நிலவே என்னிடம் நெருங்காதே-65

 


அத்தியாயம்-65

ந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் முன்னே சீறி பாய்ந்து வந்து நின்றது அந்த கார்...

அது சரியாக அனையும் முன்னே ஓட்டுநர் பக்கமிருந்த கதவை திறந்து கொண்டு வேகமாக கீழிறங்கினாள் நிலவினி...அவள் உடன் வந்திருந்த ஜமீன்தாரை கூட கண்டு கொள்ளாமல் புயலென அந்த மருத்துவமனையின் உள்ளே பாய்ந்தாள்...

ஜமீன்தாரும் அவர் மகன் நெடுமாறனும் வேகமாக கீழ இறங்கி அவளை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் உள்ளே சென்றார்... 

எப்படி இந்த சென்னையின் சாலையில் இவ்வளவு வேகத்தில் அந்த காரை ஓட்டி வந்தாள் என்று அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

சற்று நேரத்திற்கு முன்னால் தன் கணவனுடன் பேசி கொண்டிருக்க அப்பொழுது கேட்ட பெரிய சத்தமும் அதை தொடர்ந்து அவன் அலைபேசி இணைப்பு அணைக்கபட்டதும் மனதுக்குள் பயத்தை உண்டு பண்ணியது நிலாவுக்கு..

அதே நேரம் அந்த இடத்தில் பெரிய சாலை விபத்து ஒன்று நடந்ததாக வந்த செய்தியை கண்டதும் மயங்கி சரிந்திருந்தாள் நிலா.. அவளின் அலறல் கேட்டு அங்கே ஓடி வந்தனர் அவள் குடும்பத்தார்...

முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை தெளிய வைத்து அவளை தேற்றி விஷயத்தை கேட்க அவளோ சொல்ல முடியாமல் மலங்க மலங்க விழித்தாள்..

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அந்த டீ.வி யில் ஓடிய செய்தியை சுட்டி காட்டி

“ர..... ர..த...  ர த ன் சற்றுமுன் அங்கதான் இருந்தார்..... “  என்று ஒருவாறு தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்..

உடனே அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஜமீன்தார்

“உன் புருஷனுக்கு ஒன்னும் ஆகி இருக்காது அம்மணி... நீ கவலை படாதே.. மாறா... உடனே ரதனுக்கு போன் போடு.. “ என்றார் பதற்றத்துடன்..

நெடுமாறனும் முயன்று பார்க்க அவன் அலைபேசி அணைக்கபட்டிருக்க இப்பொழுது எல்லாரையும் பயம் வந்து அப்பி கொண்டது..ஓரளவுக்கு சுய நினைவுக்கு வந்திருந்த நிலா .

“தாத்தா... நான் இப்பவே அங்க போயாகணும்... “ என்று வேகமாக எழுந்து நின்றாள் நிலா...

“எப்படி அம்மணி போறது? ட்ரைவர் வேற இன்னைக்கு வரலையே... “ என்று தேவநாதன் கையை பிசைந்தார்...

“ட்ரைவர் இல்லாட்டி என்ன தாத்தா.. எனக்கும் ட்ரைவிங் தெரியும்.. நானும் கார் ஓட்டி இருக்கிறேன்.. நானே ஓட்டுகிறேன்.. “

“ஐயோ... நீ நம்ம ஊர்ல ஓட்டினது வேற அம்மணி.. இங்க பழக்கம் இல்லாமல் அதே மாதிரி ஓட்ட முடியாது.. “ என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவளை காணவில்லை....காற்றோடுதான் பேசி கொண்டிருந்தார் ஜமீன்தார்...

புயலென கீழ இறங்கியவள் கார் சாவியை எடுத்து கொண்டு ஷெட்டிற்கு விரைந்திருந்தாள்.. அவளை தனியாக அனுப்ப மனம் இல்லாமல் தேவநாதனும் நெடுமாறனும் அவள் பின்னே ஓடி வந்து அவளுடன் காரில் ஏறி கொண்டனர்..

