பூங்கதவே தாழ் திறவாய்-28

 


இதழ்-28

 

ரண்டு மாதங்கள்  ஓடியிருந்தன....

இந்த இரண்டு மாதத்தில் தீக்சா ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு வந்திருந்தாள்...

அவளின் கவனிப்பில் அவள் அன்னையும் தன் மகளுக்காக வாழ வேண்டும் என்று முயல, இருவருமே அந்த வீட்டு தலைவரின் மறைவில் இருந்து ஓரளவுக்கு வெளி வந்திருந்தனர்...

ன்று காலை அலுவலகம் கிளம்பி தன் ஹேண்ட் பேக்கை  எடுத்து கொண்டு தன் அன்னை கட்டி கொடுத்த டிபன் பாக்சை தன் கேண்ட் பேக்கில் வைத்து கொண்டே டீபாய் மீதிருந்த அந்த பிசினஸ் மேகசின் மீது அவள் பார்வை  பட்டது...

உடனே அதிர்ந்து நின்றாள்... அந்த  அட்டையை மீண்டும் உற்று பார்க்க அபிநந்தன கம்பீரமாக சிரித்து கொண்டிருந்தான் அந்த மேகசின் அட்டையில் ...

இந்த வருடத்திற்கான சிறந்த தொழில் அதிபருக்கான அவார்ட் வாங்கிய  மகிழ்ச்சியில் அந்த கோப்பையை கையில் ஏந்தி கொண்டு ஸ்டைலாக போஸ்  கொடுத்திருந்தான் அபிநந்தன்...  அவள் கணவன்..

அவனை மீண்டும் புகைபடத்தில் கண்டதும் அவள் உள்ளே இலேசாக அதிர்வலைகள்..

அவனை மறந்து விட்டதாக எண்ணி இருக்க அவன் முகம் இப்பொழுது கண் எதிரில் இருக்க தன்னையும் மீறி  அந்த மேகசினை எடுத்து புரட்டினாள்...

அவனை பற்றிய சிறு கட்டுரை இருந்தது..

அவனுடைய அறிவு திறமையை யும்  தொழில் வளர்ச்சி பற்றியும் குறுகிய காலத்தில் தன் தொழில்களை இலாபகரமாக கொண்டு வந்ததையும் பற்றி விவரித்திருந்தனர்..

அவன் திறமை பற்றி அவளும் அறிந்தது தானே... பின் பெர்சனல் விவரத்தில் அவன் இன்னும் மணமாகாதவன் என்று போட்டிருக்க, அது அவள் இதயத்தில் ஈட்டியாக குத்தியது...

அவளை அந்த செயினை போட்டு அந்த இயற்கை சாட்சியாக மணந்து கொள்கிறேன் என்றானே.. அப்ப அந்த சத்தியம் என்னாச்சு?? ..

தன்னை இன்னும்  மணமாகதவன் என்று  சொல்லி கொள்கிறான் என்றால் என்னை முற்றிலும் தவிர்த்து விட்டான்...

நான் அவன் மனைவி இல்லை...

என்னை அவன் தேவைக்காக பயன்படுத்தி  கொண்டு அவன் ஆசை மோகம் தீர்ந்ததும்  என்னை தூக்கி எரிந்து விட்டான்....

அவன் தன்னை மனைவியாக எண்ணாமல் அவன் உடல் தேவைக்காக அவளை பயன்படுத்தினான் என்று எண்ண அடுத்த நொடி அவளுக்கு குமட்டி கொண்டு வந்தது...

“சே....இப்படி பட்ட ஒருவனுடனா நான் கொஞ்சி இழைந்து அவனுடன் பின்னி பிணைந்து என் இரவுகளை கழித்தேன்??  என்று  எண்ணுகையில் அவளையும் மீறி குமட்டல் வந்தது...

நின்று கொண்டிருந்தவள் நேராக  வாஷ்பேசினுக்கு ஓடினாள்....

சமையல் அறையில் இருந்த பரிமளம் பயந்து போய் வேகமாக ஓடி வந்து அவள் தலையை பிடித்து கொள்ள தீக்சாவும் மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தாள்...

பின் இலேசாக மயக்கமாக  இருப்பதாக சொல்லி  சோபாவில் சாய்ந்தவள் அப்படியே கண்ணை  மூடி கொண்டாள்...

