நிலவே என்னிடம் நெருங்காதே-67

 




அத்தியாயம்-67

சொல்லுங்க பேபி... ! என்னமோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி பேசாமல் இருந்தால்  என்ன அர்த்தம்?  சொல்லுங்க..  என்னாச்சு?  தாத்தா கூட எதுவும் பிரச்சனையா?  

உங்களை ஜமீனை விட்டு துரத்தி விட்டார்கள்? என்று சிறு கலக்கத்துடன் எதிரில் அமர்ந்திருந்தவனை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தாள்  சாந்தினி..

வழக்கமாக அவர்கள் செல்லும் அந்த நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என்ற பிரைவேட் அறையில் அமர்ந்திருந்தனர் இருவரும்..

நேற்று இரவு தன் மனைவியின் உண்மையான நேசமும் அவன் அவளின் மீது கொண்டிருக்கும் காதலும் புரிந்துவிட, அதுவரை இருந்த குழப்பங்கள் விலகி விட இன்று காலையிலேயே சாந்தினியை அழைத்து

“மாலை நாம் சந்திக்க வேண்டும்.. உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.. நாம் வழக்கமாக சந்திக்கும் அந்த ஹோட்டலுக்கு உன் அலுவலகத்திலிருந்து நேராக வந்துவிடு.. “  என்று சொல்லியிருந்தான்..

சாந்தினிக்கு மிகவும் சந்தோசமாகி விட்டது... என்றுமே அவனாக அவளை அழைத்ததில்லை.. அவள்தான் அவனை கட்டாயபடுத்தி பார்ட்டி, டின்னர், ஷாப்பிங் என்று சுற்றி இருக்கிறாள்..

முதன்முறையாக அவனே அவளை வெளியில் செல்ல அழைத்து இருக்கவும் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்.. ஆனால் அதே நேரம்  ஒருபக்கம் கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது..  

“எதற்காக வரச் சொல்லி இருப்பார்?  என்ன பேச வேண்டும்?  ஒருவேளை எங்கள் திருமணத்திற்கு அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லையா?  அந்த ஜமீன் சொத்து அவருக்கு இல்லை என்று சொல்லியிருப்பார்களோ? என்று ஏதேதோ யோசித்து மண்டை காய்ந்து போனாள்..

இன்று முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை.. மனம் முழுவதும் இன்று மாலை என்ன சொல்ல போகிறானோ என்றே அடித்து கொண்டிருந்தது..

அதற்குமேல் பொறுக்கமுடியாமல் மாலை அவன்  சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே அங்கு வந்துவிட்டாள்..  

அதிரதனும் அதே நேரம் அங்கு வர இருவரும் உள்ளே சென்று இருவர் மட்டும் அமரும் டேபிளில் அமர்ந்திருந்தனர்.. இருவரும் எதிர் எதிராய் அமர்ந்துகொள்ள பேச சொல்லி வர சொன்னவனோ  எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்..

சாந்தினியோ ஒரு வித டென்ஷனில் தன் நகத்தை கடித்து துப்பி கொண்டிருந்தாள்..

அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது? நான் சொல்ல போகும் விசயத்தை கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?  எப்படி அவளை சமாதானப்படுத்துவது?  என்று யோசித்தவாறு அவளிடம் சொல்ல  சரியான வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தான்...

அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவள்  அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அவளாகவே கேட்டாள்

“சொல்லுங்க பேபி... ! என்னமோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி பேசாமல் இருந்தால்  என்ன அர்த்தம்?  சொல்லுங்க..  என்னாச்சு? “ என்றாள் தன் டென்ஷனை மறைத்து கொண்டு..

அதற்குமேல் தாமதிக்க முடியாமல் அவனும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் மனதுக்குள் அவன் தேர்ந்தெடுத்திருந்த   வார்த்தைகளை கோர்த்து சொல்லி பார்த்தவன் பின் நேராக நிமிர்ந்து எதிரில் அமர்ந்து இருந்தவளை  பார்த்தவன்  

“சது... நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறேன்..  அதைக்கேட்டு நீ அதிர்ச்சி அடைய கூடாது.. பொறுமையாக நான் சொல்லுவதை கேட்கணும்..” என்று அவளை கொஞ்சம் தயார் படுத்தியவன்

“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சது... உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைத்து விட்டேன்... அது தப்புதான்.. மஹா பெரிய தப்புதான்.. அதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் என்னை தவறாக  எண்ணிவிடாதே.. “  என்று பீடிகையுடன் ஆரம்பித்தான்...

