என்னுயிர் கருவாச்சி-41

 


அத்தியாயம்-41

றுநாள் காலை எழுந்தவள் கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டு பல்லை துலக்கி கொண்டிருந்தாள்  பூங்கொடி.  

அப்பொழுது காம்பவுண்ட் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தவனை கண்டதும்  அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.  

மீண்டும் ஒரு முறை தன் கண்ணை கசக்கிக்கொண்டு உற்று பார்க்க,  அதற்குள் உள்ளே வந்தவன்,  கொல்லையில் நின்றவளை கண்டு கொண்டு அங்கே வந்தான்.

அவள் அருகில் வந்தவனை மீண்டும் ஒரு முறை மேலும் கீழுமாக அதிர்ச்சியோடு பார்த்து வைத்தாள் பூங்கொடி.  

“ஏன் டி?  அப்படி பார்க்கிற? என்றான்  சங்கோஜத்தில் தெளிந்தவாறு

“என்ன மாமா கோலம் இது? என்று மீண்டும் அதிர்ச்சியோடு கேட்க

“ஏன்?  நல்லா இல்லையா? என்று தன் தலையை ஸ்டைலாக தடவிக் கொண்டான் ராசய்யா.  

அவளோ மீண்டும் அவனை ஒருமுறை மேலிருந்து கீழாக உற்றுப் பார்க்க, முன்பு இருந்த எண்ணை  காணாத பரட்டை தலை... முறுக்கிவிடப்பட்ட கொடுவா மீசை. ஒழுங்கு படுத்தாத  தாடி எல்லாம் காணாமல் போயிருந்தது

அவனுடைய எண்ணை  காணாத பரட்டை முடியை வெட்டி விட்டு சின்னதாய் கிராப் வைத்து சீவி இருந்தான்.

அலங்கோலமாக இருந்த  தாடியை முழுவதுமாகவே மலித்து விட்டான்.  கரடுமுரடாக இருந்த மீசையையும் அழகாக ட்ரிம் பண்ணி,  கச்சிதமாக வைத்திருக்க,  அவனைப் பார்க்க அவளுக்கே  அடையாளம் தெரியவில்லை பூங்கொடிக்கு.  

காலையில் எழுந்ததும், முடிவெட்ட சென்றவன், வாய்க்காலில் குளித்துவிட்டு எப்பொழுது அணியும் ஒரு அழுக்கு கைலியும், கிழிந்த  சட்டையையும்  போடாமல்,  நன்றாக துவைத்து வைத்திருந்த வெள்ளை வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்து கொண்டு கம்பீரமாக அவள் முன்பு நின்றிருந்தான்.

தன்னவனை  அப்படிப் பார்க்க,  அவளால் இன்னுமே நம்ப முடியவில்லை.

ஒழுங்குபடுத்தாத தலைமுடியும்,  தாடியும் மீசையுமாக சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் ரௌடி மாதிரி இருந்தவன்... இப்பொழுது இந்த மாற்றத்தால் இன்னும் ஆணழகனாக மாறி இருந்தான்.

தன் கையில் இருந்த வேப்பம் குச்சியைக் அப்படியே கீழ போட்டு விட்டு ஏற்கனவே கிணற்றில் இருந்து இறைத்து வைத்திருந்த நீரில்    அவசரமாக வாயை கொப்பளித்து  துப்பிவிட்டு,  தன் புடவை முந்தானையை இழுத்து வாயை துடைத்துக் கொண்டே  அவனருகில் வந்தவள்

“நிஜமா...  இது நீதானா  மாமா? என்று கண்கள் விரிய ஆச்சர்யத்தோடு கேட்டவள், அடுத்த நொடி  அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

அவனோ லேசாக வெட்கப்பட்டு

“ஐயோ...விடுடி...  யாராவது வந்திடப் போறாங்க . “  என்று நெளிந்து அவளிடமிருந்து விலக முயல,  

“வரட்டுமே...  என் புருஷன நான் கட்டிக்கிட்டு இருக்கேன்...”  என்றவள்  இன்னுமாய் அவனை  இறுக்கி கட்டிக்கொண்டு, நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள்

“திடீர்னு ஏன் இந்த பெரிய மாற்றம்? என்றாள்  அவனை ஆராய்ச்சியோடு பார்த்தவாறு.  

