நிலவே என்னிடம் நெருங்காதே-57

 


அத்தியாயம்-57

கார் நெடுஞ்சாலையை அடைந்திருக்க, அந்த காலை நேரத்து ட்ராபிக்கில் ஒருத்தரை ஒருத்தர் முண்டி அடித்து செல்லும் அவரத்தில், ஓயாமல் ஒலித்த வாகனங்களின் ஹார்ன் சத்தத்தில் வழக்கமாக வரும் எரிச்சல் வரவில்லை அதிரதனுக்கு..

மாறாக சற்று முன் வாயிலில் நின்று கை அசைத்து கொண்டிருந்த அவன் மனையாளின் முகமே அவன் கண் முன்னே...

உடனே அவன் மனம் நேற்று இரவு  அறையில் அவள் பேசிய பேச்சுக்களும் இன்று காலையில் அவன் தயாரான பொழுது அவளின் கவனிப்பு என அவளை பற்றிய நினைவுகளை அசை போட்டது

ஒவ்வொரு செயலிலும் அவளின் குறும்புதனம் ஒட்டிகிடப்பதை கண்டவன் இதழ்களோ பெரிதாக விரிந்தன...

அதே விரிந்த புன்னகையுடன் ஒரு வித துள்ளலுடன் தன் அலுவலகத்துக்குள் சென்றவனை முதலில் ஆச்சர்யமாய் பார்த்து வரவேற்றாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்...

அதிரதனை இப்படி இதழ் விரிந்த புன்னகையோடு பார்க்க அவளுக்கு ரொம்பவும் ஆச்சர்யம்.. அவன் எப்பொழுதுமே கொஞ்சம் அழுத்தக்காரன்..அவ்வளவு எளிதாக யாரை பார்த்தும் புன்னகைத்து விட மாட்டான்..

அவன் நண்பர்களாகிய அந்த நிறுவனத்தின் மற்ற இரு பங்குதாரர்களும் அவனுக்கு ஆப்போசிட்.. எப்பொழுதும் புன்னகைத்தவாறு வலம் வருவார்கள்..

அப்படி கஞ்சி போட்டவாறு விறைத்து கொண்டு இருந்த அதிரதன் கொஞ்சமாக புன்னகைத்தபடி அதுவும் உற்சாகத்துடன் துள்ளலுடன் உள்ளே நுழைய அந்த ரிசன்ஷனிஸ்ட் ஆல் நம்ப முடியவில்லை...

அவள் ஆச்சர்யமாக பார்ப்பதை கண்டு கொள்ளாமல் மெல்ல புன்னகைத்து தன் அறையை நோக்கி கம்பீரமாக நடந்தான் அதிரதன்...

அதே நேரம் அவன் எதிரில் வந்த அவன் நண்பர்கள் அபி மற்றும் அஸ்வின் இருவரும் அதிரதனை கண்டதும் காலை வணக்கத்தை சொல்லியவர்கள் அதிரதனை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்தவர்கள் வாயை பிளந்தனர்..

“டேய் மச்சான்... செமயா இருக்கடா... இந்த ட்ரெஸ் உனக்கு பெர்பெக்ட் ஆ இருக்கு. டெய்லியும் இந்த மாதிரி நீ பார்த்து பார்த்து ட்ரெஸ் பண்ண மாட்டியே... என்னடா ஸ்பெஷல்? “ என்றனர் கண் சிமிட்டி..

அதிரதனோ லேசாக வெட்கபட்டு

“நத்திங் டா... க்ளைன்ட் விசிட் இருக்கு இல்ல.. அதான்... “ என்றான் சமாளித்தவாறு...

“ஹா ஹா ஹா ஓ அந்த நகைக்கட பார்ட்டியை சொல்றியா? அதுக்காகவா இப்படி ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்திருக்க... நம்ப முடியலையே..! இதை விட பெரிய பெரிய ஆளுங்க விசிட் அடித்த பொழுதெல்லாம் கூட நீ இந்த மாதிரி சிரத்தை எடுத்து ட்ரெஸ் பண்ணதில்லையே..