தன் அலைபேசியில் இருந்த கூகுல் மேப்பில் அந்த இடத்தை செட் பண்ணிவிட்டு காரை கிளப்பி சீறி பாய்ந்தாள் நிலா.. முன்னால் அமர்ந்து இருந்த தேவநாதன் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்ல முயன்றார்..

ஆனால் அவளோ அதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை..

“அவருக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது.... என் ரதன் எனக்கு வேண்டும். என் ரதனை காப்பாற்றி கொடு முருகா... “ என்று வாய்விட்டு புலம்பியவாறு காரை வேகமாக ஓட்டினாள்..

விபத்து நடந்த இடத்தை அடைந்ததும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி சென்று கண்களால் அவசரமாக தேடினாள்... அவளவனை எங்கும் காணவில்லை..அதற்குள் விபத்து நடந்த காரை அப்புறபடுத்தி இருந்திருந்தார்கள்.. 

இன்னும் கொஞ்சம் கும்பலாய் நின்றிருந்தவர்களை அனுகி விசாரிக்க அப்பொழுதுதான் விஷயம் புரிந்தது..

“சாலையின் ஓரமாக இருந்த பெரிய மரம் ஒடிந்து காரின் மீது விழுந்து அந்த கார் அப்பளமாக நொறுங்கிவிட்டது.. “ என்றனர்..

அதை கேட்டு அதிர்ந்தவள் அந்த காரில் இருந்தவருக்கு என்னவாயிற்று என்று விசாரிக்க

“பயங்கர அடிமா.. பிழைப்பதே கஷ்டம் என்றுதான் சொல்லுகிறார்கள்.. அருகில் இருக்கிற மருத்துவமனையில் தான் சேர்த்திருக்கிறார்கள்.. “  என்று விவரம் சொல்ல

“கடவுளே... என் ரதன் பிழைத்து விட வேண்டும்... அவரை எப்படியாவது காப்பாற்றி கொடுத்து விடு.. “ என்று மீண்டும் வேகமாக காருக்கு வந்தவள் அதை கிளப்பி புயலென அந்த மருத்துவமனையை நோக்கி சீறி பாய்ந்தாள்..

இதோ அந்த மருத்துவமனையை அடைந்து விட்டவள் அதே வேகத்தில் அதை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்..

நேராக ரிசப்ஷனுக்கு சென்று

“என் புருஷன் எங்க அட்மிட் ஆகி இருக்கிறார்? ...நான் அவரை பார்க்கணும்.. “ என்றாள் பதற்றத்துடன்..

அந்த வரவேற்பில் இருந்த பெண்ணோ இது மாதிரி பதற்றத்துடனும் அடித்து கொண்டு ஓடி வருபவர்கள் என எத்தனையோ பேரை பார்த்து பழகி விட்டதால் நிலாவின் பதற்றத்தை கண்டு கொள்ளாமல் பொறுமையாக நிலாவை பார்த்தவள்

“பெயர் சொல்லுங்க மேடம்.. “ என்றாள் தன் முன்னே இருந்த கம்ப்யூட்டர் திரையை பார்த்தவாறு...

“ர... ர..த... ன்...அ தி ர த ன்.....  என் புருஷன்... எங்க அட்மிட் ஆகி இருக்கிறார்...?  “  என்றாள் மீண்டும் குரல் கம்ம நெஞ்சை அடைக்க முகத்தில் வலியுடன்.. அதே நேரம் அருகில் இருந்த தேவநாதன் அவளை மெல்ல அணைத்து கொண்டவர்..

“பதட்டபடாத நிலா மா.. நான் அடிச்சு சொல்றேன்.. என் பேரனுக்கு எதுவும் ஆகி இருக்காது.. தைர்யமா இரு... “ என்று ஆறுதல் சொன்னார்..

அதற்கு மேல் தாங்க முடியாமல் அவர் தோளின் மீது சாய்ந்து கொண்டு கதற ஆரம்பித்தாள் நிலா..