அப்பொழுதுதான் அவளுக்கு நேற்று அவளின் அக்கா தன் கணவனை பற்றி சொன்னது நினைவு வந்தது.  

ஒருவேளை அதை இவன் கேட்டு விட்டானோ?  அதனால் தான் இந்த மாற்றமா? என்று யோசித்தவள்   ஆராய்ச்சியோடு அவன்  முகத்தையே பார்த்திருந்தாள்.

அவன் முகத்திலும் மெல்லிய வேதனை வந்து  சென்றாலும் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு

“சும்மாதான் டி. ஐயா எப்படி இருக்கேன்  இந்த கெட்டப்ல?...”  என்று மீண்டும் தன் மீசையை முறுக்கிக் கொள்ள,  அவளோ விடாமல்

“சொல்லு மாமா...  நீ நேத்து அந்த விளங்காதவ உன்னை பற்றி சொன்னதை கேட்டியா?  அதனால்தான் இந்த மாற்றமா? “ என்று  வேதனையுடன் கேட்க,

“சே..சே...அப்படியெல்லாம் இல்லடி.  இத்தனை நாள்,  நான் தனி கட்டை.  அனாதை.  என்னை ஏன்னு கேட்க யாரும் இருந்ததில்லை.  நான் எப்படி வேணாலும் இருக்கலாம்.  எங்க வேணாலும் படுத்து கிடக்கலாம்.  

ஆனால் இப்பொழுது எனக்குன்னு ஒருத்தி நீ வந்துட்ட.  இப்பொழுது என்னை சார்ந்த எதுவும் உன்னையும் பாதிக்கும். என்னை பூங்கொடியின் புருஷன் என்று சொல்லும் பொழுது, நான் ஒரு மாதிரி இருந்தால் அது உனக்கும் கஷ்டம்  என்று புரிந்து கொண்டேன்.  

நீ இருக்கிற அழகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் ரௌடி மாதிரி நான் சுத்திகிட்டு  இருப்பது என்னவோ போல இருந்துச்சு.  

அதுதான் உனக்காக அதையெல்லாம் எடுத்துட்டேன்.  இப்போ கொஞ்சமாச்சும் உனக்கு பொருத்தமா இருக்கேனா? என்று கண்சிமிட்டி கேட்க,  அவள் கண்களிலோ  கண்ணீர் வழிந்தது.  

தனக்காக அவனுடைய பழக்கத்தையும் மாற்றிக்கொள்கிறேன் என்கிறானே..!  

திருமணத்திற்கு முன்பு எத்தனையோ முறை அவளும் அவனை திட்டி இருக்கிறாள்.

“அந்த தலை முடியை வெட்ட கூடாதா? ....  தாடியை எடுக்கக் கூடாதா?... மீசையை ட்ரிம் பண்ணக்கூடாதா?...  நல்ல சட்டை போடக்கூடாதா? ..  ஏன் இப்படி ரௌடி மாதிரி இருக்க?”   என்று திட்டி இருக்கிறாள்.  

அப்பொழுதெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தன் தோளை குலுக்கி விட்டு

“இந்த கெட்டப் தான் நமக்கு செட் ஆகும் கருவாச்சி...”  என்று கண்டு கொள்ளாமல் போய் விடுவான்.  

அப்படிப்பட்டவன்  இன்று அவள்  சொல்லாமலேயே அவளுக்காக அவனுடைய கெட்டப்பையே மாற்றிக் கொண்டிருக்கிறான் என்று காணும்பொழுது  அவளுக்கு பெருமையாகவும் கர்வமாகவும்  இருந்தது.  

“என் புருஷன்...” என்று காதலுடன் அவன்  மார்பில் முத்தமிட்டாள்.

அதோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“என் மாமா... எனக்கு எப்படி இருந்தாலும் புடிக்கும்.  உன்னுடைய பழைய கெட்டப்பே  எனக்கு புடிச்சு  தானே இருந்தது.  நீ ஏன் போய் அதை மாத்தின...” என்றாள் சிணுங்களுடன்.

“ஹ்ம்ம்ம் உனக்கு புடிக்கும் டி.  ஆனா பாக்கறவங்க எல்லாருக்கும் பிடிக்காதே... “  என்றான்  வேதனையோடு.  

“நீ யாரை சொல்ற? பொற்கொடியா ? உங்களை யாராவது எதாவது சொல்லியிருந்தால் சொல்லுங்க. அவங்களை உண்டு இல்லைனு ஆக்கிடறேன்...” என்று பதட்டத்துடன் கேட்க,  

“ப்ச்... உன்   அக்கா மட்டும் இல்லை.  உன் காலேஜ் வாசல்ல நிக்கறப்போ  எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு போனாங்க.  

இத்தனை நாள் அதை எல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் நேத்து  நீ  என் பக்கத்தில் இருக்கும் பொழுது,  ஒரு சிலர்  என் தோற்றத்தை பார்த்து கிண்டல் அடிச்சுட்டு போனாங்க... “  

என்று முடிக்கும் முன்னே

“எவன் அவன் உங்களைப் பார்த்து கிண்டல் அடித்தது? என்று கோபத்துடன் பொரிய,

“ப்ச்...  இதுல கோபப்பட என்ன இருக்குடி.  உண்மையைத் தானே சொல்றாங்க.  அப்புறம்தான்  முடிவெடுத்தேன்.  உன் புருஷனா உன் கூட வரணும்னா, அதுக்கு தகுந்த மாதிரி என்னையும் மாத்திக்கணும் என்று.

அதற்குத்தான்  இந்த முதல் முயற்சி...” என்றான் பெருமூச்சோடு.  

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா... எனக்காக எல்லாம் நீ உன்னை மாத்திக்க வேண்டாம்...”  என்று செல்லமாக கடிந்து கொண்டாள் பெண்ணவள்.

“சரி சரி..  உனக்காக இல்லை.  எனக்காகத்தான்  மாத்திக்கிட்டேன்.  இதுவும் ஒருவகையில் நல்லா தான் இருக்கு.  நம்ம தலைவர்  ரஜினிகாந்த் மாதிரி இல்ல...”  என்று வாயில் தன் இருவிரலை வைத்து ரஜினி ஸ்டைலில் திருப்பி காட்டினான்.

“யோவ்... மாமா...  இது உனக்கே ஓவரா இல்ல? என்று செல்லமாக முறைக்க,

“இல்லையே...”  என்று அவள் தலையில் முட்டி சிரித்தான் ராசய்யா.  

****

ராசய்யா தன் கெட்டப்பை மாற்றியது தான் காமாட்சிப்பட்டியில் அன்றைய ஹைலைட்டான செய்தி ஆகிப்போனது.  

பூங்கொடியின் வீட்டிலேயே, அவள் தம்பி, தங்கையில் இருந்து, அவள் அப்பா, அம்மா  எல்லாரும் அவன் புது கெட்டப்பை பார்த்து சிரித்தவாறு   பாராட்ட,  ஊருக்குள்  சொல்லவே வேண்டாம்.  

அவனை பார்க்கும் பெருசுகள்   எல்லாம்,  நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்த்து

“யார் இது?  நம்ம ராசய்யாவா? அடையாளமே தெரியலையே..  இப்படி ஹீரோ  கணக்கா இல்ல இருக்கிறய்யா...  

நம்ம பூங்கொடி கெட்டிக்காரி தான். கழுத்துல  தாலி ஏறின மூனே நாள் ல, ரௌடி மாதிரி இருந்தவனை யே ஹீரோவாக்கி புட்டாளே..

