என்னுயிர் கருவாச்சி-38

 


அத்தியாயம்-38

 

டேய் பைரவா... வந்தவங்களை உள்ள விடாமல் என்ன பண்ணிகிட்டிருக்க. அவங்களை விட்டு தள்ளி போ...”  என்ற பெண்மணியின் வெண்கல குரலுக்கு  அடிபணிந்து உடனே பூங்கொடியை விட்டு விலகி நின்றான்  பைரவன்.  

குரல் வந்த திசையை திரும்பி  பார்த்தாள் பூங்கொடி.  

அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி,  நல்ல பெரிய பார்டர் வைத்த  காஞ்சிபுரம் பட்டுபுடவையும், கழுத்தில் தங்கத்திலான ஆரம்,  வைர அட்டிகை...  வைரத்தோடு...நெற்றியில் வட்டமாக பெரிய சைஸ் பொட்டு வைத்திருக்க,  அவர்களை நோக்கி புன்னகையோடு வந்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் பூங்கொடி மீண்டும் கண்களை அகல விரித்தாள்.

“மாமா... இவங்க என்ன நடமாடும் நகைக்கடையா? ஷோ-கேசில் வைப்பதை எல்லா நகையையும் எடுத்து , கழுத்து, காது, மூக்குனு மாட்டிகிட்டு இருக்காங்க...” என்று ராசய்யாவிடம் கிசுகிசுக்க, அவளை முறைத்தவன்

“சும்மா இருடி. இவங்கதான் பண்ணையாரம்மா.. பேர் பத்மினி அம்மா...” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட்டவர் 

“அடடா...  என்ன ராசு... வீட்டிற்கு வந்த பொண்ணை  இங்கயே நிக்க வச்சுட்டு  உன் பிரண்டு கிட்ட கொஞ்சிகிட்டு இருக்கியா? நேரா உள்ள வர வேண்டியதுதான?  என்று செல்லமாக கடிந்து கொள்ள, ராசய்யாவோ அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.

பின் பூங்கொடியை  பார்த்த அந்த நகைக்கடையும்,

“வாம்மா... நீதான் ராசுவை கட்டிகிட்ட பொண்ணா?  நீ ரொம்ப கொடுத்து வச்சவ.  ராசு மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்...”  என்று அவளின் முகத்தை வருடி விட்டார்.  

பூங்கொடியும் அவரைப் பார்த்து புன்னகைக்க, அவளின்  அந்த புன்னகையை கண்டவர்  

“சும்மா சொல்லக்கூடாது ராசு... மாநிறமா இருந்தாலும் உன் பொண்டாட்டி பாக்கறதுக்கு லட்சணமா இருக்கா...”  என்று சொல்லி புன்னகைக்க,  அவரின் மாநிறம் என்றதை கேட்டதும் அதுவரை மலர்ந்திருந்த அவளின்  முகம் கருத்தது.

அந்த பெண்மணியை உள்ளுக்குள் முறைத்த படி அவரை ஆராய்ந்து பார்க்க, அவள் உள்ளே சுருக்கென்று தைத்தது..

ஏனென்றால் அந்த அம்மணி சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு வெள்ளை வெளேரென்று இருந்தாள்.

“பின்ன... இம்மாம் பெரிய பங்களாவுல,  வீட்டுக்குள்ளேயே அதுவும் ஏ.சியில் சுத்திகிட்டிருந்தா வெள்ளையாக இல்லாம எப்படி இருப்பாங்களாம்?  

என்னை  மாதிரி ஒரு வாரத்துக்கு வயல்காட்டுல அலைஞ்சா, இந்த அம்மாவும் என்னை விட மோசமான கலருக்கு போய்டுமாக்கும்...நானாவது மாநிறம்தான்...இந்த அம்மாவெல்லாம் பார்க்க சகிக்காது...” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.  

“சரி... வாங்க உள்ளே போகலாம்....”  என்று இருவரையும் அழைத்துச் செல்ல, அவர்கள்  இருவரும் அவரை பின் தொடர்ந்தனர்.  

*****

ள்ளே சென்றவள்,  அந்த பிரம்மாண்ட மாளிகையை பார்த்ததும் மீண்டும் ஆவென்று வாயைப் பிளந்தாள்.

ஒரு ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்திருந்தது வரவேற்பறை...

திரைப்படத்தில் பார்த்ததை போல, மேல் தளத்திற்கு செல்ல, இரண்டு பக்கமும் வளைவான படிகள் அமைத்து அதன் மீது  சிவப்பு கம்பளம் விரித்து வைக்க பட்டிருந்தது.

வரவேற்பறையில் எல்லாமே விலை உயர்ந்த தேக்கு மரத்தாலான விதவிதமான சோபாக்கள்.. ஆங்காங்கே கண்ணை கவரும் வண்ண ஓவியங்கள்...அலங்கார லஸ்தர் விளக்குகள் தொங்கவிடப்பட்டிருக்க,  அதை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது பெண்ணவளுக்கு...

“கொடுத்து வச்சவங்க... இப்படி எல்லாம் கூட சொகுசா இருக்க முடியுமா? இந்த ஹால் மட்டுமே ஒரு ஏக்கருக்கு மேல இருக்குமே... இந்த ஹால் மட்டும் இருந்தால் போதும். அப்பா இதுல இருநூறு வாழைகன்னு நட்டு விவசாயம் செய்து இருப்பார்.