“அச்சோ..!  என்ன இது அத்தூ? நீங்க ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க?  நான் எப்பவும் உங்களை தப்பாக நினைக்க மாட்டேன்.. சொல்லுங்க.. அப்படி என்ன தப்பு செய்துட்டிங்க? அப்படி என்னதை என்னிடம் இருந்து மறைத்தீர்கள்? என்றாள் உள்ளுக்குள் சிறு கலக்கத்துடன்..

“அது வந்து..... ஒ... ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு  எனக்கு திருமணம் நடந்துவிட்டது.....” என்றான் மெல்ல தயக்கத்துடன் எங்கோ பார்த்தவாறு.. அதைக் கேட்டவளோ  அதிர்ந்து போய்

“வாட்..?? என்று கத்தியவாறு வேகமாக அவள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தாள்...  

அவளின் இந்த ரியாக்சனை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தவன்  மேஜையின் மீதிருந்த அவள் கையை பற்றி இழுத்து அவளை அமர வைத்தவன்  

“ப்ளீஸ்..சது..  நான் சொல்வதை முழுவதுமாக கேள்.. “   என்று மெதுவாக பேசி  கண்களால் கெஞ்சினான்..

சுற்றிலும் அமர்ந்து இருந்தவர்கள் அவர்களை ஒரு மாதிரியாய் பார்க்க, அவளும் வேறு வழியில்லாமல் தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தவள்  அதிர்ச்சியுடனும் வேதனையுடனும்  அவன்  முகம் நோக்கினாள்..

அவளின் அடிபட்ட பாவத்திலான முகத்தை காண அதிரதனுக்கு இன்னுமே  கஷ்டம் ஆகிப்போனது..

“சே.. என் முட்டால்தனத்தால் எத்தனை பேருக்கு கஷ்டம்..!  அப்பயே கொஞ்சம் யோசித்து இருந்தால் இது காதல் இல்லை என்று தெரிந்திருக்கும்..

தாத்தாவின் மீது இருந்த கோபத்தால், வீம்புக்காக இவளை காதலிப்பதாக எண்ணி கொண்டு இப்பொழுது இவளையும் கஷ்டபடுத்தி விட்டேன்.. “ என்று தன்னையே நொந்து கொண்டவன் அவனுக்கு திருமணமான கதையை சுருக்கமாக கூறி முடித்தான்...

அதை கேட்டு கொதித்தவள்

“வாட் நான்சென்ஸ் பேபி...?  நான் ஒருத்தி உங்களுக்காக காத்து கொண்டிருக்க எப்படி உங்களால் வேற ஒருத்திக்கு தாலி கட்ட முடிந்தது..?  மணமேடையில் உங்கள் கையை காலை கட்டி வைத்து தாலி கட்ட வைக்கவில்லையே..

அத்தனை பேர் முன்னாடியும் அந்த தாலியை தூக்கி போட்டுவிட்டு எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று வந்திருக்கலாமே...ஏன் என்னை ஏமாத்தினிங்க? “ என்று கோபமாக ஆரம்பித்து அழுகையில் முடித்தாள்..

அவளின் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன்

“நீ சொல்வது,  கோபப்படுவது எல்லாம்  100% கரெக்ட் தான் சது...ஆனால் என் சூழ்நிலை அப்படி.. என்று சூழ்நிலை மீது பழி போட விரும்பவில்லை... சூழ்நிலையும் எனக்கு எதிராக இருந்ததுதான்..

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், டு பி ப்ராங் என்னால் அந்த மேடையில் இருந்து எழுந்து வராததற்கு காரணம் என்னுடைய காதல் ஸ்ட்ராங் ஆக இல்லை... “ என்றான் எங்கோ வெறித்து பார்த்தபடி..

அதை கேட்டவளோ இன்னுமாய் அதிர்ந்து போய்

“வாட்?? என்ன உளறீங்க? “ என்றாள் எரிக்கும் பார்வையில்..

“ஹ்ம்ம்ம்ம் உளறலை சது.. அதுதான் உண்மை.. என்னுடைய காதல் ஸ்ட்ராங் ஆக இல்லை...இன்பேக்ட் நாம் இருவரும் காதலிக்கவே இல்லை.. காதலிப்பதாக நம்பி கொண்டிருக்கிறோம்” என்றான் மீண்டும் ஒரு வெறித்த பார்வையுடன்...

“போதும் நிறுத்துங்க... இது என்ன புது கதை? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.. என்னைவிட வசதியாக அழகியாக ஒருத்தி வந்திருப்பாள்..  அவளைவிட நான் தாழ்ந்து போய் விட்டேன்.. உடனே என்னை கழட்டி விடுவதற்கு இந்த மாதிரி கதை சொல்கிறீர்கள்..

