என்னுயிர் கருவாச்சி-44

 


 அனைவருக்குக் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..! 

இந்த இனிய நன்னாளில் என்னுடைய இதழில் கதை எழுதும் நேரமிது நாவல் முழு ஆடியோ  நாவலாக இனிய குரலுடன் வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் தோழமைகளே...!


https://youtu.be/CyqeKSswbZA


அத்தியாயம்-44

 

நீண்ட நேரம் ஒருவருக்குள் ஒருவர் இதழ் வழியாகவே நுழைந்துவிடும் வேகத்தில் கரைந்து கொண்டிருக்க,  சொர்க்கத்தின் வாயிலை எட்டி  இருந்தனர்  இருவரும்.

அந்த நேரம் பூஜை வேலை கரடியாக வந்து நின்றான் அன்பரசன்.

“யக்கா....”  என்று அழைத்தவாறு வீட்டு வாயிலின்  காம்பவுண்ட் கேட்டை  திறக்க,  அதில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர் இருவரும்.

சொர்க்கத்திற்குள் நுழைய இருந்தவர்களை நுழைய விடாமல் கதவை அறைந்து மூடி சாத்தியதை போன்று,  வெளியில் கேட்ட அன்பரசனின் சத்தத்தில் அதிர்ந்து விழித்தனர் இருவருமே

அப்பொழுதுதான் இருவரும் இருந்த கோலம் உறைக்க, அடுத்த கணம் அவன் மடியில் இருந்து    துள்ளிக் குதித்து எழுந்தாள்  பூங்கொடி.

அவசரமாக தன் மாராப்பை இழுத்துவிட்டு , சேலையையும் சரி செய்து கொண்டு, கலைந்திருந்த முடியையும் அவசரமாக சீர் படுத்திக் கொண்டாள்.

ராசய்யாவும் கீழ கையை ஊன்றி  எழுவதற்குள்  அங்கு வந்து விட்டான் அன்பரசன்.

அம்மியின்  அருகில் காலை நீட்டி அமர்ந்திருக்கும் தன் மாமனை கண்ட மச்சான் வாய் விட்டு சிரித்தான்.  

“மாமு... என்னாது இது?  உன்ன போய் அம்மிய  அரைக்க வச்சுடுச்சா என் அக்கா? என்று கிண்டலாக சிரிக்க,  அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவன்,  தன் மச்சானை  முறைத்தபடி எழுந்து கொண்டான்.  

பூங்கொடிக்கோ தன்னவனின்  முகம் பார்க்க வெட்கமாக இருந்தது.

சில நொடிகள் முன்னே நடந்தேறிய அந்த இதழ் யுத்தத்தின் சிலிர்ப்பு அவளின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து பரவிக்கிடக்க, அதன் விளைவாய் அவளின் கன்னங்கள் நாணத்தை பூசிக்கொண்டன.

அதை முயன்று மறைத்துக்கொண்டு, தன் தம்பியின் பக்கம் திரும்பிக் கொண்டவள்,  

“ஏன் டா கரடி?  என்ன இந்த நேரத்துல வந்து இருக்க? என்று செல்லமாக முறைத்தாள்.

“ஒரு நாளும் இல்லாத திருநாளாக,  இன்று தான் அவளின் கணவன் அவளை  முத்தமிட்டான்.  

அதை முழுவதுமாக முடிக்க விடாமல் பூஜை வேலை கரடி போல வந்து சேர்ந்த தன் தம்பியை வெட்டவா , குத்தவா என்று பார்த்து முறைத்து  வைத்தாள்.

“பூஜையா? ரெண்டு பேரும் பூஜையா   பண்ணிகிட்டிருந்திங்க?  “ என்று இளையவன் வெகுளியாக கேட்டு வைக்க, இருவருக்கும் சொல்லி வைத்தாற்போல ஒரே நேரத்தில் புரை ஏறியது.