இப்படி வந்தவங்களை உட்கார வைக்கவென இவ்வளவு நிலத்தை வேஸ்ட் பண்ணி வச்சிருக்காங்களே...பொழைக்க தெரியாதவங்க... ” என்று உள்ளுக்குள் நக்கல் அடித்து கொண்டிருக்க,   அவளையே குருகுருவென்று ஒரு ஜோடி விழிகள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தது.

உள்ளே வந்த ராசய்யா, பண்ணையாரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்றுவிட, பூங்கொடி மட்டும்  தனித்து விடப் பட்டிருந்தாள்.  

அதற்குள் பண்ணையார்  அம்மா, அங்கு வந்தவர், பூங்கொடியை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு குங்குமம் கொடுக்க,  அவளும் எடுத்து அதை தன் மாங்கல்யத்திலும், நெற்றியிலும் வைத்துக்கொண்டாள்.  

“ஹே ராஜ்...”  என்று கேட்ட கீச் குரலில் பூங்கொடி திரும்பி பார்க்க,  பண்ணையாரை பார்த்துவிட்டு  திரும்பி வந்து கொண்டிருந்த ராசய்யாவை  இறுக்கி கட்டியணைத்துக் கொண்டு இருந்தாள் பெண் ஒருத்தி.

ராசய்யா , பூங்கொடிக்கு முதுகு காட்டி நின்றிருக்க, அந்த பெண்ணைத்தான்  பார்க்க முடிந்தது அவளால்.

பாலையும், சந்தனத்தையும் சேர்த்து  குடம் குடமாக ஊற்றி குழைத்து செய்து வைத்த ரசமலாய் ஐ   போல சுண்டினால் ரத்தம்...இல்லை இல்லை... ரத்த ஆறே ஓடும்  அளவுக்கு வெள்ளை வெளேரென்று  இருந்தாள் அந்த யுவதி.

நல்ல டைட்டான டி ஷர்ட்டும்,  முட்டிக்கு சற்று கீழான ஸ்கர்ட்ம் அணிந்திருந்தாள். அந்த டி ஷர்ட்டில், கிஸ் மி என்ற வாசகம் இருக்க, அதைக்கண்ட பூங்கொடிக்கு பக் என்றது.  

அந்த ரசமலாய் ஐ ஒட்டி நின்ற இன்னொரு பெண்ணோ, ரத்த சோகை வந்தவளைப்போல, உடல் எல்லாம் வெளுத்து, மச்சம் கூட வெள்ளையாக இருக்கும் அளவுக்கு ரசகுல்லா போல வெள்ளை வெளேரென்று இருக்க, பூங்கொடிக்கு அடுத்த பக்.

தன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கிய பண்ணையார் மகள் ஸ்வாதியை  சங்கடத்துடன்  விலக்கி நிறுத்த முயல, அவளோ விடாமல் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க, மீண்டும் சங்கடத்துடன் புன்னகைத்தவன்,  

“சின்னம்மா... எப்படி இருக்கீங்க? “ என்று  நெளிந்தவாறு மீண்டும் முயன்று மெல்ல விலக்கி நிறுத்தினான்.  

“ஐம் ஃபைன் ராஜ்... நீ தான் என்னை மறந்துட்ட. நான் லண்டனுக்கு படிக்க போனதும், நீ என்னை மறந்துட்ட இல்ல...” என்று அவனை செல்லமாக முறைக்க,

“அப்படி எல்லாம் இல்ல சின்னம்மா... “  என்று  அசடு வழிந்து தலையைச் சொரிந்தான்.  

“சரி சரி...பொழைச்சு போ... ஆனா எனக்கு ஒரு உம்மா கொடு... அப்பதான் மன்னிச்சு விடுவேன்...” என்று குறும்பாக கண் சிமிட்ட, அதைக்கேட்ட பூங்கொடி அதிர்ந்து போனாள்.

புசுபுசுவென்று கோபம் பொங்கி வந்தது.  

“இல்ல.. சின்னம்மா... இப்ப நீங்க வளர்ந்துட்டிங்க...அப்படி எல்லாம் செய்யக்கூடாது..” என்று எடுத்துச்சொல்ல,

“ஆத்தி...அப்ப இவன் சின்ன புள்ளையா இருக்கிறப்ப நிறைய முத்தம் கொடுத்தானோ? அதுதான் அந்த ரசகுல்லா உரிமையா முத்தம் கேட்கிறாளா?

பாக்கறதுக்கு ஒன்னும் தெரியாதவன் மாதிரி இருந்துகிட்டு என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கான். இன்னைக்கு இருக்கு கருவாயனுக்கு...” என்று தன் உள்ளே பல்லை நரநரவென்று கடித்தாள் அவன் மனையாள்.

“ஏன் செய்யக்கூடாது? லண்டன் ல இதெல்லாம் சகஜம் ராஜ். அப்புறம் நான் ஒன்னும் சின்னம்மா இல்ல... உன் பப்பிமா தான். என்னை பப்பிமானே கூப்பிடு...” என்று செல்லமாக சிணுங்க,

“ஆஹான்... இது வேறயா? பண்ணையார் வூடுனு அவன் அடிக்கடி இங்க வேலைக்கு வர்றது இந்த ரசமலாய் ஐ  கொஞ்சத்தானா? “ என்று மீண்டும் நரநரவென்று  தன் பல்லை கடித்தாள்.