எங்கயோ இடிக்குதே... “ என்றான் அஸ்வின் குறும்பாக சிரித்து அவனை குறுகுறுவென்று பார்த்தவாறு..

“ஹ்ம்ம் இடிக்கவும் இல்ல.. புடைக்கவும் இல்ல.. என்னை ஆராய்ச்சி பண்றதை விட்டு காலங்காத்தால வேலையை பாருங்கடா...” என்று நழுவ முயன்றான் அதிரதன்...

“ஹ்ம்ம்ம் அதைத்தான் தினைக்கும் பார்த்துகிட்டு இருக்கோமே... அது சரி மச்சான்..உன் நெற்றியில் புதிதாக பூத்திருக்கிறதே அந்த குங்கும பூ அதுதான் இன்னைக்கு ஹைலைட் டா...

அந்த நகைக்கட பார்ட்டி கொஞ்சம் பக்தி பழம் டா.. காலையில் எழுந்த உடனே பூஜை ரூம்ல போய் உட்கார்ந்து கிட்டு ஒரு மணி நேரம் மணி ஆட்டி தன் கோரிக்கையை எல்லாம் பட்டியல் இட்டபிறகுதான் வெளி வருவாராம்..

அப்படிபட்டவர் உன் நெற்றியில் அழகா இருக்கிற இந்த குங்குமத்தை மட்டும் பார்த்தார் அப்படியே கிளீன் போல்ட்... இந்த ப்ராஜெக்ட் நமக்கு தான்.. ஆனாலும் அதையும் கண்டுபிடித்து அவருக்கு பிடித்த மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்திருக்கியே .. அங்கதான் டா நிக்கறான் அதி..

இப்ப தெரியுது நீ டீல் பண்ற க்ளைன்ட் எல்லாம் ஏன் உடனே ஓகே சொல்லிடறானுங்கனு.. “ என்று அஸ்வின் கண் சிமிட்டி சிரிக்க அவனும் புன்னகைத்தவாறு தன் நண்பன் வயிற்றில் செல்லமாக குத்தியவன்

“ஒகே கைஸ்... வேலையை பாருங்க.. ஹேவ் அ குட் டே.. “ என்று புன்னகைத்தவாறு தன் அறைக்கு சென்றான்..

அறைக்குள் சென்று தன் ப்ரீப்கேஸ் ஐ வைத்தவன் தன் லேப்டாப் ஐ எடுத்து ஆன் பண்ணியவாறு பக்க வாட்டில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்க்க அவனுக்கே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தெரிந்தது...

“எல்லாம் அந்த சதிகாரியால்... “ என்று செல்லமாக திட்டிகொண்டு அதே புன்னகையுடன் தன் வேலையை தொடங்கினான்...அதன் பிறகு இந்த உலகத்தையே மறந்து போனான்...  

மாலை ஆறு மணி அளவில் காலையில் இருந்த உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் தன் காரை தன் பங்களாவிற்குள் செலுத்தினான் ரதன்..

அதை அனைத்துவிட்டு அவன் வாங்கி வைத்திருந்த ஸ்வீட் பாக்சை எடுத்து கொண்டு துள்ளலுடன் வீட்டிற்கு உள்ளே சென்றான்...

அங்கு வரவேற்பறையிலயே அவன் குடும்பத்தார் அமர்ந்து கொண்டு மாலை சிற்றுண்டியை ருசித்தவாறு கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர்.. அப்படி எல்லாரையும் பேச வைத்து கொண்டிருந்தாள் நிலா...

உள்ளே சென்றவன் கண்கள் முதலில் தன் மனையாளை தேடியது.... காலையில் பார்த்ததை விட இன்னும் ப்ரெஸ் ஆக மலர்ந்த சிரிப்புடன் மற்றவர்களுடன் கதை அடித்து கொண்டிருந்தாள் நிலா..

