பூங்கதவே தாழ் திறவாய்-23

 


இதழ்-23

 

ன் அலைபேசியில் இருந்த அந்த குட்டி தேவதையின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநந்தன்....

“இவள் என் மகள்... ஆனால் எப்படி?? எனக்கு எதுவுமே நினைவில்லையே... ??” என்று யோசித்தவன் உடனே தன் அலைபேசியை எடுத்து ஆனந்த் க்கு அழைத்தான்..

“சொல்லுடா மச்சான்... “ என்றான் ஆனந்த் மறுமுனயில்.

“டேய்.. நாளைக்கு காலையில் நாம் டெல்லி போறோம்.. நீயும் என் கூட வர்ர..”

“டேய்.. எனக்கு வேலை இருக்குடா..”

“அந்த வேலை எல்லாம் வந்து பார்த்துக்க... ஒழுங்கா கிளம்பி 6  மணிக்கு ஏர்போர்ட் வந்திடு... நான் டிக்கெட்  போட்டுட்டேன்.. சீக்கிரம் வந்திடு “ என்று போனை வைத்தான் ..

றுநாள் அபி சொன்ன மாதிரியே காலையில் இருந்த விமானத்துலயே டெல்லி சென்றடைந்தனர்...

நேராக முன்பு கான்பிரன்ஸ் நடந்த இடத்திற்கு சென்றனர்...

அந்த இடத்திற்கு முன்பே அபி சென்றிருக்கிறான் வேற ஒரு கான்பிரன்ஸ்க்காக.. ஆனால் சமீபத்தில் வந்த மாதிரி ஞாபகம் இல்லை அவனுக்கு..

ஆனந்த அவனை அந்த கான்பிரன்ஸ் நடந்த ஹாலுக்கு அழைத்து சென்று  தீக்சா அமர்ந்திருந்த இடம் பின் அவர்கள்  6 பேரும் அமர்ந்து அரட்டை அடித்த இடம் என்று காட்ட, அபிக்கு அந்த மாதிரி ஞாபகமே எதுவும் வரவில்லை...

“டேய் மச்சான்.. நல்லா யோசீச்சு பார் டா... அதெப்படி ஒரு வருசத்தில நடந்தது உனக்கு மறந்து போகும்?? “என்றான் ஆனந்த்...

அபியும் தன் மூளையை கசக்கி யோசிக்க அதுவும் தீக்சாவை பத்தி யோசித்து பார்க்க அவனுக்கு அவன் முதல் முதலாக லிப்டில் சந்தித்த அந்த முகம் மட்டுமே நினைவு வந்தது...

“ம்ச்... எதுவும் ஞாபகம் வரலைடா... “ என்றான் ஆதங்கமாய்...

“சரி விடு.. நீ தந்கியிருந்த ஹோட்டலுக்கு போகலாம்...” என்று அவனை அழைத்து  சென்றான்..

அங்கு சென்றும் அவனுக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை.. பின் அவர்கள் சென்ற அந்த மலை குன்றுக்கு சென்றனர்...

அங்கு இருந்த ஒவ்வொரு இடத்தையும் காட்டி விளக்கினான் ஆனந்த்...

இங்க தான்டா நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து செல்பி எடுத்துகிட்டோம்...

நாங்க அந்த பக்கம் நகர்ந்த பிறகு நீ தீக்சாவுக்கு தெரியாமல் அவ கூட சேர்ந்து நிக்கற மாதிரி செல்பி எடுத்தத நான் பார்த்தேன்...

கேட்டா அப்ப கூட உண்மையை சொல்லாமல் ஏதோ என்கிட்ட மழுப்பி சிரிச்ச...

அப்புறம் இங்க தான்டா நாங்க நாலு பேரும் தண்ணி அடிச்சிட்டு மட்டையானோம்.. நீயும் தீக்சாவும் தான் இந்த இடத்தை சுத்தி பார்த்திங்க... “ என்றான் ஆனந்த்..

அபியும் அந்த  இடத்தை சுத்தி பார்த்தான்...  அருமையாக  இருந்தது அந்த லொகேசன்.. அதில் அவன் தீக்சாவுடன் சுத்தி இருக்கிறான் என்று  நினைக்கவே அவனுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது....