இருவரும் தலையை தட்டி இருமிக் கொண்டனர்.

“ஆமான்டா... “ என்று வெட்கத்தோடு பூங்கொடி சொல்ல, அவனோ தாடையில் கை வைத்து தடவியவாறு  யோசித்துக் கொண்டே

“பாத்தா அப்படி   தெரியலையே... மாமா அம்மி இல்ல அரச்ச மாதிரி இருக்கு...” என்று மீண்டும் நம்பாமல் யோசிக்க ,

“டேய் கரடி... இந்த ஆராய்ச்சியெல்லாம்  உனக்கு எதுக்கு... நீ வந்த வேலையைப்பார்... ”  என்று அவன் அக்கா சிடுசிடுக்க,

“கரடியா ?  என்னக்கா இது புது பேரா இருக்கு?  மாமாவுக்கு வைக்க வேண்டிய பேரையெல்லாம் எனக்கு வைக்கிற போல... “   என்று  கிளுக்கி சிரிக்க,  

“டேய் மச்சான்...உனக்கும், உன் அக்காவுக்கும்  நடுவுல என்னை எதுக்குடா இழுக்கற ? நீயாச்சு...  உன் அக்காவாச்சு...” என்று ராசய்யா அவனை முறைக்க,  

“ஆமா ஆமா...  நானும் அக்காவும் பேசிக்கிட்டு இருக்கோம்.  நீங்க அந்த அம்மி அரைக்கிற வேலையை பாருங்க மாமு...” என்று நக்கலாக சிரிக்க

“உனக்கு ரொம்பவும் வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு டா. இதுவே உன் பெரியக்கா மாமாகிட்ட இப்படி பேசுவியா...” என்று அவன் காதை செல்லமாக திருகியபடி முறைத்தாள் பூங்கொடி

“ஐயையோ...  அந்த ஆளு ஒரு முசுடுக்கா... நான் அவர் கிட்டப் போனாலே என்னமோ தொடக்கூடாதவனை பாக்கிற மாதிரி  கேவலமா பாத்து வைப்பார்.  நமக்கெல்லாம் அவர் செட்டாக மாட்டார்.  

எனக்கு என் ராசு மாமா தான் பெஸ்ட் மாமா...எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவார்...”  என்று கண்சிமிட்டி சிரிக்க,  

“அடிங்...” என்று ராசய்யா அவனை செல்லமாக முறைத்தபடி  துரத்த, அவனோ கலகலவென்று சிரித்தவாறு, அவன் கைக்கு சிக்காமல், போக்கு காட்டி ஓடியவன், ஓடிவந்து தன் அக்காவின் பின்னால் நின்று கொண்டு பழிப்பு காட்ட,

அவளின் முன்புறம் இருந்த ராசய்யா,  அவளின் தோளை பற்றி அவன் புறமாய் முன்னால் இழுத்துக் கொண்டு,  கையை நீட்டி அவளின் பின்னால் நின்றிருந்த இளையவனை புடிக்க முயல, அவனோ பக்கவாட்டில் நகர்ந்து நின்று கொண்டு தலையில் கொம்பு வைத்து நாக்கை துருத்தி பழிப்பு காட்டினான்.

பெண்ணவளோ தன்னவன் அழுத்தமாக தோள் பற்றியதில் மீண்டும் உணர்வுகள் கிளர்ந்தெழ, அதில்  விக்கித்து நிக்க, அவள் கணவனோ தன் குட்டி மச்சானை பிடிப்பதில் பிசியாகி போனான்.

சற்று நேரம் மாமன், மச்சான் இருவரும் ஓடிபிடித்து விளையாண்டு களைத்திருக்க, அதற்குள் தன்னை சமனபடுத்திக்கொண்டவள், அவர்களின் விளையாட்டை ரசித்து பார்த்தாள்.