டேய் ராசு... அந்த புள்ளைய விட்டுடாத.  உன்னை இன்னும் டாப்புக்கு கொண்டு வந்திடுவா... “ அவன் கன்னம் வருடி சிரித்தனர்.

“யோவ்..பெருசு... என் முடியை நான் வெட்டினதுக்கு, அந்த கருவாச்சி என்ன பண்ணாளாம்... ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்...” என்று முறைத்தான் ராசய்யா.

அவன் வயதை ஒத்த இளைஞர்களோ, அவனை பார்த்து பொறாமை பட்டனர்.

“என்ன மாப்ள?  தலைமுடி எல்லாம் வெட்டிகிட்டு ஹீரோ மாதிரி ஜோக்கா ஆகிட்ட.  எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம்...ஹ்ம்ம் நீ  நடத்து நடத்து...”  என்று   அவனை பொறாமையோடு பார்த்து வைத்தனர்.  

தாவணி போட்ட இளசுகளோ

“அடி ஆத்தி... ராசு  மாமா...  நீயா இது? அடையாளமே தெரியலையே. நீ இம்புட்டு அழகா இருப்பனு    தெரிஞ்சிருந்தா பூங்கொடி அக்காக்கு முன்னால நான் முந்தியிருப்பேனே.

அக்காவாச்சும் உன் கன்னத்துல  அறை கொடுத்து தாலிய கட்ட வச்சுது.  நானெல்லாம் உன் கன்னத்துல முத்தமா  கொடுத்தே  என் கழுத்துல தாலி கட்ட வைச்சிருப்பேன். சே.. மிஸ் பண்ணிட்டேனே...”  என்று கையை பிசைய,

“அடிங்...பேசாம ஓடுங்கடி... நீங்க பேசினது மட்டும் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சுது அம்புட்டுதான்... அவளை பத்தி தெரியுமில்ல.

எனக்கு விழுந்த அறை உங்களுக்கு விழுந்தா எப்படி இருக்கும் னு ஒரு நிமிஷம் யோசிச்சுக்கங்க...”  என்று சிரித்தவாறு  தன் தலையை கோதியபடி சென்றான் ராசய்யா. 

*****

டுத்ததாக தங்குவதற்கு ஒரு கூரையை ரெடி பண்ணும் வேலையில்  இறங்கினான்

மாமனார் வீட்டில் இருப்பது என்னவோ போல இருக்க,  அந்த ஊரிலேயே வேற வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கலாம் என்றான் ராசசய்யா

பூங்கொடிக்கு அந்த ஐடியா பிடித்தமானதாக இல்லை. 

அவனுடைய சொந்த வீட்டையே பழுது பார்த்து,  அங்கயே குடி போகலாம் என்க ராசய்யா  முகம் இறுகி போனான்.

அவனைப் பொறுத்தவரை அந்த வீட்டிற்குச் சென்றால்,  அவனுடைய பெற்றோர்களின்  நினைவு வரும். 

அவர்களின் இழப்பும், அது தந்த வலியும் கூடவே சேர்ந்து வரும். 

அதனாலேயே அந்த வீட்டிற்கு போக வேண்டாம் என்று மறுத்தான். 

ஆனால் பூங்கொடிக்கு அந்த வீடு ரொம்பவும் பிடிக்கும். 

அவள் வீட்டைப்போல ஊருக்கு நடுவில் இல்லாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயலை ஒட்டி தனியாக இருக்கும் அந்த வீடு. 

வீட்டிற்கு பின்புறத்தில் வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கும். ஆள் அரவமற்ற அந்த தனிவீடு அவளை ரொம்பவே கட்டி இழுக்கும்.

அந்த வழியாக கடந்து செல்லும்பொழுது எல்லாம் பாரதியின் காணி நிலம் வேண்டும் பாட்டு அவள் காதில் ஒலிக்கும்.

