நிலவே என்னிடம் நெருங்காதே-60

 


அத்தியாயம்-60

ழக்கம்போல படுக்கையில் தன் கால்களை நீட்டி வைத்து கொண்டு முதுகுக்கு பின்னால் ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான் அதிரதன்..

அவன் கைகள் அந்த அலைபேசியின் திரையில் நர்த்தனம் ஆடி கொண்டிருந்தாலும் கண்கள் அதன் திரையில் ஓடி கொண்டிருந்தாலும் அவன் மனமோ அங்கு இல்லை...

அவன் விழி ஓரப்பார்வை அடிக்கடி அவன் அருகில் அவன் புறமாக முதுகு காட்டி படுத்திருந்த தன் மனையாளிடமே சென்று வந்தது..

“என்னவாயிற்று இவளுக்கு?”  என்று  யோசனையாக தன் அருகில் இருந்தவளை பார்த்துக்கொண்டிருந்தான் ரதன்..!

அவளிடம் எப்பவும் இருக்கும் ஒரு உற்சாகம்,  துள்ளல் இப்பொழுது காணவில்லை..

இப்பொழுது மட்டுமல்ல.. அவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த அந்த நொடியிலிருந்து தான் இப்படி மாறிப்போனாள் என்பதும் அவன் கவனத்திற்கு வந்தது...

*****  

ரவு ஒன்பது மணி அளவில் அதிரதன் வீடு திரும்பியிருக்க அப்பொழுது வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு அவன் குடும்பத்தினர் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்..

உள்ளே வந்தவன் அவர்களை பார்த்து புன்னகைத்தவாறு அவர்கள் அருகில் செல்ல, அதுவரை பௌர்ணமி நிலவாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அவன் மனையாள்,  அவனைப் பார்த்ததும் அமாவாசை நிலவாய் முகத்தை சுருக்கிக் கொண்டாள்...  

கூடவே அவனை கண்டு கொள்ளாமல் வேகமாக எழுந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.. எப்பொழுதும் அவனை கண்டதும் அவள் முகத்தில் பளிச்சிடும் அந்த பளிச் மின்னல் இல்லை...

அவனைப் பார்த்து சிரிக்கும் அந்த குறும்பு பார்வை இல்லை.. அவனும் கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கி கொண்டு, தன் அன்னையின் அருகில் அமர்ந்து சற்றுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தான்..  

ஆனால் பார்வை மட்டும் சமையலறை பக்கமே.. எப்பொழுது அவள் வெளிவருவாள் என்று சமையலறை வாயிலையே ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க,  அவளோ அவன் பார்வைக்கு தரிசனம் கொடுக்கவில்லை..

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு தனக்கு இரவு உணவு வேண்டாம் என்று சொல்லி மாடிக்கு வந்துவிட்டான்..  மீதி இருந்த அலுவலக வேலையை முடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்தவாறு அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்..

ஆனால் பார்வை மட்டும் அவனை அறியாமல் வாயிலையே பார்த்திருந்தது..

அவனை நீண்ட நேரம் காக்க வைத்து மணி 10.30 ஆனதும் உள்ளே வந்தாள் நிலா..

நேராக அவனிடம் வந்தவள் அவனை பார்க்காமல் வேற எங்கோ பார்த்தவாறு பால் டம்ளரை நீட்ட,  அவனோ அவள் முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு அதை வாங்கி கொண்டான்..

அவள் முகத்தை பார்த்தவன் திடுக்கிட்டான்..

அவள் முகம் எப்பொழுதும் இருக்கும் மலர்ச்சி இல்லாமல் பாறை போல இறுகிக் கிடந்தது.. பார்வையும் அவனை நேராக நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல் எங்கோ திருப்பி கொண்டிருந்தாள்..

திருமணமாகி இத்தனை நாட்களில் இந்த மாதிரி அவளை பார்த்ததில்லை அதிரதன்..