இப்படி எல்லாம் நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வேண்டாம்.. உங்கள் மனதில் இருப்பதை நேரடியாகவே சொல்லிவிடுங்கள்..  அதற்காக நமக்குள் காதலே இல்லை என்று சொல்ல வேண்டாம்..

நாம் இருவரும் மனதார காதலித்தோம்.. நான் இன்னுமே உங்களை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. “ என்றாள் ஒரு கசந்த வெறித்த புன்னகையுடன்..

அதைக் கேட்டவனுக்கோ இன்னும் வேதனையாக இருந்தது..  

“இவளுக்கு எப்படி புரியவைப்பது? என்னை போலவே  இவளும் காதலென்று நம்பி கொண்டு இருக்கிறாளே..! “  என்று அவசரமாக யோசித்தவன்

“கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாரு சது... உன்னையே அலசி ஆராய்ந்து பார்.. அப்பொழுது தெரியும் இது காதல் இல்லை என்று..

என்னை பொருத்தவரை உன்னை பார்த்த பொழுது உன்னுடைய அழகும் கவர்ச்சியும் தான் என்னை உன் பக்கம் ஈர்த்தது.. கூடவே நான் என் தாத்தாவிடம் செய்து வந்த சபதம் நினைவு வந்தது..

அவர் விருப்பம் இல்லாமல் எனக்கு பிடித்த பெண்ணை காதலித்து  மணப்பதாக சபதம் செய்து விட்டு  வந்திருந்தேன்.. உன்னை பார்த்ததும் அந்த சபதம் நினைவு வர உடனே உன்னை காதலியாக என் மனதில் இறுத்திக் கொண்டேன்..  

ஆனால் உண்மையில் என் மனம் கிளர்ந்து  உன் மீது ஈர்க்கப்படவில்லை..  பிறகு நீயே வந்து என்னிடம் ப்ரொபோஸ் பண்ணவும் அப்பவும் தாத்தாவை ஜெயித்து விட்டதை போல இருக்க, உடனே எல்லாம் மறந்து போய் உன் ப்ரபோஸலை ஏற்றுக்கொண்டேன்..

அதன் பிறகு உன்னுடன் சுற்றியதெல்லாம் உன்னை சந்தோசப் படுத்துவதற்காக..

காதலர்கள் என்றால் இப்படித்தான் சுதந்திரப் பறவைகளாக சுற்றுவார்கள் என்று கண்டிருந்ததால் நானும் அதேபோல உன்னிடம் சுற்றினேன்..  உன் உடன் நடனம் ஆடினேன்..

இந்த வயதிற்கு உரிய ஹார்மோன் தூண்டுதலால் உன்னிடம் கொஞ்சம் கிறங்கியும் போனேன்.. ஆனால் அது எல்லாம் ஆத்மார்த்த காதலால் அல்ல என்பதை இப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.. ப்ளீஸ் சது..  நீயும் புரிந்துகொள்.. “  என்றான் வேதனையுடன்....

“நீங்கள் என்னை காதலிக்கவில்லை என்றால் உங்களுக்கு திருமணமான அன்றே என்னிடம் சொல்லியிருக்கலாமே ? எதற்காக மறைத்தீர்கள்?  என் மனதில் இன்னுமாய் ஏன் ஆசையை வளர்த்தீர்கள்? என்றாள் சீற்றத்துடன்..

“அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு..அதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன்..

என் தாத்தாவின் மீது  இருந்த கோபத்தால் என்னால் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எப்படியோ தாலியை கட்டி விட்டாலும் அவளை என்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

அவளை எப்படியாவது விலக்கிவிட்டு உன்னிடமே வந்துவிடவேண்டும் என்றுதான் இதுவரை சொல்லாமல் மறைத்தேன்... ஐம் சாரி.. “என்றான் வேதனையுடன்...

அதை கேட்டு ஒரு நொடி சாந்தினியின் முகம் பௌர்ணமி நிலவாய் ஒளிர்ந்தது.. உடனே கண்கள் பளபளக்க அவனை நோக்கியவள்

“இப்பவும் அப்படியே செய்யுங்கள் அத்தூ.. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.. உங்கள் மனைவியாக வந்திருப்பவளை விலக்கிவிட்டு என்னை மணந்து கொள்ளுங்கள்.. என்னை ஏமாற்றாதீர்கள்.. “  என்றாள் கண்களில் நீர் மல்க..

“இல்லை சது..  அது முடியாது.. நான் பார்ப்பதற்கு மாடர்ன் ஆக இன்றைய தலைமுறையை சேர்ந்தவனாக இருந்தாலும்  நான் நம் கலாச்சாரத்தை பெரிதும் மதிப்பவன்..