பத்து பேரை ஒத்தை ஆளாக அடித்து சாய்க்கும் ஆண்மகன்...அவன் முறைத்து பார்த்தாலே மற்றவர்கள் ஒரு அடி தள்ளி நிக்கும் கோபக்காரன்... இப்படி சிறு பிள்ளையாய், சின்ன பையனுடன்  ஓடி பிடித்து விளையாடுவதை காண அவளுக்கு சிரிப்பு வந்தது.

உதட்டில் உறைந்த புன்னகையுடன்,  அவர்கள் இருவரையும் ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, ஓடி களைத்த இளையவன், அனிச்சையாய் திரும்பி தன் அக்காவை பார்க்க, அவனின் பார்வை அவளின்  முகத்திற்கு செல்ல, அப்பொழுதுதான் அதை கவனித்தான்.  

அவளின் உதடு லேசாக வீங்கி இருக்க,  ஓரத்தில் ரத்தம் கசிந்திருந்தது.  

அதைக் கண்டவன் பதறி,  தன் அக்காவின் அருகில் ஓடி வந்தவன்  

“என்னாச்சுக்கா... ஏன் உன் உதடு வீங்கி இருக்கு? “ என்று அக்கறையுடன்  விசாரிக்க,  அப்பொழுதுதான் தன் இதழை  தொட்டுப் பார்த்தவள், கை விரல் பிசுபிசுக்க, அடுத்த கணம் அது எப்படி வந்தது என்பது நினைவு வர, அவள்   கன்னங்கள் குங்குமம் ஆக சிவந்து போயின.  

தன் வெட்கத்தை மறைக்க, கட்டை விரலை அழுத்திக்கொண்டு,  கீழுதட்டையும்  அழுந்த கடித்துக் கொண்டாள்.  

ரத்தம் என்றதும்  திடுக்கிட்ட ராசய்யாவும்   பூங்கொடியின்  அருகில் வந்தவன்  

“என்னாச்சுடி? “ என்றவாறு அவளின் மோவாயை பிடித்து நிமிர்த்தி,  அவள்  உதட்டைப் பார்க்க, இப்பொழுது இன்னும்  நன்றாகவே வீங்கியிருந்தது.  

அதைப் பார்த்ததும், திடுக்கிட்டவன்  முகம் கலவரமானது.

அவனால் தான்...அவனுடைய முரட்டுத்தனத்தினால் தான்  அவளுக்கு இப்படி ஆனது என்று உரைக்கவும் அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.  

மெல்ல அவளின் இதழ்களை  மிருதுவாய் வருடியவன்,

“சாரி டி...” என்று வேதனையோடு மெல்ல முனுக,   அவளோ செல்லமாக அவனை முறைத்தவள்,  

“பரவாயில்லை மாமா... “  என்று தன் விழியாள் பதில் சொன்னாள்.  

“ரொம்ப வலிக்குதா டி...” என்று அடிபட்ட பாவத்துடன் பார்த்து வைக்க, அவளோ  இல்லை என்று தலையை வேகமாக ஆட்டினாள்.  

அவர்கள் இருவரும் ஜாடையால் பேசிக்கொண்டிருப்பதை கண்ட அன்பரசன்

“ஐயோ...ரெண்டும் பேரும்  கொஞ்சம் சத்தமாதான் பேசுங்களேன்.  எனக்கும் கேட்கணும் இல்லை...”  என்க,  அப்பொழுதுதான் அங்கே அன்பரசனும் இருப்பது இருவருக்கும் நினைவு வந்தது.  

உடனே அவளின் உதட்டிலிருந்து தன் கையை விலக்கிக் கொண்டான் ராசய்யா.    

“என்னாச்சுக்கா? என்று மீண்டும் அக்கறையோடு விசாரிக்க

“ஒன்னும் இல்லடா...வாசல் நிலையில இடிச்சுகிட்டேன்...”  என்று  கன்னங்கள் சிவக்க,  ஏதோ சொல்லி சமாளித்தாள்.  