திருமணத்தன்று அவன் தாலி கட்டி முடித்ததும் அவளை அப்படியே விட்டுச் சென்ற பிறகும், அதற்கு பிறகு பல விதங்களில் அவளை வருத்தியபொழுது கூட இந்த மாதிரி முகம் இறுகி இந்த மாதிரி தோற்றத்தில் இல்லை அவள்..

எப்பொழுதும் பளிச்சென்றே சிரித்தபடி  இருக்கும் அவள் முகம்..  

“அப்படி இருப்பவளுக்கு இப்பொழுது என்னவாயிற்று?  என்னிடம் குறும்பு செய்யும் அந்த குறும்பு முகம் எங்கே போயிற்று? “  என்று அவசரமாக அவள் கண்களுக்குள் ஊடுருவி  பார்த்தான்..  

ஆனால் அவளோ அவன் பார்வையை சந்திக்க விருப்பம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

அதை கண்டு திகைத்தவன் யோசனையுடன் பாலை பருகியவன்,   டம்ளரை அவளிடமாய்  நீட்ட அவளும் எதுவும் பேசாமல் அந்த டம்ளரை வாங்கி வைத்து விட்டு கட்டிலில் ஏறி ஓரு ஓரமாக அவனுக்கு முதுகு காட்டியவாறு படுத்துக்கொண்டாள்..

அதிரதனுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது..

அவள் முகத்தில் இருந்த இறுக்கம், ஒரு அமைதி, அவள் செய்வது, நடந்து கொள்வது  எல்லாம் பார்க்கும் பொழுது புயலுக்கும் முன் இருக்கும் கடல் அமைதியை போல தோன்றியது அவனுக்கு...

எதுவோ வரப்போகிறது என்று அவன் மனம் அபாய ஒலியை எலுப்பியது.. ஆனாலும் அதை ஓரம் தள்ளி

“அவள் எப்படி இருந்தால் எனக்கென்ன?  இதுவும் இவளின் இந்த ஒதுக்கமும் ஒரு வகையில் நல்லதுதான்.. என்னை சீண்டாமல் தொல்லை பண்ணாமல் விட்டாளே..நிம்மதி... “ என்று தன் தோளை குலுக்கி கொண்டவன் தன் அலைபேசியில் கவனத்தை செலுத்தினான்..  

ஆனால் சில நொடிகள் மட்டுமே அவன் கவனம் அலைபேசிக்கு சென்றது.. அடுத்த நொடி அவன்  பார்வை மீண்டுமாய் அவன் மனையாளிடமே வந்து நின்றது..

எப்பொழுதும் சிரித்து பேசும் அவள் சிரிப்பை கேட்காமல்... அந்த குறும்பு பார்வையை காணாமல் அவன் உள்ளே ஏதோ தடுமாற்றமாய் இருந்தது..

முதலில் தெரியாத அவளின் இந்த ஒதுக்கம்... இப்பொழுது அவன் மனதின் ஓரத்தில் முதலில் சிறிதாய் ஆரம்பித்து பின் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதுமாய் பாதித்தது அப்பொழுதுதான் உரைத்தது அவனுக்கு...

அவனும் தனக்குத்தானே எவ்வளவோ சமாதானம் சொல்லி பார்த்தாலும் அவன் மனம் அதை எல்லாம் கேட்கவில்லை...

அவளின் மலர்ந்த சிரிப்பையும் குறும்பு பேச்சையும் கேட்க சொல்லி அவனை தொல்லை செய்தது..

கொஞ்ச நேரம் அதன் உடன் போராடி பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் போக

“ம்க்கூம்... “ என்று தொண்டையை கனைத்தான் அவள் கவனத்தை கவருவதற்கு...