ராசய்யாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்த ரசமலாய் அப்பொழுதுதான் அவள் அருகில் நின்றிருந்த  அவளின் தோழி நினைவு வர,  

“ராஜ்... இது என்னுடைய பிரண்ட் இவானா... லண்டன்ல என்கூட படிக்கிறா. நம்ம ஊரை சுத்தி பார்க்க,  என்கூட வந்து இருக்கா...”  என்று அறிமுகப்படுத்த,  அந்த ரசகுல்லா ,  ராசய்யா வை விழுங்கி விடுவதை போல பார்த்து வைத்தாள்.  

தன் தோழியை பார்த்தவள்,

“வாவ்... செம ஹேன்ட்ஸமா இருக்கார் டி. இதுவரைக்கு இவர்  மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை...”  என்று ஸ்வாதியிடம் ஆங்கிலத்தில் சொல்லி கண் சிமிட்டியவள்,   

ராசய்யாவிடம்  கைகுலுக்க கையை நீட்ட, அவனோ ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று தன் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னான்.  

அதை கண்ட அந்த ரசகுல்லா வுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.  

லண்டனில் எல்லாம் தெரியாதவர்களை கூட கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து அறிமுகப்படுத்தி கொள்வதுதான் வழக்கம்.

இந்தியா வந்ததும் ஒரு சிலரை அவள் அப்படி கட்டி அணைக்க முயல, ஸ்வாதிதான் நம் கலாச்சாரத்தைப் பற்றி கொஞ்சமாக விளக்கி சொல்லியிருந்தாள்  

“ஹே இவா... இங்க எல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் கட்டி அணைத்துக் கொள்ளக் கூடாது.  வேண்டுமென்றால் கை கொடுக்கலாம்...”  என்று சொல்லியிருந்தாள்.

ராசய்யாவை கண்டதும் ஸ்வாதியை போல கட்டி அணைத்து கொள்ள துடித்த தன் கரத்தை அடக்கி கொண்டு, ஸ்வாதி சொன்னதை நினைவுபடுத்தி, அவனுக்கு  கைகுலுக்க வர,

அவனோ அவள் கையை பற்றாமல், கை கூப்பி வணக்கம் சொல்ல, கொஞ்சம் ஏமாற்றம்.. கொஞ்சம் ஆச்சரியம் ஆகிப் போனது.  

இன்னுமே அவனையே குறுகுறுவென்று பார்த்து வைத்தாள் இவானா.  

அதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பூங்கொடிக்கு தான் பற்றி எரிந்தது.  

சற்று தொலைவில் நின்றபடி அவர்களை பார்த்துக்கொண்டிருந்த பூங்கொடிக்கு, தன் கணவனிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் அந்த பெண்கள்  இருவரையும் பளாரென்று கன்னத்தில் அறைந்து

“அவன் ஒன்னும் பப்ளிக் ப்ராப்பர்ட்டி இல்லங்கடி... ஆளாளுக்கு கை குலுக்குவதும், கட்டி அணைப்பதும், முத்தம் கொடுப்பதும்... அவன் என் புருஷன் டி...” என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது.  

அரிமுக படலம் முடிந்ததும், ராசய்யாவை பார்த்த ஸ்வாதி,

“ராஜ்...  சரி வா...நாம வெளில போகலாம்.  எங்களுக்கு இந்த ஊரை சுற்றிக் காட்டு.  நீ நேத்தே  வருவன பார்த்துகிட்டு இருந்தேன். என்னை ஏமாத்திட்ட.  இன்னைக்கு ஃபுல்லா நீ எங்க கூட தான் இருக்கணும்.

நான் மம்மிகிட்ட சொல்லிக்கிறேன்...”  என்றவாறு அவன் கை விலாவுக்குள்   தன் கையை கொடுத்து கோர்த்துக் கொண்டு,  அவனை அவளோடு இழுக்க முயல

“பப்பிமா... ராசய்யாக்கு வேற வேலை இருக்கு.  அதோட அவனுக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு.  இன்னும் ஒரு வாரத்துக்கு அவன் புதுமாப்பிள்ளை.  அவனுக்கு எந்த வேலையும் வைக்கக்கூடாது...”  என்று புன்னகைத்தவாறு அங்கு வந்தார் பத்மினி.  

அதைக் கேட்டதும் தான் பூங்கொடிக்கு நிம்மதியாக இருந்தது.  

“அப்பாடா...  இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு இப்பயாவது இந்த மேனா மினுக்கிகளுக்கு தெரிஞ்சுதே..  இனிமேலாவது  இந்த ரெண்டு அழகிகளும் தள்ளியே நிக்கட்டும்...”  என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்ள,  

“வாட் மம்மி? ராஜ்க்கு  மேரேஜ் ஆயிடுச்சா ? ராஜ்  என்கிட்ட சொல்லவே இல்லையே...”  என்ற முறைக்க

“இல்ல பப்பிமா....  அது வந்து...”  என்று தயக்கத்துடன் இழுக்க

“சே... என்னை ஏமாத்திட்ட இல்ல. என்கிட்ட சொல்லாம நீ  மேரேஜ் பண்ணிட்டு இருக்க... இனிமேல் நீ என்கிட்ட பேசாத..” என்று . கண்ணை கசக்க

“விடுடா பப்பி... ராசுக்கு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சு.  அவனுக்கே இது  ஒரு எதிர்பாராத சம்பவம். நம்மளை  எல்லாம் கூப்பிடாம அவனே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை... கோவிச்சுக்காதடா...”    