நம் திருமணத்தை போற்றுபவன்.. மனதுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தன் இணையை உடனே டைவர்ஸ் செய்யும் கலாச்சாரத்துக்கு இன்னும் பழகாதவன்...

நிவியை விலக்க நினைத்தேனே தவிர, என்னால் அதற்கான முயற்சிக்கான ஒரு படியை கூட எடுத்து  வைக்க முடியவில்லை...

ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ பிடித்தோ பிடிக்காமலோ அவள் கழுத்தில் தாலி கட்டி அவளை என்றும் பிரியாமல் துணை நின்று காப்பேன் என்று அக்னி சாட்சியாய் உறுதி அளித்துள்ளேன்..

அதை என்னாக் குலைக்க முடியாது... அந்த திருமணத்தை என்னையும் அறியாமல் மதித்து போற்றுவதால் தான் அன்று இரவு உன்னுடன் என்னால் முறை தவறி நடந்து கொள்ள முடியவில்லை...

உடல் சுகத்துக்காக எப்படி வேணாலும் வாழலாம் என்று என்னால் அந்த உறவை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதனால் தான் நான் அன்று உன்னை விலக்கி நிறுத்தியது.

ஆனால் இதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியவில்லை... ஆனால் இப்பொழுது என்னையே நான் சுய பரிசோதனை செய்யும் பொழுது தான் என் குணமே எனக்கு தெரிய வந்தது....என் தாத்தா வளர்ப்பு அப்படி..!”  என்று பெருமையாக சொன்னவன்

“கூடவே என் சுய பரிசோதனையில் இன்னொன்றும் புரிந்து கொண்டேன் சது... “ என்று நிறுத்தினான்..

அவளோ என்ன அது என்று அவன் முகம் பார்த்திருக்க

“நான் நிவியை அதாவது நிலவினி , என் மனைவியை ஆத்மார்த்தமாக காதலிக்கிறேன்... எப்படி வந்தாள் என் மனதில் என்று தெரியவில்லை... ஆனால் அவளைத்தான் நான் இப்பொழுது காதலிக்கிறேன்... அதுவும் நான் நேற்றுதான் முழுவதுமாக உணர்ந்து கொண்டேன்..

இது அவள் அழகை பார்த்தோ உடல் கவர்ச்சியை பார்த்தோ இல்லை மனைவி என்ற உரிமையால் வந்த காதல் இல்லை...

அவளுடைய மனதை பார்த்து வந்த காதல்... என்னோடு சேர்த்து என் குடும்பத்தையும் நேசிக்கும் அவளின் குணத்தை பார்த்து வந்த காதல் இது..

என் மீது, என் தொழில் மீது,  என் எதிர்காலத்துக்காக,  என் சந்தோஷத்துக்காக,  என் நிம்மதிக்காக அவள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னிடம் இருந்து விலகிவிடுவதாக சொல்லி உன்னை ஏற்றுக்கொள்ள சொன்ன அவளின் என் மீதான அன்பினால் வந்த காதல்...

நேற்று நடந்த ஒரு விபத்தில்  எனக்கு ஏதாவது  ஆகிவிடுமோ என்று அதிர்ந்து பயந்து துவண்டு நடுங்கி என்னை அவள் கண்ணுக்குள் வைத்து காத்திட துடித்த அவளின் என் மீதான காதலை பார்த்து வந்த காதல்...

இதுதான் உண்மையான காதல்.. இதுதான் உண்மையான நேசம். நம் திருமணங்கள் பெரியவர்களால் நிச்சயிக்கபட்டாலும் காதல் இல்லாமல் தம்பதியர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தாலும் மஞ்சள் கயிறு மேஜிக் என்று கிண்டல் செய்யும் அந்த பொன்மொழி என்றும் பொய்யில்லை....

விரைவிலயே ஒருத்தரை ஒருத்தர்  புரிந்து கொண்டு ஒருவருக்குள் ஒருவராய் கலந்து விட காரணமும் அவர்களுக்குள் மலரும் காதலே...

என்னை பொறுத்தவரை எனக்குள் மலர்ந்த இந்த காதல் தான் உண்மையான காதல்.. இதுதான் என் உயிர் இருக்கும் வரை எனக்குள் மலர்ந்து நிக்கும்...

என்னால் உன்னை ஏற்று கொள்ள முடியாது சது.. அதனால்... “ என்று முடிக்கும் முன்னே

“ஸ்டாப் இட் மிஸ்டர் அதிரதன்... “ என்று கத்தினாள் சாந்தினி..

அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவள்

“நீங்கள் வேணா என்னை காதலிக்கவில்லை என்று சொல்லி கொள்ளலாம்... அது மாயை,  கவர்ச்சி,  லஸ்ட் என்று எப்படி வேணாலும் பெயர் வைத்து கொள்ளலாம்..