“டேய்... நீ சொல்றது  நிஜமா?? என்னால் நம்பவே முடியலையே...என்னை பார்த்தாலே வெறுப்பை கக்குற தீக்சா என்னுடன் சுத்தி இருக்கிறா னு சென்னால் என்னால் நம்பவே முடியலை...  அது எப்படி எனக்கு ஒரு துளியும் ஞாபகம் இல்லை... “என்றான்..

பின் அந்த இடத்தை சுத்தி பார்க்க அந்த கோவிலும் தெரிந்தது...

“டேய்... நீயும் தீக்சாவும் இந்த கோவிலுக்குள் போனது எனக்கு  நினைவு இருக்கு.. நீ போய் பார்.. ஏதாவது ஞாபகம்  இருக்கானு?? “ என்றான் ஆனந்த்...

அதே மாதிரி உள்ளே சென்று பர்க்கவும் அங்கிருந்த  சின்ன கல்லால் ஆன   சிலையை காணவும் அவனுக்குள் எதுவும் தோன்றவில்லை....

அதை முன்பு பார்த்த மாதிரியே தெரியலை..

பின் வெளி வந்து மீண்டும் அந்த இடத்தை ஆராய எதுவுமே அவன் கண்ணுக்கு தெரியவில்லை..

சலித்து கொண்டே மலையிலிருந்து கீழ இறங்கி டெல்லி வந்தனர் இருவரும்.. மீண்டும் அவர்கள் சுத்தின இடமெல்லாம் அழைத்து சென்று காட்டினான் ஆனந்த்..

“சே.. ஒரு போட்டோ கூட இல்ல..  “ என்று  அலுத்து கொண்டான் ஆனந்த்

“டேய் ஆனந்த்... எனக்கென்னவோ நீ சொல்றதெல்லாம் பார்த்தா நீ ஏதோ உன் கனவுல கண்டதை  சொல்றேனு நினைக்கிறேன்..

தீக்சாவாது நம்ம  கூட சுத்தினதாவது?? என்று சிரித்தான் அபி...

ஆனந்த் அவனை முறைத்தான்... பின் ஏதோ யோசித்த அபி  

“ஆனால்...  அந்த குழந்தை ??  அவ என் பேபி தான்டா.. அதுல எந்த சந்தேகமே இல்ல.. அவள முதல் முதல்ல தீக்சா  வயித்துல பார்க்கறப்பயே எனக்குள் ஒரு சிலிர்ப்பு..

கண்டிப்பா அவ என் குழந்தைதான்.. ஆனால் அது எப்படினு தான் புரிய மாட்டேங்குது... “என்று மீண்டும் தன் தலையை பிடித்து கொண்டான் அபி...

ஆனந்த் சிறிது யோசித்தவன்

“டேய் மச்சான்.. ஒரு ஐடியா... அந்த கான்பிரன்ஸ் நடந்தப்போ போட்டோ எடுத்தாங்க... அதுல பார்த்தா தீக்சா இருக்கிறது  கன்பார்ம் ஆய்டும் இல்ல... “ என்றான் ஆனந்த்..

அதை கேட்டு துள்ளி குதித்தான் அபி..

“வாவ்...  சூப்பர் டா மச்சான் .. வாழ்க்கையிலயே இன்னைக்குத் தான் உருப்படியா ஒரு ஐடியா கொடுத்திருக்க... வா வா.. சீக்கிரம் போய் பார்க்கலாம். “

என்று தன் நண்பனை இழுத்து கொண்டு வேகமாக பறந்தான் அந்த இடத்தை நோக்கி...

அங்கு சென்று  அந்த கான்பிரன்ஸ் நடந்த போட்டோக்களை  கேட்க முதலில் தயங்கியவர்கள் அபி தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து கொடுக்க உடனே அவனுக்கு அந்த நாளில் பதிவாகியிருந்த புகைபடங்கள் மற்று வீடியோக்கள் கிடைத்தன...

அதில் முதல் நாள் பதிவை பார்வையிட்டவனுக்கு அதில் தீக்சாவை பார்க்கவும் ப்ரீஸ் ஆகி நின்றான் அபிநந்தன்...

முகத்தில் குறும்புடன் சிரிக்கும் கண்கள் கம்பீரமாக ஒரு நிமிர்வுடன் இருந்தாள் தீக்சா அந்த புகை படத்தில்...