“அம்மணி... கொஞ்சம் விரசா பார்த்து சொல்லுமா... என் பேரன் எங்க இருக்கான் என்று... “ என்று ஜமீன்தாரும் பதற்றத்துடன் கேட்டு கொண்டார்... அவர் முகமும் இறுகி போய் கண்கள் கலங்கி முகத்தில் வேதனை அப்பி கொண்டிருந்தது..

சாதாரணமாகவே கலங்கி போகும் நெடுமாறன் தங்கள் ஜமீனின் அடுத்த தூணாய் நின்றிருக்கும் தன் மகனுக்கு ஆபத்து என்றதும் இன்னுமே கலங்கி போய் செய்வதறியாது வேதனையுடன் நின்று கொண்டிருந்தார்...   

“ஒரு நிமிஷம் ஐயா... .அதைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்...“ என்றாள் அந்த கணினியில் இன்னும் பட்டனை தட்டி கொண்டே..  

“இப்ப செத்த முன்னால  ஆக்சிடென்ட் ஆச்சே..... அவன் மா.. “ என்றார் தேவநாதன் வேதனையுடன்..

“ஓ... அந்த ரோட் ஆக்சிடென்ட் கேசா... அது எமர்ஜென்சி வார்டில் இருக்காங்க சார்... ரொம்ப கிரிட்டிகலா இருக்கு.. நீங்க பர்ஸ்ட் ப்ளோரில் சென்று பாருங்க.. “ என்று சொல்லி முடிக்குமுன்னே முதல் தளத்திற்கு செல்லும் படிகளில் வேகமாக ஏறி ஓடி கொண்டிருந்தாள் நிலா..

முதல் தளத்தை அடைந்ததும் அங்கேயும் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது... ஆக்சிடென்ட் நடந்தவருக்கு ஐ.சி.யூ வில் ட்ரீட்மென்ட் போய் கொண்டிருப்பதாகவும் பிழைப்பது ரொம்பவுமே கஷ்டம் என்று பேசி கொண்டிருந்தனர் இருவர்..

அதை கேட்டு இதயத்தை கசக்கி பிழிய அவசரமாக உள்ளே இருப்பவரை பார்க்க முயன்றாள்.. சுற்றிலும் சுவரால் மூடி இருக்க பார்க்கும் சிறு இடம் கூட இல்லாததால் உள்ளே இருப்பவரை பார்க்க முடியவில்லை...

மீண்டுமாய் தொய்ந்து போய் அருகில் இருந்த இருக்கையில் தொப்பென்று விழுந்து தன் தலையின் இருபக்கமும் கையை வைத்து அழுத்தி பிடித்து கொண்டு தன் கணவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது... அவன் திரும்பி வரவேண்டும்.. “ என்று உருப்போட்டாள்...

அதே நேரம் அவள் முன்னே ஒரு ஜோடி கால்கள் வந்து நிக்க அதை கூட நிமிர்ந்து பார்க்காமல் கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் தலையை குனிந்தபடி....

அப்பொழுது

“நி... வி... “ என்ற குரல் மெலிதாக கேட்க அது அவள் கணவனின் குரல்... .அவன் மட்டுமே அவளை அழைக்கும் பிரத்யேகமான பெயர்...

“ஐயோ... அவர் குரலே என் காதில் கேட்கிறதே... அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது... அவர் திரும்பி வந்து மீண்டும் இதே மாதிரி என்னை நிவி என்று அழைக்க வேண்டும்..

என்னை முறைத்து பார்க்க வேண்டும்.. என்னுடன் சண்டை போட வேண்டும்... முருகா.. என் கணவனை திருப்பி கொடுத்து விடு.. “ என்று உள்ளுக்குள் அரற்றி கொண்டிருந்தாள்..

இப்பொழுது மீண்டுமாய் கேட்டது அதே குரல்...

“நிவி.... இங்க என்ன பண்ணிகிட்டிருக்க? “ என்று கொஞ்சம் சத்தமாக கேட்டது அதே குரல்..

இப்பொழுது அந்த குரல் அவள் அருகில் அதுவும் உரக்க கேட்க விலுக்கென்று தலையை நிமிர்த்தினாள்...