அவன் செய்ததற்கு இந்நேரம் அவன் புறம் திரும்பி ஏதாவது நக்கல் அடித்திருப்பாள் சாதாரணமாக இருந்திருந்தால்... ஆனால் இன்று அவளோ அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் கண் மூடி படுத்திருக்க,  தன் ஈகோவை விட்டு கொஞ்சம் இறங்கி வந்தவன்

“என்னாச்சு பட்டிக்காடு..? ஏன் டல்லா இருக்க? “ என்றான் யோசனையான குரலில்..

அதுவரை திரும்பி படுத்திருந்தாலும் அவள் ஓரப்பார்வையும் அவனிடமே அடிக்கடி சென்று வந்தது அவன் அறியாமல்..

அவன் இவளையே தவிப்புடன் பார்த்து கொண்டிருப்பது திரும்பாமலயே புரிய,  அவளுக்கும் இன்னுமாய் வேதனையாக இருந்தது..

அதற்குமேல் அதை தாங்க முடியாமல் மெல்ல எழுந்து அமர்ந்தவள் அவனை நேராக பார்க்காமல் எங்கோ வெறித்து பார்த்தபடி

“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... “ என்றாள்... குரலில் அப்படி ஒரு இறுக்கம்...வலி..  வேதனை என்று எல்லாம் கலந்து கிடந்தது அவனுக்கும் புரிந்தது...

“ஸ்யூர் நிவி.... என்னாச்சு? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? பிசினஸ் ல எதுவும் ப்ராப்ளமா? ஏதாவது தப்பா பண்ணிட்டியா? “ என்றான் அக்கறையாக...

“ப்ச்... அதெல்லாம் ஒன்னுமில்லை... அதில் எல்லாம் என் கணக்கு சரியாகத்தான் இருக்கிறது..ஆனால் என் சொந்த வாழ்வில் தான் சில கணக்குகளை தப்பாக போட்டுவிட்டேன்.. “ என்றாள் விரக்தியாக..

“அப்படி என்ன கணக்கை தப்பாக போட்ட? நீ எப்பொழுதும் தப்பு கணக்கு போடுபவள் இல்லை என்பது எனக்கு தெரியும்... நீ என் பாட்டி மாதிரி.. எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்...

உன் மனதில் என்ன வருத்தி கொண்டிருக்கிறது? உன்னை இப்படி பார்க்க நன்றாகவே இல்லை... நீ எப்பவும் போல துள்ளளுடன் வலம் வரவேண்டும்.. அப்படி என்னதான் உன் மனதை அரித்து கொண்டு இருக்கிறது...?  உள்ளே இருப்பதை சொல்.. என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.. “ என்று படபடத்தான்..

ஏனோ அவள் முகம் வாடி இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.. அந்த வானமே அதன் நிலாவை காணாமல் இருண்டு விட்டதை போல ஒரு தவிப்பு அவன் உள்ளே..

ப்பொழுதும் அவனுக்கு இந்த அமாவாசையை பிடிக்காது..

எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டாக இருக்கும் அந்த கரிய இருளை கண்டாலே முகத்தை சுளிப்பான்..அந்த இரவு முழுவதுமே மூஞ்சை தூக்கி வைத்து கொண்டிருப்பான்..  

அதுவே அடுத்த நாள் பிறை நிலா வர ஆரம்பித்ததும் குஷியாகி விடுவான்..

அதுவும் அந்த பிறை நிலா தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பான்..

அது வளர்ந்து பௌர்ணமி நிலவாய் ஜொலிக்கும் நாட்களில் அவன் மனமும் துள்ளி குதிக்கும்.. அன்று மட்டும் நீண்டநேரம் மொட்ட மாடியில் நின்று அந்த நிலாவையே ரசித்து கொண்டிருப்பான்..

அப்படி பழகியவனுக்கு தன் வீட்டில் உலா வரும் இந்த நிலாவின் முகம் இருண்டு அமாவாசையாய் இருப்பதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை...

அதனாலேயே பதட்டத்துடன் அவளிடம் காரணம் கேட்டான் அதிரதன்..  