இப்ப இருக்கும் தீக்சா வுக்கு  இது மாதிரி  எதுவும் இல்லை..  எப்பவும் இறுகி போய் ஒரு வெறித்த  பார்வையுடன் தான்  வலம் வருகிறாள்..

அவளா இது?? என்று  அவனால் நம்ப முடியவில்லை.... அவளுக்கு பின்னால் பார்க்க இன்னும் அதிர்ந்தான்...

அது அபியேதான்.. அவன் பின் வரிசையில் அமர்ந்து இருந்தான்..

ஆனால் அவன் கண்கள் அவளையே மொய்ப்பது அந்த புகைப்படத்திலும் தெளிவாக தெரிந்தது...

அவன் கண்களில் அத்தனை காதல்....

தானா அது?? என்று  அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது...

“என்னால் இப்படி கூட காதல் பார்வை பார்க்க முடிந்ததா??” என்று வியந்து பார்த்தான்... .

ஆனந்த் ம் அவன் படத்தையே சுட்டி காட்டி

“மச்சான்.. இப்பயாவது  நம்பறியா?? நான் சொன்னது உண்மை தான் னு,,, அதோட இந்த போட்டோவை பார்க்கையிலயே நீ தீக்சாவை லவ் பண்ணினனு  இப்ப கன்பார்ம் ஆவுது.... ஆனால் எங்களுத்தான் நீங்க காட்டிக்கலை..

சரி இரு... இன்னும் மற்ற படங்களை பார்க்கலாம்.. “ என்று  மீதி  இருந்த புகைபடத்தை  பார்க்க, கான்ப்ரன்ஸ் ன் தொடக்க நாள் க்கு பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்திருந்த புகைப்படமும் அதில் இருந்தது..

இப்பொழுது  தீக்சா தனியாக அமர்ந்து இருக்காமல் அந்த  ஐவருடன் இருந்தாள்... அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி..

அபி அருகில் தான் அமர்ந்திருந்தாள்....

அபியும் சிரித்து கொண்டே அவளை ஓரக் கண்ணால் தான் பார்த்து கொண்டிருந்தான்....

அதை பார்க்கவே அவனுக்கு நம்ப முடியவில்லை..அதை  ரசித்து பார்த்தவன் அந்த புகைப்படத்தை  தன் அலைபேசியில் பதிந்து கொண்டான்...

மீண்டும் அந்த புகைப்படத்தை  உற்று பார்க்க அவனுக்கு ஏதோ நெருடிது...

மீண்டும் அவசரமாக முதல் படத்தை  பார்க்க அதையே சூம் பண்ணி பார்க்க முதல் படத்திற்கும் இரண்டாவது புகைப்படத்திற்கும் வித்தியாசம் தெரிந்தது...

முதல் படத்தில் தீக்சா கழுத்தில் அந்த செயின் இல்லை..

ஆனால் இரண்டு நாள் கழித்து எடுத்து இருந்த  அடுத்த படத்தில் அவள் கழுத்தில் செயின் இருந்தது...

“ அந்த செயின்?? என்று கண்ண- சுறுக்கி யோசிக்க, அது தன் அன்னை அவனுக்காக ஒரு பிறந்த நாளுக்காக பரிசளித்தது நினைவு வந்தது..

அவசரமாக தன் கழுத்தை தடவியவன் அதில் அவன் செயின் மிஸ்ஸிங்... அப்படி என்றால் அது அவன் செயின் தான்...

அவன் செயின் அவள் கழுத்தில்..... அப்படி என்றால்??

அதுவும் முதல் நாளில் இல்லாமல் அடுத்த  இரண்டு நாட்களில் அவள் கழுத்துக்கு போயிருக்கிறது...

அப்ப அந்த இரண்டு நாட்களில் என்னவோ நடந்திருக்கிறது?? என்னவா இருக்கும்?? என்று மீண்டும் தன் மூளையை கசக்கி யோசித்தான்....

அப்பொழுதான்  அந்த சனிக்கிழமை  அவர்கள் அந்த மலை குன்றுக்கு சென்றது  நினைவு வந்தது...

அப்படி என்றால், அங்கு சென்றப்போ என்னவோ நடந்திருக்கும்?? என்னவா இருக்கும்?? என்று யோசிக்க எதுவும் நினைவில்லை...