தன் அண்ணனை கண்டதும் வழக்கம் போல யாழி ஓடி வந்து கட்டி கொள்ள, அவனுமே அவளை அணைத்து கொண்டு அவளுக்கு முதலில் ஸ்வீட் ஐ எடுத்து கொடுத்தான்..

பின் மற்றவர்களுக்கும் கொடுக்க, மனோகரி தன் மகனின் செயலில் ஆச்சர்யமாகி

“அதி கண்ணா.. என்னடா ஸ்பெஷல்? ஸ்வீட் எல்லாம் கொடுக்கற? “ என்றார் சிரித்தவாறு...

அவன் பார்வையோ அடுத்த நொடி நிலாவிடம் சென்றது... அவளும் இவனைத்தான் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.. அவன் ஸ்வீட் கொடுக்கும் காரணத்தை முன்பே யூகித்து இருந்தாள்.. ஆனாலும் அதை அவன் வாயால் கேட்க ஆவலுடன் அவனையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தாள்..

அவனும் அவளின் ஓர விழிப்பார்வையை கண்டு ரசித்தவன்

“இன்னைக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்குமா...இந்த க்ளைன்ட் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் பேர்வழி.. மற்ற எல்லா நிறுவனங்களையும் அலசி ஆராய்ந்து கடைசியில் நமக்கு இந்த ப்ராஜெக்ட் ஐ கொடுத்திருக்கிறார். அதுதான் நான் ரொம்ப ஹேப்பி... “ என்று சிரித்தவாறு மற்றவர்களுக்கும் நீட்டினான்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் மருமக வந்த நேரம் டா.. இனிமேல் பார் உனக்கு இன்னும் பெரிய பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் வரும்.. சீக்கிரம் இன்னும் பெரிய அளவில் வருவ.. “ என்றார் நெடுமாறன் புன்னகைத்தவாறு,,

அதை கேட்டு முகத்தை நொடித்தார் பாரிஜாதம்..

“ம்க்கூம்... இதுவரைக்கும் என் பேரன் வளரலையாக்கும்..?  யார் தயவும் இல்லாமல் என் பேரன் சொந்த உழைப்பால் இவ்வளவு தூரம் வளர்ந்து நிக்கறானே.. அப்படி வளர்ந்தவனுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்கிறது எல்லாம் ஜுஜுபி...

என்னமோ உன் அரும மருமவ வந்துதான் என் பேரன் கம்பெனியை தூக்கி நிறுத்தறாளாக்கும்..? அதெல்லாம் என் பேரனோட அறிவுக்கும் திறமைக்கும் கிடைச்சது மாப்பிள்ளை.. “ என்றார் நிலாவை பார்த்து முறைத்தவாறு...

ஏனோ இன்னுமே நிலாவை அவருக்கு பிடிக்கவில்லை... இதுக்கு அவரை மற்றவர்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து அவர் உடலில் அத்தனை குறை இருக்க அதுக்கெல்லாம் நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுப்பது நிலாதான்..

கூடவே அவர் அப்பப்ப பேசும் குத்தல் பேச்சுக்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் வேளா வேளைக்கு அவர் கேட்பதை எல்லாம் செய்து கொடுப்பாள்..  

அப்படி அவரை விழுந்து விழுந்து கவனித்து கொண்டாலும் அவ்வளவு எளிதாக அவளை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதனாலயே நிலா வை மட்டம் தட்டியும் அவன் தாத்தா தயவில்லாமல் தானாகவே வளர்ந்தவன் என்பதை நாசுக்காக சொல்லி அவனுக்கும் தாத்தாவுக்கும் இருக்கும் பகையை இலை மறை காய் போல அவனுக்கு நியாபக படுத்தவும் செய்தார்...

