

பொதுவாக நெடுமாறன் கொஞ்சம் சோம்பேறி.. அதிகாலையில் எழுவது என்றால் அவருக்கு ஆகாது... அதே போல அவர் மனைவி மனோகரியும்.

என்றுமே அதிகாலையில் எழுந்ததில்லை... காலை உணவுக்காக மட்டும் ஒன்பது மணி அளவில் எழுந்து வருவார்.. நெடுமாறனுமே அப்பொழுதுதான் எழுந்து தன் தந்தைக்கு பயந்து அவசரமாக கிளம்பி காலை உணவை அள்ளி போட்டு கொண்டு அலுவலகத்துக்கு ஓடுவார்..

உடற்பயிற்சி செய்ய சொல்லி எத்தனையோ முறை தேவநாதன் தன் மகனிடம் சொல்லி பார்த்துவிட்டார்.. ஆனால் அவருக்கு உடம்பு வளையவில்லை.. தேவநாதனும் அதற்குமேல் முடியாமல் விட்டுவிட்டார்..

அப்படி சோம்பி இருந்த அவன் தந்தை இன்று அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் அந்த தோட்டத்தில் நடந்து கொண்டிருக்க அதுவும் வெகு இயல்பாய் நிலாவிடம் பேசி சிரித்து கொண்டிருக்க இன்னுமாய் அதிசயித்து போனான்...

இதுவரை அந்த தோட்டத்திற்குள் அவன் கூட அதிகம் சென்றது இல்லை.. அந்த பங்களாவை வாங்குவதற்கு முன் எல்லா இடங்களையும் ஒரு முறை சுற்றி பார்த்தான்.. அதன்பிறகு அதை வாங்கி அவன் குடியேறிய பிறகும் கூட அவன் அந்த தோட்டத்தில் இறங்கி நடந்ததில்லை...

அந்த பங்களாவின் கீழ்தளத்திலயே அவனுக்கு என்று ஒரு ஜிம் ஐ ஏற்பாடு செய்திருந்தான்.. காலை உடற்பயிற்சிகளை அந்த ஜிம்மிலயே முடித்து கொண்டு அரக்க பறக்க கிளம்பி அலுவலகத்துக்கு ஓடிவிடுவான்..

ஜீவன் அற்று இருந்த அந்த தோட்டம் இன்று உயிர் வந்தது போல அவளின் கலகல சிரிப்பால் அங்கு இருந்த அனைத்து செடிகளும்,  கொடிகளும் பூக்களுமே மலர்ந்து சிரித்ததை போல் இருந்தது அவனுக்கு..

அப்பொழுதுதான் இன்னொன்றை கவனித்தான்.. தன் தந்தையிடம் பேசி சிரித்தாலும் கூடவே அந்த தோட்டத்தை பார்த்து கொள்ளும் வேலையாளும் அவள் உடனே நடந்து கொண்டிருக்க அவனுடனும் ஏதோ சொல்லியபடி நடந்து கொண்டிருந்தாள் நிலா...

பராமரிப்பு இல்லாமல் இங்கும் அங்குமாய் சிதறி கிடந்த அழகு செடிகளை ஒவ்வொன்றாக இடம் மாற்றி வைத்து கொண்டிருந்தாள்..

அவள் சொல்ல சொல்ல அந்த வேலையாளும் பணிவுடன் அதை அழகாக அடுக்கி வைத்து கொண்டே வந்தான்.. அவளுமே சில தொட்டிகளை அசால்ட்டாக தூக்கி உரிய இடத்தில் வைத்தாள்..

கூடவே அவன் தந்தையுடனும் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்தாள்..

அந்த தோட்டத்துக்கு சொந்தக்காரியாய் ஒரு உரிமையுடன் நிமிர்வுடன் நின்றவளையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான்..

அவளிடம் தெரிந்த அந்த ஆளுமையும் கண் அசைவில் அந்த வேலையாளிடம் அவள் பணித்ததையும் கண்டவனுக்கு அவன் பாட்டியின் நினைவு வந்தது.

அவரை அவன் பார்த்ததில்லை என்றாலும் சிறுவயதில் இருந்தே அவன் தாத்தா அவன் பாட்டி மணியம்மை பற்றி பெருமையாக பேசுவார்..

“ஜமீன்தாரினிக்கே உரித்தான மிடுக்குடன் எல்லாரையும் பம்பரமாக சுழல வைப்பாள் என் மணியம்மை..