அவள் அருகில் ஆறடி உயரத்தில் கம்பீரமாய் நின்றிருந்தான் அவள் கணவன்...

இது கனவா என்று மீண்டும் கண்களை பல முறை சிமிட்டி மீண்டுமாய் உற்று பார்க்க

“என்னாச்சு மா? நீ இங்க எப்படி வந்த? “ என்றான் மெதுவாக குரல் கம்ம..

அதை கேட்டு தன் எதிரில் இருப்பவன் நிழல் அல்ல.. நிஜம்தான் என மண்டையில் உரைக்க அடுத்த நொடி வேகமாக எழுந்து

“ர.. த... ன்... “ என்று அழைத்தவாறு  பாய்ந்து சென்று தன் கணவனை இறுக்கி கட்டி கொண்டாள் நிலா....

அவனும் திகைத்து போய் அவளை மெல்ல அணைத்தவாறு அவள் முதுகை வாஞ்சையுடன் வருடி கொடுத்தான்..

மேல ஏறி வந்திருந்த தேவநாதனும் தன் பேரனை முழுவதுமாக காண பெரும் நிம்மதி மற்றும் சந்தோசம்  வந்து சேர்ந்தது...

“முருகா...ஆறுபடையோனே... நீ என்னை கைவிடவில்லை.. என் பேரனை காப்பாத்திட்ட.. நான் வேண்டுன மாதிரி அடுத்த வாரமே உனக்கு காவெடி எடுத்திடறேன்.. “ என்று முகத்தில் சந்தோஷத்துடன் அங்கு ஓரமாக இருந்த இருக்கையில் தொய்ந்து போய் அமர்ந்து கொண்டார்...

நெடுமாறனுக்குமே அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது... அவருமே தளர்ந்து போய் தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டார்...  

பெண்ணவளோ தன் கணவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவனை இன்னுமாய் இறுக்கி கட்டி கொண்டு விசும்பி கொண்டிருந்தாள்.. சிறிது நேரம் அவளை அப்படியே விட்டவன் அவள் தலையை மெல்ல வருடி

“என்னாச்சு நிவி? எதுக்காக இந்த அழுகை? எனக்கு ஒன்னும் ஆகலை.. ஐம் சேப்.... கன்ட்ரோல் யுவர்செல்ப்... “ என்றான் தழுதழுத்தவாறு..

அவளோ இன்னுமாய் அவனை இறுக்கி அணைத்து அவன் உள்ளே புதைந்து கொண்டாள்..

நொடியும் அவனை பிரியாமல் அவன் உள்ளேயே ஐக்கியம் ஆகி விட வேண்டும் என்ற வேகம் அந்த அணைப்பில்... அதை கண்டு நெகிழ்ந்தவன் அவள் காதருகில் வந்து

“நிவி.... இது ஹாஸ்பிட்டல். எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க பார்... “ என்றான் மெதுவாக...

அதற்குள் ஓரளவுக்கு தெளிந்திருந்தவள் அடுத்த நொடி விருட்டென்று அவனை விட்டு விலகினாள்..

ஆனால் அவள் கண்களோ அவனை  மீண்டும் மேலிருந்து கீழாக ஸ்கேன் செய்தது... அவனுக்கு எங்கயாவது அடிபட்டிருக்கா என்று அவசரமாக ஆராய்ந்தாள்..

அவளின் பார்வையை புரிந்து கொண்டவன்

“எனக்கு ஒன்னும் இல்ல மா... இங்க பார்.. நான் நல்லா இருக்கேன்.. “ என்று தன் கையை நீட்டி காண்பித்தான்..பின் அவள் கையை பற்றி அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவனும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டு பேச ஆரம்பித்தான்...

“அந்த ஆக்சிடென்ட் ஐ கேள்வி பட்டு ரொம்ப பயந்துட்டியா? ஹ்ம்ம்ம் எனக்கு வந்த ஆபத்துதான்.. ஆனால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது போல எனக்கு வந்த ஆபத்து என்னை தாக்காமல் அடுத்தவருக்கு சென்றுவிட்டது...