அவள் முக வாட்டத்துக்கு காரணம் என்னவாக  இருந்தாலும் அதை சரி செய்து அவள் முகத்தில் பௌர்ணமி நிலவை கொண்டு வரவேண்டும் என்று அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது

அதனாலேயே படபடப்பாக அவனிடம் பேசியிருந்தான்..

அதை கேட்டவளோ தன் தலையை நிமிர்த்தி அவனை தீர்க்கமாக பார்த்தவள் எதுவும் பேசாமல் மெல்ல எழுந்து சென்று அந்த அறையில் இருந்த சன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்..  

அந்த வானவெளியிலிருந்த நிலவின் ஒளியில் அவள் முகம் இன்னுமாய் இறுகிக் கிடந்தது அவனுக்கு புரிந்தது..

ஒரு கை ஜன்னல் கம்பியை பற்றியிருக்க, மற்றோரு கையை கீழே தொங்க விட்டிருக்க அந்த கை விறைத்து இருப்பது அவனுக்கு புரிந்தது...அவளின் வெண்டை போன்ற பிஞ்சு விரல்கள் எல்லாம் விடைத்து கொண்டு நின்றன...  

அவளின் அந்த இறுகிய தோற்றத்தில் இருந்து அவள் எதையோ சொல்ல தயங்குகிறாள்..  இல்லை அதை சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதுவரை சரியாக புரிந்துகொண்டான்..  

ஆனால் அது என்ன விஷயம் என்பதை மட்டும் அவனால் யூகிக்க முடியவில்லை.. என்ன சொல்லப் போகிறாளோ என்று ஒருவித படபடப்பு கூடியது..

அவளை அப்படி வலி வேதனையில், வெறித்த பார்வையுடன்  பார்க்க, அவனுக்குமே கஷ்டமாக இருந்தது.. உடனே எழுந்து சென்று அவளை பின்னால் இருந்து இடையோடு சேர்த்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து

“உன் கவலையை, வேதனையை எல்லாம் என்னிடம் விட்டுவிடு கண்மணி... உனக்காக நான் இருக்கிறேன்..உன்னை எந்தவித கவலையும் வேதனையும் அண்ட விட மாட்டேன்.. “ என்று ஆறுதல் சொல்லி அவளை தன் மார்பின் மீது சாய்த்து கொண்டு அவள் முதுகை ஆதரவாய் வருடி விட தவித்தது அவன் உள்ளே...

ஆனால் தன்னை கட்டுபடுத்தியவன், தன்னை மறைத்துக் கொண்டவன் அவள் புறமாய் பார்த்து

“சொல்லு நிவி... என்ன பேசணும்?”  என்றான்..

ஆனால் அவளோ எதுவும் பேசாமல் இன்னுமாய் அமைதியாய் அந்த நிலவையே வெறித்து கொண்டு இருக்க  

“சொல்லு மா... “ என்றான் இன்னும் கனிவான குரலில்..

அதை கேட்டு ஒரு நொடி உள்ளுக்குள் சிலிர்த்தது நிலாக்கு..

இந்த மாதிரி அவளிடம் ஒரு நாளும் கனிவுடன் பேசியதில்லை அவன்..

எப்பொழுதும் முறைத்து கொண்டு இருப்பவன் சிடுசிடுவென்று எரிந்து விழுபவன் இன்று அக்கறையாய கரிசனமாய் கனிவாய் அவளை பார்க்க பெண்ணவளுக்கு தொண்டையை அடைத்தது..

ஒரு நொடி தன் முடிவை மாற்றி கொள்ளலாமா ? என்று அவசரமாக யோசித்தாள்..

அடுத்த நொடி மாலையில் அவள் கண்ட காட்சி கண் முன்னே வர, மீண்டும் அவள் உடல் இறுகியது...