நானே பல நேரம் அவளிடம் வாய் பொத்தி நிக்க வேண்டும் டா பேராண்டி.. உனக்கு அந்த மாதிரி ஒரு பொண்டாட்டிதான் வரணும்.. நம்ம ஜமீனுக்கே உரிய அந்த கெத்தோடு இருக்கிற ஒரு பொண்ணுதான் உனக்கு துணையாக வர வேண்டும்..”என்று சிறுவயதில் சொல்லி இருக்கிறார்..

அது இப்பொழுது நியாபகம் வர, அவன் மனம் அவனை அறியாமலயே அவளை அவன் பாட்டியின் புகைப்படத்துடன் ஒத்து பார்க்க அவள் முகம் அவள் ஆளுமை, அவள் திறமை எல்லாமே அப்படியே அவன் பாட்டியுடன் ஒத்து போனது..

அதை கண்டு அவன் மனதில் சிறு பெருமை கூடவே கொஞ்சம் கர்வம் என சேர்ந்து கொள்ள, அவளையே மீண்டுமாய் ரசித்தபடி நின்றிருந்தான்..  

அங்கு வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தவரை காணும் வரையில் எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.. ஆனால் தன் நடைபயிற்சியை முடித்து கொண்டு அங்கு வந்து சேர்ந்த அந்த ஜமீன்தாரை கண்டதும் மீண்டும் முகம் இறுகி போனது அவனுக்கு..

அவரும் வந்து அவர்களுடன் இணைந்து நின்று கொண்டு ஏதோ பேசி சிரிக்க அதை ஒரு நொடி ரசித்தாலும் அடுத்த கணம் தன்னை இறுக்கி கொண்டு பார்வையை தோட்டத்தின் பக்கத்தில் இருந்து விலக்கி கொண்டான்..

பின் குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகிவிட்டு தன் ஜிம்மிற்கு சென்று விட்டான்..

காலை உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு மீண்டும் தன் அறைக்கு சென்று குளித்து முடித்து எட்டு மணி அளவில் காலை உணவுக்காக கீழ இறங்கி வந்தான்..

அதே நேரம் மற்றவர்களும் அங்கு காத்திருக்க, அவனை கண்டதும் அப்பொழுது தன் அறையில் இருந்து வெளிவந்த யாழினி குட் மார்னிங் ணா.. என்று சிரித்தாள்.. அவனும் புன்னகைத்தவாறு அங்கு செல்ல அடுத்த ஆச்சர்யம்..  

அந்த உணவு மேஜையும் ஜமீனில் இருந்த மாதிரி இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு இருந்தன..

இத்தனை நாட்களில் அவன் ஒருவன் மட்டுமே இந்த வீட்டில்.. அதுவும் இந்த உணவு மேஜைக்கு வந்து சாகவாசமாக அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு அவனுக்கு நேரம் இருந்ததில்லை..

காலையில் மட்டும் அந்த சமையல் அறையை எட்டி பார்ப்பான்.. வழக்கமாக ப்ரெட் ஐ டோஸ்ட் பண்ணி சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பாலைக் குடித்துவிட்டு சென்றுவிடுவான்..

மதியம்,  இரவு இரண்டு வேளையும் அலுவலகத்திலயே சாப்பிட்டு கொள்வான்..

ஆனால் இன்று அந்த உணவு மேஜையில் பதார்த்தங்கள்  அழகாக அடுக்கி வைக்கபட்டிருக்க, அதை சுற்றிலும் ஜமீனில் இருந்த மாதிரி இருக்கைகளை அமைத்து இருக்க,  அங்கு நின்று கொண்டு அந்த வீட்டின் உரிமைக் காரியாய் அனைவருக்கும் தட்டை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் நிலா..

தன் அண்ணன் கை பிடித்துகொண்டு குதித்தவாறு அங்கு சென்ற யாழினி டேபிலில் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்..வழக்கமாக ஜமீனில் இந்த இடத்தில்தான் அவன் தாத்தா அமர்வார்..

செவ்வக வடிவிலான அந்த மேஜையில் குடும்ப உறுப்பினர்கள் நீளமான பகுதியில் சுற்றிலும் அமர, தேவநாதன் அகல பகுதியில் ஸ்பெஷலான இருக்கை போட்டு அதில் அமர்ந்து இருப்பார்..