சிறிது நேரம் கழித்து கண்ணை தீர்ந்து பார்க்க , தன் எதிரில் தன் அன்னையுடன் வேற ஒரு பெண்மணியும் இருப்பதை பார்த்து புருவங்களை சுருக்கினாள்....

அவரும் அவளை அப்பொழுதுதான் பரிசோதித்தவர் தீக்சா முழித்து கொண்டதை கண்டு சிரித்து கொண்டே

பயப்பட ஒன்னும் இல்ல மா... உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கா.. அதான் தலை சுத்தல் வாந்தி வந்திருக்கு.. ஒரு மூனு மாசத்துக்கு அப்படிதான் இருக்கும்....."என்று சிரித்தார்...

அவர் சொன்ன செய்தியை கேட்டு இரு பெண்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.... பரிமளமோ தலையில் இடி விழுந்ததை போல தள்ளாடினார்....

 அதற்குள்  அந்த டாக்டர்

"ஏம்மா கைனிக் யார்கிட்டயாவது செக்கப் பண்ணிட்டியா?? "  என்றார்...

அதற்குள் தன்னை ஓரளவுக்கு இயல்புக்கு கொண்டு வந்தவள்

“இல்லை ..” என்று தலை அசைத்தாள் தீக்சா..

“சரி நீ போய் முதல்ல பேசிக் செக்கப் ஒன்னு முடிச்சிடு.. ரொம்ப வாமிட் வந்தால் இந்த மாத்திரியை  வாங்கி சாப்பிடு ... “ என்று  சொல்லி ஒரு பிர்ச்கிரிப்சனை எழுதி கொடுத்தார்...

தீக்சவும் எழுந்து தன்  பர்சை திறந்து அவருக்கு பீசை எடுக்க

“இருக்கட்டும் மா.. நான் பக்கது போர்சன்ல தான் இருக்கேன்..உன் அம்மா எனக்கு நல்ல பழக்கம்... இதுல என்ன இருக்கு.. நீ உன் உடம்பை பார்த்துக்கோ..

வர்ரேன் மா .. " என்றவாறு பரிமளத்திடம் விடைபெற்று சென்றார்....

அவர் சென்றதும் பரிமளம் மெல்ல நடந்து வந்து சோபாவில் பொத்தென்று அமர்ந்தவர் தன் மகளை ஒரு வெறித்த பார்வை பார்த்தார்..

அந்த பார்வையில் இருந்த வெறுப்பை கண்டு கலங்கிய தீக்சா வேகமா அருகில் வந்து தன் அன்னையின் அருகில் அமர்ந்து அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து

"ப்ளீஸ் மா...  என்னை அப்படி பார்க்காதா.. நான் உன் பொண்ணு...  எந்த தப்பும் பண்ணலை...

இது,  இந்த குழந்தை முறையா கல்யாணம் ஆகி நாங்க கணவன் மனைவியா இணைந்த பிறகு உண்டானதுதான்....”   என்றாள் வேதனையுடன்

அதை கேட்டு இன்னும் அவர் அதிர்ந்து போய் தன் மகளை  பார்க்க அதற்கு மேல் மறைக்காமல்

“ப்ளீஸ் மா.. என்னை மன்னிச்சிடு... உன்கிட்ட முன்னாடியெ சொல்லி இருக்கணும்.. நான் டெல்லியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு உன் கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லணும்னு நினைத்திருந்தேன்..

அதற்குள் அப்பா என்னை விட்டு போய்ட்டார்.. அப்ப இருந்த நிலையில் உங்க கிட்ட சொல்ல தயக்கமா இருந்தது... அதான் பின்னாடி சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்...  "

என்று கண் கலங்கியவள் நடந்தவற்றை  மறைக்காமல்  அப்படியே சொன்னாள் தன் அன்னையிடம்....

சொல்லி முடித்ததும் தன்  அன்னையின் முகம் நோக்க அவர் முகமோ இன்னும் இறுகி போய் வேதனையை அப்பியிருந்தது...

அதை கண்டவள் கலங்கி

“ப்ளீஸ் மா.. என்னை  வெறுத்துடாத.. என்னால் தாங்க முடியாது..