 

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்

என்று பாடிய அவரின் வரிகள் எல்லாம் அவள் மனதில் ஓட, அந்த பாட்டில் வருவதைப்போல, காணி நிலத்தின் நடுவில் இருக்கும் அந்த மாளிகையில்,

தென்னை மரம், மாமரம், கொய்யா என பல பழமரங்கள் வீற்றிருக்க, கண்ணைக்கவரும் வண்ண வண்ண ரோஜா செடிகளும், மல்லி, முல்லை, சம்பங்கி என்று விதவிதமான  பூச்செடிகள் சூழ, முற்றத்தில் கட்டிலைப்போட்டு நிலா காய்ந்து கொண்டே தன் கணவனுடன் கொஞ்சி குலாவ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தை இன்பமாய்  அனுபவித்திட வேண்டும் என்று சிந்தனை வர, அதை நினைக்கும் பொழுதே அவள் மனம் மயங்கியது.

அதனால் அந்த வீட்டிற்கே செல்லலாம் என்றாள்.  

முதலில் மறுத்தாலும், பூங்கொடியின் பிடிவாதத்தில் சரி யென்று தலையை ஆட்டி வைத்தான்.

அதோடு அவன் வீட்டின் அருகிலேயே ராசய்யாவின் வயலும் இருந்தது.  அதை அவன்  கவனித்துக்கொள்ளாமல்  குத்தகைக்கு விட்டிருந்தான். 

அந்த நிலத்தை திரும்ப வாங்கி,  நாமே விவசாயம் செய்யலாம் என்றும்  யோசனை சொன்னாள். 

“அதெல்லாம் வேணாம் டி. விவசாயத்தில் பெருசா வருமானம் வராது.  பேசாம நான் ட்ராக்டரே ஓட்டறேன்...”  என்று மறுக்க,

“மாமா... விவசாயத்திலும் நல்ல லாபம் பார்க்கலாம்.. ஆனா என்ன.. நாம கொஞ்சம் விவரமா செய்யணும். உன் மாமனார் மாதிரி ஏக்கர் முழுவதும் வாழைய  நட்டுபுட்டு, ஒரு வருஷம் வரைக்கும் இழவு காத்த கிளி போல சும்மா உட்கார்ந்திருக்க வேண்டாம்.

வாழை, கரும்பு எல்லாம் பணப்பயிர்கள். இப்ப அதை எல்லாம் பயிரிடுவது லாட்டரி அடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு.

எந்த இயற்கை சீற்றமும் இல்லாமல் இருந்தால், நல்ல லாபம் வரும். நம்ம துரதிர்ஷ்டம்.. புயல், மழை, சூறாவளி இப்படி எதாவது வந்தால், மொத்தமும் போய்டும்.

அதனால் அந்த ரிஸ்க் நமக்கு வேண்டாம்.   

சீக்கிரம் விளைச்சல் தரும் குறும்பயிர்களையும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.

அப்புறம் நம்ம வீட்டை சுற்றி நிறைய இடம் இருக்கு இல்ல. அதை எல்லாம் கொத்திவிட்டு, கீரை போடலாம். அதெல்லாம் ஒரு மாசத்துலயே பலன் தரும்...

இன்னும் நிறைய ஐடியா வச்சிருக்கேன்... “ என்று கண்கள் மின்ன உற்சாகத்துடன் சொல்ல, அதுவரைக்கும் விவசாயத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவன்,  முதன் முறையாக யோசிக்க ஆரம்பித்தான்.

****

னக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் பூங்கொடியின் ஆசைக்காக அவன் பெற்றோர்கள் வாழ்ந்த வீட்டையே மராமத்து பண்ண முடிவு செய்தான் ராசய்யா.

அவனுடைய இத்தனை நாள் வருடத்தின் உழைப்பு,  பணமாக பண்ணையார் அம்மா பத்மினி இடம் இருக்க,  இருவரையும் அழைத்து, அந்த பணத்தை இருவரின் கையில் கொடுத்தார்.  

பூங்கொடிக்கு நம்பவே முடியவில்லை.  

அவன்  எவ்வளவு சேமித்து வைத்திருந்தான் என்பது அவனுக்கே தெரியாத பொழுது ஈசியாக அவர்கள் அதை மறைத்திருக்கலாம்.  