அவர் அப்படி அமர்ந்து இருப்பதே ஒரு கம்பீரமாக இருக்கும்..அவரை அடுத்து அதிரதன் அமர்ந்து கொள்வான்..

இன்று தாத்தா அமரும் அந்த இடத்தில் யாழினி எதேச்சையாக அமர்ந்து இருக்க, அதை கண்ட அதிரதன்

“யாழி குட்டி.. இது தாத்தா உட்காரும் இடம்.. நீ வழக்கம் போல உன் இடத்தில் சென்று அமர்ந்து கொள்.. “ என்று கொஞ்சலுடன் கெஞ்ச,  அதை கேட்ட நிலாவின் கண்களில் மின்னல் வெட்டியது..

அதே நேரம் அங்கு வந்து கொண்டிருந்த ஜமீன்தாரின் காதிலும் தன் பேரன் சொல்லியது விழ, இது அவன் வாங்கிய வீடே என்றாலும் தாத்தாவுக்குத்தான் முதல் மரியாதை என்பதை மறக்காமல் நினைவு வைத்திருக்கும் தன் பேரனை உள்ளுக்குள் பெருமையாக மெச்சி கொண்டார்...

அதே நேரம் நிலாவும் அவரை பார்த்து பார்வையால் ஜாடை சொல்ல,  அவரும் கண் சிமிட்டி சிரித்தவாறு தன் மீசையை நீவி விட்டு கொண்டே நடந்து வந்தார்...

அதற்குள் யாழி அந்த இருக்கையில் எழுந்திருக்க, அருகில் வந்ததும் தன் இருக்கையில் அமர்ந்தவர் தனக்கு அடுத்து அமர்ந்து இருந்த தன் பேரனை பார்த்து

“ரொம்ப மகிழ்ச்சி. ரதன்.. நம்ம வீட்டு பழக்கத்தை மாற்றாமல் அப்படியே ஃபாலோ பண்ணுவதற்கு.. “ என்றார் சிரித்தவாறு...

“இது ஒன்னும் உங்களுக்கு மரியாதை கொடுப்பதற்காக இல்லை.. நான் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் உங்களிடம் பேசவேண்டும்.. அதற்கு நீங்கள் இந்த இடத்தில் அமர்ந்தால்தான் சரியாக இருக்கும்.. மற்றபடி இது என் ராஜ்ஜியம்.. இங்கு நான்தான் ராஜா... “ என்று அவரை போலவே தன் மீசையை நீவி விட்டு கொண்டான்..

அதை கண்டு இன்னும் பூரித்து போனார் தேவநாதன்..

சிறுவயதில் அவன் தாத்தா செய்வதை போலவே தனக்கு இல்லாத மீசையை இருப்பதாக பாவித்து அதை நீவி விட்டு அவரை மாதிரியே செய்து காட்டி அவரை மகிழ்விப்பான் அதிரதன்..

அவரிடம் கோவித்து கொண்டிருந்த இத்தனை நாட்களில் அந்த மேனரிசத்தை விட்டிருந்தான்..

இன்று அவனாக அதை,  அவரை மாதிரியே செய்ய அவருக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது..

அவரும் சிரித்தவாறே அமர, நிலா அவருக்கு எப்பவும் சாப்பிடும் சத்துமாவு கஞ்சியை எடுத்து வைத்தாள்.. கூடவே அதிரதனுக்கும் அதுவே...

ஜமீனில் இருக்கும் நாட்களில் வார நாட்களில் சத்துமாவு கஞ்சி மட்டுமே இருவரும் சாப்பிடுவர்.. வார விடுமுறைகளில் கொஞ்சம் வித்தியாசமான காலை உணவாக இருக்கும்..

அதே முறையை பின்பற்றி நிலாவும் இன்று அதே மாதிரி செய்திருந்தாள்.. அதிசயமாக நெடுமாறனுக்கும் அதையே வைக்க அவர் முகத்தை சுளித்தார்..

“நிலா மா... இந்த கஞ்சி வேண்டாமே... ரொம்ப போர் அடிக்குது.. யாழி குட்டி சாப்பிடுவதையே எனக்கும் கொடேன்.. “ என்றார் பாவமாக.

“மாமா..போனவாரம் மயக்கம் போட்டு விழுந்தது நியாபகம் இல்லையா?  டாக்டர் என்ன சொல்லி இருக்கிறார்.?. உங்களுக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கு.. இது ஆரம்ப கட்டம்..