“ஓ... அன்னைக்கு ஒரு நாள் இடிச்சுகிட்டயே. நீ கூட மஞ்சள் தூளை வச்சி அமுக்கி இருந்தியே... அப்படியா? என்று சந்தேகத்துடன் கேட்க,

அன்று ராசய்யா குடித்துவிட்டு அவளை  முத்தமிட்டதைத் தான் சொல்கிறான்  என்பது இருவருக்குமே தெரிய, இருவர் முகத்திலும் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

இருவரும் ஒரே நேரத்தில் இளையவனை பார்த்து  அசடு வழிந்தனர்.  

ஆமான் டா...”  என்று பூங்கொடி வெட்கத்துடன் புன்னகைக்க,

“உனக்கு மட்டும் ஏன் கா உதட்டிலயே  இடிக்குது? .  

எல்லாருக்கும் கால்ல இடிக்கும்...கை முட்டில  இடிக்கும். உனக்கு மட்டும் உதட்டுலயே இடிக்குதே...ஏன்? ” என்று உலகமகா சந்தேகத்தை கேட்டு வைத்தான்.  

அதைக்கேட்டவளின்   பார்வையோ  குறும்பாக ராசய்யா வின் பக்கம் சென்றது.

அவன் முதன் முதலாக முத்தமிட்ட தருணமும் நினைவு வந்தது.

அப்பொழுது  அவன் அவளின் எதிரியாக இருந்தான். குடி போதையில் தன்னை மறந்து அவளை இழுத்து அணைத்து முத்தமிட்ட பொழுது அருவருப்பாகத்தான் இருந்தது. அவளுக்கு. குமட்டிக்கொண்டு வந்ததே...

ஆனால் இன்று அதே அவன்...அதே வாய்... அதே இதழ்கள்..ஆனால் இன்று அவன் கொடுத்த முத்தம் உயிர்வரை தீண்டியதே...ஏன்? என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்ள, விடைதான் கிடைக்கவில்லை.

தன் மனைவியின் குறும்பு பார்வையை கண்டவனும் வெட்கத்துடன் தன் பின்னந்தலையை கோதிக் கொண்டவன்,  அவளைப் பார்த்து மந்தகாசமாய் கண்சிமிட்டி புன்னகைத்தான்.

அவனின் அந்த வெட்க புன்னகையை ரசித்து,  தன் உள்ளே பத்திரபடுத்திக்  கொண்டு,  காதலுடன் நோக்கினாள் தன்னவளை.

அவர்களின் பார்வை நாடகத்தை அறியாத அந்த பாலகன்

“சொல்லுக்கா?   உனக்கு மட்டும் ஏன் உதட்டுலயே இடிக்குது? “ என்று பிடிவாதமாக காரணத்தை கேட்க, பெரியவளோ அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருத்தாள்.

அவளின் திருதிரு முழியை ஓரக்கண்ணால் ரசித்தவன்

“அதுவாடா மச்சான்...  இந்த வாசப்படிக்கு உன் அக்கா  உதடுதான்  ரொம்ப பிடிச்சிருக்காம்.  அதுதான்..”  என்று தன் மீசையை நீவி விட்டவன், அவளின் இதழை  தாபத்துடன் பார்த்து வைக்க, அவளின் கண்கள் மின்னியது.

தன் உதட்டை சுழித்து, அவனுக்கு  பழிப்பு காட்டி புன்னகைத்தாள் அவன் மனையாள்.

அவளின் சுளித்த இதழில் குத்தி நின்ற பார்வையை கஷ்டப்பட்டு விலக்கி கொண்டு தன் மச்சானை பார்த்தவன்,   

“அது சரிடா?  நீ எங்க இந்நேரம் இங்க வந்திருக்க? என்று தன் மச்சானை விசாரிக்க,  அப்பொழுதுதான் அவன் கொண்டு வந்து இருந்த தூக்கு நினைவு வந்தது.  