ஆனால் நான்? நான் உங்களை உண்மையாகத்தான் நேசிச்சேன்.. என் காதல் ஒன்றும் பொய்யில்லை... நீங்கள் தான் என் கணவனாக போகிறீர்கள் என்று  எவ்வளவு கற்பனை பண்ணி வைத்திருந்தேன் தெரியுமா?

உங்களை காதலித்ததால்,  உங்களையே என் கணவனாக நம்பி இருந்ததால் தான் அன்று திருமணத்திற்கு முன்பே என்னை உங்களுக்கு தரவும் தயாராக இருந்தேன்...

எல்லாம் நான் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையால். நீங்கள் என்னை கை விட மாட்டீர்கள் என்ற ஆழமான நம்பிக்கையால்.. ஆனால் அதை எல்லாம் தகர்த்துவிட்டீர்கள்.. என் எதிர்காலத்தை அழித்து விட்டீர்கள்.. என் காதலை கொன்று விட்டீர்கள்... “ என்று தன் முகத்தை கையில் பொத்தி கொண்டு அழ ஆரம்பித்தாள்...

அதை கண்டவன் முகத்திலும் ரொம்பவுமே வேதனை படர்ந்தது.....

சிறிது நேரம் அவள் அழுது முடியட்டும் என்று காத்திருந்தவன் அவள் அழுது  குழுங்கி முடித்து தன் மூக்கை உறிஞ்சி கொண்டே நிமிர, அருகில் இருந்த நீரை எடுத்து அவளிடம் வைத்தான்..

“ப்ளீஸ்.. இதை குடி சது... “ என்று வைக்க அவளுக்கும் அது தேவையாக இருக்க உடனே அதை எடுத்து கடகடவென்று குடித்தாள்...

சற்று நேரம் அவளை ஆசுவாசபடுத்த விட்டவன்

“சது... நான் சொல்வதை உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் பொறுமையாக கேள்... ஒரு உண்மையை சொல்லட்டுமா? நீ என்னிடம் அன்று தாராளமாக நடந்து கொள்ள முயன்றது என் மீது இருக்கும் காதலால் அல்ல.. என் மீது உனக்கு இருக்கும் அவ நம்பிக்கையால்...

ஐ மீன் நான் உன்னை விட்டு விலகி சென்று விடுவேன் என்ற பயத்தால்..!   என்னை உன்னிடம் பிடித்து வைத்துகொள்வதற்காக.. உன் அழகை கவர்ச்சியை காட்டி என்னை  உன் மீது மயக்கத்தில் வைத்து கொள்வதற்கான ஒரு வழிதான் அது...

நீயே யோசித்து பார்... என்னை உண்மையிலயே காதலித்து இருந்தால் நான் உன்னை விட்டு விலகிவிடுவேன் என்ற பயம் உனக்கு வந்திருக்குமா? உன்னை தாண்டி வேற ஒருத்தியிடம் நான் தாவி விடுவேன் என்று உன்னால் நம்ப முடியுமா?

நீ அப்படி நம்பி இருக்கிறாய்.. என் மீது உனக்கு நம்பிக்கை இல்லை... அதனால்தான் உன்னை நீயே தாழ்த்தி கொள்ளும் நிலைக்கு சென்று இருக்கிறாய்..

நீயும் ஒரு ஒழுக்கமான, நம் கலாச்சாரத்தை மதிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவள் தான்.. என்னதான் இப்பொழுது உன்னை மாடர்ன் ஆக   காட்டி கொண்டாலும் உன் உடலில் ஓடுவது நம் கலாச்சாரம்தான்..

அதையும் தாண்டி உன்னை கல்லாக்கி கொண்டுதான் அன்று அப்படி நடந்து கொண்டாய் என்று எனக்கு தெரியும்.. அது எதனால்? எல்லாம் என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாததால்..

உண்மையான காதலுக்கு முதல் ஆதாரமே ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் சது.. அந்த நம்பிக்கையே உனக்கு என் மீது இல்லை எனும்பொழுது அங்கே காதல் எப்படி இருக்கும்...?  நீயே நன்றாக யோசித்து பார்... “ என்று அவளை சிறிது நேரம் யோசிக்க விட்டான்..

அதை கேட்டு திடுக்கிட்டுத்தான் போனாள் சாந்தினி..

“அவன் சொல்வது உண்மைதானே.. எனக்கு ஏன் எப்பவும் ஒரு இன்செக்யூரிட்டி பீல் இருந்து கொண்டே இருக்கிறது..

இவன் என்னை விட்டு சென்றுவிடுவான் என்றுதான் அடிக்கடி தோன்றி கொண்டே இருப்பது.. அதனால்தான் அவனிடம் அலைபேசியில் கூட கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்து கொள்வது...