இப்பயே உணவில் கட்டுபாட்டுடன் இருந்தால்தான் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. அதுக்குத்தான் இது... பேசாமல் சாப்பிடுங்க. என்று செல்லமாக மிரட்டினாள்..

அதை கேட்டு திடுக்கிட்ட அதிரதன் தன் தந்தையை பார்த்து

“என்னாச்சு பா.. எப்ப கீழ விழுந்திங்க? “ என்றான் பதற்றத்துடன்

“அது ஒன்னும் இல்லடா.. லேசா தலை சுத்தல் மாதிரி வந்தது... அப்படியே மாடிபடியை பிடிச்சுகிட்டேன்.. உடனே இந்த நிலா பொண்ணு சும்மா இல்லாமல் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஏதேதோ செக்கப் னு சொல்லி என்னென்னவோ டெஸ்ட் எடுத்து பார்த்துட்டா..

என்னை மட்டும் அல்ல.. உன் அம்மா, உன் பாட்டி ஏன் வீட்டில வேலை செய்யும் பொன்னியை கூட விட்டு வைக்கல..

நாற்பது வயதுக்கு மேல போனா  நம்ம உடலை ஒரு முறை கம்ளீட் செக்கப்  பண்ணிக்கணும் என்று சொல்லி கட்டாயபடுத்தி குடும்பத்தோட எல்லாரையும் ஆஸ்பத்திரியில கொண்டு போய் நிறுத்திட்டா..

எல்லாருக்குமே டெஸ்ட் எடுத்து பார்க்க வச்சுட்டா. உன் அம்மாவுக்கு ஒரு குறையும் இல்ல.. பாட்டிக்கு பிபி, சுகர், கொலஸ்ட்ரால் னு எல்லா வியாதியும் இருக்காம்... அதுக்கெல்லாம் இப்ப புலம்பிகிட்டே மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்காங்க...   

எனக்கும் கொஞ்சம் சர்க்கரை கூடுதலா இருக்காம்.. அதனால் சர்க்கரையை குறைக்கணும்னு  சொல்லிட்டார் அந்த டாக்டர்..  

அதில் இருந்து தினமும் காலையில் எழுப்பி நடக்க சொல்லி டார்ச்சர்தான்.. அது கூட பரவாயில்லை... சாப்பிடறதுக்கு எனக்கு இந்த பாடாவதி கஞ்சிதான்.. என் பொண்டாட்டிகிட்டாயாவது எப்படியாவது தாஜா பண்ணி இதிலிருந்து தப்பிச்சிடலாம்..

ஆனால் உன் பொண்டாட்டி இருக்காளே.. பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருக்கா...இந்த கஞ்சியை இப்ப குடிக்கலைனா மதியத்துக்கும் இதே தானு மிரட்டறா...

டேய் கண்ணா... நீயாவது கொஞ்சம் எடுத்து சொல்லுடா.. இந்த கஞ்சி எனக்கு வேண்டாம்...வாயிலயே வைக்க முடியலை.. “ என்றார் சிறுபிள்ளையாக முகத்தை சுளித்து பாவமாக தன் மகனை பார்த்து... 

அதை கண்டு சிரித்த தேவநாதன்

“ஹா ஹா ஹா... உனக்கு நல்லா வேணும் டா மாறா... படிச்சு படிச்சு சொன்னேன்.. தினமும் காலையில் என்னுடன் வாக்கிங் வாடா.. கொஞ்சம் எக்சர்சைஸ் பண்ணுடா னு.. கேட்டியா?

என்னை பார்த்தியா.. இந்த வயசிலயும் சுகர், பிபினு எதுவும் இல்லாம எவ்வளவு  பிட் ஆ இருகேன்.. “ என்று ஜமீன்தார் தன் கையை மடக்கி தன் புஜத்தை இறுக்கி காட்டி சிரிக்க மற்றவர்களும் இணைந்து சிரித்தனர்...

அதிரனும் தன் சிரிப்பை அடக்கி கொண்டு உள்ளுக்குள் சிரித்தவாறு உணவை உண்டான்..