அதுவரை கொஞ்சம் இலகி இருந்தவன் தன் பாட்டியின்  விளக்கத்தால் மீண்டுமாய் உள்ளுக்குள் முறுக்கி கொண்டவன் நிலாவின் முன்னால் ஸ்வீட் ஐ நீட்டினான் எதுவும் வெளிகாட்டி கொள்ளாமல்..

அவளும் தோளை குலுக்கி கொண்டு

“கன்கிராட்ஸ் ரதன்.. மாமா சொன்ன மாதிரி  நீங்க இன்னும் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்.. “ என்று புன்னகைத்தவாறு அருகில் இருந்த தாத்தாவிடமும் கொடுக்க சொல்லி கண் ஜாடை காட்டினாள்..

அவனோ அவளை முறைத்துவிட்டு திரும்பி கொண்டான்..

நிலாவுக்கு கொஞ்சம் வேதனையாக இருக்க அவளே எழுந்து சென்று அவன் கையில் இருந்த ஸ்வீட் பாக்சை பிடுங்கி தாத்தாவிடம் சென்றவள்

“தாத்தா... நீங்களும் ஸ்வீட் எடுத்துக்குங்க... “ என்று கண் சிமிட்டி எடுத்துக்கங்க என்று பார்வையால் கெஞ்சி புன்னகைத்தாள்..அவரும் பந்தா  பண்ணாமல் எடுத்து கொண்டவர்

“என் பேரன் கொடுத்தாலும் பேரன் பொண்டாட்டி கொடுத்தாலும் ஒன்னுதான் அம்மணி... ரொம்ப சந்தோஷம்.. உன் புருஷனுக்கு என் வாழ்த்துக்கள்.. “ என்று சொல்லி தன் மீசையை நீவி விட்டு கொண்டார்..

“சே.. கொஞ்சமாவது நான் அவருக்கு ஸ்வீட் கொடுக்கலையேனு பீல் பண்றாரா பார்..அதுக்குள்ள இந்த முந்திரிகொட்டை என் கையில் இருந்த ஸ்வீட் பாக்சை பிடுங்கி கொண்டு போய் அவரிடம் கொடுத்துட்டா...” என்று செல்லமாக திட்டி கொண்டு மாடி ஏறி தன் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி கீழறங்கி வந்தான்..

அதே நேரம் அவன் நண்பன் அஸ்வின் உள்ளே வந்து கொண்டிருந்தான்..அதிரதனிடம் இருந்து ஒரு பைல் வாங்க வேண்டி இருந்ததால் அவனை  வீட்டிற்கு வரசொல்லி இருந்தான் அதிரதன்..  

உள்ளே நுழைந்தவன் அங்கு அமர்ந்து இருந்தவர்களை கண்டதும் அனைவரிடமும் சென்று நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தான்..

கல்லூரியில் படிக்கும்பொழுது பலமுறை அதிரதன் வீட்டிற்கு சென்றிருக்கிறான் அஸ்வின்.. அதனால் அனைவருமே அவனுக்கு நல்ல பழக்கம்...

அதனால் அங்கு அமர்ந்து எல்லாரிடமும் கதை அடித்து கொண்டிருக்க அப்பொழுது அதிரதனுக்காக சமையல் அறையில் இருந்து சிற்றுண்டி எடுத்து வந்த நிலாவை கண்டதும் பெரிதாக விரிந்தன அவன் கண்கள்..

நிலாவை அந்த வீட்டில் இதுவரை கண்டதில்லை அஸ்வின்....

அந்த மாலை வேளையில் பளிச்சென்று முகத்துடன் எப்பொழுதுமே இதழில் தவழும் சிறு புன்னகையுடன் வெளிவந்தவளை கண்டதும் அஸ்வின் பார்வை ஆர்வமாய் அவள் மீது படிந்தது..

அதே நேரம் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அதிரதன் அஸ்வினையும் அவன் பார்வை சென்ற இடத்தையும் கண்டதும் அவனையும் அறியாமல் கடுப்பானான்...