என்று தன் மகளை சமாதானப்படுத்த முயன்றார் பத்மினி.

“ஆனாலும் மாமி...நான் ராஜ் ஐ... “  என்று ஏதோ சொல்ல வர, சற்று தொலைவில்  நின்று கொண்டு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடியை கண்டதும்,  தான் சொல்ல வந்ததை பாதியில்  நிறுத்திக் கொண்டவள்,  

“அவங்க தான் உன் வைப் ஆ...”   என்று பூங்கொடியை ஜாடை காட்டி கேட்க,  

ராசய்யாவும்  ஆமாம் என்று தலையசைத்தான். அதோடு பூங்கொடியை அருகில்  வர சொல்லி கண்ணசைத்தான்.  

அவளும் வேகமாக அங்கு வர, அவளை உச்சி முதல் பாதம் வரை  ஏற இறங்க பார்த்தவள்,  

“என்ன ராஜ்?  ஹேன்ட்ஸம் ஆ இருக்கிற உனக்கு போய், ஒல்லிகுச்சி மாதிரி கருகருன்னு வைப்.  உனக்கு கொஞ்சம்கூட மேட்ச் ஆகவே இல்லை.

உன்னுடைய ஃபிட்னஸ்க்கும்,  நல்ல ஹைட் அன்ட் வெயிட்க்கும்,  உன் உயரத்துக்கு இணையா இருக்கிற என்னை  மாதிரி பொண்ணு தான் செட் ஆகும். அதுக்குள்ள அவசரபட்டுட்டியே...”  

என்று பூங்கொடியை  இகழ்ச்சியுடன் பார்த்தவாறு, நக்கலாக  சொல்ல,  பூங்கொடிக்கோ மீண்டும்  முகம் கருத்துப் போனது

“பப்பிமா...  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...  சரி சரி இந்த பேச்சை விடுங்க.  வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம்..”  என்று அனைவரையும் அழைத்துச் சென்றார் பத்மினி.

****

கிட்டத்தட்ட முப்பது பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது உணவு மேஜை.  

ஆங்காங்கே உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்க, அங்கு சென்ற ராசய்யா தயங்கி நின்றான்.

“மேஜையில் வேண்டாம் அம்மா... நாங்க தரையிலேயே உட்கார்ந்துக்கறோம்...” என்று தயக்கத்துடன் மறுக்க

“அட வா ராசு...  நீயும் எங்களில் ஒருவன் தானே. சின்ன வயசுல இருந்து எங்க வீட்ல தான இருக்க. இன்னைக்கு ஒருநாள் எங்களோடு சேர்ந்து சாப்பிடு...”  

என்று பத்மினி கட்டாயப்படுத்தி அமர வைத்தார்.

பூங்கொடியும் தயக்கத்துடன் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் பண்ணையாரின் மூத்தமகன் திவாவகர்,  அவனுடைய புது மனைவி ரோகினியும் அங்கு வந்தனர்.

திவாவகர் பூங்கொடி மற்றும் ராசய்யாவை பார்த்ததும் நட்புடன் புன்னகைத்து   

“ஹாப்பி மேரேஜ் லைப்...  வாழ்த்துக்கள்...”  என்று ராசய்யாவின் கை பற்றி குலுக்க, அவரின் மனைவியோ அவர்கள் இருவரையும் பார்த்து அருவருப்புடன் முகத்தை சுளித்தவள் தன் கணவன் அருகில் நெருங்கி  சென்றவள்,  

“என்ன திவா  இது? நம்ம வீட்ல வேலை செய்றவனையும் நம்ம கூட சரிக்கு சமமா ஒன்னா  உட்கார வைத்து அவனுக்கு உபசரிக்கிறாங்க.

இவங்களுக்குத்தான் இன்னைக்கு விருந்தா?...நான் கூட ஏதோ பெரிய விஐபி தான் வரப்போறாங்கனு  இவ்வளவு டைம் ஸ்பென்ட் பண்ணி மேக்கப் போட்டுகிட்டு வர்ரேன்.

பார்த்தால் அன்றாடம் காய்ச்சி மாதிரி இருக்கு. இதுகளை கூப்பிட்டு நமக்கு சமமா உட்கார வச்சு உபசரிச்சுகிட்டு இருக்காங்க... ரிடிகுலஸ்...” என்று அருவருப்புடன் முகத்தை சுளித்தாள்.  

அவனோ தன் மனைவியை எதுவும் சொல்லாதே என்று பார்வையால் எச்சரித்தவாறு,  தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.  

அவர்கள் எவ்வளவுதான்  மெதுவாக பேசியிருந்தாலும்,  அது பூங்கொடி மற்றும்  ராசய்யாவின்   காதில் விழத்தான் செய்தது.

தன் கணவனைப் பார்த்து முறைத்து வைத்தவள்,  

“தேவையா உனக்கு இது... “  என்று புருவத்தை உயர்த்தி நக்கலாக கேட்டு வைத்தாள்.

அதே நேரம் மாடியில் இருந்து இரண்டு இரண்டு படிகளாக  தாவி இறங்கி வந்தான் அடுத்த மகன் சுதாகர்.  

பூங்கொடி  அனிச்சையாய் திரும்பி அங்கே பார்க்க, கீழ இறங்கி வந்து கொண்டிருந்த சுதாகரின் பார்வை அவளை விழுங்கி விடுவதை போல பார்த்துக் கொண்டிருந்தது.  