ஏதோ அவர் அவசரபட்டதால் எனக்கும் அப்ப ஒன்னும் செய்ய முடியலை.. எனக்கும்  அவரை புடிச்சதால எல்லை மீறி பெரியவங்க உங்க கிட்ட சொல்லாம எல்லாம் நடந்திருச்சு.... " என்றாள் வேதனையுடன் தன் அன்னையின் கையை பற்றி....

அதுவரை  அவளை வெறித்து பார்த்திருந்த பரிமளம் மெல்ல வாய் திறந்து

"சரி.. மாப்பிள்ளை எங்க?? “  என்றார் இன்னும் அதே வெறித்த பார்வையுடன்.. ..

அதை கேட்டு அதிர்ந்து போனாள் தீக்சா..

“மாப்பிள்ளை என்னை ஏமாத்திட்டார்... அவர் என்னை யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி என்னை அனுபவித்து விட்டு இப்ப என்னை கை கழுவிட்டு  என்னை தெரியாது னு சொல்லிட்டார் என்றால் தன் அன்னையால் தாங்க முடியாது..”   என்று அவசரமாக யோசித்தவள்

"வந்து.. .அவர் துபாய் போய்ட்டார் மா.. அவர் அங்குதான்  வேலை செய்யறார்.. இந்த கான்பிரன்ஸ்ககக இங்க வந்திருந்தார்... அப்பதான் எனக்கு பழக்கமாச்சு... உடனேயே கல்யாணம் பண்ணிகிட்டோம்.. அவர் கான்பிரன்ஸ் முடிஞ்சதும் துபாய் போய்ட்டார்...

இன்னும் ஒரு வருசம் கழிச்சு வந்து என்னை கூட்டிகிட்டு போறதா சொல்லி இருக்கார்... “ என்று அவசரமாக நடுக்கத்துடன் ஒரு பொய்யை சொல்லி  சமாளித்தாள்.....

எப்பொழுதும் யாரிடமும் பொய் சொல்லி பழக்கமில்லாத அவளுக்கு தன் அன்னையிடம் முதல் முறையாக ஒரு பெரிய உண்மையை மறைக்க இப்படி மாத்தி சொல்ல வேண்டி இருக்கிறதே என்று மனதை பிசைய, அதை சொல்லி முடிப்பதற்குள் பலமுறை  செத்து பிழைத்தாள்....

அதை  கேட்டு நம்பாமலும் நம்பியும் என்று தன் மகளை பார்த்தார் பரிமளம்..

“நான் சொல்றது நம்புமா.. உன் பொண்ணு  தப்பு பண்ணலை.. இதுதான் உன் மாப்பிள்ளை எனக்கு போட்ட தாலி.... “  என்று  தன் செயினை  எடுத்து  தன் அன்னையிடம் காட்டினாள்..  

அந்த  மோதிரத்தையும் காட்டி

“இதெல்லாம் அவர் காதலின் அடையாளமாக  எனக்கு பரிசாக கொடுத்ததுமா..

அவர் அம்மாகிட்ட கூட நான் பேசிட்டேன்.. அவங்களும் என்னை  ஏத்துகிட்டாங்க.. நீங்களும் அப்பாவும் ஒன்னும் சொல்ல மாட்டிங்கனுதான் நேர்ல வந்து சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்..

ப்ளீஸ் மா.. என்னை  வெறுத்துடாத.. என்னை  நம்பு " எனறு  தன் அன்னையின் மடி மீது தலை சாய்ந்து குலுங்கினாள்... ..

அதற்குள் தன்னை ஓரளவுக்கும் சமாளித்து கொண்ட பரிமளமும் தன் மகளின் முதுகை ஆதரவாக வருடியவர்

"உன்னை நம்பறேன் தீக்சா...  என் பொண்ணு எப்பவும் தப்பு பண்ண மாட்டா .. எங்கயும் கவனமா இருப்பானு எனக்கு தெரியும்... ஆனால் எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்... " என்று  பெருமூச்சு விட்டார் ஆதங்கமாக...

“தப்புதான் மா..  தப்பு தான்..உங்க கிட்ட சொல்லாம காதல் மோகத்துல அவசரபட்டது தப்புதான்...  அதுக்கான தண்டனையைத்தான் இப்ப அனுபவிச்சுகிட்டிருக்கேன்.. "என்று  மனதுக்குள் சொல்லி மருகினாள் தீக்சா  ...