அவனை தன்னிடமே பிடித்து வைத்து கொள்ளவேண்டும் என்ற வெறிதான் என்னை அப்படி நடந்து கொள்ள வைத்தது...!  அப்ப இது காதல் இல்லையா? “ என்று யோசிக்க மீண்டும் அவனே விளக்கினான்..

“ஆமாம் சது... உனக்கு என் மீது இருப்பது  காதல் அல்ல... இன்னொரு உண்மையை சொல்லட்டுமா? நான் எப்படி என் தாத்தா சபதத்துக்காக உன்னை கண்டதும் என் காதலியாக பதித்து கொண்டேனே அதே போலத்தான் நீயும்..

என்னை கண்டதும் என் அழகும் ஆண்மையும் உனக்குள் ஒரு தடுமாற்றத்தை கொண்டு வந்திருக்கும்.... அது வழக்கமாக எல்லா பெண்களுக்கும் வருவதுதான்.. ஆனால் என்னை விடவே அழகனாய் நீ எத்தனையோ ஆண்களை பார்த்திருப்பாய்..

ஆனால் அவர்க்ளிடம் நீ காதல் என்று சென்று நின்றதில்லை.. என்னிடம் மட்டும் ஏன் வந்தாய்? அதுக்கு ஒரே ஒரு காரணம் நான் ஜமீன் வாரிசு என்பதால்தான்.. “ என முடிக்கும் முன்னே

“நோ... அதனால் எல்லாம் இல்லை.... “ என்று வேகமாக கத்த ஆரம்பித்தவள் முடிக்கும்பொழுது ஸ்ருதி இறங்கி விட்டது...

“இதுவும் உண்மைதானே.... அவள் சிறுவயது கனவை,  ஆசையை நிறைவேற்றி கொள்ள, அவளுகெ அவளுக்காய் ஒரு மாளிகையை உரிமையாக்கி கொள்ள அதில் ராணியாய் வலம் வரத்தானே ஒருத்தனை தேடி கொண்டிருந்தாள்..

அவளிடம் தான் காதலிப்பதாக் சொல்லி ப்ரபோஸ் பண்ணிய எத்தனையோ பேர்களை துச்சமாக மதித்து அவர்களை மறுத்து வந்திருக்கிறேன்... இவனிடம் மட்டும் மயங்கினேன் என்றால் அது அன்பால்,  காதலால் அல்லவா?

அவனிடம் இருக்கும் அந்த ஜமீன் மாளிகையும் அவனை மணந்து கொண்டால் தன் கனவு ஆசை நிறைவேறி விடும் என்றதால் தானே...!    அது சரிதான்.. “ என்று புரிய அடுத்து அவனும் அதையேதான் சொன்னான்..

“அன்று பார்ட்டியில் முதன் முதலாக நாம் சந்தித்தபொழுது அபி என்னை பற்றி அறிமுகம் செய்யும்பொழுது என்ன ஜமீன் வாரிசு என்றான்.. அதை கேட்டதும் உன் கண்களில் அப்படி ஒரு பளபளப்பு...

அதற்கு பிறகு தான் என்னுடன் நீ நெருங்கி பழகியது.. என்னுடன் நீ இழைந்து ஆடியதும்... நான் அதை தவறாக சொல்லவில்லை.. ஆனால் நாம் இருவருமே ஒரு தேவைக்காக ஒருவரை ஒருவர் நாடி இருக்கிறோம்.. அந்த நாடலுக்கு காதல் என்று பெயர் வைத்து கொண்டோம்....

நல்ல வேளையாக நாம் இருவரையும் பார்த்ததும் என் தாத்தா கண்டு கொண்டார் நமக்குள் இருப்பது காதல் அல்ல என்று..

இப்படி ஆத்மார்த்தமான காதல் இல்லாம்ல் என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாமல் நாம் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்திருந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்காது சது...

நாம் இருவருமே வேற வேற கோட்டில் பயணிப்பவர்கள்.. கண்டிப்பாக அந்த மண வாழ்க்கை விரைவிலயே கசந்து போயிருக்கும்.. அப்படி கசக்காமல் நம் இருவரையுமே தவறாக ஜோடி சேராமல் காத்தது என் தாத்தா...

என்னை இந்த காதல் என்ற மாயையில் இருந்து வெளி கொண்டுவர எவ்வளவு கஷ்டபட்டிருக்கிறார் தெரியுமா? அதனால்தான் நான் மறுக்க மறுக்க  என் திருமணத்தை நடத்தி இருக்கிறார்..