அந்த பார்வையில் திடுக்கிட்டவள் உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.

அதற்குள் அவர்கள் அருகில்  வந்திருந்த சுதாகர்,  ராசய்யாவின் முதுகில் ஒரு தட்டு தட்டி

“வாழ்த்துக்கள் ராசய்யா...  கல்யாணம் ஆயிடுச்சு என்று கேள்விப்பட்டேன்...” என்று புன்னகைக்க,  ராசய்யாவும் ஒரு வெட்கச் சிரிப்பை சிரித்தபடி எழுந்து நிற்க,  அவனை தொடர்ந்து பூங்கொடியும் எழுந்து நின்றாள்.

“இவதான் சின்னையா என் பொண்டாட்டி...”  என்று பூங்கொடியை அறிமுகப்படுத்த,  அவனும் அவளை ரசித்து பார்த்தபடி, ஹாய் என்று சொல்லி கை குலுக்க, கைநீட்ட,  பூங்கொடியே வணக்க்ம என்று சொல்லி தன் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தாள்.  

அதைக்கண்டு முகம்  சுருங்கினாலும்,  அடுத்த நொடி தன்னை சமாளித்துக் கொண்டான்.  

“வாவ்... செமயா இருக்காங்க.  நல்ல கட்டான சிக்குனு உடம்புதான். உனக்கு ஏத்த ஜோடிதான் ராசு...”  என்று ராசய்யாவிடம் சொன்னாலும்,  அவன் பார்வை என்னவோ அவளை மேலிருந்து கீழாக   மேய்ந்து கொண்டிருந்தது.

அதில் கூசி போனவள், தன் புடவையை இன்னுமே இழுத்து விட்டு கொண்டு  தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.   

அதற்குள் பண்ணையாரும் வந்துவிட,  அவரும் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி, அவர்களை  அமர வைத்து உணவைப் பரிமாற சொன்னார்

ராசய்யாவுக்கு பிடித்தபடி எல்லாமே அசைவமாக செய்ய வைத்திருந்தார் பத்மினி.

அவருக்கு எப்பொழுதுமே ராசய்யா மீது தனிபாசம்.

சிறு வயதிலயே தாய் தந்தையை இழந்து அனாதையாக ட்ராக்டர் ஓட்ட என பண்ணைக்கு வந்தவனை கண்டதும் அவரின் தாய் உள்ளம் பதைத்தது.

அப்பொழுதே அவனை அழைத்து அவனுக்கு வயிறார சாப்பாடு போட, அவனோ நீண்ட நாட்கள் கழித்து நல்ல சாப்பாடு சாப்பிடவும், நன்றியோடு அவரை பார்த்து புன்னகைத்தான்.

அதிலிருந்து அவன் அங்கு வரும்பொழுதெல்லாம் ஏதாவது சாப்பிட கொடுப்பார்.

அவரின் கடைக்குட்டி ஸ்வாதி, ராசுவிடம் நன்றாக ஒட்டிக்கொள்ள, அவன் வரும் பொழுதெல்லாம் அவளுடன் சற்று நேரம் விளையாண்டு விட்டு செல்வான்.

பிள்ளைகள் வளர்ந்து அவரவர் வேலையில் பிசியாகி போய்விட, இப்பொழுதும் பண்ணையாரையும், பத்மினி அம்மாவையும் ராசய்யாதான் பார்த்து கொள்வான்.

பண்ணையாருக்கு வயதாகி விட்டதால், வெளியில் செல்ல வேண்டும் என்றால் அவன் தான் கார் ஓட்டி செல்வது.

இப்படி அவனை அந்த வீட்டில் வேலைக்காரனாக இல்லாமல், தங்களில் ஒருவனாகத்தான் பாவித்தனர் பெரியவர்கள்.

அதனாலயே பத்மினி அவனுக்கு திருமண விருந்து கொடுக்க வேண்டும் என்று இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

****

வேலைக்காரர்கள் உணவை பரிமாற, ராசய்யாவின் ஒரு பக்கம் பூங்கொடியும்  மறுபக்கம் ஸ்வாதியும், அவளை அடுத்து இவானா வும்  அமர்ந்து கொண்டனர்.  

ராசய்யாவின் இருக்கைக்கு அருகில் ஒட்டி அமர்ந்து கொண்ட ஸ்வாதி, அவனின்  உடலோடு ஒட்டி உரசியபடி அவனுக்கு தேவையான பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.

வேலைக்காரர்கள் இருக்க,  அவளாகவே பார்த்து பார்த்து அவனுக்கு எடுத்து வைக்க,  அதைக் கண்ட பூங்கொடிக்கோ எரிச்சலாக இருந்தது.

ராசய்யாவுக்கு, ஸ்வாதியின்  அன்புத்தொல்லை ஒரு பக்கம் என்றால்,  அந்த வீட்டின்  சின்னையாவான சுதாகரின் பார்வை அடிக்கடி பூங்கொடியின் மீது வந்து விழுவதை கண்டு ராசய்யாவுக்கு கடுப்பாக இருந்தது. 

அந்த வீட்டில் மூத்த மகன் திவாகர் கன்னியமானவன் என்றால்,  சுதாகர் அவனுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன்.