“இல்லை.. நான் எடுத்த முடிவு சரியானதுதான்.. “ என்று உள்ளுக்குள் சொல்லி உறுதி படுத்தி கொண்டவள் மெல்ல கஷ்டபட்டு இதழ் திறந்து அவனை பாராமல் அதே பால்நிலாவை வெறித்த பார்வையுடன் சொன்னாள்..

“நா ம்  இ ந் த  ஆ ட் ட த் தை  இ த் தோ டு   மு டி த் து  கொ ள் ள லா ம்.. “ என்று ஒவ்வொரு எழுத்தாக தேடி பிடித்து கோர்த்து கஷ்டபட்டு அந்த வாக்கியத்தை உருவாக்கி மனதை கல்லாக்கி கொண்டு அதை வாசித்தாள்...

அதை கேட்டவனோ தூக்கி வாரி போட அதிர்ந்து போனான்...

“வாட் டு யு மீன்? “ “என்றான்   சற்று கோபமாக..

அவளோ பதில் சொல்லாமல் மீண்டும் அதே வெறித்த பார்வை.. அதை எப்படி  தன் வாயால் சொல்வது என்று தொண்டை அடைக்க கண் மூடி வேதனையை சுமந்து இறும்பாய் இறுகி நின்றாள்..

அவளின் மௌனம் இன்னுமாய் வேதனையை கொடுக்க அதை தாங்க முடியாதவன்

“சொல்லு நிவி... என்ன சொல்ற? “ என்றான் இடுங்கிய கண்களுடன்..

அவளும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு தன்னை சமனபடுத்தி கொண்டவள்

“ஐ மீன்....  நமக்குள் இருக்கும்  இந்த கண்ணாமூச்சி ஆட்டம் வேண்டாம்...இந்த கேம் ஐ முடிச்சிக்கலாம்.. நீங்களே வெற்றி பெற்றவராக இருக்கட்டும்..

நான் தோத்து விட்டேன்.. நீங்க ஆசை பட்ட மாதிரி நான் இந்த ஜமீனை விட்டு சென்று விடுகிறேன்.. உங்களை விட்டு போய் விடுகிறேன்.... “ என்றாள்..

ஆரம்பிக்கும் பொழுது எந்த  உணர்ச்சியும் வெளிக்காட்டாமல்  ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது தொண்டை அடைக்க குரல்   கம்ம தழுதழுத்தாள்...

அதைக்கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனான் அதிரதன்..  

அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை அவன்..

அவளுக்கு வேற எதுவோ கவலை இருப்பதாக எண்ணி இருந்தவன் அதை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்றுதான் எண்ணி இருந்தான்..

கடைசியில் அமைதியை கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்து வந்த புயலைப் போல அவள் ஆழ்மனதில் இருந்து வந்த அந்த வார்த்தை எனும் புயல் அவனை பெரிதும் தாக்கியது..

அவனை அறியாமலே நிலைகுலைந்து போனான்.. அடுத்த நொடி ஏதோ நினைவு வர, அவன் உடல் விறைக்க கை முஷ்டி இறுக

“இந்த திடீர் மாற்றம் ஏனோ?  என்னைவிட பெரியவனாக,  உன்னிடம் சிரித்து சிரித்து பேசுபவனை கண்டதும் உன் மனம் மாறிவிட்டதோ?

எப்பொழுதும் தேளாக கொட்டிக் கொண்டிருக்கும் என்னை விட்டு இனிக்க இனிக்க பேசுபவனை பிடித்துவிட்டதோ?  அதனால்தான் அவனைப் பார்த்த இரண்டே நாட்களில் இந்த முடிவுக்கு வந்துவிட்டாயா க்கும்? “  என்றான் ஏளனமாக உதட்டை வளைத்து நக்கலாக சிரித்தவாறு..

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போவது இப்பொழுது நிலாவின் முறை ஆயிற்று..

உடனே விருட்டென்று அவன் புறமாக திரும்பியவள் அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவள்

“என்ன உளறீங்க? “  என்று உறுமினாள்..  