மீண்டும் அந்த  படத்தையே ரசித்து பார்க்க அவள் விரலில் இருந்த மோதிரமும் புதுசாக இருந்தது இரண்டாவது படத்தில்..

இந்த செயின் மற்றும்  மோதிரம் இன்னும் அவள் அணிந்திருக்கிறாள்..

அவளை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு போகும்பொழுது அவன் இவற்றை அவளிடம் கண்டான்....

அந்த  மோதிரத்தை  மட்டும் தனியாக சூம் பண்ணி பார்த்து  அதை தன் அலைபேசியில் பதிந்து கொண்டான்..

ஆனந்த் அவர்கள் முதல் நாள் மாலை டெல்லியை சுத்தி பார்க்க சென்றபொழுது அபி ஏதோ வாங்கினான் என்று கூறினான்....

அந்த கடைக்கு சென்று அந்த மோதிரத்தை  காட்டி கேட்க அது அந்த  கடை உடையது  மற்றும் அவன்தான் அதை வாங்கினான் என்பதும் உறுதியானது....

அதை எல்லாம் வைத்து பார்க்க அவனுக்கு இன்னுமே குழப்பமாக இருந்தது....

மீண்டும் ஒரு காபி சாப்பிற்கு சென்று  சூடாக காபி குடித்தவன்  தன் தலையை பிடித்து கொண்டு சிறிது நேரம் யோசித்தான்...

மீண்டும் சென்ற வருடத்திற்கு சென்று  அவன் அப்போதிருந்த மனநிலையில் தீக்சாவை சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று  கற்பனை பண்ணி பார்த்தான்...

அதன் படி தான் அவளை கண்டதும் காதல் கொண்டிருக்க வேண்டும்.. தன் காதலை  அவளிடமும் சொல்லி இருக்க வேண்டும்...

எப்படியோ அவளை சம்மதிக்க வைத்து தன் காதலை  அவள் ஏற்றுக் கொள்ள வைத்திருக்க வேண்டும்

ஆனால் அந்த  செயின்?? என்று  யோசிக்க அந்த குன்றின் மீது இருந்த கோவில் நினைவு வந்தது..

ஒருவேளை   அவள் கண்  மூடி நின்றிருக்க, தான் அதை அவள் கழுத்தில்  அணிவித்திருக்க வேண்டும்...

திருமணம் முடிந்தது என்று எண்ணி கொண்டால் ?? என்றவனுக்கு அவன் காதல் பார்வை நினைவு வர, டக்குனு இப்படித்தான் நடந்திருக்கும் என்று  யோகிக்க முடிந்தது..

அதை  உறுதி படுத்த மீண்டும் அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்...

அதில் அவன் தீக்சாவை பற்றி விசாரிக்க, அவனுக்கு அடுத்த  அறைதான் அவளுடையதும்..

ஆனால் இரண்டாவது நாளே அவள் அறையை காலி பண்ணி விட்டு அபியின் அறைக்கு வந்திருந்தது தெரிந்தது... அப்படி என்றால் இருவரும் ஒன்றாகத்தான் தங்கி இருந்திருக்கின்றனர்...

அப்பொழுது தான் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்க வேண்டும்... அதன் பரிசுதான் அந்த குட்டி தேவதை  என புரிந்தது அபிநந்தனுக்கு...

“ஆனால் அதன் பிறகு என்ன நடந்திருக்கும்?? ஏன் என்னை விட்டு விலகி போனாள்?? அவள் வாழ்க்கையில் நடந்தது  என்ன??”  என்று  யோசிக்க எதுவும் தெரியவில்லை அவனுக்கு...

மீண்டும் அவள் எப்பொழுது அறையை காலி பண்ணினாள் என்ற விவரம் அதில் இல்லை...

தன் தலையை பிடித்தபடி வெளியில் வர, அங்கு இருந்த ஒரு டாக்சி ட்ரைவர் தன் காரில் இருந்து  இறங்கி வந்து

“சார்.. நல்லா இருக்கிங்களா?? உங்க வொய்ப் நல்லா இருக்காங்களா??”   என்றான்...

அதை கேட்டு முழித்தான் அபி

“என்ன சார்.. என்னை ஞாபகம்  இல்லை... கிட்டதட்ட 10 மாசம் முன்ணாடி இந்த ஹோட்டல் ல இருந்து ஏர்போர்ட் போகணும்னு நிங்க என்னை கூப்டிங்களே... உங்க வொய்ப் கூட அழுதுகிட்டே வந்தாஙக...நீங்க அவங்களை சமாதானம் படுத்திகிட்டு வந்தீங்க....