“நிலா மா... அந்த ஸ்வீட் ஐ இன்னும் கொஞ்சம் எனக்கு வையேன்.. “ என்று மனோகரி கொஞ்சம் தள்ளி இருந்த இனிப்பை ஆர்வமாக பார்க்க

“அத்தை... உங்களுக்கும் சுகர் கிட்டதட்ட பார்டர் லெவல் ல இருக்கு.. அதனால் நீங்களும் கன்ட்ரோலா தான் இருக்கணும்.. அதையும் மீறினா அப்புறம் மாமாவுக்கு கிடைக்கிற அதே கஞ்சிதான் உங்களுக்கும்.. எப்படி வசதி? “ என்று மிரட்டி புருவத்தை உயர்த்த

“ஐயயோ... அந்த கஞ்சியெல்லாம் என்னால குடிக்க முடியாது பா.... நான் இப்ப இருந்தே கன்ட்ரோலா இருந்துக்கறேன்.. “ என்றவர் தன் தட்டில் இருந்த உணவை தொடர்ந்தார்...

“அது.... “ என்று செல்லமாக மிரட்டியவள் யாழினிக்கு அவள் உணவை எடுத்து வைத்தாள் நிலா..

அப்பொழுதுதான் கவனித்தான் அதிரதன்..

டைனிங் டேபிலில் சில வகையான உணவுகள் இருந்தன... அவனுக்கு, அவன் தந்தை மற்றும் தாத்தாவுக்கு  கஞ்சி என்றால் மனோகரிக்கு அவளுக்கு பிடித்தமான இட்லி மற்றும் அதுக்கு இரண்டு வகையான சட்னி, கொஞ்சம் ஸ்வீட்ஸ், யாழிக்கு அவள் விரும்பும் எக் ப்ரைட் ரைஸ், பாரிஜாதத்திற்கு கஞ்சியும் அவருக்கு பிடித்தமான உணவும் என்று ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவை செய்திருந்தாள் நிலா...

ஜமீனிலாவது அவளுக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.. இங்கு அவன் தனி ஆள் என்பதால் சமையல் செய்வதுக்கு ஆட்களை நியமித்திருக்கவில்லை..

“அப்படி என்றால் இவள் தனி ஆளாகத்தான் இதை எல்லாம் செய்திருக்கிறாளா? காலையில் எழுந்து தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவள் எப்படி இவ்வளவும் செய்தாள்? என்று ஆச்சர்யமாக இருந்தது...

கூடவே

“செய்யட்டும்... அப்படியாவது சீக்கிரம் இந்த வீட்டை விட்டு ஓடி  போகணும்..இப்படி ஓடி ஆடி வேலைசெய்து களைத்தாலாவது அவள் வாய் கொஞ்சம் குறையுதானு பார்க்கலாம்..” என்று உள்ளுக்குள் முனுமுனுத்தவாறு தன் உணவில் கவனத்தை செலுத்தினான்..

சிறிது நேரம் எல்லாரும் கலகலப்பாக பேசி சிரித்து கொண்டே காலை உணவை முடிக்க அப்பொழுதுதான் நியாபகம் வந்தவனாக தன் தாத்தாவை நேராக பார்த்து தாத்தா என்று அழைக்காமல்

“உங்க பிசினஸ் ஐ பற்றி கொஞ்சம் பேசணும்..பென்டிங் இருக்கிற வேலை எல்லாம் மெயில் அனுப்பி இருந்தேன்.. பார்த்திங்களா? “ என்றான் எங்கோ பார்த்தவாறு...

தாத்தாவும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே

“எதுனாலும் நீ உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு ரதன்.. “ என்றார் புன்னகைத்தவாறு...

“பொண்டாட்டிகிட்டயா? ஏன் தா... “ தாத்தா என்று அழைக்க வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டு

“நான் பிசினஸ் ஐ பற்றி சொல்றேன்.. சமையல் அறையில் சமைப்பதை பற்றி சொல்லவில்லை.. “ என்றான் முறைத்தவாறு..

“நானும் அதைத்தான் சொல்றேன் ரதன்.. இனிமேல் நம்ம தொழிலை உன் பொண்டாட்டிதான் பார்க்க போகிறாள்.. அதனால் எது சொல்றதனாலும் நீ  அவகிட்டயே சொல்லிடு.. “ என்றார் மிடுக்காக..

அதை கேட்டு அதிர்ந்து போனான் அதிரதன்..

“வாட்? என்ன உளற.. “ உளறீங்க என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டு

“என்ன சொல்றிங்க? நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா? அவளுக்கு இந்த பிசினஸ் ஐ பற்றி என்ன தெரியும்?” என்றான் அவளை பார்த்து முறைத்தவாறு கடுப்புடன்..