நடத்தியதோடு கடமை முடிந்தது என்று இல்லாமல் அந்த திருமணத்தின் பொறுப்பை கடமையை எனக்கு உணர்த்தவும் பாடுபட்டிருக்கிறார்..

நான் ஒரு மடையன் அவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அவர் மீது இல்லாத வன்மத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டேன்..

அதனால்தான் அவர் எடுக்கும் முயற்சிகள் எதுவும் என் மண்டையில் உரைக்கவில்லை.. ஆனால் என் மனதினில் என்னையும் அறியாமல் நிவி  மீது வந்த காதல்தான் அதை புரிய வைத்திருக்கிறது..

இப்பொழுது தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. ப்ளீஸ் சது.. நீயும் நன்றாக யோசித்துப்பார்.. நமக்குள் இருப்பது உண்மையான காதல் இல்லை என்று உனக்கே தெளிவாக புரியும்.. “  

என்று ஆர்வமாக அவள்  முகம் பார்த்தான்..  

ஆனால் அவள் முகமோ  இப்பொழுது இன்னுமாய் வேதனையை அப்பிக் கொண்டிருந்தது..

இவ்வளவு நாட்கள் காதல் இல்லை என்றாலும் ஏதோ ஒன்று இவன் தான் என் எதிர்காலம் என்று எண்ணியிருக்க அதெல்லாம் இல்லை என்று அழித்துவிடு என்றதும் அவள் மனம் பெரிதும்   காயப்பட்டு போனது..  

மனதை பெரிதாக மதிக்காமல் பணத்தை மட்டுமே பார்த்த தனக்கு இந்த தண்டனை தேவைதான் என்று உள்ளுக்குள் தவித்தாள்.. அவளின் வேதனையான முகத்தை கண்டவன்  

“ப்ளீஸ் சது.. கண்ட்ரோல் யுவர்செல்ப்.. உனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.. உன்னை நான் அப்படியே விட்டுவிட மாட்டேன்.. உனக்கும் ஒரு எதிர்காலத்தை தருவேன்.. “ என்று முடிக்கும் முன்னே விலுக் என்று நிமிர்ந்தவள்

“வாட் யூ மீன்? என்றாள் கண்கள் இடுங்க...

அப்பொழுதுதான் அவன் சொல்லியது அர்த்தம் அவனுக்கு புரிய உடனே பதறி

"ஓ... சாரி..  சாரி..  மா.. நான் நீ நினைக்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை...உன்னை உயிராய் ஆத்மார்த்தமாய் நேசிக்கிற ஒரு துணையை கண்டு கொண்டேன்..

உன்னை நான்கு  வருடங்களாக காதலித்து வரும் ஒரு அன்பரை கண்டு கொண்டேன்... நீ அவரை மணந்து கொள்ள வேண்டும்..அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது... உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பது என் கடமையாகும்... “ என்று இழுக்க அவளோ புரியாமல் தன் பார்வையை கேள்வியாய் உயர்த்தினாள்..  

“யெஸ் சது... உன்னுடன் வேலை செய்கிறாரே மிஸ்டர் அர்ஜுன்.. அவர் தான் உன்னை உண்மையாய் காதலிப்பவர்... நீ பெங்களூர் அலுவலகத்தில் வேலை  செய்யும் பொழுது உன்னை கண்டதும் காதல் கொண்டு விட்டாராம்... அவர் காதலை சொல்லும் முன்னே நீ சென்னைக்கு மாறி வந்து விட்டாய்..

உன்னை பாராமல் இருக்க முடியவில்லை என்று அடுத்த மாதமே அவரும் சென்னைக்கே மாற்றி கொண்டு வந்துவிட்டார்..

இங்கு வந்தும் அவர் காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்.. எப்படியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு தைர்யம் வந்து அவர் காதலை சொல்ல நீயோ அதை மறுத்துவிட்டாய்..அதன்பின் நான் உன் வாழ்வில் வந்துவிட்டேன்.. 

ஆனாலும்  உன்னை மறக்க முடியாமல் நீ போகும் இடம் எல்லாம் உன்னை பாலோ பண்ணி வந்து உன்னை பார்த்து ரசித்திருக்கிறார்.. நீ வேற ஒருவனை காதலிப்பதாய் காட்டி கொண்டாலும் அவரால் உன்னை மறக்க முடிய வில்லையாம்..

நேற்று இரவு நான் என் காதலை உணர்ந்ததும் உன் எதிர்காலம் குறித்த குழப்பத்தில் தவித்து கொண்டிருக்க அப்பொழுதுதான் மிஸ்டர் அர்ஜுன் என்னை அழைத்திருந்தார்.....

அவர் மனதில் இருப்பதை எல்லாம் என்னிடம் சொன்னார்...” என்றவன் தனக்கு வந்த அழைப்பை பற்றி அவளிடம் சொன்னான்...