ஏர்போர்ட் இறங்கினதும் சேன்ச் இல்லைனு 2000 ரூபாய் நோட்டை கொடுத்துட்டு போனிங்க சார்.. நம்ம ஊர் காரர் என்றதும் நான் அதை இன்னும் மறக்கலை...

உங்க வொய்ப் நல்லா இருக்காங்களா?? அன்னைக்கு அழுதுகிட்டே போனாங்களே...   அதன் பிறகு வீட்ல  ஒன்னும் பிரச்சனை  இல்லையே.. “என்றான் அக்கறையாக

அபியும் சமாளித்து அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை பையா.. தேங்க்ஷ் பார் யுவர் ஹெல்ப்.. ஆமா எந்த நாள் அது னு  ஞாபகம்  இருக்கா ? “ என்றான் அபி ஆர்வமாக..

“வெள்ளி கிழமை தான் நினைகிறேன்  சார்... “ என்றான்..

“அப்படி என்றால் தீக்சா வீட்டில என்னமோ நடந்திருக்கு...  அவ அழுதுகிட்டே போயிருக்கானா   சம்திங் சீரியஸ்... அதை எப்படி தெரிஞ்சுக்கறது?? என்றான் அபி

பின் ஆனந்த் ஐ பார்த்து

“உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்காடா?? “ என்றான் ஆர்வமாக ...

ஆனந்த் ம் சிறிது நேரம் யோசித்தவன்

“சரியா ஞாபகம் இல்லடா மச்சான்.. ஆனால் கான்ப்ரன்ஸ் கடைசி நாள் நீங்க இரண்டு பேருமே ரொம்ப நேரமா வரக்  காணோம்... அதனால போரடிக்க, நாங்களும் கிளம்பி வெளில சுத்த போய்ட்டோம்...

அப்புறம் ஈவ்னிங் திரும்பி வந்தப்ப, நீ அவார்ட் செரிமனியில பிசியா இருந்த... நானும் அதுக்கப்புறம் உன்கிட்ட பேச முடியலை..

அப்புறம் நான் கான்ப்ரன்ஸ் முடிஞ்ச உடனே லண்டன் போய்ட்டேன்.. அதனால அன்னைக்கோ இல்ல அடுத்த நாள் நீ எப்ப கிளம்பி சென்னை போனனு எதுவும் எனக்கு தெரியலை டா .. “ என்றான் ஆனந்த் யோசித்தவாறு...

பின் ஏதோ ஐடியா வர,

“டேய்.. பேசாம நீ  தீக்சா கிட்டயே கேட்டுக்க டா..” என்றான் ஆனந்த்

“டேய்.. இடியட்... அவ என்ன காரணத்துகாகவோ என்னையே தெரியாத மாதிரி நடந்துகிட்டிருக்கா... அதில்லாம அவ ஹஸ்பன்ட் துபாய் ல இருக்கானு சொல்லிகிட்டிருக்கா...

அவ கிட்ட போய் என்ன நடந்துச்சுனு கேட்டா உடனே அவ சிரிச்சுகிட்டே சொல்லிடுவாளாக்கும்...

இப்ப இருக்கிற தீக்சாவை பார்த்த கிட்ட கூட நெருங்க முடியாது.. அவள் பெயரை போலவே நெருப்பு மாதிரி இருக்கா.. என்னையே எப்படி தள்ளி வச்சிருக்கா தெரியுமா??

என் குழந்தையை பார்க்க கூட வரக்கூடாதுனு கழுத்தை புடிச்சு வெளில தள்ளாத குறையா விரட்டி அடிச்சிட்டா... இராட்சசி  “ என்றான் வேதனையுடன்

“ஓ.. அப்படீனா உன் மேல கோபத்துல இருக்கானு  நினைக்கிறேன்... வேணா ஒன்னு செய்.. அவங்கம்மா கிட்ட சொல்லி என்ன நடந்ததுனு  கேள் டா.. “ என்றான் ஆனந்த்...