“இவளே கொஞ்ச நாளில் போகப்போகிறாள்..அவளை எப்படியும் விரட்டி விடத்தான் போகிறான்.. அப்படி இருக்க  அவளிடம் போய் கோடியில் புரளும் தொழிலை தூக்கி கொடுக்கறாரே இந்த முட்டாள் ஜமீன்தார்.. “ என்று உள்ளுக்குள் பொரிந்தான்...

“ஹ்ம்ம்ம் நான் நல்லா யோசிச்சு பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.. எனக்கும் வயசாய்டுச்சு.. முன்ன மாதிரி என்னால சுறுசுறுப்பா பார்த்துக்க முடியல..

நீயும் இந்த தொழிலை பார்த்துக்க மாட்டேனுட்ட.. அப்ப எனக்கு நிலாவை விட்டா வேற வழி இல்லை.. அவளும் உன்னை மாதிரி எம்.பி.எ படிச்சிருக்கா... அவளுக்கும் இந்த தொழிலை எப்படி நடத்தறதுனு தெரியும்... “ என்று அவர் முடிக்கும் முன்னே

“முட்டாள் மாதிரி பேசாதிங்க.. எம்.பி.எ படிச்சிட்டா போதுமா? ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.. எம்.பி.எ படிச்சிட்டா உடனே ஒரு தொழிலை எடுத்து நடத்திட முடியாது..

அதுக்கு அனுபவம் வேண்டும் படிப்படியாகத்தான் எல்லாம் கத்துக்க முடியும்.. எனக்கே அஞ்சு வருஷம் ஆச்சு அந்த தொழிலை முழுவதுமாக தெரிந்து கொள்ள...

நீங்க பாட்டுக்கு எடுத்த உடனேயே இவ்வளவு பெரிய பொறுப்பை அவ கிட்ட தூக்கி கொடுக்க சொல்றிங்க.. “ என்றான் இன்னுமாய் எரிச்சலுடன்...

“ஹ்ம்ம்ம் நிலா ரொம்ப .ஷார்ப் ஆன பொண்ணு ரதன்.. எதையும் சீக்கிரம் புடிச்சிக்குவா...அவளுக்கு தெரியலைனா நீ கூட இருந்து எல்லாம் சொல்லி கொடு...

நீயும் கத்துகுட்டியா இருந்து எல்லாம் கத்துகிட்டவன் தான.. அதனால் நீயே அவளுக்கு சொல்லி கொடு... “ என்றார் ஓரக்கண்ணால் தன் பேரனை பார்த்து நமட்டு சிரிப்பை உள்ளுக்குள் சிரித்தவாறு...

“அதெல்லாம் முடியாது. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை... “ என்றான் கடுப்பாக...

“சரி.. அப்ப இந்த பேச்சை விடு.. உனக்கு ரெண்டு ஆப்சன் தர்ரேன்.. ஒன்னு நீயே இந்த தொழிலை பார்த்துக்க..இல்லைனா இதை எல்லாம் உன் பொண்டாட்டிக்கு சொல்லி கொடுத்து அவளிடம் பொறுப்பை ஒப்படைச்சிடு. அவ்வளவுதான்.. “ என்று முடித்துவிட்டார்...

“என்னால் உங்க தொழிலை பார்க்க முடியாது..அது எனக்கு வேண்டாம்... வேணும்னா இவகிட்டயே கொடுத்துடறேன்.. அதுக்கு மேல வரப்போற நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல..” என்று அவரை பார்த்து முறைத்து முறுக்கி கொண்டவன் தன் உணவை முடித்துவிட்டு அவளை அலுவலக அறைக்கு அழைத்து சென்றான்..

அவளும் கூடவே செல்ல

“பார்... கொஞ்சமாவது எனக்கு இது வேண்டாம்... என்னால முடியாது.. “ அப்படீனு சொல்றாளானு பார்.. இதுக்குனே காத்துகிட்டு இருப்பா போல... கொஞ்சம் கொஞ்சமா ஜமீன் உள்ள வந்து எல்லார் மனசுலயும் இடம் புடிச்சிட்டா..

இப்ப தொழிலிலும் நுழைய பார்க்கிறாள்.. அது தெரியாத இந்த மடத்தாத்தா அவகிட்டயே லட்டு மாதிரி வாய்ப்பை தூக்கி கொடுக்கறார்.. சரியான முட்டாள் ஜமீன்தார்.. “ என்று பொருமி கொண்டே தன் அலுவலக அறைக்கு சென்றான் அதிரதன்..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!