நீ என்னை காப்பாற்றி விட்டாய்... ஆனால் பாவம் அது வேற ஒருவருக்கு சென்றுவிட்டது.. “ என்றான் வேதனையுடன்..

அவளோ புரியாமல் புருவம் உயர்த்தி கேள்வியாக அவனை பார்க்க, தன் கைகளுக்குள் இருந்த தன்னவளின் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டு  

“யெஸ் நிவி.. நீ மட்டும் அப்ப எனக்கு போன் பண்ணாம இருந்திருந்தால் நான் அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்றிருப்பேன்.. அந்த மரம் ஒடிந்து என் கார் மீதுதான் விழுந்திருக்கும்..

நீ என்னை போனில் அழைக்கவும் நான் சற்று முன்னதாக என் காரை ஓரமாக நிறுத்திவிட்டுத்தான் உன்னுடன் பேசி கொண்டிருந்தேன்.. எனக்கு பின்னால் வந்த கார் என்னை முந்தி கொண்டு சென்றது.. அடுத்த நொடி அந்த மரம் ஒடிந்து அந்த  கார் மீது விழுந்து விட்டது..

என் கண் முன்னே உன்னுடன் நான் பேசி கொண்டிருக்கும்பொழுதே நடந்த நிகழ்வு.. அதை கண்ட அதிர்ச்சியில் என் அலைபேசியை கை நழுவ விட்டு விட்டேன்..

நீ மட்டும் என்னை அழைத்திராவிட்டால் இந்நேரம் நான் எமனுடன் போராடி கொண்டிருக்க வேண்டும்.. “ என்றவன் இதழ்மீது கையை வைத்து அவசரமாக மூடியவள் தலையை அசைத்து அப்படி பேச வேண்டாம் என்று கண்டித்தாள்...

அதே நேரம் அங்கு வந்த ஒரு நபர்

“ரொம்ப நன்றி தம்பி..நீங்க மட்டும் இல்லைனா என் மகனை இந்த அளவுக்கு கூட காப்பாற்றி இருக்க முடியாது.. ஆக்சிடென்ட் ஐ பார்த்ததும் நமக்கென்ன என்று விட்டுவிடாமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக என் மகனை இங்க கொண்டு வந்து சேர்த்துட்டிங்க..

இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் என் மகனை நான் உயிரோடு பார்த்திருக்க முடியாது.. உங்களுக்கு கோடி புண்ணியம்... “ என்று தழுதழுத்தார்..

“இருக்கட்டும் சார்... ஆக்சுவலா அதில் நான் மாட்ட வேண்டியது... என் வைப் கால் பண்ணி இருந்ததால் ஓரமாக நின்றுவிட்டேன்... உங்கள் மகன் மாட்டிவிட்டார்... “ என்றான் அவனும் வருத்தமாக..

“ஓ... அப்ப உங்க பொண்டாட்டி தாலி பாக்கியம்தான் உங்களை காப்பாற்றி இருக்கு தம்பி... எவ்வளவு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கிங்க தெரியுமா?...

அவங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்ட நாட்களுக்கு இருக்கட்டும்..அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க.. உங்க பொண்டாட்டி இருக்கிறவரை உங்களுக்கு எந்த ஆபத்தும் கிட்ட நெருங்காது தம்பி... தைர்யமாக இருங்க..  “ என்றவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றார்..

அதை கேட்டதும் திகைத்து போனான் அதிரதன்...

அவன் திருமணம் முடிந்த அன்றும் இப்படித்தான் ஒரு விபத்து நேர்ந்திருக்கும்.. அவன் கண் மண் தெரியாமல் காரை வேகமாக ஓட்ட ஒரு திருப்பத்தில் பெரிய லாரி மீது மோதியிருந்திருக்கும்..

ஆனால் அதை சாதுர்யமாக சமாளித்து இருந்தான் அன்று.. அந்த லாரி ட்ரைவர் ம்  இதையேதான் சொல்லி சென்றார் அன்று..