“அச்சோ...  நான் வந்த வேலையையே மறந்துட்டேன் பாரேன்... அம்மா  மீன் குழம்பு செஞ்சாங்க.  மாமாக்கு பிடிக்கும்னு கொடுத்துட்டு  வர சொன்னாங்க.  அதான் வந்தேன்...இந்தாக்கா...”  என்று தூக்கை தன் அக்காவிடம் நீட்ட

அதை திறக்காமலேயே மீன் வாசம் அவளை சுண்டி இழுத்தது. வாசத்தில் இருந்தே அது அயிர மீன் என்று கண்டு கொண்டாள் பூங்கொடி.  

அவளுக்குத்தான் அயிர மீன்  ரொம்ப பிடிக்கும்.  அவளுக்காகத்தான் அவள் அம்மா செய்திருக்கிறாள்.  

ஆனால் அவளுக்காக என்று சொன்னால்,  சாப்பிடமாட்டாள்  என்று அறிந்து மாப்பிள்ளைக்காக என்று  கொடுத்து விட்டிருக்கிறாள் என்பது புரியவும்  கண்ணோரம் லேசாக கரித்தது.  

தன் அம்மாவிடம் செல்லமாக சண்டையிட்ட நாட்கள்...தன் அன்னை கோபப்படும் பொழுதெல்லாம், கோபத்தை தணிக்க, கழுத்தை கட்டிக் கொண்டும் கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டும் ஆர்பரித்த நாட்கள்...

அவளுடன் ஏட்டிக்கு போட்டி மல்லு கட்டி நின்ற நாட்கள் என எல்லாம் கண் முன்னே வந்தது.

அதுவும் இந்த மீன் குழம்பு வைக்கும் நாட்களில் ஆயிரம் தடவை சமையல் அறைக்கு சென்று மீன் வெந்து விட்டதா என்று நச்சரித்ததும், வெந்தும் வேகாமலும் ஒன்றை எடுத்து தட்டில் வைத்து அவளுக்கு மட்டுமாய் கொடுத்து பாசத்தோடு பார்த்த தன் அன்னையின் கனிந்த முகம் நினைவு வர, நெஞ்சை அடைத்தது.

இன்று அத்தனையும் தொலைந்து போனது. அவள் மனம் லேசாக இலக ஆரம்பிக்க, அதே நேறம் அவள் பெற்றோர்,   அவளுக்காக செய்ய இருந்த செயல் நினைவு வர, இலகி இருந்த அவள் மனம் இறுகி போனது.

சற்று முன் கனிந்திருந்த அவள் முகம் இப்பொழுது கடுமையானது.

அவளின் முகத்திலிருந்தே தன்னவளின் மனநிலையை கண்டுகொண்டவன் , அவள் மனதை மாற்ற எண்ணி,  

“அப்பாடா...எப்படியோ இந்த அம்மி  அரைக்கிற வேலையிலிருந்து நான் தப்பிச்சேன். சரியான நேரத்துல மீன் குழம்பை கொண்டு வந்து கொடுத்த  மச்சான்...  நீ தெய்வம் டா...  இல்லை இல்லை இதை கொடுத்தனுப்பிய என் மாமியார்தான் தெய்வம்

பூவு... எனக்கு பசிக்குது.  சீக்கிரம் சோத்தை போட்டு என் மாமியார் ஆசையா செய்து கொடுத்த மீன் குழம்பை ஊத்து...”  என்று அவளின் மனநிலையை  மாற்ற முயன்றான்.  

“அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன் மாமு... அப்புறம் உங்க வீட்டு வாசப்படி கிட்ட சொல்லி வைங்க.  இன்னொரு தரம் என் அக்கா உதட்டை இடிச்சது..அம்புட்டுதான்..