வேகமாக அஸ்வின் அருகில் சென்றவன்

“வாடா அஸ்...எப்ப வந்த? சரி வா.. நாம ஆபிஸ்  ரூம்க்கு போகலாம்.. “ என்று அவனை அங்கே விட்டு வைக்காமல் தன் அலுவலக அறையை நோக்கி இழுத்து போக, அவனும் இருக்கையில் இருந்து எழுந்து இன்னுமாய் நிலாவை ஆர்வத்துடன் பார்த்து கொண்டே அதிரதனை தொடர்ந்து சென்றான்..

அதிரதன் அவன் கொடுக்க வேண்டிய அந்த பைலை தேடி கொண்டிருக்க, அதே நேரம் அதிரதன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்த அஸ்வின் அதிரதனை பார்த்தவன்

“டேய் மச்சான்... யார் டா அந்த பொண்ணு...? இதுவரைக்கும் உன் வீட்டில் பார்த்ததில்லையே...சூப்பரா இருக்காங்க... ஒருவேளை உன் பெரிய தங்கச்சியா?

இல்லையே அம்மு இப்படி இருக்க மாட்டாளே.. “ என்க அதில் இன்னுமாய் கடுப்பானவன் அவன் தேடி எடுத்திருந்த பைலை பொத் என்று அவன் முன்னால் போட்டவன்  தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவன் கேட்ட கேள்வியை சட்டை செய்யாமல் அந்த பைலை திறந்து அதை விளக்க ஆரம்பித்தான்..

அஸ்வினும் அந்த பொண்ணு யார் என்ற ஆராய்ச்சியை அப்போதைக்கு விட்டுவிட்டு அதிரதன் சொல்வதை கவனமாக கேட்டு கொண்டிருந்தான்... அதே நேரம் அறைக்கதவை தட்ட

“யெஸ் கம் இன்.. “ என்றான் மிடுக்குடன்.

அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு சிற்றுண்டி தட்டுடன் உள்ளே வந்தாள் நிலா..

அவளை கண்டதும் அஸ்வின் பார்வை மீண்டுமாய் அவளிடம் தாவி சென்றது...அவளுமே அஸ்வினை பார்த்து மெல்ல நட்புடன்  புன்னகைத்தவாறு அவர்களை அடைந்தவள்

“சாரி.. தொந்தரவு பண்ணிட்டனா? டயர்ட் ஆ இருப்பிங்க. இதை சாப்பிட்டுட்டே வேலையை பாருங்க.. “ என்று இனிய குரலில் அக்கறையாக பேசி தன் முன்னே தட்டையும் காபியையும் வைத்தவளையே இமைதட்டி ரசித்து பார்த்திருந்தான் அஸ்வின்..

அவனுக்கு நிலா யாரென்று இன்னும் தெரிந்திருக்கவில்லை... தன் திருமணத்தை பற்றிதான் அதிரதன் இன்னும் தன் நண்பர்களிடம் கூட சொல்லி இருக்கவில்லையே..

அஸ்வின் அவள் யாரோ என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அதை கண்ட அதிரதன் பல்லை கடித்தான்.. அவன் முன்னால் அவளை திட்டவும் முடியாமல் அவளை பார்த்து முறைத்தவன்

“தேங்க்ஸ்... நீ இப்ப போகலாம்... “ என்றான் எரிச்சலை அடக்கி கொண்டு..அதை கண்டு திகைத்தவள்

“ஹ்ம்ம் இப்ப எதுக்கு இப்படி எரிஞ்சு விழறார் இந்த ஜமீன்தார்...?  ஒரு ப்ரெண்ட் வந்தா அவர்கிட்ட அறிமுக படுத்தி வைக்கணும்னு மேனர்ஸ் கூட தெரியலை.. .இவன் எல்லாம் ஒரு கம்பெனியோட எம்.டி..” என்று முகத்தை நொடித்தவள் அவனை திரும்பி முறைத்துவிட்டு வெளியேறி சென்றாள்...