பின் பரிமளம் அவளுக்கு மேலும்  உண்ண கொடுத்து அவளை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்...

அங்கு அவள் கற்பம் உறுதியாகிவிட இரு பெண்களுக்குமே அதற்கு சந்தோச படணுமா இல்லை கவலை படணுமா என்று புரியவில்லை....

வீட்டிற்கு வந்த தீக்சாவோ அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து அசதியாக இருப்பதாக சொல்லி தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தவளுக்கு அதுவரை அணைபோட்டு தேக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் காட்டாற்று வெள்ளம் போல அணையை  உடைத்து கொண்டு பாய்ந்தோடி வந்தது....

தலையணையில் முகம் புதைத்து குலுங்கினாள்...

அவனை பற்றி நினைக்கவே  கூடாது என்று உறுதியாக இருந்தவளுக்கு அவனை என்றும் மறக்க முடியாத நினைவு சின்னமாக அவன் குழந்தை, அவன் உயிர் என் வயிற்றில்.....

அன்று தன் குழந்தையை பற்றி  நந்தன் சொல்லியது நினைவு வந்தது...

பெண் குழந்தை வேண்டும் என்று அவ்வளவு ஆசையாக  கொஞ்சினானே...

அவன் சொன்ன  மாதிரியே அவன் மகள் என் வயிற்றில்... கண்டிப்பா இது அவன் ஆசைப்படி, பொண்ணாகத்தான் இருக்கும்... .

ஆனால் அவளை  தூக்கி கொஞ்ச அவன் அருகில்  இருக்க மாட்டானே...என்னைத்தான் யாரென்று தெரியாது என்று விரட்டி விட்டானே...  அப்ப அப்பா இலலாமல் இந்த குழந்தை வளர போகிறாளா??

என்னை பற்றியும் என் மகளை பற்றியும் இந்த சமுதாயம் எவ்வளவு கேவலமாக பார்க்குமே....

எனக்கு எதுக்கு இந்த தண்டனை என்றவளுக்கு அப்பொழுதுதான் உறைத்தது....

அவனும் நானும் இணைந்து பெரியவர்களுக்கு தெரியாமல் அவசரபட்டு தப்பு பண்ணினதுக்கு எனக்கு மட்டும் எதுக்கு இந்த தண்டனை...தப்பில் முழுபொறுப்பும் அவனுடையது தான்...

ஆனால் அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லையே... வாய் கூசாமல் திருமணம் ஆகாதவன் என்று சொல்லி கொள்கிறான்....

ஆனால் அவன் செய்த தப்புக்கு உடந்தையாக அவனுக்கு இடம் கொடுத்து வளைந்து துணை சென்றதால் எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை??”  ...என்று யோசிக்க,

அவள் பருவம் அடைந்த பொழுது அவள் தந்தை அவளை அருகில் அமர்த்தி கொண்டு அவளுக்கு கூறிய அறிவுரைகள் நினைவு வந்தன....

“தீக்சா மா... இவ்வளவு நாள் நீ சொன்ன பொண்ணு...சிறு பிள்ளையாக பூச்செடியில் இருக்கும் அரும்பாக, மொட்டாக இருந்த....

மொட்டாக இருந்த நீ  இப்ப ஒரு பூவாக மலர்ந்து விட்டாய்...

பூ மலர்ந்ததுமே தன்னை சுற்றிலும் மணம் வீசும்.... அந்த மணத்துக்காக அந்த மலரை  சுற்றி நிறைய வண்டுகள் மொய்க்கும்...

ஆனால் அந்த மலரை போல நீ அந்த வண்டுகளிடம் ஏமாந்து நிக்க கூடாது... உன் பூவிதழால் உன் மனக்கதவை அறைந்து தாளிட்டு சாத்திவிட வேண்டும்...

உரிய காலம் வரும்வரை எந்த வண்டையும் உன் பூங்கதவிற்குள் தாள் திறந்து நுழைய அனுமதிக்க கூடாது...

நீ நல்லா படித்து ஒரு பெரிய வேலைக்கு போய் உன் சொந்த கால் ல நின்னு பின் உன் வாழ்க்கை துணைவனை தேர்ந்தெடுத்து அவனை முறைப்படி மணந்த பிறகுதான் உன் கதவை திறக்கணும்...

அதுவரை உன் மனதை சலனப்படாமல் பார்த்துக்கணும்...