என் அக்காவுக்கு சிறு காயம்னா கூட சும்மா விடமாட்டான் இந்த  அன்பரசன்...” என்று முன்னந்தலையை ஸ்டைலாக கோதிவிட,

“அடிங்... கட்டிலோட ஒன்னுக்கு போற பய எல்லாம் சவால் விடற அளவுக்கு ஆகிப்போச்சு...இதுதான் கலிகாலங்கிறது... இருடா வாரேன்...” என்று மீண்டும் அவனை பிடிக்க முயல,

அவனோ  ஹா ஹா ஹா என்று  சிரித்தபடி அவன் கைக்கு சிக்காமல், பின்னால் திரும்பி நின்று  லேசாக குனிந்து தன் குண்டியை இருபக்கமும் ஆட்டிக்காட்டி,  பழிப்பு காட்டிவிட்டு  வெளியில் ஓடி விட்டான்.

*****

துவரை தன் பெற்றோர்கள் நினைவில் இறுகி இருந்தவள்,  தன் கணவன் பசிக்கிறது என்றதும் தன் தம்பி கொடுத்துச் சென்ற தூக்கை எடுத்து முற்றத்தில் வைத்து விட்டு   சமையல் அறைக்கு சென்றாள்.  

முன்பே வடித்து வைத்திருந்த சாதத்தை எடுத்து வந்து,  அவனை அமர வைத்து பரிமாறினாள்.

“நீயும் உட்கார் டி... “  என்று அவளையும் சாப்பிட அமர சொல்ல,

“ம்க்கும்... இது உன் மாமியார் உனக்காக செஞ்சு கொடுத்த மீன் குழம்பு.  அதனால் நீயே சாப்பிடு.  எனக்கு  வேண்டாம்...”  என்று பழிப்பு காட்டி மோவாயை இடித்தாள் 

“ஹ்ம்ம் எனக்குனா  எனக்கு மட்டும்தான் கொடுத்தாங்களா?  இப்படி நீ பிடிவாதம் பிடிக்காத டி.

ஏற்கனவே சொல்லி இருக்கேன். கோபமோ, வருத்தமோ அதை வெளிக்காட்டிட்டு அப்பயே மறந்துடனும்.

குப்பை மாதிரி கோபத்தை தேக்கி வைத்துக்கொண்டே போனால், நாளடைவில் குப்பை நாறுவதைப்போல நம்ம மனதிலும் பலவகை துன்பங்கள் நேரும்.

அதனால் உன் அப்பா அம்மா செய்ததை மறந்து விடு... மன்னித்துவிடு... இன்னும் அதையே புடிச்சு தொங்கி கிட்டு இருக்காத? “ என்று செல்லமாக அதட்ட,

“உனக்கு என்ன தெரியும்? அன்னைக்கு என்னை நிக்க வச்சுகிட்டு பேரம் பேசின மாதிரி நடந்துகிட்டதுக்கான காயம் என் மனதில் ஆழமா இருக்கு. அது அவ்வளவு சீக்கிரம் ஆறாது...”

“ஹ்ம்ம் சரி.. அதை அப்படியே ஆறாம வச்சுகிட்டு கஷ்டபட்டுகிட்டே இரு... இப்ப வா சாப்பிட...” என்று சிடுசிடுத்தான்.

“இல்ல...எனக்கு வேண்டாம்.  நீ சாப்பிடு..” என்று மறுக்க,

“உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்..”  என்று எழுந்திருக்க முயல

“ஐயோ...  உட்காரு மாமா...இப்படி சாப்பாட்டில்  பாதியில் எழுந்திருக்க கூடாது...”  என்று அவன் கை பிடித்து இழுத்து  அமர வைத்தாள் பூங்கொடி.  

“அப்ப நீயும்  வந்து உட்கார்...”  என்று அவளையும் கை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்து அவளையும் சாப்பிட வைத்தான் ராசய்யா..! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!