அதுவும் பெண்களிடம் தாராளமாக பழகும் குணம் கொண்டவன். பார்க்கும் பெண்களை எல்லாம் துகில் உரித்து பார்க்கும் பார்வை உடையவன்.

பூங்கொடியின் எதிரில் அமர்ந்து கொண்டு அவளையே விழுங்கி விடுபவனை போல நொடிக்கொருதரம் பார்த்து கொண்டிருந்தவனின் கண்ணை நோண்டும் அளவுக்கு ஆத்திரம் ராசய்யா உள்ளே.

இதே வேற யாராவது அவளை இப்படி பார்த்து வைத்தால், அடுத்து பார்க்க கண்ணு இருந்திருக்காது.

ஆனால் தன் பாசத்துக்குரிய பண்ணையார் அம்மாவின் மகனாகி போய்விட,  ஒன்றும் செய்ய முடியாமல் தன் கை முஷ்டியை இறுக்கியவன், உள்ளுக்குள் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்தான்.

அதை கவனிக்காத பூங்கொடியோ, ஸ்வாதியின் விழுந்து விழுந்து உபசரிப்பால் தன் கணவனை பார்வையாலயே சுட்டு பொசுக்கி கொண்டிருந்தாள்.

ஏனோ இருவருக்குமே அந்த அறுசுவை உணவு ருசிக்கவில்லை. முள்ளின் மேல் நிற்பது போல இருக்க, எப்படியோ சாப்பிட்டு  முடித்தனர்.  

*****

னைவரும் சாப்பிட்டு முடித்ததும் பத்மினி இருவரையும் அழைத்து, ஒரு தட்டில் வேஷ்டியும் பட்டுப் புடவையும்    வெள்ளி காமாட்சி விளக்கு, குங்குமச்சிமில் என  வைத்துக் கொடுக்க அதைக்கண்ட பூங்கொடியோ அதிர்ந்துபோய் வேண்டாம் என்று மறுத்தாள்.

“இல்ல பூங்கொடி... நம்ம பண்ணையில வேலை செய்யும் யாருக்காவது திருமணம் என்றால்,  நாங்க நேர்லயே   கல்யாணத்துக்கு போய் வாழ்த்தி,  புடவை , வேஷ்டி எடுத்து கொடுப்பது வழக்கம்.

நம்ம ராசு கல்யாணம்  திடீர்னு நடந்திட்டதனால, எங்களால கல்யாணத்துக்கு வரமுடியலை. அதான்  வீட்டுக்கு  கூப்பிட்டேன்.  இந்த பரிசை மறுக்கக்கூடாது...”  என்று செல்லமாக அதட்ட, அவளின் பார்வையோ ராசய்யாவிடம் சென்று நின்றது.

அவனும் வாங்கிக்க என்று  கண் ஜாடை காட்ட, பின் இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி,  அந்த பரிசை பெற்றுக் கொண்டனர்.  

ஏனோ அதற்கு மேல் பூங்கொடியால் அங்கு இருக்க முடியவில்லை.  

சுதாகரின் துளைக்கும் பார்வையும்,  அவள் தங்கையின் ராசய்யா மீதான காதல் பார்வையும் கண்டு முள்ளின் மேல் இருப்பதை போல இருக்க, ராசய்யாவின்   கையை சுரண்டியவள், போகலாம்  என்று ஜாடை காட்டினாள்.  

அவனும்  அதை புரிந்து கொண்டு,  

“அப்ப நாங்க கிளம்பறோம் ஐயா...அம்மா... எங்களை அழைத்து, விருந்து வைத்ததுக்கு ரொம்ப நன்றி..” என்று தழுதழுத்தவாறு, இரு கரம் கூப்பி நன்றி சொன்னான் ராசய்யா.

அவன் சார்பில் இந்த மாதிரி விருந்து வைக்க யாரும் இல்லாததால், அவனுக்கு ரொம்பவுமே மனம் நெகிழ்ந்து போனது.

“ராஜ்...  நாளைக்காவது எங்களை வெளியில கூட்டிட்டு போவியா? என்று ஸ்வாதி, தலை சரித்து மையலுடன் கேட்டு வைக்க,  ராசய்யா பதில் சொல்லும் முன்னே முந்திக்கொண்டாள் பூங்கொடி.

“நாளைக்கு சொந்தக்காரங்க ஒருத்தர்  வீட்ல விருந்து இருக்குங்க.  நாங்க ரெண்டு பேரும் அங்க போகணும்...” என்றாள் அவசரமாக.    

“ஓ... அப்படினா நாளைக்கு அடுத்த நாள் போகலாம். உனக்காக நாங்க வெயிட்டிங் ராஜ்...”  என்று  கண்களை படபடவென்று கொட்டி, கிளுக்கி  சிரித்தாள்  இளையவள்.  

அதைக் கண்ட பூங்கொடிக்கு  இன்னும் பற்றிக்கொண்டு வந்தது.  

அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும், எப்படி இந்த பெண் அவனையே சுற்றி வருகிறாள். அவள் வீட்டிலும் எதுவும் கண்டிக்க மாட்டேங்கிறாங்க? நல்ல குடும்பம் டா சாமி...

ஒய்யாரக் கொண்டையாம்  தாழம்பூவாம்  உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். பாக்கறதுக்கு பெரிய பண்ணையார் வீட்டு குடும்பம்...டீசன்டான ஆளுங்கனு பாத்தா , ஒருத்தன் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்சும் ஆளை முழுங்கற மாதிரி பார்க்கறான்.