அவள் போவதையே மீண்டும் ஆர்வமாக பார்த்த அஸ்வின் மீண்டும் அதிரதனை பார்த்தவன்

“டேய் மச்சான்...யாருடா அந்த பொண்ணு..?  வாய்ஸ் கூட இவ்வளவு ஸ்வீட் ஆ இருக்கு... “ என்றான் ஆர்வமாக...

“ஹ்ம்ம் என் வீட்டு வேலக்காரி.. நீ வேலையை பாருடா... “ என்று முறைத்தவன் சற்று முன் அவர்கள் பேசி கொண்டிருந்ததை தொடர்ந்தான்..

அஸ்வினுக்கு ஒரு ப்ராஜெக்ட் ஐ பற்றி விளக்கி கொண்டிருந்தான் அதிரதன்.. அடுத்த வாரத்தில் இருந்து அஸ்வின் அந்த ப்ராஜெக்ட் ஐ மேர்பார்வை பார்க்கவேண்டும். அதற்காகவே அவனை வர சொல்லி இருந்தான்.. 

சிறிது நேரம் அஸ்வினும் அதிரதன் விளக்கியதை கவனத்துடன் கேட்டு கொண்டிருக்க திடீரென்று வெளியில் தோட்டத்தில் இருந்து கலகலவென்று சிரிப்பொலி கேட்டது.

அதை கேட்டதும் திரும்பவும் ஆர்வமானான் அஸ்வின்... ஆனாலும் அதிரதனிடம் எப்படி கேட்பது என்று தயங்கியவன் தன் ஆர்வத்தை அடக்கி கொண்டு அதிரதன் சொல்வதை கவனித்து கொண்டிருக்க மீண்டுமாய் கேட்ட கலகல சிரிப்பும் இரு பெண்களின் பேச்சு சத்தமும் அஸ்வினை பாடாய் படுத்த  அதற்கு மேல் பொறுக்க முடியாதவன்

“டேய் மச்சான்.. ஒரு நிமிஷம்... “ என்றவன் வேகமாக எழுந்து சென்று அந்த அறையில் இருந்த ஜன்னல் திரையை விலக்கிவிட்டு வெளியில் பார்த்தான்..

வெளியில் கண்ட காட்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் அஸ்வின்...

அவன் பின்னாலயே வந்திருந்த அதிரதனுமே அந்த காட்சியை கண்டு அப்படியே மெய் மறந்து நின்று விட்டான்..

தோட்டத்தில் யாழியும் நிலாவும் பந்து விளையாண்டு கொண்டிருந்தார்கள்.. அதிரதனுக்கு பாஸ்கட் பால் ரொம்பவும் பிடிக்கும்.. நேரம் கிடைக்கும் பொழுது தானாக விளையாடுவதற்காகவோ நண்பர்கள் வந்தால் நேர்ந்து விளையாட என அங்கு சிறு பாஸ்கட் பால் கோர்ட் ஐ ரெடி பண்ணி வைத்திருந்தான் அதிரதன்..

அதில் தான் அந்த பந்தை வைத்து கொண்டு இரு பெண்களும் த்ரோ பால் விளையாண்டு கொண்டிருந்தனர்..

கணுக்காலில் இருந்து கொஞ்சம் மேலாக தூக்கி சொருகிய புடவையால் அவள் வெளிர்நிற பாதங்களும் அதில் ஆடிய கொலுசும் ஆளை இழுத்தது என்றால் விளையாடும் வேகத்தில் சற்றாய் விலகி இருந்த புடவையினால் தெரிந்த அவளின் வழுவழுப்பான வெண்ணிற கொடி இடையும் கையை தூக்கி பந்தை பிடிக்கும்பொழுது இடைக்கு மேலாக தெரிந்த அவளின் பெண்மையும் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் அதிரதன்..