“அப்படி என்றால், என் ஆயுள் இவளிடமா? “ என்று யோசித்தான்..

அதே நேரம் அவள் எதற்காக போன் பண்ணினாள் என்ற காரணமும் உறைக்க ஒரு நொடி ஆச்சர்யபட்டவன்

“ஆமா... நிவி... எனக்கு ஆபத்து வருவது உனக்கு எப்படி தெரியும்? “ என்றான் யோசனையுடன்...

“ஹ்ம்ம்ம் என் உள்ளுணர்வு சொல்லியது ரதன்.. உங்களுக்கு எதுவோ நடப்பதை போல மனம் அடித்து கொண்டது... அதுதான் உடனே போன் பண்ணினேன்... “

அப்பொழுதுதான் உறைத்தது.. நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு,  நாம் ஆத்மார்த்தமாய் நேசிக்கும் ஒருத்தருக்கு துன்பம்,  ஆபத்து வருவது முன்பே தெரியும்..

ஏதோ ஒரு விதத்தில் அதை உணர்த்திவிடும்.. அபசகுணமாய் எதுவோ நடப்பதும் இமை துடிப்பதும் உள்ளுக்குள் ஒரு இனம்புரியாத ஏதோ ஒன்று புரள்வதும் உண்மைதான்..

அவனுமே சில நேரம் அதுமாதிரி அனுபவித்திருக்கிறான்..

“அப்படி என்றால் இவள் என்னை ஆத்மார்த்தமாய் நேசிக்கிறாளா? “  என்று அவசரமாக யோசித்தான்..

“இதில் என்ன சந்தேகம் மடையா? உன் பொண்டாட்டி உனக்காக வடித்திருக்கும் கண்ணீரை   பார்த்தாலே தெரியவில்லையா? அவள் உயிரை கையில் தேக்கி வைத்து கொண்டு உனக்காக ஓடி வந்திருக்கிறாள்... இன்னுமா தெரியவில்லை உன் மீதான அவள் நேசம். “ என்று தலையில் கொட்டு வைத்து முறைத்தது அவன் மனஸ்...

அதே நேரம் ஜமீன்தாரும் நெடுமாறனும்  மெல்ல எழுந்து தன் பேரன் அருகில் வந்தனர்..

ஜமீன்தாரின் கண்களும் சிவந்து போய் முகத்தில் வேதனையும் தன் பேரன் முழுவதுமாக கிடைத்துவிட்டான் என்ற சந்தோஷமும் கலந்திருக்க

“ர.. த.. ன்.. “ என்று மெல்ல அழைக்க,  அதை கேட்டவன் அதுவரை இருவருக்குமாய் இருந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அத்தனை வருடங்கள் அவர்களுக்குள் இருந்த கோபத்தை பகையை துறந்து

“தா.... த்.. தா.. “ என்று  அழைத்தவாறு வேகமாக எழுந்து அவரை கட்டி கொண்டான் ரதன்...

உள்ளம் குளிர்ந்து போனது அந்த ஜமீன்தாருக்கு...அவரை காயபடுத்தியதுக்கு அவன் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை... அவரும் அதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை... அவனின் தாத்தா என்ற பாசமான அழைப்பே அவன் தன் மீது கொண்டிருந்த வெறுப்பை காய்ப்பை போக்கிவிட்டதை கண்டு கொண்டார்...  

“என் பேரன் எனக்கு கிடைத்துவிட்டான்...” என்று பெருமையுடன் அவனை அணைத்தவாறு தன் மீசையை நீவி விட்டு கொண்டார்....

நெடுமாறனும் தன் மகனை கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்... தன் குடும்பமே தனக்காக உருகுவதை கண்டவனுக்கு இன்னுமே பெருமையாய் பூரிப்பாய் மகிழ்ச்சியாய் இருந்தது...

இந்த குடும்பத்தை என் குடும்பத்தை இனி எந்த கஷ்டமும் தராமல் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டான் ரதன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!