“சது உங்களை காதலிக்கவில்லை என்று எனக்கு தெரியும் மிஸ்டர் அதிரதன்.. உங்களை பற்றியும் விசாடித்து தெரிந்து கொண்டேன்.. நீங்கள் பிசினஸ் ஐ நடத்தும் சாதுர்யம் உங்கள் திறமை எல்லாம் நானும் அறிந்து கொண்டேன்..

அவ்வளவு திறமையானவர் நீங்கள் இருவருமே உண்மையாக காதலிக்கவில்லை என்று எப்படியும் உங்களுக்கு தெரிந்து விடும்.. விரைவில் நீங்கள் சதுவை விட்டு விலகி விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்..

அப்ப சது ரொம்பவும் துவண்டு போவாள்.. அவளை தாங்க இந்த தோள்கள் எப்பொழுதும் தயாராக இருக்கும்...

நான் இன்றுமே அவளுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.. என்றும் காத்திருப்பேன்.

ஆனால் எதேச்சையாக இன்று உங்களை உங்கள் மனைவியுடன் சேர்த்து அந்த மருத்துவமனையில்  பார்த்த பொழுதுதான் உங்களுக்கு திருமணம் ஆனதே தெரிய வந்தது...

பிறகு ஏன் சதுவிடம் நீங்கள் இன்னும் சுற்றி கொண்டிருக்கிறீர்கள்  என்று யோசித்தேன்.. ஆனால் உங்கள் முகமே நீங்கள் உங்கள் மனைவியுடன் இணக்கமாக இல்லை என்பதை காட்டியது.. ஆனாலும் நீங்கள் அவரை நேசிப்பதை உங்கள் பார்வையில் இருந்து தெரிந்து கொண்டேன்..

ஒரு வேளை உங்களுக்கு உங்கள் காதல் புரியாமல் இருந்தால் அதை எடுத்து சொல்லத்தான் இப்பொழுது அழைத்தேன்..

ப்ளீஸ்...அதிரதன்.. உங்களுக்கு திருமணம் ஆனதை சதுவிடம் சொல்லி விடுங்கள்.. அவளை மீண்டும் ஏமாற்றி மோசம் செய்யவேண்டாம்.. அவள் மனம் ரொம்பவும் மென்மையானது.. அவளால் இவ்வளவு பெரிய இடியை அதன் வலியை தாங்க முடியாது..

அவள் என்னை,  என் காதலை ஏற்று கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் உங்களை காதலிப்பதாக எண்ணி கொண்டு அவள் காயப்பட்டு விடக்கூடாது... சீக்கிரம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுங்கள்..  “ என்று முடித்தார் சது..

“உன் மீது இவ்வளவு அக்கறையாக இருப்பவர் உன்னை நன்றாக பார்த்து கொள்வார் சது.. நானும் அர்ஜுனை பற்றி நன்றாக விசாரித்து விட்டேன்..ரொம்ப தங்கமானவர்.. பொறுமைசாலி... உன்னை உயிராய் நேசிக்கிறார்.  உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வார்.” என்று முடிக்கும் முன்னே

“ஷட் அப் மிஸ்டர் அதிரதன்... இதுவரை நீங்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருக்கிறேன் என்பதற்காக என் வாழ்க்கையை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம்.. என் வாழ்க்கையை என் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன்..

நீங்கள் உங்கள் வாழ்க்கையை,  உங்கள் காதலை, உங்கள்  காதல் மனைவியை மட்டும் பாருங்கள்..இனி இந்த சது உங்கள் வாழ்வில் வரமாட்டாள்.. குட் பை.. “

என்று வேகமாக பொரிந்தவள் அவனை ஒரு வெறிக்கும் பார்வை பார்த்து முறைத்தவள் தன் ஹேன்ட் பேக் ஐ எடுத்து கொண்டு வேகமாக வெளியேறினாள்..

அதிரதனோ வேதனையுடன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்.. இதுவரை பொறுமையாக கேட்டிருந்தவள் கடைசியில் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே..!  இவளை அப்படியே விட்டுவிடவும் அவனுக்கு மனம் இல்லை..அது எனக்கு குற்ற உணர்வாக என்றும் நெருஞ்சி முள்ளாக உறுத்தி கொண்டே  இருக்கும்..

என்னதான் இருந்தாலும் நான்தான் அவள் எதிர்காலம் என்று எண்ணி இருந்திருக்கிறாள்.. அவள் எதிர்காலத்தை எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட முடியாது..  என்ன செய்யலாம்.. “ என்று ஆழ்ந்து யோசித்து கொண்டிருந்தான்...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!