இவ்வளவு தான் இருந்தது என்று கொஞ்ச தொகையை மட்டும் கொடுத்து இருக்கலாம்.  

ஆனால் முழு பணத்தையும் கூடவே அதற்கான  வட்டியையும் சேர்த்து போட்டே  திருப்பி கொடுத்தார் பண்ணையார்.  

அதைக்கண்ட இருவரின் மனமும் நெகிழ்ந்து போனது.  

கூடப் பிறந்த தங்கைக்கு உதவ முன்வராத  அவள் அக்கா...  போன்றவர்கள் வாழும் இதே சமுதாயத்தில் தான் இவர்களைப் போன்ற மக்களும் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.

கையில் வைத்துக்கொண்டே   இல்லை என்கிற சுயநலவாதிகளை பார்த்து இருந்ததால் பண்ணையார் அம்மாவின் இந்த செய்கை அவளுக்கு ஆச்சர்யத்தை  கொடுத்தது

மேன்மக்கள் எப்பொழுதும் மேன்மக்களே என்று தான் படித்ததை நினைவுபடுத்திக் கொண்டாள்.  

***** .  

தன் பிறகு கடகடவென்று வேலையை தொடங்கிவிட்டான் ராசய்யா.  

சிதிலமடைந்து இருந்த சுவற்றின் காரைகளை பெயர்த்து எடுத்து விட்டு சிமெண்ட் வைத்து பூசினான். தரையையும் முழுவதுமாக பெயர்த்து எடுத்துவிட்டு, புதுசாக சிமெண்ட் தரை போட்டான்.

கூரையில் இருந்த ஓடுகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, புது ஓடுகளை வாங்கி மாட்டினான். வெளிப்புறத்திற்கு சுண்ணாம்பும், வீட்டிற்கு உள்ளே மனதை வருடும் க்ரீம் கலரில் பெயிண்ட் அடித்தான்.

அதோடு அதுவரை குளியல் அறை, கழிப்பறை என்றெல்லாம் இருந்தஹ்டில்லை. எல்லாம் வெளிப்புறத்தில் தான்.

தன் மனைவி அப்படி எல்லாம் வெளியில் செல்லக்கூடாது என்று , குளியல் அறை, கழிப்பறையையும் கையோடு கட்டி முடித்தான்.

இது வேண்டாம் மாமா.. வீண் செலவு என்று பூங்கொடி மறுக்க,

“ஏன்...உன் புருஷன் இந்த காச சம்பாதிக்க மாட்டானு சந்தேகமா இருக்கா? எனக்கு உன் பாதுகாப்பு முக்கியம் டி. நீ பாட்டுக்கு பாதி ராத்திரியில் வெளியில் எழுந்து போய், பூச்சி பொட்டு எதுவும் கடித்து விட்டால்...?  

காசு எப்ப வேணாம் சம்பாதிச்சுக்கலாம்.. ஆனால் நீ? “ என்று தழுதழுக்க, அடுத்த கணம் தன்னவனை இறுக்கி கட்டிக்கொண்டாள் மங்கையவள்.

“ஆஹான்... சான்ஸ் கிடச்சிட கூடாதே....உடனே இப்படி கட்டிக்கிறது...” என்று அவளை அணைத்த படியே மென்புன்னகையுடன் அவளை சீண்ட,

ஆமாம்...என் புருஷன் நான் கட்டிப்பேன்... இப்படிக்கூட முத்தம் கொடுப்பேன்...” என்று அவன் கன்னத்தில் எக்கி முத்தமிட்டவள், மீண்டும் அவனை பார்த்து

“உனக்கு பொறாமையா இருந்தா, நீயும் போய் உன் பொண்டாட்டியை இறுக்கி அணச்சு உம்மா கொடுத்துக்க...” என்று செல்லமாக முறைத்தபடி சொல்ல,

“கேடி....” என்று அவள் தலை இருபக்கமும் ஆட்டி மலர்ந்து சிரித்தான் அவளவன்.  