அந்த அர டிக்கெட் புள்ளைங்க இரண்டும், அவன் பொண்டாட்டி நான் குத்துக்கல்லாட்டம் அவன் பக்கத்துல உட்கார்ந்து இருக்க, என்னவோ அவதான் கட்டிகிட்ட மாதிரி பாத்து பாத்து பரிமாறுவது என்ன? அதை இந்த வூட்டு பெருசுகளும் கண்டிக்க மாட்டேங்குதுங்க...

இனிமேல் இந்த மனுசனை இந்த பக்கமே அனுப்ப கூடாது.. என்று தனக்குள்ளே புலம்பி தள்ளியவள்,   

தன் கணவனை  இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் பெண்ணவள்.  

*****

ருவரும் டிவிஎஸ் பிப்டியில்,  மீண்டும் தங்கள் வீட்டை நோக்கிப் பயணப்பட, அதுவரை அமைதியாக ஏதோ யோசனையுடன் இருந்து வந்தவள்  மெல்ல வாயை திறந்து

“ஏன் மாமா...  எத்தனை வருஷமா  இங்க வேலை செய்றீங்க? “ என்று மெல்லமாக நோண்ட ஆரம்பித்தாள்.  

“ஹ்ம்ம்ம் நான் வளர்ந்து ட்ராக்டர் ஓட்ட ஆரம்பிச்சதுல இருந்து இங்க வருவேன் டி.  

நான்தான் இங்க வயலுக்கு ட்ராக்டர் ஓட்டுவது. அப்புறம் பெரிய ஐயாவோ ட காரை   ஓட்டுவேன். குடும்பமா எங்கயாவது வெளில போனாக் கூட என்னை ஓட்ட சொல்லிடுவாங்க...” என்று பெருமையாக சொன்னான்.     

“ஓஹோ... இங்க உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் போல? என்று எல்லாரையும் என்பதை அழுத்தி சொன்னாள்.  

“ஆமாம்...  அதுவும் சின்னம்மா பப்பிமாவுக்கு நான் னா ரொம்ப இஷ்டம்.  நான் தான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயி விட்டுட்டு, கூட்டிகிட்டு  வருவேன்.  என் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பாங்க...” என்று  பெருமையாக சொல்ல

“ஓஹோ.. என்று மீண்டும் யோசனையானாள் பூங்கொடி.  

“ஆமா...பூங்கொடி...  அந்த வீட்டில இருந்தாரே..  சின்னவர்...  சுதாகர் ஐயா...அவர்  எப்படி இருந்தார்? “ என்று  எதேச்சையாக கேட்பதை போல கேட்டு வைத்தான்.

“அவருக்கு என்ன?  நல்லா வெள்ளை வெளேர்னு அரவிந்த்சாமி மாதிரி ஹீரோ கணக்கா இருந்தார்...” என்று புகழ்ந்து   சொல்ல, அதைக்கேட்ட ராசய்யாவின் முகம் ஒரு நொடி கருத்தது.  

முன்பக்கம் இருந்த கண்ணாடி வழியாக, அவன் முகத்தில் வந்து சென்ற ஏமாற்றத்தை கண்டு கொண்டவளுக்கு சிரிப்பாக வந்தது.

“பொறாமை படறானோ? படட்டும்..படட்டும்.. நல்லா படட்டும்.. அப்பதான் இந்த பூங்கொடியின் அருமை தெரியும் அவனுக்கு...” என்று தன்னுள்ளே சிரித்துக் கொண்டாள்.

ஆனாலும் அவன் முகம் தொங்கி போவதை காண சகிக்காமல், 

“மாமா...  அந்த ஆளு உடம்பு மட்டும்தான் அரவிந்த்சாமி மாதிரி.  ஆனால் கண்ணு  நொல்லகண்ணு...”  என்று கழுத்தை நொடித்தாள்.  

என்னடி  சொல்ற?   என்று புரியாமல் கேட்க

“அதான் மாமா...  அத்தனை பேரும் பேசிகிட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கிறப்ப   அந்த ஆளு மட்டும் என்னை மட்டுமே பார்க்கிறான்.  

அவன் உங்ககிட்ட பேசினாலும், அவன்  பார்வை என்னவோ என்கிட்டயே வந்து நிக்குது.  அப்படினா  அது நொல்ல கண்ணுதானே...”  என்று சொல்ல அதைக்கேட்டு அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து கலகலவென வாய்விட்டு சிரித்தான் ராசய்யா.

ஹா ஹா ஹா  நொல்லகண்ணு இல்லடி...  உன்னை அந்த ஆள்  நல்லா சைட் அடிச்சான்...” என்று முடிக்குமுன்னே ஓங்கி அவன் தலையில் கொட்டி இருந்தாள்.

“யோவ்... உனக்கு கொஞ்சமாச்சும் சூடு , சொரணை இருக்கா? உன் பொண்டாட்டியை ஒருத்தன் சைட் அடிச்சானு சொல்லிகிட்டு சிரிக்கிற?

என்னை  சைட் அடிச்ச அந்த ஆள் கண்ணை நோண்டி அவன்  கைல கொடுக்க வேண்டாம்? ஆளுதான் பார்க்க ரௌடிமாதி இருக்க. ஆனால் சுத்த வேஸ்ட் யா நீ.... “ என்று  அவனை வறுத்தெடுக்க,  

“ஹ்ம்ம்  என்ன பண்றது? எனக்கும் கோபமாதான் வந்தது. ப்ச்...  பண்ணையார்  ஐயா, அம்மா முகத்துக்காக பாக்க வேண்டியதா இருந்துச்சு...” என்றான் தன் முஷ்டியை இறுக்கியபடி.