பெண்மை என்பது பெரிய பொக்கிசம்..அதை பாதுகாத்து உன் வாழ்க்கை துணைவனிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்...

அதுவரை நீ ஒரு பூவாக இல்லாமல் நெருப்பாக இருக்கணும்...

யாரையும் கிட்ட நெருங்க விட க்கூடாது... தள்ளி வைத்து பார்க்கணும்... “ என்று அவள் தலையை வருடியபடியே ஒரு தாயாய், தோழனாய் அன்று அவர் சொன்ன அறிவுரைகள் கண் முன்னே  வந்தன....

அதே போல எத்தனையோ பேர் காதல் என்று பிதற்றி அவளை நெருங்க முயல ஒரு நெருப்பு பார்வையில் அவர்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டாள்...

ஆனால் ??

இந்த அபிநந்தன் என்ற வண்டை மட்டும் எப்படியோ இனம் கண்டு கொள்ள முடியாமல் போய்விட்டது...

அவனை கண்டதும் அவள் பூமனமும் காதல் கொண்டு அந்த வண்டிடம்  மயங்கியதில்  தன் தந்தை சொன்ன எச்சரித்திருந்திருந்த மந்திரங்கள் எல்லாம் மறந்து விட்டது...

இல்லை மறக்கடித்து விட்டான் அந்த மோசக்காரன்... யாருக்கும் அடங்காமல் சுற்றி திரிந்த இந்த புள்ளி மானை வெண்புறாவை காதல் என்ற வலையை வீசி பிடித்து விட்டான்...

பிடித்ததும் மட்டுமல்லாமல் அந்த பூவின் தேனையையும் ருசித்து விட்டான்... 

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்கிற மாதிரி, தன் தந்தையின்  சத்திய வார்த்தைகள் எல்லாம் அப்பொழுது மறந்து விட்டதே....

இல்லை மறக்கடித்து விட்டான் அந்த மோசக்கரான்....வண்டாக என்னை  மொய்த்து அவன் வீசிய காதல் வார்த்தையில் மதி மயங்கி தன்னை மறந்து என் பூங்கதவை திறந்து அவனை உள்ளே அனுமதித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு....

மற்றவர்களை போலவே அவனையும் என் அறைகதவை விட்டு தள்ளி நிக்க வைத்திருக்க வேண்டும்.... இவ்வளவு வலி வேதனை இருந்திருக்காது....

அவன் கொடுத்த அந்த சுகத்தை விட , இந்த  வலி வேதனை பெரிதாக இருக்கிறதே... “ என்று கலங்கியவள்  

“இப்படி ஒரு குழந்தை தேவையா?? என்னை ஏமாற்றியவன் உயிரை அவப்பெயருடன் நான் காலம் முழுவதும் சுமக்கத்தான் வேண்டுமா??  

பேசாமல் கருவிலயே கலைத்து விடலாமா?? “  என்று யோசிக்க அடுத்த நொடி அவள் உடல் நடுங்கியது...

“இல்லை.. இது என் நந்தனின் உயிர்.. அவன் என் மேல் காட்டிய அன்புக்கும் காதலுக்குமான பரிசு.. அவன் காதல் பொய்யாக இருக்கலாம். ஆனால் என் காதல் உண்மையானது...

நான் அவனை காதலித்ததுக்கும் அவனை நம்பி ஏமாந்ததுக்கும்  தண்டனையாக இந்த குழந்தையை பெத்து எடுத்து வளர்க்கணும்.. இனி இவள் மட்டும்தான் என் உலகம்.... " என்று  உறுதி செய்து கொண்டாள்...

அதன் படி அடுத்த நாளில் இருந்து ஒரு தெளிவுடன் வளைய வந்தாள் தீக்சா..

ஆனால் அவள் கண்ணில் முன்பு இருந்த அந்த துள்ளல், குறும்புத்தனம் தொலைந்து போய் ஒரு வெற்று பார்வை மட்டுமே...

பரிமளத்திற்கும் அதை கண்டு யோசனையாக இருந்தது.... அதன்பிறகு ஒவ்வொரு முறையும் தன் மாப்பிள்ளையை பற்றி கேட்கும்பொழுதும் ஏதாவது சொல்லி சமாளித்து வந்தாள் தீக்சா...!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!