ல்லா வேலையும் முடிந்த பிறகு,  அந்த வீட்டை பார்க்க, அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

பாழடைந்து, யாரும் கிட்ட வர அஞ்சும் பேய் வீடாக இருந்த வீடு,   இப்பொழுது   அது புது வீடாக ஜொலித்தது.  

அதைக் கண்ட அனைவருக்குமே  வியப்பாகத்தான் இருந்தது.  

அப்பொழுது ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம்  தொடங்கி இருக்க, அந்த மாதத்தில்  முதல் முகூர்த்தத்திலேயே, வீட்டிற்கு  பால் காய்ச்சி குடி புகுந்தனர் இருவரும்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்திருந்தனர்.  

தன் அக்காவை அழைக்க மாட்டேன் என்று பூங்கொடி அடம் பிடிக்க, ராசய்யாதான் வற்புறுத்தி  அழைக்க வைத்திருந்தான்.  

அவளும் தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வந்தவள்,

“என்னடி மா... இதுதான் நீ கட்டறேனு சொன்ன மாளிகையா? இதுக்கா அன்னைக்கு அம்புட்டு பில்டப் கொடுத்த? “ என்று நக்கல் அடிக்கவும் தவறவில்லை.

பூங்கொடி பல்லை கடித்துக்கொண்டு தன் கணவனை முறைக்க, அவனும் சரி விடு என்றதாய் கண்ணால் ஜாடை காட்டி அவளை அமைதி படுத்த முயன்றான்.

தணிகாசலம் தன் மகளுக்கு தனிக்குடித்தனம் நடத்த வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வாங்கி போட்டிருந்தார்.  

சமைப்பதற்கு வேண்டிய பாத்திரங்களும், கூடவே  கட்டில் பீரோ என்று மற்ற பொருட்களையும்   வாங்கிக் கொடுக்க, ராசய்யா அவரை கடிந்து கொண்டான்.

“எதுக்கு மாமா இதெல்லாம்? என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தர மாட்டேனா?  நீங்க எதுக்கு கஷ்டப்படனும்....”  என்க

“என் பொண்ணுக்கு இதைக்கூட வாங்கிக் கொடுக்க முடியாத அளவுக்கு நான் கையாலாகாதவன் இல்ல மாப்பிள...” என்று விரக்தியுடன் சொல்ல,    

“அந்த நினப்பு, அதே பெத்த புள்ளைய விக்கிறதுக்கு மட்டும் ஏன் இல்லைனு கேளுங்க மாமா... “   என்று  பூங்கொடி வெறுப்புடன் சொல்ல, தணிகாசலத்தின் முகமோ கருத்து போனது.  

“பூங்கொடி... இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிக்கிட்டு இருப்ப.  மாமா மனசு எவ்வளவு கஷ்டப்படும்...”  என்று  அவளை அதட்டினான்  ராசய்யா.  

“உன் மாமனார் மனசு மட்டும் கஷ்டப்படும். அவர் செஞ்ச வேலைக்கு என் மனசு அப்படியே குளுகுளுனு இருக்குதாக்கும். அது மட்டும் உன் கண்ணுக்கு தெரியாதே...” என்று முறைக்க,

“விடுங்க  மாப்பிள.  அவ  பேசட்டும்.  என் பொண்ணு தானே...அவ வேதனை தீரும் வரைக்கும்  பேசிட்டு போகட்டும். ஆனால் நீ கொடுத்த காசை நான் கடனா தான்யா  நினச்சிருக்கேன்.

சீக்கிரம் அந்த கடனை அடைச்சிடுவேன். அப்பயாவது நான் செய்த தவறுக்கு ப்ராய்ச்சித்தம்   கிடைக்குதானு பார்க்கலாம்.