“ஹ்ம்ம்ம் நானும் அதுக்காகத்தான் பொறுத்துகிட்டு வந்தேன். இதே பொது இடமா இருந்து என்னை அப்படி பார்த்து வைத்திருந்தால், கால் ல கிடக்கறதை கழட்டி, அங்கயே  நாலு சாத்து சாத்திட்டு வந்து இருப்பேன்...”  என்று பல்லை கடித்தாள் பூங்கொடி.

அவளின் கோப முகத்தை கண்ட ராசய்யாவுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

அவ்வளவு பெரிய பங்களாவுக்கு சொந்தக்காரன்... ஆளும் ஹீரோ மாதிரி அழகாதான் இருக்கான். 

தன்னை ரசித்து பார்க்கிறானே என்று கர்வம் கொள்ளாமல், அவனை துச்சமாக மதித்து, காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேனு சொல்லும் அவளின் குணம் அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

அவளை இன்னும் சீண்டும் விதமாக

“ஏன் பூவு... ஒருவேளை அப்படி ஒரு ஆள் உன்னை கட்டிக்கிறேன் னு வந்திருந்தா நீ என்ன பண்ணியிருப்ப? “ என்றான் அவளின் மனதை ஆழம் பார்க்க,

“ஹ்ம்ம் கோடி ரூபா கொட்டி கொடுத்தாலும்,  அவன் எவ்வளவு பெரிய அப்பா டக்கரா இருந்தாலும், ஒலுக்கமில்லாத ஒருத்தனை இந்த பூங்கொடி ஏறெடுத்தும் பார்க்க மாட்டா..

அந்த கந்து வட்டிக்காரனை நான் கட்டிக்க சம்மதிச்சது கூட, என்னை பெத்தவர் வாங்கின கடனை அடைக்கத்தான்.

அவன் ஒலுக்கமில்லாதன் என்று  முன்பே தெரிந்திருந்தால், மண்டபத்துக்கே வந்திருக்க மாட்டேன். நாலு அரளி விதையை அரச்சு குடிச்சிட்டு உயிரை விட்டு இருப்பேன்... “

என்று எங்கோ வெறித்தபடி சொல்ல, அதைக்கேட்டவன் கை தானாக ப்ரேக் இட்டு வண்டியை நிறுத்தி இருந்தது.

“என்னடி சொல்ற? “ என்று அதிர்ச்சியோடு கேட்க,

“ஆமா யா... எனக்கு நேரத்துக்கு ஒரு பட்டு புடவை கட்டிகிட்டு, மாட மாளிகையில், குளுகுளு  ஏசி ரூம்ல , பஞ்சு மெத்தையில படுத்து புரளணும்னு எல்லாம் ஆசை இல்ல.

என் புருஷன் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்...என்னை மட்டுமே உசுரா நினைக்கணும் . கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் அது பாசத்தோட, அன்போட என் புருஷன் சம்பாரிச்சு கொடுத்ததா இருக்கோணும்.

அது போதும் எனக்கு...” என்று புன்னகைக்க, அப்பொழுதுதான் அவன் மண்டையில் யாரோ  சம்மட்டியால் அடித்தாற் போல இருந்தது.

இப்படி ரோசத்துடன் இருப்பவளை தன்னிடம் இருந்து பிரித்து இன்னொருத்தனுக்கு மணம் முடித்து வைக்க முடியுமா? அதுக்கு இவள் சம்மதிப்பாளா?

இந்த சில நாட்களிலயே அவளின் மனம் அவனுக்கு புரிந்துவிட்டது.

அவனைத்தான் அவள் கணவனாக  எண்ணிவிட்டாள். அவ்வளவு பெரிய மாளிகையும், விதவிதமான கார்களும் அவளுக்கு துச்சம் என்கிறாள் என்றால் அவனை எந்த அளவுக்கு நம்புகிறாள் என்று புரிந்தது.

ஒரு கணவனுக்கு இதைவிட என்ன வேண்டும்?

அதோடு இப்பொழுது அவன் மனமும் அவனுக்கு தெளிவாக புரிந்து விட்டது.

அந்த சுதாகர்  அவளை அப்படி பார்த்தபொழுது அவனால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

இதே மாதிரி எத்தனையோ பெண்களுடன் சுதாகர் உல்லாசமாக இருந்து பாத்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் தோன்றாத கோபம், தன் மனைவியை ஒருத்தன் பார்க்கிறான் என்றதும் பொங்கி வந்தது.

அதில் இருந்தே அவன் மனம் அவளை எவ்வளவு நேசிக்கிறது என்று புரிகிறதுதான்.

ஆனாலும் அவளின் நலனுக்காக என்றுதான்  அவன் மனதை பூட்டி வைத்திருக்க, அவளோ  அவள் நலனே அவன்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்.

“அப்படி என்றால் அவளை பிரிவது பற்றி இனி பேசவே கூடாது. அவள் தான் என் மனைவி... அவளை ராணி மாதிரி நான் வாழ வைக்க வேண்டும்...”  என்று தன்னுள்ளே உறுதி செய்து கொண்டான் ராசய்யா..!  


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!