அதை கேட்டு முகம் மலர்ந்தது அபிக்கு

“டேய் மச்சான்.. நிஜமாலுமே உனக்கு மூளை இன்னைக்கு சூப்பராதான் வேலை  செய்யுது மச்சான்.. “ என்று  அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டவன் உடனே பரிமளம் எண்ணிற்கு அழைத்தான்..

“எதுக்கும் இருக்கட்டும் என்று  அவர் எண்ணை வாங்கி வைத்தது நல்லதா போச்சு.. “என்று  எண்ணி கொண்டே அழைத்தான்...

 அவன் அழைப்பை ஏற்றவர் ஹலோ என்க

“ஆன்ட்டி.. நான் அபிநந்தன் பேசறேன்... தீக்சாவோட பாஸ்.. உங்ககிட்ட தீக்சாவை பத்தி கொஞ்ச பேசணும்.. பேசலாமா?? “ என்றான் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு...

அவரும் சுற்றிலும் பார்க்க தீக்சா உறங்கி கொண்டிருக்க, கதவை மெல்ல  சாத்தி விட்டு கீழிறங்கி  வந்தார்...

அந்த  அபார்ட்மென்ட் லயே வாக்கிங் போவதற்கு என்று  சிறு இடத்தை  ஒதுக்கி இருந்தார்கள்.. முதியவர்கள் வாக்கிங் சென்று விட்டு பின் அமர்ந்து ஓய்வு எடுக்க என்று போடபட்டிருந்த அந்த பென்சில் சென்று அமர்ந்தவர்

“ஆங் சொல்லுங்க தம்பி... என்ன பேசணும்... “ என்றார்...

“வந்து.. தீக்சாவோட ஹஸ்பன்ட் பேர் என்ன ஆன்ட்டி.. எங்க ஆபிஸ் ரெக்கார்ட் ல பதிவாகாம இருக்கு... அது அப்டேட் பண்ணத்தான்..” என்றான் உண்மையை மறைத்து கொண்டு..

“ அது வந்து.... “ என்று  இழுத்தார் பரிமளம்...

“என்னாச்சு ஆன்ட்டி.. மாப்பிள்ளை பெயரை சொல்லக் கூடாதுனு தயங்கறீங்களா?? “ என்றான்...

அவர் என்ன பெயர் சொல்ல போகிறாரோ என்று திக் திக் என்று அடித்து கொண்டது...  மீண்டும் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு அவர் என்ன சொல்ல போகிறார் என்று காத்திருந்தான்... .

“அதெல்லாம் இல்லப்பா.... எனக்கு அவர் பெயர் சரியா தெரியலை.. தீக்சா ஏதோ சொன்னா.. ஆனா சரியா தெரியலை..” என்றார் தயக்கமாக...

அதை கேட்டு இலேசாக அதிர்ந்தவன்

“என்ன சொல்றீங்க ஆன்ட்டி... உங்க மாப்பிள்ளை பேர் தெரியாதா??

நீங்க தான கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க?? இன்விடேசன்ல   போடறப்பயாவது மாப்பிள்ளை பேரை போட்டிருப்பீங்களே?? “ என்றான் ஆச்சர்யமாக

அதை கேட்டு அவர் முகத்தில் வேதனை பரவியது...  ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவர்

“தீக்சா கல்யாணம் எங்க முன்னால நடக்கல ப்பா... “ என்றார் ஆதங்கமாக...

ஓரளவுக்கு அபி இதை எதிர்பார்த்ததுதான்... ஆனாலும் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டி மேலும் அவரை கிளறினான்....

“ஓ.. ஏன் ??  என்னாச்சு ஆன்ட்டி.. “ என்றான்

“ஹ்ம்ம்ம் அது ஒரு பெரிய கதை... உன்கிட்ட சொல்லத்தான் தோணுது..

ஏனோ  உன்னை பார்த்ததில் இருந்தே மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.. நீ மட்டும் அன்னைக்கு தீக்சாவை சரியான நேரத்துல ஹாஸ்பிட்டல் சேர்க்கலைனா ??  என்றவர் உடல் நடுங்க

“என் பொண்ணை நான் பார்த்தே இருந்திருக்க முடியாது.... அதனால சொல்றேன்..

நான் இப்படி எதுவும் சொன்னே னு  தீக்சாகிட்ட சொல்லிடாதிங்க.. என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவா... “ என்றவர் தன் கதையை தொடர்ந்தார்....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!