“நான் எங்கே உளறுகிறேன்.. நீதானே என்னை விட்டு போய்விடுகிறேன் என்று உளறினாய்.. அதற்கு என்ன அர்த்தம்?  

இத்தனை நாட்கள் நான் என்னை விட்டு விலகிச் செல்லுமாறு சொன்னபொழுது அதை மறுத்து சட்டமாக இங்கே உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் வளைத்து போட்ட பிறகு நான் இந்த ஜமீனை விட்டு செல்கிறேன் என்றால் என்ன  அர்த்தம்?

எல்லாம் நீ அந்த அஸ்வினை பார்த்த பிறகு அவனிடம் மயங்கி தலை சுத்தி போய் என்னை பிடிக்காமல் போய்விட்டது... அதான் என்னை விட்டு செல்கிறேன் என்கிறாய்.. “ என்றான் அதே ஏளன பார்வையுடன்...

அதை கேட்டு கோபம் ஆனவள்

“ஷட் ஆப் ரதன்.. என்ன பேச்சு பேசறீங்க? என்னை பார்த்தால் ஆம்பளை சுகத்துக்காக அலைபவள் போலவா இருக்கு? இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தும் என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா? “  என்றாள் கோபமாக ஆரம்பித்து வேதனையில் முடித்தாள்..  

அதைக் கேட்டதும் தான் அதிரதனுக்கு தன் தவறு புரிந்தது..

எந்த நிலையிலும் ஆராயாமல் யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டி விடுவது எவ்வளவு தவறு என்று அவன் தாத்தா நிறைய முறை  சொல்லியிருக்கிறார்..

அப்படியிருக்க அவள் தன்னைவிட்டு போகிறாள் என்று சொன்னதும் அதைக்கேட்டு கோபத்தில் யோசிக்காமல் உளறியது அப்பொழுது தான் மண்டையில் உரைத்தது..

உடனே குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தவன்

“சாரி.. அப்படி சொல்லியிருக்கக் கூடாது.. சரி.. இப்ப சொல்.. திடீரென்று என்னை விட்டு விலகி செல்கிறாய் என்று ஏன் சொன்னாய்? அது சும்மா விளையாட்டுக்கு தானே? “  என்றான் ஆர்வமாய் எதிர்பார்ப்புடன்..

அவளோ ஒரு கசந்த புன்னகையை அவன் புறம் செலுத்திவிட்டு  மீண்டும் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பி கொண்டவள்

“இல்லை... உண்மையாகத்தான் சொல்கிறேன்... நான் உங்களை விட்டு சென்று விடுகிறேன்.. “  என்றாள் அதே வேதனை கலந்த குரளில்..

அதைக்கேட்டு இன்னும் விறைத்தன அவன் கரங்கள்.. வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து வந்து அவளை தோளை பிடித்து தன் பக்கமாக திருப்பியவன் அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி அவள் கண்களை ஊடுருவி பார்த்தவன் மெல்ல கேட்டான்

“ஏன் நிவி?  என்னை பிடிக்கலையா?  எதற்காக திடீரென்று என்னை விட்டு போக வேண்டும் என்கிறாய்? “  என்றான்  அடிபட்ட குரலில்...

அவளை பிடித்திருந்த அவன் கையை விலக்கிவிட்டு அவனை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டவள் மீண்டும் வெளியில் வெறித்து பார்த்தவள்

“இன்று மாலை ஐஸ்கிரீம் கடைக்கு சென்றிருந்தோம்.. “ என்றவள் அந்த நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொல்லி

“அந்த ஹோட்டலின்  பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் கடை.. “  என்றாள் மீண்டும் அதே வெறித்த பார்வையுடன்...

அவள் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான் அதிரதன்..

அவள் சொன்ன அதே நேரத்திற்கு தான் அவன் சாந்தினியுடன் அந்த நட்சத்திர  ஹோட்டலுக்கு சென்றது..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!