எனக்கு ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடு. என் தலையை அடமானம் வச்சாவது இந்த கடனை அடைச்சிடறேன்...”  என்று  தழுதழுக்க

“ஐயோ மாமா...  அவ ஒரு  லூசு.  அவ சொல்றது எல்லாம் மனசுல வச்சுக்காதிங்க...”  என்று அவரை சமாதானப்படுத்தினான்  

“சரி சரி உன் மாமனாரை ரொம்ப பீல் பண்ண வேண்டாம்னு சொல்லு மாமா.  அப்புறம் எனக்கு இந்த கட்டில் வேண்டாம்.  

அவர் பொண்டாட்டி  சீதனமா கொண்டு  வந்த, அந்த பழைய கட்டிலயே  கொண்டுவந்து போடச் சொல்லு...இந்த புது கட்டிலை அவரையே எடுத்துக்கிட்டு போகச் சொல்லு...”  என்று  எங்கோ பார்த்தபடி சொல்ல,  

அதைக்கேட்டு அவளின் அருகில் நின்றிருந்த  அவளின் அப்பத்தா

“எதுக்குடி...  அந்த பழைய கட்டில கேட்கற?  பிழைக்கத் தெரியாதவளா    இருக்கியே... புதுச கொடுத்துட்டு யாராவது பழச கேட்பாங்களா? சொல்லு...”  

“அடப்போ கிளவி.  உனக்கு அந்த கட்டில் பத்தி தெரியல. அந்த கட்டில்லதான் குடும்பம்  நடத்தி நாலு புள்ளைகளை பெத்துகிட்டாங்க.

அது மாதிரி நானும் என் புருஷனோட குடும்பம் நடத்தி ஒரு  அஞ்சு ஆறு புள்ளைகளையாச்சும்  பெத்துக்க வேண்டாமா?  அதுக்குத்தான்...”  என்று சிரிக்காமல் சொல்ல,  மற்றவர்கள் வாய் பொத்தி சிரித்துக் கொண்டனர்.  

“ஏன் டி இப்படி மானத்த வாங்கற? “ என்று வெட்கத்தோடு அவளை முறைத்து வைத்தான் ராசய்யா.

****  

னைவரும் அங்கயே காலை உணவை சாப்பிட்டு,   கிளம்ப,  தணிகாசலத்தின் கண்கள் கலங்கியது.  

பூங்கொடிக்கு திருமணமாகி இருந்தாலும் உடனே அவளை பிரிந்துவிட வில்லை.  ஒரு மாதமாக தங்களுடனேயே தங்கி விட்டதால் அவளை பிரியும் வருத்தம் இல்லை அவர்களுக்கு.

இப்பொழுது தன் புருஷனோட தனிக்குடித்தனம் என வந்துவிட,  இதுவரை தங்கள் வீட்டில் எப்பொழுதும் கலகலவென்று கேட்கும் அவளின்  சிரிப்பும், வாய் ஓயாமல் பேசும் அவளின் பேச்சும் இருக்காதே என்று மனம் கனத்தது.

அவள் தங்களுடன் பேசவில்லை என்றாலும், அவளின்  குரலையாவது கேட்க முடிந்தது. இனி அதுவும்  முடியாதே என்று மனம் தழுதழுத்தது.  கண்கள்  கலங்கிட

“என் பொண்ணை  நல்லா பாத்துக்குய்யா...”  என்று தணிகாசலம் ராசய்யாவின்  கையை பிடித்துக் கொண்டு தழுதழுக்க,  

“கண்டிப்பா மாமா... நாம என்ன வேற வேற ஊர்லயா இருக்கோம். ஒரே ஊரு.. அதுவும்  பக்கத்துல தானே இருக்க போறோம். நீங்க  தினைக்கும் ஒரு எட்டு வந்து  பாத்துட்டு  போங்க.

அதுக்கு எதுக்கு இப்படி கவலைப்  படனும்.  சந்தோசமா போயிட்டு வாங்க...” என்று புன்னகைத்தான்.  

என்னதான் தன் பெற்றோர்கள் மீது வெறுப்பாக இருந்தாலும், இனி அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது என வேதனை சுழன்றது பூங்கொடிக்கும்.  

கண்களில் தானாக கண்ணீர் சுரக்க, அதை மறைக்க தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!