அவளும் மும்முரமாக ஆடி கொண்டிருந்தாலும் அப்பப்ப அவள் புடவையை இழுத்து விட்டவாறு நெற்றியின் முன்னால் அப்பப்ப வந்து விழுந்த கற்றை குழலை அசால்ட்டாக காதுக்கு பின்னால் சுருட்டி விட்டவாறு ஆடி கொண்டிருக்க கூடவே இருவரும் செல்ல சண்டை போட்டு கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டும்  இருவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருக்க அந்த தோற்றத்தில் அவன் மனையாளை காண அவன் உள்ளே ஏதோ புரள ஆரம்பித்தது..

குற்றாலக் குறவஞ்சியில் அவன் படித்திருந்த வசந்தவல்லி பந்தாடும் நிகழ்வு கண் முன்னே வந்தது...   

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை

புரண்டு புரண்டாடக் – குழல்

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு

மதன் சிலை வண்டோட – இனி

இங்கிது கண்டுல கென்படும் என்படும்

என்றிடை திண்டாட

பங்கய மங்கை வசந்த சவுந்தரி

பந்து பயின்றாளே

 

வசந்தவல்லி காதுகளில் குழை என்ற அணிகலனை அணிந்திருக்க, அவள் பந்தாடும் வேகத்தில் அந்த குழை முன்னே வந்து அவளுடைய கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடுகின்றது.

அவள் ஆடும் வேகத்தை பார்த்து மேகம் போன்ற அவள் கூந்தலில் இருந்து வண்டுகள் அஞ்சி கலைந்து செல்கின்றன. அது கண்டு மன்மதனின் கரும்புவில்லில் இருந்து நாண் ஆகிய வண்டுகளும் பறந்து ஓடுகின்றன.

இதைப் பார்த்து உலகம் என்ன பாடுபடுமோ என்று இவள் இடை துவண்டு துவண்டு நடுங்க,  செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை ஒத்த வசந்தவல்லி என்னும் அழகி பந்தாடினாள்..  

என்று அவன் தமிழ் ஆசிரியர் விளக்கி கூறிய அந்த பாடலின் பொருள் நினைவு வர, அந்த வசந்தவல்லியை போல இவளும் அழகாக விளையாடுவதை போல இருந்தது அவன் கண்களுக்கு...

விளையாட்டு மும்முரத்தில் தனக்கு வந்த பந்தை நழுவ விடாமல் இங்கும் அங்குமாய் ஓடி பிடித்து தூக்கி போட்டு அவள் விளையாடும் அழகை  ரசித்து பார்த்து கொண்டிருந்த அதிரதனின் பரவசமான நிலையை கலைக்கும் விதமாக அப்பொழுது அவன் புறமாய் திரும்பிய அஸ்வின்

“டேய் மச்சான்.. வெரி ஸ்வீட் கேர்ள் டா... புடவை கட்டி இருந்தாலும் என்னமா விட்டு கொடுக்காம விளையாடறாங்க..சிரிப்பும் பேச்சும் கூட செமயா இருக்கு...

இன்ட்ரெஸ்டிங் கேர்ள்..இவங்களுக்கு புருஷனாக போறவன் ரொம்ப லக்கி. “ என்று சிரிக்க அப்பொழுதுதான் அஸ்வினும் அங்கே இருக்கிறான் என்பதே உறைத்தது அதிரதனுக்கு..

தான் ரசித்து பார்த்த மாதிரியேதான் அவனும் அவளை ரசித்து பார்த்திருப்பான் என மண்டையில் உறைக்க, உடனே உள்ளுக்குள் கடுப்பானவன் வேகமாக அந்த சன்னலின் திரைச்சீலையை இழுத்து மூடியவன்

“ஷட் அப் அஸ்... வந்த வேலையை பாரு.. “  என்று எரிந்து விழுந்தவாறு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான் அதிரதன்..

அதிரதனின் செயலைக்கண்ட அஸ்வினுக்கோ ஆச்சர்யமாக இருந்தது.... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!